Wednesday, November 25, 2020

தங்கமகளின் விவகாரம்..... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 16 )

அக்வேரியத்திலிருந்து  வெளியே வந்ததும், கார்பார்க் போறவழியில் தலையைத் திருப்பினால்  கொஞ்ச தூரத்துலே ஒரு உயரமான தூணில்  சிலை ஒன்னு.  அது என்னன்னு பார்த்துட்டுப் போகலாமுன்னு போனால்... நல்ல அழகான  நீரூற்றுக்கு நடுவில் இருந்து கிளம்பும் தூணில் ஒரு பெண் ! 'பெருமாளே, என்னைப்பாரு'ன்னு சொல்றாப்லே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்திப்பிடிச்சுருக்காள்.  இவளுக்கு ஒரு அஃபிஸியல் பெயரும், ஒரு செல்லப்பெயரும் இருக்கு ! 
ஸ்பிரிட் ஆஃப்  த நேப்பியர் என்ற பெயரில் Frank Szirmay of Hungary  வடித்த வெண்கலச் சிலை. 1931 நிலநடுக்கத்தில் ஊரே அழிஞ்சுபோச்சுல்லே....  அதுக்கப்புறம்  மனம் தளராமல்  எப்படி  ஊரைத் திரும்பக்கட்டி எழுப்பிட்டாங்கன்றதைப் பாராட்டும் முகமா இந்தச்சிலையை அமைச்சுருக்கார் சிற்பி.  லோக்கல் ஆஸ்பத்ரி சூப்பரின்டென்டண்ட், தாமஸ் கில்ராய், 1971 லே  இந்தச் சிலையை  ஊருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துருக்கார். இதுக்கு ஊர்மக்களும்  நன்கொடை  கொடுத்துருக்காங்க.  இந்த செயற்கை நீரூற்றுக்கும் கில்ராய் ஃபௌன்டெய்ன் என்று பெயரும் வச்சுட்டாங்க. (இது பொதுவாக் கிடைச்ச தகவல்.)
உண்மையில் நடந்தது என்னன்னா.... டாக்டர் தாமஸ் கில்ராய், தன்னுடைய உயிலில் ஒரு தொகையை நகரத்துக்கு அன்பளிப்பாக எழுதிவச்சுட்டுச் சாமிக்கிட்டே போயிடறார்.  நகரசபை, அந்தக் காசுலே என்ன செய்யலாமுன்னு  உக்கார்ந்து யோசிச்சது. ஒரு சிலை செஞ்சு  வச்சு நகரத்தை  அழகுபடுத்தலாமுன்னு ஐடியா! காசு பத்தாது என்பதால் Lew Harris என்பவர் ஒரு தொகையும், நகரசபை ஒரு நல்ல தொகையுமாச் சேர்த்துச் சிற்பியிடம் கொடுத்து,  அவரும் சிலையை வார்த்துட்டார்.

ஊர்சனம், முதலில் சிலைவிவரம் கேட்டுக் கொஞ்சம் முணுமுணுத்துருக்கு.  சிலைக்கு உடுப்பு இல்லையாம்..... இதுலே  கொஞ்சம்  பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு வழியா  சிலையை நிறுவிட்டாங்க.  நகரசபையே இடமும் கொடுத்துருச்சு.  ஒரு ரெண்டரைவருஷம் போல் ஆனதும், கடற்கரை உப்புக்காத்து காரணம், சிலையின் மெருகு போகத்தொடங்கியதும்,  அப்ப இருந்த நகரசபை முக்கியஸ்தர்கள், பேசாம பெயிண்ட் அடிச்சு வுட்டுறலாமுன்னு (திரும்ப உக்காந்து யோசிச்சு ? ) சொல்லி, 'எடு அந்தத் தங்கநிறப் பெயின்டை'ன்னு தங்கச்சிலையா மாத்திட்டாங்க. சிற்பிக்கு இது உடன்பாடில்லை. பெயின்ட் கூடாது.  வெங்கலச்சிலையா  இருந்தாத்தான்  அழகுன்றார். 

சிலையை வித்தபின்  செஞ்சவருக்கு என்ன உரிமை ?  தங்கச்சிலையா மாறிடுச்சு. சனமும் ஸ்பிரிட்டை மறந்துட்டு, கோல்டன் கேர்ள் சிலைன்னு செல்லப்பெயர் வச்சு அதுவே நிலைச்சும் போச்சு.


இப்படியே கதை முடிஞ்சு போச்சுன்னா என்ன விவகாரம் இருக்கு ?  எல்லாம் சுபம் இல்லையோ ? 

கொஞ்சம் தூண்டித்துருவிப் பார்த்தால்  கதை முடியலையே..... ...

சிலையை இங்கே தூண்மேலே வச்சுப்பிடிப்பிச்சு ப்ரதிஷ்டை பண்ணப்ப,  சிற்பி சொல்லிட்டார், 'ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் பண்ணிட்டேன். சிலை நகரவே நகராது' !

கொஞ்ச காலத்துக்குப்பிறகுதான்  உப்புக்காத்து அரிக்குதுன்னு   lacquer பூசியிருக்காங்க.  

அதுக்குப்பின் இங்கே நடந்த   Hawke's Bay Art Gallery and Museum கலைசம்பந்தமான விழாவுக்கு   இங்கிலாந்துலே இருந்து  (சொல்ல விட்டுட்டேன்லெ... இந்த ஊர் நேப்பியர் கலைகளை வளர்க்கும் நகரமுன்னு பெயர் பெற்றது கேட்டோ !  Napier, the Art Deco city ! ) கிப்பர்ட் என்றவர் வந்துருக்கார். இந்தப் பெண்  சிலையை வார்த்த ஃபவுண்டரியின் தலைவர் இவர்தான். ஊருக்கே பெருமையா உசரத்துலே நிக்கும் சிலையைப் பார்த்தவர், அந்த  சிலையை வார்த்து இணைச்ச இடங்களில் கொஞ்சம் சரியில்லை. வெல்டிங் செஞ்சால் நல்லதுன்னு  ரகசியமா ஒரு சேதியை  நகரசபை  டௌன்க்ளார்க்கிடம் சொல்லி இருக்கார். இத்தோடு, நீங்க சிலையில் ஒரு பெயின்டும் அடிக்காம விட்டுருக்கணும்.  இயற்கையாக் காலநிலையால் வரும் மாற்றங்களைப் பொருட்படுத்தக்கூடாது....... ன்னும் சொல்லி இருக்கார். 


ரகசியம்னு சொல்லிட்டால் போதாதா...... உடனே... ரகசியமா இதைப்பற்றி ஆராய ஆரம்பிச்சாங்க :-) பைனாகுலரை எடுத்துக்கிட்டுப்போய் பார்த்திருக்காங்க.  வெல்டிங் நல்லாத்தான் இருக்கு. அங்கே அடிச்சுருந்த பெயின்ட்தான்  சரியா ஒட்டாம பிச்சுக்கிட்டு வருதுன்னுட்டாங்க. சிலை செஞ்ச சிற்பியாண்டைபோய்ச் சொன்னாங்க, 'சிலையில் வெல்டிங் பிச்சுக்கிச்சாமே' ன்னு....   பாவம் சிற்பி. இது ஏதுடா வம்பாப்போச்சு....   திரும்ப இந்தச் சிலையை இங்கிலாந்துக்கு அனுப்பி ரிப்பேர் செய்யும் செலவு  ரொம்ப அதிகமாவும் இருக்கே.....    ஏற்கெனவே அடிச்சு வச்ச லேக்கரை எடுக்கலாமுன்னு ஆரம்பிச்சால்  அந்த தின்னர், வெங்கலத்தைப் பாழ் பண்ணிருமேன்னு ஒரு புதுக்கவலை. 

அப்பதான் நகரசபைக்கு ஒரு  ஐடியா வந்துருக்கு ! தங்கமடிச்சுட்டாங்க !  தங்கத்துலே குறை தெரியாதுன்னு  நினைச்சுருப்பாங்க போல!   ஒரிஜினல் தங்கமே நாளாக ஆக ஒரு மாதிரி ஆகிருது. இதுலே தங்கப் பெயின்ட்  ...  கேக்கணுமா ? அப்பப்ப  மேல் பூச்சுன்னு ஆகிப்போயிருக்கு. 
மேலே சொன்ன 'ரகசியம்'  உள்ளூர் செய்தித்தாளான டெய்லி டெலெக்ராஃப் நிருபரின் காதுலே விழுந்தவுடன், மீடியா செய்யும் வேலையைச் செஞ்சுட்டார். டாம் டாம்..... நாடு முழுக்க நியூஸ் போயிருச்சு. என்ன ஒன்னு.... அப்பெல்லாம்  இன்ட்டர்நெட், கம்ப்யூட்டர்னு ஒன்னும்  பரவலா இல்லையே..... செய்தித்தாள் மட்டும்தானே ?
இதுக்கிடையில் சிலையைச் சுத்தி நீரூற்று, தோட்டம்னு அலங்கார வேலைகளும் நடந்து முடிஞ்சுருச்சு.  ஒரு சமயம் (2009லே )சிலையைக் கொஞ்சம் கிட்டக்கப்போய் பார்த்தப்ப, வெங்கலம் பலபகுதிகளில் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்துருக்கு. இனி இது வேலைக்காகாது.  வேறெதாவது வழியுண்டான்னு பார்க்கணுமுன்னு தேடுனாங்க. ஒரிஜினல் சிற்பி, 1985லேயே  சாமிக்கிட்டே போயிட்டார். 
புதுசா ஒரு சிலையை இங்கே நியூஸியிலேயே  வார்த்துக்கலாம். அதுக்கு சிலிகான் ப்ரொன்ஸ் பயன் படுத்தலாமுன்னு  திட்டம்.  இந்த வகை உலோகம்,  உப்புக்காத்துலே இருந்தாலும்  சட்னு  பாழாகாதாம்.  பழைய சிலையைத் தூணிலிருந்து  எடுக்கணுமே... கிட்டத்தட்ட சிலையை ஸ்தாபிச்சு முப்பத்தியெட்டு  வருசமாகப்போகுது.   நல்ல ஸ்ட்ராங்காதான் வச்சுருந்துருக்கார் சிற்பி.  ஏழு மணி நேரம் ஆச்சாம். 
புதுச்சிலையை 2011 வருஷம் அதே தூணில் வச்சுட்டாங்க. ரொம்பக்குழப்பமில்லாமல்  வேலை நடந்து முடிஞ்சுருச்சாம்.  இதைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். 
தங்கப்பொண்ணுக்குப் பின்னால் என்னெல்லாம் நடந்துருக்கு பாருங்க. தங்கமகள் சரித்திரம் படைச்சுட்டாள் !  சமகால சரித்திரம் நமக்கு !  அசலும் நகலுமா ஆகிப்போச்சு !
போகட்டும்.....  எப்படியோ நகரத்தின் ஸ்பிரிட் குறையாம இருந்தால் சரி !  இல்லையோ ? 

PIN குறிப்பு: படம் 3 & 5 கூகுளாண்டவர் அருளிச்செய்தார். நம் நன்றிகள் !

தொடரும்.......... :-)  


4 comments:

said...

அருமை சிறப்பு
நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

தகவல்கள் சிறப்பு. விடுபட்ட பகுதிகளை பிறகு தான் படிக்கவேண்டும்.

said...

அழகிய தங்கமகள் .