"அடுத்தவாரம் எனக்கு அங்கே போகணும். நீயும்கூட வரயா?"
'ம்ம்ம்ம்ம்ம்..... போனா நல்லாத்தான் இருக்கும். போனமுறை போனப்ப உடம்பு சரியில்லாமப்போய் சரியாச் சுத்திப்பார்க்க முடியலை. இங்கே சூளைக்குள்ளே உக்காந்துருக்கேன். போயிட்டுத்தான் வருவோமு'ன்னு இழுத்தேன்..........
"அப்படியே கம்போடியா போயிட்டு வந்துறலாம். நீயும் 'போறதுக்குள்ளே' அங்கோர்வாட் போகணுமுன்னு ரொம்பநாளாச் சொல்லிக்கிட்டு இருக்கே. "
"அட! இதோ.....பொட்டியைக் கட்டியாச்சு."
பாவம். இவர். நான் 'போறதுக்குள்ளே' பார்க்கணுமுன்னு சொன்ன லிஸ்ட்டைக் கவனமா நினைவு வச்சுருக்கார். 'ஒன் டௌன். ஃப்யூ டு கோ' சட்டுன்னு எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டா...... 'விடுதலை'ன்னு நினைப்பு. . ஆனா அவ்ளொ பாக்கியம் செய்யலை இவர். பட்டியல்( இனியும்) வளரும் என்று இன்னும் தெரிஞ்சுக்காத அப்'பாவி'
போய்வந்து பயணம் பற்றி எழுதலாமா வேணாமான்னு ஒரு எண்ணம். காரணம் நம்ம கானா பிரபா. எதையாவது விட்டு வச்சாத்தானே?
அதுக்காக?
அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எதாவது அகப்படாதா?
ஆப்டுச்சு. பதிவுலக நண்பர் ஒருவர் பேச்சுவாக்கில் பாங்காக் பதிவரைப்பற்றிச் சொன்னார். ஐயோ..... அவுங்க பதிவைப் படிச்சுருந்தாலும் ஊரைப்பத்தித் தெரிஞ்சுக்கலை பாருங்க. இதுக்குத்தான் அப்பப்ப ப்ரொஃபைலைப் பார்த்து வச்சுக்கணும்.
ரெண்டு வருசமுன்னேயும் ஒரு தாய்லாந்துத் தொடர் போட்டுருக்கேன். இனி என்ன இருக்கு எழுத?
ஞாயிறு பகல் கிளம்பி டெல்லியில் இரவு தங்கி, மறுநாள் ஃப்ளைட் புடிக்கணும். . சரியா ஒரு மணிக்குக் கிளம்புனோம். பருவ மழை ஆரம்பிக்குது. ஒரு அரைமணிப் பயணதூரத்துலே இன்னொருத்தரையும் கூட்டுச் சேர்த்துக்கிட்டுப் போகணும். அடிச்சுப் பெய்யும் மழையைப் பார்த்துக்கிட்டே உக்கார்ந்துருக்கேன். மழையின் ஈரம் ஜில்லிப்பு எல்லாம் அப்படியே உடம்பின் இடது புறம் (மட்டும்) ஒட்டுவதுபோல இருக்கு. மெதுவா இடது தோளைத் தொட்டால் ...... காருக்குள் மழை. மேலே இருந்து சொட்டும் தண்ணீர் என்னை ஈரமுள்ளவளா மாத்தி இருக்கு. அட..ராமா!!!!
ட்ரைவர்கிட்டே என்ன வண்டிக்குள் ஒழுகுதேன்னால்.... மேலே போட்டுருக்கும் ஃப்ரேம் இணைஞ்சுருக்கும் இடத்தில் இருந்து ஒழுகுதாம். கையைச் சின்னக்கூரை மாதிரி காமிச்சு விளக்கம் வேற சொல்றார்,. அப்போ...? ஏற்கெனவே தெரிஞ்சுருக்கு இப்படி இருக்குன்னு:(
நாலைஞ்சு நாளைக்கு முன்பே நல்ல வண்டியா ஒன்னு வேணுமுன்னு சொல்லி வச்சுருக்கு. அஞ்சரைமணி நேரப்பயணம் இருக்கே ஹைவேயில்.
மெள்ள வாயைக் (கிளறி) கொடுத்துத் தெரிஞ்சுக்கிட்டது ..... இந்த வண்டி நேத்து டெல்லியில் இருந்து சவாரி கொண்டு வந்துருக்கு. நமக்கு மறுநாள் போகணும் என்பதால் ட்ராவல்ஸ்க்காரர், இதை நிறுத்தி வச்சுருக்கார். திரும்பிக் காலியாப் போகும் வண்டிக்கு போகவரன்னு ரெண்டு சார்ஜும் செஞ்சுக்கலாமே! ஒரே கல்லில் ஏழெட்டு மாங்கா!
குடை இருந்தாப் பிடிச்சுக்கிட்டுப் போயிருக்கலாமோ? அல்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி காருக்குள் குடை & குடைக்குள் மழை.
ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்குப் போன் போட்டுக் கொஞ்சம் 'விடுவிடு'ன்னு விட்டதில் இன்னொரு வண்டி ஒரு பத்து நிமிசத்துலே அனுப்பறேன்னு சொன்னார் ஓனர். அதுவரை நாங்க நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் காத்திருப்பதா ஒரு ஏற்பாடு. மழையோ விடமாட்டேங்குது. இதமா பதமா ஒரு ஏலக்காய் டீ போட்டுக் கொடுத்தார் கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர். முதல் பத்து நிமிசம் பறந்துபோய், அஞ்சுமுறை........... பத்து நிமிசமாச்சு. இதோ அதோன்னு ஒரு மணிநேரம் ஆனதும் இன்னொரு இன்னோவா வந்து சேர்ந்துச்சு.
கிளம்பிப்போகும் வழியில், பிக்கப் பண்ணவேண்டிய நபரையும் கூட்டிக்கிட்டு டெல்லி போகும் ஹைவேயைத் தொட்டப்பயே மூணரை மணி. மழையா இருப்பதால் கொஞ்சம் மெதுவாகவே ஓட்டச்சொன்னோம். வழியெங்கும் இருபுறமும் நாத்து நட்டு முடிச்ச நெல்வயல்கள். மழைக்கு முன்னால் இந்த வேலை முடிஞ்சுட்டால் மழை வந்ததும் பயிருக்குத் தண்ணீர் குறையிருக்காது. எல்லாம் பாசுமதியாத்தான் இருக்கணும்.இல்லே?கும்மாச்சி கும்மாச்சியா அங்கங்கே வைக்கப்போர்களின் கூட்டம் .
அம்பாலா போகுமுன்னே டோல் பூத் வந்துருது. டெல்லி போய்ச்சேரும்போது மூணு இடத்துலே பணம் கட்டி இருப்போம். கர்னாலில் D9T9 என்ற ஷாப்பிங் செண்டரில் ஒரு டீ குடிச்சுட்டு பத்து நிமிஷம் ஓய்வு (ட்ரைவருக்குத்தான்) முடிஞ்சு டெல்லி ஹைவேயில் போய்க்கிட்டே இருக்கோம். பிதாம்புரா (டெல்லி புறநகர்) மெயின் ரோடு பக்கம் சண்டே மார்கெட்டால் ஜேஜேன்னு இருக்கு. 'சட்'னு பார்த்தால் லண்டன் போர்ட்டபெல்லா ரோடு, சனிக்கிழமை மார்கெட்டேதான். நாம் போக வேண்டிய இடம் குர்கா(வ்)ன். அங்கிருந்து ஏர்ப்போர்ட் பக்கம். கோபாலின் டெல்லி ஆஃபீஸ், அவர் வழக்கமாத் தங்கும் ஹொட்டேல் எல்லாம் அங்கேதான். ஏகப்பட்ட ஃப்ளைஓவர்களில் நுழைஞ்சு ட்ராஃபிக் ஜாம் கூடுதலா இருக்கும் ரோடில் கரெக்ட்டாப் போய்ச் சேர்ந்துக்கிட்டார் ட்ரைவர். 'இந்தப்பக்கம் வந்தே இருக்க வேணாம். வலது பக்கம் திரும்பி இருக்கலாம். என்னைவிட தெருவிவரங்கள் எல்லாம் உனக்குத் தெரியுமுன்னு நான் இருந்துட்டேன்'னு கூட வருபவர் சொல்றார். அவர் சண்டிகர் வருமுன் டெல்லியில் பலவருசங்கள் வேலை பார்த்தவராம்.
கோபாலுக்குப் பரம சந்தோஷம் நான் கப்சுப்ன்னு இருப்பதைப் பார்த்து:-) இதுமட்டும் சென்னையா இருந்துருந்தா..... அந்த ட்ரைவரை 'இந்தப்பக்கம் போகணும்,. அந்தத் தெரு வேணாம், எதுக்காக இப்படி இதுவரைக்கும் வரணுமு'ன்னு பிடுங்கி எடுத்திருப்பேனாம்! சண்டிகர் வந்த நாள் முதல் வாயைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். இங்கே மேப் கையில் இருந்தாலும் எல்லாம் வலதுபக்கமிருந்து இடதுபக்கமா இருக்கு. இசுலாமிய பாதிப்போ என்னவோ! ரெண்டரை மாசமாச்சு இன்னும் திக்கு திசை புரியலை:( கோபாலுக்கும்தான் இப்படி என்றதால் எனக்கு உள்ளூர 'நான் தனி இல்லை' ன்னு ஒரு அல்ப சந்தோஷம்.
கூட வந்தவர் பொறுப்பெடுத்து வழிகாட்ட ஒரு வழியா குர்கா(வ்)ன் போய்ச்சேர்ந்தோம். எங்கே பார்த்தாலும் புதுக்கட்டிடங்கள் முளைச்சுக்கிட்டு இருக்கு. பவர் கட் போல. தெருவெல்லாம் கும்மிருட்டு. இருட்டுக்குள்ளேத் தப்புத்தப்பா வழி சொல்றார் கோபால். (இத்தனைக்கும் அவர் வழக்கமாப்போற இடம்தான்) தாங்காதுன்னு...... கூடவந்தவர் எங்களை முதலில் ஹொட்டேல் வாசலில் விட்டுட்டுக் கடைசியில் தான் போய் இறங்கிக்கறேன்னார். மணி ஒன்பது. அவரை இறக்கி விட்டுட்டு டிரைவர் இங்கே வந்து பார்க் பண்ணிட்டுத் தங்கிக்கணும். காலையில் எட்டுமணிக்கு அவரைப்போய் பிக்கப் செஞ்சுக்கிட்டு இங்கே வந்து எங்களை ஏத்திக்கிட்டு ஏர்போர்ட் கொண்டு விட்டுட்டு திரும்ப சண்டிகர் ரிட்டர்ன் ஆகணும் என்பது கண்டிஷன்.
சாப்பிட்டுப் படுக்கவே மணி பதினொன்னு ஆகிருச்சு. காலை 9 மணிக்கு ஏர்ப்போர்ட்டிலே இருக்கணுமாம். மூணுமணி நேரம் தேவுடு காக்கணும் அங்கே:(
பொழுதுவிடிஞ்சு ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினால் எம்ஜிஆர் படப்பாடல்தான் நினைவுக்கு வந்துச்சு."அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயரும்வைத்தால், இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்!''
இங்கே வானுயர எழும்பும் கட்டிடங்களைக் கட்டித்தரும் தொழிலாளிகளின் (தாற்காலிக? ) குடியிருப்பு.
இன்னிக்கு 'பாரத் பந்த்'தாம். கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பினால் நல்லதுன்னு பரவலான ஒரு எண்ணம் இருந்ததால்......
ஒன்பதே காலுக்கு விமானநிலையம் போய்ச்சேர்ந்து செக்கின் ஆச்சு. புது டெர்மினல் ஒன்னு திறந்துருக்காங்கன்னு சேதியை தினசரியில் பார்த்ததோடு சரி. கண்ணுலே அதைக் காமிக்காமலேயே அதுக்கான சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஆளுக்கு ரூபாய் 515 கூடுதலாக் கொள்ளையடிச்சாங்க. (அதான் வெளிநாடு போறெல்லெ? கொடுத்தா என்ன கேடு? ) இன்னும் பயணிகளுக்காகத் திறந்து வச்சுப் பயன்படுத்த ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே பயணிகளைப் படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்கய்யா.
முதல்முறையாத் தாய் ஏர்வேஸ்லே போறேன். சுமார். நேரம் போக்க நமக்கு முன்னால் ஒன்னுமே இல்லை முன்னாலே இருக்கும் இருக்கையின் பின்பக்கம் தவிர. வழித்துணைக்காகக் கொண்டுவந்த வாடி வாசலும், துளசிதளமும் வச்சுருந்த கேபின் பேக், கோபாலின் கடைசி நிமிச ஐடியாவின்படி செக்கின் லக்கேஜா மாறிப் போயிருந்துச்சு. விமானநிலைய புத்தகக் கடையில் எதாவது வாங்கிக்கலாமுன்னா....கடைகள் எல்லாம் காலியாக்கி புது டெர்மினலுக்குப் போகுதாம். அப்போ இந்த பழைய டெர்மினலை இடிச்சுடப் போறாங்களா என்ன?
ஜாஸ்மின் அரிசி?
இறக்கையின் பர்ப்பிள் நுனியையும், கீழே மானாவரியா இருந்த கடலையும் , திடீர்னு கண்ணுலே பட்ட நெல்வயல்களையும் (ஜாஸ்மின் அரிசியோ?) பார்த்து முடிச்சதும் ஸ்வர்ணபூமி வந்துருச்சு. வெறும் நாலரை மணி நேரப்பயணம்தான்.சரியாக் கால்நூற்றாண்டுக்குப்பிறகு பாங்காக் நகரத்துக்குள் புகுந்தேன். வழியெங்கும் ராசாராணி விதவிதமான போஸ்களில் நம்மை வரவேற்கறாங்க. ராசா நல்லா இருக்கணும். ஹொட்டேல் போய்ச்சேர்ந்ததும் ஏற்கெனவே வாங்கிவச்ச எண்ணுக்குத் தொலைபேசி, வந்துசேர்ந்த விவரம் சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்தது ஒரு பதிவர் சந்திப்பு
முக்கனி?
தொடரும்.......................:-)
Monday, July 19, 2010
தந்தையர் நாட்டிலிருந்து தாய் நாட்டுக்கு
Posted by
துளசி கோபால்
at
7/19/2010 01:26:00 AM
25
comments
Labels: அனுபவம்
Friday, July 16, 2010
அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா..........
இது தமிழ்ப் பாட்டும்மா......ன்னு வியப்போடு கவனிக்கிறார் கோபால். பாண்ட் வாத்திய இசைக்குழு அடிச்சு முழக்க மேடையில் ஏழெட்டுத் தலைப்பாகைகள் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர்ன்னு வட்டம்போட்டுச் சுழன்று ஆடிக்கிட்டே இருக்காங்க. சட்னு என்ன பாட்டுன்னு நினைவுக்கு வரலைன்னு விட்டுற முடியுதா...... கூடவே ஹம் பண்ணிக் கண்டு புடிச்சுட்டேன்:-))))மறுநாள் பயணம் புறப்படும் களேபரத்தின் இடையிலும் இங்கே வந்தாகவேண்டிய நிர்பந்தம்(?). ஜூலையில் நடக்குமுன்னு தெரிஞ்சாலும் எப்போ என்ன தேதின்னு யாதொரு விளம்பரமும் தகவலும் இல்லை. உள்ளூர் சமாச்சாரங்கள் எங்கேபோனால் தெரியும? இந்த வகையில் நம்ம சென்னை ஹிண்டு பேப்பரை அடிச்சுக்க ஆளில்லை. இங்கே வந்ததும் ஹிண்டுவையே தொடர்ந்தோம். ஆனால்............ அது டில்லி பதிப்பு:( மேலும் சென்னைப் பதிப்பில் இருப்பதுபோல் கலைநிகழ்ச்சிகள் தகவல்கள் ஏதும் இல்லை.
ஊருக்குள்ளே என்னதான் நடக்குதுன்னு தெரியாட்டாத் தலை வெடிச்சுடாதா? இதுக்காகவே ஒவ்வொரு தினசரியா மாத்தி மாத்தி வாங்கிப் பார்த்துக்கிட்டு இருக்கோம். நடந்து முடிஞ்ச நிகழ்ச்சிகளைத்தான் போட்டு விமரிசனம் செஞ்சுக்கிட்டு இருக்குதுங்க இந்த தினசரிகள். ஒரே முடிவு..... என்ன ஆனாலும் சென்னையை மிஞ்சமுடியாது!!!!
மாம்பழத்திருவிழா இந்த வீக் எண்டுலே நடக்குதுன்னு சின்னதா ஒரு போஸ்டர் வரும்வழியில் பார்த்தேன்னு கோபால் சொன்னார். இது ஹரியானா மாநிலத்தின் திருவிழாவாம். போச்சுறா....... இதைவிட்டா அடுத்த வருசம் போகச் சான்ஸ் இல்லை. அதான் இங்கே இருக்கமாட்டோமே!
போனவாரம் போய்வந்த அதே யாதவேந்திரா தோட்டத்துக்குப் பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பினோம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு அப்படியே 'அந்த பீமாதேவி' கோவிலையும் பார்த்துக்கணும். (தனிப்பதிவு பின்னே ஒரு நாளில் போடணும்)
அழகுக்கு அலங்காரம் செய்ததுபோல் மொத்தத் தோட்டமும் வண்ணவண்ண துணிகளாலும், அடிக்கவரும் ஆரஞ்சு நிறச் சாமந்திப் பூக்களாலும் நிரம்பி வழிஞ்சது. அதென்னவோ இந்தப் பக்கங்களில் கோவில்களிலும் இந்த சாமந்தி மட்டுமே. பூந்தோட்டம் ஊர்பூராவும் இருந்து என்ன பயன்? பாவம் சாமி.மாம்பழத் திருவிழாவை ஹரியானா மாநிலத்தின் சுற்றுலாப் பிரிவும், வேளாண்மைப்பிரிவும் சேர்ந்து நடத்துது. இது பத்தொன்பதாம் வருசம். மாநிலத்தின் சின்னம் மயில். அங்கங்கே மலரலங்காரத்தில் நிற்கும் மயில்கள். வண்ணவண்ண உடைகளில் நடமாடும் மயில்களும் ஏராளம். நுழைவுச்சீட்டுக்கு அதே 20 ரூபாய்கள். அங்கங்கே ரங்கோலிகள் போட்டு வச்சுருக்காங்க. போட்டி நடக்குதாம். அழகான வர்ணங்களா இருக்கேன்னு அருகில் போனால்...... எல்லாம் அரிசி!!!
ஆரம்ப வரவேற்பு பொய்க்கால் குதிரை. நமக்காகக் கொஞ்சம் ஆடிக் காமிச்சாங்க. சுற்றுலாத்துறை சின்னதா ஒரு ஸ்டால் போட்டுவச்சு விவரங்கள் கொடுத்துச்சு. பக்கத்துலேயே சிலபல மாம்பழ வகைகள். அட்டைப் பெட்டிகளில் போட்டுவச்சு விற்பனை. அஞ்சரை முதல் ஆறுகிலோ எடையாம். விலை 150 ரூபாய் முதல் 200 வரை. அல்ஃபோன்ஸா மாம்பழத்தை முதல்முறையாப் பார்த்தேன். எப்பவும் டின்னில் மாம்பழக்கூழ் வாங்கித்தான் பழக்கம். ரொம்பச் சின்னதா இருக்கு. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்றது இதுதான்!!!
ராசாத்தி காத்திருந்தாள்...... ராசாவும் வந்து சேர்ந்தான்.....ராகத்தோடே பாடி வந்தான்
அடுத்த பகுதிக்குப் படி இறங்கிப்போனோம். நீரோடைகளில் சலசலன்னு தண்ணீர், செயற்கை நீரூற்றுகளில் பீறிட்டு அடிக்கும் நீர்வீழ்ச்சிகள். ரெண்டு பக்கத்துப் புல்வெளிகளிலும் புதுசா முளைச்சிருக்கும் ப்ரமாண்டமான கூடாரங்கள். கலைநிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரே கலகலன்னு இருக்கு. பெரிய மேடை ஒன்னு அமைச்சு ஆட்டம் பாட்டம். தமிழ்ப் பாட்டுகளாவே அடிக்கடி வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. எப்படி? இங்கே இருந்து அங்கேயா ? இல்லை அங்கே இருந்துதான் இங்கேயா? இசைமூலம் பார்க்கக்கூடாதோ? பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கானக் கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் போட்டி நடத்தி முடிச்சு அதுக்கான பரிசுகளை இங்கே இடைக்கிடையேக் கூப்பிட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.முகத்தில் சித்திரம் வரைதல் போட்டிக்குத் தயாரா வந்த ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்து (செயிண்ட் விவேகானந்த் மில்லினியம் ஸ்கூல், பிஞ்ஜோர், ஹரியானா ) மாணவமாணவியரைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முகத்துக்கும் வரைய ஒருவர், முகம் கொடுக்க ஒருவருன்னு ரெவ்வெண்டு பேர். புலிகளைக் காப்பாற்றணும். புகை பிடிக்காதே, ஆண்குழந்தை பெண்குழந்தை பேதமில்லை, நிற வெறி கூடாது, சமாதானம் வேணும் (????? இந்தியா பாகிஸ்தான் சமாதானம்தான். வேறென்ன?)
முகமெல்லாம் மெஸெஜ் சொல்லுது!!!இன்னொரு படிகளைக்கடந்து இறங்கிப்போனால்...... உணவுக் கடைகள் ஒரு பக்கமும், பசங்க விளையாட பொம்மை ரயில் ராட்டின வகையறாக்கள் ஒரு பக்கம். பொம்மலாட்டம் ஒன்னு ஜோராய் நடக்குது. இன்னொரு பக்கம் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள். வரப்போகும் நவராத்ரிக் கொலுவுக்கு வைக்க ஏதும் தேறுதான்னு (அதாவது கோபாலின் பர்ஸுக்குத் தொந்திரவு கொடுக்காததா......தேடினேன். ) பார்த்தால் அவ்வளவா ஒன்னும் சரிப்படலை. பாங்ரா ஜோடிகள் வேணும் எனக்கு.
பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்புப் படத்தைப்பாரு.....நீலமும் மஞ்சளும் பர்ப்பிளுமா கிராமிய உடைகளில் பேண்டு வாத்தியக் கோஷ்டி, உயர்ந்த மனிதர்கள், பேக் பைப் வாசிக்கும் போலீஸ் பேண்ட், கொட்டும் முரசுன்னு ஒரு பக்கம் விழாவைத் துவக்கி வைக்கப்போகும் ஹரியான அரசு முக்கிய காரியதரிசிக்காகக் காத்திருந்தாலும் நமக்கும் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.
மாம்பழங்களைத் தரம்வாரியாகப் பிரிச்சு அடுக்கி வச்சக் கண்காட்சிப் பகுதியைத் திறந்துவைக்க வரும் அமைச்சர் வெட்ட, ரிப்பன் இல்லையேன்னு கடைசி நிமிசப் பரபரப்பில் அவசரமா ஒருத்தர் நுழைவு வாசலில் ரிப்பன் கட்டிக்கிட்டு இருந்தார். பள்ளிக்கூடப் பசங்கள் பேண்ட் ஒன்னும், மலர்தூவி வரவேற்க பெண்குழந்தைகளின் வரிசை ஒன்னும் ஓய்ஞ்சுபோய் நின்னுக்கிட்டுருந்தாங்க ஒரு பக்கம்.
எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது. எலிப்புழுக்கை ஏன் கூடக் காயணுமுன்னு நாங்க வேடிக்கை பார்க்க இன்னொரு பக்கம் போய் கலையரங்கக் கூடாரத்துலே மின்விசிறிக்கு எதிரில் போய் உக்கார்ந்துருந்தோம். மேஜிக் ஷோ போல எல்லா இருக்கைகளுக்கும் உறை போட்டு ரொம்ப நீட்டா ஆக்குச்சு ஒரு குழு. தலைகள் வந்து பேசப் போறாங்களாம்.
ரோஜாக்கள் எல்லாம் வரிசைகட்டிக் காத்திருக்கு விஐபி கைபிடிக்க!
திடீர்னு........ இசை முழக்கம். திறந்திடு சீஸேம்............நாமும் உள்ளெ போனோம். வகைவகையா மேசை மேசையா அணிவகுத்து ஒவ்வொரு வகையிலும் முதல் ரெண்டு இடங்கள் வாங்குனது கொஞ்சம் நறுக்கி வச்சுருக்கு. அதுலே அடைஅடையா மொச்சக்கொட்டை சைஸுலே ஈப்பட்டாளம்:( சின்ன அளக்கும் கருவி ( நியூஸியில் மீன் நீளம் அளப்பது போல ஒன்னு. எதோ கணக்கு இருக்கு. 6 செ.மீ? அதுக்கும் குறைவா பிடிபட்ட மீனின் நீளமுன்னா அதை மறுபடித் தண்ணியில் விட்டுறணும்) வச்சுக்கிட்டு ஒரு குழு தட்டுத்தட்டா வச்சிருக்கும் மேஜை மேஜையாப்போய் இன்னும் 'அளந்துகிட்டே இருக்காங்க. மொத்தம் 3500 தட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருக்காம்.
ஒரு இடத்தில் பெயிண்ட் செஞ்ச ஈஸ்டர் எக் மாதிரி ஒரு வகை. ஊறுகாய் போடும் மாங்காய்! நமக்குத்தெரிஞ்ச எல்லா ஹிந்தி சினிமாப்பேருலேயும் மாம்பழ வகைகள் வந்தாச்சு. பாவம் அவுங்கதான் என்ன செய்வாங்க....புதுசுபுதுசாக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருந்தால் எப்படி? குண்டா பெருசா இருக்கும் ஒரு வகைக்கு 'சுமோ'ன்னு பெயராம். சிகப்பா இருப்பது ரெட் லிப்ஸ். ஒரு வகைக்கு நொண்டின்னு பெயர். 'லங்டா'வாம். 'ஓம்கார்' படத்துலே சயீஃப் அலிகானுக்கு இந்தப் பெயர்தான்! வெவ்வேற கம்பெனிகளின் மாம்பழத் தயாரிப்புகள் உள்பிரகாரத்துலே வரிசைகட்டி நிக்க, வேடிக்கை பார்த்ததோடு சரி.
தோட்டம் முழுசும் காவல்துறை அதி கவனமா நடமாட, ஏகே 47 ஏராளமுன்னார் கோபால்:-)))) மக்கள் மகிழ்ச்சியோடு மாம்பழப் பெட்டிகளைச் சுமந்துக்கிட்டு போனாங்க. மொத்தக் கூட்டத்துலேயும் மாம்பழக் கண்காட்சிக்குப் போயிட்டு ஒத்தை மாம்பழம்கூட வாங்காம வந்தவங்க, உங்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு குடும்பம்தானாம்:(
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..... அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்......(நானா மசிவேன்? நேரமில்லை தின்னு தீர்க்க...) நீ கேட்டாலும் வாங்கமாட்டேன், நாளை பயணம் இருக்குதென்றேன்.
நின்னு நின்னு கால் ஒரே வலி. செத்த உக்காந்துக்கலாமா?
நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ?
PIN குறிப்பு: பயணத்தொடர் வரப்போகுது. அதுவரை மாம்பழம் பார்த்துக்கிட்டு இருங்க.
மேஜிக் ஷோ: நேற்று, இந்தப் பதிவுக்கான படங்களை வலைஏத்தி, பதிவில் போட்டு எடிட் பண்ணுமுன் ப்ரிவியூ பார்க்க சொடுக்குனா...... மந்திரமாயம் போட்டாப்போல தானே பப்ளிஷ் ஆயிருச்சு. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு அதுவே தமிழ்மணத்திலும் சேர்த்துவச்சுருச்சு. நல்லவேளை ஓட்டுப்போடுவதொன்னுதான் பாக்கி:-)
(ஒருவேளை இலைக்கடியில் ரொக்கம் எதிர்பார்த்துச்சோ என்னமோ!)
கலாட்டா கல்யாணம்.
ரீடரிலும் போட்டுவச்சவங்களுக்கும் ஒரு Free view கிடைச்சுருச்சு. இடுகையைத் தூக்கிட்டேன்.
அதன் புத்தம் புதிய காப்பி இதோ...இதுதான்.
குழறுபடிக்கு யார் காரணமோ? மன்னிச்சுடலாமா?
காலநிலை: போனவாரம் அடிச்சுப் பெய்ஞ்ச மழையால் வெய்யில் குறைஞ்சுருக்காம்! பொழுதுவிடிஞ்சதும் 33 டிகிரி வீட்டுக்குள்ளே.
மழையில் என்ன செய்யறதுன்னு புரியாம டெலிபோன் ஒயரைத் தெரு நாய் கடிச்சு வச்சு, தொலைபேசி வேலை செய்யலை!
Posted by
துளசி கோபால்
at
7/16/2010 02:17:00 AM
30
comments
Labels: அனுபவம் mango mela
Friday, July 02, 2010
பள்ளிக்கூடத்தைப் பதினைஞ்சு நாளுக்குப் பூட்டலாமா?
ஏன்? எதுக்கு?
எதுக்குன்னா,
சிங்கிள் டீச்சர் பள்ளிக்கூடமா இருக்கே! வேற வழி?
பயணம் வாய்ச்சுருக்கு. யானைகளின் நாட்டுக்குப் போறேன். அப்படியே நம் பழம்பெருமையைப் பறைசாற்றும் பக்கத்து தேசத்துக்கும்.
இணைய வசதிகள் எல்லாம் எப்படி இருக்குமோ? அதுக்கு நேரமும் கிடைக்குமோன்னு தெரியலை.
போய்வந்து விவரம் சொல்றேன்.
இப்போதைக்கு செலவு வாங்கிக்கவா?
வணக்கம்.
படம்: நம்ம முத்திரை மோதிரங்கள்:-)))
காலநிலை: இன்றைக்குக் காற்றில் ஈரப்பதம் 91% அப்படியே இட்லிப் பானைக்குள்ளே உக்கார்ந்தமாதிரி இருக்கு:(
Posted by
துளசி கோபால்
at
7/02/2010 03:35:00 PM
59
comments
Labels: அனுபவம்
