Wednesday, October 28, 2015

முதல்முறையா தியேட்டருக்குள் போனேன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 90)

சரியா நாலுமணிக்குக் கிளம்பி தியேட்டர் வளாகத்துக்குள்  நுழைஞ்சபோது மணி சரியா நாலரை. போலீஸ் குமிஞ்சு கிடக்கு வளாகத்தின் வாசலில்.   அதுக்குள்ளே கீழே இறங்கிப்போன கோபால், என்னிடம் ஒரு போர்டைக் காமிச்சார். அப்பதான் தெரியும்  சிலபல விஐபிக்களின் வருகை! மொத்தம் அறுவர். இதில் மூவர் பேச்சை ஏற்கெனவே  வேறிடத்தில் கேட்டுருக்கேன்.


இன்னொரு போர்டில் இன்னும் ஒரு ஐவர் பெயர்கள் இருந்தன. யாரையும் எனக்குத் தெரியாது. அதனால் என்ன இனி தெரிஞ்சுக்கணும்,இல்லே!

நியூஸியில் இருந்து கிளம்பும்போதே அரசல்புரசலாக் காதில் விழுந்த சேதி வெறும் நூல் வெளியீடு மட்டுமே! முடிஞ்சாப் போகணுமுன்னு நினைச்சேன். ஆனால் நம்ம பயணத்திட்டம் எப்படிப் போகுமோன்னு லேசா ஒரு சம்ஸயம் இருந்துச்சு.  சரியா இன்றைக்கு கோவில் பயணம் முடிச்சு சென்னைக்கு வந்துட்டதால்  தோழிகளுக்கு செல்லடிச்சுக் கேட்டால் சிலர் வருகை தருவதாச் சொல்லி இருந்தாங்க.

வாசலிலேயே கூட்டம் அதிகமாத் தெரிஞ்சதால் உள்ளே போய்  உக்காரலாமுன்னு போனோம். வட்டமான அரங்கம் இது. ம்யூஸியம் தியேட்டர்.  வெள்ளைக்காரர் நாட்டை ஆண்ட காலக்கட்டத்தில் 1851 இல்  கட்டியது.

மேடைக்கு நேர் எதிரில் இருக்கும் இருக்கைகள் எல்லாம் நிரம்பி வழியும் வாசகர் கூட்டம். இடதுபக்கம் கொஞ்சதூரத்தில் கொஞ்சம் இடங்கள் இருந்தன. நம்மாட்கள் வருவதால் ஒரு  ஏழெட்டு கிடைச்சால் தேவலை. துண்டு போட்டு வைக்கலாமான்னு  தோணும் நேரம் கவிதாயினி மதுமிதா, மகளுடன் வந்தாங்க. போய்  உக்கார்ந்தோம். ஒரு அஞ்சாறு நிமிச இடைவெளியில் எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவும், மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும், குழந்தை கனிவமுதனும் வந்தாங்க. தொடர்ந்து  ஒலிக்கும் கணங்கள் நிர்மலா நிவேதிதா வந்து சங்கமம் ஆனாங்க.

கனிவமுதன் எப்பவும் நம்ம கோபால் செல்லம். அவுங்க ரெண்டுபேரும் ஒன்னா உக்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்க.  திடீர்னு  ஒருத்தர்  வந்து வணக்கம் சொல்லிக் கை குலுக்கினார். நம்ம  வெயிலான் ரமேஷ்!  தொடர்ந்து வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டவர் நம்ம வெண்பூ வெங்கட்.  கொஞ்சநேரம் எங்ககூட உக்கார்ந்து  பேசிட்டுப் போனார்.
நண்பர் பாலபாரதி கையில் கெமெராவைக் கொடுத்தேன். ஜஸ்ட் ஒரு க்ளிக்:-)
 தெரிஞ்ச முகங்கள் இருக்கான்னு  தேடுனபோது, நம்ம பத்ரியும், ஹரன் பிரஸன்னாவும், ஜடாயு, அதியமான் ஆகியோர் கண்ணில் பட்டாங்க. மேடைக்கு முன்  இருந்த  ஏழு வரிசைகளில் இருந்தாங்க.  நம்ம அருண்மொழி ஜெயமோகனும் அதே இடத்தில் உக்கார்ந்துருந்தது எனக்கு வியப்பா இருந்தது.  மேடையில் இருப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்!ஒரு பத்திருபது மீடியா மக்கள்ஸ், நிகழ்ச்சியைப் பதிவுசெய்ய வீடியோ கெமாராக்களுடன் வரிசைகட்டி இருந்தாங்க.
மேடையில் போட்டுருந்த இருக்கைகளில் முக்கியஸ்த்தர்கள் வந்து  அமர்ந்தனர். நடுநாயகமாக நம்ம அசோகமித்ரன். அவருக்கு  வலது புறம் நம்ம கமல். இடது பக்கம் இளையராஜாவுக்கு.இளையராஜா, போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கிட்டாராம். கொஞ்சம் தாமதம் ஆகுமுன்னு சேதி அனுப்பினாராம்.


கமலுக்கு வலதுபக்கம் நம்ம ஜெமோ. அவருக்கு அடுத்து பி ஏ. கிருஷ்ணன். இந்தப்பக்கம் நம்ம  பிரபஞ்சனும் நாஞ்சில் நாடனுமா இருந்தாங்க. நம்ம ஜெமோ மட்டும்  கொஞ்சம் நெர்வஸா இருந்தாமாதிரித் தோணுச்சு. ஒரு சமயம் கவனிச்சப்ப  தலையில் வேறு எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சோ?  அடுத்து எழுதப்போகும் பகுதியின் யோசனை?


விஷ்ணுபுரம்  வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி இது!  அந்தக் குழுவினர் அப்பழுக்கு சொல்லமுடியாத அளவில் பரபரன்னு வேலைகளை இழுத்துப்போட்டு அருமையா ஏற்பாடுகளைச் செஞ்சுருக்காங்க.முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசினவர் பெயர் தெரியலை.

இன்றைக்கு  ஜெமோவின் மகாபாரதத்தின் முதல் நான்கு நூல்களின் வெளியீடு. முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என்பவை. ஏற்கெனவே படங்களுடன் வலையில் வாசிச்சு இருந்தாலும், அங்கே  அச்சுப்பிரதிகளைப் பார்த்தப்ப ஆசையா இருந்துச்சு என்பதும் உண்மை.  எடைன்னு ஒரு  சமாச்சாரத்தை எனக்கு நினைவு படுத்திக்கிட்டே இருந்தார் நம்ம கோபால் :-(

கடவுள் வாழ்த்தாகக் காக்கைச்சிறகிலே பாட்டைப் பாடினார் ஒரு இளைஞி.  கடவுள் வாழ்த்துன்னு  சொல்லமுடியாது....தான்.  ஏன்னா  யாரும் எழுந்து நிற்கலை! நிகழ்ச்சி ஆரம்ப வாழ்த்துன்னு சொல்லிக்கலாம்.

கூட்டம் இன்னும் சேர்ந்துக்கிட்டேதான் இருந்துச்சு.  படிகளிலும், இறங்கி உள்ளெ வரும் பாதைகளும் நிரம்பி வழிய ஆரம்பிச்சது.  கொஞ்சநேரம் கழிச்சு ஒரு  சலசலப்பு. மனுஷ்யபுத்திரன் வந்தார். அவரை உள்ளே கொண்டு வரக் கொஞ்சம் சிரமமா ஆகிருச்சுன்னு தோணுச்சு.

நம்ம சிறில் அலெக்ஸ் வந்து, 'இது ஒரு விழாவே இல்லை. ஒரு கொண்டாட்டமு'ன்னு தொடங்கி, அன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த (மேடை மக்கள்) ஒவ்வொருவரைப் பற்றியும் விவரங்கள் சொல்லி வாழ்த்திப் பேசினார்.
அப்புறம் பி ஏ கிருஷ்ணன். இப்படி எல்லோரும் நல்லா பேசினாங்க. முழுசுமா அவுங்க பேச்சில் ஒன்றமுடியாத வகையில் நம்ம மக்கள்ஸ் படுத்துனதையும் சொல்லத்தான் வேணும். பொது நிகழ்ச்சிக்கு வரும்போது செல்பேசியை அணைச்சு வச்சுக்கத் தெரியாதவங்களா... இருந்தால் எப்படி? நம்மைச் சுத்தி எல்லாத் திசைகளில் இருந்தும் கால் வர்றதும், எடுத்துப்பேசுவதுமா ஒரு நடவடிக்கை, இருக்கைகளில் கொஞ்ச நேரம் தொடர்ந்து உக்காராமல்  எழுந்து போறதும்  திரும்ப வந்து  உக்காருவதுமா பலர். நம்மைக் கடந்து கடந்து போகும்போது  நாம் காலைக் குறுக்கி இடம் பண்ணிக் கொடுத்துக்கிட்டே இருக்கோம். இடிச்சுக்கிட்டும், காலை மிதிச்சுக்கிட்டும்............   ப்ச்.


மகாபாரதப் பிரசங்கிகள்னு அஞ்சு பேரை மேடைக்குக் கூப்பிட்டுக் கௌரவம் செஞ்சாங்க. இதுலே ரெண்டுபேர் மகாபாரதக் கூத்து  நடத்தறாங்க. இந்தக் கலை  இன்னும் எத்தனை நாளைக்கு உயிர்ப்புடன் இருக்குமோ தெரியலை.....

எங்கூர்  ஃபிஜித் தமிழர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்த வருஷம் 'தெர்க்கூத் 'நடக்கப்போகுது. போயிட்டு வந்து சொல்றேன்.

ஜெமோவின் மகாபாரதத்துக்கு  உயிரோவியம் வரையும்  ஷண்முகவேல் அவர்களை மேடைக்கு அழைச்சு கௌரவித்தார்கள். ஜெமோ தளத்தில்  முதல் அஞ்சு நூல்களுக்குப் பிறகு இவருடைய ஓவியம்  வர்றதில்லை. என்ன காரணமுன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அப்புறம் இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசனை மேடைக்கு அழைச்சுப் பாராட்டுனாங்க.  அடுத்து நம்முடைய பாராட்டுகளைப் பெற்ற முக்கியமானவர் திருமதி ஜெமோதான். இவுங்கதான் முதலில் கௌரவிக்கப்பட வேண்டியவங்க. ஜெமோ நிம்மதியா எழுத முடியுதுன்னா......  இவுங்க ஒத்துழைப்பு இல்லாமல்  நடக்குமா என்ன?


இன்னும் நிறைய விவரங்களை நிகழ்சி நடந்ததும் சுடச்சுட நிறையப்பேர் எழுதி, நீங்களும் வாசிச்சு இருப்பீங்க என்றதால் கூடுதலா விஸ்தரிக்கலை. ஆச்சே கிட்டத்தட்ட ஒரு வருசம், இல்லையோ? ரொம்பவே ஆறிப்போச்சி கஞ்சி !

வெண்முரசு  தளம் யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கும் நிகழ்ச்சியை விருப்பம் உள்ளவர்கள் பாருங்க. விஜய் டிவியில் வந்ததாம்

எட்டுமணி போல நிகழ்ச்சி முடிஞ்சது. கிளம்பி வெளியில் வந்துட்டோம். அப்பதான் கவிதாயினி மதுமிதா, 'உள்ளே போய் அருண்மொழியைச் சந்திச்சுட்டுப் போகலாம்' என்றதும் திரும்ப மேடைக்குப் பின்புறம் போனோம். சந்திப்பு இனிது.

ஜெமோவுக்கு என்னைப் பார்த்ததும் கண்களில் சின்ன வியப்பு (இப்படியெல்லாம் சொல்லிக்குவேன்ல!) எப்ப வந்தீங்கனார்? கெத்தை விட்டுக்க முடியுதா? இந்த விழாவுக்காகவே வந்தேன்னேன்:-)

க்ளிக்ஸ் முடிச்சு எட்டரை மணிக்கு  வெளியில் வந்தோம்.  அன்றைய நாள்  நிறைவாக முடிஞ்சது. விழாவைத் தவறவிடலைன்னு ஒரு  மனமகிழ்ச்சி!

அன்று எடுத்த 108 படங்களில் ஒருமாதிரி பரவாயில்லைன்னு சொல்வதை  ஃபேஸ்புக் ஆல்பத்தில் இப்போ போட்டு வச்சேன். அதன் சுட்டி இது.


தொடரும்.........:-)12 comments:

said...

எனக்கு சூடான கஞ்சி தான்...

நன்றி அம்மா...

said...

இந்த மாதிரி விழாக்களுக்கும் உங்க டூர்ல இடம் கிடைச்சுதா?

said...

படம்ல்லாம் அருமை டீச்சர்:)
மதுமிதா அக்காவை வெகுநாள் கழித்துக் காண்பதில் மகிழ்ச்சி.. மார்க்கண்டேயி:))
ஒரிஜினல் டீச்சரும் அப்படியே:)

வட்ட அரங்கு வெகு அழகு!
திருமதி.அருண்மொழி ஜெயமோகன் அவர்களுடன் ஒங்க படம் எங்கே?:)

said...

இளையராஜா விரல் நீட்டிப் பேசும் அழகே அழகு:)

பாரதக் கூத்து
= கிராமத்தின் கலை; எங்கூருல இன்னும் உண்டு; திரோபதை அம்மா கோயிலுன்னு ஒரு குட்டி அறை இருக்கும்; அதுல தான் Costumeல்லாம் போட்டு வச்சிருப்பாங்க; மத்தபடி பூசைல்லாம் கெடையாது:) பூசைகள்= வாழைப்பந்தல் பச்சையம்மன், அவிங்க அண்ணாரு ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் - ரெண்டு பேருக்கும் தான்:)

/கடவுள் வாழ்த்தாகக் காக்கைச்சிறகிலே பாட்டைப் பாடினார் ஒரு இளைஞி. கடவுள் வாழ்த்துன்னு சொல்லமுடியாது....தான். ஏன்னா யாரும் எழுந்து நிற்கலை!//

அநியாயமா இருக்கே:)
திருக்குறள் முதல் அதிகாரம் படிக்கும் போது எழுந்து நின்னுக்கிட்டா படிக்கிறீக?:)))

நாட்டுப் பண்/ தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மட்டும் எழுந்து நின்னாப் போதும்; அப்பா பெருமாளே/ அடேய் முருகா, ஒங்களுக்கெல்லாம் எழுந்து நிக்க முடியாது:) துளசி டீச்சர், காபி குடிச்சிக்கிட்டே ஹோமம் பண்ணவங்க, தெரியுமா?:)))

said...

லேட்டா வந்திருந்தாலும் உங்க பதிவு லேட்டஸ்டா வந்திருக்கு மேடம். நல்ல புகைப் படங்கள்.அந்த விழாவுக்கு செல்வதாய் இருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல முடியவில்லை.,
வெண்முரசைத் தொடர்ந்து படிக்கிறீர்களோ?

said...

ஆறினக் கஞ்சியாகத் தெரியவில்லை சகோ. சுடச் சுட அப்படித்தான் தோன்றியது வாசிக்கும் போது...படங்கள் அனைத்தும் அருமை...

said...

ஒரு நிகழ்வை இப்படி யாராலும் சொல்லிவிட முடிவதில்லை...நேரில் பார்த்திருந்தாலும் இப்படி அனுபவித்திருக்க முடியாது...அடிக்கடி செல்லுஙக்ள்...சொல்லுங்கள்..

said...
This comment has been removed by the author.
said...

சூப்பர் மா. எங்கடா இன்னும் ஃபோட்டோ போடலியேன்னு பாத்தேன்.

said...

படங்கள் எல்லாம் நிகழ்ச்சியில் நாங்களும் பங்கேற்ற நிறைவை தருகின்றனக்கா ..எக்மோர் மியூசியம் தியேட்டர் ..நான் 97 இல் ஒரு இசை ப்ரொக்ராமுக்கு போனேன் பழங்கால கட்டிடம் இன்னும் அப்படியே இருக்கு ..

said...

நிகழ்வு பற்றிய உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

ரொம்ப நல்ல ஆடிட்டோரியம். மெல்லிசை மன்னருக்கான அஞ்சலி நிகழ்ச்சி அங்க நடந்தது. அப்பப் போயிருக்கேன்.

வெண்முரசு படிக்கிறீங்களா டீச்சர்? நான் தொடர்ந்து படிச்சதில்ல. சில பகுதிகளைப் படிச்சிருக்கேன்.