Thursday, July 22, 2010

கிடந்தாரே................ கிடந்தார். (தாய்லாந்து பயணம் பகுதி 4)

சைனா டவுனைக் கடந்து போனோம். எல்லாமே பழையகாலக் கட்டிடங்கள். கீழே கடைகளும் மாடியில் வீடுகளுமாய். மற்ற பகுதிகளில் இருப்பதைப்போல கடைநேரம் என்று ஒன்னு வச்சுக்கலை. அவுங்கவுங்க வசதிக்கேத்த நேரத்துலே கீழே வந்து வியாபாரம் செஞ்சுட்டுப்போறாங்களாம். ஆனா..... இவுங்களுக்குன்னே நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதால் எல்லாம் ஓரளவு நல்லாவே போகுதுன்னாங்க நான்ஸி. பாதித்தெருவை அடைச்சமாதிரி கைவண்டி வியாபாரம், அங்கங்கே அழுக்குன்னு சைனாடவுனுக்கான லக்ஷணங்கள் குறையாமல் இருக்குது.

Wat PO ' வாட் போ' வாசலுக்குப்போய்ச் சேர்ந்தோம். நாம் கோவில் என்பதைத்தான் இவுங்க வாட் ன்னு சொல்றாங்க. நுழைவுக் கட்டணம் 50 பத். ரொம்பக் கலர்ஃபுல்லான இடம் இது. ச்சடின்னு(chedi.) இந்தச் ' ச' வை ஒரு மாதிரி இழுத்து ச்சஅஅ டி'னு உச்சரிக்கணும்) சின்னதும் பெருசுமா கூம்புவச்சக் கும்மாச்சி கோபுரங்களுடன் ஏராளமா அங்கங்கே நிக்குது. சில முக்கிய அரசர்களின் அஸ்திகள் இதற்கடியில் புதைக்கப்பட்டு இருக்காம். அரசர்கள் முதலாம்ராமா & மூன்றாம் ராமா வின் அஸ்திகள் இருப்பவை ரொம்பப்பெரிய ச்செடியாக இருக்கு. (இப்போது இருக்கும் அரசர் (நயன்)ராமா . King Rama IX)


ரெண்டு மூணு பிரகாரங்களா சுவர் எழுப்பி அதற்கான வாசல்களில் நுழைஞ்சு போகும்விதமா அமைஞ்சுருக்கு. செடிகளோடு செடிகளாக போன்ஸாய் மரங்கள் அழகான தொட்டிகளில். எல்லா இடங்களும் படு சுத்தம். இதுவே ரெட்டை மகிழ்ச்சி .

பதிவர் மார்கோபோலோ

ஒரு வாசலில் ரெண்டுபக்கமும் நிற்கும் சிலை மார்கோ போலோ வாம். இன்னொரு வாசலில் இதேபோல் நிற்பவர் யுவான் சுவாங். ஆஹா.... நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க! இவுங்க ரெண்டு பேரும்தான் பயணக்கதைகளின் முன்னோடிகள்!!!
பதிவர் யுவாங் சுவாங்குடன் ஒரு (வலை) பதிவர்

நம்ம மருதீஸ்வரர் கோவிலைப்போல இது இவுங்களுக்கான மருதீஸ்வரர். ஒரிஜனல் தாய் மஸாஜ் இங்கே இருந்துதான் ஆரம்பிச்சதாம். மூலிகை எண்ணெய்களைக்கொண்டு மஸாஜ் செய்து விடுவாங்களாம். இந்தக்கலையைப் படிக்கும் பள்ளி இந்த வளாகத்துக்குள்ளே இருக்கு, மஸாஜ் பண்ணிக்கிறீங்களான்னு நான்ஸி கேட்டாங்க.. ஆளை விடுங்கன்னேன். தாய் மருந்து வகைகள், யோகாவின் பலநிலைகளைக் காட்டும் சிற்பங்கள், இவற்றை வடிக்கும் பயிற்சிப்பள்ளிகள் இப்படி பலதும் இந்த இடத்தில் இருக்கு. இவையெல்லாம் இந்தக் கோவில் வர்றதுக்கு முன்பே வந்துருச்சாம்.

கோவில் கட்டப்பட்டது 1778. அதுக்குப்பிறகு அரசர் மூன்றாம் ராமா காலத்தில் ( 1821 - 1851) ஒரு முறையும், 1982 இல் ஒருமுறையும் பழுதுபார்த்துச் சரி செய்யப்பட்டுருக்கு. முதல் முறை பழுதுபார்த்தக் காலக்கட்டங்களில்தான் (மூன்றாம் ராமா அரசில்) மருத்துவ விவரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் பலதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். மருத்துவப் பயிற்சிப்பள்ளிகள் இப்போ சமீபத்தில் 1962 தொடங்கப்பட்டவைகளாம்.

தாய் மருந்து வகுப்பு நடக்குது

புத்தபிக்ஷுக்கள் இப்பவும் இந்தப் பள்ளிகளை நடத்திக்கிட்டு இருக்காங்க. படிக்கும் மாணவர்களும் ஏராளம். மேலும் கட்டிடக்கலை, கட்டிடங்களை வெளிப்புறம் அலங்கரிக்கும் கலையைச் சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளும் இங்கே இருக்கு.
வண்ணமயமான கோபுரங்களுக்குக் கிட்டே போய்ப் பார்த்தால் மின்னும் ஃபோர்ஸலீன் ஓட்டுத் துண்டுகளால் அலங்கரிச்சு இருக்காங்க. கண்ணைப்பறிச்சுக்கிட்டுப் போகுது ஒவ்வொன்னும். எவ்வளவு பொறுமை வேணும் இதுக்கெல்லாம்? மலைப்புதான். சிலர் இதுமேலே எல்லாம் ஏறி நின்னு படம் எடுத்துக்கிட்டாங்க:( ( அது ஒரு இந்திய ஜோடின்னு சொல்லவும் வேணுமோ!)
இன்னொரு இடத்தில் தாய் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டபடி இருக்க, ஒரு பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் 'வாட்' பார்க்க வந்துச்சு. சுற்றி வந்தப்ப எருமை வாகனத்துலே எமன் உக்கார்ந்து பாசக்கயிறைக் கையில் வீசி வர்றான். இது யாருன்னு தெரியுமான்னு நான்சியைக் கேட்டால் ...ஊஹூம். ஏதோ ஒரு சிலை(யாம்) ஆஹா..... யமா உன்னை எப்படி உலகம் மறக்கும்?
பக்கத்துலே இன்னொரு மேடையில் சிவன் லிங்கரூபமாய்!! உசரம் கூடுதல். அவரைச்சுற்றிச் சின்னச்சின்ன சிலாரூபங்கள். லிங்கத்தில் ஒரு விரிசல்போல கோடு. இதுக்கு ஒரு கதையை நானே சொன்னேன். மார்கண்டேயனைக் கொல்ல யமன் வந்தப்ப அவன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான். ஆனாலும் யமன் பயப்படாமத் தன் தொழிலைப் பார்க்க, வீசுன பாசக்கயிறு மார்கண்டேயன் மேலும் சிவன்மேலும் விழுந்துச்சு. அந்த அடையாளம்தான் இது. (பொருத்தமா இருக்குல்லே?)
வளாகம் முழுசுவதும் அழகழகான ரெண்டு பக்கமும் திருகின காதுகளா இருக்கும் அலங்காரத்தோடு தங்கக்கதவு, தங்க நிலைவாசலோடு கோவில்கள். நிறைய சந்நிதிகள் மூடியே கிடக்கு. திறந்திருந்த ஒன்னில் நுழைஞ்சால் புத்தர் ஆதிசேஷன் மேல் சம்மணம்போட்டு உக்கார்ந்துருக்கார்.
இந்த சேஷனுக்கு ஏழு தலை. நாலு சுத்துச் சுத்தி மேலே வந்து குடைபிடிக்குது. தனித்தனியா ஏழு தலை. சின்னதா 'ஓ' ன்னு வாய்பிளந்து நாக்கைக் காமிக்குதுகள் எல்லாம். புத்தருக்கு ரெண்டு சிறகுகள் வேற! சுவர் ஓரமா ஒரு பக்கம் இருந்த கப்போர்டு மேலே ஏழுவித நிலைகளில் புத்தர் கிடந்தும் நின்னும் இருந்துமா இருக்கார். ஒவ்வொருத்தர் முன்னாலும் ஒரு பாத்திரம். பவதி பிக்ஷாம் தேஹி?
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு புத்தரை வணங்கணுமாம். சண்டே புத்தா, மண்டே புத்தான்னு .... அட!! எனக்குப் புதுத் தகவலா இருந்துச்சு. அந்தப் பாத்திரத்தில் பக்தர்கள் காணிக்கை போட்டுட்டுப் போறாங்க. தினம் வரமுடியலைன்னா? ஏழுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சம் போடுவாங்களா இருக்கும். ஆனா உண்மையில் இந்த ஏழு நிலைகள் புத்தர் கோவில் நகரின் வெவ்வேறு இடங்களில் தனிக்கோவில்களா இருக்கு.

பிரகாரத்தைச் சுற்றி அடுத்த வாசலில் நுழைஞ்சோம். இங்கே காலணிகளை வைக்க ஸ்டேண்டு எல்லாம் வச்சுருக்காங்க. குறிப்பறிந்தேன். பெரிய ஹாலின் வலது இடது பக்கங்களில் வாசல்கள். வலது வாசலில் நுழைஞ்சால்....... கிடக்கிறார். நெடுநீளமா கால் நீட்டி, ரெண்டு பாதங்களையும் ஒருசேரவச்சு, வலதுகையைத் தலைக்கு அண்டைக்கொடுத்து, இடது கைநீட்டி இடது தொடைமேல் வச்சு, லேசாக் கண்ணைத்திறந்து ஒரு கீழ்ப்பார்வை பார்த்துக்கொண்டு ..... ஒரு உசர்ந்த மேடைமேல்.......அடடடா......... அள்ளிமுடிஞ்ச கொண்டையில் சுருள்சுருளா முடிகள். பனிக்குல்லா போட்டதுபோல்...... அள்ளிக்கிட்டுப்போகுது!!!!! அட்டகாடமான வேலைப்பாடுகள் உள்ளத் தங்கத்தலையணை வேற!!!!!

இவர்மட்டும்தான் கால்நூற்றாண்டு அப்படியே இருக்கார். போனமுறையும் கிடப்பு இதேதான்! Reclining Buddha
பளபளன்னு தங்க நிறம். நீளமோ 46 மீட்டர்! பாதங்கள் ரெண்டும் அஞ்சு மீட்டர் அகலம்! மூணு மீட்டர் உயரம்! பாதத்தின் அடியில் ஜாதகக்குறிப்பு போல ஒரு டிஸைன். உலகத்தோட ஜாதகமாம்! பாதங்களின் விரல்கள் எல்லாமே ஒரே நீளம். விரல்களின் கணுக்களும் பின்புறம் ரேகைக் குறிகளும் மும்மூணு. (நமக்கெல்லாம் கை விரல்களில் மூணும் கால்விரல்களில் ரெண்டே பகுதியாவும் அவைகளில் மேல் பகுதியில் மட்டுமே ஒரே ஒரு ரேகைக்குறி இருக்கு) இங்கேயும் படம் எடுத்த ஒரு தடையும் இல்லை.

பாதங்களின் அடிப்புறம் உள்ள டிசைன்கள் 'மதர் ஆஃப் பேர்ள்' என்ற சிப்பிவகையைக் கொண்டு செய்யப்பட்டதாம்.


கிடந்தவரை 'இடம்' வந்தால்...... சின்னச்சின்ன பாத்திரங்களாக ஒரு நீண்ட வரிசை சுவத்தோரம் நிக்குது, இன்னொரு பக்கம் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள சின்னச்சின்ன அலுமினியக் கிண்ணிகளில் சில்லறைக்காசுபோல நிறைச்சு வச்சுருக்காங்க. காணிக்கையாக கரன்ஸிகளை உண்டியலில் போட்டுட்டு ஒரு கிண்ணத்தைக் கையில் ஏந்தி, வரிசையா நிற்கும் 108 பாத்திரங்களில் ஒவ்வொரு காசா போட்டுக்கிட்டே வந்து கடைசியில் இருக்கும் மேசை மீது வெறுங்கிண்ணியை வச்சுட்டுப்போறாங்க.
இவர் செவ்வாய்க்கிழமை புத்தர். ஆஹா...அடிச்சேன் ப்ரைஸ். இன்னிக்கு செவ்வாய்க்கிழமைதான்!!!!!! அமைஞ்சுபோச்சு பாருங்களேன்! புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!
வெளியே வரும் வாசலில் சின்னதா ஒரு ஹாலும் முன் பக்கமண்டபமுமா இருக்குமிடத்தில் வார புத்தர்கள் அனைவரது உருவச்சிலைகளும் வச்சு அங்கே பொதுமக்கள் பூ, பழங்கள் வச்சு ஊதுபத்தி ஏத்தி வழிபாடு நடத்திக்கிறாங்க. நோய்க்காக மருந்து எடுத்துக்கறவங்க, இங்கே அந்த மருந்து மாத்திரைகளைக் கொண்டுவந்து சாமி முன்வச்சுக் கும்பிட்டு எடுத்துக்கிட்டு போறாங்க. மருந்தீச்வரர்ன்னு நான் நினைச்சது சரியாத்தான் போச்சு.

விட்டுருந்த மழை மறுபடி ஆரம்பிச்சது. நாங்களும் ஓடிப்போய் வண்டியில் ஏறினோம்.

தொடரும்........................................:-)

Wednesday, July 21, 2010

WAT...... is ...... What? (தாய்லாந்து பயணம் பகுதி 3)

எத்தனை கோயிலைப் பார்க்கணும்? புன்னகையோடு கேட்ட நான்ஸிக்கு நான் சொன்னது எத்தனை முடியுமோ அத்தனையும்! காலையில் 9 மணிக்கு நான் கீழே லாபிக்கு வரவும் ஸவாட்தீகான்னு சொல்லிக்கிட்டே நான்ஸி வந்து கைகூப்பவும் சரியா இருந்துச்சு. இவுங்கதான் இன்னிக்கு எனக்குச் சுற்றுலா வழிகாட்டி. நமக்கெல்லாம் கூப்பிடச் சுலபமா இருக்கட்டுமுன்னு இவுங்கெல்லாம் ஒரு க்றிஸ்தியன் பெயர் வச்சுக்கறாங்க. இவுங்க 'தாய்' பெயர் மம். அடடா...... தாய்க்கு இப்படித்தான் சொல்றது வழக்கமுன்னு ஒரு ' கடி' கடிச்சேன்:-)))))

போனமுறை எங்கள் வழிகாட்டியின் பெயர் சூஸின்னதும் எப்படி இருந்தாங்கன்னு ஆர்வமாக் கேட்ட நான்ஸிக்கு அசப்பில் உங்களைப்போலன்னு சொல்லி வச்சேன். ஒருவேளை சூஸியின் மகளோ?

காத்திருந்த காரில் ஏறிப் புறப்பட்டோம். வண்டி இன்னிக்கு கொஞ்சம் தாமதமாகுன்னு சொன்னதால் அவரை நேரா இங்கே வரச்சொல்லிட்டு நான் டுக்டுக் புடிச்சு வந்துட்டேன்னு சொன்னாங்க. நேரத்துக்கு மதிப்புக் கொடுக்கும் நாடு. ஹூம்...... நேரம் தவறாமை என்றது எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த குணம். அது இங்கே நம்நாட்டிலே ஏன் இல்லவே இல்லை என்றதை(வருத்தத்தோடு) பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.
மங்களகரமா இருக்கட்டுமுன்னு தங்கத்தைக் காமிக்க முதலில் கொண்டு போனாங்க. தங்கம் ஒன்னும் அவ்வளவா இல்லை. வெறும் அஞ்சரை டன் தான்!!!! ஸாலிடா புத்தர் வடிவில் 'கிண்'னுன்னு உக்கார்ந்துருக்கு. உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு. நாற்பது (BAHT) bபத். கோவில் நுழைவுக் கட்டணமெல்லாம் சுற்றுலா டிக்கெட்டில் சேர்த்தி இல்லை(யாம்). வழிகாட்டிக்கு ஒரு தனி சார்ஜ் இருக்குன்றதை 'நான்ஸி' ரொம்ப 'நாகரிகமா'ச் சொன்னாங்க. எவ்வளவுன்னு கேட்டால் குறைஞ்சபட்சம் 500. அதிகபட்சம் நம் விருப்பம்போல்! விமானநிலையத்தில் டூர் பதிவு செஞ்சப்பச் சொல்லாமல் விட்டது (ஸ்மால் ப்ரிண்ட் வகை?) இவையெல்லாம்:(


(ஒரு bhat = 1.50 ரூபாய். கிட்டத்தட்ட)


அதானே வெறும் 16 அமெரிக்க டாலருக்கு (500 பத்) மூணரைமணி நேரச்சுற்றுலா ரொம்ப மலிவுன்னு (நாமாக) நினைச்சுக்கிட்டது யார் தப்பு?

போனமுறை பார்த்தவர்தான். ஆனால் அழகான புதுவீட்டுக்குக் குடிபோயிருக்கார். புத்தம்புதுசா இருக்கு இந்தக் கோவில். இந்த ஆண்டு ஜனவரியில்தான் திறந்து வச்சுருக்காங்க.  கிட்டத்தட்ட தொள்ளாயிரம் வருசத்துக்கு முந்திய சிலை. அ(யோ)யுத்தியா(தாய்லாந்து) நகரத்துலே முந்தி இருந்ததாம். பர்மாவோடு போர் நடந்த அந்தக் காலத்தில் சிலை பறிபோயிருமோ என்ற பயத்துலே மண்/காரை ப்ளாஸ்டர் போட்டு மூடி வச்சுட்டாங்க. அஞ்சாயிரத்து ஐந்நூறு கிலோச் சொக்கத்தங்கம் தேமேன்னு உள்ளே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கு. அப்போ இது இருந்த கோவிலுக்கு மேற்கூரைகூட கிடையாதாம். மழையும் வெயிலும் கொண்டு நிச்சலனமா புத்தர் தியானத்துலே இருந்துருக்கார்.

ஒரு அம்பத்தி மூணு ஆண்டுகளுக்கு முன்னால் இவருக்கு ஒரு கோவில் கட்டி, தூக்கிட்டு வந்து உள்ளே வைக்கலாமுன்னா , க்ரேன் சங்கிலி அறுந்துபோய் 'தொப்' னு வழியிலே உக்கார்ந்துட்டார். என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையோடு மறுநாள் பொழுதுவிடிஞ்சவுடனே போய்ப் பார்த்த புத்த பிஷூவுக்கு உடம்பே ஆடிப்போயிருக்கும்! காரை ப்ளாஸ்டரில் விரிசல் விழுந்து ஒரு துண்டு தெறிச்சுப்போய் இருக்கு. உள்ளே பளபள பளபளனு ஜொலிப்பு. (ராத்திரி திருட யாராவது வந்துருந்தாலும் பிரச்சனை இல்லை. எப்படித் தூக்கிட்டு ஓடுவானாம்?) தங்கமே தங்கமுன்னு புரிஞ்சதும் கொஞ்சம் கொஞ்சமா எல்லா ப்ளாஸ்டர்களையும் களைஞ்சுருக்காங்க.

பத்தடிக்கும் மேல் உசரமா, மொத்த உலகத்துலேயே பெரிய தங்க புத்தர் என்ற பெருமையோடு கோவிலில் குடி புகுந்தார். இப்போ அந்தக் கோவிலும் பழசாகி பழுதுபார்க்கும் நிலை என்பதால் புத்தம் புதுக்கோவிலே கட்டிட்டாங்க. பழைய கோவில் தரை மட்டத்தில் இருந்துச்சு. புதுசோ மூணு மாடிக் கட்டிடம்!!!!

இப்பத்தான் இன்னும் பலமான கருவிகளும் க்ரேன்களும் வந்துருச்சே! ஆபத்தில்லாம அவருடைய உசரத்துக்கும் பருமனுக்கும்( பனிரெண்டரை அடி அகலம்) தகுந்தபடி ஒரு மேடையில் கவனமாத் தூக்கி வச்சுருக்காங்க. உள் அலங்காரம் கையால் வரைஞ்ச சித்திரங்கள் உள்ள சுவர்களுடன் பார்க்க எளிமையா அதே சமயம் ஆடம்பரமுன்னு தோன்றாத ஒருவித ஆடம்பரமா அட்டகாசமா இருக்கு. வாட் ட்ரைமிட் Wat Traimit
மக்கள் கூட்டம்கூட்டமா வந்து கும்பிட்டு மலர்மாலைகள், ஊதுவத்திகள், ஒருவித மஞ்சள் நிறமான துணி அடங்கிய பொதின்னு வழிபாடு செலுத்தறாங்க. இங்கே படம் எடுக்க ஒரு தடையும் இல்லை. தங்கம் கரையவா போகுது?

சிங்கங்கள் ரெண்டு பக்கமும் இருக்கும் விசாலமான படிகளில் ஏறி முதல் மாடிக்குப்போனால் ரெண்டு பக்கமும் சீனக் கலாச்சார ஸ்டைலில் கட்டப்பட்ட அழகான அலங்காரக்கூரையின் கீழ் பிரமாண்டமான மணி தொங்குது. இந்தக்கோவிலே இங்குள்ள சைனா டவுனின் கடைசியில்தான் Yaowarat Road இருக்கு.
வால் பேப்பர்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் பார்த்தால் கையால் வரைஞ்சது எல்லா சுவர்களிலும்!!!!
ஜன்னல் கதவுகளுக்கு தங்க நிறத்தில் அலங்காரம்.
இதுவும் கையால் வரைஞ்ச ஓவியங்களாம்!!!!
வாசலில் சிலர் காலணிகளைக் கழட்டி வச்சுருப்பதைப் பார்த்து குறிப்பறிந்தேன். நாங்க போகும்போது நல்ல மழை வேற. மார்பிள் எங்கே வழுக்கிக் காலை வாருமோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.

இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம். இருக்காதா பின்னே? ரெண்டு கிராம் நாலு கிராமுன்னு வாழ்நாளெல்லாம் வாங்கிச் சேர்த்துவைச்சாலும் அஞ்சரை டன் கட்டித்தங்கம் சேர்க்கமுடியுமா? இல்லை அவ்வளோ தங்கத்தைத்தான் நம் கண்ணால் பார்க்க முடியுமா?

வளாகத்துக்குள்ளே இன்னொரு புத்தர் கோவிலும் அதிலே ஒரு அமர்ந்த நிலை புத்தரும் இருக்காங்க. புத்த பிக்ஷூ ஒருத்தர் அவரை அருகில்போய் வணங்கியவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கிட்டு இருந்தார். இந்த சிகப்பு மேடையில் நாம் யாரும் ஏறிப்போகக்கூடாது. இது பிக்ஷுக்கள் மட்டும் அமரவாம். மியூஸியம் ஒன்னுகூட இங்கே இருக்காம். ஆனால் நம்ம வழிகாட்டி அதுக்குப்போக இப்ப நேரமில்லைன்னு என்னை இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்கப்பா
கோயில் யானை இருப்பது போல இங்கே கோயில் பூனை இருக்கு:-))))
யானைக்கொரு காலமுன்னா பூனைக்கும் ஒரு காலம் இல்லியோ!!!!!

தொடரும்...................:-)

Tuesday, July 20, 2010

ஜூனியரும் ஒரு நான்முகனும்

வாட் ஈஸ் யுவர் நேம் னு கேட்டதுக்கு டேனி ன்னு சொல்லிட்டுக் கூடவே எனக்குத் தமிழ் தெரியுமுன்னு சின்னது ஒரு போடு போட்டுச்சு!!!! 'சட்'னு குனிஞ்சு கீழே விழுந்த மூக்கை எடுத்து ஒட்டவச்சுக்கிட்டேன். பதிவர் சாந்தியின் ஜூனியர் இவர். வரவேற்பில் வந்துருக்காங்கன்ற தகவல் கிடைச்சதும் கீழே போய் அவுங்களை அறைக்குக் கூட்டிவரும்போது சின்னப்பேச்சுக்கான என் கேள்விக்கான பதில்.

ஜூனியர் புன்னகைதேசம்

குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் நட்புகளைப் பிடிக்கும்வரை தாய்தகப்பனோடு தாய்மொழியில்தான் நல்லாப் பேசுவாங்க. அதுக்குப்பிறகுதான் அது மெள்ள மெள்ளக் காணாமப்போயிருது. ஆனாலும் மனசின் ஒரு மூலையில் இருந்துக்கிட்டுத்தான் இருக்கும். பேசத்தெரியாவிட்டாலும் நாம் பேசுவது அத்தனையும் நல்லாவே புரியும்.வெளிநாட்டுக் குழந்தைகளாச்சேன்னு எல்லோரும் செய்யும் தவறைத்தான் நானும் செஞ்சுருந்தேன். என் மகளை இந்தியாவுக்குக் கூட்டிவந்துக்கிட்டு இருந்த சமயத்தில் 'ஊர்லே எல்லார்கிட்டேயும் தமிழில் பேசணுமுன்னு பயிற்சி கொடுத்து வச்சுருப்பேன். இங்கே வந்தால் எல்லோரும் அவளிடம் மட்டும் இங்கிலிபீஸுலே பேசுவாங்க. ஏன் தமிழில் பேசலைன்னு அவளுக்கும் ஒரே குழப்பமா இருக்கும்:(


'பதிவர்குல' வழக்கப்படி, வேற்று முகமில்லாமல் நீண்டநாள் நண்பர்களைச் சந்திச்சது போல இருந்துச்சு. திருநெல்வேலிக்காரவுஹ. ஊர்க்கதையெல்லாம் பேசினோம். பாளையங்கோட்டையில் ஒரு வருசம் படிச்ச உரிமையில் கோபாலுக்கு பயங்கர சந்தோஷம்! மறுநாள் என்ன ப்ரோக்ராம் எங்களுக்குன்னதுக்கு, கோபால் ஆஃபீஸ் போவார். நான் நேத்து விமானநிலையத்தில் புக் பண்ணிவச்ச ஒரு அரைநாள் டூரில் கோவில் சுத்தப் போறேன்னேன்.

தெரியாத ஊரில் 'அம்போ'ன்னு விட்டுட்டுப் போறோமேன்னு கோபாலுக்கு மன உளைச்சல். (தெரியாத ஊர்தான் எனக்கு வெல்லம்னு இவருக்குத் தெரியாமப்போச்சு பாருங்க) நேத்து விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்து கொஞ்சம் கரன்சியை மாத்திக்கிட்டு, கூட வந்தவரையும் கைடு பண்ணி அவர் தங்க வேண்டிய ஹொட்டேலுக்கு அவரை அனுப்பும் களேபரத்திலும் இதே நினைவு போல இருக்கு. பாவம். அங்கே இருந்த ஒரு ட்ராவல் கவுண்ட்டரில் ஊர் சுத்திப்பார்க்க விவரம் எடுக்கும்போது, அந்தப் பெண்மணி அரை நாள் டூர் ஒன்னு வெறும் 16 டாலர்கள்தான்னதும் உடனே பதிவு செஞ்சுட்டார். போகட்டுமுன்னு நானும் பேசாம 1 இருந்துட்டேன். மனசு 'சாந்தி'யா வேலைக்குப் போகட்டுமுன்னு:-)

'புன்னகை தேசம்' உரிமையாளர் சாந்திக்கு
விவரம் சொல்லிட்டு, அவுங்க ஆலோசனைப்படி ஒரு நாள் அவுங்களோடு ஊர் சுத்தலாமுன்னு முடிவாச்சு. எல்லோருமாச் சேர்ந்து சாப்பிடப்போகலாமுன்னா..... அவுங்க சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுத்தான் வந்தாங்களாம்:(

கீழே போய் அவுங்களை அனுப்பிட்டு நமக்குத் தின்ன ஏதாவது கிடைக்குமான்னு பார்க்க முன்னால் இருந்த சாலையைக் கடந்து போனால் தெரு முக்கிலே ..... பளிச் என்ற வெளிச்சத்தில் தகதகன்னு ஜொலிக்கும் எரவான்/எராவன் கோவில். நான்முகன் ப்ரம்மனுக்கானது.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு பாங்காக் சித்திரத்தொடர் போட்டுருந்தேன். அதுலேயும் இந்தக் கோவில் இருக்கு பாருங்க.

பக்தர்கள் கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு. பக்கத்துலே கோவில் வளாகத்துக்குள்ளேயே பூஜை சாமான்கள் விற்கும் கடை ஒன்னு. சாமந்திப்பூக்கள் ( சென்னையில் இதை துலுக்கச் சாமந்தின்னு சொல்றாங்க. ஒரு வேளை இதன் பூர்வீகம் துருக்கியாக இருக்கலாம். துருக்கச் சாமந்தி ......மருவி துலுக்க சாமந்தி ஆகி இருக்கு) ஊதுவத்திகள், வட இந்திய மிட்டாய்க்கடைகளில் இனிப்புகளின் மேலே வெள்ளி ரேக் இருக்கும் பாருங்க அதைப்போல தங்க ரேக் கொஞ்சூண்டு இன்னபிற பொருட்கள் (கற்பூரம் கிடையாது) வச்சு தட்டைக் கையிலேந்தி வந்து பிரம்மாவின் முன் நின்னு கண்மூடி வணங்கி, பலர் முழங்காலிட்டு ப்ரார்த்தனை செஞ்சு அந்தப் பூக்களை பிரம்மனைச்சுத்தி நாலு பக்கமும் வச்சுருக்கும் இடுப்புயரக் கம்பி வேலியிலும், ப்ரம்மனுக்கு முன்னால் இருக்கும் மேடை போன்ற அமைப்பிலும் பூச்சரங்கள், மாலைகள் எல்லாம் வைக்கிறாங்க. தங்க ரேக்கைப்பிரிச்சு வேலியில் இருக்கும் சின்னச் சிலைகளில் ஒட்டிவைக்கிறாங்க. முந்தியெல்லாம் நேரடியா ப்ரம்மன் மேலேயே ஒட்டுவாங்களாம். ஏற்கெனவே தங்கமா இருக்கும் அவர்மேல் திப்பி திப்பியா ஆகுதுன்னு இப்ப வேலி போட்டு வச்சுருக்காங்க. அதுக்காக? வாங்குன ரேக்க்கை வீசி எறிய முடியுதா? கிடைச்ச இடத்துலே ஒட்டித்தானே ஆகணும்? கம்பி வேலியைச்சுத்தி நாலு பக்கமும் குத்துவிளக்கு மாடலில் ஸ்டேண்ட் போட்டு கண்ணாடிக் கூட்டுக்குள்ளே எரியும் விளக்கில் ஊதுபத்திகளைக் கொளுத்திக்கிட்டு அங்கங்கே ஊதுவத்தி ஸ்டேண்டுகளா இருக்கும் அலங்காரச் ச(தொ)ட்டிகளில் 2 நட்டுவச்சுட்டுப் போறாங்க. தொடர்ந்து எரியும் ஊதுவத்திகளால் அங்கே லேசா ஒரு புகை மூட்டம் இருந்துக்கிட்டே இருக்கு. ஒரு பக்கம் மரக்கலர், தங்கக்கலர், வெள்ளைக்கலர்ன்னு பலநிறங்களில் துதிக்கையைத் தூக்கி வா வான்னு கூப்பிடும் யானைக் கூட்டம் வரிசை கட்டி நிக்குது.




இன்னொரு பக்கம் தாய் நடனப் பாரம்பரிய உடைகளும் அணிகளும் அணிஞ்ச எட்டு பெண்கள் வரிசைக்கு நாலா ரெண்டு வரிசையா நின்னு நடனம் ஆடறாங்க,. பக்கத்தில் ட்ஸைலஃபோன் மாதிரி இருக்கும் படகுபோன்ற அமைப்பில் இருக்கும் இசைக்கருவி 2 12914 மத்தளம், ஜால்ரான்னு நாலுபேர் வாசிக்க அதுக்கேற்ற ஆட்டம் . ஆடும் நடனமணிகளுக்கு முன் தடுக்குப்பாய் போல ஒரு சின்னத் துண்டு தரைவிரிப்பில் ஒருத்தரோ, இல்லை ரெண்டு பேரோ முழங்காலிட்டு உக்காந்து கைகூப்பி ப்ரம்மனைக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு மூணு நிமிசத்துலே நாட்டியம் இசை எல்லாம் நின்னதும் எழுந்து போறாங்க. புது ஆட்கள் வந்து உக்காந்ததும் நாட்டியம் தொடங்குது. சில சமயம் நாட்டியப் பெண்மணிகள் ஒரு பக்கமாக் காலை மடிச்சுப் போட்டு உக்காந்துக்கறாங்க. என்னதான் நடக்குதுன்னு புரியாமக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தேன். இந்தப் பக்கம் கவுண்ட்டர் மாதிரி இருக்குமிடத்தில் எழுதிவச்ச விவரம் எல்லாம் சொல்லுது. குறைஞ்சபட்சம் ரெண்டு நடனம். 260 தாய்லாந்து பத் காசு அடைக்கணும். அந்த விரிப்பின் மீது போய் மண்டியிட்டு உக்காந்தோமுன்னா அவுங்க இசைக்கேற்ப ஆடுவாங்க. நாம் சாமியை வணங்கலாம். காசு கட்டக்கட்ட ஆடணும்! இது ஒரு வகையான வழிபாடு.




ஆஹா..... கடவுளுக்கு பதினாறு உபசாரங்கள் (ஷோடச உபசாரங்கள்) செய்வது பூஜை முறைகளில் சொல்லப்பட்டிருக்கு. மலர், தண்ணீர், வஸ்த்திரங்கள், தூபம், தீபம், நைவேத்தியம் னு இருக்கும் பதினாறில் இசையும் நடனமும் கூடச் சேர்த்தி.

தலை அலங்காரமா கும்மாச்சிக்ரீடம் ரொம்ப அழகா இருக்குல்லே? ஒரு கடையில் விற்பனைக்கு இருக்கு. ஆசைதான். வாங்கினால் வீட்டுலே ஆடிக்கிட்டே இருக்கணுமோ? அப்புறம் பதிவெழுத நேரம்? அதான் வாங்கலை.

உடைக்கட்டுப்பாடு, காலணியைக் கழற்றி வச்சுட்டு வா இப்படி எந்த ஒருவிதமான கண்டிஷன்களும் இல்லாம நாம் நாமாய்ப்போய் சாமியைக் கும்பிட்டுக்கலாம். கடவுள் நம்ம மனசை மட்டும் பார்க்கிறார் என்றதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. வெளிவேஷம் அவருக்கு எதுக்கு? நாமெல்லாம் போறபோக்குலே கோவில் வாசலில் நின்னு முகவாயைக் கையால் தொட்டுட்டுப்போற மாதிரி இல்லாமல் நின்னு கைகூப்பி வணங்கிப் போறாங்க. எல்லா இடத்திலேயும் 'ஸவாட்திகா'ன்னு சொல்லி கைகூப்பி நம்மை (வரவேற்கும் விதமா ஹலோ சொல்வதுபோல) வணங்கும்போது இந்தப் பழக்கம் இல்லாத நமக்குச் சட்னு என்ன செய்யறதுன்னு புரியறதில்லை. அசட்டுத்தனமா 3 ஒரு பார்வை பார்த்துட்டு நமஸ்தே சொல்வேன்:-) (நம்ம ஸ்வாகதம் என்பதுதான் மருவி ஸவாட்தி ஆச்சோ என்னவோ?)


இந்தக் கோவில் இங்கே எப்படி, ஏன் வந்துச்சு? எல்லாம் வாஸ்து தான். 1955 வது வருசம் இங்கே சுற்றுலாத்துறை கட்டுனதுதான் எரவான் ஹொட்டேல். அஸ்திவாரம் போட்ட சமயம் ஆகிவந்ததில்லைன்னு ஒரு ஜோஸியர் சொன்னார். சொன்னது பாலத்து ஜோஸியரா இருந்துருந்தா....... யாரும் சட்டை செஞ்சுருப்பாங்களா? ஜோசியத்துலே ரொம்ப நிபுணரான ரியர் அட்மிரல் Luang Suwichanphaet சொல்லிட்டார், அடிக்கல் நட்ட நேரம் சரி இல்லை. வாஸ்து பிரகாரம் இந்த வளாகத்துலே பிரம்மனுக்குக் கோவில் கட்டணும் (படைச்சவனாச்சே!)

ஆஹா.... செஞ்சுருவோமுன்னு, நுண்கலைப் பிரிவில் இருந்த சிற்பக்கலை நிபுணரைக் கொண்டு ப்ளாஸ்டர் சிலை ஒன்னு செஞ்சு அதைத் தங்க ரேக்குகளால் மூடிப் பொன்னாக்கினாங்க. ஜோஸியர் சொன்ன மறுவருசமே நவம்பர் 9. 1956 வது வருசம் இங்கே சிலையைக் கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செஞ்சாங்க. இப்போ பிரம்மனுக்கு வயசு 54. வருசாவருசம் நவம்பர் 9க்கு பிறந்தநாள் விழான்னு பூஜைபுனஸ்காரங்கள் அமர்க்களமா இருக்குமாம். கோவில் வாசலில் ஒரு தகவல் பலகை இருக்கு.



நம்ம பக்கம்தான் பிரம்மன் பொய் சொல்லிட்டான்னு கோவிலே இல்லாமப் பண்ணிட்டாங்க. கூடத் துணை போன தாழம்பூவுக்கும் கோவிலில் அனுமதி இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் மட்டும் பிரம்மனுக்குத் தனிக்கோவில் இருக்காமே. போயிட்டு வந்து சொல்றேன்:-)

கோவில் வாசலில் லாட்டரிச்சீட்டு, டின்னில் அடைச்ச குளிர்பானங்கள் இளநீர், சின்னச்சின்னக் கூண்டுகளில் பறவைகள் எல்லாம் விக்கறாங்க. எல்லாமே வழிபாட்டுக்கானவைகள்தான். இளநீரைத் திறந்த்கு ஒரு ஸ்ட்ரா போட்டு அப்படியே சாமிக்கு முன்னால் வச்சுட்டுப்போறாங்க. கூண்டுப் பறவைகளை வாங்கி சாமிக்கு முன்னே காமிச்சுட்டு அப்படியே திறந்துவிட்டு விடுதலை கொடுப்பதும் ஒரு வழிபாடாம். (லாட்டரிச்சீட்டு விவரம்தான் என்னன்னு தெரியலை)
ஒரு நாலு வருசத்துக்கு முன்னே நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு ஆள் சுத்தியலும் கையுமா வந்து இந்த சாமிச்சிலையை அடிச்சு உடைச்சுருக்கார். அக்கம்பக்கம் இருந்த ஜனங்கெல்லாம் கோபம் வந்து அந்த ஆளை அடிச்சு நொறுக்கிக் கொன்னே போட்டுட்டாங்களாம். அப்புறம் ராவோட ராவா வேறொரு சிலை செஞ்சு அன்னிக்குப் பகல் 12 மணி ஆறதுக்குள்ளே கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செஞ்சாங்களாம் கோவில் அதிகாரிகள். இதே மாதிரி சிலை ஒன்னு செஞ்சு இப்போ அருங்காட்சியகத்துலே வச்சுருக்காங்களாம். (ரிஸர்வா இருக்கட்டுமுன்னா? ) வேறொரு நாளில் ஒரு இளநி வாங்கிக் குடிச்சுக்கிட்டே சேகரிச்ச கதைகள் இதெல்லாம்

கம்பி வேலி கூட இதுக்கப்புறம் போட்டதா இருக்குமோ? ராத்திரி 11 மணிக்கு கோவில் கம்பிகேட்டைச் சாத்திடறாங்க. ஆனாலும் போறவாற ஜனம் நின்னு கும்பிட்டுக்கிட்டுத்தான் போகுது. .

உணவுக்கடைகள் இருக்கும் ஆர்கேட் மூடி இருக்கேன்னு இந்தப் பக்கம் வந்தால் ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரண்ட் கிடைச்சது. Bபாவர்ச்சி. அங்கே போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்தோம். (உலகமெங்கிலும் ஒரே மெனு. போதுமடா சாமி)

தொடரும்..................