Tuesday, April 04, 2006

சென்னை வலைஞர்கள்



பயண விவரம் பகுதி 15


இங்கே இதுவரைக்கும் வந்ததே இல்லை. மெட்ராஸ் (அப்பெல்லாம் இப்படித்தான் சொல்றது)லேதான் இருந்தோம்.ஆனா 'ட்ரைவ் இன்' அப்படின்னா கார்லெதானே வரணும். நம்மகிட்டேதான் 'அப்படின்னு ஒண்ணும்' கிடையாதே.அதனாலே இது நமக்கில்லைன்னு 'கெளரவமா' இருந்துட்டோம்.வர்றவழியிலேயே நம்ம டோண்டுவுக்குப் போன் போட்டு வழியெல்லாம் பக்காவாக் கேட்டுக்கிட்டே வந்தோம். என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்.


'இதோ , நம்ம அருணா இங்கெ இருக்காங்களே'ன்னு தோட்டத்து முகப்புலேயே இறங்கிட்டோம். இப்பக் கார் வந்துருச்சான்னுகேக்காதீங்க. அதான் ஆட்டோ இருக்கே. அருணாவும், 'இங்கே இருந்தா நம்ம ஆளுங்க வர்றதைக் கவனிக்கறதுசுலபமு'ன்னு சொன்னாங்க. அதுலெ என்னன்னா, ஒன்னரை வருஷமா பதிவுகளிலே மட்டும்தானே இவுங்களைப் பார்த்துருக்கோம். மொதலாவது, யார்யார் வரப்போறாங்கன்னே சரியாத் தெரியலை.


அஞ்சு மணிக்குன்னுதான் சொல்லியிருந்தாங்க. நம்ம ரஜினி ராம்கியும், கிருபாஷங்கரும் ஏற்பாடு செஞ்சு, எல்லாருக்கும்(!)மயில் அனுப்பி வச்சிருந்தாங்க. கொஞ்ச நேரத்துலே ஒருத்தர் வந்து எங்களொடு சேர்ந்துக்கிட்டார். அவர் நம்ம எஸ்.கேன்னுதெரிஞ்சுக்கிட்டோம். நாங்க பேசிக்கிட்டு அங்கேயே நின்னப்ப ஒரு ஸ்கூட்டர்/பைக்( ஏதோ ஒரு ரெண்டு சக்கர வாகனம்) வந்துநின்னது. அதோ நம்ம கிருபா( அதான் அவரோட நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தோமே)கூடவர்றவர் ஹை, ஐகாரஸ் பிரகாஷ்.அவரோட பதிவுலே பார்த்த மாதிரியே இருந்தார். ஆனா ரொம்ப ஒல்லியா இருந்தார். நாணயம் விகடனிலேகூட கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தாரே.


அப்பத்தான் நம்ம டோண்டு, செல்லுலே கூப்புட்டு, எங்கே இருக்கீங்க? உள்ளே காத்துக்கிட்டு இருக்கோம், வாங்க'ன்னுசொன்னார். நாங்க இங்கே வாசலிலேயே நிக்கறோம், இவர் எப்படி உள்ளெ போயிருக்கார்?
உள்ளெ நுழைஞ்சு இவுங்களைத் தேடறப்ப, வலதுபக்கம் இருந்த தலைப்பாகைக் கட்டுனவரை, அருணா காமிச்சு,'யார்னுதெரியுதா?ன்னாங்க. பி.பி.ஸ்ரீனிவாஸ்! நான் இப்பத்தானே 10 நாள் முந்தி இசைக்கல்லூரியிலே பார்த்தேன். இடதுபக்கம் இருக்குற பகுதியிலே நம்ம டோண்டுவும், இன்னொரு இளைஞரும் இருந்தாங்க. அவர்தான் சங்கர்( சுவடுகள்)அப்புறம் வெளிர்நீலப் புடவையில்( இதை ருக்மணி கலர்னு சொல்வோம்) கம்பீரமா நடந்து வந்தவுங்கதான் நம்ம மதுமிதா( கவிஞர்)


இங்கே எல்லாரும் சேர்ந்து உக்கார இடம் சரியில்லையே, வெளியே போய் தோட்டத்துலே உக்காரலாமேன்னு வெளியே போனோம். அங்கே மூணு மேஜைகளைச் சேர்த்துபோட்டு மகாநாட்டுக்கான செட்டப்பைச் செஞ்சாச்சு.நம்ம நாராயணன்( உருப்படாதது) வந்துட்டார். அவரைப் பார்த்து நான் ரஜினிராம்கி ன்னு தப்பா(!) நினைச்சுட்டேன்.வந்தாருப்பா நம்ம டிபிஆர் ஜோஸஃப், நெடுநெடுன்னு உயரமா. ராம்கியும்( ஸ்டேஷன் பெஞ்சு) மரவண்டு கணேஷும்வந்து உக்கார்ந்தாங்க.


நான், 'எல்லோரும் அவுங்கவுங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க. அப்புறம் வந்தவங்களுக்கு ஒரு வரவேற்பு உரைகொடுக்கணும். அதுக்கப்புறம், இன்னும் தமிழ்மணம் மூலமும், நம்ம எழுதுற பதிவுகள் மூலமும் என்னெவெல்லாம் சாதிக்கலாம்(!)னு மத்தவங்க கருத்துக்களைக் கேக்கணும்'னு திட்டம் போட்டு வச்சுருந்தேன். வரவேற்புரைக்குத் தொண்டையைக்கூட சத்தமில்லாம கனைச்சு ரெடி பண்ணிட்டேன். ஆனா பாருங்க, அப்படி எதுவும் நடக்கலை.அவுங்கவுங்க பக்கத்துலே இருந்தவங்ககிட்டே மும்முரமாப் பேசிக்கிட்டு ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. ஓ....இங்கெ இப்படித்தானாக்கும்னு நானும் ஜோதியிலே கலந்துகிட்டேன். நான் இருந்த இடத்துலே எஸ்.கே, அருணா,மதுமிதா. எதிர்லே கிருபா, பிரகாஷ், சங்கர்.


கோபால் இருந்த பக்கம் ராம்கி, நாராயணன், டிபிஆர்ஜோ, டோண்டு, கணேஷ். அங்கேயும் ரெண்டு க்ரூப்பாயிருச்சு.அப்புறம் நாராயணன் எங்கபக்கம் வந்து கொஞ்சநேரம் உக்கார்ந்தார்.


முக்கியமான கேள்வி ஒண்ணை நம்ம பிரகாஷ்கிட்டே மறக்காமக் கேட்டேன், 'அது என்னங்க ஐகாரஸ்?'ன்னு.


அவரும் சொன்னார் பதிவு எழுத ஆரம்பிச்சப்ப ஐகாரஸ் பத்திப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். அதனாலெ அதைஅப்படியே பேரோடு சேர்த்துக்கிட்டாராம். ( இது சரியா பிரகாஷ்? இல்லே, நீங்க ஒண்ணு சொல்லி, நான் வேற 'ரீல்' விட்டுட்டேனா?)


மொத்தம் முன்னூத்திப் பதிமூணா இருந்தோம்.இதுலே பாருங்க, நாங்க வந்து உக்கார்ந்தவுடனே எங்க மேஜையிலே ஒரு முன்னூறு வந்து உக்காந்துருச்சுங்க.கிருபாதண்ணி ஊத்திவச்சு விரட்டப் பார்த்தாரு, ஊஹூம், ஒண்ணும் ஆகலை. நல்லா இருட்டத் தொடங்குனதும் ஒருவழியாஇடத்தைக்காலி செஞ்சாங்க அந்த 'ஈ'ங்க.


அப்படி இப்படின்னு நேரம் போயிருச்சு. டோண்டுவும் உடல்நிலை சரியில்லாதபோதும் வந்து கலந்துக்கிட்டார்.வீட்டம்மா மிரட்டுனவுடனே( செல்லமா) கிளம்பிட்டார். முன்னுரை ஏதும் இல்லாததாலே முடிவுரையும் இல்லை.


ஒவ்வொருத்தராக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. கணேஷ், எஸ்.கே, சங்கர், கிருபா, பிரகாஷ்,ராம்கி, மது,நாங்க எல்லாம் கடைசியா இடத்தைக் காலி செஞ்சோம்.
கணேஷ், பெங்களூருலே இருக்க வேண்டியவர், இங்கே என்ன செய்யறாருன்னு கேட்டா, இப்பச் சென்னையிலேயே வேலையாம். ரொம்ப மெதுவா அதிராமப் பேசறார். ஜெயச்சந்திரன் பாட்டுப் பிடிக்குமான்னு கேட்டார். பின்னே,பிடிக்காம? ஒரு சிடி கொடுத்தார்.


சுரேஷ் கண்ணன் வரேன்னு சொல்லியிருந்தார். ஆனா வரமுடியலையாம். ரஜினிராம்கியும் ஊருக்குப் போகவேண்டியதாஆயிருச்சாம். தாணு, வரலாமுன்னு இருந்தாலும், அன்னைக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாப்போச்சாம்.

நாங்க இருக்குற தெருவோட அடுத்த பகுதியிலேதான் மது இருக்காங்களாம். அதனாலெ நாங்க மூணுபேரும் ஒண்ணாவேபுறப்பட்டோம். மதுவை அவுங்க வீட்டுலே விட்டுட்டுப் போறதா ஏற்பாடு. அப்படியே அவுங்க வீட்டைப் பார்த்ததாவும்ஆச்சு. ஏண்டா இவளுக்கு வீட்டைக் காமிச்சோமுன்னு நொந்து போற அளவுக்கு அவுங்களை படுத்துனது வேற விஷயம்!


நம்ம டோண்டு அவரோட பதிவுலே படங்கள் சில போட்டுருக்கார். அதனாலே நான் வேற சிலதைப் போடறேன்.ப்ளொக்கர் தயவு வேணும். வந்தா உங்க அதிர்ஷ்டம்.


சென்னை வலைப்பதிவாளர்கள் மாநாடு இனிதே நிறைவுற்றது. நாளைக்கு பெங்களூரு கோயிங்க்.


Monday, April 03, 2006

நூபுர கங்கை

பயண விவரம் பகுதி 14


இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பறோம், மறுபடி சென்னைக்கே. சனிக்கிழமையாவும் இருக்கு.நம்ம 'சுந்தர ராஜனை' பார்க்கோணும். அப்படியே மேலே பழமுதிர்ச்சோலைக்குப் போய் முருகனையும் கண்டுக்கலாம். தைப்பூசமாச்சே! நல்ல நாளாத்தான் அமைஞ்சுருக்கு.


என்ன ஒண்ணு, நம்ம ஷங்கர் வண்டி கிடையாது. அவரை ஒரு வாரத்துக்கு திருச்சிக்குப் போறதுக்கு க்ளெயண்ட் கேட்டுருக்காங்களாம். நல்ல நம்பகமான மனுஷர். வர்ற வேலையை நமக்காக விடச் சொல்ல முடியுங்களா?அதிலும், இவுங்களுக்கு மாசச் சம்பளம் இல்லையாமே. என்னிக்கு வேலை செய்யறாங்களொ அன்னிக்கு மட்டும்தான் சம்பளம். தினப்படி பேட்டா பயணிகள் கொடுத்துருவாங்க. வேற அஸைன்மெண்ட் கிடைச்சதும் மேலே வந்து நம்மளைப் பார்த்துச் சொல்லிட்டு போனார்.


கல்யாணத்துக்குப் போனோம் பாருங்க, அப்பவும் ஒருதடவை போனவுடனே, வழியெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டுச் சொந்தக்காரங்க வீட்டுக்கு ட்ரிப் எல்லாம் கவனமாச் செஞ்சார். நல்ல துணிமணிகள் கார்லேயே வச்சுக்கிட்டு இருந்து விசேஷத்துலே கலந்துக்கிட்டப்ப படு நீட்டா இருந்தார். எங்களுக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சரி. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.


எட்டரைக்கெல்லாம் நம்மளைக் கொண்டு போக வந்தவர் காதர் பாட்சா. அழகர் கோயிலுக்குப் புறப்பட்டாச்சு. இவரும் பரவாயில்லை. குடும்பக்கதைகளைச் சொல்லிக்கிட்டே வந்தார். கொஞ்ச தூரத்துலே ஒரு பெரிய சிலை தென்பட்டது.அங்கே நிறுத்தச் சொன்னோம். அது ஒரு சக்தி கோயிலாம். 16 கைகளோட அம்மன் ஆகாயத்துக்கும் பூமிக்குமா நிக்குது. நமக்கும் இப்படி பதினாறு...ச்சீச்சீ அத்தனை வேணாம், ஒரு ஆறு கை இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? ப்ளவுஸ் தச்சுக்கக் கஷ்டமாப் போயிருமே (-:


கோயில் நல்லா நீட்டா இருந்துச்சு. ஒரு சிவனையும் கோபுரத்துக்குப் பக்கத்துலே கட்டிக்கிட்டு இருக்காங்க.அதுக்கப்புறம் நம்ம ஸ்டாப், அழகர் கோயில்தான்.

கருப்பணசாமிக்குன்னு ஒரு ச்சின்னக் கோயில் வாசலிலேயே இருக்கு. அதுக்குப் பக்கத்துலே யானைக் கொட்டடி. பேரு கல்யாணி. பத்து ரூபாய் வாங்கிக்கிட்டு ஆசீர்வாதம் செஞ்சது. மரத்தடியிலே சிலபேர் பொங்க வச்சுக்கிட்டுஇருந்தாங்க. வேண்டுதலாம். நுழைவாசலுக்கு வந்தோம்
வாசலிலேயே நிறைய குரங்கன்மார் ஓடித்திரிஞ்சாங்க. அவுங்களுக்குப் போடக் கடலை வகையறாக்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க. நிறைய வாங்கிக்கிட்டுப் போனோம். அவன்களுக்கும் தெரியும் இந்த மாதிரி பொட்டலம் கையிலே இருந்தா,அவுங்களுக்குன்னு. ஓடி வந்தாங்க. பிரிச்சுப் போட்டாச்சு. குட்டிக்குட்டிக் குரங்குங்களைப் பாக்கவே ஆசையா இருந்துச்சு.எனக்கு ஒரு குரங்கு வளர்க்கணுமுன்னு ரொம்ப ஆசை. ஆனா நிறைவேறலையே. இப்படித்தான் என் பொண்ணுக்கும்.


ஒருதடவை மகாபலிபுரத்துலே குரங்காட்டியோட குரங்கு நாங்க கை நீட்டுனவுடனே சரசரன்னு காலைப் பிடிச்சு ஏறிவந்து மகள் கையிலே உக்காந்துக்கிச்சு. நாங்க தடவித் தர்றோம்.கூட வந்த அண்ணன் குடும்பம், கீழே விட்டுருன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் ஒரே பயம். சில குரங்குங்க கடிச்சுரும்தான். ஆனா அது ரொம்பக் குட்டியா இருந்துச்சு.


கோயிலுக்கு உள்ளே போயாச்சு. அழகனையும் பார்த்தாச்சு. வண்டியை எடுத்துக்கிட்டு அங்கிருந்து மேலே போகணும்.மீனாட்சி கோயில் மாதிரியெ இங்கேயும் பிச்சை எடுக்கும் பெண்கள் எங்களை ஓடஓட விரட்டுனாங்க.
பழமுதிர்ச்சோலைக்கு போய்ச் சேர்ந்தா, 'தைப்பூசம்'ங்கறதாலே விசேஷ பூஜை & எக்கச்சக்கக் கூட்டம். ஸ்வாமிஅலங்காரம் நடந்துக்கிட்டு இருக்கு.


அதுவரைக்கும் ச்சும்மா நிக்காம இன்னும் மேலே போய் 'நூபுர கங்கை'யைப் பார்த்துட்டு வரலாமுன்னு போனோம். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும். கார்ப் பாதை இருக்கு.


மேலெ போகப் படிக்கட்டுங்க நல்லா விஸ்தாரமாவே இருக்குங்க. ஒரு கை இல்லாத குரங்கர் இருந்தார். பாவமா இருந்தது. பொரி ஒரு பாக்கெட் வாங்கி அதை பிரிச்சுக்கிட்டு இருந்தேன். அது மெதுவா வந்து அடுத்த கையாலெ மொத்தபாக்கெட்டையும் பறிச்சுக்கிட்டுப் போயிட்டார்.


மேலே போனா, ஆளுக்கு ஒரு ரூபாய் வசூலிச்சுக்கிட்டு உள்ளெ விட்டாங்க. தரையெல்லாம் ஒரே ஈரம். குளிச்சுட்டு வர்றவங்க 'நதநத'ன்னு செஞ்சு வச்சுருந்தாங்க. கிழே போக ஒரு இருவது படிக்கட்டு இருக்குங்க. ஆண்களுக்கும்பெண்களுக்கும் வெவ்வேற படிகள் அந்த முற்றத்துக்கு ரெண்டு பக்கமும் எதிரெதிரா. அந்த முற்றத்துலே, மேலெ இருந்துஒரு பக்கம் மூணு குழாயிலிருந்து தண்ணீர் வந்துக்கிட்டு இருக்கு. ஒரு தொட்டி கட்டி அதுலெ கீழ்ப்புறமாமூணு குழாய் வச்சிருக்காங்க.அருவியா வந்தாத்தானே பாக்கறதுக்கு நல்லா இருக்கும்? இது,சாதாரணத்தண்ணியை தொட்டிமூலம் ஊத்தற வேலையோ என்னவோ? யாரு கண்டா?


ஆனாலும் ஜனங்க நம்பிக்கையோடு குளிக்குதுங்க. ஒரு விதத்துலே நம்புனாதான் கடவுள். இல்லையா? மெதுவா இறங்கி வந்தோம். அங்கே மரத்துலே நூத்துக்கணக்கா தூக்கணாங் குருவிக்கூடுங்க காத்துலெ அழகா ஆடுதுங்க. பாக்கவே ரம்யமா இருந்துச்சுங்க.


திரும்ப பழமுதிர்ச்சோலை வந்தோம். 16 வருசத்துக்கு முன்னே இங்கே வந்துருக்கோம். அப்ப ஒரு மேடையிலேவேல் மட்டும் செங்குத்தாக் குத்தி வச்சிருக்கும். முருகன், சூரபத்மனை அழிச்சுட்டு, கோபம் தணிஞ்சு ( தணிகை மலை)அங்கிருந்து இங்கே வந்து கையிலே இருந்த வேலைப் பூமியிலே குத்தி வச்சுட்டு மறைஞ்சுட்டார்னு ஐதீகம்.இப்ப என்னன்னா அங்கெ கோயிலே கட்டிட்டாங்க. உள்ளே முருகன் சிலையை பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க.


கொஞ்ச நேரம் காத்திருந்தோம். திரை விலகியது. அலங்காரமா நிக்கறார் முருகன்.


வழக்கம்போல் கோயில் வாசலில் மலைப்பாதை முழுசும் ரெண்டு பக்கமும் தர்மம் யாசிக்கிறவங்க. பாவமாத்தான் இருக்கு.ஆனா எல்லாருக்கும் போட முடியலையே. அதுலே ஒருத்தர் நான் கார்க்கதவை மூடப்போனப்ப, 'அம்மா, நீ ஒரு கோயில் கட்டணுமுன்னு இருக்கே. அது நடக்கும். தர்மம் செய் தாயி'ன்னு சொன்னார்.


அதுக்குள்ளே வண்டி கிளம்பிருச்சு. ஒரு நிமிசத்துக்குப் பிறகுதான் மண்டையிலே நுழைஞ்சது அவர் சொன்னது.


நினைச்சதுக்கு முன்னாலேயே கீழே இறங்கிட்டோம். கீழே அன்னதானமுன்னு ஒரு சின்னப்பந்தல் போட்டு சாப்பாடுப்பொட்டலம் வினியோகிச்சுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் கூட்டம்தான். அப்ப மரத்தோரமா உட்காந்துருந்த ஒருதள்ளாத பாட்டி, அங்கேயே கவனமாப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களாலே போய் நின்னு வாங்க முடியாத உடல்நிலை.நாம எதுக்கு இருக்கோம்? இவரும் சொன்னார், ' பாவமா இருக்கு. நீ போய் ஒண்ணு வாங்கியாந்து தாயேன்'னு.


நானும் போய் வரிசை(?)இல்லாதக் கூட்டத்துலே நின்னு ஒண்ணு வாங்கிவந்து அந்தப் பாட்டிக்குக் கொடுத்தேன்.அப்ப பாட்டி புன்முறுவலோடு மெதுவா அதும்பக்கத்துலே வச்சிருந்த கூடையத் திறந்து காமிக்குது, அதுலேஏற்கெனவே 3 இருக்கு. நம்மை போலவே இன்னும் 3 பேர் இருந்துருக்காங்க. பாட்டி சொன்னது, 'இதுவே போதும் ஆத்தா'ன்னு.ஹூம்... மொதல்லேயே பாட்டிகிட்டே கேட்டுருக்கலாம், 'சாப்பாடு பொட்டலம் வேணுமான்னு?'


இப்ப என் கையிலே இருக்கற பொட்டலத்தை என்ன செய்யறது? பேசாம பிரிச்சுச் சாப்புட்டுறவா? ஒரு பத்தடி நடந்தப்பஒரு அம்மா, வேகமா நுழைவு வாயிலிலே வராங்க.அவுங்களுக்கு வேணுமான்னு கேட்டேன், உடனே வாங்கிக்கிட்டாங்க.அந்த அரிசியிலே அந்தம்மா பேருதான் எழுதியிருக்கும் போல.


நேரம் இருக்கெ, தருமியைப் பார்த்துட்டுப் போயிரலாமுன்னுஅவர் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். ஒரிஜனல் ப்ளான் படி சாயந்திரம் ஏர்ப்போர்ட் போறதுக்கு முன்னாலெ அவரைச்சந்திக்கணும். அவருக்கும் திடீர்னு சாயந்திரம் கொஞ்சம் வேற வேலை வந்துருச்சுன்னு தெரிஞ்சது. நல்லதாப்போச்சுன்னு நேரா அவர் வீட்டுக்குப் போயிட்டோம். அவர் சொன்ன ஏரியாவுக்குப் போனமெ தவிர வீடு இருக்கற இடம் தெரியலை. அதான் இருக்கவே இருக்கே செல்லு.


அவரே ஸ்கூட்டருலே வந்து விஐபி வண்டிக்கு முன்னாலெ போற பைலட் வண்டி மாதிரி வழி காமிச்சார்.வீட்டு வாசலில் இறங்குனதும் 'போபோவும், டாம்மியும்' வரவேற்புக் கொடுத்தாங்க. போபோ ,ப்ரவுன் கலர்.டாம்மி கருப்பும் வெள்ளையும். போபோ தருமியோடது, டாம்மி பக்கத்து வீட்டுக்காரர். வயசு என்ன ஒரு ஆறுவாரம் இருந்தா ஜாஸ்தி. பக்கத்து வீட்டுக்காரர் 'ஓடிறப்போறாரு'ன்னு கட்டிப் போட்டுருந்தாங்க. போபோ வீட்டுஆளாச்சே. தைரியமா உலாத்திக்கிட்டு இருந்தார். அப்ப ஒரு பெரிய நாய் ஒண்ணு திறந்திருந்த கேட் வழியா 'விருக்'னுவெளியே ஓடிப்போச்சு.


வீட்டுக்குள்ளே போனோம், வீட்டம்மாவைப் பார்த்தோம் பேசோ பேசுன்னு பேசுனோம். அப்பத்தான் தெரிஞ்சது அந்த 'ஓடுன நாய்'வீட்டம்மாவோட செல்லமாம். ஆனா கொஞ்ச நேரத்துலே தானே வந்துருமாம்ன்னு சொல்லிக்கிட்டு, அப்பப்ப வந்துருச்சான்னுகேட்டைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நானும், துணைக்கு கேட்டைப் பாத்துக்கிட்டே அவுங்களோட பேசுனேன். ரொம்ப நேரங்கழிச்சுப் போனவர்' திரும்ப வந்துட்டார்.


இதுலே பாருங்க இவுங்க வீட்டு வரவேற்பறைக்கு முன்னாலே இருக்கற ' ஃபோயர்'லே எல்லாம் போபோவுக்கு அனுமதி இல்லையாம். ஆனா நாய்க்காரி வந்த தைரியத்துலே ( இவளே உள்ளே போறப்ப எனக்கென்ன உரிமை இல்லையா?)அது அங்கெ வந்து நிம்மதியாப் படுத்துக்கிட்டுக் 'குட்டி'த் தூக்கம் போடுது!


இங்கே வந்தவுடனே நம்ம காதர் பாட்சாவை சாப்பாட்டுக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு ரெண்டு மணி வாக்குலேதிரும்ப வந்துட்டார். நாங்களும் கிளம்பி, மதிய சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஆனந்தா மெட்டல்ஸ் போனோம்.'யாத்திரை வந்தா பாத்திரக்கடையைப் பார்க்காமப் போனா புண்ணியம் கிடைக்காதாம்'( புது மொழி!)ச்சும்மா ஒருபார்வை பார்த்துட்டு, குக்கர்லே வைக்க ஒரு இன்செட்டும், சிணுக்கோல் ஒண்ணும், சில குங்குமச்சிமிழ்களும் வாங்கியாந்தோம். இங்கே யாராவது வந்தா போனா வச்சுக் கொடுக்க வாணாம்?


சாயந்திரம் ஏழு மணி ஃப்ளைட். ஏர்ப்போர்டுக்குப் போய் சேர்ந்தாச்சு. ஏர்டெக்கன் புக்கிங் ஆஃபீஸ் அங்கே இருக்கு.'பெங்களூரு போக ரயில் நல்லது'ன்னு நான் சொல்லச் சொல்ல என் பேச்சைக் கேக்காம, இவர் அங்கேயே , ரெண்டுநாள் கழிச்சு ச்சென்னையிலிருந்து பெங்களூரு போய் வர டிக்கெட்டு எடுத்துட்டார். சொன்ன பேச்சைக் கேக்காததுக்குஅப்புறமா வருத்தப்பட வேண்டியதாப் போச்சு.


ஸ்டாப் ஸ்டாப். கற்பனையை வளர்காதீங்க. நான் ஒண்ணும் அடிக்கலை, திட்டலை. எல்லாம் தானாய் வந்துச்சு.

மதுரையை நம்ம தருமி வசமே திருப்பிக் கொடுத்துட்டு, ச்சென்னைக்கு இரவு ஒம்போது மணிக்கு வந்து சேர்ந்தோம்.


நாளைக்கு ஞாயித்துக்கிழமை. ஸ்பெஷல் டே!

பின்குறிப்பு: தருமி, இனி நீங்க எடுத்துக்கலாம்:-)

நம்ம ப்ளொக்கர் படம் போடச் சொதப்புதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேனேன்னு நம்ம தோழி உதவிக்கு வந்து ஒருஇடத்துக்குக் கையைக் காமிச்சு விட்டாங்க. அங்கே ஒரு 16 படம் போட்டுருக்கேன். இலவச சேவைதான். ஒரு மாசம்இவ்வளோன்னு கணக்காம். 'ஆத்துலே போட்டாலும் அளந்து போடறங்க' (பழமொழி). இனி நீங்க பார்த்தபிறகு அங்கே பழசை எடுத்திட்டுப் புதுசு போட்டுக்கலாம். இப்போதைக்கு அழகர்கோயில் இங்கே.

Saturday, April 01, 2006

கூடலழகர்





ஒரு வழியா நாலு படங்களை இங்கே போட முடிஞ்சது.

நின்றார்,

கிடந்தார்

கோயில் உள்ளே கோபுர தரிசனம்(?)

மதுரவல்லி ( பாகரைப் பார்க்கும் பார்வை)


ப்ளொக்கர் சொதப்பாமல் இருந்தால் இன்னும் சிலதை நாளைக்குப் போடறேன்.