Friday, May 16, 2014

ப்ரயாக் என்னும் இலஹாபாஸ்

வெறும் 121 கிலோமீட்டர் பயணத்துக்கு மூணு மணி நேரத்துக்குமேலே ஆச்சுன்னா நம்புவீங்களா?  வழியிலே எங்கேயும் நின்னு நிதானிச்சு ஒன்னுமே பார்க்கலை என்றாலும்,  நம்ம கைலாஷ் டீ குடிக்க ஒரு பத்து மினிட்  வண்டியை டீக்கடையில் நிறுத்தினதோடு சரி. பொட்டிக்கடையும் டீக்கடையுமா டூ இன் ஒன் வகை!  (இனி டீக்கடைகளை அலட்சியப்படுத்த முடியாது, கேட்டோ!)

சாலை இருக்கும் அழகில் டோல் வேற கட்டணும்!  தமிழ்நாடே தேவலை போல!  இத்தனைக்கும்  இது ஒரு முக்கிய நகரம். ஆன்மீகத்துக்கும் சரி, அரசியலுக்கும் சரி!  ஆடிக்கிட்டே போகும் ட்ராக்ட்டர் வண்டிகளுக்குப் பின்னால் மாட்டிக்கிட்டோமுன்னால்  அவ்ளோதான். தன் வண்டியை கொஞ்சூண்டு ஓரமா ஒதுக்கலாம்  என்பதுகூட அறியாத 'அப்பாவிகள்'
ஊருக்குள் நுழையுமுன்பே வரப்போகும் தேர்தல் விளம்பரம் பார்த்தேன். குளிர்காலம் என்பதால்  ஊர் எழுந்து சோம்பல் முறிக்கவே காலை பதினொருமணிஆகிருது.

கங்கைப்பாலம் கடக்கும்போது  ஒரு பக்கம் கூடாரங்கள். இதுதான்  கும்பமேளா நடக்கும் இடமோ?


கும்ப் நகரி ப்ரயாக் மே பதார்னே கேலியே தன்யவாத்


அலஹாபாத் என்று இப்போ நாம் சொல்லும் இந்த நகரின்  ஆதி காலப் பெயர்  ப்ரயாக் (பிரயாகைன்னு  நம்மாளுங்க சொல்றாங்க)   அக்பர் காலத்துலே  (1575 கி பி)  இலஹாபாஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கு.   இப்ப ஹிந்தியில் எழுதும்போது இலஹாபாத்  என்றே எழுதிப்போட்டுருக்காங்க.

ஹொட்டேலுக்கு  ஃபோன் செஞ்சு ஊருக்குள்ளே வந்த விவரம் சொல்லி வழி கேட்டுப் போய்ச் சேர்ந்தோம்.   பகல் 12 மணி. ஹொட்டேல் கானா ஷ்யாம் ( Hotel  Kanha Shyam). மெயின் ரோடில் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் உள்ளே தள்ளி இருப்பதால்   அமைதியாகத்தான் இருக்கு.  கைலாஷுக்குக் கணக்கு தீர்த்து அனுப்பினோம்.  கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.  காசியில் கவனிச்ச முக்கியமான விஷயம் இது ஒன்னு.   நம்ம பக்கம்போல் ஜஸ்ட் ஒரு கை உயர்த்தி வணக்கம் சொல்லாமல்,  எல்லோருமே இரு கை கூப்பி விநயமா வணக்கம் சொல்றாங்க.  ரொம்ப நல்ல பழக்கம். நானும் கத்துக்கிட்டேன்.

அறைக்குள் போய் ஜன்னல் திரையைத் திறந்ததும் வானில் வட்டமிடும் கருடன்!   காசிக்குமேல்தான் பறக்கக்கூடாது. இங்கே பறக்கலாம்னு எவ்ளோ அறிவா செயல்படுது பாருங்களேன். க்ருஷ்ணா க்ருஷ்ணா!!!!



மத்தபடி ஜன்னல் வ்யூ ஒன்னும் அவ்வளவா நல்லா இல்லை. தகரக்கூரைகளுடன் கடைகள் கூட்டமா இருக்கு.   அதுலே மென்ஸ் பார்லர் ஒன்னு பார்த்துட்டு, உங்களுக்காக  ஒரு ஸ்பெஷல் கடை இருக்குன்னேன், கோபாலிடம்:-))))

எல்லா ஹொட்டேல்களையும் போல்  வரவேற்பு பகுதி  அழகாவே  இருக்கு.  ட்ராவல் டெஸ்க்கில் ஒரு கார் வேணுமுன்னு சொல்லிட்டு  லஞ்ச்  முடிச்சுக்கலாமுன்னு  ரெஸ்ட்டாரண்ட்க்குள் போனோம். ரொம்ப  ஆர்பாட்டமில்லாமல் சிம்பிள்  செட்டிங்ஸ்தான்.  ஜன்னலுக்கு வெளியேதான் அட்டகாசமான  காட்சிகள்.  ஏகப்பட்ட பூந்தொட்டிகளுடன்  தோட்டம். ஒரு பெரிய  கப்புக்குள்  மரம்!  சூப்பர் ஐடியா.

இன்னொரு கட்டிடத்தின் டெர்ரஸ்ஸில் இருந்த  புல்வெளியைச் சரியாக்கிப் புதுச்செடிகள் வைக்கும் வேலை நடக்குது.

லஞ்சுக்குப்பின் வெளியே கிளம்பினோம்.  ரெண்டு இரவு தங்கறோம் இங்கே என்றாலும்  ஜஸ்ட் அரைநாள்தான் இந்த ஊருக்கு. முதலில்  த்ரிவேணி சங்கமம்.  அதுக்குப்பின் என்ன கிடைக்குதோ அது. ரொம்ப எதிர்பார்ப்பு இல்லை.  அலஹாபாத் என்றதும் நினைவுக்கு வரும் சமாச்சாரம் கும்பமேளா தான் என்று சொன்னால் மிகையில்லையாக்கும்.

பாற்கடலைக் கடைஞ்சு அமுதம் கிடைச்சது பாருங்க. அப்போ அந்த அமுதக்குடத்தை எடுத்துப்போகும் வழியில் அதுலே இருந்து ததும்பின துளிகளில் நாலு மண்ணுலகில் விழுந்துச்சாம். அப்படி விழுந்த இடங்களில் இது ஒன்னு. மற்ற மூணு துளிகள் வீழ்ந்த இடங்களா ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி இருக்கு.

இந்த நான்கு இடங்களில்தான் மூணு வருசத்துக்கு ஒரு முறை கும்பமேளா நடக்குது. அரைக்கும்ப மேளான்னு ஆறு வருசத்துக்கு ஒரு முறை அலஹாபாத் & ஹரித்வார் நகரங்களில் நடக்கும். அப்புறம் 12 வருசங்களுக்கு ஒருமுறை பூர்ண கும்பமேளா அலஹாபாத் த்ரிவேணி சங்கமத்தில். நடக்குது. அப்புறம் 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒரு முறை (144 வருசம்) அலஹாபாத்தில் மகா கும்பமேளா நடக்குமாம். என்னமா கணக்கு வச்சுருக்காங்க பாருங்க!!!!

2013 லே ஒரு மஹா கும்பமேளா நடந்தது, அலஹாபாதில். ஜனவரி 27 முதல் ஃபிப்ரவரி 25 வரை திருவிழா. கங்கைக் குளியலுக்கு மேற்படி உள்ள 4 வாரங்கள்  மிகச் சிறந்தவைன்னு பண்டிதர்கள் குறிச்சுருக்காங்க. ஆனாலும்  ஜனவரி 14 முதல் மார்ச் 10 வரைன்னு  முன்னாடி ரெண்டு பின்னாடி ரெண்டுன்னு நாலுவாரம் நீட்டி வச்சுருக்கு சாஸ்த்திரம். மக்கள்  வசதியை முன்னிட்டு சாஸ்த்திரங்கள் எல்லாம்  வளைஞ்சு கொடுப்பதும் நல்லதுதான்.   இப்ப  எட்டுவாரம் ஆகி இருக்கு பாருங்க!

இந்த 56 நாள் விழாவில்  திரிவேணி சங்கமத்தில்  என்னைக்கு வந்து முழுக்கு போட்டாலும் புண்ணியமே புண்ணியம். 144 வருசத்துக்கு ஒரு முறை வரும் மஹாகும்பமேளாவுக்கான  கூடுதல் மரியாதையை இப்படித்தான் காமிக்கணும், இல்லையோ!

இங்கே  அலஹாபாத்தில்தான்  யமுனை நதியும் கங்கைநதியும்  ஒரு இடத்தில் ஒன்னா சேர்ந்துருது. இந்த ரெண்டு புண்ணியநதிகள் மட்டுமில்லாமல்  சரஸ்வதி நதியும்  நிலத்துக்கடியில் ஓடி வந்து இவைகளுடன் சேருது என்று புராணம் சொல்லுது.  சரஸ்வதி  அந்தர்வாஹினி. நம்ம கண்ணுக்குப் புலப்படாது.   இந்த மூணு நதிகளும் சேரும் இடத்தையே  த்ரிவேணி சங்கமம் என்கிறார்கள்.

மிகவும் புண்ணியம் வாய்ந்த இடமாக இது இருக்கு. அமிர்தம் விழுந்தது பத்தாதுன்னு   மூணு நதிகளும் சேர்ந்து ஆசிகள் வழங்குதுன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த இடத்துக்குப்பிறகு  நதியின் பெயர்  வெறும் கங்கை மட்டுமே. இதுதான் வாரணாசி (காசி) வழியாகப் போகிறது. அக்கம்பக்கம்   எந்த நதி/ஆறு   கங்கையில் வந்து கலந்தாலும்   அப்புறம் அது கங்கை மட்டுமே!

போன  (2013) மஹாகும்பமேளாவுக்கு  வருகை தந்த பக்தர்கள் மட்டும் 12 கோடின்னு  கும்பமேளாக் கமிட்டி சொல்லுது!   நினைச்சபடி வந்து  முங்கிட்டு போக முடியாது.  பக்தர்கள் வர வர அவுங்களை ஒவ்வொரு குழுவாகப் பிரிச்சு இந்த நாள் இந்த டைமுன்னு  ஏற்பாடு செய்யுது இந்த  கமிட்டி.  பாதுகாப்பு,  மக்களைக் கட்டுப்படுத்துதல் இப்படியானவைகளுக்கு  ஏராளமான  காவல்துறை ஆட்கள். அவுங்க தங்குவதற்குத் தேவையான கூடாரங்கள்,  சாப்பாட்டு வசதிகள் இப்படி  பரபரப்பான  நாட்களாப் போயிருக்கு. அதன் மிச்சத்தை இப்பவும் பார்க்கிறோம்.  சங்கமத்தின் கரையை சமீபிக்க நிறைய தொலைவு இருக்கக்குள்ளேயே  கூடார வரிசைகள் ஆரம்பிச்சுருது.

நம்ம ட்ரைவர் குமார்,  நதிக்கரை அருகில் வண்டியைக்கொண்டு போய் நிறுத்தினார். ஏராளமான படகுகள்,  பயணிகளுக்குக் காத்து நிக்குது.  கண்களில் விசாரிப்புடன் நம்மை நெருங்கின படகோட்டியிடம்  சங்கமம் வரை போக எவ்ளோ சார்ஜ்ன்னு கேக்கறோம்.  மூவாயிரம் சொல்றார். நம்ம திகைப்பைப் பார்த்துட்டு  தலையை ஆட்டியபடியே   ரெண்டாயிரத்து  ஐநூறுன்னு  இறங்கிட்டு, இதுக்குமேலே கேக்காதே என்ற பார்வையை  வீசினார்.

சரி வேற யாரிடமாவது  விசாரிக்கலாமுன்னு நகர்ந்தோம்.  இன்னொரு ஆள் கறாரான தொனியில்   'ஆட் ஹஸார்' ன்னார்.  ஐயோ..... எட்டாயிரமா !!!  இங்கிருந்து  பார்த்தாலே  கொஞ்சதூரத்துலே கரைகட்டி விட்டதுபோல் தெரியும் இடத்துக்குப்போய்வர எட்டாயிரமா?  முதல் ஆளே தேவலை போல இருக்கேன்னு  திரும்பினோம். (மேலே உள்ள படத்தில் இடது பக்கம் தண்ணீரில் ஒரு கருப்புக்கோடு தெரியுது பாருங்க, அங்கெதான் போய்வரணும்) 


எல்லாம் ஒரு கேங்கா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.  இந்த ஆள் நமக்காகக் காத்திருந்தார்.  எப்படியும் வந்துருவோம் என்ற அபார நம்பிக்கை!   நம்ம டிரைவர் உள்ளூர் ஆளாச்சே. சரியான  சார்ஜ் தெரிஞ்சுருக்குமேன்னு அவரைக் கேட்டால்.... 'இங்கெல்லாம் இப்படித்தான்.   முதல்லே சொன்னது சரியான  சார்ஜ்தான் என்றார்.  கூட்டுக்களவாணிகள்:(

சரின்னுட்டு  படகில் ஏறினோம். இன்னொரு ஆள் வந்து படகில் ஏறி உக்கார்ந்தார்.  படகுக்காரருக்கு  அசிஸ்டெண்ட்ன்னு நினைச்சேன்.  நிதனமான வேகத்தில் துடுப்புப்போட படகு முன்னேறுது. ஒரு பதினைஞ்சு நிமிசத்தில் சங்கமம் வந்துட்டோம். ஒரு இருவத்தியஞ்சு முப்பது படகுகளை   நீளவாக்கில் ஒன்னையொன்னு தொட்டபடி நிறுத்தி வச்சு ஒரு  கரை மாதிரி பண்ணி இருக்காங்க.  நம்ம படகில் இருந்து அந்தப் படகு ஒன்றுக்குத் தாவிப்போகலாம். ரெண்டுக்கும் நடுவே ஒரு மரப்பலகை வச்சும் பாலம் போட்டுக்கலாம். கவனமாக் கால் வச்சுப்போகணும்.

அந்தப்படகுகளின் அடுத்த பக்கம்  பெரிய மூங்கில்களை நதியில் நட்டு  அதுக்கிடையில் மேடை போல மரப்பலகைகளால் போட்டுருக்காங்க.   பலகை ஓரமாப்போய் நதியில் இறங்கி முங்கி வரலாம்.  கீழே தண்ணீருக்குள் மணல் மூட்டைகளைப் போட்டு அதன்மேல் பலகைகள் வச்சு உறுதியாக் கட்டி வச்சுருப்பதால்  குளிக்கும் மக்கள்  காலடியில் பலகை இருக்கு.

பயமில்லாமல்  இடுப்பளவு  ஆழத்தில் முங்கி வரலாம்.  பலகைக்கு அந்தப்பக்கம் கால் வச்சால் அம்புட்டுத்தான்.  மரமேடையை ஒட்டியபடியே முங்கி வரணும்.

வரிசை கட்டி நிற்கும் படகுகள் ஒவ்வொன்னிலும் ஒரு பண்டிட் தயாரா உக்கார்ந்துருக்கார்.  தவிர பக்கெட்டில் பால், மூங்கில்தட்டில் பூக்கள், பூஜை சாமான்கள் ,  நாரோடுள்ள  முழுத் தேங்காய் வச்சு விக்கறாங்க. ' நதி மாத்தாவுக்கு நாரியல் ச்சோடோ, தூத் ச்சோடோ' நம்மகிட்டே சொல்லிக்கிட்டே இருக்காங்க.

 படகோட்டியின் உதவியாளர் னு நினைச்சவர்  தேங்காய்க்குப் பக்கத்தில் போய் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.  பூஜை பண்ணிக்க வா வான்னு கூப்பிடறார். அப்பதான்  அவர் பின் தலையைக் கவனிச்சேன். துளியூண்டு குடுமி.  ஆஹா.... இவர் பண்டிட்.

த்ரிவேணி சங்கமத்தில் வேணிதானம்  ப்ரதானம். கங்கையும் யமுனையும்  கண்மறைவா சரஸ்வதியும் சேருமிடத்தில்  தண்ணீரில் பார்த்தால் அங்கங்கே சுழல் போல் சுத்துது. பரிகாரம், வேண்டுதல் இப்படி கொஞ்சூண்டு நம் தலைமுடியை (வேணியை) துண்டிச்சுப்போட்டால்  சட்னு உள்ளே இழுத்துக்குது அந்த சுழல்கள்.

நம்ம காசி பண்டிட் சிவகுமார் கூட ' முண்டன், பிண்டம், தண்டன்' என்று சொல்லி இருந்தார்.  ப்ரயாகையில்  தலை முண்டிதம், காசியில் பிண்டப்ப்ரதானம்,  கயாவில்  விஷ்ணுபாதத்துக்கு  தெண்டனிட்டு வணக்கம்'  இவைதான் விசேஷமாம்.

இங்கே வரும்வழியிலேயே த்ரிவேணி வேணிதானம்,  முழுக்கு எல்லாம்  ரொம்ப சிறப்பானதுன்னு கோபாலிடம் சொல்லிக்கிட்டே வரும்போதே,  உஷாரான பார்ட்டியா  இவர், 'இதப் பாரு. அங்கேயெல்லாம்  முங்கணுமுன்னு  சொல்லிறாதே. ஏற்கெனவே கங்கையில் ரெண்டுதரம் உன்னால் முங்கினேன்.  இப்ப இங்கேயுமுன்னு நைஸா ஆரம்பிக்காதே'ன்னார்:-)

நேத்தே கொஞ்சநேரம் 'முங்க வச்சுட்டாளே, அதுவும் ரெண்டுவாட்டி'ன்னு மூஞ்சைத் தூக்கி வச்சுருந்தார். மாமனார் மாமியாருக்காக இதைக்கூடச் செய்யப்டாதா?ன்னதும் முழிச்சார்.  உன் மாமனார் மாமியாரா?  இல்லை உங்க மாமனார் மாமியார்!  ரெண்டு செட்டுக்கு ரெண்டுதரம் சரியாப்போச்சு இல்லையோ:-)

வரிசைப்படகுகளை ஒன்னோடொன்னு கயிறால் பிணைத்து  நகர்ந்து போயிறாமல்  கட்டி வச்சுருக்காங்க.  கொஞ்சநேரம் அங்கே நடக்கும் ஜபதபங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  கொஞ்சூண்டு  தலைமுடியை  கட் செஞ்சு போட்டால் தேவலைதான்.  ஆனால் அது அத்தனை சிம்பிள் இல்லை. அதுக்குண்டான பூஜைபுனஸ்காரங்களைச் செஞ்சுக்காமல் தப்ப முடியாது.   (தம்பதிகள் இருவருமா, நதியில் முங்கி எழுந்தபின் கணவன் மனைவிக்கு  மூணுபிரிவா தலைமுடியைப் பின்னி ஜடை போட்டுவிட்டுக் கடைசியில்  கொஞ்சம் வெட்டித் தண்ணீரில் போடணும். பிறகு இன்னொரு முங்கு.  புதுப்புடவை, தானம் இப்படி ஏகப்பட்டவைகள் )

அதுவுமில்லாமல் கோபால் கையில் கத்திரி கிடைச்சால் போச்சு.  மொட்டை அடிச்சுட்டுத்தான் மறுவேலை!  கார்டன் சிஸர்ஸ் வச்சு நம்மூட்டுச் செடிகளை ஒருவழி செஞ்சுருவார்.  கொஞ்சூண்டு  முடியை ட்ரிம் பண்ணிவிடறேன்னு  என்னையும் ரெண்டுதடவை (!) மொட்டை அடிச்சிருக்கார்,கேட்டோ:-)  பட்டும் புத்திவராம  போனமாசம் தலையைக் கொடுத்து இப்போ புது மொட்டையா நிக்கறேன். அடுத்தமுறை நல்லா ட்ரிம் செஞ்சுவிடறேன். கோச்சுக்காதேன்றார்!!!

இதுக்கிடையில்  பண்டிட் மந்திரம்  சொல்லிக் கையில் தந்த தேங்காய் வாங்கித் தண்ணீரில்  விட்டார் ஒருத்தர்.  எட்டிப் பார்க்கும்போதே கொஞ்ச தூரத்தில்  தண்ணீரில் நின்ன ஒரு ஆள் அதை சட்னு நீந்திப்போய் பிடிச்சுக்கிட்டார்.   மறுபடி அது  படகுக்கு வந்து  விற்கும் தேங்காய்க்குவியலில் உக்கார்ந்துச்சு. சரியான ரீ சைக்ளிங்:-)  பாலுக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை.  நிறைய தண்ணீர் ஊத்தி விளாவி ஜஸ்ட் பால்  நிறத்தில் பக்கெட் நிரம்ப தண்ணிதான் ஏற்கெனவே:-)

ஒரு இருபது நிமிசம்போல நின்னு  வேடிக்கை  பார்த்துட்டு  மறுபடி நம்ம படகுக்கு வந்தோம்.  கங்கைத் தண்ணீர்  ஒரு லேசான மண் நிறத்துடனும், யமுனை  கொஞ்சம் கருமையா இருக்குன்னும்  (இதையாவது பார்த்துக்கோ)  பண்டிட் சுட்டிக் காமிச்சார்.  அவரும் நம்மோடவே படகுக்கு வந்துட்டார் கேட்டோ.



லேசா மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு, இவ்ளோதூரம் பயணம் பண்ணி யாத்ரைக்கு வந்துட்டு பூஜை செய்யாம (பாவிகள். புறம்போக்குன்னு திட்டி இருப்பார்)  இருந்தா நல்லவா இருக்குன்னு கேட்டார்.  நான் சிரிச்சுக்கிட்டே தலையை ஆட்டினேன்.  எந்த ஊர்? தெலுகு லோக்?  இல்லைன்னு தலை அசைச்சதும், 'அதானே பார்த்தேன். தெலுகு மக்கள்  ரொம்ப தாராளம். எல்லா பூஜைகளையும் நல்லபடி செஞ்சுக்கிட்டு தக்ஷிணையும் தாராளமாக் கொடுப்பாங்கன்னார்!!! ஆங்..............

நம் குகன்  (படகோட்டி  ) பெயர்  அக்‌ஷய்.  சொந்தப்படகு இல்லையாம்.  ஓனருக்கு நாலைஞ்சு படகு இருக்கு. அதுலே இது ஒன்னுன்னார்.  சட்னு பார்க்கும்போது எனக்கு மூன்று முடிச்சு பட ஸீன் நினைவுக்கு வந்துச்சு.  தலையை சிலுப்பிக்கிட்டுப்  படகு வலிக்கும் விதமும் 'அதே'ஸ்டைல்தான்:-)))

ஏராளமான கடல்புறாக்கள் (கடல் காக்கைகளோ?)  தண்ணீருக்கு மேலே........   தீனி போட்டு விடறாங்க போல!


நீர் போகும் திசையிலேயே இப்பப் படகு போவதால்   கொஞ்சம் சீக்கிரமாவே கரைக்கு வந்திருந்தோம்.  அக்‌ஷய்க்குக் கணக்கு தீர்த்த கையோடு பண்டிட்டுக்கும் ஒரு நூறு ரூ கொடுத்தார் கோபால்.  அதெல்லாம் ஒன்னும் வேணாமுன்னு  சொல்லிக்கிட்டே வாங்கிக்கிட்டார்.

மண்ணில் கால் வச்சதும் பரமசிவனும் பார்வதியும் நமக்கு ஆசி வழங்குனாங்க!!!

தொடரும்.........:-)






25 comments:

said...

இத்தனை அருமையாக படங்களுடன்
விரிவான விளக்கத்துடன் ஒரு பயணக்கட்டுரை
படித்ததில்லை எனச் சொல்லத் தோன்றுகிறது
மிக மிக அருமையான பயணக் கட்டுரை
முதலில் இருந்து படிக்கத் துவங்குகிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

பூஜைபுனஸ்காரங்களை அறிந்தேன்...

படங்கள் அனைத்தும் அருமை அம்மா...

said...

பிரயாக் போய்வந்த மாதிரி இருக்கு.

said...

//, 'இதப் பாரு. அங்கேயெல்லாம் முங்கணுமுன்னு சொல்லிறாதே. ஏற்கெனவே கங்கையில் ரெண்டுதரம் உன்னால் முங்கினேன். இப்ப இங்கேயுமுன்னு நைஸா ஆரம்பிக்காதே'ன்னார்:-//

நாரதர் வேடம் போட்டுக்கிட்டு
நாராயணன் நாமம் சொல்லமாட்டேன்னா
நடக்குமா ?

said...

ஊரை பற்றிய தகவல்களோடு அப்பபோ குகன், பண்டிட் பத்தி (அந்த ச்ச்சின்ன குடுமிய ஒருபோட்டோ .. பண்டிட்டின் சைடு போஸ் ... நாங்களும் பார்க்கவா?)
கோபால் அவர்களுடனான உரையாடல்கள் (twice கங்கையில் முங்கியது பற்றி அவரின் புலம்பல் )

கூடவே பயணித்தது போல் இருக்கு :)
Great writing Thulasi!! Thank you .

said...

முதல் தடவையா நிறைய சிரிச்சேன் துளசி. மாமனார் மாமியார் ஜோக் பிரமாதம். சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு உங்க தலையில் காட்டிட்டாரோ. வளர்ந்துடும்பா.அந்தத் தேங்காயில் எத்தனை ஆத்மாக்கள் பேர்கள் அடங்கி இருக்கோ.. படகே பயம்.அதில பகையில் நடந்து போகணுமா. ஆளைவிடு.

said...

மஹாகும்பமேளா சமயத்தில் இங்கே சென்று வந்த அனுபவங்களை எனது பதிவில் எழுதி இருந்தேன்.

மஹாகும்பமேளா - மொத்தம் எட்டு பகுதிகள்... இங்கே இருக்கிறது முத்ல் பகுதி...

http://venkatnagaraj.blogspot.com/2013/03/1.html அப்படியே நூல் பிடிச்சு போனா எல்லாப் பகுதியும் படிக்கலாம்!

இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் அலஹாபாத் பயணம்.

said...

உங்க கூட நாங்களும் இருந்த மாதிரியான உணர்வை உண்டாக்கிட்டீங்க..படங்களோட கோர்வையா சொன்னதால அப்படி ஒரு உணர்வு.

இங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.

சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்

said...

நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் போல அந்தப் படகுக்காரர்களும் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு ஆட்களைப் பிடிக்கிறார்கள் போலும். அந்த பண்டிட் உள்ளுக்குள் குமுறியதையும் எழுத்தில் கொண்டுவந்தது சூப்பர்.

said...

அலகாபாத்துதான் பிரயாகையா! கும்பமேளா புகழ் அலகாபாத்.

தேங்காய் ரீசைக்கிளிங்க் எல்லாம் சாத்திரத்துல வருமா? அந்த பண்டிட்டுகள் கிட்ட கேட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்.

இந்த இடங்கள்ளாம் இப்படிப் பாத்து தெரிஞ்சிக்கிறதுதான். உங்கள் சேவை. எங்கள் தேவை. :)

said...

வாங்க ரமணி.

வாழ்த்துகளுக்கு நன்றி. ஊக்கம் தரும் பின்னூட்டம் கண்டு, இன்னும் கவனமாக எழுதணும் என்ற உணர்வும் வருகிறது.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நல்லா நினைவு வச்சுக்குங்க.... புதுப்புடவை!

said...

வாங்க குமார்.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

உண்மையில் கோபால் வாயிலே நாராயணா வருவது அபூர்வம்:-)

எப்பவும் முருகா முருகா தான்!

said...

வாங்க சசி கலா.

ஆஹா.... பாய்ண்டைப் பிடிச்சுட்டீங்க:-))))

தேங்கீஸ்ப்பா.

said...

வாங்க வல்லி.

அதெல்லாம் நம்மைப் பத்திரமாப் பிடிச்சுக்கொண்டு போய் அடுத்த படகில் விட்டுருவார் படகுக்காரர்.

அந்தப் படம் பதிவில் போடலை:-)))

எல்லாம் ஒரு அனுபவம்தான்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் போகுமுன்பும், காசிப் பதிவுகள் எழுதும்போதும் உங்கள் பயண அனுபவங்களை அடிக்கடி வந்து பார்த்துக்கிட்டே இருந்தேன் என்பதே உண்மை:-)

said...

வாங்க கோகுல்.

நோக்கியாவை நோக்கியாச்சு.

நன்றி.

said...

வாங்க கீத மஞ்சரி.

அப்படி ஒரு ஒற்றுமை அவுங்களிடம் இருக்கு பாருங்க:-))))

said...

வாங்க ஜிரா.

தை மாசம் பிறந்ததும் ஒரு மாசத்துக்கு ஒரு திருவிழா (FAIR) நடக்குமாம். அதுக்குத் தயாராகிக்கிட்டு இருக்கு ஆத்தங்கரை!

எத்தனையெத்த இடங்கள், என்னென்ன நம்பிக்கைகள் என்று பார்த்தால் மிஞ்சுவது வியப்புதான்!

said...

//நம்ம டிரைவர் உள்ளூர் ஆளாச்சே. சரியான சார்ஜ் தெரிஞ்சுருக்குமேன்னு அவரைக் கேட்டால்.... 'இங்கெல்லாம் இப்படித்தான். முதல்லே சொன்னது சரியான சார்ஜ்தான் என்றார். கூட்டுக்களவாணிகள்:(//


நாங்களும் இந்த மாதிரி ஆட்களிடம் மாட்டிக் கொண்டு நிறைய பணம் கொடுத்தோம்.

பண்டிட் பின்னாலேயே இன்னொரு படகில் வந்து கங்கா மாதாவுக்கு பூஜா செய்யுங்கள் என்று துரத்தி வந்தார் தேங்காயும் ஒரு பூவும் கொடுத்தார் வேண்டாம் என்றால் பிரமாணனுக்கு போஜனம் செய்ய கொடுத்தாக நினைக்க கூடாதா? என்று கேட்டு வாங்கி கொண்டார்.

said...

த்ரிவேணியில் சங்கமித்தோம்.

said...

ரொம்ப அழகான வர்ணனையோட ,ரசனையா எழுதியிருக்கீங்க. பாவம் சார் கங்கைல முழுக்கு போட்டு, கைல கத்திரியையும் கொடுத்து செல்ல திட்டு திட்டிட்டு இருக்கீங்க 💕

said...

வாங்க மாதேவி,

ரொம்ப சீக்கிரமா பதில் சொல்றேன் இல்லை ! பத்தே ஆண்டுகள்தான் ஆச்சு !!!!

said...

வாங்க சுபஸ்ரீ மோஹன்,

ரசித்தமைக்கு நன்றிப்பா !