Friday, July 04, 2025

திரு இந்தளூர் பரிமளரங்கன்...... (2025 இந்தியப்பயணம் பகுதி 41 )

மருவினியமைந்தன் என்னும் பரிமளரங்கநாதர் கோவில் வாசலுக்கு வந்துட்டோம்.  பளிச்ன்னு மின்னும் அஞ்சுநிலை ராஜகோபுரம்.  சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துருக்கலாம்.  கோபுரத்தின் அழகை மறைச்சுருந்த தகரக் கூரையைக் காணோம்.  புதுக்கருக்கில் தேர் ஒன்னு வாசலில் ! 

வாங்க, கோவிலுக்குள்ளே போகலாம்........
தகதகன்னு மின்னும் கொடிமரம், பலிபீடம், பெரிய திருவடி ஸேவிச்சு நேரா விறுவிறுன்னு (வழக்கம்போல) உள்ளே போறார் நம்மவர்.  ஏற்கெனவே சிலமுறை தரிசித்த கோவில் என்பதால்.... நானும் கண்களை அலையவிடாமல் பின்னால் (நொண்டிக்காலோடு )போனேன் !


வீர சயனத்தில் பெருமாள், பாம்புப்படுக்கையில் !  சந்திரனும் சூரியனும், கங்கையும் காவிரியுமா...... ஹைய்யோ  !!!!
கீழே : கண்ணாடியில் மூலவர்
நூத்தியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்னு !  திருமங்கையாழ்வார்  அவர் வழக்கப்படி பத்துப்பாட்டு (பாசுரங்கள் ) பாடி இருக்கார். எல்லாம் நிந்தாஸ்துதி !
பெருமாளை தரிசிக்க ஓடோடி வர்றார். கோவில் நடை சாத்தியாச்சு. அவ்ளோதான்..... வந்ததே கோபம்.....

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

நீர் அழகன் என்று  ஊர் சொல்லுதேன்னு   பார்க்க வந்தால்...  ரொம்பத்தான் உமக்கு . அவ்ளோ அழகன்னா....  எங்களுக்குக் காமிக்காத அழகை   நீரே பார்த்துக்கலாம்.   அதுவுமில்லாம ஒவ்வொரு யுகத்திலும் உமக்கு வெவ்வேற நிறமாமே!  இந்தயுகத்தில் எந்த நிறமுன்னு  காமிக்க மாட்டீரோ!
 
முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால் 
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே!

அவர் கோச்சுக்கிட்டதும் (பத்துப் பாடல் பாடுனப்புறம்தான்)  தரிசனம் கிடைச்சது.  மூடுன சந்நிதிக் கதவு தானே திறந்ததாம்.

ஆஹா .....
நல்லா பார்த்துக்கும் ஓய். நான் பச்சை நிறமுன்னு  காமிச்சுருக்கார், கடைசியில்.
பஞ்ச ரங்க க்ஷேத்ரத்தில் இந்தளூர்,  பரிமளரங்கம்!  
ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)

அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி

மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம்

சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம்

பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்

தாயார்... பரிமளரங்கநாயகி !  
 
வழக்கம்போல் நம்ம ஆண்டாளம்மா தனியாகத் தனிச்சந்நிதியில்..............  (மார்கழி வரணும், தலையில் துக்கிவச்சு ஆட!  ப்ச்)
 
"இந்தக் கோவிலுக்கும் நம்ம ஏகாதசி விரதத்திற்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் இருக்கு தெரியுமோ ? "

"அப்படியா..... சொல்லு சொல்லு..."

"ஏற்கெனவே பதிவுகளில் எழுதி இருந்தேனே.... வாசிச்சு இருப்பீங்கதானே ?"

"ஹிஹி...... இன்னொருக்காதான் சொல்லேன்......  நிறைய கோவில்கதைகளைத்தான் எழுதியிருக்கே.... இப்ப திடீர்னு கேட்டா எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கறது ?  "

"இப்பச் சொன்னாலும் நாளைக்குக் கேட்டால் மறந்துதான் போயிருக்கும்.... போகட்டும்.... இதோ கதை உங்களுக்காக....." 
அம்பரீக்ஷன் என்னும்  அரசர் ஏகாதசி விரதங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வர்றார். அவருடைய  நியமங்களைப்பார்த்து தேவர்களுக்கும் பயம், எல்லாம் நூறு ஏகாதசி விரதங்களை நல்லபடியாச் செஞ்சு எங்கே இந்த மனுஷ்யர்  தேவர்கள் வரிசையில் சேர்ந்துருவாரோன்னு.... இந்த சமயம் அவர் விரதமிருக்கும் நூறாவது ஏகாதசித் திதியும் வருது.  பயந்து போன தேவர்கள் துர்வாசமுனிவரிடம் போய்  விரதபங்கம் செய்யும்படி வேண்டிக்கிறாங்க. அவரும் இதுக்கு சம்மதிச்சு அம்பரீக்ஷனின் அரண்மனைக்குப் போறார்.

முதல்நாள் முழுப்பட்டினியா ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி திதி முடியுமுன்   உணவு உண்டு  விரதம் முடிக்கணும் என்பதே நியதி. அரசர் உணவு உண்ண தயாராகும் சமயம்  துர்வாசமுனிவர் அங்கே போய்ச் சேர்ந்தார். (அதுதான் ப்ளானே!) 

 முனிவரை வரவேற்று உபசரித்த அரசர் கூடவே சாப்பிடணுமுன்னு அழைக்கிறார். 'சரி, நான் போய் குளிச்சுட்டு வரேன்'னு   நதிக்குப்போனவர் சட்னு திரும்பாம  நேரங்கடத்திக்கிட்டே இருக்கார்.

இங்கேயோ மன்னருக்கு துவாதசி திதி எங்கே முடிஞ்சுருமோன்னு கவலையா இருக்கு.  அதன்பிறகு சாப்பிட்டால் விரத பலன் கிடைக்காதேன்னு  வருந்துகிறார்.  அப்ப அவரது ஆலோசகர்களான  மந்திரிகள்  சாப்பாடு சாப்பிட லேட்டானால் பரவாயில்லை.  நீங்க  பெருமாள் தீர்த்தம்   உள்ளங்கையால் மூணு  முறை  குடிச்சுட்டால் விரதபலன் கிடைச்சுரும்.  முனிவர் வந்தபின் அவரோடு சேர்ந்தே உணவருந்தலாமுன்னு சொன்னாங்க.  நல்ல ஐடியா. விரதபங்கமில்லைன்னு அப்படியே செஞ்சுட்டார். துவாதசி திதியும் முடிஞ்சுருது.


ஞான திருஷ்டியால்  இதைத் தெரிஞ்சுக்கிட்ட முனிவர், 'ஆஹா....என்னை சாப்பிடக் கூப்புட்டுட்டு  எப்படி மரியாதை இல்லாமல் நீ  விரதம் முடிக்கப்போச்சு'ன்னு  கோபத்தோடு சாபமிட  வேகவேகமா அரண்மனைக்கு வந்து சேர்ந்து, பிடி சாபமுன்னு  பனிஷ்மெண்டைச் சொல்றதுக்குள் அரசர்  பரிமளரங்கனை  சரணடைஞ்சு காப்பாத்தணுமுன்னு வேண்டிக்கறார். 

 பெருமாளும் முனிவரின் கர்வத்தையும் கோபத்தையும் அடக்கி, அரசருக்கு அருள் புரிந்து, 'பக்தா என்ன வேண்டுமோ கேள் ' என்று சொல்ல.... அம்பரீக்ஷனும்  தனக்காக ஒன்னுமே கேக்காமல், இங்கேயே இருந்து  மக்கள் அனைவருக்கும்  அருள்புரிய வேணுமுன்னு கேட்க, அப்படியே ஆச்சு. பொதுவா ரிஷி முனிவர்கள்தான் மக்கள் நலனுக்காக இப்படி வரம் கேட்பாங்க.  ஆனால்... இங்கே  கோபக்கார மகரிஷியால்.....   ரோல் மாறிப்போச்சு.  எப்படியோ நல்ல அரசர்களும், மக்கள் நலன் விரும்பிகளுமா ஒரு காலத்தில்  அரசாங்கத்தில்  இருந்துருக்காங்க, இல்லே !!!!

நாம் போன நேரமோ என்னவோ.... கோவிலில் அவ்வளவாக் கூட்டமே இல்லை. இந்தக் கோவிலில் இன்னொரு முக்கிய விசேஷம்.... மண்டபத்தூண்களில் உள்ள சிற்பங்கள் !  எல்லாம் நிகுநிகுன்னு பாலீஷ் செஞ்சு வச்சதுபோல் இருக்கு !  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கறதே இல்லை.....


சில வருஷங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக் ஆல்பம் ஒன்னு போட்டு வச்சேன்.  விருப்பம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்களேன். 

https://www.facebook.com/media/set/?set=a.10214281094363816&type=1&l=92d5868a65

ஒரு பதிமூணு வருஷங்களுக்கு முன் முதல்முறையாக இங்கே வந்துருந்தோம். திவ்யதேசக் கோவில்களைத் தேடித் தேடி தரிசிக்க ஆரம்பிச்ச காலக்கட்டம் அது. அப்போ எழுதுன  பதிவின் சுட்டி கீழே !  விருப்பம் இருப்பின் வாசிக்கலாம்.  அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு முறை வந்தாச்சு. இப்போ இந்தப் பதிவு நாலாவது. 

பேசாம இவனுக்கே ஒரு நூத்தியெட்டு பதிவு  போடலாம் போல !

https://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post_6.html

https://thulasidhalam.blogspot.com/2016/08/68.html

https://thulasidhalam.blogspot.com/2019/03/76.html

கிளம்பிப்போகும்போது திருமாமணி மண்டபம் தாண்டி  கண்ணெதிரே அதே  ஆஞ்சு கோவில் !  எப்பவும்  போற போக்கில் ஒரு கும்பிடுதான். இந்தமுறை கோவில் கதவு திறந்துருக்கு, வாசலில் கூட்டமும் இருக்குன்னு பார்த்ததும்  நாமும் வண்டியை நிறுத்தி இறங்கிப்போனோம். 



முந்தியெல்லாம் மாடியில் கண்ணாடி வழியாகத் தெரியும் சிலைகளைப் பார்த்து ராமர் கோவிலுன்னு நினைச்சுருந்தேன். போனமுறை வந்தபோதுதான் ஆஞ்சுன்னு தெரிஞ்சது. அப்பவும்  கதவு மூடி இருக்கேன்னு போனவள்தான்.

அழகான ஆஞ்சு !  தீபாராதனை நடந்துக்கிட்டு இருக்கு.  நாமும் வணங்கிட்டு அடுத்த பத்தாவது நிமிட்டில்  மாயூரம் புகழ் மயூரநாதர் கோவில் வாசலுக்கு  வந்துட்டோம்.

தொடரும்......... :-)    

PINகுறிப்பு :  நீங்கள் இதுவரை சேவிக்காத பரிமளரங்கன் தரிசனத்துக்குப் போகணுமுன்னா.....    திரு இந்தளூர் என்று கேட்டால் சனம் தெரியாதுன்னு சொல்லிரும்.  இந்து என்னும் சந்திரன் பூஜித்தவர் என்பதெல்லாம் மறந்துட்டாங்க போல. திருவிழந்தூர்னு  ஊர்ப்பெயரையே மாத்திவச்சுருக்கு  காலம்.  திரு என்னும் மஹாலக்ஷ்மியை மார்பில் அணிந்தவர் இருக்கும் ஊரை, திரு இழந்தவர்னு ஆக்கி வச்சவங்களை என்ன செய்யலாம்? 




3 comments:

said...

நீங்க போன நேரம்னு இல்லை.  குடந்தையில் பல சிறப்பு மிக்க கோவில்களில் கூட்டமே இருப்பதில்லை.   அளவுக்கு மீறி கோவில்கள் இருப்பதால் அலுத்து விட்டதோ என்னமோ!

நான் இந்தக் கோவில் சென்ற நினைவில்லை.

said...

அழகான ஆலயம். ஆலய அனுபவங்கள் நன்று. தொடரை தொடர்ந்து வாசிக்க இயலாத சூழல். பதிவுகளை நேரம் எடுத்து படிக்க வேண்டும். வருவேன் மெதுவாக!

said...

திரு இந்தளூர் பெயரையே திருவிழந்தூர்னு மாற்றி விட்டாங்களே. :( தமிழ் தெரியாத தமிழர்கள்.

தேர் அழகாக இருக்கிறது.