Tuesday, March 14, 2006

மூணு விருந்து ஒரே நாளில்.


பயண விவரம் பகுதி 3
இப்பெல்லாம் ச்சென்னயிலேயே செங்கல்பட்டு இருக்குது போல! அட, ஆமாங்க. புது வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குபோகணுமுன்னு 'கால் டாக்ஸி' யைக் கூப்புட்டாச்சு. முஹூர்த்தம் காலையிலே ஆறு முதல் ஏழரை வரை.அண்ணன் வீடுதான். இன்னும் முழுசா முடியலை. உள்புறம் வேலைங்க, அதாங்க வுட் ஒர்க், லைட்டிங், கிச்சன்எல்லாம் பாக்கி இருக்குதான். ஆனா இப்பத்தானே நாங்க அங்கே இருக்கோம். அதனாலே கொஞ்சம் முன்னாலே வச்சுக்கிட்டாங்க.


நமக்குத் தெரியாத மெட்ராஸா? அதெல்லாம் கவலைப்படவேணாம். 'டாண்'னு அஞ்சரைக்கே அங்கெ இருப்பேன்னு சவால் விட்டாச்சு.


போய்க்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கோம். அதிகாலை இருட்டுலே ஒண்ணும் சரியாத் தெரியலை. ராமச்சந்திராஆஸ்பத்திரி வாசல்லே வந்ததும்தான், சந்தேகம் வந்துச்சு. அதான் 'கைத்தொலைப்பேசி இருக்க எனெக்கென்ன மனக்கவலை'ன்னு ஃபோன் போட்டாச்சு.


" எங்கே இருக்கீங்க?"

" ராமச்சந்திரா வாசல்லே"

" சரி. அப்படியே நேரா வாங்க, ஒரு ரெண்டு கிலோ மீட்டர்தான்"

கால் டாக்ஸி ட்ரைவர் இந்தப் பக்கம் வந்ததே இல்லையாம். அதுக்கென்ன? ' நேராப் போங்க'ன்னாச்சு.

ஒரு பத்துகிலோ மீட்டர் போயாச்சு. கெரகம்பாக்கமோ, கரையான்சாவடியோ, இல்லே போரூரே வந்துட்டமோன்னும் தெரியலை.

போடு ஃபோனை. இந்த முறை ஃபோனை எடுத்தவர் யாரோ ஒரு விருந்தினர். அண்ணன் 'மந்திரம்' திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்காராம்.


"நீங்க ரொம்ப தூரம் போயிட்டீங்களே. திரும்ப ராமச்சந்திரா மிஷன் ஆஸ்ரமம் வாங்க."

" அட, ராமச்சந்திரா! என்ன மிஷனா? ஆஸ்பத்திரிதானேங்க இருக்கு?"

" இல்லையே, மிஷனும் இருக்கே"

அப்படி இப்படின்னு மறுபடி விளக்கமெல்லாம் கேட்டு, அங்கே சுத்தி இங்கே சுத்தி இடம் கண்டுபிடிச்சு(சுப முஹூர்த்தநாளாம்.இன்னும் ரெண்டு வீட்டுக்கு அங்கேயே பூஜை நடந்துக்கிட்டுஇருக்கு.) எந்த வீடுன்னு தெரியாம பார்த்துக்கிட்டே போய் ஜன்னல்லே தெரிஞ்ச தலையை வச்சுக் 'கரெக்ட்டாக்' கண்டுபிடிச்சு 'டாண்'னு ஏழுமணிக்குபோய்ச் சேர்ந்தாச்சு.


பட்ட கஷ்டம் எல்லாம் தீர 'நம்ம ரேவதி சண்முகம்' (அதாங்க 'அவள் விகடன்'லே சமையல் சொல்லித்தருவாங்களே, கண்ணதாசனோட மகள்) கேட்டரிங்செஞ்ச காலை டிஃபன். மெனு சொல்லட்டுங்களா, வேணாமா?

கேசரி, இட்டிலி, நாலுவகைச் சட்டினிங்க, சாம்பார், தோசை, பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, இடியாப்பம் தேங்காய்ப்பால் அப்புறம் காஃபி.


அன்னிக்கு வேலைநாளா இருந்துச்சுங்களா, அதனாலே நிறையப்பேர் காலை டிஃபன் முடிஞ்சு உடனே போயிட்டாங்க.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இருந்தோம். ரேவதியம்மா கையாலெ பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டோம்.வழக்கமான தென்னிந்தியச் சமையல்தான்.சாம்பார், கறி, கூட்டு,புளிக்குழம்பு, ரசம் இத்தியாதி. கூடவே வடை, பாயாசம், பப்படம்.'சாப்பாடாங்க நமக்கு முக்கியம்?' வீடுதானே? வீட்டைச் சுத்திப் பார்க்கலாமுன்னா.....


அடுத்த வீட்டுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? அவசரத்துக்கு, ஒரு குழம்போ,கூட்டோ வேணுமுன்னா கையைக் கொஞ்சமே கொஞ்சம் எட்டினாப் போதும். ரொம்ப நீட்டிட்டா நீங்களே அவுங்க சமையலறையிலே இருந்து எடுத்துருவீங்க.அது, அவ்வளவா நல்லா இருக்காதில்லையா? ஒரு வார்த்தைக் கேக்கவேணாமா?


முன்னாலே ஒரு சாண்,பின்னலெ ஒரு சாண்( இது, பப்பரப்பான்னு நம்ம உள்ளங்கையை விரிச்சுவச்சா கட்டைவிரல்நுனிக்கும், சுண்டுவிரல் நுனிக்கும் இடைப்பட்ட தூரம். புது ஜெனரேஷனுக்குத் தெரியாதுன்னு ஒரு விளக்கம் கொடுத்துட்டேன்)மண் தரை. தோட்டம்(!) போட்டுக்கவாம். ஆமாமாம். புல் வெட்டற வேலை மிச்சம். விலையைக் கேட்டா மயக்கமெல்லாம் வராது,பைத்தியம்தான் பிடிக்கும். சாலைவிபத்துலே சாகற மனுஷ உயிருக்கு விலை இல்லை, ஆனா மண்ணுக்கு என்னா விலை,என்னா விலை? ஹப்பா.....


சாலை விபத்துன்னதும் ஒண்ணு நினைவுக்கு வருதுங்க. நாங்க ஊர் மண்ணுலே காலு குத்துனதும் ஒரு டாக்ஸிஎடுத்துக்கிட்டு வீட்டைப் பாக்கப் போய்க்கிட்டு இருக்கோம். இதென்ன நமக்குத் தெரியாத இடமா?'அதெல்லாம் யாரும்வரவேணாம். ராத்திரி 11 ஆயிரும். நாங்களே டாக்ஸியிலே வந்துருவொம்'னாச்சு.


"இப்பெல்லாம் சிகப்புதான் 'கோ சிக்னலா? மாத்திட்டாங்களா? முந்தி பச்சை இருந்துச்சுலே?"


" இல்லைம்மா. ராத்திரி 10 மணி ஆயிருச்சுன்னா நம்ம பாட்டுக்குப் போலாம்"
" அப்படியா? புது ரூல்ஸ் வந்துருச்சா?"


"................................" ( மெளனம்)


எந்தப்பக்கம் வண்டிவந்து நம்மைத் தாண்டிக்கிட்டுப் போகுதுன்னு தெரியாம எல்லாப்பக்கத்துலேயும் சீறிக்கிட்டுபோறாங்க. கிருஷ்ணார்ப்பணம்.

இதெல்லாம் ட்ராஃபிக்கே இல்லையாம். நாளக்குப் பகல்லே பார்க்கணுமாம். பார்த்தேனே..........


ஒருசிலர் 'ஹெல்மெட்' போட்டுக்கிட்டுப் போறதைப் பார்த்தேன். அதுலே சில பெண்களும் உண்டு. சந்தோஷமாஇருந்துச்சு. ஆனா யாராவது கீழே விழ நினைச்சாலும் முடியாதுங்க. அதான் தரையே தெரியாத அளவுக்கு அடைச்சுக்கிட்டுநிக்குதே வண்டிங்க. ஜனத்தொகை ரொம்பவே கூடிப்போச்சுன்றது முகத்துலே அறையும் உண்மை.


சாயந்திரம் முக்கியமான நிகழ்ச்சி ஒண்ணு இருந்துச்சு. இந்தியா நீங்கலாக, வெளிநாட்டுலே இருக்கற வலைஞர்கள் சார்பில் அந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப்போற ஒரே ஆளு நான் தான்றது அப்போ எனக்குத் தெரியாது. நான் வெறும் நியூஸி சார்பாப் போறேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.


காந்திலால் கல்யாண மண்டபம். நம்மை அழைச்சவர்தான் அங்கே முக்கிய 'புள்ளி'. ஆனா அவரை முன்னேபின்னே பாத்ததில்லை.இது என்ன பிரமாதம்? எல்லாம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்.

கஷ்டப்படுத்தாம, மாலையும் கழுத்துமா இருந்தவரைக் கண்டுபிடிக்க அரைநொடிகூட ஆகலை.


கல்யாண நிச்சயதார்த்தம். சடங்கையெல்லாம் ஓடி ஓடிப் படம் எடுத்தார் என்னோட வந்த ஃபோட்டோகிராஃபர்.(பயணக்கதை எழுதற பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரைக் கொண்டு போவாங்க.உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)

மாப்பிள்ளை தனது தாயாரைக் கூட்டிக்கிட்டு வந்து அறிமுகம் செஞ்சுவச்சார். அங்கே சென்னையில் உள்ள பிரபல மக்கள் ( நம்ம வலை உலகப் பிரமுகர்கள்) ரெண்டு பேரைப் பார்க்கும் பாக்கியம் கிடைச்சது. அறிமுகம் செஞ்சுக்கிட்டேன்.ஒருத்தர் நம்ம பா.ரா, இன்னொருத்தர் நம்ம பத்ரி. பா.ராவுடன் ஒரு வார்த்தை பேசினேன்,'வணக்கம்' அவ்ளோதான்.பெரிய எழுத்தாளர், அவர்கிட்டே என்ன பேசறதுன்னே தெரியலை(-:பத்ரிகூட கொஞ்சநேரம் நிறையவே பேசினோம். கிழக்குப்பதிப்பகம் டி.சர்ட் போட்டுக்கிட்டு இருந்தார். நட்போடு பழகினார்.


விழா முடிஞ்ச கையோட சாப்பாடு. கேசரி, இட்டிலி, சட்டினி வகைகள், லட்டு( லட்டா ஜாங்கிரியா?) இன்னும் பலவிதமா இருந்துச்சுதான். ஆனா, ரெண்டு நேரம் ரேவதியம்மா சாப்பாட்டை வெட்டுனதுனாலே அவ்வளவா(!) பசியில்லை.


வர்றப்ப தாம்பூலம் கொடுத்தாங்க. சணலில் செஞ்ச ஒரு ச்சின்ன ஷாப்பிங் பையும்( காய்கறி வாங்கிக்க வசதியாஇருக்கும்)கூடவே ஒரு பத்து ரூபாயும்.
ரூபாய் எதுக்குக் கொடுத்தாங்கன்னே தெரியலை. ஒருவேளை எதாவது காய் வாங்கி அந்தப் பையிலே போட்டுக்கறதுக்கோ?


மாப்பிள்ளைகிட்டே கேக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா கேக்கலை. எங்க இவரும் எதுக்குஅந்தக் காசுன்னு யோசிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்தார்.


மாப்பிள்ளையும் இந்த விழாவைப் பத்தி நீங்க எழுதிறாதீங்கன்னு கேட்டுக்கிட்டார். நானும்,'மாட்டேன். இது உங்கவிசேஷம், நீங்க முதல்லே எழுதுங்க'ன்னு பெருந்தன்மையா சொல்லிட்டேன். (நானே எழுதலாமுன்னா தமிழ் ஃபாண்ட்டுக்குஎன்ன செய்யறதாம்?) இப்ப அவரே எழுதிப் படமெல்லாம் போட்டுட்டதாலே நானும் 35 நாளுக்கப்பறம் எழுதிட்டேன்.கல்யாணம் ஏப்ரல் 30. அதுவரை 'கடலை போடுங்க'ன்னு சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன். ஏதோ நம்மாலான உபகாரம்.


அச்சச்சோ...மாப்பிள்ளை பேரைச் சொல்ல மறந்துட்டேனே!!!!
நம்ம 'கிருபாசங்கர்'தான்.__________________

Monday, March 13, 2006

நவ்வாலு

பிடிச்ச விஷயம், பிடிச்ச பொஸ்தகம்னு நாலு சொல்லணுமாக்கும். எனக்குப் பிடிச்ச விஷயம் கிட்டத்தட்டநாலு லட்சத்துக்கு இருக்கறப்ப எந்த நாலைச் சொல்லுவேன்?


பிடிச்ச மிருகங்களிலே ஆரம்பிக்கவா? ஐய்யோ.... எல்லா மிருகங்களுமே எனக்குப் பிடிக்கும். அதுலேயும்குழந்தைங்க ( மிருகக்குழந்தைங்க)ன்னா, அடடாடா இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே நிப்பேன்( ஆனாயாராவது அப்பப்ப காஃபி, டீ, சாப்பாடுன்னு டயத்துக்குக் கொடுத்துரணும். அட, எனக்குத்தாங்க)


1. யானை
2. பூனை
3. நாய்
4. குரங்கு.


பிடிச்ச பூ


1. மல்லிகை
2. ரோஜா
3. தாமரை ( லட்சுமி இருக்குமாம்லெ?)
4. மேலெ சொன்னதைத்தவிர மத்த எல்லாப்பூவும்.


பிடிச்ச ஊர்


1. வத்தலகுண்டு

2. கிறைஸ்ட்சர்ச்

3. மரூக்கிடோர்

4. மில்ஃபோர்ட் சவுண்ட்

பிடிச்ச காய்கள்

1. புடலை
2. வெண்டை
3. பூசணி( வெள்ளை)
4.பீன்ஸ்


பிடிச்ச பண்டிகைகள்

1. ஸ்ரீ ராமநவமி( பிரசாதம் செய்யக் கஷ்டப்படவே வேணாம்!)
2. கிருஷ்ண ஜெயந்தி
3. பொங்கல் பண்டிகை
4. வைகுண்ட ஏகாதசி ( சமைக்கவே வேணாம்)


பிடிச்ச இடங்கள்

1. கடற்கரை ( கப்பல் கண்ணுலே பட்டா இன்னும் விசேஷம்)
2. கோயில் ( ரொம்பக் கூட்டமில்லாத பழைய கோயில்களா இருக்கணும்)
3. தென்னந்தோப்பு ( உக்கார ஒரு கயித்துக்கட்டில் கண்டிப்பா இருக்கணும்)
4. என்னோட கணினி இருக்கற ரூம்.


பிடிச்ச பழங்கள்

1. பலாப்பழம்
2. சப்போட்டா
3. மாம்பழம்
4. கொய்யாப்பழம்

பிடிச்ச எழுத்தாளர்

1. தி.ஜா.ரா

2. லா.ச.ரா

3. நரசய்யா
4. உமா கல்யாணி

இன்னும் பிடிச்சவுங்கன்னு ஏராளமா இருக்காங்க. யாரைச் சொல்ல, யாரை விட?

பிடிச்ச இனிப்பு வகைகள் ( தின்னிப் பண்டார அக்கா இதைச் சொல்லலைன்னா எப்படி?)


1. ஜாங்கிரி

2. அல்வா( யாரும் கொடுத்துறாதீங்க.வேணுமுன்னா நானே வாங்கிப்பேன்)

3. அதிரசம்

4. பொருள்விளங்கா உருண்டை ( அந்தக் காலத்துச் சமாச்சாரம்)

பிடிச்ச வேலை

1. பதிவு எழுதறது ( இப்பெல்லாம் இது பொழுதுபோக்குலே இருந்து உத்தியோகமா மாறிப்போச்சு!)

2. தையல் ( ஒரு காலத்துலே தையல் மெஷினே கதின்னு இருந்துருக்கேன்)

3. பசங்களுக்கு( நம்ம பூனைங்கதான்) பேன் பாக்கறது!

4. வீட்டுக்குள்ளே தோட்டவேலை

பிடிச்ச நடிகர்.

1. கமல்
2. கமல்
3. கமல்
4. கமல்


பிடிச்ச நடிகைகள்

1. பானுமதியம்மா
2. சாவித்திரி
3. தேவிகா
4.கண்ணாம்பா( எங்க அம்மாவோட முகச்சாயல் இருக்கு இவுங்ககிட்டே)அடடா....எல்லாரும் மேலே போயிட்டவங்கதான். போகாதவங்க லிஸ்ட்டு ஒண்ணு தந்துரலாமா?

1. மனோரமா
2. கோவை சரளா
3. பத்மினி
4. ஊர்வசி

பழையபடி அந்தக்கால லிஸ்ட்டாப் போயிருச்சே. சரி, சமீபத்திய நடிகைகளைப் பார்க்கலாம்
1. மீரா ஜாஸ்மின்
2. ஜோதிகா
3.????
4.????
ஒண்ணும் தோணலைங்க.



புடிச்ச இசைக் கலைஞர்கள்.
1. யேசுதாஸ்
2. எம். எஸ். அம்மா
3. காயத்திரி (வீணை)
4. ஜாகீர் ஹுஸைன் ( தப்லா)இன்னும் எக்கச்சக்கமானவங்க இருக்காங்க. லிஸ்ட்டு ரொம்பப் பெரூசாப் போயிரும் ஆமா...


சினிமாப்பாட்டு பாடறவங்க.

சித்ரா ( தமிழ் & மலையாளம்)
ஆஷா போஸ்லே (ஹிந்தி மட்டும்)

தமிழைக் கொலை செய்யாமப் பாடற எல்லோரையுமே பிடிச்சிருக்கு.
பிடிக்காத நாலுபேர்.


1. முன்னாலெ ஒண்ணு பின்னலே வேற ஒண்ணுமா பேசித்திரியுறவங்க.
2. மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க.

3. தெருவுலே அசிங்கம் செய்யறவங்க.

4. பெண்களையும், குழந்தைகளையும் பாலியல்ரீதியா துன்பப்படுத்தறவங்க.
(பாலியல் வன்முறை)இன்னொண்ணையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்....
5. மிருகங்களை அடிச்சுத் துன்புறுத்தறவங்க.


ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன், இந்த விளையாட்டை ஆரம்பிச்சது யாரு? நாலுக்குள்ளெ அடங்கற உலகமா இது?

யாரையும் விளையாட்டுலெ இழுக்கலை. உங்களுக்கு ஆசை இருந்தா நீங்களே வந்து சேர்ந்துக்குங்க.


அடப் போங்கப்பா. நாலுபேர் நாலு சொல்றதுக்குள்ளே இங்கனயெ இதை நிப்பாட்டிக்கறேன்.

Saturday, March 11, 2006

கிருஷ்ணா நீ பேகனே......


பயண விவரம் பகுதி 2


"எவ்வளோ நாள் ஆச்சு, இந்த மாதிரி தினப்பத்திரிக்கைகளைப் பார்த்து?

என்னதான் 'நெட்'லே பார்த்தாலும் இதுமாதிரி வராதுல்லே? ஹிந்து படிச்சு வருசக்கணக்காச்சு. ஆனா மாறுதல் ஒண்ணும் இல்லை. பேப்பர் மெலிஞ்சுருக்கு,அவ்வளோதான்."

"அதுவும் இந்த தினமலர் பத்திரிக்கையை இப்பத்தான் மொதமொதல்லே கண்ணாலே பாக்கறேன்."

"அது என்ன தினமலர் வேணுமுன்னு வாங்கிட்டே?"

"எல்லாம் ஒரு அபிமானம்தான். தினம் ஒரு தமிழ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தறாங்களே!"

இப்படியெல்லாம் அளந்துக்கிட்டே பேப்பரைத் தரையில் பரத்திக்கிட்டு 'சென்னையில் இன்று' நிகழ்ச்சிகளைப்பார்க்கறேன்.

"அடடே, நம்ம இசைக்கல்லூரியிலே பொன்விழா நடக்குதாம். யேசுதாஸ் பாடறாராம். அனைவரும் வருகன்னுபோட்டுருக்கு, போலாமா? காலையிலே பத்தரை முதல் பன்னெண்டுவரையாம்."

"எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை முடிச்சுக்கிட்டுப் போலாம்."

போனவேலை முடிஞ்சு, இசைக் கல்லூரிக்குள்ளே வாழ்க்கையிலேயே முதல்முறையா நுழையறோம்.பழங்காலத்துக் கட்டிடம். பாட்டுச்சத்தம் மெலிசாக் கேக்குது. அதைத் தொடர்ந்துகிட்டே ஹாலுக்குப்போயிட்டோம். வாசலில் அழகான கோலம் போட்டு, அதுக்கு வர்ணப்பொடி தூவி ரங்கோலி அட்டகாசமா இருக்கு.நாலைஞ்சு பெண்கள் பட்டுடுத்திச் சந்தனமும், குங்குமமும் கொடுத்து வரவேற்கிறாங்க.


கனகம்பீரமா பாடிக்கிட்டு இருக்கார் நம்ம யேசுதாஸ். அவர் முன்னாலே ஒரு மடிக்கணினி. பக்க வாத்தியக்காரர்கள் சூழ்ந்திருக்கும், அலங்காரமில்லாத சாதாரண மேடை. கீழே ஜமக்காளம் விரிப்பு. இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிறைந்திருக்காங்க. எல்லாம்இளவயசுப் பசங்க. பெண்கள் எல்லாம் ஜிலுஜிலுன்னு பட்டுலே ஜொலிச்சாங்கன்னா, ஆண்கள் எல்லாம் ஜிப்பா! பாக்கவே ரம்யமாஇருந்துச்சு.


இசைக்கல்லூரியின் பொன்விழா ஆண்டுக்காக 25 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். அதுலே இதுதான் கடைசி நிகழ்ச்சியாம்.அரங்கத்துலே கொஞ்சம் போல நாற்காலிகள் போட்டு வச்சிருந்தாங்க. மாணவர் அல்லாதவர்கள்( பொது மக்கள்னு சொல்லலாம்) உட்கார்ந்து இசையை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இடமா முக்கியம்? பாட்டுக் கேட்டாப் போதாதான்னு ஒரு ஓரமாநின்னுக்கிட்டு இருந்தோம். யாரோ ஒரு மாணவர்போல, ரெண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டு நம்மை உக்காரச் சொன்னார்.யார் பெத்த பிள்ளையோ? நல்லா இருக்கணும். கொஞ்ச நேரத்துலே ரெண்டு பார்வையிழந்த இளம்பெண்கள் அங்கேவந்து சேர்ந்தாங்க. அவரே இன்னும் சில நாற்காலிகளைக் கொண்டுவந்து கதவருகிலே போட்டு உதவினார்.


ஒரு பாட்டு முடிஞ்சு, அடுத்த பாட்டா'அதிசய ராகம்'ன்னு ஆரம்பிச்சாரோ இல்லையோ, மாணவர்கூட்டத்துலே இருந்து அபார வரவேற்பு. அடுத்தடுத்து பாட்டுங்க பாடிக்கிட்டே இருக்கார். நாங்கெல்லாம் அப்படியே 'தேன் குடிச்ச நரி(!)' போலஒரு மயக்கத்துலே உக்கார்ந்திருக்கோம். அப்ப நிகழ்ச்சி அமைப்புக்கு உதவும் ரெண்டுபேர்( அதான் ஒரு பேட்ஜ் குத்திக்கிட்டுஇருந்தாங்கல்லே!) பச்சை பார்டர் போட்ட வெண்பட்டுச்சேலையில் இருந்த ஒரு அம்மாவைக் கூட்டிட்டுவந்து முன்பக்கமாமேடைக்கருகில் உக்காரவச்சாங்க. (பாதி மயங்கிய நிலையிலும் எனக்குப் பட்டெல்லாம் 'பட்'டுன்னு தெரிஞ்சிரும்,ஆமா) எங்கியோ பார்த்த முகம். யாருன்னு புரிபடலை. மணி பன்னெண்டரை ஆயிருச்சு. பரிசுப் பொருட்கள், பொன்னாடைகள் எல்லாம் எடுத்துக்கிட்டு நிர்வாகிகள் மேடைப்பக்கம் வந்தவுடனே, அடுத்த பாட்டு ஆரம்பிக்காம இருந்தார் யேசுதாஸ்.


சொற்பொழிவுகள் ஆரம்பமாச்சு, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுருக்கமாப் பேசுனார். அப்படியே இன்னும் சில பெருந்தலைகளும்.யேசுதாஸ் பேசும்போது அவருடைய பக்க வாத்தியக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து புகழ்ந்துபேசினார்.அவர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தினார்கள். அவருடைய இன்றைய நிகழ்ச்சிக்காகவே ஸ்பெஷலாவந்திருந்த ஃப்ரெண்ட்ன்னு சொல்லி, அந்தப் பச்சை பார்டர் அம்மாவைச்சுட்டி மேடைக்கருகிலே கூப்புட்டார்.அவுங்களை ரெண்டு வார்த்தை பேசச் சொன்னார்.


அந்த அம்மாவும், மைக்கைக் கையிலே வாங்கிக்கிட்டு,'நலம் தானா?'ன்னு கேட்டாங்க. அட! நம்ம நாட்டியப்பேரொளிபத்மினி! கைதட்டுனதுலே எங்க கையெல்லாம் அப்படியே சிவந்து போச்சுங்க. மொதநாள் ராத்திரிதான் அமெரிக்காவுலே இருந்து வரமுடிஞ்சதாம். களைப்பாத்தான் இருந்தாங்க. பாவம், வயசாச்சுல்லே? நகைச்சுவையாப் பேசுனாங்க.அன்னைக்குத்தான் யேசுதாஸ் அவர்களின் திருமண நாளாம். அவருடைய மனைவியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.கரகோஷமே கோஷம்...


இதெல்லாம் முடிஞ்சு, மறுபடி பாட ஆரம்பிச்சுப் பாடிக்கிட்டு இருந்தார். 'கிருஷ்ணா நீ பேகனே' பாட ஆரம்பிச்சாரோ இல்லையோ,நாட்டியப்பேரொளி எழுந்து நாட்டியமாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐய்யோ, எனக்குப் பாக்கியம்தான் போங்க. ரொம்ப இயல்பான,ஆரவாரமில்லாத அலங்காரமும், அபிநயமும், அதுக்கேத்த மாதிரி 'தேனாபிஷேகம் செஞ்சு கிடைச்ச குரல்'ன்னு சொல்வாங்க பாருங்க,அப்பேர்ப்பட்ட குரலில் சங்கீதமும் சேர்ந்து தேவலோகத்துலெ இருக்கறேன். ( அப்ப நான் இருந்த நிலைமையைச் சரியா வர்ணனைசெய்யத் தெரியலைங்க. மன்னிச்சுடுங்க)


பாட்டு நின்னப்பத்தான் மணியைப் பாக்கறேன், ரெண்டு! மாணவர்கள் கூட்டமெல்லாம் யேசுதாஸோடக் காலைத் தொட்டுக்கும்புடறாங்க.

வெளிவராந்தாவிலே வந்து உக்கார்ந்த பத்மினியம்மாகிட்டே ஆட்டொகிராஃப் வாங்க மாணவிகள் கூட்டம்மொய்க்குது. நாங்களும் எழுந்து பிரபா யேசுதாஸ் கிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பினோம். அப்பத்தான் வெளிப்பக்கமாக் கண்ணை ஓட்டறேன். கட்டிடத்தை ஒட்டி பெரிய ஆறு ஓடுது. நிறைய மரங்கள். பசுமையா இருக்கு. பழங்காலக் கட்டிடமாச்சா,பெரிய பெரிய ஜன்னல்கள். பாட்டுக் கத்துக்கத் தோதான சூழ்நிலைதான். இது இருக்கற இடம் நம்ம சிங்காரச் சென்னையான்னு கூட நம்பமுடியலை.


வெளியே வந்து பார்த்தா,ச்சுள்'ன்னு வெய்யில். பசி வேற. சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அருணாவோட வீட்டுக்குப்போகலாம். அவுங்க வீட்டுலே இருப்பாங்களான்னு கேட்டுக்கலாமுன்னு அவுங்களுக்கு ஃபோனைப் போட்டேன்.வீட்டு விலாசம் சொல்லுங்க, ஒருமணிநேரத்துலே வர்ரோமுன்னு சொல்லலாமுன்னா, இப்ப நாங்க எங்கெருந்துபேசறோமுன்னு அவுங்க கேட்டாங்க. இசைக்கல்லூரி வாசலில் நிக்கறொமுன்னு சொன்னதும், அசையாம அங்கேயே நிக்கணுமுன்னு ஒரே போடாப் போட்டுட்டாங்க.


ரெண்டே நிமிஷம்தாங்க. 'வாங்க துளசி'ன்னு குரல் கேட்டுத் திரும்புனா, 'அருணா'! அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்,ச்சுடச்சுட இட்டிலியும், காஃபியும்! தொட்டுக்கச் சட்டினி அரைக்கறேன்னு ஆரம்பிச்சாங்க. தேங்காய் வேணாங்க.மிளகாய்ப்பொடி இருக்கான்னு தெரியாத்தனமாக் கேட்டுட்டேன். இட்லிமொளகாய்ப்பொடி இல்லாத தென்னிந்திய வீடு இருக்கான்னு கேட்டுட்டு எடுத்துவச்சாங்க. இப்ப அவுங்க வீட்டுலே எந்த ஜாடியிலே அது இருக்குன்னு எனக்குத் தெரியுமே:-)))))


அன்னிக்குப் பூராவும் அந்தப் பாட்டும், நடனமும் மனசைவிட்டுப் போகாம சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க. ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா?


பி.கு: அன்னைக்கு எடுத்த படங்கள் கோபாலோட மடிக்கணினியிலே இருக்கு. அப்புறமா இங்கே போடறேன். சரியா? அதுவரைக்கும் 'பழங்களைப் பார்க்கலாமா?'