Friday, February 27, 2015

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா? (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 2)


ஒரு வீட்டைக் கட்டி முடிச்சுட்டு அப்படியே விட்டுடக்கூடாது. அவ்வப்போது சின்னச் சின்ன மராமத்து வேலைகளை விடாமல் செய்வதோடு, நம் சௌகரியத்துக்கு ஏற்றபடி  மாற்றி அமைக்கத்தான் வேண்டி இருக்கு. உள்ளூர் சட்டப்படி  வெளிப்புற அமைப்பில் கை வைக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே  செஞ்சுக்கலாம். இதுக்கு  தொழில்நுட்பம் தெரிஞ்சவங்க வேணும்.நாம் பாட்டுக்கு  வீட்டு பாரம் தாங்கும் சுவரை (வெயிட்பேரிங் வால்) இடிச்சுட்டோமுன்னா வம்பாயிரும். நஷ்டத்துக்கு  காப்பீடு செஞ்சுருக்கும் காசுக்கும் நாமம்தான்.

இதையெல்லாம் கருத்தில் வச்சுக்கிட்டுக் கவனமா  வீட்டைப்  பராமரிக்கணும்.  யானை அசைஞ்சு தின்னும், வீடு ஆடாமல் தின்னும் என்றொரு பழஞ்சொல் இருக்கே!

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா?

ஏன்? தனித்தனியா சமைச்சுக்கப் போறீங்களான்னு கேக்கப்டாது கேட்டோ:-)  இப்ப இருக்கும் அடுக்களை பெருசுன்னாலும்,  ஒர்க் ஸ்பேஸ்ன்னு பார்த்தா கொஞ்சமாத்தான் இருக்கு. நாலு பக்கங்களில் ஒரு பக்கம் பூராவும் அலமாரிகள். இன்னொரு பக்கம் அடுப்புகள்! மூணாவது பக்கம் பாத்திரம் கழுவும் ரெட்டை ஸிங்க். இதுலே வேஸ்ட் மாஸ்டர் வச்சுருக்கு.  நாலாவது பக்கம் தான் ஒர்க் பெஞ்சு( மேஜை) ன்னு சொல்லிக்கலாம். இதையே காலை உணவுக்கான ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளாவும் பயன் படுத்திக்கலாம்.  எதிர்ப்பக்கம்  பார் ஸ்டூல்கள் போட்டு வச்சுருக்கு.  மூணாவது பக்கமும் நாலாவது பக்கமும் சேரும் மூலையில்  அடுக்களை மெஷீன்களுக்குரிய  அலமாரி.

மிக்ஸி, டோஸ்ட்டர், கெட்டில், காஃபி மில், இப்படி சாமான்களை வச்சுக்கலாம். உள்ளேயே ப்ளக் பாய்ண்ட்ஸ் போட்டுருப்பதால் தேவை ஏற்படும்போது அலமாரிக்கதவைத் திறந்து  தேவையான உபகரணங்களை  ஜஸ்ட் வெளியில் கொஞ்சமா இழுத்து வச்சு  வேலை முடிஞ்சதும்  உள்ளே தள்ளிக் கதவை மூடிட்டால்....  கப்சுப்.  யாருக்கும்  ஒன்னும் தெரியாது:-)))))

சமையலறை உபகரணங்களில் இப்பெல்லாம் ரைஸ் குக்கர்,  மைக்ரோவேவ் இதுக்கெல்லாம் இடம் வேண்டித்தானே இருக்கு. இதை இந்த  கேட்ஜெட் அலமாரியில் வச்சுக்க முடியாது.  கிச்சன் பெஞ்சுலே வச்சுக்கலாமுன்னா..... இடத்தை அடைக்குது.  இந்த அழகுலே  வெட் க்ரைண்டர் என்னும் சமாச்சாரம் ஒன்னும் இருக்கே!

முந்தி பாருங்க  சாதாரணமான மின்சார ஆட்டுக்கல்தான். டில்ட்டிங்  டைப்.  கீழே வச்சுக்கிட்டு அரைச்சமா, அப்படியே சாய்ச்சு மாவை எடுத்தோமா, தண்ணீர் அந்த க்ரைண்டரில் ஊத்தி  ரெண்டு நிமிசம் மெஷீனை ஓடவிட்டுக் கழுவனோமான்னு இருந்துச்சு.  நமக்கும் ஒன்னு கப்பலில் வந்து சேர்ந்துச்சு. ஊருக்கே  முதல் ஆட்டுக்கல்.  நண்பர் ஒருவர் இந்தியா (செட்டிநாடு)  போனபோது இதுபோல ஆட்டுக்கல் வந்துருக்குன்னு பத்திரிகை விளம்பரம் (அப்பெல்லாம்(1990) குமுதம் ஆ.வி. சந்தா கட்டி வாங்குன காலம்.  ஏர் மெயிலில் வரும்!) பார்த்தேன்னு சொல்லி என்ன விலைன்னு விசாரிச்சுக்கிட்டு வாங்கன்னுகேட்டுக்கிட்டேன்.

நண்பர் ,வெட்டிக்கிட்டு வான்னு வெட்டி , அதைக் கட்டி எடுத்துக்கிட்டு வரும் ரகம். திரும்பி வந்தவர், உங்க  ஆட்டுக்கல் கப்பலில் வருதுன்னார். அடராமா!  ரெண்டு மாசம் கழிச்சு   துறைமுகத்துலே இருந்து  ஃபோன் வருது.  ஒரு பொட்டி வந்துருக்கு. வந்து காசை அடைச்சு க்ளியர் பண்ணிக்கிட்டுப் போங்கன்னு. அதுக்குக் கப்பல் கூலி, க்ளியரன்ஸ்  சார்ஜ்,  உள்ளூர்  சேவை வரின்னு  கட்டி வீட்டுக்குக் கொண்டாந்தோம். சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் கதைதான்.  ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கல்லுக்கு ஆயிரம் டாலர் வரை  செலவாகிருச்சு.

நாட்டுக்கே ஒரு கல் என்ற நினைப்புதான்.  அதை எங்கே வச்சு அரைப்பதுன்னு  யோசனை . எல்லா ஏரியாவும் கார்பெட் என்பதால் தண்ணீர் சிந்தாம அரைக்கணும். கழுவி எடுக்கணும். அப்புறம் அதை ஒரு இடத்தில் ஸ்டோர் பண்ணியும் வைக்கணும். தினமுமா அரைக்கப்போறோம்? சம்மர் காலத்துலே வாரம் ஒரு நாள். அந்த மூணுமாசம் போச்சுன்னா..... அவ்ளோதான் இட்டிலியும் தோசையும். மாவு வேற புளிக்காது  இந்தக்குளிரில். அதுக்கு வைத்தியம் செய்யறேன்னு அவனுக்குள் வச்சு  மறந்து போய் அது இட்லிப்பவுடர் ஆன கதையெல்லாம்  இருக்கு:-) கிச்சன் மேஜைக்கு அடியில்  வச்சுக்கிட்டு தேவையான போது  இழுத்து வெளியில் வைக்கலாமுன்னு அதை ஒரு  நாலு சக்கரமுள்ள  பலகையில்  வச்சு ஃபிக்ஸ் செஞ்சதெல்லாம் தனிக்கதை:-)

பத்துப்பனிரெண்டு வருசம் உழைச்ச கல் அப்புறம் சுத்தமாட்டேங்குது.  பெல்ட் தளர்ந்து போச்சுன்னு நம்மூட்டு எஞ்சிநீயர் சொன்னார்.  அப்புறம் இவர் ஊருக்குப்போனப்ப ஒரு டேபிள் டாப் கிரைண்டர் வாங்கியாந்தார். மூணு குழவிக்கல்.  இது நல்லாவும்,சீக்கிரமாவும் அரைக்குதுன்னாலும்  கம்பி வச்சு உருளைகளைத் தூக்கி  எடுத்து  மாவை வழிச்செடுக்கணும்.  பின்னே எல்லாத்தையும்  கொண்டுபோய் சிங்க்கில் வச்சுக் கழுவி துடைச்சுன்னு பெரிய பேஜார். நமக்கோ தோள் வலி (!) அதிகம்:(

சராசரி இந்தியர்களை விட (நான் சொல்றது எங்க தலைமுறை ஆட்கள்) இங்கே பொதுவா மக்கள்ஸ்,  கொஞ்சம் உயரம்தான்.   அதுக்கேத்தமாதிரிதான்  அடுக்களை கப்போர்ட், பெஞ்சு டாப் எல்லாம் செய்வாங்க. முழு கிச்சனும் செஞ்சு  விக்கறாங்க. ஏற்கெனவே ரெடிமேடா தயாரிச்சு இருக்கும் அடுக்களைன்னா மலிவாவே கிடைக்கும். எல்லாமே ஒரு ஸ்டேண்டர்டு சைஸுலே செஞ்சுருக்கும்.

 நானோ உயரம் கம்மி. வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கும் பழக்கமும் இல்லை. உயரம் என்னதான் 10, 15 செண்டி மீட்டர் கூடுனாலும், கை வலி, தோள்பட்டை வலி வந்துருது.  இது  இன்னும் வலியை அதிகப்படுத்திருதுன்னுதான்  நம்ம வீட்டு அடுக்களையை  செஞ்சப்ப உயரம் கொஞ்சம்  குறைச்சுச் செஞ்சோம். ஒர்க் பெஞ்சுக்கு மட்டும் இன்னும்  ஒரு பத்து  செ.மீ குறைச்சேதான்  வச்சோம்.அதுக்காகவே என்னுயரத்துக்குத் தகுந்தமாதிரி ஸ்பெஷலா செய்யறோம். (அதானே.........பதிவு எழுதும் கைக்கு வலி வரலாமா? )

இந்த பட்டர்ஃப்ளை  ஆட்டுக்கல்லை கிச்சன் பெஞ்சுலே நிரந்தரமா வச்சுக்கிட்டா நல்லது.  கீழே கப்போர்ட்லே இருந்து தூக்கி வச்சு அரைச்ச பின் கீழேமறுபடி இறக்கி வச்சுன்னு..... வேலைப்பளு அதிகமா இருக்கு. ஆனால் பெஞ்சு டாப்லே போதுமான இடம் இல்லையே:(

அதான்.... இன்னொரு அடுக்களை ,இல்லேன்னா இந்த அடுக்களையைப் பெருசா மாற்றி அமைப்பது ன்னு எதாவது செஞ்சாகணும்.  முன்னாலேயே சொன்னபடி  மீண்டும் கிச்சன் ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிட்டு  எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம். ஜஸ்ட்  இதுக்கே இங்கே காசைத் தீட்டிருவாங்க. சுலபமான வழின்னால் இன்னொரு அடுக்களை.

நம்ம வீட்டில் டைனிங் ஏரியாவை ஒட்டி  வெளிப்புறம் போக  ஒரு ஸ்லைடிங் டோர்ஸ் போட்டுருக்கோம் பாருங்க. அந்த இடம்  வீடு கட்டும்போதே காங்க்ரீட் போட்ட தரையாக  செஞ்சுக்கிட்டதுதான். திறந்த வெளியாக ரெண்டு பக்கம் மட்டும் சுவருள்ளதாக  இருக்கும். அளவு கூட  நாலு மீட்டர் பை ரெண்டு புள்ளி நாலு மீட்டர் இருக்கு.  கிட்டத்தட்ட 96 சதுர அடிகள்.  நம்ம கிச்சன் கிங்  வீடு கட்டிய புதுசுலேயே அதுக்கு மேலே  ஒரு சரிந்த கூரை  போட்டு,  மூணாவது பக்கத்துக்கு  ட்ரெல்லீஸ் வச்சு  , நாலாவது பக்கத்துக்கு நம்ம பழைய வீட்டுலே இருந்து கழட்டி எடுத்த  ஸ்லைடிங்  டோர்ஸ் எல்லாம் இங்கே சரிப்படுத்தி வச்சு இதை ஒரு அறையா அமைச்சுக் கொடுத்திருந்தார்.

அங்கே ஒருமேஜை போட்டு ஒரு ரெண்டு பர்னர் கேஸ் அடுப்பு,  டேபிள் டாப் ஆட்டுக்கல்  வச்சுக்கிட்டு இருந்தேன்.  நம்ம கிச்சன்  சாமான்கள்   மின்சாரத்துலே இயங்கும்  கடாய், தோசைக்கல்,  ஹாட் ஏர் அவன், வடை மேக்கர் ன்னு ஒவ்வொன்னாக் கூடி வர வர   அந்த மேஜையில் இடம் போதலை:(

இன்னொரு சுவர்ப்பக்கம் ஒரு நீள பெஞ்சு (இதுவும் என் தையல் மெஷீன், ஓவர் லாக்கர் வைக்க  கவுத்துப்போட்ட 'ட'  டிஸைனில் கோபால் செஞ்சதுதான்.  அப்புறம் ஒரு காராஜ் ஸேலில்  தையல் மெஷீன் வைக்கன்னே ரெடிமேடா வரும்  ஸோயிங் டேபிள் கிடைச்சதால் , நம்ம ' ட'வை நீட்டிக்கொடுத்துட்டார்  கிச்சன் கிங்) அதுலேயும் பக்கத்துலே ஒரு பிரம்பு ஸ்டேண்டிலும் நம்ம காக்டஸ் செடிகளை வச்சு இதை காக்டெஸ் கன்ஸர்வேட்டரியாகவும் வச்சுருந்தேன்.

வீட்டுப்ளானில் வீட்டுக்குள் ஒரு அடுக்களை மட்டுமே வைக்கணும் என்பது  சட்டம். ப்ளம்பிங் எலக்ட்ரிகல் வேலைகள் எல்லாம் இருக்கே. ரெண்டு அடுக்களைக்கு சிட்டிக்கவுன்ஸில்  அனுமதி தரமாட்டாங்க.

 ஆனால்....வீட்டுக்கு வெளிப்புறம் பார்பக்யூ ஏரியா ஒன்னு வச்சுக்க  அனுமதி உண்டு.சுட்டுத் திங்கும் சமாச்சாரத்துக்கு  இடம்  ஒதுக்கிக்கலாம்.
இங்கெல்லாம் வீடு கட்டிக்கணுமுன்னா வீட்டுப்ளானை சிட்டிக் கவுன்ஸிலுக்கு அனுப்பி அவுங்க அனுமதி வாங்கிக்கணும். கட்டும்போதே ஒவ்வொரு கட்டத்துக்கும் வந்து பார்த்து  சரியா இருக்கு. மேலே கட்டலாம் என்ற சான்றிதழ்  கொடுப்பாங்க.  இது கிடைக்கலைன்னா   கட்டும் வேலையைத் தொடர முடியாது. இதைப்பற்றியெல்லாம் நம்ம வீடு வா வாங்குது தொடரில் விளக்கமா(!)எழுதி இருக்கேன். வெறும் 46 பகுதிதான்:-)


அங்கே ஒரு பெஞ்சு  டாப் & கப்போர்டு வச்சுக்கலாமுன்னு  நம்ம மகள் வீட்டுக் கிச்சன் செஞ்சுதந்த கம்பெனியைக் கேட்டோம்.  சொன்ன விலை ரொம்பவே அதிகம்.  மற்ற ஹார்ட் வேர் கடைகளில்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்  டாப்  போட்ட மெட்டல் ஒர்க்  பெஞ்ச் கிடைக்குது. அளவு தான் நமக்கு  ஒத்துவரலை. அவை 2.4 மீட்டர் நீளம். நம்ம இடம்  இதே நீளத்துக்கு இருக்குன்னாலும்  ஸ்லைடிங் கதவில் இடிக்கும்.

தேடுதல் தொடர்ந்த நிலையில் ஒரு கடையில்  2.2 மீட்டர் நீள பெஞ்சு டாப் பலகை பார்த்தோம்.  இப்ப இதுக்குக் கீழே கப்போர்டு செஞ்சுக்கலாமுன்னு கோபால் சொன்னார். கார்ட் லெஸ் ட்ரில், மத்தபடி சுத்தி , அரம் இப்படி  மரவேலைக்கான சாமான்களை,  அப்பப்ப  சாண்ட்டா க்ளாஸ் தந்துருக்காரே.

எனக்கு ஹார்ட் வேர் கடையில் சுத்திப்பார்க்கறது சூப்பர் மார்க்கெட்டை விட சுவாரஸியமான பொழுது போக்கு. இன்னொருநாள் பார்த்தால்  கிச்சன் கேபினெட் பேஸ்  வச்சுருக்காங்க.வெவ்வேற அளவுகளில்  இருக்கு. நாம் அதை வாங்கி அஸெம்பிள் செஞ்சுக்கணும்.

2.2 மீட்டருக்கு  எந்தெந்த அளவு  கேபினட் வாங்கலாமுன்னு கணக்குப்போட்டு,  முன்னூறில் ரெண்டு, அறுநூறில் ஒன்னு,  நாப்பதில் ஒன்னுமா வாங்கினோம். மீதி இருக்கும் இடம்கேஸ் ஸிலிண்டர் வச்சுக்கன்னு  ஐடியா.

கேபினட்  மட்டும் தயாரிச்சுட்டு விக்காம,  அதுக்குண்டான Hinge, Knob எல்லாம்  தனித்தனியா அவுங்களே செஞ்சு வச்சுருக்காங்க.  இதை வாங்கினவன் அதையும் வாங்கித்தானே ஆகணும்! Kaboodle என்ற பெயரில் சீனத் தயாரிப்பு.

சும்மாச் சொல்லக்கூடாது.... நான் பார்த்தவரையில் இங்கே இறக்குமதி ஆகும் சீனத்தயாரிப்புகளுக்கு  அஸெம்ப்ளிங் இன்ஸ்ட்ரக்‌ஷன்  அருமையா இருக்கு.  எதெது எங்கே இணைக்கணும். எந்த பார்ட் எதுக்கு, எந்த ஆணி எதுக்குன்னு ஒரு சின்ன தகவல் பிழைகூட இல்லாமல் இருக்கும். தைரியமா நம்பி வாங்கலாம்.வாங்கி வந்த  மறுநாள் ஒரு முன்னூறு கேபினெட்டைப் பொருத்திவச்சுப் பார்த்தார் கோபால். சுலபமா செய்ய வருது.  க்றிஸ்மஸ் லீவுக்கான அஸைன்மெண்டா இதை ஒதுக்கி வச்சுக்கிட்டோம். லீவு ஆரம்பிச்சதும்  வேலையை ஆரம்பிக்குமுன்  சரியான கணக்கைப் போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஸிலிண்டருக்கு விட்ட காலி இடம்  வேண்டாமுன்னு தோணுச்சு. பெஞ்சு டாப்புக்கு அடியில் இன்னுமொரு நாற்பது  செமீ  கேபினெட் போடலாமா?  இன்னொருக்காக் கணக்குப்போட்டுப் பார்த்து  ரெண்டு நாற்பது, ஒரு அறுபது,  ஒரு எண்ணூறுன்னு போட்டால் என்ன?

அடடா...  ஏற்கெனவே தப்புக்கணக்கில் வாங்கி வந்தவைகளை என்ன செய்வது?  இங்கெல்லாம் நோ ஒர்ரீஸ். பாக்கிங் பிரிக்காம அப்படியே இருந்தால்  திருப்பிக்கொடுத்துட்டு மாத்திக்கலாம். வேணவேவேணாமுன்னு நினைச்சால்  திருப்பிக் கொடுத்துட்டுக் காசையும்  வாங்கிக்கலாம். என்ன ஒன்னு.... சாமான்கள் வாங்கின ரசீதைக் கடையில் காமிக்கணும்.

அதேபோல வேண்டாதவைகளைக் கொடுத்துட்டு  எண்ணூறு வாங்கிக்கிட்டோம். ஒரு முப்பது தான்,  அஸெம்பிள் பண்ணிட்டதால்  திருப்ப முடியலை. இருந்துட்டுப்போகட்டும். குச் காம் கோ ஆயேகா!
ஒருநாள் மடமடன்னு வேலையைப் பார்த்தார். நானென்ன செஞ்சேன்னு கேக்கபிடாது.  செய்முறை விதிகளைப் படிச்சு அததுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொடுப்பது என் வேலை. சுருக்கமாச் சொன்னால்...சித்தாள்! கூடவே  க்ளிக்கும் வேலையும் இருக்கே:-) அதிக உயரம்  வேண்டாம் என்பதால்  கேபினெட் பொதியில் இருந்த கால்களுக்கான பீடத்தை வைக்கலை.

காக்டஸ் கன்ஸர்வேட்டரியை முதலில்  காலி செஞ்சு இடத்தைச் சுத்தப்படுத்தினோம்.  செஞ்சு வச்ச கேபினெட்களை  அடுக்கிப் பார்த்தால்.....
வீட்டில் ஒரு கேஸ் அடுப்பு அவனோடு கூடியது  சும்மாத்தான் இருக்கு. பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்தது.  அது  விலை கூடியதும் கூட . அது வாங்கி  நாலாம் வருசம்  வீடு மாறிட்டோம்.  மகள் வீட்டுக்குப் போடலாமுன்னு வச்சுருந்து,  வச்சுருந்து அதுக்கு நேரங்காலம் அமையலை. ச்சும்மா  பொதிஞ்சு கிடக்கும் அடுப்பை இங்கே கொண்டு வந்து போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். பொதியைப் பிரிச்சுப் பார்த்தால் புதுக்கருக்கு மாறலை.  அவன் உட்பட முழு சமையல் செய்யலைன்னாலும்  தேவைப்பட்டால்  ஸ்டவ்டாப் மட்டும்  பயன்படுத்திக்கலாம்.  மேலும் அதிலுள்ள அவன் பகுதி, வார்மர் எல்லாம் ஸ்டோரேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுமே!

ஒருவழியா  வேலை முடிஞ்சதும் பார்த்தால்  இடமே பளிச்!   உடனே அவுட் டோர் சிட்டிங் இருக்கட்டுமுன்னு  நாற்காலிகள் போட்டுப் பார்த்தால் அமர்க்களம். நடுவில் வைக்க ஒரு சின்ன வட்ட மேஜை, மார்கெட்டில் நமக்காகவே காத்திருந்தது இன்னும் விசேஷம். ஒரே ஒரு சின்ன ப்ராப்ளம் என்னன்னா...மேற்  கூரையில்  பாலிகார்பனேட் இணைச்ச இடங்கள் சிலதில்  சன்னமான இடைவெளி வந்துருக்கு போல. லேசான ஒழுகல். நம்ம கிச்சன் கிங் இருந்தால் தகவல் சொல்லிட்டு நாம் நிம்மதியா இருக்கலாம்.  வேலை முடியும்வரை தூங்கமாட்டார் அவர்.  இந்தக்கூரை அவர் போட்டது இல்லை. அவர் போட்ட கூரையில்  ஆலங்கட்டி மழை விழுந்து   நிறைய இடங்களில்  பொத்தல் விழுந்துருச்சுன்னு  மாத்த வேண்டியதாப்போச்சு.  கிங்,நாட்டை விட்டுட்டு  இப்போ அமெரிகாவில் இருக்கார்.  அவர் தம்பிதான் இப்போ நமக்கு  அப்பப்ப எதாவது வேலைக்கு வந்து செஞ்சுட்டுப் போவார்.  ரெண்டாவது கூரை மாத்தியது தம்பிதான். கிங் போல வேலையில் அவ்ளோ சரி இல்லை இவர்.  ரொம்பவே சுமார்தான்.

நானே கூரை மாத்தப்போறேன்னு ஆரம்பிச்சார் நம்மவர்.  முதல் வேலையாத் தடா போட்டேன்.  காசுக்குப் பிடிச்ச கேடு. மாற்று மருத்துவமா என்ன செய்யலாமுன்னு யோசிச்சபோது,  இன்னொரு மெட்டீரியல் கிடைச்சது அதே ஹார்ட் வேர் ஷாப்பில்.  நல்ல கனம் கூடிய  ப்ளாஸ்டிக் ஷீட். மீட்டர் கணக்கில் வாங்கிக்கலாம். இங்கே Shade Cloth ஆக பயன்படுத்தறாங்க. அதில் தேவையான அளவு வாங்கி இருக்கும் கூரையின் மேலேயே  விரிச்சு  அங்கங்கே  மரத்தோடு இணைக்கும்  ஆணிப்பட்டைகளை வாங்கி அடிச்சுப் பார்க்கலாமே!
செஞ்சோம்.  மழை வந்தால் தாங்குமா, இல்லே ஒழுகுமான்னு பார்க்க, கார்டன் ஹோஸ் எடுத்து தண்ணீர் அடிச்சுப் பார்த்தால்.....   வெற்றி வெற்றி!

என்ன ஒன்னு இப்போ கூரைக்கு அடியில்  நாற்காலிகளில் உக்கார்ந்தால்  சூடு அதிகமாத் தெரியுது. எப்பவாவது வரும் சூரியன் என்றாலுமே வந்துட்டான்னா..... கூரையைப் பொத்துக்கிட்டுல்லே வர்றான்.

நமக்கென்ன ஐடியாவே வராதா என்ன?  போடு ஒரு ஷாமியானா:-)  தேடிப் பார்த்ததில்  அனிமல் தீம் உள்ளது மாட்டுச்சு.  ஆணிப்பட்டை வச்சு இதையும் ஒரு வழியாப் பொருத்தி இருக்கோம்.

எல்லாம் நல்லபடி அமைஞ்சதில் நம்ம வீட்டுத் தொழிலாளிக்கு  ரொம்பவே மகிழ்ச்சி. இதே மகிழ்ச்சியோடு  இங்கே சமைச்சுக்குங்கன்னு சொல்லி மகிழ்ச்சியை அதிகரிச்சுட்டேன்:-)

தொழிலாளியின் மற்ற தொழில் விவரங்கள்  அடுத்து வரும் பதிவுகளில் வரும்!

PINகுறிப்பு:    நியூஸி ரிட்டர்ன் ஆட்டுக்கல்  புராணம்: இந்திய வாசம்  சமயம் இங்கிருந்து  கொண்டுபோன சாமான்களுடன் சாந்தாவையும் தூக்கிப்போட்டோம். சென்னையில் அதை ரிப்பேர் செஞ்சால் ,  நம்ம ஹோப் ஃபவுண்டேஷனுக்கு  பயன்படுமான்னு கேட்டால்,  மலர்விழி (ஹோப் இயக்குனர்)  உடனே வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஹோப் ஹோமுக்கு கல் வேண்டி இருந்த சமயமாம். 'இருவது ரூபாய் செலவில் இந்த பெல்ட்டையே வெட்டி ஒட்டுனதும், ஜோராய் அரைக்குது மேடம். உங்க பெயர் சொல்லி குழந்தைகளுக்கு இன்னிக்கு இட்லி'ன்னு  ஃபோனில் சேதி சொன்னாங்க.   பயனாகுது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி!
21 comments:

said...

சார் எவ்வளவு அழகாக செய்துள்ளார்... அவருக்கு தான் பாராட்டுக்கள்... க்கும்... உங்களுக்கு வாழ்த்துக்கள்... ஹிஹி...

said...


"ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா? (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 2)"= துளசிதளம் = எவ்வளவு அழகாக, ரசித்து, நம்முடம் பேசுவது போல் எழுதியிருக்கிறார்கள்? படித்துப் பாருங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா......
அப்ப ஊக்கு'விற்றவளுக்கு' வாழ்த்துகளா!!!

said...

வாங்க ரத்னவேல்.

மனம் நிறைந்த நன்றி.

said...

அற்புதமான ஏற்பாடுகள்.

சார்தான் பாவம். இப்படியே அவரை முழு வீட்டையும் கட்ட வைச்சுடுவீங்க போலிருக்கே?

said...

வாங்க ரமா ரவி.

அடடா.... சாருக்கு மட்டும் வீடு கட்டத்தெரிஞ்சா பில்டருக்குக் கொடுத்த காசை மிச்சம் பண்ணி இருக்க மாட்டேனோ!!!!!

said...

ஷாமியானா அழகென்ன,காசஸ் அடுப்பென்ன. கல்யாணமே
செய்யலாம் மாதிரி வெகு அழ்கான பதிவும். உண்மையாகவே
ஹோம் இம்ப்ரூமென்ட் பதிவு கலர்ஃபுல். வெகு அழகுமா.
இருவர் உழைப்பும் மேலும் பரிமளிக்கட்டும்.

said...

சூப்பர் !

said...


ஸூப்பருங்கோ,,,

said...

வாங்க வல்லி.

இந்த Do It Yourself (DIY) தயவால் பல வேலைகளைக் கற்றுக்கொண்டோம்.
இந்தியா திரும்பினால் வேலை கைவசம் இருக்கு:-)

இன்னொரு இடத்தில் ஒரு காட்சி கண்டபோது சிங்கத்தை நாங்க ரெண்டுபேரும் ஒரே சமயத்தில் நினைச்சோம்ப்பா.

ஒருநாள் பதிவு எழுதணும். எழுதுவேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரசிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க கில்லர்ஜி.

இங்கே பெரும்பாலும் தாமாய் தாமாய்தான். நம்ம வீட்டுத்தோட்டத்தில் புல் வெட்டுவதற்குத்தான் ஒருத்தர் வந்து போவார். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு கணக்கு.

குளிர்காலத்தில் மூணு மாசம் லீவு:-)

நம்மிடமே லான் மோவர் இருக்குன்னாலும், வெட்டிய புல்லை வாரிக்கொண்டுபோய் டம்ப்பில் போடும் வேலை ஒன்னும் இருக்கே!

said...

உஸ்ஸ்ஸ்...ஸப்பா!!படிக்கும் போதே கண்ணைக்கட்டுதே..! புகுந்து புறப்பட்டு வெற்றிகரமாக வெளிவந்த கோபாலுக்கும் உங்களுக்கும் ஒரு கை குலுக்கல் !!!

said...

வாங்க நானானி.

ஆட்டுக்கல்தான் அரவையில் இழுத்துருச்சுப்பா. நிக்கலையே ஓட்டம்:-)

கைகுலுக்கலுக்கு நன்றி.

said...

பாவம் கோபால்..! நிறையவே கஷ்டப் பட்டிருப்பார். முதல் கிச்சனில் நகரவே இடமில்லையோ.?

said...

தொழிலாளினா இப்படி வேலை வாங்கறீங்களே... நியாயமா?

BBQ இடத்திலே ஷேமியானா கட்ட இத்தனை உயரமாவது இருக்கணும்னு கவுன்சில் விதி ஏதாவது இருக்கா?

said...

கார்டன் வ்யூ ரொம்பப்பிடிச்சிருக்கு. அந்தப்பக்கம் கிடக்கும் நாடாக்கட்டில் உட்பட.

இப்ப ரெண்டாவது அடுக்களையும் நிரம்பினாப்ல தெரியுதே துள்சிக்கா ;-)

உழைப்பாளிக்குப் பாராட்டுகள் :-)

said...

எவ்வளவு உழைப்பு.
அசத்திவிட்டார் கோபால் சார்

said...

தனியொரு மனிதனாக நின்று இதனைச் செய்து முடித்த கோபால் சாருக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும். :)

ஒரு வீட்டுல ரெண்டு அடுக்களையும் இருக்கலாம். ரெண்டு வீட்டுக்கு ஒரு அடுக்களையும் இருக்கலாம்.

ஒரு அடுப்பாங்கரையை உருவாக்குறத இவ்வளவு அழகான பதிவாகப் போட்டிருக்கீங்க. என்ன இருந்தாலும் ஒட்டுமொத்த வலையுலகத்தின் டீச்சராச்சே.

said...

அடுக்களை சூப்பர்.
அமைச்சு தந்த சாருக்கும், உடன் வேலைசெய்து அழகிய அடுக்களையை உருவாக்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

said...

கோபால் சார் சூப்பரா செஞ்சு கொடுத்துருக்கார்.

அடுக்களை ஜோரா இருக்கு டீச்சர்.