Friday, January 22, 2010

சூரியனையேத் தூக்கிட்டுப் போயிட்டாங்கப்பா!!! (குஜராத் பயணத்தொடர் 6)

மேடம் இதர் தேக்கியே..... இஸ்கா நாம் சூர்ய kகுண்ட் ஹை. இஸ்மே தீனோ பக்வான் கா மூர்த்தி ஹை.... இதர் தேக்கியே மேடம்.... தலையை ஒரு பக்கமாச் சாய்ச்சுக்கிட்டே பூபேந்த்ரா விளக்கிக்கிட்டுப் போறார். அரசாங்கம் அங்கீகாரம் செஞ்சிருக்கும் வழிகாட்டி. முதலில் கைடு வேணுமான்னு கோபாலுக்கு கொஞ்சம் யோசனை. எல்லாம் ஒருவேளை எனக்கே(!) தெரிஞ்சுருந்தா!!!! அதெல்லாம் லேசுப்பட்ட காரியம் இல்லை.போன ஜென்மத்தில் நான் இங்கே வரலை. அதனால் விளக்கம் சொல்ல ஒரு ஆள் இருக்கட்டுமே. (பெரியமனசு செஞ்சேன்)

மொதேரா என்ற ஊருக்கு வந்துருக்கோம். சூரியனுக்கான கோவில் இருக்குமிடம். இப்போது தொல்பொருள் இலாகாவின் பொறுப்பில். நம்ம நாட்டில் இந்திய தொல்பொருள் சம்பந்தமான இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வெறும் அஞ்சே ரூபாய்கள்தான். இடம் குறிப்பிடாமல் பொதுவா ஒன்னு அச்சடிச்சு வச்சுருக்காங்க. ஆக்ராவுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாம்.

ஸோலாங்கி அரசர்கள் ஆட்சியில் ராஜா முதலாம் பீமதேவ் கட்டி இருக்கார். 1022 வது ஆண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் வருசப் புதுசு! இன்னும் சரியாச் சொன்னால் 988 வருசம். கட்டி முடிக்க 36 வருசம் ஆச்சாம்! அருமையாப் பராமரிச்ச தோட்டத்தில் புகுந்து நடக்கறோம். ஒரு அழகான நாய் தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஜாலியா ஒரு கூட்டமா ஓடிவிளையாடுது. எல்லாப் பசங்களும் நல்ல ஆரோக்கியமா இருக்குதுங்க.

சூர்யக் குளத்தில் அழகான படிக்கட்டுகள். இதுலே 'ஆண், பெண்'ன்னு இருக்காம். ஒரு படி நல்ல உயரமாகவும். ஒன்னு அதைவிடக் கொஞ்சம் உயரம் கம்மியாவும் இருக்கு. கம்மியா இருப்பது ஆண். உயரப்படி பெண். அதுலே தம்பதியர் நிற்கும்போது தலை உயரம் சமமா இருக்குமாம்! அட! ஆமாம்!! இந்தக் குளத்தை ராமர் குளமுன்னும் சொல்றாங்களாம். ராவணனுடன் போர் முடிஞ்சு அவுங்க அயோத்திக்குத் திரும்பும் சமயம், ராமனுக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷத்தை நீக்க, வேள்வி நடத்த வேண்டி இருந்தது. குலகுருவான வசிஷ்டர், தர்ம ஆரண்யம் என்ற காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே போய் யாகம் செய்யச் சொன்னாராம். அதுதான் இப்போது கோவில் உள்ள இடமுன்னு ஒரு 'கதை' இருக்கு.
பச்சைப்பசேலுன்னு தண்ணி. பார்க்க இதுவும் ஒரு அழகுதான். முன்பொரு காலத்துலே அருமையான நீர் ஊற்றுக்கள் இதுக்கடியில் இருந்து சுத்தமான நீராக இருக்குமாம். இப்போ வெறும் மழைநீர் தேங்கிப் பாசிபிடிச்சுக் கிடக்கு. இந்தக் குளத்தின் அடுக்குப்படிகட்டுகளில் சின்னதும் பெருசுமா 108 சந்நிதிகள். அதுலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் மூன்று பக்கங்களில் இருக்காங்க. அதிலும் விஷ்ணு, (நமக்கு வலப்பக்கம்) தெற்குப் பக்கம் தலைவச்சுப் படுத்துருக்கார். கைகால் அமுக்கும் ஸ்ரீதேவியைக் காணோம்! பெருமாளுக்கு ஒரு காலே இல்லை. ஆனா பக்கத்துலே ஒரு யானை இருக்கு:-)

புள்ளையார் தன் மனைவியை அணைச்சுப்பிடிச்சபடி உக்கார்ந்துருக்கார் ஒரு சந்நிதியில்.

அந்தக் காலத்துலே யாத்திரை செஞ்சு வரும் ஆட்கள் பத்துப்பதினைஞ்சுநாள் நடந்தே வருவாங்களாம். குளத்தில் மூழ்கிக் குளிச்சு அந்த 108 சந்நிதிகளையும் வணங்கி கோவிலுக்குள் போவாங்களாம். அதுவும் அந்தக் கடைசிப் படிக்கட்டில் இருந்து கோவில் முன்வாசலுக்கு உயரம் 52 அடிகளாம். மொத்தம் மூணுபகுதிகளா இருக்கு கோவில். குளம், சபை மண்டபம், சூரியன் கோவில்.(இது முன்மண்டபமும் கருவறையும்)

சபை மண்டபத்தில் ஏறிப்போகுமுன் வடக்கே ரெண்டு அலங்காரத்தூண்கள் இருக்கும் மேடைக்குக் கூட்டிப்போனார். இதே மாதிரி ரெண்டு தூண்கள் சபா மண்டபத்தின் எதிரிலும் (குளத்துக்கும் மண்டப வாசலுக்கும் இடையில்) இருக்கு. வடக்குப் பகுதி மேடைக்கு ஆறுபடிகள் ஏறி அந்த ரெண்டு தூண்களுக்கிடையில் கோவிலுக்குள் நுழையணுமாம். அப்போ இடது பக்கம் சபா மண்டபமும் நமக்கு வலது பக்கம் சூரியன் சந்நிதியுமா இருக்கும்.
முழுக்க முழுக்க மணல் கற்கள் கொண்டு கட்டியிருக்காங்க. சிமெண்டு இல்லாத அந்தக் காலக்கட்டங்களில் தனித்தனியாச் செஞ்ச பாகங்களை எப்படி இணைச்சுருப்பாங்கன்னு எப்பவும் எனக்குத் தோணும் சந்தேகத்துக்கு இங்கே விளக்கம் கிடைச்சது.

ஒவ்வொரு பகுதியா வேலைப்பாடுகளைச் செதுக்கிய பிறகு சேஷம் என்ற மரத்தின் துண்டுகளை வச்சு இணைச்சிருக்காங்க. dowel reinforced butt joint. இந்த முறை பல ஆயிரக்கணக்கான வருஷங்களா இணைப்பு வேலைகளில் பயன்பட்டு வருது. சில பெரிய தூண்களில் இதே முறையில் கற்களையே செதுக்கியும் வச்சுருக்காங்களாம்.மாதிரிக்கு ஒரு தூணையும் காட்டினார் பூபேந்த்ரா.

வெகுதூரத்துலே இருந்து யானைகள் மூலமா பெரிய பெரிய மணல் கற்களைக் கொண்டு வந்துக்காங்க. அந்த நன்றியை மறக்காமல் கோவிலில் 1200 யானைச்சிற்பங்களைச் செதுக்கி வச்சுருக்காங்களாம். எங்கே பார்த்தாலும் யானையோ யானைதான்.

அந்த சபா மண்டபத்தில் 52 அலங்காரத்தூண்கள். ஒவ்வொரு தூண்களிலும் கண்ணைவச்சா எடுக்க முடியலை. ஹைய்யோ.... என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாடு! நீங்க எதைப்பார்த்தாலும் பார்க்காட்டாலும் இந்த சபா மண்டபத்துச் சிற்பங்களைக் கட்டாயம் பார்க்கத்தான் வேணும். அத்தனையும் அழகு. ராமாயண மகாபாரதக் காட்சிகள் ஏராளம். சீதையைக் கவர்ந்துகொண்டு புஷ்பக விமானத்தில் பறக்கும் ராவணன், வாலி சுக்ரீவன் சண்டை, ராவணனுடன் நடந்த போரில் அடிபட்டு மயக்கமான லக்ஷ்மணனை தன் மடிமீது தாங்கிக்கொண்டு அனுமன் கொண்டுவரப்போகும் சஞ்சீவி மலைக்காகக் காத்திருக்கும் ராமன், குற்றவாளிகளை யானையைக்கொண்டு தலையை இடறச்செய்யும் சிற்பம், உறங்கும் கும்பகர்ணனின் மீதேறி விளையாடும் வானர வீரர்கள், சிறுவர்களாக இருந்தபோது மரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருக்கும் கௌரவச் சகோதரர்களை தன் அசாத்திய உடல்பலத்தால் மரத்தை உலுக்கிக் கீழே விழச்செய்த பீமனின் செய்கை (பாண்டவர்கள் மீது துரியோதனனின் வெறுப்புக்கு முதல்காரணமாகச் சொல்லப்படும் சம்பவம் இது), த்ரௌபதி சுயம்வரத்தில் அர்ச்சுனன் மீன்வடிவ யந்திரத்தை வீழ்த்தியது, பீமனும் துரியோதனனும் செய்த கதாயுதச்சண்டை, குழலூதும் கண்ணன், வெண்ணை கடைந்தெடுக்கும் பெண்கள், கோவர்தனகிரியைக் குடையாய் பிடித்த கண்ணன் இப்படி....ஏராளம்.

மண்டபத்தின் கிண்ணக்கூரைகளுக்குள்ளில்.... எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!! வளைவுகளும் தோரணங்களுமாக் கல்லில் ஒரு அட்டகாசம்!
அடுத்து கருவறை இருக்கும் முன்மண்டபத்துக்குள் போனால் பளிங்குத் தூண்களில் இன்னும் பலவித சிற்பங்கள். பாலியல் சிற்பங்களும் நிறைய இருக்கு. மேடம்...இதர் தேக்கியே oh zamaana mein lesbian pyaar bhi thaa. வழிகாட்டியின் குரல் பலமாக ஒலிச்சதும் அங்கே இருந்த சில இளைஞர்களின் கவனம் அந்தத் தூண்கள் மேல் திரும்புச்சு.

கிழக்குப் பார்த்தக் கருவறைக்குள்ளே எட்டிப்பார்த்தால் ஒன்னுமே இல்லை. ஒரு ஆழமான பள்ளம். ஏழு அடி உயர சூரியனின் தங்கச்சிலை இருந்ததாம். அதன் நெற்றியில் ஒரு பெரிய வைரக்கல்லைப் பதிச்சு வச்சுருந்தாங்களாம். வருசத்தின் ரெண்டு நாட்கள் காலையில் உதிக்கும் சூரியனின் முதல் கிரணங்கள் அந்த வைரக்கல்லில் பட்டு அந்த இடமே ஜொலிக்குமாம். அது 21 மார்ச், 22 டிசம்பர் தேதிகளில் (ஆஹா ஷார்ட்டஸ்ட் டே, லாங்கஸ்ட் டே சமயம்!!)

எல்லாம் சரி. சிலை இப்போ எங்கே? அந்த கிடுகிடுப்பள்ளம் ஏதுக்காக?

கஜனி முகமது வந்து கொள்ளையடித்த கோவில்களில் இதுவும் ஒன்னு. சிலைகளைப் பிரதிஷ்டை செய்யுமுன் ஏராளமான தங்கமும், நவரத்தினக்களும் சிலையின் பீடத்துக்கடியில் புதைக்கும் வழக்கம் இருந்ததை அறிந்து கொண்ட கஜனியின் ஆட்கள் எதையும் விட்டுவைக்காமல் கொண்டுபோய்விட்டார்கள். போகும்போதே தங்கள் வெற்றியைக் கொண்டாட அங்கங்கே பலசிலைகளை உடைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதிலிருந்தும் தப்பிப் பிழைத்தவற்றைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். காலம் செய்த கோலத்தால் இந்தச் சிற்பங்களின் மூக்குமுழியெல்லாம் கரைஞ்சுபோய் இருக்கு(-:

கருவறையை வலம்வர விஸ்தாரமான வழி இருக்கு. கருவறையைச் சுத்தி சூரியனின் 12 சிற்பங்கள் சுவரில் அங்கங்கே.. மாவிலை தோரணங்கள் போல சுத்திவர ஒரு செதுக்கல். இந்த 12 உருவங்கள் 12 மாசங்களைக் குறிக்குதாம். அப்போ அந்த 52 தூண்கள்? வேறென்ன... வாரம்தான்!!
கோவிலின் வெளிப்புறத்தில் மனிதவாழ்க்கையின் ஆரம்பம் முதல் கடைசிவரையுள்ள சிற்பங்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை. இறந்தபின் வீட்டார் துக்கம் அனுஷ்டிக்க உக்காந்து அழுவதுகூட இருக்கு!
அங்கங்கே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர், கலைமகள் இப்படிச் செதுக்கித்தள்ளி இருக்காங்க. ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தப்போ உயிரோடு ரெண்டு ஆந்தைகள். "மேடம், நான் சொல்றேன். பகலில் ஆந்தைகளைப் பார்ப்பது கடினம். இப்படிப் பார்த்த முப்பதே நாளில் பணவரவு உண்டு.நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க"
'அச்சச்சோ.... இது என்னவோ நெஜம்தான். இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குப் (வழிகாட்டிக்குப்) பணம் கிடைக்கப்போகுதே!"

அரைமணி நேரத்தில் சுற்றிப்பார்க்கலாம் என்று சொன்னவர் நம்ம ஆர்வத்தைப் பார்த்து ஒருமணி நேரம் விவரிச்சுக்கிட்டு இருந்தார். இந்தக் கோவிலில் பூஜை ஒன்னும் இல்லாததால் கோவிலை மூடும் வழக்கம் எல்லாம் இல்லை. அதான் கதவுன்னே ஒன்னும் இல்லையே! ஆனா ஒன்னு இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது , கொஞ்சம் யோசனை பண்ணிக்கிட்டு நிக்காமல் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செஞ்சுக்கறது நல்லது. இல்லேன்னா இவ்வளவு விவரங்கள் கிடைச்சிருக்காது.

நம்ம மாமல்லபுரத்தில் நடக்கும் நாட்டிய விழாவைப்போல இங்கேயும் வருடம் ஒருமுறை நாட்டிய விழா நடக்குதாம்.

தொல்பொருள் இலாக்கா கோவிலை ஏற்றெடுத்த சமயம் அங்கங்கே உடைஞ்சு விழுந்திருந்த பாகங்களையெல்லாம் சேகரிச்சு ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க. ம்யூஸியம் கட்டப்போறாங்களாம். அப்போ இவையெல்லாம் அங்கே காட்சிக்கு வைக்கப்படுமாம்.

நாங்க வெளிவந்த சமயம் ஒரு பேருந்து நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்குனாங்க. பக்கத்துக் கட்டிடத்தில் சுற்றுலாத்துறையினர் இயக்கும் ஒரு உணவு விடுதி இருக்கு. எல்லோரும் அங்கே படையெடுத்ததால் நாங்க வேற இடத்துலே சாப்பிடலாமுன்னு 'எஸ்'ஆகிட்டோம். ஒரு அரைமணி நேரப்பயணத்தில் இன்னொரு இடத்தில் டைனிங் ஹால் ஒன்னு இருக்காம். அங்கே போனோம். இடம் சுத்தமா இருக்கான்னு பார்த்துக்கிட்டு டோக்கன் வாங்கினோம். வெறும் 22 ரூபாய்கள்தான். சாப்பாடு பரவாயில்லை.

கொஞ்சம் படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன்.


பயணம் தொடரும்.........:-)

Thursday, January 21, 2010

WOW......அடலாஜ் வாவ். vav.................(குஜராத் பயணத்தொடர் 5)

சொன்ன நேரத்துக்கு 'டான்'னு பப்பன் வந்ததுக்கும் நாங்களும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ரெடியா இருந்ததுக்கும் சரியா இருந்துச்சு. பஃபேதான். என்ன இருக்குன்னு போய்ப் பார்த்தால்.......இப்பெல்லாம் 'சவுத் இண்டியன் மெனு'ன்னு வைப்பது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம்போலப் பெருகி வருது. இட்லி சாம்பார், தோசை, ஊத்தப்பம். எனக்கு வெஸ்ட்டர்ன் போதும். கோபால்தான் ஆசையா இட்லி சாம்பார் எடுத்துக்கிட்டு வந்தார். ரெண்டு ரூபாய் சைஸில் இட்லி!! நல்லாவே இல்லைன்னு முழிச்சதைப் பார்த்துப் பரிதாபமா இருந்துச்சு. அதுக்குப்பிறகாவது சூதானமா இருந்துருக்கலாம். ஊத்தப்பம் சொன்னதும் தேசலா ஒன்னு வந்துச்சு. ஹூம்......

செக் அவுட் பண்ணிட்டுக் கிளம்பி நேரா சபர்மதி ஆஸ்ரமம். இப்போ அங்கிருந்து கிளம்பி சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அடலாஜ் வாவுக்குப் போய் இறங்குனோம். (வாவ் = கிணறு. வாவின்னு நீர்நிலைக்கு நாமும் சொல்றோமே) 1498 லே கட்டுன படிக்கிணறு. நேத்துப் பார்த்ததைப்போலத்தான். ஆனால் அதைவிடப் பெருசாவும் கலைஅழகோடும் பளிச்சுன்னும் இருந்துச்சு. (ஒருவேளை நாம் வந்த நேரமாவுமிருக்கலாம். நேத்து இருட்டுக் கவிழும் சமயமாப் போயிருச்சே) எல்லாம் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள். இதுக்கு மூணு வாசல்கள் வேற. மூணுபக்கத்தில் இருந்தும் முதல் மண்டபத்தில் இறங்கலாம். தொல்பொருள் இலாக்காவின் பொறுப்பில் இருக்கு.


மாணவர் கூட்டம் ஒன்னு அங்கங்கே உக்கார்ந்து வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம். ஒவ்வொரு அடுக்காக இறங்கிப்போனோம். எங்கே பார்த்தாலும் யானைகள் வரிசை (என்னைச் சொல்லிக்கலை) 'எல்லாவிதமான' சிற்பங்களும் இருக்கு. கடைசி அடுக்கு வந்தவுடன் இருக்கும் கிணற்றுக்குக் கம்பிகளால் மூடிபோட்டு வச்சுருக்கு. அதுக்கு இடையில் சேர்ந்த குப்பை, மண் இவைகளை மூணு பணியாளர்கள் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. சின்னதா ஒரு வேக்குவம் க்ளீனர் இருந்தால் சுலபமா உறிஞ்சி எடுக்கலாம். ரெண்டு நாளைக்கொருமுறை சுத்தம் செய்யவேண்டி இருக்காம். சலிப்பு பேச்சிலும் முகத்திலும்.


இதைத்தாண்டியும் ஒரு சின்ன இடம் இருக்கேன்னு எட்டிப் பார்த்தால் அங்கேயும் ஒரு கிணறு இருக்கு. நீலத் தண்ணீரும், அதில் மிதக்கும் குப்பைகளுமா(-: என்ன பொறுப்புணர்வு இல்லாத மக்கள் பாருங்க! நான் மட்டும் இங்கே அதிகாரியா இருந்தால் எந்த விதமான தீனிகளும் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லைன்னு கறாரா இருப்பேன். மிஞ்சிமிஞ்சிப்போனா அரைமணி நேரம் போதும் உள்ளே படிகளில் இறங்கிப் பார்த்துவர. அதுக்குள்ளே அங்கே போய் தின்னுதான் ஆகணுமா? சரி. தின்னதுதான் தின்னீங்க அதுக்காக அந்த பொருள் பொதிஞ்சுவந்த உறைகளை அங்கேயே போட்டுத்தான் ஆகணுமா? இவ்வளவு நேரம் அது உங்க பையில்தானே இருந்துச்சு. காலியானதும் மீண்டும் பையிலே வச்சுக் கொண்டுபோகவேண்டியதுதானே? குப்பைத்தொட்டியில் கொண்டு போட்டால் ஆகாதா? ப்ச்....என்னமோ போங்க(-:

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒட்டுனாப்பலெ ஒரு கோவில் இருக்கு. (கண்ணுக்கு உறுத்தலா இருந்ததுன்றது வேற) தாய் தகப்பனை மறந்துடாதேன்னு ஸ்ரவண், தன் பெற்றோர்களைக் காவடியில் கொண்டுபோகும் படம் ஒன்னு வெளிப்புறச் சுவரில். (இதேமாதிரி ஒன்னை இன்னொரு இடத்திலும் பார்த்தேன். வெளிநாடு, வெளியூர் வேலைகளுக்குப் போனவங்களுக்கு நினைவூட்டும் டெக்னிக்?) கோயில் இது சம்பந்தமானதோன்னு உள்ளே போனால்.... அது தேவி கோயில். அழகான கண்ணாடி வேலைப்பாடுகள். முன்மண்டபத்தின் ரெண்டு பக்கங்களிலும் சுவர் நிறைச்சு கண்ணாடி பதிச்ச ஓவியங்கள். கோவிலின் கதைகளைச் சொல்லுது. ஒரு அரசனுக்கு, அம்மன் தோன்றி வாழ்த்தி இருக்காங்க. சின்ன கண்ணாடி அலமாரியில் பளிங்கு அனுமார். காலின்கீழ் மனுஷி இல்லை!

வெளியில் இருக்கும் திறந்த மண்டபத்தில் அன்னாடக் கலெக்ஷனுக்காக ஒரு பண்டிட் தயார் செஞ்சுக்கிட்டு இருந்தார். கடவுளைக் குஷிப்படுத்தி மக்கள் (மனக்)குறை தீர்த்துவைப்பார் போல!

நெடுஞ்சாலை 41. மெஹ்ஸானா என்னும் ஊரை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கோம். சுங்கம் வசூலிச்சாங்க. அருமையான சாலை. போக ரெண்டு வர ரெண்டுன்னு நாலு லேன். நெடூக, நடுவிலே பூச்செடிகள் வரிசை. தண்ணீர் அவ்வளவாத் தேவைப்படாத வகைகள். போகன்வில்லா பலநிறங்களில் பூத்துக்குலுங்குது. இது இல்லாம இடது பக்கமும் வலது பக்கமும் சர்வீஸ் ரோடு போல அகலமா ஒன்னு. ரெண்டு சக்கரம், மூணு சக்கரமெல்லாம் அதுலே போகுது. இந்த ஏற்பாடு அருமையா இருக்கேன்னு நினைச்சேன். ஆபத்து இருக்காது. நெடுஞ்சாலையில் விர்ரிடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகலாம்.

குஜராத்தின் முதல் அம்யூஸ்மெண்ட் பார்க், வாட்டர் ஒர்ல்ட் ரிஸார்ட்டைக் கடந்தோம். எல்லாக் கேளிக்கைகளுக்கும் கேரண்டி என்றது போல ராட்சஸ ராட்டினமும், ரோலர்கோஸ்ட்டர் அமைப்பும் நிக்குது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது வந்து கொண்டிருக்கும் ஊர்களில் எல்லாம் திடுக் திடுக் என்று கோவில்களின் கோபுரங்கள். நம்ம பக்கம் இருப்பதுபோல் ஒற்றைக்கோபுரமா இல்லாமல் சின்னதும் பெருசுமா ஒரு கூட்டமா நிக்குது இங்கே.

மெஹ்ஸானா நகரம் நம்மைக் கைகூப்பி வரவேற்கிறது. அது கும்பிடுமுன்னே நாம் இடது பக்கம் திரும்பி இருக்கணும். நம்ம இலக்கு வேற! அங்கே போகும் வழியைத் தவறவிட்டுட்டோம். சரின்னு கும்பிட்ட கைகளை வலம்வந்து தவறவிட்ட பாதைக்குத் திரும்பினோம். (தவறவிட்டதுக்காக நாலைஞ்சுமுறை மன்னிப்பு கேட்டுக்கிட்டார் பப்பன்! இதெல்லாம் சகஜமப்பான்னு சொன்னோம்.)
இதுவரையில் நல்ல மனிதராகத்தான் இருக்கார் நம்ம(?) பப்பன்.


பயணம் தொடரும்..............:-)))))

பி.கு: படங்களை ஆல்பத்தில் போட்டுவைக்கவா?

Wednesday, January 20, 2010

சாந்தி நிலவ வேண்டும், ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே..............(குஜராத் பயணத்தொடர் 4)

சபர்மதி நதிக்கரையில், அமைஞ்ச ஆசிரமத் தோட்டத்தில் அமைதியா உட்கார்ந்துருக்கார் காந்திஜி.. இங்கே நுழைஞ்சதும் வெளி உலகத்து ஓசைகள் எல்லாம் ஒடுங்கிப்போச்சு. சதுரவடிவ நாலுபுறமும் திறந்த மண்டபங்களில் சிலதை, ஒன்னோடொன்னு சேர்த்து அடுக்கிவச்சதுபோல் இடமும்வலதுமாகப் போகுது. அங்கங்கே காந்திஜியின் படங்கள், சரித்திர சம்பவங்கள், விளக்கங்கள்ன்னு இருக்கு. எங்கேயும் 'சைலன்ஸ் ப்ளீஸ் ஸைன் இல்லாமலேயே சைலன்ஸ் இயற்கையா அமைஞ்சுருக்கு. நமக்குமே குரலெடுத்துப் பேச ஒரு தயக்கம் வந்துருதுன்னா பாருங்க. அப்பா.....என்ன ஒரு அமைதி. அங்கங்கே சிலர் வாசிப்பும் எழுத்துமா இருந்தாங்க.

ஆற்றங்கரைக்குப் பக்கம் போனோம். தண்ணிக்குப் பக்கத்தில் போக ஒரு படித்துறையும் இருக்கு. குட்டியாச் சின்னதா ஒரு கோவில். உள்ளெ சிவன். சுத்தமாகப் பராமரிக்கும் தோட்டங்கள். மரத்தடியில் வச்சுருக்கும் தானியங்களையும் பழங்களையும் தின்னவரும் அணில், கிளி, புறா, குருவிகள். கிட்டே போனால் ஓடிருமோன்னு தூரக்க நின்னு நாலு க்ளிக்.
1917 இல் கட்டப்பட்டது. சத்யாகிரஹ ஆஸ்ரமம். உள்ளே நுழையும்போதே வரவேற்கும் அசோகமரம் 1963-இல் அப்போதையப் பிரதமர் நேரு நட்டதாம். அங்கிருந்தே ஆற்றங்கரை வரை நீண்டு போகும் இடத்தில்தான் கடவுள் வணக்கத்துக்கு எல்லோரும் கூடுவாங்களாம். நடுநடுவில் மரங்களோடு இதமா இருக்கு. ஒரு தினசரி நிகழ்ச்சியா இருக்கும்போல! ப்ரார்த்தனா பூமி. இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு 'உபாசனா மந்திர்'ன்னு தகவல் பலகை சொல்லுது.

'ஹ்ருதயகுஞ்' என்ற பெயரில் காந்தியும் கஸ்தூர்பாவும் வசித்த வீடு. பெரிய அகலமான முன் வெராந்தா, ஒரு சின்ன ஹாலின் அளவுலே இருக்கு. நமக்கு இடதுபுறம் வெராந்தாவையொட்டிய அறை காந்திஜியின் தனியறை. கண் எதிரே ரெண்டு வாசல்கள். முதல் வாசல் வீட்டுக்குள்ளே போக. அதுக்கு வலப்பக்கம் உள்ளது. சமையல் அறைக்கானது. வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு சமைச்சுக்கிட்டே நோட்டம் விடலாம். அந்த வாசலுக்கு அருகிலே சுவர் ஓரமா ஒரு ராட்டையும், ஒரு சர்க்காவும். இந்தப் பக்கம் கணக்குப்பிள்ளை டெஸ்க். உக்கார்ந்து எழுத ஒரு மெத்தை இருக்கை.

வீட்டுக்குள்ளே போனால் 'ப'வடிவில் வெராந்தா. ஒரு படி இறங்கினால் திறந்த முற்றம். ஹைய்யோ..... இது நான் மனசுலே வச்சுருந்த இடம். முற்றத்தில் நின்னால் மூணுபுறமும் உள்ள வெராந்தா, திண்ணையாகிரும். ஆஹா...... முற்றத்தின் முடிவில் சின்னதா ஃபென்ஸ் உள்ள தோட்டக் கதவு.
இடது பக்கம் ரெண்டு அறைகள். முதல் அறைவாசி கஸ்தூர்பா. அதை அடுத்து உள்ளது விருந்தினருக்கு. வலது பக்கம் ஒரே ஒரு வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சால் சமையலறை. இந்த அறைக்குமட்டும் ரெண்டு வாசல். அதில் ஒன்று தெருவைப் பார்த்து. இந்த அறைக்குள்ளேயே ஒரு சின்ன அறை ஸ்டோர் ரூம். அடுப்புக்கு ஒரு சின்ன மேடை. அங்கே ஒரு ஜன்னல். வேர்க்காம சமைக்க நல்ல ஏற்பாடு. அதே சமயம் கொஞ்சம் வேடிக்கையும் பார்த்துக்கலாம்.. அலமாரிகளில் வீட்டம்மா பயன்படுத்திய சில பண்டபாத்திரங்கள் நம் பார்வைக்கு.

உள்வெராந்தா மூலையில் தானியங்களைக் குத்தும் உரல் குழி. தரையோடு தரையாக. சிம்பிள் லிவிங். அங்கே இருந்து வாழ்ந்து பார்த்தேன் மனக்கண்ணால். ஓடுகள் வழியாக மழைத்தண்ணீர் சரசரவென்று இறங்கி முற்றம் நனைக்கும் மழைக்காலம். லேசான குளிருக்கு இதமா, சூடான வறுத்த (காந்திஜிக்குப் பிடிச்ச) வேர்க்கடலையுடன் வெராந்தா மூலையில் ஒடுங்கி உக்கார்ந்து மழையை ரசிக்கிறேன். ஹைய்யோ!!!!

ஆசிரமவாசியாக ஒரு தன்னார்வலர் அங்கே இருந்தாங்க. பெயர் லதா. விருந்தினர் புத்தகத்தில் எழுதுவீர்களான்னு கேட்டாங்க. (பதிவு எழுதி நாளாச்சு பாருங்க) அந்த கணக்குப்பிள்ளை மேசை, உக்கார்ந்து எழுத ரொம்பவே வசதியா இருக்கு. சரசரன்னு அரைப்பக்கத்துக்கு எழுதிட்டொம்லெ:-) அங்கே இருந்த சர்க்காவில் நூற்கலாமான்னு கேட்டதுக்கு தாராளமான்னு பதில் வந்துச்சு.
இதையெல்லாம் பார்த்தே கனகாலமாச்சு. வருமோ வராதோன்னு ஒரு உதறலோடுதான் ஆரம்பிச்சேன். என்ன மாயம் பாருங்கள். அழகா மெலீசா நூல் சரசரன்னு பஞ்சில் இருந்து பிரியுது. என்னவோ தினமும் செய்யும் காரியம்போல நூற்றுக்கிட்டே போறேன். கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்! இதுக்குள்ளே பார்வையாளர்கள் கூட்டம் ஒன்னு வந்துருச்சு. அவுங்களுக்கும் இந்த நூல் விஷயம் ஆச்சரியமா இருக்காம். அதுலே ஒருத்தர் ஜப்பான்காரர். வெறும் பஞ்சில் இருந்து நூல் எப்படி வருதுன்னு நூறு கேள்வி. நம்மால் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதா? (ஆங்கிலம் அவுங்களுக்கு மட்டும்)

இது ரொம்பவே லாங் ப்ராஸஸ். முதலில் செடியில் இருந்து பருத்தியைப் பிரிச்செடுத்து நல்லா காயவைக்கணும். அதுலே ஒட்டி இருக்கும் தூசு தும்பையெல்லாம் சுத்தப்படுத்தினபிறகு, பருத்திக் கொட்டையைப் பிரிச்செடுக்கும் சின்ன கை மெஷீன் ஒன்னு இருக்கு, அதுக்கு ஜின்னிங் மெஷீன்னு பெயர்.(இன்றைய இளைஞர்கள், பாஸ்தா மேக்கரை நினைவுபடுத்திக்கலாம்) வலதுபக்கம் இருக்கும் பிடியைச் சுத்திக்கிட்டே அதுலே பூரிக்கட்டை மாதிரி இருக்கும் ரெண்டு சின்ன மர உருளைக்கு நடுவில் பருத்தியைச் செலுத்தணும். கொட்டையெல்லாம் பிரிஞ்சு இந்தப் பக்கம் விழுந்திரும்.

இப்ப, அந்தப் பஞ்சை ஒரு வில்லால் அடிக்கணும். தலையெல்லாம் பஞ்சுபஞ்சா ஆகிரும். தலையை ஒரு துணியால் மூடிக்கணும். காந்திக்குல்லாய் இருந்தாலும் போட்டுக்கலாம்:-) வில்? ஒரு சின்ன மூங்கில் பட்டையை எடுத்து அதன் ரெண்டு ஓரத்தையும் முறுக்கின கயிறால் இணைச்சுட்டால் ஆச்சு. பஞ்சைத் தொட்டாப்புலே மேலே இந்த வில்லின் நாண் படுமாறு வச்சு நாணை இழுத்து விட்டால் அது பஞ்சின்மேல் பட்டு, தெறிச்சு பஞ்சு, பஞ்சுபஞ்சா ஆகிரும். நல்லா அடிக்கணும்.

அப்புறம் பட்டை போடன்னு ஒரு கருவி இருக்கு. கருவின்னா சின்னதா ஒரு பலகையும், சொப் ஸ்டிக் போல ஒரு குச்சியும்தான். கூடவே கட்டிடவேலை செய்யும் கொத்தனார்கள் சமன்படுத்த வச்சுருப்பதைப்போல் ஒரு சின்னப் பலகை கைப்பிடியோடு இருக்கும் கொஞ்சம் பஞ்சை எடுத்து பலகையில் பரவினார்போல வச்சு, அந்தக் குச்சியை பஞ்சில் வச்சு இடதுகையால் ஒருமுனையைப் பிடிச்சுக்கிட்டு, கைப்பிடி உள்ள பலகையால் அதன்மீது உருட்டணும் நாலைஞ்சு வாட்டி உருட்டுனால் சின்ன குழல்போல வரும். குச்சியை உருவி எடுத்துறலாம். இதுக்குப் பெயர்தான் பட்டை (இது தமிழ்மணம் பட்டை அல்ல)

குழல்குழலாச் செஞ்சு ஒரு அட்டைப்பெட்டியிலோ அலங்காரமான நகைப்பெட்டியிலோகூட அடுக்கி வச்சுக்கலாம். பஞ்சு ப்ராஸஸிங் இதோடு முடியுது.

சர்க்காவில் ஸ்பிண்டிலை இணைச்சு, பட்டையில் இருந்து ஒரு முனையில் லேசாகக் கையால் இழுத்தால் வரும் நூலை ஸ்பிண்டிலில் சுத்திட்டு வலது கையால் சர்க்காவின் சக்கரத்தைச் சுத்திக்கிட்டே இடது கையால் பஞ்சை லேசாக கட்டைவிரலால் அழுத்திக்கிட்டே இழுத்துக்கொண்டு போனால் நூல் வந்துரும். (இவ்வளவு முடியாதுன்னா ஏற்கெனவே நூத்த நூலில் இருந்து ஒரு முழம் ஸ்பிண்டிலில் சுத்திக்கிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்) நமது இடதுகையை மேலே சுலபமாத் தூக்கும் அளவுக்கு நூலை இழுத்ததும், கையை அப்படியே வச்சுக்கிட்டு மூணு விநாடி, பஞ்சை இழுக்காமல் சர்க்காவை சுத்தணும். இது, நூல் கொஞ்சம் முறுக்கேறுவதற்கு.
அடுத்து ஸ்பிண்டிலை லேசா உள்டாவா சுத்தவைக்கணும். சர்க்காவின் பிடியை (அப்ரதட்ஷணமா) லேசா இடது பக்கம் கொண்டுவந்தாலே ஸ்பிண்டில் முனையில் இருந்து நூல் பிரியும். இப்போ இடக்கையை மடக்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து ஸ்பிண்டிலின் தலைப்பக்கத்துக்கு நேரா வச்சு சர்க்காவின் பிடியை வலப்பக்கம் மெதுவாச் சுத்துனால் நாம் நூத்த நூல் ஸ்பிண்டிலில் சேகரம் ஆகும். அரைமுழம் நூல் பாக்கி இருக்கும் வரை பார்த்துக்குங்க. இப்ப முதலில் சொன்னதுபோல வலதுகையால் ராட்டினத்தைச் சுத்திக்கிட்டே இடதுகையால் பஞ்சை இழுத்துக்கிட்டே போங்க.

சுற்றுலாவந்த மக்களுக்கு அருமையான டெமோ கிடைச்சதாம். ஏன் உங்களுக்கும்தானே? படிக்கும்போதுதான் இவ்வளோ வேலை இருப்பதுபோல் தோணுதே தவிர நூற்கும்போது ஒருவகை தியானம் மாதிரி பரபரன்னு இழுத்தலும் சுற்றலும் நடக்குது. ஒரு சர்க்கா (சின்ன ப்ரீஃப் கேஸ் மாதிரி) கிடைக்குது. ஒன்னு வாங்கிவந்துருக்கலாமோ! அடடா...விட்டுட்டேனே. போகட்டும், இங்கே காதி கிராம உத்யோகில் கிடைக்குதான்னு பார்க்கலாம். ரெடிமேட் பட்டைகளும்கூட கிடைக்கலாம். ' லோகமந்த்தா ஸ்பீட் காதா? .அன்னி ரெடிமேட்'

இத்தனையும் பார்த்து மெய் மறந்த கோபால் பயணிகளுக்கு எடுத்த வகுப்பை க்ளிக்காமக் கோட்டை விட்டுட்டார். நம்ம விளக்கத்தைக்கேட்டு லதா அப்படியே ஆடிப்போயிட்டாங்க போல! ரொம்ப மெலிசா நூற்கிறேன்னு பாராட்டுனாங்க. கித்து ஃபைன் ச்சே:-))))

வினோபாஜியும் அவர் மனைவியும் தங்குன ஒற்றை அறை வீடு ஒன்னு அங்கே இருக்கு. பூனாவில் இந்த சைஸ் வீடு ஒன்னில் நாங்க இருந்துருக்கோம். கொசுவத்தி ஏற்றுதுப்பா இங்கே பலவிஷயங்கள்.

படங்களைத் தனியாக ஆல்பத்தில் போட்டுருக்கேன் பாருங்க.

என்னவோ சொல்லத் தெரியாத மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
என் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியுதுன்னு கோபால் சொன்னார். நானும் நம்பிட்டேன்:-))))



பயணம் தொடரும்..............:-)))))