Wednesday, July 12, 2023

பொங்கிட்டோம்..... ரொம்பவே பொங்கியாச் !

இந்த மார்கழிக்குத்தான் முதல்முறையா   முடிஞ்சவரை அந்தந்த நாள் திருப்பாவைக்கு ஏத்தாப்லெ  மூலவருக்கு முன்னே சின்ன அலங்காரம் பண்ணமுடிவு செஞ்சேன். ஆனால் நான் மட்டும் முடிவு பண்ணி என்ன செய்ய ? 'அவள் அருள்' வேணாமோ ?  சிலநாட்கள்தான் பொருத்தமா அமைஞ்சது. போகட்டும்.....  நைவேத்யம் மட்டும் விடாமல் ஆச்சு. ஆனால் மார்கழி முதல் நாளே   நம்ம ஆண்டாள்  ரெடி !
நாளுங்கிழமையும் நமக்காகக் காத்திருக்குமா என்ன ?  கூடாரவல்லிக்கு ,  மூட நெய் பெய்து முழங்கை வழிவார  இடும்பி ஸ்டைலில் அக்காரவடிசில் கொஞ்சம்   செய்தாச்சு. குளிர்காரணம்,  அடுப்பில் இருந்து இறக்கும்போதே  நெய் உறைஞ்சு போயிருதே......
இந்தவருஷம் ஜனவரி பதினாலுக்கு வர்ற தைப்பொங்கல் விழா  பதினைஞ்சுக்குத்தான் வருது.  போகிபண்டிகைக்குப்  பூஜை அறையிலேயே 'கனகன'ன்னு  போகிக் கொளுத்திட்டேன்:-)  மாம்பழக்கேஸரி செஞ்சு நைவேத்யம் ஆச்சு.  சம்ப்ரதாயமான பண்டிகைச் சமையல் எல்லாம் செய்யறதை விட்டே பல வருஷங்கள் ஆயாச்சு. ப்ச்.... கஷ்டப்பட்டுச் செஞ்சாலும் சாப்பிட ஆள் வேணாமா ? நம்ம ரஜ்ஜுவுக்கும்  இதுலே  சுவாரஸியமே இல்லை. கேட் ஃபுட் போதுமாம் !
நம்மூர் ரேஸ்கோர்ஸ் வளாகத்தில்  நடக்கும் ,வருடாந்திர லில்லி ஷோ இன்றைக்கு (மட்டும்தான்) இருக்கு. அங்கே போய்  முதலில் மூணு செடிகளை வாங்கிவந்து வண்டியில் வச்சுட்டு,  உள்ளே போய் வேடிக்கை பார்த்துட்டு வந்தோம்.  மொட்டுகளோடு இருக்கும் செடிகள்தான் என் சாய்ஸ். அப்பதானே,  நட்டதும் பூக்கும் :-)  அப்புறம் வாங்கலாமுன்னா... நாம் ஆசைப்பட்ட நிறம்தான் முதலில் வித்துப்போகும்.



லில்லிச் செடிகளுக்கு என்னென்னவோ பெயர்கள் கொடுத்துருக்காங்க. காவேரின்னு ஒரு  லேபிள் பார்த்தேன்.  ஆனால் அதுலே மொட்டு ஒன்னும்  விடலை. தண்ணீர் திறக்காம ஏமாத்திட்டாங்களா என்ன ?  



அன்றைக்கு சனிக்கிழமை என்பதால் நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போய் வந்தோம்.  பொதுவா சனிக்கிழமைகளில் கூட்டம் இருக்காது.  வைஷ்ணவோ கேலண்டரில் எதாவது விசேஷமுன்னு போட்டுருந்தால், இஸ்கான் பக்தர்கள் பஜனை செய்வாங்க.  அன்றைக்கு  என்ன விசேஷமுன்னு  தெரியலை.   புது வரவா ஒரு ஆறுவாரக்குழந்தையை முதல்முறையாக் கோவிலுக்குக் கொண்டுவந்துருந்தாங்க ஒரு இளம் தம்பதியர்.  சந்தோஷமா இருந்தது. 


நம்ம வீட்டின் ஃபோயரில்,   பண்டிகை டிஸ்ப்ளே செய்யன்னு ஒரு இடம் வச்சுருந்தேன். அந்த இடத்தை Bபாலிப்புள்ளையார் எடுத்துக்கிட்டார். அதனால் பூஜை அறையிலேயே   இப்ப ஒரு இடம் இதுக்கெல்லாம் நேர்ந்துவிட்டாச்சு.  மறுநாள் பொங்கல் பண்டிகை.  ராத்ரி ஒன்பது  மணிக்குமேல் சின்னதா ஒரு அலங்காரம் செஞ்சேன்.  இதைப்போல நேரங்கெட்ட நேரத்தில் எதாவது சாமியறையில் செஞ்சா, ரொம்பவே சந்தோஷமா வந்து வேடிக்கை பார்க்க ரெடியா இருப்பான் ரஜ்ஜு. 

நம்ம ஜன்னுவுக்கும் புது உடை. இந்த முறை தை மாசத்துக்குத் தை தைன்னு ஆடட்டுமேன்னு பரதநாட்டிய உடுப்பு.   'ஹௌஸ் அரெஸ்ட்'டா லோட்டஸில் இருந்தப்ப, அமெஸானில் மெயில் ஆர்டரில்  வாங்கியது. (நியூஸியில் அமெஸான்,  வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அண்டைநாட்டான அஸ்ட்ராலியாவரை  வந்துருக்கு.  நாம் அங்கே  ஆன்லைனில் வாங்கினால், அந்த அஸ்ட்ராலியன் கம்பெனி, தனிச்சார்ஜ் நம்மகிட்டே வாங்கிக்கிட்டு நியூஸிக்கு அனுப்பும்.  ஏறக்கொறைய  விலை ரெண்டு மடங்கு ஆகிருது என்பதால்  இந்த முறையில் இதுவரை ஒன்னும் வாங்கிக்கலை.)  நான் பார்த்தவரை இந்தியாவில்  விலை குறைவுதான்.  ஜன்னுவின் ட்ரெஸ் வெறும் பத்தே டாலர் !  (இங்கே தக்காளி விலை இப்போ கிலோ பதினைஞ்சு டாலர் ! )
ஹைதராபாத் பயணத்தில் வாங்கிவந்த நகைநட்டுகளைப் போட்டவுடன்  ஜொலிக்கிறாள் நம்மவள் !

பூஜையறை வேலைகளை முடிச்சுட்டு வரவே நடுராத்ரி ஆகிருச்சு.  நம்மவர்தான் 'இன்னும் தூங்கலையா.........  மீதி அலங்காரத்தை  நாளைக்குச் செய்யலாமே'ன்னு  கத்திக்கிட்டே இருந்தார். ஆனால் ரஜ்ஜு கூட சொன்ன பேச்சை கேக்கலை :-)  'நகைப் பெட்டி'யையே சுத்திக்கிட்டுத் திரிஞ்சான். தனக்கு ஒன்னும்  இல்லை என்றதும்  ஐஷூ வைஷூவிடம் போய் படுத்துக்கிட்டான். கள்ளத்தூக்கம்தான் !



இப்ப நமக்குத்தான் கோவில் வந்துருச்சே.... இனி எல்லாப் பண்டிகைகளையும் அதே நாட்களில் அங்கே கொண்டாடணும்தானே ?   அதுவும்  இந்த முறை பண்டிகைநாள் ஞாயிற்றுக்கிழமை வர்றதால் காலை பத்து மணிக்குக் கோவிலில் பொங்கல் வைக்கப்போறோம். வீட்டு வேலைகளை நாளைக்குன்னு ஒத்திப்போட முடியாத நிலமை.    

காலையில் சீக்கிரம் எழுந்து கடமைகளை முடிச்சு, சக்கரைப்பொங்கல் மட்டும் செய்து நம்ம பெருமாளுக்கு அம்ச்சி பண்ணிட்டுப் பத்துமணிக்குக் கோவிலுக்குப் போனோம்.  

https://www.facebook.com/1309695969/videos/482892457341228/

நம்ம நேபாள் பண்டிட் வந்துருந்தார்.  பெரியவளா , லக்ஷணமா விழாவை ஆரம்பிச்சு வச்சேன்.  கோவிலின் கொல்லைப்புறம்  பொங்கல் பானை(! ) வச்சுப் பொங்கல் ஆச்சு. வந்திருந்த அனைவரையும் பங்கெடுக்க வச்சது மனநிறைவா இருந்தது.






பூஜை முடிஞ்சு, அன்னதானம் ஆனதும்  நாங்க கிளம்பி, நம்ம வீட்டாண்டை இருக்கும் புள்ளையார் கோவிலுக்குப் போனோம். ரெண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் விழாக்கள் நடப்பதால் நமக்கு ரெண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியுமா என்ன ?

இந்தக் கோவிலில் புள்ளையார் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்திக்கொடுத்த சந்த்ரு குருக்களின் உறவினர் (நியூஸி பயணமாக   வந்தவர். இவர் அமெரிகாவில் ஒரு கோவிலில் குருக்களாக இருக்கார்) வந்து  பொங்கல் விழாவை நடத்திக் கொடுத்துப் பூஜையும் முடிஞ்சுருந்தது..  அவர்  திரும்ப அன்றைக்கே  கிளம்பறாராம்.  ஃப்ளைட் நாலு மணிக்கு.  நல்லவேளையாக நாங்க ரெண்டுமணிக்கு முன்னால் போய் புள்ளையார் தரிசனம் முடிச்சு,  குருக்களையும் சந்திச்சு நாலு வார்த்தை பேச நேரமும்  இருந்தது. 
இங்கே  வெளியில்  செங்கல் அடுக்கி, அடுப்பு வச்சுப் பக்காவாப்  பொங்கல்  வச்சுருந்தாங்க.  தனியார் கோவில், அதுவும் அவுங்க வீட்டு வளாகத்தில் இருக்கு என்பதால்  ஓப்பன் ஃபயர்  பிரச்சனை இல்லை.  ஒன்னுமே இல்லாம இருந்த ஊரில் இப்போ  நம்ம வகையில் ரெண்டு கோவில்கள், ரெண்டு விழாக்கள்னு எல்லாம் அமர்க்களம் போங்க !!!!  மனநிறைவுக்குச் சொல்லணுமா !!!!

அடுத்தநாள்  மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், கனுப்பிடி வைப்பதுன்ன்னு போச்சு. இந்தக் கனு வைப்பதுதான்.... காணும் பொங்கலா மருவியிருக்குமோ ?

ரஜ்ஜுவின் மாடுகளுடன், நம்ம கிரஹப்ரவேச மாடுகளும் கன்னுகளும் கலந்து கொண்டதால் மந்தை கொஞ்சம் பெருசாத்தான் போச்சு!  மாட்டுக்காரன் இதை கவனிக்காமல் வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருந்தான் :-)




சாயங்காலம்   காணும் பொங்கல் நாளாச்சேன்னு நம்மூர் பீச்சுக்குப்போய், சம்னர் வாழ் வரசித்தி விநாயகரை (நம்ம சொந்தப்பிள்ளையார். ஸ்வயம்பு ) தரிசனம் செஞ்சுக்கிட்டோம். 

Beach Exercise  வரும்  செல்லங்களுக்குக் குடிதண்ணீருக்குத் தட்டு வச்ச புண்ணியவான் நல்லா இருக்கட்டும்!

 இப்படியாக    இந்த வருஷப் பொங்கல் விழா  இனிதே நடந்தது !    

10 comments:

said...

அக்காரவடிசில் மாம்பழக்கேஸரி அருமை
நன்றி

said...

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரும் அக்காரவடிசல், வைத்திருப்பது 'தடா' இல்லையா? நூறுதடாவிற்குப் பதிலாக ஒரு தடாவையாவது பண்ணியிருக்கலாம் ஹா ஹா

said...

ரஜ்ஜுவின் சுவாரஸ்யமும், கூடவே இருக்கும் கடமையான அன்பும் ஆச்சர்யப்படுத்தி நெகிழ்த்தியது. அலங்காரம் செய்து வைத்த பொம்மைகளை சீண்டாமல் சும்மா விட்டு விடுவானா?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தடாவுக்கெல்லாம் 'தடா' போட்டாச்சே ! அரைக் கப் அரிசிக்கே...... சாப்பிட ஆளில்லை.... ப்ச்....

said...

வாங்க ஸ்ரீராம்,

கடமையா ? ஹாஹா.... நோஸி இல்லையோ !

ரஜ்ஜு, கடவுள் 90, மிருகம் 10. எப்பவாவது பொம்மைகளைத் தொட்டுப் பார்ப்பான்.

said...

ரஜ்ஜு பாருங்க என்ன சமத்து!

//ஆனால் ரஜ்ஜு கூட சொன்ன பேச்சை கேக்கலை :-) 'நகைப் பெட்டி'யையே சுத்திக்கிட்டுத் திரிஞ்சான். தனக்கு ஒன்னும் இல்லை என்றதும் ஐஷூ வைஷூவிடம் போய் படுத்துக்கிட்டான். கள்ளத்தூக்கம்தான் !//

சிரிச்சிட்டேன் நகைப்பெட்டிய தொட்டுக் கூடப் பார்க்கலை!!! அம்மை என்ன பண்றாங்கன்னு கள்ளத் தூக்கம் போட்டு நோட்டம்!!

ஜன்னு க்யூட்!

கொண்டாட்டங்கள் இனிது.

கீதா

said...

வாங்க கீதா,

இந்தக் கொண்டாட்டங்கள்தான் வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி கொடுக்குது !

said...

பொங்கல் தின வீட்டு அலங்காரங்கள், பிள்ளையார் கோவில்களில் பொங்கல் விழாக்கள் என மனதுக்கு நிறைவான நிகழ்வுகள்.

said...

வாங்க மாதேவி,

கோவிலே இல்லாத ஊரில் இப்படிக் கோவில்கள் வந்ததே மன நிறைவுதான், இல்லையா !!!!