இருட்டு மசமசன்னு வந்துருச்சு. ஆனாலும் காலம் பொன்போன்றது. இதைவிட்டாக் கிடைக்காதுன்னு இன்னொரு பழங்காலக்கோவிலுக்குப் போனோம். 1848இல் கட்டப்பட்ட ஹதீசிங் ஜெயின் மந்திர். அப்போ இதுக்கான செலவு பத்து லக்ஷம் ரூபாய்கள். ஹதீசிங் பெரிய செல்வந்தரா இருந்துருக்கார். தன்னுடைய இஷ்ட தெய்வமான தீர்த்தங்கரர் வரிசையில் பதினைஞ்சாவதா இருந்த தர்மநாதருக்கு இதை சமர்ப்பிச்சு இருக்கார்.வளாகத்துக்குள் நுழைஞ்சதும் மகாவீரருக்கு ஒரு ஸ்தூபி இருக்கு. 78 அடி உசரம். பத்துப்படி ஏறிப்போனால் உள்ளே மகாவீரரின் பளிங்குச்சிலை. அங்கே ஒரு கும்பிடு போட்டுட்டு, வளாகத்தின் அடுத்தபகுதிக்குப் போனால் ப்ரமாண்டமான கிண்ணக்கோபுரங்களுடன் அட்டகாசமான ஒரு ரெண்டு நிலைக் கோவில். முன்மண்டபத்துலே பனிரெண்டு அலங்காரத்தூண்கள். இங்கேயும் தர்மநாதரைத் தரிசிச்சுட்டுக் கோவிலைச் சுற்றிப்பார்க்கப்போனால் 'ப' வடிவில் மூணு பக்கமும் நல்ல அகலமான வெராண்டாகள். தூண்வரிசைகள். சுவரை ஒட்டிய பக்கத்தில் அங்கங்கே சின்னச் சின்ன அலங்காரக்கதவுகளும், கதவுகளுக்கு உட்புறம் சமண தீர்த்தங்கரர்களில் ஒருவர் சிலையுமா மொத்தம் 52 பெரிய சிலைகளும், ஒவ்வொரு பெரிய சிலைக்கு ரெண்டு பக்கமும் குட்டிக்குட்டியாச் சில சிலைகளுமா இருக்கு. (குஜராத் முழுக்க இந்தப் பனிரெண்டும் அம்பத்திரெண்டும் எண்ணிக்கைகள் பல இடங்களில் இருக்கு. இதை அப்புறம் இந்தப் பயணத்துலேயே பார்க்கலாம்)
ஹத்தீசிங் ஜெயின் மந்திர்வராந்தாவில் பார்த்தால்தான் கதவுகளும் சந்நிதியுமா தனித்தனியாத் தெரியுதே தவிர , ஒரு சந்நிதிக்குள்ளே நுழைஞ்சால் சுத்திவரப்போகும்படியான ஏற்பாடு. பூஜை செய்பவர் எதாவது ஒரு மூலையில் புகுந்தால் போதும். பூஜிச்சு முடிச்சு அடுத்த மூணாவது வராந்தா மூலைச்சந்நிதிவரை உள்ளேயே நடந்து வரலாம். இந்த வராந்தாவே அட்டகாசமான மேல்வளைவு அலங்காரங்களுடன் போய்க்கிட்டே இருக்கு. படம் எடுக்க இங்கே தடை(யாம்). விவரம் நம்ம காதில் விழறதுக்குள்ளே சிலதைத் தெரியாத்தனமாக் கிளிக்கிட்டோம்(:
தாய்லாந்து கோவிலின் புத்தர்சிலைகளைப்போல இங்கே எங்கெங்கு காணினும் தீர்த்தங்கரர்கள்தான்.
மூணு பக்கமும் இப்படி வெராந்தாஅஹமதாபாத் நகருக்குள்ளே நுழைய 12 வாசல்கள் இருக்குன்னு சொன்னேன் பாருங்க. அதுலே டெல்லி வாசலுக்கு அருகில் இந்தக் கோவில் இருக்கு. பகல் நேரத்தில் போயிருந்தால் கலையழகை இன்னும் நல்லாக் கவனிச்சு இருக்கலாம். கோவில் இருந்த தெருவில் எதிர்ப்பக்கமா நிறைய ட்ராவல் கம்பெனிகள் இருக்கு. பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் கூட. நாளைமுதல் மற்ற இடங்களுக்குப் போக வண்டி ஒன்னு ஏற்பாடு செஞ்சுக்கணுமே. நம்ம கவலை நமக்கு. நாமாக ஒரு பயணத்திட்டம் போட்டு, அங்கங்கே தங்க ஹொட்டேல் புக் பண்ணி வச்சுருக்கோமே. விஷயத்தைக் கேட்ட மோஷின், அதெல்லாம் பஸ் டூர் ஏற்பாடு செய்யறவங்கன்னார். அப்போ எங்கியாவது நல்ல வண்டியும் ட்ரைவருமாக் கிடைக்குமான்னதும், அவுங்க ட்ராவல் கம்பெனியேகூட இருக்காம். முதலில் ட்ராவல் கம்பெனிக்குப் போய்ப் பார்க்கலாமுன்னு புறப்பட்டோம். வண்டியைவிட ட்ரைவர் அனுபவசாலியா இருக்கணுமே!
போகும் வழியிலேயே ராணி ரூப்மதி மஸ்ஜித் இருக்கேன்னு அங்கேயும் நுழைஞ்சோம். சுல்தான் மொஹ்முட் பெகாரா (Sultan Mehmud Beghara.) தன் இந்து மனைவியின் நினைவுக்காகக் கட்டியது. காலம் 1430 - 1440. இந்துக் கலைகளும் இஸ்லாமியக் கலைகளுமா இணைஞ்சு ஜொலிக்கும் 12 அலங்காரத்தூண்கள். அழகான தோட்டத்துக்குள்ளே அமைஞ்சுருக்கு. ஒருத்தர் மட்டும் தொழுகையில் இருந்தார். (யாரிடம் அனுமதி வாங்கணுமுன்னு தெரியலை. அதனால் நோ படம்)கருப்புச்சட்டை மோஷீன் & வெள்ளைச்சட்டை (B)பப்பன்
இன்னொரு இன்னோவா வண்டியே கிடைச்சது. ட்ரைவர் பெயர் (B)பப்பன். சில வெள்ளைக்காரர்களை டூருக்கு அழைச்சுக்கிட்டுப் போனவர், முந்தாநாள்தான் திரும்பிவந்துருக்கார். அவர்கள் இவருக்குக் கொடுத்த பாராட்டுக் கடிதத்தைக் காமிச்சார். நேரம் தவறமாட்டாராம். ஒம்போது மணிக்கு வரச்சொன்னால் எட்டரைக்கே வந்துருவார்ன்னு மோஷின் சர்ட்டிஃபிகேட்வேற தந்தார். பார்த்தால் நல்ல மனுஷராத்தான் தெரிஞ்சார். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க, ஒரு படம் எடுக்கணுமுன்னதும், வாயைத் திறக்காம வந்து நின்னாங்க மோஷினும் பப்பனும். ட்ராவல்ஸ் முதலாளியுடன் பேசி ஒரு தொகைக்குச் சம்மதிச்சோம். அதே பரோடா ரேட் தான். ஆறுநாளைக்கு எடுத்தாச்சு. காலை ஒம்போது மணிக்கு வரச்சொல்லிட்டு மோஷினின் வண்டியில் கிளம்பிச் சாப்பிடப்போனோம். பகலில் சாப்பாடு சரியில்லை. நல்ல குஜராத்தி தாலிமீல்ஸ் வேணுமுன்னா அருமையான இடம் ஒன்னு இருக்குன்னு மோஷின் சொன்னார்.
இந்தத் தாலிக்கு நம்மபக்கம் என்னென்னவோ அர்த்தம் பண்ணிக்கிட்டுச் சில இடங்களில் 'தாளி' மீல்ஸ்ன்னு எழுதிவச்சுருப்பதைப் பார்த்திருக்கேன். தாலி என்றது தால் என்ற சொல்லில் இருந்து வந்துருக்கு. தால்= தட்டு. நாமும் தாலம் என்றால் தட்டுன்னுதானே தெரிஞ்சுவச்சுருக்கோம்.கோபி டைனிங் ஹால். அட! நம்ம கோபி. சொல்லவேயில்லெ!!!! ஒரு பெரிய ஹாலில் வரிசையா நாற்காலிகளைப்போட்டு வச்சுருந்தாங்க. சுவர்களில் அருமையான துணி ஓவியங்கள்.(யானைகள் கூட இருக்கு) டிவி ஒன்னு ஓடிக்கிட்டே இருக்கு. மக்கள் சாவகாசமா உக்கார்ந்து அதுலே கண் நட்டு இருக்காங்க. இந்த ஹாலை அடுத்து ஒரு ஏஸி டைனிங் ஹால். பாரம்பரிய உடைகளில் பணியாட்கள்.
பெரிய துண்டங்களா வெட்டுன வெங்காயம், இதே போல வெட்டி வச்ச எலுமிச்சம்பழம், உப்பு, ஊறுகாய், இன்னும் என்னவோ பொடின்னு ஸ்டேண்டர்டு அயிட்டமா இந்தப் பக்கங்களில் கொண்டுவந்து முதலில் வைக்கறாங்க. கூடவே எண்ணெயில் வதக்குன முழு பச்சை மிளகாய்கள். அரிசி அப்பளம் வகைகள். தாகத்துக்குடிக்க மோர், பெரிய தட்டுகளில் அஞ்சாறு சின்னக் கிண்ணங்களில் கறிவகைகள், kadhiன்னு ஒருமோர்க்குழம்பு (இனிப்பு & காரமுன்னு ரெண்டு வகை.) டோக்ளா, சின்னதும் பெருசுமா பூரி வகைகள், பிஸ்கட் போல தடியா ஒரு சமாச்சாரம், ரோட்லி (சப்பாத்திதான்) கச்சோரி, வெள்ளைப்பூசணிக்காய்த் துண்டங்களை சக்கரைப்பாகில் ஊறவச்சு ஒன்னு இருக்கே அது (பெயர் மறந்து போச்சு!) இதுக்குப்பிறகு கிச்சடின்னு அரிசியும் பருப்புமாச் சேர்த்து வேகவச்சது. கடைசியா ஃபிர்னி ன்னு அரிசிமாவுப் பாயசம், கேரட் ஹல்வா. மீட்டா பான் (குல்கந்து வச்ச வெத்தலைபாக்கு பீடா (இன்னும் ஒன்னுரெண்டு விட்டுப்போயிருக்கு)சமையல் பிரமாதமுன்னா அதைக் கொண்டுவந்து பரிமாறும்விதம் அதி சூப்பர். ஊட்டிவிடாத குறையா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோன்னு சுடச்சுடக் கொண்டுவந்து......போதுமுன்னு சொன்னாலும் விடற எண்ணமே இல்லை அவுங்களுக்கு!
கடைசியா அவுங்க விஸிட்டர்ஸ் புத்தகம் கொண்டுவந்து நம்ம கருத்துக்களைப் பதியச் சொன்னாங்க. ஆஹா....அதெல்லாம் பின்னூட்டிட்டொம்லெ:-))
அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம்தான் ஆச்சாம். பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எல்லாம் தரமானதா இருக்கு. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு ரூம்வாடகையுடன் சேர்ந்தே இருக்கு. நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாமுன்னு.......................
பயணம் தொடரும்..............:-)))))
Tuesday, January 19, 2010
எங்கெங்கும் காணினும்..........(குஜராத் பயணத்தொடர் 3)
Posted by
துளசி கோபால்
at
1/19/2010 03:43:00 PM
30
comments
Labels: அனுபவம் | ஆமதாபாத்|
Monday, January 18, 2010
அனுமாரே...இதென்ன அக்கிரமம்? (குஜராத் பயணத்தொடர் 2)
உலகமெல்லாம் சுவாமிநாராயணன் கோவில்கள் கட்டிக்கிட்டே போறாங்க பார்த்தீங்களா? இந்தக் கோவில்களுக்கெல்லாம் ஆதிக் கோவிலாக இருக்கும் கோவிலுக்குப் போனோம். காலுபூர் என்ற இடத்தில் இருக்கு. பெரிய அழகான தோரணவாயிலைக் கடந்து உள்ளே போனால் முற்றத்தில் புறாக்கூட்டங்கள் நிச்சிந்தையா தானியங்களை ஸ்வாஹா செஞ்சுக்கிட்டு இருக்குதுகள்.
அங்கே இருக்கும் ஒரு அழகான அலங்காரமண்டபத்தில் ஸ்வாமியின் திருவடிகள் பதிச்சுருக்கு. நல்ல பெரிய வளாகம். வடக்குப் பார்த்தமாதிரி மூலவர்கள். நாம் வந்த தோரணவாயில் மேற்கில் இருக்கு. வடக்குவாசல் வழியாக நாம் உள்ளே போனோம். அந்தப் பெரிய ஹாலில் நடுவில் ஒரு தடுப்பு. ரெண்டு பகுதியா நீளவாட்டில் கிடக்கு. தடுப்புக்கு இந்தப் பக்கம் சில பெண்கள் கோவிலில் மூலவரை நோக்கியபடி உட்கார்ந்துருந்தாங்க. தடுப்புக்கு அந்தப் பக்கம் சில ஆண்கள் மூலவர்களை அருகிலே போய்ச் சேவிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தடுப்புக்கு அந்தப் பக்கம்போய் அங்கே இருக்கும் அஞ்சு சந்நிதிகளை ஒவ்வொன்னாகப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்போதான் 'பெண்கள்' தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கணுமுன்னு ஓசைப்படாம ஒருத்தர் வந்து ஓதிட்டுப்போனார். அச்சச்சோ.......மேற்குவாசல் வழியா வெளியே வந்தால் அங்கே ரெண்டு புறமும் பிள்ளையாரும் ஆஞ்சநேயருமா இருக்காங்க. கிட்டேப் போய்ப் பார்த்தால் என்னடா இது அக்கிரமம்ன்னு ஆகிப்போச்சு. இதை நம்ம மக்கள்ஸ்க்குக் காட்டியே தீரணுமுன்னு, வளாகத்தில் இருந்த அலுவலகத்துக்குப்போய், படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.
புள்ளையார் அவர்பாட்டுக்குத் தொப்பியும் பட்டுச் சட்டையுமா ஒடைஞ்ச ரெண்டு தந்தங்களும், சுருட்டிய தும்பிக்கையுமா அழகான நகங்களோடு நிக்கிறார். ரெண்டு பக்கமும் எலிகள்.
இந்த அனுமார் மட்டும் இடதுகாலைத் தூக்கி ஒரு பெண்ணின் முதுகுலே வச்சு அழுத்தறார். அந்தம்மா ஏதோ அரக்கின்னாலும்கூட வதம் செய்யும் கதைன்னு நினைச்சுக்கலாம். பார்த்தா அப்படி இல்லை. நல்ல பெண்மணியாத் தெரிஞ்சாங்க. தலையில் கொம்பு இல்லை!!!! இப்படிச் சொல்றேனே தவிர அரக்கி மட்டும் பெண் இல்லையா? சரியான ஆணாதிக்க அனுமாரா இருக்காரே? ஒருவேளை இந்த அம்மாவுக்கு முதுகுலே வாய்வுப்பிடிப்புன்னு வாயுபுத்திரன் பாதத்தால் நீவி விடுறாரோ? என்னதான் இப்படியெல்லாம் யோசிச்சாலும் மனசுக்குச் சமாதானமே ஆகலையே(-: இவரோட தோழர்கள் எல்லாம் வகைவகையாப் பழங்களை உள்ளே தள்ளிக்கிட்டு இருக்காங்க. தென்னிந்தியாவுலே மட்டும் வாலைச்சுருட்டிக்கிட்டு இருப்பதுதான் உத்தமம்ன்னு தெரிஞ்சுவச்சுருக்கு பாருங்க! .
1822 வது வருசம் கட்ட ஆரம்பிச்ச கோவில். அப்போ நம்ம நாட்டில் ப்ரிட்டிஷ்காரர்கள் ஆட்சி. கோவில் கட்ட அவுங்களே இடத்தைக் கொடுத்துருக்காங்க. அதுவும் தாமிரப்பத்திரத்தில் சூர்யசந்திரர்கள் உள்ளவரை இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமுன்னு எழுதி இருந்தாங்களாம். ராஜஸ்தானில் இருந்து வந்துருக்கு கடவுளர்களின் சிலைகள். நடு செண்டர் சந்நிதியில் இருக்கும் நரநாராயணர்களின் சிலைகள் மட்டும் கருப்புப் பளிங்கில்.(இந்த நரன் & நாராயணன் ஐடியா சூப்பர். தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மனிதனில் இருக்க மாட்டாரா? இதுதானே அஹம் ப்ரம்மாஸ்மி)
அவர்களுக்கு வலதில் குழல் ஊதும் கண்ணனும் ராதையும். (காலா ஆத்மி ஔர் கோரி அவுரத். தமிழ்ச்சினிமா சம்பிரதாயம் அங்கே இருந்துதான் ஆரம்பிச்சு இருக்கணும்) இடது பக்கம் சுவாமிநாராயண் சம்பிரதாயப்படிக் கோவில்கட்ட ஆரம்பிச்ச குருதேவர் படங்களும், அடுத்த சந்நிதியில் இன்னும் மூன்று சிலைகளுமா இருந்துச்சு. கண்ணன், பலராமன், சுபத்ராவோன்னு நினைச்சேன். யாரையாவது கேக்கலாமுன்னா...... யாரைக்கேக்க? (ஏற்கெனவே நான் அந்தப் பக்கம்போன கடுப்பில் இருக்காங்களோன்னு எனக்கு ஒரு தோணல்) கடைசியில் வலைவீசியதும் ஆப்ட்டது, தர்மமும் பக்தியும், குருதேவருமாம்.இந்த ஸ்வாமிநாராயணன்களின் கோவில்களில் எனக்குப் பிடிக்காத ஒன்னு பெண்களை ரெண்டாம்தரப் பிரஜைகளா நடத்துவது. நியூஸியில் இருக்கும் நம்ம ரமண் (b)பையாவும் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருப்பார். சந்நியாசிகளுக்கு அருகில் பெண்களே போகக்கூடாதாம். மொத்தவேலையையும் மாங்குமாங்குன்னு செஞ்சு, விதவிதமான பிரசாதங்களை ஆக்கிவைப்பது பெண்கள். ஆனால் சத் சங்கக்கூட்டங்களில் கூட ஆண்கள் வரிசைக்குக் கொஞ்சம் இடம்விட்டு, பின்னாலேதான் பெண்கள் இருக்கணும். இந்த ஆண்கள் மட்டும் ஆகாசத்துலே இருந்தா குதிச்சாங்க? பெண்கள் சுமந்து பெற்றவர்கள்தானே??
கோவிலின் அழகையும், ஜனங்களின் பக்தி சிரத்தையும் பார்த்து அதிசயிச்ச ஆங்கிலேய அரசு, கோவிலின் திறப்பு விழாவின்போது 101 முறை துப்பாக்கி வெடிச்சு (ஆகாயத்தை நோக்கித்தான்) கௌரவிச்சு இருக்கு!
வளாகத்தின் மூன்று பக்கங்களிலும் நாலுமாடிக் கட்டிடங்களில் வரிசை வரிசையாக அறைகள். சாமியார்கள் தங்குமிடமாம்.
கோவிலின் படங்களைத் தனி ஆல்பத்தில் போட்டுருக்கேன்.கடைவீதிகளைக் கடந்து போகும்போது பட்டங்கள் திருவிழாவுக்காக கலர்கலரா நூல்கள் தயாரிச்சு முறுக்கேத்திச் சுத்துறதைப் பார்த்தேன். இந்தப் பட்டங்கள் எல்லாம் வெறும் காகிதப் பட்டங்கள். ஒருநாள் விழாதான். கொண்டாடுனமா, தூக்கிப் போட்டுட்டு வேலைவெட்டியைப் பார்க்கப்போனமான்னு.......... நம்ம மாநிலத்துப் பட்டங்களைப் பற்றிச் சொல்லணுமா? அதான் சுண்டல் விநியோகம்போல மாமணிகளா ஒலிக்குதே! போதாக்குறைக்கு அதை வென்றான், இதை மீட்டான், இன்னும் என்னத்தையோ கொன்றான்னு பட்டங்களுக்காப் பஞ்சம்? என்ன இருந்தாலும் நம்மை அடிச்சுக்க முடியாது இவுங்களால்:-)))))
அடுத்துப்போனது படிக்கிணறுகளைப் பார்க்க. ஒரு மண்டபம். அங்கே இருந்து ஒரு ஐநூறு மீட்டர் தூரத்துலே ஆழமா ஒரு கிணறு. இங்கே இருந்து அங்கே போகப் படிகள் அடுக்கடுக்காக் கட்டி வச்சுருக்காங்க. ஒவ்வொரு அடுக்கும் ஒரு மண்டபம். மெல்ல மெல்ல இறங்கிப்போய்க்கிட்டே இருக்கணும். போரடிக்காம இருக்க மண்டபம், தூண்கள், படிக்கட்டுகள்ன்னு ஒன்னுவிடாம கலை அழகோடு சிற்பங்கள் செதுக்கி வச்சுருக்காங்க. அம்மாந்தூரம் போய் தண்ணி கொண்டுவரணுமுன்னு மருமகள்களுக்காகவே திட்டம் போட்டுக் கட்டி வச்சுருப்பாங்க போல! தினம் தலையில் ரெண்டு குடத்தைச் சுமந்துக்கிட்டு இப்படி இறங்கி ஏறுனா ஃபிஃப்டி கேஜி தாஜ்மகாலாவா இருப்பாங்க. ட்வெண்ட்டிஃபைவ் கேஜி அநோரக்ஸியா கேஸ்களாத்தான் இருந்துருக்கச் சான்ஸ்(-: அழகான அதிசயக் கிணறுன்னாலும் அந்தக் காலத்துப் பொண்களை நினைச்சால் ஐயோன்னுதான் இருக்கு.ஒரு ராணி இருந்தாங்க. அவங்க மகன், வேற நாட்டுக்குப் போனப்ப அங்கே இருந்து ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்கிட்டு வந்துட்டான். அந்தப் பொண்ணை என்னவோ...மகாராணிக்குப் பிடிக்காமப்போச்சு. இளவரசனுடைய மனம் நோகாமல் எப்படிடா இவளை இந்த நாட்டிலே இருந்து ஓட்டலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சாங்க. கடைசியில் இந்தக் கிணறு ஐடியா தோணுச்சு. அரண்மனை அதிகாரிகள், வேலைக்காரர்களைக் கொண்டு கிணறு வெட்டி முடிச்சாங்க. புதுமருமகளிடம், ஆரம்பத்துலேயே ரொம்ப இனிமையாப் பேசி குலவழக்கப்படி பூஜை எல்லாம் ஆனதும்தான் நீங்க ரெண்டுபேரும் மணவாழ்வை ஆரம்பிக்கணுமுன்னு நைச்சியமாச் சொல்லித் தனித்தனியா பிரிச்சுவச்சுருந்தாங்க. இங்கேயோ கிணறு ரெடி ஆகிக்கிட்டு இருக்கு. நல்ல நாளும் வந்ததுன்னு குடத்தை மருமகளிடம் கொடுத்துக் கிணற்றில் இருந்து தினம் மூணு வேளையும் தானே போய்த் தண்ணீர் கொண்டுவந்து அரண்மனை முற்றத்தில் இருக்கும் கோவில் மூலவருக்கு அபிஷேகம் செய்யணும். ஒரு மண்டலம் இந்த மாதிரி பூஜை செஞ்சுமுடிச்சதும் கடவுள் அருள் பூரணமா உங்களுக்குக் கிடைக்கும். இனிமையா உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கலாமுன்னு சொல்லி குடத்தைக் கையில் கொடுத்தாங்க.
இந்த சூதுவாது எல்லாம் அறியாத இளமங்கை கிணத்துக்குப் போகுது. முதல் நாள் அவ்வளவாக் கஷ்டம் தெரியலை. எல்லாம் புது ஜோர். அப்புறம் அப்புறம்................. மூணாம்நாளே கைகால் எல்லாம் முறுக்கிப் பிழியும் வலி. ஒரு எட்டு வைக்கிறதே உம்பாடு என் பாடுன்னு கிடக்கு. இப்படி நாப்பதுநாள் நடக்குற வேலையா? போதுண்டா சாமி, உங்க குலவழக்கமும் நீங்களும். நான் எங்க நாட்டுக்குப் போறேன்னு ஓலை எழுதிவச்சுட்டு ஓசைப்படாம, தன்னுடன் கூடவே வந்த தன்னுடைய நாட்டுத் தோழிகள், வீரர்கள் துணையோடு 'எஸ்' ஆகிருச்சு.
ராணியம்மாவும் 'என்மேல் தப்பு ஏதுமில்லே. நீ கொண்டுவந்த பெண்தான் இங்கே இடம் பிடிக்கலைன்னு போயிட்டாள்'ன்னு சொல்லி மகனுக்கு இந்த சூழ்ச்சி தெரியாமல் தப்பிச்சுக்கிட்டாங்க. அதுலே இருந்து வேண்டாத மருமகள்களை ஒழிச்சுக்கட்ட இந்தக் கிணறு பயன்பட்டுச்சு.
ஏன் இப்படி ஒரு கிணறு கட்டி இருக்காங்க''ன்னு கேட்ட கோபாலுக்கு, இந்தக் கதையைச்சொன்னதும்...பாவம். நெசமுன்னே நம்பிட்டார்:-)
போகட்டும், வளைச்சுவளைச்சு எடுத்தக் கிணத்துப் படங்களை இங்கே பார்த்துக்குங்க.வீட்டுவாசல்களில் கயித்துக்கட்டில்கள் போட்டு உல்லாசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பதைப் பார்த்ததும் பேசாம இந்த 'நாகரீக உலகத்தையெல்லாம் விட்டுட்டு(???) இங்கேயே 'குடி' வந்துறலாமான்னு இருந்ததென்னவோ நிஜம்.
பார்க்கிங் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். வண்டியைவிட்டு இறங்காம வேடிக்கைமட்டும் பார்க்கிறதா இருந்தால் பழைய நகரத்தின் சந்துபொந்துகளில் கூட்டிட்டுப் போறேன்னார் மோஷின். ஆஹா.....வெல்லம் தின்னக் கசக்குதா? ச்சலோ......
பழைய நகரத்தின் பனிரெண்டு வாசல்களில் ஒரு ஏழெட்டு வழியாப் போனோம். கடைவீதிகள் கலகலன்னு கிடக்கு. ஒரு பொருளுக்கு ஒரு வீதியோ? பாத்திரக்கடைகளா ஒன்னு, துணிமணிகளா ஒன்னு, வீட்டுச் சாமான்களா ஒன்னு, எண்ணையா ஒன்னு கூடவே வெல்லமா ஒன்னு, நகையா ஒன்னு நட்டா ஒன்னு:-) அடாடாடா.......என்னைவிட கோபாலுக்குத்தான் கூடுதல் மகிழ்ச்சி. நாந்தான் வண்டியைவிட்டே இறங்கமாட்டேன்னு 'வாக்கு' கொடுத்துட்டேனே(-:
பயணம் தொடரும்..............:-)))))
Posted by
துளசி கோபால்
at
1/18/2010 03:52:00 AM
17
comments
Saturday, January 16, 2010
விக்ரம் வேலைக்கு ஆப்பு? (குஜராத் பயணத்தொடர் 1)
அமடாவாட் குஜ்ஜூஸ்..... ஹியர் ஐ கம். போய் இறங்குன ரெண்டே மணி நேரத்தில் சீட்டைக் கிழிக்கும்படியாச்சு. எனக்கு(ம்) கொஞ்சம் மனவருத்தம்தான். வேறென்ன செய்ய? ஏழுநாள் மாரடிக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்க.
புத்தம்புது வண்டியோடு வர்றேன்னு தகவல் வந்தப்பவே என்னடான்னு கொஞ்சம் யோசனைதான்.
சென்னையில் இருந்து சரியான நேரத்துக்குக் கிளம்பிப் பகல் ரெண்டே காலுக்குப் போய்ச் சேர்ந்து பெட்டியை எடுக்கவே அரைமணி ஆச்சு. கோபால் வந்து காத்துக்கிட்டு இருந்தார். பரோடாவில் இருந்தே வண்டியும் ட்ரைவருமா வந்துருக்கார். பத்து வருச அனுபவமாம் ட்ரைவருக்கு. எதுக்கு இங்கே ஏழு நாள்? மூணு நாளே அதிகம். பேசாம நாலு நாளைக்கு ராஜஸ்தான் போயிட்டு வந்துறலாம்ன்னு இவர் காதை நிறைச்சு வச்சுருக்கார் அந்த ட்ரைவர். இவருக்கும் பரவாயில்லையே ஒரே கல்லில் ரெண்டு ஸ்டேட்ன்னு இருந்துருக்கு. சரி எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கலாமுன்னு சொன்னேன். நம்ம ஆளுக்கும் முன் ஜாக்கிரதை அதிகம். மேடம் வரட்டும். அப்புறம் இதைப் பத்திப் பேசலாமுன்னு சொல்லி இருக்காராம். பாவம்.பேய்க்கு வாழ்க்கைப்பட்டு ஆச்சே முப்பத்தியஞ்சரை! வண்டி என்னவோ பளபளன்னு ஜொலிப்புதான்.
ட்ரைவரைப் பார்த்ததும் மனசுக்குப் பக் னு ஆச்சு. சின்னப் பையன். வயசு மிஞ்சிமிஞ்சி இருந்தால் 22 இல்லே 23 இருக்கும். (மெய்யாலுமா பத்து வருச காரோட்டும் அனுபவம்(??)பெயர் என்னன்னு விசாரிச்சேன். விக்ரம். இங்கே ஏர்ப்போர்ட்லே இருந்தே கிளம்பி இங்கே அக்கம்பக்கம் பார்த்துட்டு அறைக்கு சாயந்திரமாப் போகலாமுன்னு ஒரு ஏற்பாடு இருந்துருக்கு போல. ஸ்பைஸ்ஜெட்லே, கயிலைமலைத் தண்ணீர் ஒரு பாட்டில் கொடுத்ததோடு சரி. பையன் வரும்வழியிலேயே 'டான்'ன்னு பனிரெண்டரைக்குச் சாப்பிட்டாச்சாம். இவர்? எனக்காகக் காத்திருக்கார். (ஓ ஹௌ ஸ்வீட்...)
முதலில் அறைக்குப் போயிட்டு கொஞ்சம் எதையாவது சாப்பிட்டுட்டுப் போகலாமுன்னு சொன்னேன். ரிஃப்ரெஷ் பண்ணிக்கவேணாமா? ஹொட்டேல் பெயரைச் சொல்லி அங்கே முதலில் போகச் சொன்னதும் விக்ரம் முகத்தில் ஒரு அதிர்ச்சி. எங்கே இருக்குன்னே தெரியாதாம்! நம்ம முன் ஜாக்கிரதை முத்தண்ணா அதுக்குள்ளே உள்ளூர் மேப், விவரங்கள் எல்லாம் சேகரிச்சு வச்சுருந்தார் விமானநிலையத்தில் எனக்காகக் காத்திருக்கும் நேரத்தில். (சபாஷ்!)
வரைபடத்தைக் காட்டினாலும் அங்கெல்லாம் போகத் தெரியாதாம். ஒருவழியாக நம்ம கோபாலே, இங்கே அங்கேன்னு சொல்லி நகரத்துக்குள் வந்து சேர்ந்தோம். வாயிலே இருக்கு வழின்றது இந்த விக்ரமுக்குத் தெரியலை. யாரையாவது கேட்டுக்கோன்னு நாம் சொன்னாலும் ஒரு அதிர்ச்சி முழி! இத்தனை கலாட்டாவுலே ரெண்டு பேரை வழி கேட்டு வந்து சேர்ந்தப்பவே மணி மூணரை. இங்கே லஞ்ச் டைம் முடிஞ்சுபோச்சு. ரெஸ்டாரண்ட்லே எனிடைம் ஸ்நாக்ஸ்ன்னு ஒரு பிட்ஸா வாங்கினோம். ம்ம்ம்ம்.....ஒன்னும் சொல்றதுக்கில்லை. நாலரைக்குக் கிளம்பி முதலில் கோவிலுக்குப் போகலாமுன்னு வரைபடத்தைக் காமிச்சால்.... அதெல்லாம் எங்கே இருக்குன்னே தெரியாதாம். எல்லாம் ச்சோட்டா ஸே மந்திராம். குஜராத் முழுசும் நல்லாத் தெரிஞ்ச(???) விக்ரமுக்கு இந்த ஆமதாபாத் மட்டும் தெரியலையேப்பா.....
அப்பனே ஞானபண்டிதா, உன் வண்டி வேணவே வேணாம். நீ பரோடாவுக்கேத் திரும்பிப்போ ன்னு கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துட்டு (ஐயோ..... போனஜென்மக் கடன். வசூலிச்சுட்டுப் போயாச்சு!) ஹொட்டேல் வரவேற்பில் இன்னிக்கு ஊர் சுத்த ஒரு ட்ராவல் வண்டி வேணுமுன்னதும் ஒரு இண்டிகா வந்தது. உள்ளூர்க்காரர். மோஷின் என்று பெயர்.
இப்போ கொஞ்சம் சரித்திரம் பார்க்கலாமா? பதினோராம் நூற்றாண்டு முதல் இந்த நகரம் ஜேஜேன்னு ஆகி இருக்கு. சோலாங்கி அரசர் வம்சம் ஆட்சி. அதுக்குப்பிறகு பல கைகள் மாறி 1411 வது வருசம் டெல்லி சுல்தான் வசம் வந்து சேர்ந்துச்சு. முஸாஃபாரித் சாம்ராஜ்யம்.. புதுசா ஒரு தலைநகரம் வேணுமுன்னு இருந்த சமயம், முயல் ஒன்னு ஒரு நாயைத் துரத்துனதைப் பார்த்த டெல்லி பாதுஷா ஒருத்தர் இந்த மண்ணில் வீரம் நிறைஞ்சு கிடக்குன்னு நகரத்தை நிர்மாணித்தாராம். ( இதே போல ஒரு கதையை தமிழ்நாட்டுலேயும் கேட்ட நினைவு வருதே!) இதுக்குப்பிறகு 1487 வது வருசம் அவருடைய பேரன் அஹமத்ஷா, இந்த நகரத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த நகரத்தைச் சுத்தி கோட்டை மதில் சுவர் எழுப்பி இருக்கார். உள்ளே நுழைஞ்சு வர அங்கங்கே வாசல்கள். மொத்தம் 12. இந்த பாரா தர்வாஸா (ஹிந்தி) வழியாகத்தான் ஊருக்குள்ளே நுழைய முடியும். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெயர் கொடுத்தாச்சு.அந்தப் பனிரெண்டில் இது ஒன்னு. போக்குவரத்தை அனுசரிச்சு ஒன்னு, ரெண்டு , மூணுன்னு ஆர்ச் வச்சுக் கட்டி இருக்காங்க. மூணு வாசல் ரொம்பப் புகழ் வாய்ந்ததாம். தீன் தர்வாஸா. அரசர் வரும் வழியாக இருந்திருக்கலாம்.
நம்ம பக்கத்துப் புள்ளையார் கோவில்கள் போல எக்கச்சக்கமா மசூதிகள் கட்டிவிட்டுருக்காங்க. ஒவ்வொன்னிலும் இந்திய பாரம்பரியக் கலை அழகோடு பாரசீகக் கலையையும் சேர்த்து அபூர்வமான வேலைப்பாடுகளும் அமைஞ்சுருக்கு. சரித்திரக் குறிப்புகளோடு இருக்கும் சமாதிகளும் எக்கச்சக்கம். 1947 சுதந்திரம் கிடைச்சு பதிமூணு வருசங்கள் ஆனபிறகுதான் (1960) புது மாநிலமா ஆகி இருக்கு. சுதந்திரப்போராட்டமுன்னதும் காந்திஜியின் பெயர் நினைவுக்கு வராமப்போகாதில்லையா? அவருடைய ஆசிரமம் இங்கேதான் இருக்கு. சபர்மதி நதிக் கரையில் அமைஞ்ச ஊர். இப்போ ரொம்பவே விரிவடைஞ்சு நதிக்குக் குறுக்காக ஏழு இடத்தில் பாலங்கள் கட்டி நதிக்கு ஒரு பக்கம் பழைய நகரமும். மறு பக்கம் புதிய நகரமுமா அமைஞ்சுருக்கு. பழைய நகரத்தில் கண்ணுலே பளிச்ன்னு பட்டது அந்த அகலமான தெருக்கள். இப்போதையக் கணக்கில் சொன்னால் நாலும் நாலுமா எட்டு லேன் ட்ராஃபிக் அளவு.அரசாங்க அலுவலகங்களுக்கு இடம் போதலைன்னு சமீபகாலத்துலே ஒரு முப்பது கிலோமீட்டர் தூரத்துலே காந்தி நகர் என்ற புது நகரம் உருவாக்கி இருக்காங்க. துணிக்கான ஆலைகள் ஏராளம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஊராம். செல்வச் செழிப்பு எங்கும் தெரியுது. அதே சமயம் ஏழைபாழைகள் இல்லாமல் இல்லை. குடி இல்லாத மாநிலம். மக்கள் நல்ல உழைப்பாளிகளாத் தெரியறாங்க. சம்பாரிக்கும் காசு முழுசும் குடும்பத்துக்கே போகுது. நான் பார்த்தவரையில் தெருக்களில் எந்த 'வாழ்க'வும் எழுதப்படாமல், கல்யாணம், கருமாதி, கண்ணீர் அஞ்சலி ஏதும் இல்லாமல் சுவர்கள் எல்லாம் பளிச்ன்னு காலியாக் கிடக்கு! நடைபாதைகளில் மக்கள் நடக்கறாங்க!!! அந்த இடங்களை ஆக்ரமிச்சு யாரும் வசிக்கலை, கடைகளும் போட்டுக்கலை. போதாக் குறைக்கு அங்கங்கே மெயின் ரோடுகளில் நடைபாதைகளில் இருக்கைகள் போடப்பட்டுருக்கு. நடக்கும்போதே கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டுப் போகலாம்.
வரப்போகும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கண்காட்சியின் விளம்பரத்தில் மட்டும் சின்னதா முதல்வரின் படம் இருக்கு. அதுவும் நாற்சந்திகளில் பெரிய கம்பங்களின் மேல் வச்சுருக்கும் போஸ்டர்கள். கண்ட இடங்களில் ஒன் போகும் ஆட்களைக் காணோம். (எல்லாரும் சென்னைக்கு வந்துட்டாங்க போல!)
போக்குவரத்தைப் பொறுத்தவரை ஒருவிதத்தில் சென்னைதான். வண்டிகள் ஏராளம். இதெல்லாம் நகர எல்லைக்குள்ளில். பஸ் போக்குவரத்துக்குன்னே சாலைகளின் நடுவில் ஒரு பஸ்லேன். அங்கங்கங்கே நிறுத்தங்கள். கன்ணாடிச்சுவர்களும், தானியங்கிக்கதவுகளும், குழல்விளக்குகளுமா சூப்பர். சுரங்கவழியாக தெருவைக் கடந்து நடைபாதைக்குப் போய்விடலாம்.
பஸ் நிறுத்தங்கள். காரில் போகும்போது எடுத்ததால் அவ்வளவு தெளிவு இல்லை(-:
பஸ்ஸுக்கான தனி லேன்
மேம்பாலங்கள் அவ்வளவா இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் இருக்கு. முழுக்க முழுக்க டைல்ஸ் பதிச்சு ரொம்பச் சுத்தமா இருக்கு. அந்த டைல்ஸ்களிலும் ஒரு சித்திரங்களை அமைச்சுருக்காங்க. ஒரு இடத்தில் காந்தியின் தண்டி யாத்திரை, உப்புக் காய்ச்சியது எல்லாம் டைல்ஸ் சித்திரமா இருந்துச்சு.
மேலோட்டமாக எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே போனோம். காய்கறிகள் எல்லாம் அமோகமாக் குவிஞ்சு இருக்கு. டென்னிஸ் பந்து அளவுள்ள முட்டைக்கோஸ்கள் பார்க்கவே ஆசையா இருந்துச்சு. நியூஸி விட்டு வந்ததுமுதல் முட்டைக்கோஸைப் பார்த்து ஆசைப்பட்டது இதுதான் முதல்முறை!
பயணம் தொடரும்..............:-)))))
Posted by
துளசி கோபால்
at
1/16/2010 05:17:00 AM
45
comments
Labels: அனுபவம் ஆமதாபாத்
