Tuesday, April 24, 2018

விஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் - 3

நேத்து ராத்ரி  மேரியட்ஸ் ஹொட்டேலில் செக்கின் பண்ணும்போதே  'ரிவார்ட் மெம்பர்'களுக்கு ஃப்ரீ வைஃபை இருக்குன்னு சொல்லி அதுக்கான  பாஸ்வேர்டும் கொடுத்தாங்கதான். ஆசை ஆசையா அதுலே லாகின் பண்ணினால்.... இருக்கு, இல்லைன்னு ஆகிப்போச்சு.

ஒரு  வாட்ஸப் கிடையாது, ஒரு ஜிமெயில் கிடையாது, ஒரு ஃபேஸ் புக் கிடையாது... ஒரு ப்ளாக்ஸ்பாட் கிடையாது....  ஒரு கூகுள் மேப் கிடையாது....ஒரு க்ரோம் கிடையாது...... எனக்குக் கிடைச்சதெல்லாம் மேரியட்ஸின் ஹோம் பேஜ் மட்டுமே..... கேட்டோ :-(

 வைஃபை இருக்கு. ஆனால் கூகுள் சமாச்சாரம் எதுவுமே சீனாவில் நமக்குக் கிடைக்காதாம்!  லோகமே நெட்டில் புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருக்கும் இந்த விஞ்ஞான  உலகில் என்னை இப்படி வனவாசம் போகும்படி பண்ணிடுச்சே   இந்தச் சைனா?

VPN நெட் ஒர்க் ஒன்னு இருக்கு... ஆனால் வெறும் எட்டே நாளுக்குக் காசு அழணுமா?  எட்டுநாள், இதெல்லாம் இல்லாமல் இருந்தா  குடியா முழுகிரும்? இருந்துதான் பார்க்கலாமே.....

அப்புறம் 'நம்மவர்' அங்கே இங்கேன்னு  மொபைலை நோண்டியே.... என் டி டி வி நியூஸ் கிடைக்குதுன்னார்.  எனக்கு ஸ்டஃப் கிடைச்சது. அது நம்ம நியூஸி ஸைட்.  தமிழில் 'தினமலர்' கிடைச்சதுன்னு சொன்னா நம்புங்க !  உண்மை!

பயணத்தில்   விமானத்தில் வாசிக்கக் கொண்டுபோன 'சுப்ரமண்ய ராஜூ' கதைகள்தான்  உதவிக்கு வந்தது :-)
நம்ம கிழக்குப் பதிப்பகம் போட்டதுதான். பைண்டிங் சரி இல்லை..... முதல் பகுதி எல்லாம் ஏடேடாய் கையில்.....  ஒரு தாளை மட்டும் கையில் பிடிச்சு வாசிக்க எளிது ! 

அப்புறம் காலக்ஸி நோட்புக் கொண்டு போயிருந்ததால்....  நேரம் கிடைக்கும்போது (!) கொஞ்சம் கேண்டி க்ரஷ் :-) ஆஃப் லைனில் வேலை செய்யுதுன்ற ஒரே நிம்மதி. நோட்புக்கிலும் கொஞ்சம் கதைகளை டவுன்லோட் செஞ்சு கொண்டு போயிருந்தேன். மாடர்ன் வனவாசத்தில் இதெல்லாம் அலௌடு :-)

ஒரு பத்தரை மணிவாக்கில் குளிச்சுட்டு, ப்ரேக்ஃபாஸ்ட் காஃபியைக் குடிச்சுட்டு , நல்ல குளிர் என்பதால் ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு, அடுத்தாப்லெ இருக்கும் மால்வரை போறோம். இந்த ஏரியா 'நம்மவருக்கு' அத்துப்படி!

வருசத்துக்கு  மூணுநாலுமுறைன்னு பல வருசங்களா சீனத்துக்குப் போய் வந்துருக்காரே!

அதுதான் எனக்கும் சீனாவைக் காட்டணுமுன்னு ஒரே பிடிவாதம். நான்கூடச் சொன்னேன்.... எதுக்கு அங்கெல்லாம்.... இதோ  நாலு எட்டு எடுத்துவச்சா நம்மூட்டாண்டை இருக்கும் சர்ச் கார்னர் மாலுக்குப் போனால்  சீனாவில் பாதி இருக்கே! 

இன்னும் சிகப்புக் கலர் அடிச்சு,   வாசலில் சிங்கம் வைக்க வேண்டியதுதான் பாக்கி! 

அந்தக் காஃபி  (மலேசியா)பரவாயில்லைன்னாலும் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்தால் நல்லா இருக்கலாம்.

ஹொட்டேல் வளாகம் விட்டு வெளியே வந்தவுடன், சட்னு கண்ணில் பட்டது அந்த பிரமிக்கத்தக்க சுத்தம்!  படத்தில் இடதுபக்கம் நம்ம ஹொட்டேல். பின்புலத்தில் தெரிவதுதான் அந்த மால். குறுக்கே போகும் தெருவைக் கடக்கணும்.
இந்தத்தெருவில்  ஒருபக்கம் பூராவும் சைக்கிள் ஸ்டேண்டு.  ஒரே மாதிரி மஞ்ச சைக்கிள் இருக்கேன்னு  பார்த்தால்.....  எல்லோருக்கும் மஞ்சள் பிடிச்சுருக்கோ?



எதிர்வரிசையில் குட்டிக்குட்டிக் கார்கள், ஸ்கூட்டர், மோட்டர்பைக் இத்யாதி!   அந்தக் குட்டிக் கார்களைப்  பார்த்தவுடனே காதலிக்கத் தொடங்கிட்டேன்.  ஹைய்யோ.... பார்க்கிங் ஒரு பிரச்சனையே இல்லை.  சக்னு கொண்டு போய் நிறுத்திடலாம்! இதுலே நாலு சக்கரமும் இருக்கு, சிலதில் மூணு சக்கரம்.  வாட் அ க்யூட் பேபி!


மாலுக்குள் நுழைஞ்சு பார்த்தால் எல்லா வெளிநாட்டு மால்களைப்போலத்தான்.  நமக்கு வேண்டாத அத்தனையும் அங்கே!
ஒரு  'தாய்' இருப்பதை மட்டும் பார்த்து வச்சுக்கிட்டேன். எல்லோரும் கோட்டும் ஸூட்டுமா மிடுக்கா உலவறாங்க. ஒரு வார்த்தை.....  ஒரு சொல், இங்லிஷில் சொல்லணுமே....  ஊஹூம்..... தேவை இல்லைன்னு விட்டுட்டாங்க....



கண்ஜாடை, கைஜாடை எல்லாம் எதுக்கு இருக்காம்?  இது என்னன்னு ஒரு அபிநயம் பிடிச்சால்.... கண்ணை அகலமாத் திறந்து, கவனமாப் பார்த்து ரசிச்சுட்டு ஒரு சிரிப்பை பதிலாக் காமிக்கிறாங்க.


அப்படியும் ஒரு கடையில் தலைக்குப்போடும் அலங்காரம் ஒன்னு மகளுக்காக விசாரிச்சேனே....  அங்கெ இருந்த படத்தைக் காமிச்சு அபிநயம் பிடிச்சால் ஆச்சு :-)  கால்குலேட்டர் சொல்லுச்சு எட்டு நூறு!
நம்மூர் மாட்டுச் சந்தையில் மேல்துண்டுக்கடியில் விரல் வச்சு பேரம் பேசறது போல... இங்கெல்லாம் கால்குலேட்டர் பேரம் உண்டு. அவுங்க ஒன்னு அடிப்பாங்க. நாம் க்ளியர் செஞ்சுட்டு வேறொன்னு அடிப்போம்... இப்படியே பேரம் படியும் வரை மாத்தி மாத்தி.....  இதெல்லாம் முப்பத்தியேழு வருசத்துக்கு முந்தி ஹாங்காங்கில் மோதிரம் ஒன்னு வாங்குனப்ப நடந்த சரித்திர நிகழ்வு :-) இன்னும் இதுமாறாமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நல்ல வேளை எண்களை சீனத்தில் எழுதலை !!!
மனக்கணக்கு.... ஐயோ.... இம்புட்டான்னுச்சு!  நாட் ஒர்த்.....
சீனாவில் காலடி எடுத்து வைக்கிறதுக்கு முந்தினநாள் ஃபாரின் எக்ஸ்சேஞ்சுக்குப்போய்  கொஞ்சம் 'சீன ரூபாய் ' வாங்கின முதல் நாலாம் வாய்ப்பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்துருந்தேன். (அப்பதான் இந்தியாவின் புதுக்காசு ரெண்டாயிரம் ரூபாய் இருக்கான்னு கேட்டுக் கண்ணாலே பார்த்துட்டும் வந்தேன்!) 

உண்மையில் அது 4.3 பெருக்கலா இருக்கணும். பதிமூணாம், பதிநாலாம்  வாய்ப்பாடைவிடக் கஷ்டம் இல்லையோ? அதான் ஏறத்தாழ இருந்தால் போதுமுன்னு நாலாம் வாய்ப்பாடு.  (வகுத்தல்)  இந்தியருக்குன்னா பிரச்சனையே இல்லை.... பெருக்கல்தான்.  எங்கே பத்தாம் வாய்பாடு சொல்லுங்கோ பார்க்கலாம் :-)

இங்கெ இந்த தேசத்துக் காசுக்கு ரெண்டு பெயர்! யுவான், ஆர் எம் பி !  அதுக்கென்ன ஆரம்பிச்சால் ஆச்சு !  இது உண்மையில் Renminbi என்பதன் சுருக்கம். RMB. இதுக்குப் பொருள்  The people's currency !   நல்லா இருக்குல்லே!  மக்களுக்கான  காசு!

  1949 இல் சீனப்புரட்சி நடந்து  கம்யூனிஸ்ட் கட்சி  நேஷனல் கட்சியைத் தோற்கடிச்சு ஆட்சியைப் பிடிச்சு Communist People's Republic of China ன்னு மாற்றி அமைச்சப்ப, பழைய காசையும்  மாத்திட்டாங்க.

புரட்சிக்குத் தலைவர் சேர்மன் மாவோ!  (Mao Zedong )அப்ப இருந்து சேர்மன் மாவோதான் இங்கே எல்லாம்.  அவர் சாமிகிட்டே 1976 லே போனாலும்.... இன்னும் அவருக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை!

இவர் செஞ்சதுதான் முதல் புரட்சின்னு சொல்ல முடியாது.  இங்கே  ஆதிகாலத்துலே இருந்து மன்னராட்சிதான்.  காலப்போக்கில் வெவ்வேற அரசர்கள், பேரரசர்கள்னு  இருந்தவங்களிலே  கடைசியா இருந்தது ரெண்டு பேரரசுகள்!  Ming dynasty , Qing dynasty !  மிங் பெயரைச் சொல்றது சுலபம். அந்த இன்னொரு Qing ( ஜஸ்ட் ஒரு எழுத்துதான் மாறி இருக்குன்னாலும் ) சரியான உச்சரிப்பில் சொல்றது 'நமக்கு' மகா கஷ்டம் என்பதால்  தேவைப்படும் இடத்தில் Qing ன்னே சொல்லப்போறேன் :-)

Ming dynasty 1368 லே இருந்து 1644 வரை (276 வருஷங்கள் ஆட்சி செஞ்சுருக்கு. Qing dynasty 1644 முதல் 1912  வரை 268 வருஷங்கள் ஆட்சியில்.  அப்பதான்  ஒரு சீனப்புரட்சி உருவாகி நேஷனல் கட்சின்னு ஒன்னு  மன்னராட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது!

இந்த ரெண்டு பேரரசர்கள் காலத்திலும் அரண்மனை, கோவில்கள்னு அவுங்க கட்டிவிட்ட  சமாச்சாரங்கள், இப்போ  சீனதேசத்துக்கு சம்பாரிச்சுக் கொடுக்குதுன்னு சொன்னா நம்புங்க!  அவ்ளோ சுற்றுலாப் பயணிகள் ! வெளிநாட்டுப் பயணிகள் ஒரு இருபது சதம்ன்னு சொன்னால் உள்நாட்டுப் பயணிகளே 80 சதம்!  கூட்டங்ககூட்டமா  நடமாடுறதைப் பார்த்தேன்!

என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்..... காசுன்னா?   ஆங்.....

மால் சமாச்சாரங்கள் ஒன்னும் நமக்கு வாங்க வேண்டியதா இல்லைன்னு  வெளியே வந்து சாலையில் நடக்கறோம். இந்தப் பகுதியில் ஒரு பெரிய புத்தகக்கடை இருக்கு!  பகுதி முழுசும் வாகனங்கள் இல்லாத நடக்கும் தெரு!  நம்ம இஷ்டத்துக்கு குறுக்கேயும் நெடுக்கேயுமா நடந்து போகலாம்.

இதுலேயும்  ரெண்டு பகுதிகள். குறுக்கே  வாகனங்கள் போகும் ஒரு ரோடு. அதைக் கடந்து அந்தாண்டை போய் அங்கேயும் குறுக்கும் மறுக்குமா நடக்கலாம்.  கையில் கொடி பிடிச்சுக்கிட்டு இருக்கும்  போக்குவரத்துப் பணியினர்  சாலையைக் கடக்க உதவறாங்க. இப்படி அப்படிப் பார்த்தும் பாராமலும் குறுக்கே ஓட முடியாதபடி சக்கரம் வச்ச  குட்டி வேலி. இழுத்த இழுப்புக்கு வருது !
அவ்ளோ சனம் நடந்து போகும் இடத்தில்  மருந்துக்கு (!?) ஒரு குப்பை? ஊஹூம்....  தப்பித் தவறி கீழே விழும் ஒரு சின்னக் காகிதத்தைக்கூடப் பாய்ஞ்சு வந்து சுத்தம் செய்யறாங்க அதுக்குண்டான துப்புரவுப் பணியாளர்கள்!  'தலை நகரம்' படு சுத்தம் !



அங்கங்கே பூக்களால்  அலங்கரிச்சு வச்சுப் பார்க்கவே கண்ணுக்குக் குளுமை!  கிட்டப்போய்ப் பார்த்தால்..............    பொய்ப்பூ !  (எங்கே கிடைக்குமுன்னு பார்க்கணும். அல்மோஸ்ட் ரியல்!)  மரம் மட்டும்  நெஜம் :-)

எதோ ஒரு ஊர்லே இருந்து பள்ளிக்கூடப் பசங்க கோஷ்டி ஒன்னு!  அங்கே உக்கார்ந்துருந்த  மாணவரிடம்  எந்த ஸ்கூல்னு கேட்டேன். சட்னு எழுந்து போய் மற்ற கூட்டத்தில் சேர்ந்துட்டார்.  எல்லாம் மொழிப்பிரச்சனைதான்!
முஸ்லீம்கள் இருக்காங்கன்னு..... தெரிஞ்சுக்கிட்டேன்!

தொடரும்........... :-)


17 comments:

said...

குட்டிக் கார் அழகு. எத்தனை பேர்கள் உட்காரலாம்?

சுத்தம். அழகு இவை எல்லாம் நம் நாட்டு மக்கள் எப்போது பழகப் போகிறார்கள்?

said...

ஆனா இவ்ளோ சுத்தமா இருந்தாலும் போர் அடிக்குமோ... அமிதாப் படம் மாதிரி செயற்கையா இருக்குமோ...!!!

said...

ஜிமெயிலே பாக்க முடியாதா? சுத்தம். உண்மையிலேயே வனவாசம் தான்.

துப்புரவு விஷயத்துல இந்தியா தவிர நான் பாத்த எல்லா நாடுகளுமே நல்லாருக்கு. இந்தியா மட்டுந்தான்... ஒன்னும் சொல்றதுக்கில்ல.

குட்டிக்குட்டி கார்கள் அழகு. ஒருத்தர் இல்லைன்னா ரெண்டு பேர் போற மாதிரி கார்கள் போல.

இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ நியூசிலாந்தோ... மால்னாலே பெரும்பாலும் நமக்கு வேண்டாத பொருள்களா இருக்கும் எடந்தானே. ஆனாலும் என்னென்ன பொருட்கள் இருக்குன்னு பார்வைய மேயவிட நல்ல இடம்.

“தாய்” என்னைக்குமே கைவிடுவதில்லைங்குறது மிகப் பெரிய உண்மை.

கருஞ்சிவப்பா சதுரசதுரமா சின்னச் சின்ன வில்லைகளா இருக்கே, அது என்னது?

Qingங்குறத க்விங்குன்னு உச்சரிக்கனும். கொஞ்சம் கொஞ்சம் கொரிய மொழி கத்துக்கிறதால தெரிஞ்சிக்கிட்டது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் சீனமொழியா இருக்கு. கொஞ்சம் ஆங்கிலமும் இருந்திருக்கலாம். ஒரு சில இடங்கள்ள இருக்கு போல.

சீன முஸ்லீம்கள் மலாய் வழித்தோன்றல்கள்னு படிச்ச நினைவு.

said...

வாங்க ஸ்ரீராம். ஒரு சில குட்டிகளில் முன்னால் டிரைவர். பின்னால் டபுள் ஸீட். இதுலே அநேகமா மூணே சக்கரம். நாலு சக்கரத்தில் நாலுபேர்!

சுத்தமா இருந்தால் போரடிக்குமா? ஏன்.......

said...

ஆஹா.. சுத்தமான இடத்தைப் பார்த்து வியந்தேன். இதுக்கும் நம்ம நாட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்து வருத்தம்தான். (நம்மளோட இந்த (அ)சுத்தம் கோவிலைக்கூட விடுவதில்லை).

என் பசங்கள்ட, இங்க நான் எப்படி வீட்டை சுத்தமா வச்சிருக்கேன், எடுத்த பொருள் எடுத்த இடத்தில் வச்சிருக்கேன், கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பொருளையும் சமையலறையில் எடுத்துவிடுவேன் என்றெல்லாம் பெருமை பேசினால், பையன், இது என்ன வீடா இல்லை எக்சிபிஷனா என்று சொல்லிடறான்.

said...

மொத்தத்தில் இந்த சீன விசிட் அத்தனை ரசிக்க வில்லையோ

said...

சுத்தம் - நம்ம நாடு எப்ப மாறும்! மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது! ஹிந்தியில் ஒன்று சொல்வார்கள் - லாட்டி கா ஹி பாஷா சமஜ்தே ஹே.... அது தான் தேவை இங்கே எனத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன வண்டிகள் ரொம்பவே அழகு.

said...

//ஒரே மாதிரி மஞ்ச சைக்கிள் இருக்கேன்னு பார்த்தால்..... எல்லோருக்கும் மஞ்சள் பிடிச்சுருக்கோ? //

We have in Pune too, green & yellow; private companies sponsored - free ride bicycle; You can unlock (using mobile app), ride to wherever you want; and leave it in some common designated place;

said...

அடுத்த முறை வாய்ப்பு இருந்தால் ஒரு நாட்டின் தலைநகரின் அருகே உள்ள ஊருக்கும் சென்று வாங்க.

said...

வாங்க ஜிரா.

சட்னு ஒரு கற்காலத்துக்குள் போனமாதிரிதான்!!!!

அந்தக் கருஞ்சிகப்புச் சதுரம்.... எதோ இறைச்சி வகையாக இருக்கலாம்...பக்கத்துலே சாஸேஜ் போல ஒன்னு இருக்கே....

ஆங்கிலம் தேவை இல்லைன்னு.... ஆனால் இப்போ ஆங்கிலம் கத்துக்கன்னு நிறையப்பேர் இங்கே நியூஸிக்கு வர்றாங்க. இங்கே நியூஸியில் இங்லிஷ் டீச்சிங் ஸ்கூல்னு உள்ளூர் பிஸினஸ் கொடிகட்டிப் பறக்குது.

said...

வாங்க நெ.த.

எக்ஸிபிஷனா இருக்க வேணாம். அதுக்காக எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமக் கண்ட இடத்தில் போட்டுட்டு, அப்புறம் அந்தப்பொருளின் தேவை வரும்போது தேடிக்கிட்டு இருக்க முடியுமா?

ஒரு காலத்தில் 'நம்மவர்' கூட அங்கங்கே பொருட்களை வேற இடத்தில் வச்சுட்டும், படிச்ச நியூஸ் பேப்பர், புத்தகங்களையெல்லாம் தரையிலே போட்டுக்கிட்டும் இருந்தார். வீடா இல்லை மிலிட்டரி கேம்பா? வீடுன்னா அப்படித்தான் இருக்குமுன்னு இடைக்கிடைக்கு வசனம் வேற! சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டேன்.

தேடித்தேடி நேர விரயம், எரிச்சல்னு வந்தப்ப ஓரளவு தானாவே சரி ஆகி இருக்கு:-) எல்லாம் பட்டுத் தெரிஞ்சுக்கணும் போல!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லாம் ஸ்ட்ராட்டிங் ட்ரபுள்தான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம மக்கள் சுதந்திரம் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஃப்ரீடம் கம்ஸ் வித் ரெஸ்பான்ஸிபிளிடின்னு எப்போ கத்துக்குவாங்க?

லாட்டி கா பாஷாதான் சரி! சுலபமாப் புரியும் மொழி இது :-)

said...

வாங்க விஸ்வநாத்,

அட! பூனாவில் வந்துருச்சா? க்ரேட்! என் பூனா வாழ்க்கை 1977- 1982 . அப்போ.... ஊஹூம்....

said...

வாங்க ஜோதிஜி.

அவுங்களாலே குறைஞ்சபட்சம் தலைநகரையாவது சுத்தமா வச்சுக்க முடியுதே!

said...

// வைஃபை இருக்கு. ஆனால் கூகுள் சமாச்சாரம் எதுவுமே சீனாவில் நமக்குக் கிடைக்காதாம்! லோகமே நெட்டில் புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் என்னை இப்படி வனவாசம் போகும்படி பண்ணிடுச்சே இந்தச் சைனா? //

உப்பில்லாத உணவு போல, கூகிள் இல்லாத உலகம் …

// இந்தத்தெருவில் ஒருபக்கம் பூராவும் சைக்கிள் ஸ்டேண்டு. ஒரே மாதிரி மஞ்ச சைக்கிள் இருக்கேன்னு பார்த்தால்..... எல்லோருக்கும் மஞ்சள் பிடிச்சுருக்கோ? //

சீனாவில் ஓடும் ஒரு பெரிய நதியின் பெயரே மஞ்சள் ஆறு (Yellow River) என்பது தானே.

said...

வாவ்...எவ்வொலோ சுத்தமான அழகான இடம்...