சரியான நேரத்துக்கு வந்து, உன்னை மட்டும் பார்த்துட்டு அடுத்த படகைப் பிடிச்சு மெயின்லேண்டுக்குப் போகவிடாம இப்படி பதிவுகளுக்கு மேட்டர் தேத்திக் கொடுக்கறயேடா க்ருஷ்ணா! நாலுமணி நேரம் சுத்தவச்சுருக்கே. உன் சுதர்ஸனத்தை எங்கே வைப்பதுன்னு தெரியாம என் தலையில் வச்சியா? இல்லே சக்கரத்தில் ஏத்திவிட்டயா? (காலில் னு சொன்னால் மரியாதைக் குறைவாகுமேன்னு தலையில்னு எழுதி இருக்கேன்.. பார்த்துக்கோப்பா. உனக்குத் தெரியாததா?)
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று சொன்னவனை அதே மார்கழி மாசக்காலத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைச்சதேன்னு கூட்டம் நெரியும் கடைகளைக் கடந்து கோவில் வளாகத்தில் நுழைஞ்சோம். செல்ஃபோன், கேமெராவுக்கு அனுமதி இல்லை. மெயின்லேண்ட் கோவிலில் இருப்பதுபோலவே ரெண்டு ரூபாய்க்கு ஒரு அயிட்டம் காப்பாத்தித் தர்றாங்க. செருப்பு விடவும் தனி இடம், டோக்கன் இப்படி ஒன்னும் இல்லை. எங்கியாவது விட்டுட்டுப்போகணும்.தொடல் தழுவல் எல்லாம் ஆச்சு. பெண்கள் கைப்பை கொண்டு போகவிட்டவங்க ஆண்களுக்குச் சட்டம் வேறன்னுட்டாங்க. எங்கே பையை வைக்கன்னு இவர் முழிக்கிறார். சும்மா வெளியே விட்டுட்டுப் போங்க இருக்கும்னு சொன்னாங்க.
இங்கே உள்ளே நுழைஞ்சால் வீடு மாதிரி ஒரு அமைப்பு. கோவிலின் லக்ஷ்ணம் ஒன்னும் கண்ணில் படலை. வீட்டு வாசலை நோக்கிப்போகும்போது வலதுபக்கம் இருந்த பக்கத்து வீட்டு வாசலில் ஒருத்தர் வந்து நின்னுட்டு, சீக்கிரம் ஓடிவாங்க. தர்ஷன் டைம் ஆச்சுன்னதும் எல்லோருமா அங்கே பாய்ஞ்சோம். மூடிய திரைக்கு முன்னே முட்டலும் தள்ளலும். இங்கேயும் கூட்டத்தின் நடுவில் சிக்கிக்கொண்டோம். ச்சாலுகரோன்னு யாரோ சொன்னதும் ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம்''ன்னு கோஷங்கள் ஆரம்பிச்சது. ஒருத்தர் சொன்னதும் அதையே எல்லோரும் ரிப்பீட்டறதுமா போய்க்கிட்டு இருக்கு. ஒரு கட்டத்தில் எல்லோரும் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அலறுனதும் ஒரு ஓய்ச்சல். ரெண்டு விநாடி இடைவெளிவிட்டு அடுத்த ஆள் ஆரம்பிக்கிறார்.
"ஹாத்தீ கோடீ பால்கி
ஜெய் கனையா லால் கீ"
இப்படி ஒரு கோஷம் கிளம்புச்சு. பத்து நிமிசம் இடைவிடாம மக்களின் மனநிலையை ஏதோ மயக்கத்துக்குக் கொண்டுபோயிட்டு, சரேல்னு திரை விலகல். அவனே இவன்! அதே போல் அலங்காரமும் கூட! சரசரன்னு கூட்டம் நகர நாங்களும் தடுப்புவரை போய் தரசித்தோம். கண்ணைச் சுழற்றினால் இது ஒரு பெரிய முற்றம்தான். ரெண்டு பக்கம் வாசல் இருக்கு. மூலவருக்கு நேர் எதிரே தேவகி. ரெண்டு பக்கமும் தனிச்சந்நிதிகளில் புருஷோத்தமன், மாதவன். மூலவரின் இடது பக்க வாசலுக்கருகில் பெரிய திருவடி எழுந்தருளி இருக்கார்.
வந்த வாசலில் போய் அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். சத்யபாமா, அம்பாஜி சந்நிதிகள் ஒரு பக்கம். உள்ளே போகப்போக பரந்து விரிந்த கூடங்கள். ஏதோ பழைய காலத்து அரண்மனைப்பகுதி போல இருக்கு. அங்கங்கே சுவரில் சில சித்திரங்கள். யாரும் யாரையும் ஒன்னும் கேட்டுக்கலை. வலதுபக்கக்கூடத்தில் நுழைஞ்சால் சுவருக்கு முன் ஒரு முக்கால் அடி விட்டு ஒரு தூண் முளைச்சுருக்கு. யாராக்கும்? யாராக்கும் இதை இங்கே கொண்டுவந்து வச்சது? பார்த்தால் ரொம்பப் பழசாத்தான் இருக்கு. சுவரைத்தான் தூண் வந்தபிறகு கட்டி இருக்கணும்.
சிலர் அந்த இடைவெளியில் கஷ்டப்பட்டு நுழைஞ்சு வெளியே வர்றாங்க. ஏனாம் இந்தப் பாடு? அடுத்த பிறவி இல்லாமல் இருக்குமாம். அதான் காஞ்சி கைலாசநாதர் உள்பிரகாரத்தின் குகைவழியில் போய்வந்து பிறவியைத் தொலைச்சாச்சே. இங்கேயும் போகணுமா என்ன? பலன் ரிவர்ஸ் ஆயிட்டா? வேண்டாம் விஷப்பரீட்சை! அப்படியே அந்த பக்கத்துக் கூடத்தில் போனால்...மடப்பள்ளி. பெரிய பிரம்புக்கூடைகள் நிறைய பூரி மாதிரி ஒன்னு குவிஞ்சு கிடக்கு. பக்கத்துலே ஒரு பாயில் திரட்டிப்போட்ட பூரிகள், பொரிக்கத் தயாரா காத்துருக்கு. அச்சச்சோ.... ஏதோ வாசலில் நுழைஞ்சுட்டோமேன்னு பக்கவாட்டுக் கதவில் புகுந்து வெளியே வந்தால் அது மூலவர் இருக்கும் முற்றத்தில் கொண்டு விட்டுருக்கு.
கண் எதிரே யாருமே இல்லாமல் வெறிச்சுன்னு இருக்கும் முற்றத்தில் த்வார்கீஷீன் ஏகாந்த சேவை! சட்னு போய் முன்னால் நின்னேன். . கொஞ்சநேரத்துக்கு முன்னே முட்டித்தள்ளிய கூட்டம் எங்கே? மாயமாய் மறைஞ்சுருச்சு! 'சரி. தரிசனம் உனக்காக நல்லாக் கொடுத்துட்டார். வா போகலாமு'ன்னு இவர் அவசரப்படுத்தறார். 'தொரக்குனா இட்டிமண்ட்டி ஸேவா?' கொஞ்சம் இருங்க. தனியா இருக்கான். யாராவது வரும்வரை நான் துணைக்கு இருந்துட்டுத்தான் வருவேன். ஒரு ஆறேழு நிமிசம் வரை யாருமே வரலை. அடிச்சேன் ப்ரைஸ்!
ரெண்டு பேர் வந்து அங்கே நின்னாங்க. அவுங்களை துணைக்கு விட்டுட்டு வரலாமுன்னா.................சரேல்..... திரை மூடப்பட்டது. (அது என்னமோ எனக்குக் கோவில்களில் சாமி தேமேன்னு தனியா இருந்தால் துணைக்கு நிக்கத்தோணும். இங்கே அடையார் பதுமநாபனுக்கும் அடிக்கடி துணை போறதுதான்)
இந்தக் கோவில்களில் எல்லாம் டிமாண்ட் க்ரியேட் பண்ணி வைக்கிறாங்கன்னு தோணுது. பத்தே நிமிஷம்தான் தரிசனம்னு சொன்னதும் எல்லாக் கூட்டமும் முட்டி மோதி ஏதோ ரேஷன் கடையில் கிடைக்காத பொருளுக்கு அலைமோதும் மக்களைப்போல ஒரு ஸீன் உண்டாகிருது பாருங்க. திரை போட்டுப் போட்டு, நாளைக்கு பலமுறை சாமிக்கு சாப்பாடு. இப்படி வேளை பாளையில்லாமத் தின்னா உடம்பு என்னாவது? மூணு வேளை நைவேத்யம் வச்சால் போதாதா?
இத்தனைக் கலாட்டாக்களுக்கிடையில் எங்கேயும் இதுவரை சாமி ப்ரசாதமுன்னு நம்ம கண்ணுக்கு எதுவுமே காட்டப்படலை. இத்தனை bhog அயிட்டங்களும் எங்கே தான் போகுது? நம்ம கீதாவேற இனிப்பான இனிப்புப் பண்டங்கள் விருந்துதான் கண்ணனுக்குன்னு போறபோக்கில் எழுதிவச்சுட்டாங்க. ஆனால்........ எங்கே? எங்கே? அதாவது போகட்டும். இந்தப் பால்தயிர் வகையறாக்கள்...... குச் பி நை திக்த்தா........
கடல்கொண்ட கோவில் எந்தப் பக்கம் இருந்துச்சுன்னோ, பழைய துவாரகை நகர வீதிகள் தொல்பொருளாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களோ ஒன்னும் கிடைக்கலை. குறைஞ்சபட்சம் கோவில் வளாகத்துலே ஒரு கூடத்தில் படங்களைத் தொகுத்து வச்சுருந்தால்கூட நல்லா இருக்கும்.வெளியே வந்து பை, செருப்புகள் எல்லாம் விட்ட இடத்தில் இருப்பதைப் பார்த்து 'தேங்ஸ்டா க்ருஷ்ணா'ன்னு சொல்லிட்டு கேமெரா, செல்கள் எல்லாம் திருப்பி வாங்கிக்கிட்டுப் படகுத்துறைக்குக் கிளம்பினோம். எப்படியும் கடைகளுக்கிடையில் உள்ள பாதைவழியாத்தானே வந்தாகணும்? பாசிமணிகள் அலங்காரம் எக்கசக்கமாக் கிடைக்குது. அழகாத்தான் இருக்குன்னாலும் கையில் எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட கனம். சின்னதா ரெண்டு நினைவுப்பொருள் (கல்லுவச்ச த்வார்காதீஷ்) வாங்கினோம். ப்ரெஷாக் கரும்பு ஜூஸ் பிழிஞ்சு கிடைக்குது. ஆளுக்கொரு க்ளாஸ் அடிச்சுட்டுப் படகுத்துறைக்கு வந்து காத்திருந்த படகில் ஏறிக் குந்துனோம்.
கோவிலில் நுழைஞ்சதுலே இருந்து வெளியே வர அரைமணிதான் ஆகி இருக்கு! இங்கே படகுக்கு வர ஒரு 20 நிமிசம். கூடிவந்தாலும் ஒரு மணிநேரம் தான் கோவில் விஸிட்டுக்கு ஆகுது! பதினைஞ்சு நிமிசக் காத்திருப்பு. கூட்டம் சேர்ந்து போனதும் படகு கிளம்பியது. வரும்போது 6, இப்போ போகும்போது 7 ன்னு 13 ரூபாய் ஒரு ஆளுக்கு டிக்கெட்.
காலிப் பால்கேன்கள் நாலைஞ்சு கோர்த்து எடுத்துக்கிட்டு நமக்கு முன்னால் படகுத்தரையில் ஒரு பால்காரம்மா. அப்பாடா..... கீதா சொன்ன பால் பாத்திரத்தையாவது பார்த்தோமேன்னு ஒரு திருப்தி:-) காயத்ரின்னு ஒரு பூ பெரிய குடும்பத்தோடு பயணிச்சது.. நிதானமாக 20 நிமிடப் பயணம்.லைஃப் ஜாக்கெட்டை ஒரு பெரிய பெட்டியில் பத்திரமாவச்சு மூடி இருந்தாங்க. எத்தனை விபத்துகள் நடந்தாலும் யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டாங்க போல. விதிப்பா....விதி! எல்லாம் அவன் செயல்!
பயணம் தொடரும்..............:-)))))
Wednesday, February 03, 2010
மாதங்களில் அவன் மார்கழி (குஜராத் பயணத்தொடர் 14)
Posted by
துளசி கோபால்
at
2/03/2010 03:50:00 PM
13
comments
Labels: அனுபவம் | குஜராத்
Tuesday, February 02, 2010
வடக்குன்னாலே இந்த ஆட்டமா? மகர்ஜோதியின் தாய் யார்? (குஜராத் பயணத்தொடர் 13)
எதிர்பாராமக் கிடைக்கும் சில அனுபவங்களைவச்சு ஐடியா ஒன்னு உருவாகிக்கிட்டே வருவதைத் தடுக்கமுடியலை. பத்தே நிமிசப்பயணத்துலே வந்து இறங்கிட்டோம். கோவிலுக்கு வளைவளைவா அலங்கார நுழைவாசலும் நல்ல காம்பவுண்டுமாக் கட்டிவச்சுருக்கு உள்ளே நுழைஞ்சால் நேரா, குட்டியா ஒரு சந்நிதியில் சிவன் லிங்க உருவில். தலையில் நாகம்.
நமக்குவலதுபக்கம் கூரை போட்டு மூணுபுறம் சுவர் வச்ச சந்நிதி. மேடையில் அந்த நவ்க்ரஹ். தென்னிந்தியக் கோவில்களில் இருப்பவர்கள் இங்கே வந்தது நம்ம கலியபெருமாளின் தயவால். நம்ம கோவிலுக்கு ஒரு ஸ்பெஷாலிடி வேணாமோ? அதான் க்ரஹ் வந்துருக்காங்க. அவுங்களுக்கும் கிரகநிலை சரி இல்லையோ என்னவோ..... ஒருவரிசையில் நடுவே நிற்க வேண்டிய சனி வலப்பக்கம் ஒதுங்கிட்டார். யாருக்கு இடம் கொடுத்துருக்காரோ? இப்போ ராகுவும் கேதுவும் அடுத்தடுத்து....தலையும் ஒடம்பும் எவ்வளோ நாள்தான் தள்ளித்தள்ளி நிற்பது? .அதுவுமில்லாமல் எட்டுப்பேரையும் நிக்கவச்ச திசைகளும் சரியில்லை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்தும்படியாக ஆகிக்கிடக்கு.போயிட்டுப்போகுது போங்க. அவரவர் ரொம்ப பக்தியா வந்து கும்பிடும்போது
நாம் குறுக்கே விழுந்து இது சொள்ளை அது சொட்டைன்னு சொல்லணுமா? நம்பிக்கைதானே கடவுள். காலியாவுக்குத் தெரிஞ்சமாதிரி வச்சுருக்கார்ன்னு நினைச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். இதுலே நாங்க 'ஸ்வாமிஜி'யைப் பார்த்துப் பேசணுமுன்னு அந்த ஐவருக்கு தீராத ஆசை. 'மத்ராஸி லோக், பாத் கைஸே?ன்னு ஆர்வம். இடப்பக்கம் இருந்த ஷெட் போன்ற குடிசை(?)அமைப்பில் கயித்துக்கட்டிலில் உக்காந்துருந்தார். நட்டநடுவிலே ஒரு யாககுண்டம். ஒருவேளை அடுப்பா இருக்குமோ? இல்லேன்னா குளிருக்குக் கணப்பு? உடல்நிலை இப்போக் கொஞ்சம் சரி இல்லையாம். சீர்காழி சொந்த ஊர்.. இங்கே வந்து .... அது ஆச்சு நாப்பது வருசம். (காரணம் என்னவோ!!! ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. தப்பு தப்பு. ) ஊர்ப்பக்கம் போய்வந்தீங்களான்னு கேட்டேன். போனமாசம் போயிட்டு வந்தாராம். இவருக்கு அடுத்தபடியா பீடத்தைப் பிடிக்க ஏற்கெனவே சிஷ்யப்பிள்ளை ரெடி. அவர் ஜெயங்கொண்டான்காரர். மூணாவது பீடாதிபதி போஸ்ட் இப்போதைக்குக் காலி. மனசுலே குறிச்சு வச்சுக்கிட்டேன். (வந்ததும் கோவிலை புனருத்தாரணம் செஞ்சு நவகிரகத்தை ஒழுங்கு படுத்தணும்.அப்புறம்..... ஒரு பெருமாள் சிலை, ம்ம்ம்ம் சரி. அப்போ பார்த்துக்கலாம்) எல்லாம் ஒரு பத்து நிமிசம்தான். பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். ஓம் நமசிவாயா.அனுமன் கோவிலுக்குப் போறோம். அவர் மகனும் அங்கே இருக்கார். போச்சுடா..... நம்ம பக்கம் ப்ரமச்சாரின்னு வேஷம் கட்டிக்கிட்டு இங்கே வடக்கே வந்ததும் புள்ளையாருக்கு ரெண்டு, அனுமனுக்குப் புள்ளைன்னு என்னடா இது நமக்கடிச்ச சான்ஸ்ன்னு .....
இருவது நிமிச சக்கடாப் பயணம். இதுக்குள்ளே எப்படி ஏறி உக்காந்துகணும், எந்தக் கம்பி பிடிச்சுக்க வாகு, செருப்பைக் கழட்டி ப்ளாஸ்டிக் பையில் போட்டுத் தொடைக்கடியில் வச்சுக்கறதுன்னு ட்ரெய்னிங் ஆகிருச்சு. என்னமோ இதுலேயே பொறந்து வளர்ந்தாப்போல சிஸ்டமேடிக்கா செய்ய ஆரம்பிச்சேன். இவர்வேற முதலில் உல்லாசமா ரெண்டு காலையும் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்தாரா..... வண்டி குலுங்கும் குலுங்கலில் செருப்பு நழுவுது. விழுந்துருச்சுன்னா............. வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிப்போய் எடுக்கணும். இதெல்லாம் தேவையா? சூஷிச்சால் துக்கமில்லை என்பது இதுக்கும்தான்.
கள்ளிச்செடி நிறைஞ்ச பாதை. நடுவிலே சின்னதா தார் ரோடு இருக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனுச வாசனை இல்லை. எப்பவாவது ஒரு சக சக்கடா போனால் உண்டு. சில இடங்களில் பத்துப்பதினைஞ்சு வீடுகள் திடீர்னு முளைக்குது. ரொம்ப பழைய ஊர் என்பது சுவர்களையும் கதவு அமைப்புகளையும் பார்த்தாலே புரிஞ்சு போகுது. தீவுன்னதும் வட்டமா வரைஞ்சு காமிப்போமே அப்படி இல்லாம ஒரு ஆங்கில 'W' வை ரெண்டு ஓரத்தையும் கைகளில் பிடிச்சு ஒரே சமயம் புல் ஒர்க் பண்ணுவது போல் இழுத்தால் வரும் டிசைனில் கிடக்கு இந்தத் தீவு. பல இடங்களில் சமுத்திரத்தை ஒட்டியபடியே பாதை. இந்த நேரம் டைட்(tide) இல்லாததால் அங்கங்கே சதசதன்னு கிடக்கு.
கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு இந்தக் கோவில். மதில் சுவர், இரும்பு கேட்ன்னு நல்ல பாதுகாப்பு. கண்ணில் பளிச்ன்னு படுவது பெரீஈஈஈய்ய டிஷ் ஆண்டெனா. உள்ளே நடுவில் கூம்புவடிவக் கோபுரம். சுத்திவர ஏராளமான அறைகள். எங்கே பார்த்தாலும் 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்'ன்னு எழுதிவச்சுருக்கு. ஒரு பக்கம் சுவரில் ஹனுமன்சாலீஸா படக்கதையாக இருக்கு. மும்பைக்காரவுகளின் உபயம்.கருவறையில் நுழைஞ்சவுடன் ஹனுமனும் அவருக்கு வலப்பக்கம் மகன் மகர்ஜோதியும். (ஆஹா.... இப்போ மார்கழி மாசம். தை ஒன்னு ஆனதும் 'அங்கே' வந்துருவாரோ!!) நமக்கிடப்பக்கம் புள்ளையாரும் தர்மபத்னியும்.(ஒரே ஒருத்தர்) வாசலில் இருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவந்து உடைச்சார் நம்ம குழு பக்தர் ஒருவர். இங்கேயும் ஒரு ஸ்வாமிஜி இருந்து 'பக்தர்கள்' எல்லோருக்கும் ஆசிகள் வழங்கினார். (என் யோசனை உறுத்திப்பட்டுக்கிட்டே இருக்கு. கொஞ்சம் நல்ல வசதிகள் இருக்கே இங்கே. 'அதுக்கு இது' தேவலையோ! ஒரு பூனையும் நாயும்கூட இங்கே இருக்கு. பெட்டர் ப்ளேஸ்)
"மகர்ஜோதியின் தாய் யார்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் அனுமடு. தெற்கே கட்டை பிரம்மச்சாரியா இருந்துக்கிட்டே வடக்கே இப்படி வாலை அவிழ்த்துவிட்ட மர்மம் என்ன?"
"ஏம்மா துளசி. இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி (எனக்குப் பதிலா) ஆகாயத்துக்கும் பூமிக்குமாக் குதிச்சு அல்லல் படறே? மனைவின்னு யாரும் இல்லை!"
"அப்போ? கொடுக்கு ஏது? க்ளோனிங் பேபின்னு சொல்லாதே. இதெல்லாம் இப்போ சமீபத்துலே வந்தது ஆமாம்."
"குழறுபடி இல்லாம யோசிக்கவே மாட்டியா? எனக்கெதுக்கு இந்த க்ளோனிங்கும் மண்ணாங்கட்டியும்."
"அப்போ? அச்சு அசலா அப்பனைக்கொண்டுருக்கே!"
"இது நான் தத்து எடுத்தத் தொட்டில் பிள்ளை. மானஸ புத்ரன்னுகூட வச்சுக்கலாம்."
"பிரம்மச்சாரிக்கு தத்து எடுக்கும் உரிமை அந்தக் காலத்துலே இருந்துச்சா என்ன? இப்பத்தானே எடுத்துக்கலாமுன்னு ஒரு சட்டம் வந்துருக்கு."
பதில் உடனே வந்தது.
"அதெல்லாம், இப்போ நடக்கும் கலிகாலத்துலே உங்க மானிட உலகுக்கு மட்டும்தான். எங்களுக்கு இல்லையாக்கும். போ....போய் அங்கே ஆடாம அசையாம எல்லாத்தையும் கவனமாப் பார்க்கும் கோபால்கிட்டே இருந்து பையை வாங்கி ஒரு ஓரமா வை. பாவம் அதைத் தூக்கிக்கிட்டே எல்லாப் படத்துலேயும் போஸ் கொடுக்கறார்."
"அதுக்கு நான் என்ன செய்யறது? கடல் பயணம் குளிரடிக்குமுன்னு ரெண்டு ஸ்வெட்டர் எடுத்துப் பையிலே வச்சுக்கிட்டார். பாவம். கையால் சுமக்காமல் உடலால் சுமக்கலாமுன்னா அந்தக் குளிர் எங்கே இருக்குன்னே தெரியலையே.......பை,பைன்னு சொல்ல ஒரு சேதிகூட இருக்கு. அப்புறம் ஒரு நாள் சொல்வேன், கேட்டுக்கோ. இப்ப நேரமாச்சு. பக்தர்கள் புறப்பட்டாச்சு. அப்புறம் பார்க்கலாம்."
இன்னொரு பத்து நிமிசப்பயணம். ஆஷாபூரா மாதா கோவில். சக்தி. சிம்ஹ வாஹினி. கோவில் வளாகத்துலே நடுவிலே ஒரு பெரிய சதுர மேடை. அதைச் சுத்தி வட்டவட்டமா (சிமெண்டுலே செஞ்ச)ராட்சஸ உளுந்துவடை வரிசையா இருக்கு. சௌராஸி சித்த பீட். எண்பத்திநாலு சித்தர்கள் பீடம். ஒரே சமயம் யாகம் செஞ்ச யாககுண்டங்களாம். இப்போ அதுக்குள்ளே அங்கங்கே 'நான்' இருந்தேன். இந்தப் பக்கம் ரெண்டு சந்நிதிகள். உள்ளே சிலா ரூபத்தில் ரெண்டு ரிஷி/முனி/ ஸ்வாமிகள். (உங்க விருப்பம்போல வாசிச்சுக்குங்க)இடதுபக்கம் இருந்த ஒரு அறைக்கு பக்தர்கள் போனார்கள். பின் தொடர்ந்தோம். பகவான் ஸ்ரீ சந்திர மந்திர். அகண்ட யாககுண்டம்னு பெயர் இருக்கு. இங்கேயும் த்வாரகாநாத், இன்னும் சிலபல கடவுளர் & சாமியார்களின் படங்கள். அதற்கெதிரே பெரிய யாக குண்டம். சாம்பல் பூத்து நிறைஞ்சு வழியுது. சாமியார் இருக்கார். எல்லோரையும் ஆசீர்வதிச்சு விபூதி பூசிட்டு, எழுந்து வெளியே வந்தார். அம்மாடியோ................குழல்குழலா கால்பாதம்வரை நீண்டு தொங்கும் சடைமுடி. பக்தர்கள் நால்வர் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இந்த இடத்தைப்பற்றிய விஷயமாம். கோர்ட்டில் கேஸ் இருக்காம். க்ளையண்ட் மீட்டிங்.
இதுக்குள்ளே சாமியாரின் அடுக்களையில் இருந்து உதவியாளர் வந்து 'சாய்' குடிக்கிறீங்களான்னு கேட்டார். அதெல்லாம் ஒன்னும் வேணாம். நன்றி.
நாங்கள் இருந்த மரமேடைக்கு ஐந்தாம் நபர் வந்து உக்காந்தார். வக்கீல். சிவில் கேஸும் வாதாடினாலும் க்ரிமினல் வழக்குகள் அதிகம் பார்க்கிறாராம். எந்த மாதிரி க்ரைம்? பெருசா ஒன்னும் இல்லை. வெறும் கொலை வழக்குகள்தான்.. நெசமாவாச் சொல்றீங்க? கிராமத்து ஆட்கள் விருமாண்டிகளா இருக்காங்களாமே!
கோவில் வளாகத்துப் பூனை வந்து தரிசனம் கொடுத்தது.
.ஐவர் குழு இன்னும் சில கோவில்கள் பார்க்கப் போறாங்களாம். இதுவரை பார்த்தது போதுமுன்னு தோணுச்சு. போனவழியிலேயே திரும்பி வந்தோம். யாருமில்லாத அத்துவானக் கள்ளிக்காட்டின் பாதையில் நல்ல ஆடை அலங்காரத்துடன் தன்னந்தனியா ஒரு பெண் நடந்து போய்க்கிட்டு இருக்காங்க. சனிக்கிழமை, அனுமன் கோவிலுக்குப் போறாங்களாம்.
அங்கே வேற நம்ம பப்பன் காத்துக்கிடப்பாரே. மணி நாலரை ஆகப்போகுது. நாம் இந்த தீவுக்கு வந்த வேலை இன்னும் முடியலை. அது நினைவிருக்கட்டும். .....
கோவிலுக்குப் பக்கம் இறக்கிவிடுறோமுன்னு சொல்லி வாசலில் இறக்கிவிட்டுப் போனாங்க.
பயணம் தொடரும்..............:-)
பின் குறிப்பு:
படங்களைத் தனி ஆல்பத்தில் போட்டுருக்கேன். பாருங்க. ஏற்கெனவே நம்ம லிமிட்டைத் தாண்டிட்டோமாம். பழைய ஆல்பங்களை எடுத்துட்டுத்தான் புதுசு சேர்க்க வேண்டி இருக்கு. அதனால் கொஞ்ச நாளில் இதையும் தூக்கவேண்டி இருக்கும்.
இன்னொரு விஷயம் இங்கேயே கேக்கணும். பதிவுகளில் படங்கள் இல்லாமல் போகும் நிலைக்கு வந்துக்கிட்டு இருக்கேன். 98% இடம் போயிருச்சு. அதனால் பழைய பதிவுகளில் போய் படநீக்கம் செய்யணும். ப்ளொக்ஸ்பாட் கடையில் கூடுதல் இடம் வாங்க வழி தெரிஞ்சால் சொல்லுங்க.
Posted by
துளசி கோபால்
at
2/02/2010 03:00:00 PM
17
comments
Labels: அனுபவம், பெட் த்வார்க்கா
Monday, February 01, 2010
சிங்கத்துக்கு சிரிச்ச முகம்:-) (குஜராத் பயணத்தொடர் 12)
"என்ன, ஒரு அஞ்சாயிரம் வருசத்துக்கு மேலே இருக்கும்."
" நெசமாவாச் சொல்றீங்க? பார்த்தா அப்படித் தெரியலையே."
" திறந்தவெளியிலே மொட்டைக் காடாத்தான் இருந்துச்சு. அப்புறம் எங்க சனங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக் கட்டுனோம். இப்போ நீங்க பார்க்கறது எனக்குத் தெரிஞ்சே மூணாவது முறையா புதுப்பிச்சுக் கட்டுனதுதான்."
சக்கடாக்காரருக்கு, கோபால் கொஞ்சம் காசு கொடுத்ததைக் கவனிச்சுட்டு, 'ஏன் கொடுத்தீங்க? திருப்பி வாங்கிக்கிடுங்க. மொதல்லேயே எல்லாருக்குமா சேர்த்து நான் கொடுத்தாச்சு'ன்னு சொன்னார் ப்ரமுக்.அலைகளே இல்லாத குளம்போன்ற கடற்பரப்பு. கரையை ஒட்டுன இடம். விஸ்தாரமான முன்மண்டபத்தோடு கூடிய கருவறை. சிரிக்கும் சிங்கங்கள். அதுலே ஒன்னுக்கு, வாயெல்லாம் பல்லு:-)
யாதவ குலத்தில் ஒரு பிரிவினருக்கான கோவிலாம். இதுவரை மூன்று புதுப்பிச்சுட்டாங்க. இப்போ இருப்பது மெயிண்டன்ஸ் ஃப்ரீன்னு ஏற்பாடாம். கோபுரத்தில் அழுக்குப் படிஞ்சும் உப்புக்காற்றில் வண்ணம் எல்லாம் கரையுதேன்னும் சின்னச்சின்ன வண்ண டைல்ஸ் பதிச்சுருக்காங்க. இதுலேயும் கலை அழகோடு போர்ஸெலீன் பொம்மைகளும் சித்திரங்களுமா வச்சு அருமையா இருக்கு. ஒரு மழைவந்து போனால் எல்லாம் பளிச்!
தேவி மாதா இங்கே குடிகொண்டு அஞ்சாயிரம் வருசத்துக்கு மேலே ஆச்சு. த்வாரகைக்குக் கண்ணன் வருமுன்பே இந்தக் கோவில் இருந்துருக்குன்னாங்க.
யானைத்தலையும் சிங்கத்தலையுமா அலங்கரிச்ச முன்மண்டபத்தின் ஒரு மூலையில் ஏழெட்டுப்பேர் உக்காந்து கணக்குவழக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. பக்கத்துப் பதினெட்டுப்பட்டி ஜனங்களும் வந்துபோய்க்கிட்டே இருப்பாங்க. குலதெய்வம் என்றபடியால் போக்குவரத்து இருந்துக்கிட்டே இருக்குமாம். சுத்திவரக் காம்பவுண்டு கட்டி, வளாகத்தில் தென்னைகளின் வரிசை, பூச்செடிகள் இப்படி வச்சுப் பராமரிக்கிறாங்க. பின் கேட்டைத் திறந்துவிட்டு, போய் பாருங்கன்னார். இருபது எட்டுலே கடல். இந்த இடம் கொஞ்சம் மேடா இருக்கு. எதுக்கும் கரை அரிக்காம இருக்க நிறைய ஆலமரக்கன்னுகள் வச்சு அதெல்லாம் விழுதுவிடத்தொடங்கி இருக்கு. ரெண்டு குடும்பத்துக்கு அங்கே இடம் கொடுத்துருக்கு. வந்து போகும் ஆட்களுக்குச் சமையல் சாப்பாடு, பராமரிப்புன்னு அவுங்களுக்கு வேலை இருந்துக்கிட்டே இருக்கு. கெட்டில் நிறையச் சுடச்சுட டீ தயாரிச்சு எடுத்துக்கிட்டு வந்து தந்தாங்க. குடிக்கும் கப்புகள் மட்டும் லேசாக் குழிவான சாஸர்கள் போல இருக்கு. சமையல் கொஞ்சம் லேட் ஆகுமாம். அதுவரை பசியாற ......இங்கே ரெண்டுநாள் தங்கிப்போகணுமுன்னா சொல்லுங்க. ஏற்பாடுகள் இருக்குன்னார் நம்மை இங்கே கொண்டுவந்த ப்ரமுக். வளாகத்தில் ஒரு பக்கம் வரிசையா சில அறைகளும், அதையொட்டி இருக்கும் வெராந்தாவில் கயிற்றுக் கட்டில்களுமா அருமைதான். மொட்டைமாடிக்குப் போனால் ஓஹா துறைமுகமும், நாம் வந்த அக்கரையும் தெரியுது. ஒரு சோலார் பேனல் வச்சு விளக்குக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க. ஆனால் இப்போக் கொஞ்சநாளா பவர் லைன் போட்டு, கரண்ட் வருதாம்.
நல்ல அமைதியான இடம். உக்காந்து யோசிக்கலாம். கொன்னு குழிச்சு மூடுனாக்கூட யாருக்கும் தெரியப் போறதில்லை. என்ன செய்யறதுன்னு தெரியாமச் சுத்திச்சுத்தி வந்தோம். தென்னைகள் வரிசையை ஒட்டி சிமெண்ட் இருக்கைகள் வரிசை.
சமையலறையில் ஏழெட்டு கேஸ் ஸிலிண்டர்கள் இருக்கு. ஆனாலும் விறகு அடுப்பில் ரொட்டி சுடும் வேலை. உங்களுக்காக கோதுமை ரொட்டி செய்யச் சொல்லி இருக்கேன்னாங்க. இப்போ செஞ்சுக்கிட்டு இருப்பது சோளரொட்டி. பரவாயில்லை இதுவே போதும் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பார்க்கிறேன்னு சொன்னேன். ஒரு ரொட்டிக்குள்ள மாவை எடுத்துத் தண்ணீர்விட்டுப் பிசைஞ்சு அதைக் கையாலேயே தட்டித்தட்டி ரொட்டி செஞ்சு தவாவில் போடறாங்க. இப்படி ஒவ்வொரு ரொட்டிக்கும் தனித்தனியாப் பிசைஞ்சு ஒருத்தர் தர, இன்னொருத்தர் அதைச் சுட்டு அடுக்கறாங்க.
சிரிச்சமுகத்தோடு ராம்புவும் லீரியும் பரபரன்னு ரொட்டி சுடுவதைக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தேன். காய்கறிகளை நறுக்கி வச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். கிராமத்து ஆட்கள். ஹிந்தி புரியுது, ஆனால் பேசவரலை. தேவையும் இல்லையாம். தேசியமொழின்னு ஒரு கூட்டம்தான் சொல்லிக்கிட்டுத் திரியுது.முக்கிய விருந்தினருக்குச் சமைலறைக்கருகில் சாப்பாடு பரிமாறினாங்க. ரெண்டு வகைக் காய்களும் கீரையும் சேர்த்து ஒரு பொரியல், தக்காளிச் சட்டினி, வதக்கிய முழுப் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்துண்டுகள், குடிக்க மோர். நாங்க சாப்பிட்டு முடிச்சதும் கோவிலில் இருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் வெராந்தாவில் பந்தி போட்டுட்டாங்க. செல்விருந்து ஓம்பி வரும்விருந்து பார்க்கும் பண்பு. இங்கேயும் தாடிக்காரர் வந்துட்டுப் போயிருந்துருப்பாரோ!
கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்கன்னு உபச்சாரம் வேற! நமக்கோ...எப்படி ... இங்கே இருந்து போக வண்டி கிடைக்குமான்ற கவலை. அதெல்லாம் கவலையில்லை. போயிறலாமுன்னு பதில். சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு மறுபடியும் எல்லோரும் கூடி, கிராமத்து விஷயம் ஏதோ பேசறாங்க. நம்ம கவலை நமக்கு.
கண்ணனே நம்ம கவலையைத் தீர்க்கச் சக்சக்ன்னு சக்கடாவை அனுப்பிட்டான். நாலைஞ்சுபேர் வந்திறங்கி திமுதிமுன்னு கோவிலுக்குள் வந்தாங்க. அந்த வண்டியில் திரும்பி போயிடலாமேன்னு விசாரிச்சால்... இது அந்த நாலைஞ்சுபேர் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்துக்கிட்டதாம். ஆனால் நமக்கு விருப்பமுன்னா அவுங்களே நம்மைக் கோவிலில் கொண்டு விட்டுருவாங்களாம். 'எனி ப்ராப்லம்? நோ...ப்ராப்லம் ஸால்வ்டு:-)'
"இன்னும் பெரிய கோவில் திறக்க ரெண்டு மணி நேரம் இருக்கு. நாங்க இன்னும் சில பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்குப் போறோம் வர்றீங்களா? இல்லேன்னா கோவிலில் கொண்டு விட்டுட்டுப் போறோம்."
சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தோம். ஜாம்நகர் கம்பாலியா தாலுகா நீதிமன்றத்து பப்ளிக் ப்ராஸிக்யூட்டரும், அவர் நண்பர்களான வழக்கறிஞர்களும் வார இறுதிக்குப் பொழுதுபோக்கா இருக்கட்டுமேன்னு பெட் த்வாரகா கோவில்களுக்கு ஒரு விஸிட் அடிக்கிறாங்களாம். அதுவுஞ்சரித்தான். வாரம் முழுசும் பொய்க்கேஸுகளுக்கு வாதாடிய பாவம் போகவேணாமா?இந்த 'பெட் பெட்'டுன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பொருள்ன்னு கேட்டேன். குஜராத்தி மொழியில் Bet ன்னால் தீவு. குஜராத்திச் சொல்லித்தரவான்னு ஆரம்பிச்சாங்க. பேசுனா நல்லாப் புரியும் (பெட்டைத் தவிர) திருப்பிப்பேச வராது. ஆனால் இவுங்க குஜராத்தியில் எழுதுனதைப் படிப்பாங்கன்னு என் பக்கம் கையைக் காட்டுனார் கோபால். தத்தித்தத்தின்னு சொன்னேன்:-)
இப்போப் போகும் கோவிலில் நவ்க்ரஹ் இருக்காம். அங்கே இருக்கும் பண்டிட் மத்ராஸிதானாம்.
அட! என்ன பெயர்?
காலியா.
பயணம் தொடரும்.........:-)
Posted by
துளசி கோபால்
at
2/01/2010 06:50:00 PM
22
comments
