Monday, February 16, 2026

மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா............

தன்னுடைய பதினெட்டாவது வயசில் அரியணை ஏறினவுங்க இவுங்க. இவரின் 63 வருஷ ஆட்சி காலத்தில்தான்  ஆஸி, நியூஸி, கனடா, ஹாங்காங்,  ஃபிஜி, தென்னாஃப்ரிகாவில் பல இடங்கள்னு  ஏகப்பட்ட நாடுகளை,  ப்ரிட்டிஷ் ஆட்சி பிடிச்சுக்கிட்டு, தங்கள் ஆட்சியில் சூரியனே மறையாதுன்னு பெருமைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.  அதானே உலகம் முழுக்க அங்கங்கே நாடு பிடிச்சு வச்சுருந்தா.... எங்காவது சூரிய வெளிச்சம்  மறையுமா என்ன ? 
கீழே படம்: வலையில் இருந்து! அன்னாருக்கு நன்றி !
இதனால்  மஹாராணி விக்டோரியாவின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் ராணியின் பெயரில்தான் ஏகப்பட்ட தெருக்களும், கட்டடங்களும்,  நிலங்களும் , மாநிலங்களும்..... இப்ப நாம் சுத்திக்கிட்டு இருக்கும் மெல்பர்ன் என்ற ஊர் கூட விக்டோரியா மாநிலத்தின் தலைநகரே !
ஹரேக்ருஷ்ணா கோவிலில் இருந்து டாக்ஸியில் வந்துக்கிட்டு இருந்த நாம்,  நேரா நம்ம ஹொட்டேலுக்குப் போகாம க்வீன் விக்டோரியா மார்கெட்டில் இறங்கினோம். கட்டட    முகப்பு வாசலுக்குள் நுழைஞ்சால்................  ஹைய்யோ.............  பெத்தாம் பெரிய ஷெட்! அறுநூறு  சில்லரை வியாபாரம்.  அவுங்கவுங்களுக்கு சுவாரஸ்யமான இடங்களில் கூட்டம் !நகைநட்டுக் கடைகள் ஏகப்பட்டது. இதுலே கையாலெ செஞ்சதுன்றதுக்கு பெரிய கௌரவம் வேற !


தங்கம் விக்கிற விலையில் இனி உலகம் பூராவும் இப்படித்தான் மாறணும்போல ! நான் பார்த்தவரையில் ஏற்கெனவே வெள்ளையர்கள் இதே மாதிரி நகைகளைத்தான்  போட்டுக்கிட்டு இருக்காங்க. நம்ம இந்தியர்களும், சீனர்களும்தான் நகைன்னா அது தங்கம் மட்டும்தான்னு இருக்கோம். இப்ப சிலவருஷங்களா.............. இந்தியாவில் தங்கம் போலவே மின்னும் போலி நகைகள்  நடமாட்டம் அதிகமாகிக்கிட்டே இருக்கு!  ச்சும்மாச் சொல்லக்கூடாது.....   உண்மையில் ஒரிஜினல் தங்க நகைகளில் கூட  இவ்வளவு அழகழகான டிஸைன்கள் இல்லையாக்கும் ! 
மார்கெட்டில் இருக்கும் அறுநூறு  கடைகளில் முன்னூறு கடைகள் நகைநட்டுக்குத்தான்..... நமக்கு ஒன்னும்  வேணாம்தான்.  ஆனால் மகளுக்காக சில 'நகைகள்'  பார்த்துட்டு, சிலபல க்ளிக்ஸ் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பிட்டு, பதில் வரும்வரை ச்சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ரெண்டு மணிநேர வித்தியாசம்தான். ஒன்னைமட்டும் தெரிவு செஞ்சுட்டு, மற்றவைகளை வேணாமுன்னுட்டாள். மார்கெட் ஏரியாவில் ஃப்ரீ வை ஃபை கிடைச்சது நல்லதாப் போச்சு !
என் கல்லாசைக்குத் தீனி போட்டக் கடைகள் அருமை.  மனசைக் கல்லாக்கிக்கிட்டேன், விலையைப் பார்த்து !  நம்மாண்டையே கல்கலெக்‌ஷன்ஸ் ஓரளவு இருக்கு.  ஒரு சமயம்  நம்ம  வீட்டுக்கொலுவில்  ஒரு படி வரிசை,  கற்களே !

இந்த மார்கெட்டுக்கு வயசு 148 ! ஆரம்பத்துலே ஆடு,மாடு, குதிரை,கோழி, பன்றின்னு மிருகங்களும் அவற்றிற்கான தீவனங்களும்னு ஆரம்பிச்சது,  இப்போ இவற்றைத்தவிர மற்றவைகளுக்கானதாகிப் போயிருக்கு !
இப்போ ஹொட்டேலுக்குத் திரும்ப டாக்ஸி வேணுமேன்னு பார்த்தப்ப, பரிச்சயமானதுபோல் கண்ணில்பட்டது தெருமுனைக் கட்டடம். நேத்து ட்ராமில் போகும்போது பார்த்த நினைவு.  மனம் சொன்னபடி அதன்வழியே நடந்தால் கொஞ்ச தூரத்தில் 'நம்ம' எலிஸபெத் தெரு. இனி என்ன ப்ராப்லம் ? 

அடுத்து லஞ்சுக்கு அதே ச்சில்லீஸ் இண்டியா ! ஃபலூடா அருமை. அறைக்கு வந்து ஒரு குட்டித்தூக்கமும் ஆச்சு. சாயங்காலம்...... ஹொட்டேல் டைனிங் ஏரியா எப்படி இருக்குன்னு எட்டிப்பார்த்தால் 'ஈ காக்கா' இல்லை..... ப்ரேக்ஃபாஸ்ட்க்கு மட்டுமான ஏற்பாடு போலத்தான் இருக்கு.  இங்கேயே ராச்சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிக்கலாமுன்னு நினைச்சதை மாத்திக்கணும்........ பார்க்கலாம்....
நம்ம ஹொட்டேலே சைனா டவுன்லேதானே இருக்கு..... கொஞ்சம் அந்தாண்டை சிங்கத்வார் வரை போய் வரலாமுன்னு போனோம். தெருவின் ரெண்டு பக்கங்களிலும் சீனக்கடைகளும், ரெஸ்ட்டாரண்டுகளும், பேக்கரிகளுமாத்தான் இருக்கு. குறுக்கே போகும் ரஸ்ஸல் தெருமுனையில் ஒரு சின்னக்கூட்டம்.   இந்தாண்டை சனம் அந்தண்டை போக, பச்சைமனுஷனுக்குக் காத்திருக்கு. நாமும்தான்.  என்ன கூட்டமுன்னு பார்த்தால் தெருச்சண்டை ! ஒருத்தன் , ஒரு பெண்ணை பளார் பளார்னு முகத்தில் அறைஞ்சுக்கிட்டு இருக்கான்.  சனம் ஓடிப்போய்த் தடுக்காம... வேடிக்கை பார்க்குது.  நம்மவர் என் கையைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு இருக்கார். (சண்டையை நிறுத்த ஓடுவாளோ என்ற பயம் ? ) 
அந்தப்பெண்மணியும், அடிச்ச ஆளை மூர்க்கமாய் திருப்பியடிக்குது....பக்கத்து பில்டிங் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி சண்டையை விலக்கப்போய்,  அந்தப்பெண்மணியை இந்தாண்டை இழுக்க,  அடிச்சவனும் பெண்ணைத்தாக்க, எகிறிக்குதிச்ச பெண்ணின்  மேலாடை எல்லாம் கிழிபட்டுத் தாறுமாறாய் கிடக்க....  ஐயோன்னு இருக்கு.....  சினிமாப்போலிஸ் போல....... போலிஸ்காரர் ஒருத்தர் இப்போ ஓடிவர.... அந்த மொத்தக்கூட்டமும் அப்படியே நகர்ந்து அந்தாண்டை போய்க்கிட்டே இருக்காங்க. குடும்பச் சண்டை மாதிரித் தெரியலை......

சைனா டவுன் இருக்கட்டுமுன்னு நாங்க போன வழியிலேயேப் பேசாமத் திரும்பி வந்து நம்ம ஹொட்டேலுக்கு அடுத்த கடைக்குள் நுழைஞ்சுட்டோம். சீனநகைக்கடையில் தோசைக்கல்லு போல்  பெரிய சைஸ் நகைகள் !  ஷோகேஸில் வச்சுக்கும் அலங்காரப்பொருட்கள் எல்லாமும் கூட தங்கத்தில்!!!!  விலையோ   லக்ஷக் கணக்கில் !        க்க்கும்........... ரொம்ப மிதப்புதான்...............
கிறிஸ்மஸ் இன்னும் நாப்பத்தியஞ்சு நாளில்  வருதாமே................ டேவிட் ஜோன்ஸ்.  ஆஸியில் இருக்கும் பெரிய செயின்ஸ்டோர்ஸில்  ஒன்னு !  இந்தக் கடை நம்மூரில் இல்லை. கடைக்குளேயே நடந்து அடுத்த தெருவுக்குப் போயாச்சு.  
 
இது ட்ராம் போகும் தெரு. அங்கங்கே உக்கார்ந்துக்க இருக்கைகள் வேற !  யாருமே உக்காரலை. இடம் பாழாப்போகுதேன்னு  இருக்கு ! விடலாமோ ? இருட்டிப்போனதால் அந்த ஏரியாவே பளிச் ! 

எதிர்வாடையில் இருக்கும் மக்கள் தலையை உயர்த்தி நம்மப்பக்கம் பார்க்கறாங்க......  நாமும் திரும்பிப்பார்த்தால்   ,  பின்னால் இருக்கும் கடையின் சுவரில் கார்ட்டூன் படம்போல ஒன்னு   (Chrismas Window show, Lego theme @ Myers  shop  wall )போய்க்கிட்டு இருக்கு !  நாமும் தெருவைக்கடந்து அந்தாண்டைபோய் படம் பார்த்தோம் ! ரெண்டு வீடியோ க்ளிப்ஸும் , உங்களுக்காக!

https://www.facebook.com/share/v/1ALrrxixw3/

https://www.facebook.com/share/v/1D6b9fTTGm/

ட்ராம் வரப்போக இருப்பதைக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு அறைக்கு வந்தாச்!

https://www.facebook.com/share/r/1AhPhMeCVd/

https://www.facebook.com/share/r/17wjF1y6Ui/

மேலே : சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ்.

பகல் சாப்பாடு,  லேட்டாகிப் போனதால் அவ்வளவாகப் பசி இல்லைன்னு அறைக்குப்போயிட்டோம்.  அப்போ டின்னர்?  நேத்து வாங்கிவச்ச மாம்பழம்தான் ! 
தொடரும்............. :-)

























































Friday, February 13, 2026

வர வர செயின் ஸ்டோர்ஸ் போலதான்.................

பொதுவாகப் பயணத்தில் நான் ரொம்ப ஆர்வமாப் போறது கோவில்களுக்குத்தான்! எத்தனை கடவுளர்கள் .... எத்தனை வகை கோவில்கள்.... எத்தனையெத்தனை சிற்பங்கள்..... எத்தனை சிறப்புகள்..... எத்தனை  டிஸைன்கள்....... சொல்லி மாளுமா ???  ரொம்பப் பழைய கோவில்கள்.... எனக்கு வெல்லம் தின்னதுபோல....    

எங்க குடும்பத்தில் ஏற்கெனவே சனிக்கிழமைன்னா ரொம்ப விசேஷமா பூஜை செய்வாங்க என் அம்மம்மா. அந்தப் பழக்கத்தில் சனிக்கிழமை ஏதாவது கோவில்கள் கண்ணில்பட்டால் உள்ளே போய் ஸேவிச்சுக்குவேன்.  நாங்க ஃபிஜியில் இருந்தப்பதான் மகள் பிறந்தாள். ஊரில் மாமா ஜாதகம் கணிச்சு அனுப்பினபோது..... குழந்தை பிறந்தது சனிதசையில். அதனால் சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் வாசிக்கும்படியும், முடிந்தவரை கோவிலுக்குப் போய் வரும்படியும் கடுதாசி அனுப்பினார். கூடவே கையகல ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகப்புத்தகமும். அப்போ முதல் எதுக்கெடுத்தாலும் அந்த ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் புத்தகம்தான்.  ஒரு சென்னைப்பயணத்தில் கிரியில் பெரிய எழுத்துப் புத்தகம் கிடைச்சவுடன் ஒரு  பத்தண்ணம் வாங்கினேன்!  நம்மைப்போலத்தானே இங்கே நம் தோழிகளுக்கும் வயசாகிக்கிட்டே போகுதே. படிக்க ஈஸியா இருக்கட்டுமே என்ற எண்ணம்தான் !
நம்மூர்  பழைய கோவில், நிலநடுக்கத்திற்கு முன்.............

நம்ம கோவில்களே இல்லாத ஊருக்கு ( 1988 ஃபெப்ரவரி) வந்த பிறகு ஏக்கம் கூடுனது உண்மை. கொஞ்சம் ஊர்விவரம் தெரிஞ்சப்ப, ஒரு இஸ்கான் கோவில் போனவருஷம் ஆரம்பிச்சு நடத்தறாங்கன்னு  கேள்விப்பட்டுத் தேடிக்கிட்டுப் போனோம், எப்படியும் கோபுரம் பார்வையில் படாதா என்ன ?  அலைஞ்சு திரிஞ்சு போன இடம் ஒரு மாடி வீடு. தயக்கத்தோடு உள்ளே போனால் ஒரு ஹாலின் மூலையில், ஸ்ரீலஸ்ரீ ப்ரபுபாதா சிலையும், அவருக்கு நேரெதிரா ஒரேமாதிரி ரெண்டு சிலைகளுடன் ஒரு சந்நிதியும்.  யார்யாருன்னு தெரியலை.... இதுதான் எங்க வாழ்க்கையில் முதல்முதலில் பார்த்த ஹரேக்ருஷ்ணா கோவில் ! அப்புறம் நானே அந்த இருவர் ஸ்ரீ க்ருஷ்ணனும் பலராமரும்னு நினைச்சுக்கிட்டேன்.   கோவிலில் வெள்ளையர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.  இந்தியர்கள்னு பார்த்தால் நாங்க ரெண்டுபேர்.  ஃபிஜி இந்தியப் பெண்மணி ஒருவர்.  இவர் சிலநாட்களில் பூஜாரியாக  ஆரத்தியெல்லாம் எடுப்பார்.  கணவர் , இந்த இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்.  அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது, அந்த இருவர் சிலைகளும் ஸ்ரீ நித்யானந்தாவும், ஸ்ரீ சைதன்யாவுமாம்!!! 

அப்புறம் சில வருஷங்களில்  உள்ளுர் ஜனத்தொகை அதிகரிச்சதும்,  இந்தியர்களும் , மற்ற நாட்டினரும் வந்ததும்'  கோவிலுக்கும் பக்தர்கள் வரத்தொடங்கி இப்ப நல்லாவே நடக்குது. 

இன்றைக்குக் காலையில் கண் விழிக்கும்போதே...... கோவிலுக்குப் போகலாமேன்னு மனசுக்குள் ஒரு உந்துதல்...... புதுசா ஒரு ஸ்வாமிநாராயண் கோவில் கட்டிக்கிட்டு இருக்காங்கன்னும் சேதி சில மாசங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பார்த்திருந்தேன்.  25 ஏக்கர் நிலத்தில் 440 மில்லியன் டாலர் செலவில் கட்டறாங்களாம். இங்கே நம்மூரில்  ஸ்வாமிநாராயண் கோவில் பக்தர்கள் சிலர் நமக்கு நெருங்கிய நண்பர்கள்.  மெல்பர்ன்  பூமி பூஜைக்கும் போய் வந்தவர்கள்!  அங்கே போகலாமான்னு பார்த்தால்.... ரொம்ப தூரம், சுமார் நாற்பது கிமீ போகணும் என்றார் நம்மவர்.

ரொம்ப தூரம் மட்டுமில்லை.... இங்கிருந்து ட்ராமில் போய் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பஸ்ஸில் போகணும். அதன் பின் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு நடந்து போகணும் என்றவுடன் ஜகா வாங்கிட்டேன். ( அந்தக் கோவிலின் திறப்பு விழா  இதோ அடுத்தவாரம் 18 ஃபெப்ரவரி 2026 க்கு !. ஸ்ரீ ஸ்வாமிநாராயண் குருகுலம் என்று பெயராம்! எப்படியும் வீடியோ கிடைக்கும்தான். பார்த்துக்கலாம்!

அவ்வளவு தூரம் எல்லாம் நடக்கமுடியாது.  ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போகலாம். சிட்டிக்குள்ளேதானே இருக்குன்னு கிளம்பியாச்சு.

திரும்பப் பழைய கதைக்குள் போறேன். மன்னிச்சூ....  


2011 ஆம் வருஷம் இதே ஃபெப்ரவரியில்  நம்மூரில் நிலநடுக்கம் வந்து இஸ்கான் கோவில் இருந்த மாடிவீடு, தரைமட்டமாகிருச்சு.  ஸ்ரீலஸ்ரீ ப்ரபுபாதாவின் சிலையைத் தவிர்த்து மற்ற சிலைகள் எல்லாமே  உடைஞ்சுபோயிருக்கு ! 

 இதுக்கு ரெண்டு வருஷம் முந்திதான் (2009)  நம்மவரின் வேலை விஷயமா, இந்தியாவுக்கு போய் , அந்த வேலை முடியும்வரை அங்கேயே தங்கியும் இருந்தோம். நிலநடுக்கத்தில் நகரமையத்தில்  பல வீடுகளும் மற்ற கட்டடங்களும் தரைமட்டம் ஆகி ஊரில் பாதி அழிஞ்சு போயிருந்தது. முழுவிவரமும் அப்போ எங்களுக்குத் தெரியாது. 

போனவேலை ஒருவழியா முடிஞ்சதும் 2011 ஆகஸ்ட் நியூஸிக்குத் திரும்பினோம். வந்த அன்றைக்கு மாலை, பத்திரமா வந்து சேர்ந்ததுக்கு நன்றி சொல்லலாமுன்னு கோவிலைத் தேடிப்போனால்.... எல்லாம் தரைமட்டம்! அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் புலம்ப வேண்டியதாப் போயிருச்சு. 
அப்புறம் இதே இடத்தில் மீண்டும் கோவில்கட்ட ஏற்பாடுகள் ஆச்சு. முக்கியமா வேண்டியது கா.... சு. ஓரளவு சேர்த்தபின்  !  2015 இல் பூமிபூஜை, 2017 இல் திறப்பு விழா !  அடுத்தமாசம் நம்மூர்ப் புதுக்கோவிலுக்கு ஒன்பது வயசு !பூமிபூஜை சுட்டி கீழே !

https://thulasidhalam.blogspot.com/2015/04/blog-post.html

 இருந்த ஒரே கோவிலும் போச்சேன்னு இருந்தால், 'இல்லை நான்,  இருக்கேன்'றதுபோல் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் ஆரம்பிக்க இந்தியாவில் இருந்து வந்த மெயின் கோவில் சந்யாசிகள், நாம் திரும்பி வந்த அதே விமானத்தில் வந்திறங்யிருக்காங்க.  குஜராத்தி கம்யூனிட்டியின் ஏற்பாடு. மறுநாள் விழாவில் கலந்து கொண்டோம். அன்றுமுதல் ஆறு வருசங்கள் வரை நமக்கு சனிக்கிழமை கோவில் இதுதான்.  இப்பவும் அங்கே போறோம்தான். ஆனால் சனிக்கிழமைகளில் அவ்வளவாக இல்லை. 
மேலே படம்:  நம்முர் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்

இப்பெல்லாம் எல்லா முக்கிய நகரங்களிலும் இஸ்கான் கோவிலும், ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவிலும் இருக்கே ! நாங்களும் பயணம் போகும் ஊர்களில் இந்தக் கோவில்கள் இருந்தால் தவறவிடுவதில்லை. எல்லாம் செயின் ஸ்டோர்ஸ் போலதான் ஒரே மாதிரி ஸ்வாமி சிலைகளும்,பூஜை சம்ப்ரதாயங்களுமாதான் அமைஞ்சுருக்கு.  கட்டடங்கள் மட்டுமே பொருளாதார நிலை அனுசரிச்சு சின்னதாகவோ, ப்ரமாண்டமாகவோதான் !

நியூஜெர்ஸி கோவிலுக்கு நம்ம நெருங்கிய தோழி மருத்துவர் & எழுத்தாளர் பத்மா அர்விந்த் நம்ம அமெரிகா பயணத்தில் கூட்டிப்போனாங்க. அதுவுமே ரொம்பத்தொலைவில்தான் இருந்தது!  பெரிய இடம் வேணுமுன்னால்.... ஊரைவிட்டுத்தள்ளிதான் கட்டவேணும், இல்லையா ?

கீழே ரிஸப்ஷனில் சொல்லி, டாக்ஸி வந்தது.  ஒரு இருபத்தியஞ்சு நிமிட்டில் கோவில் வாசலில் போய் இறங்கியாச்சு.  திரும்பிப்போக இதே வண்டியை ஏற்பாடு செஞ்சுக்கலாமான்னால்... 'நமக்குக் கோவிலின் உள்ளே எவ்வளவு நேரம் ஆகுமோ, தெரியலையே !  நாம் சொல்லும் நேரத்தில் வேற யாருக்காவது வண்டி , சவாரிக்குப் போயிருந்தாலோ ?  சில குழப்பங்களுக்குப் பிறகு, பார்த்துக்கலாம்.  சாமி ஏதாவது வழி காட்டமாட்டாரா என்ன ?'
கோவில்னு சொல்லும்படி கோபுரமெல்லாம் இல்லை. இதுவும்  மாடி வீடுபோலத்தான் இருக்கு. ஆனால் உச்சியில் சுதர்ஸனச்  சக்கரம் இருக்கே !   தெருவையொட்டி அழகான தோட்டம்.அதில் கம்பீரமாக நிற்கும் ஈச்சமரம் ! ( Canary Island Date Palm tree)
நடுவிலே வாசல் வைக்காமல் ஒரு ஓரமா கேட். கேட்டருகில்  சுவரில் பதிச்ச கருங்கல் பலகையில் ஸ்ரீ ராதா பல்லபா கோவில் னு இருக்கு.  இந்த இயக்கத்தை ஆரம்பிச்ச ஒரிஜினல் மக்கள்  பெங்காலிகள் இல்லையோ ! அவுங்களுக்கு 'வ' வர்றதில்லை! 

ஒரு அஞ்சு படிகள் ஏறி நேராப்போனால்,  இடதுபக்கம் காலணிகளுக்கான இடம். கடந்து போனால் ஒரு வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சால்.......... ஹா............... பெரிய ஹால் ! இடதுபக்கம் ஸ்ரீலஸ்ரீ ப்ரபுபாதாவின் சிலை.

அவருக்கு நேரெதிராக  ஒரு வரிசையில் மூணு தனித்தனிச் சந்நிதிகள் ! நடுவில் நம்ம க்ருஷ்ணனும் ராதையும்,  கிருஷ்ணனுக்கு இடதுபக்கம் ஸ்ரீநித்யானந்தாவும் ஸ்ரீ சைதன்யாவும், வலப்பக்கம் ஸ்ரீ பலராம்,  ஸ்ரீ சுபத்ரா, ஸ்ரீ ஜெகந்நாத்ன்னு புரி வாசிகள் !!!!   
ப்ரமிச்சு நிக்கும்போது,   பண்டிட்களில் ஒருவர்,  பூமாலையைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.  நான் கையில் வாங்கினதும், கழுத்துலே போட்டுக்கச் சொன்னார். திகைப்புடன் நிக்கறேன். அங்கிருந்த இன்னொரு பண்டிட்டும் வந்து கழுத்துலே போட்டுக்கச் சொல்லி செய்கையில் காட்டறார் !   ஆச்சு ! 

நான் ஒரு நிமிட்டுக்குப்பின் நம்மவர் கழுத்துலே போட்டுவிட்டேன்.  மாலை சூடினார்...மாலை சூடினார்னு பாடியிருக்கணும் இல்லை ?
காலைநேரத்துப் பூஜைநேரம் முடிஞ்சுருக்கு ! குருபூஜையும் ஆச்சு.  ரொம்ப அழகான மண்டபம்னு சொல்லலாம்.  விதானத்தில்  விளக்கலங்காரம் அட்டகாசம் ! சிம்பிள் & ஸ்வீட் ! 

அங்கே ஒரு சில பக்தர்கள் ஒரு ஓரமா உக்கார்ந்திருந்தாங்க.  நம்மவரும், எனக்கொரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டுட்டு, ஒரு ஓரமா உக்கார்ந்தார்.  கோவிலாட்கள்  குருவின் சந்நிதியைத் துடைச்சுச் சுத்தம் செய்யறாங்க. 
இன்னொரு பக்தை, நம்மிடம் எந்த ஊர்னு விசாரிச்சுட்டு, மதியம் உச்சிகாலப் பூஜை ஆனதும் கோவில் ப்ரஸாதம், கட்டாயம் சாப்பிட்டுவிட்டுதான் போகணுமுன்னு கண்டிப்பாச் சொன்னாங்க. 
ரெண்டு பக்கச் சுவர்களில்  சில  அழகான படங்களும் மஹாமந்த்ரமும் ! 

பக்தர்கள் பலர் வந்து ஸ்வாமி தரிசனம்  செஞ்சுட்டுப் போறாங்க.  ஒரு சிலர் த்யானத்தில் ! நானும் ஒரு பத்து நிமிட் போல  த்யானம் செய்யறேன்.... மனசு  அடங்கலை... இந்த அழகெல்லாம் ரசிச்சுப் பார்த்து அனுபவின்னு சொல்லுது... மனம் சொன்னதைக் கேட்டேன். 
க்ளிக்ஸும், ஒரு நிமிட் வீடியோ க்ளிப்பும் அதுபாட்டுக்கு அது !

https://www.facebook.com/share/r/1KQLwZxY53/

கோவிலின் வெளி அழகைப் பார்க்கலாம் என்று ஹாலைவிட்டு வெளியே போனோம். கோவில் கருவறையின் வெளிச்சுவரில் வெண்பளிங்குக் கல்வெட்டு ! ...... கோவிலுக்கு வயசு ஐம்பது என்று தெரிஞ்சது ! 

சுவரின் மேற்புறத்தில் கண்ணனின் லீலைகள் அழகான ஓவியங்களாக ! 


அப்போது அங்கே வந்தவரைப் பார்த்து ஒரு திடுக் ! நம்மூர் ஹரேக்ருஷ்ணாவில் பல ஆண்டுகளாகத்  தங்கியிருந்த  பக்தர்!    சமீபத்தில் சுமார் ஒரு மாதமாக இவரை நம் கோவிலில் பார்க்கவில்லையே என்று விசாரித்தால்..... மெல்பர்ன் கோவிலுக்கு வந்துட்டாராம். இனி இங்கேதான் இருக்கப்போவதாக  முடிவாம் ! 


பொதுவா இஸ்க்கான் பக்தர்கள், வெவ்வேறு ஊர்களில் இருக்கும்  ஹரேக்ருஷ்ணாக் கோவில்களுக்குப் போய் வந்துகொண்டே இருப்பது வழக்கம்தான். நிறைய ஊர்கள்/ நாடுகளில் இருந்து 'மாயாப்பூர்'  (இந்தியாவில் இயக்கத்தின்  தலைமையகம்) போய்  மாசக்கணக்காகத் தங்குபவர்களும் இருக்கிறார்கள்தான் ! பக்தர்களுக்கும் பக்தைகளுக்கும் தனித்தனி இருப்பிடங்கள் (ஹாஸ்டலைப்போல்) உண்டு. கோவில் வேலைகளை இவர்களே பார்த்துக்கொள்கின்றனர். கோவில்களில் வேலைக்குப் பஞ்சமா என்ன ? 
தோட்டம் அருமை !  ஒரு சின்ன  க்ளாஸ் ஹௌஸில் 'துளசி வனம்'  தளதளன்னு பசுமையா இருக்கு !!!  23 செ......டிகிரியில் ஹீட்டர்களை செட் செஞ்சு வச்சுருக்காங்க. 




தோட்டத்தில் கொஞ்சநேரம் யானைகளுடன்  உக்கார்ந்திருதோம். உச்சிகாலப்பூஜைக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடக்குது. நம்மவர், கிளம்பலாமான்னார்.  கிளம்பிட்டோம்.  வாசலில் இருக்கும் பனைமரம் ரொம்பவே அழகு ! 

இப்போ திரும்ப அறைக்குப்போவதெப்படி என்ற விசாரம். டாக்ஸியைக் கூப்பிடலாமுன்னா...... நம்மவர் செல்ஃபோன் வேலை நிறுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கு. ரோமிங் வாங்கியிருந்தும் ப்ரயோஜனம் இல்லை...ப்ச்.....

கோவிலுக்குள் போய் அங்கிருந்த பக்தர் ஒருவரிடம், டாக்ஸி கூப்பிட உதவி வேணும் என்று கேட்டதும்,  அவர் தன்னுடைய செல்ஃபோன் மூலம் கூப்பிட்டு, டாக்ஸி வந்ததும், நம்மை ஏத்திவிட்டுட்டுதான் போனார். எல்லாம் அஞ்சே நிமிட் மாயம் !

இந்தப் பயணத்தில் ரொம்பக் கஷ்டம் இந்த செல்தொடர்புதான்......  ஃபோன் இல்லைன்னாலும் கஷ்டம்... இருந்தாலும் கஷ்டம்..... என்ன செய்யலாம் ? இதுவும் ஒரு அனுபவம்னு விட்டுத் தொலைக்கலாமா ?

தொடரும்........ :-)