Friday, February 11, 2011

கங்கைக்கரை ஓரம்...............எக்கச்சக்கக் கூட்டம்............

மகாபலிச் சக்ரவர்த்தியின் கதையை ஞாபகப்படுத்திக்குங்க. அவர் யாருன்னு தெரியாதவங்க போனவாரம் பத்திரிகை செய்தியையாவது பார்த்துருப்பீங்கதானே?

சமீபத்துலே தன்னை மாவேலியின் (அப்பவும் சக்ரவர்த்தி!! அதான் வீரவாள் க்ரீடம் எல்லாம் 55 லட்சத்துக்கு வித்துருக்கார்) மரபுலே ஆட்சி புரிபவர்னு சொல்லிக்கிட்டு இருக்கார் ஸோ அவருதாங்க இவரு:-)))))

சரி. நம்ம கதைக்குப் போகலாம். வாமன அவதாரம் எடுத்து வந்து தன் காலடியால் அளந்து மூணு அடி நிலம் வேணுமுன்னு யாசிக்கிறார் விஷ்ணு.. மகாபலிக்குத் தெரிஞ்சுபோச்சு! அதான் இவர் யாருன்னு. அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், அரசன் காதில் வந்து போட்டுக் குடுத்துட்டாரே. 'வந்திருப்பவன் சாதாரண ஆள் இல்லை. ஒன்னும் கொடுக்காதே'ன்னார். மகாபலிக்கு ஒரு பக்கம் பெருமிதம். ஆனானப்பட்ட மகாவிஷ்ணுவே நம்மிடம் யாசிக்க வந்துருக்காரேன்னு. 'கேட்டதைக் கொடுக்காம என்னால் இருக்கமுடியாது'ன்னு கிண்டியைக் கொண்டுவரச்சொன்னார். கையில் நீர் ஊற்றி தாரை வார்த்து தருமம் செய்யணும்.நோ தண்ணி நோ தருமம். 'இவன் என்ன சிஷ்யன்? குரு பேச்சைக் கேக்கலை:( அழிஞ்சுபோகப்போறான்.' எப்படியாவது இதை நிறுத்தணுமுன்னு யோசிச்ச சுக்ராச்சாரியார் வண்டு ரூபம் எடுத்துக் கிண்டிக்குள்ளே நுழைஞ்சு மூக்கு பாகத்தை அடைச்சுக்கிட்டார்.

கிண்டியைச் சரிச்சாத் தண்ணீர் வரலை. என்னமோ அடைச்சுக்கிட்டு இருக்குன்னு கீழே இருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அடுத்தபக்கம் குத்திவிட்டார் ராஜா. 'ஆ'ன்னு ஒரு சத்தம். வண்டு வெளியே வந்து விழுந்துச்சு. வண்டின் ரூபம் மாறி சுய உருவோடு கண்ணில் ரத்தம் வழிய நிக்கறார் குரு. அதான் யாருக்காவது எதாவது மனசு வந்து கொடுக்கும்போது தடுக்கக் கூடாதுன்றது.

தண்ணீரைக் கையில் ஊற்றி 'தந்தேன்' என்றார் மகாபலி. வாமனர் விஸ்வரூபம் எடுக்கறார். நெடுநெடுன்னு வளர்ந்துக்கிட்டே போறார். ஒரு காலை மேலே தூக்கி மேலுலகம் ஏழை(7)யும் அளக்கறார். கால் உயர்ந்து பிரம்மா இருக்கும் சத்திய லோகத்துக்குப் போகுது. அட! நம்ம மகாவிஷ்ணுவின் திருப்பாதம் என்று ஆனந்தப்பட்ட பிரம்மா ஆகாயத்துலே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் (இதுதான் ஆகாயகங்கை) தன் கமண்டலத்தை முக்கி கங்கை நீரை எடுத்துப் பெருமாளின் கால் விரலில் ஊற்றி அபிஷேகம் செய்யறார். அந்த நீர் அவர் விரலில் வழிஞ்சு சரேல்ன்னு கீழே இறங்குது. நேரா அது வந்து பூமியைத் தொட்ட இடத்தில் இருந்து ஓடி வரும் போது வழியில் விஷ்ணுவின் மற்றொரு பாதம். ஹரி கி பொவ்டி.
பிரம்மா ஆகாயகங்கையால் விஷ்ணுவின் பாதத்துக்கு அபிஷேகம் செய்யறார்.

(பெயிண்ட் அடிச்சுட்டு அந்த டின்களையெல்லாம் எங்கே வச்சுட்டுப் போயிருக்காங்க பாருங்க)


கதைக்கு இன்னொரு வெர்ஷன் இருக்கு.

பகீரதன்னு ஒரு அரசன் இருந்தான். அவனுடைய முன்னோர்கள் ஒரு காலத்துலே கபில முனிவரின் கண்பார்வை பட்டு எரிஞ்சு சாம்பலாப் போயிட்டாங்க. அந்த சாம்பலே ஒரு சின்ன மலைமாதிரி குவியலா இருந்துச்சு. மொத்தம் அறுபதினாயிரம் ஆட்களாச்சே எரிஞ்சு போனது.

இவுங்க அப்பா சகரன் என்ற பெயருள்ள அரசன், அசுவமேத யாகத்துக்குத் தயார் செஞ்சு அனுப்பின குதிரையை இந்திரன் திருடிப்போய் கபில மகரிஷி ஆஸ்ரமத்துலே கட்டிப்போட்டுட்டான். ஏன்? அசுவமேத யாகம் செஞ்சவங்களுக்கு இந்திரப் பதவி கிடைச்சுருமாம். தன் பதவியைக் காப்பாத்திக்க என்னெல்லாம் செய்யறாங்க பாருங்க!

குதிரையைக் காணோமேன்னு எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துட்டு பாதாளலோகம் போயிப் பார்க்கலாமுன்னு இந்த அறுபதினாயிரம் சகோதரர்களும் போயிருக்காங்க.

முனிவர் தேமேன்னு கண்ணைமூடித் தவம் செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். குதிரை பாட்டுக்கு அங்கே ஓரமா மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.

'இத்தைப் பார்றா...... திருடியாந்துட்டு ஒன்னும் தெரியாதவராட்டம் கண்ணை மூடிக்கிட்டு இருக்கறதை!' ஓங்கி அவருக்கு ஒன்னு கொடுத்தாங்க. முனிவர் மகாவிஷ்ணுவின் அம்சம். தவம் கலைஞ்சு, கண்ணைத் திறந்து பார்த்தார். எல்லோரும் அப்படியே எரிஞ்சு சாம்பலாயிட்டாங்க. ப்ரெஸண்ட் இந்திரன் இப்படி நடக்குமுன்னுதானே ஐடியா செஞ்சான்.

கபிலாஸ்ரமம்

குதிரையைத் தேடிப்போன தன்மக்கள் கூட்டம் வரலையே என்ன ஆச்சோன்னு ராஜாவுக்கு குழப்பம். பேரனைக் கூப்பிட்டு உங்க சித்தப்பாமார் போய் பலவருசங்களாச்சு..... இன்னும் வந்து சேரலை. போய்ப் பார்த்துட்டு வான்னார்.

இவன் போய்ப் பார்க்கிறான். சாம்பல் மலையும் கட்டி இருக்கும் குதிரையும் கண்ணில் பட்டுச்சு. என்ன ஏதுன்னு யோசிக்கும்போது அங்கே கருடர் வர்றார். இவர் இந்த அறுபதினாயிரம் பேருக்கும் தாய்மாமன். நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லி, நீ குதிரையை அவுத்துக்கிட்டுப்போய் யாகத்தை முடிச்சுரு. உங்க சித்தப்பன்மார் தெரியாம பாவம் செஞ்சு இந்த கதிக்கு ஆளாகிட்டாங்க. இந்தப் பாவம் தொலைஞ்சு அவுங்களுக்கு நல்ல கதி கிடைக்கணுமுன்னா கங்கை நதி நீரில் இவுங்க சாம்பலைக் கரைக்கணுமுன்னு சொல்லிட்டுப் போனார்.
அசுவமேதயாகம்


கங்கை எங்கே?

பர்வதராஜாவான ஹிமவானுக்கு மனோரமைன்னு ஒரு மனைவி. அவுங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். மூத்தது கங்கா. இளையது உமா. 'மூத்த மகளை எங்க ஊருக்கு அனுப்புங்க'ன்னு தேவர்கள் எல்லோரும் வந்து வேண்டிக்கிட்டு தேவலோகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. சகல பாவங்களையும் போக்கும் சக்தி பெற்றவள். அதனால் பயங்கர டிமாண்டு. அங்கே ஆகாசத்தில் கங்கையா ஓடிக்கிட்டு இருக்காள். தேவர்களும் எதாவது பாவம் செஞ்சா சட்னு கங்கையில் முங்கி பாபத்தை நீக்கிக்கிடுவாங்க. திரும்ப பாவம் செஞ்சால்? அதான் கங்கா இருக்காளே!

இளையமகள் உமா, 'கட்டுனா பரமசிவனைத்தான் கட்டுவேன்'னு பலகாலம் தவமிருந்து சிவனையே கட்டிக்கிட்டாள். அவுங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் ஆச்சு.

ராஜாவோட பேரன், குதிரையைக் கொண்டுபோய் தாத்தாவிடம் ஒப்படைச்சுட்டு சித்தப்பன்மாருக்காக கங்கையை பூலோகத்துக்குக் கொண்டு வர்றது எப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருக்கான். ஒன்னும் புரிபடலை. காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு. அவன் காலம் முடிஞ்சு அவனோட பேரன் பகீரதன் காலமும் வந்துச்சு. இந்த பகீரதனுக்கு மூத்த தாத்தா பெரிய தாத்தா, எள்ளுத்தாத்தா கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பான்னு ன்னு ஆறு தலைமுறை 'கங்கை' யோசனையிலேயே இருந்தது தெரியும். தலைமுறை தலைமுறையா வீட்டுலே இதே பேச்சா இருந்துருக்கும் போல.


நல்லகதி கிடைக்காமல் பரிதவிக்கும் அறுபதினாயிரம் ஆத்மாக்களுக்கு நாமாவது எதாவது செய்யணுமுன்னு தீவிரமா யோசிக்கிறான். தாத்தாக்கள் பட்ட கவலையைப் பத்திச் சொல்லி வச்சுட்டுப்போக, இவனுக்குப் பிள்ளைகளும் இல்லை. ஒரே கல்லுலே ரெண்டு மாம்பழமுன்னு(எனக்குக் காய் பிடிக்காது) காட்டுக்குப்போய் பிரம்மனைக் குறிச்சுத் தவம் இருக்கான்.
பகீரதன் தவம் (மல்லை)


பலவருசங்களுக்குப்பிறகு தவம் பலிச்சு பிரம்மா தோன்றினார். என்ன வேணுமுன்னு கேட்க அவன் சொல்றான்.... 'என் குலம் தழைக்க பிள்ளை ஒன்னு வேணும். என் மூதாதையர்கள் சாம்பலைக் கரைக்க கங்கையும் வேணும்.'

'செஞ்சுருவோம். ஆனா ஒரு பிரச்சனை இருக்கே'ன்னார் பிரம்மா. 'கங்கை ஆகாயத்துலே இருந்து பயங்கர வேகத்துலே பூமிக்கு வரும்போது தாங்கிப்பிடிக்க யாரும் இல்லைன்னா அப்படியே பாதாளத்துக்குள்ளே இறங்கிக் காணாமப் போயிருவாள். அதனால் தாங்கும் சக்தியுள்ளவரைத் தேடு'ன்னார்.

'அட தேவுடா '......... இப்படியெல்லாம் சொன்னா என்ன செய்யறது? நீங்களே சொல்லுங்க அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவர் யாருன்னு!

"வேற யார். சாக்ஷாத் சிவ பெருமான்தான். கங்கையோ மச்சினிச்சி வேற! அதனால் தாங்கிப்பிடிக்கும் சக்தி அவருக்கு மட்டுமே! நீ போய் அவரைக் குறித்து தவம் செஞ்சு பிரார்த்தித்து கேளு"

மறுபடி கடும் தவம் புரிந்தான் பகீரதன். சிவனும் உச்சி குளிர்ந்துபோய் பகீரதன் முன்னே தோன்றி என்ன ஏதுன்னு விவரம் கேட்டுக்கிட்டு தாவி வரும் கங்கையைத் தாங்கிக்கச் சம்மதம் சொன்னார்.
படுவேகத்தோடு வானத்தில் இருந்து இறங்கின கங்கைக்கு தன்னுடைய அபார சக்திமீது கொஞ்சம் கர்வம் வந்துச்சு. சிவனையே ஒரு தள்ளு தள்ளப்போறோமுன்னு நினைக்கிறாள். தலையை நீட்டிய சிவன் தன்னுடைய சடாமுடிக்குள்ளே கங்கையைச் சிறைபிடிச்சுட்டார். சொட்டுத்தண்ணி வெளியில் விழலை. பார்த்துக்கிட்டே இருந்த பகீரதனுக்கு 'பகீர்'ன்னு ஆகிப்போச்சு.

கங்கை வெளியே வர துடியாத் துடிக்கிறாள். கர்வம் அடங்குச்சு. அப்போ சிவன் தன்னுடைய சடாமுடிகளுக்கிடையில் ஏழு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமா கங்கையை வெளியே மெல்ல விட்டார். சின்னதா ஏழு நதிகளா வெளியே வந்த கங்கை கிழக்குப்பக்கம் மூணு மேற்குப்பக்கம் மூணுன்னு பாய ஆரம்பிக்க பாக்கி இருந்த ஏழாவது நதி பகீரதன் பின்னே போக ஆரம்பிச்சது. இனி எல்லாம் சுபமேன்னு முடிஞ்சதா? இல்லையே.....

ஒரு இடத்தில் ஜன்ஹூன்னு ஒரு ரிஷியின் யாகசாலையைக் கடக்கும்போது அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் தண்ணீர் அடிச்சுக்கிட்டுப் போக ஆரம்பிச்சதும் அந்த ரிஷி சட்னு நதியைக் கையால் எடுத்து உறிஞ்சிக் குடிச்சுட்டார். பகீரதனுக்கு மறுபடி பகீர்!

மகரிஷியிடம் மன்றாடிக்கேட்டபிறகு அவர் மனம் இரங்கி தன் காது வழியா நதியை வெளியே விட்டார். பகீரதன் பாதாளலோகத்துக்குப்போய் முன்னோர்கள் சாம்பலைக் கங்கையில் கரைத்து அவர்களுக்கு மோட்சம் கிடைக்க வழி செய்தான்.

இப்படிப்போகுது கங்கை பூமிக்கு வந்த கதை. பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி, ஜான்ஹூ முனிவர் காதில் இருந்து வெளிவந்ததால் ஜான்ஹவி, அப்புறம் அலகாநந்தா, மந்தாகினின்னு பல இடங்களில் பல பெயர்களில் இருக்காள் இந்த கங்கை.

பாலத்தின் மேலே நடந்து இடப்பக்கம் இருக்கும் படிகளில் இறங்காமல் நேராப் போனால் கடைசியில் காலணி பாதுகாத்துத் தரும் இடம் வருது. அங்கே காலணிகளைக் கொடுத்துட்டு படித்துறைக்கு போறோம்.

அஞ்சரைக்கு இன்னும் அஞ்சே நிமிஷங்கள் பாக்கி. எங்கே பார்த்தாலும் மக்கள். கூட்டமான கூட்டம்.

தொடரும்.............................:-)



16 comments:

said...

இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவு படிச்சாத்தான் இது புரியுமோ. அதையும் படிச்சிட்டு வரேன்.

said...

இந்த புராணக் கதை எல்லாம் படிக்க இப்ப காமெடியா இருக்கு! இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் (நோ கிண்டல் ப்ளீஸ்) இதெல்லாம் கொஞ்சமாவது நடந்து இருக்க வாய்ப்புண்டா! இல்லை அனைத்துமே கற்பனையா! ஏன் என்றால் நானே கூட இதில் கூறும் போது புராணக் "கதை" என்று தான் கூறுகிறேன்.

கேள்வி ரொம்ப மொக்கையாத்தான் இருக்கு இருப்பினும் ரொம்ப நாளா மனசுல இருக்குற கேள்வி! ஒரு சில விஷயங்கள் நம்ப முடிவதில்லை ஆனால் இருந்து இருக்குமோ என்ற சந்தேகம் எப்போதும் உடன் இருக்கும். பேய் இல்லைன்னு நினைக்கிறவங்க கூட இரவில் வித்யாசமான சத்தம் கேட்டால் பயப்படுவதில்லையா அது மாதிரி :-)

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

முதல் பகுதி அப்படி ஒன்னும் பிரமாதமா இல்லை. எதுக்கும் எட்டிப்பார்த்துட்டு வாங்க:-)

said...

வாங்க கிரி.


கதை சொன்னா அப்படியே தலையை ஆட்டிக்கிட்டு இருக்காம கொஞ்சமாவது ஆராயணும் என்பதுதான் உண்மை. அப்படி ஒரு எண்ணத்தை அதான் ஆராய்ச்சியைத் தோற்றுவிக்குது பாருங்க.... அப்படிப்பட்டதுதான் உண்மையான புனைவு.

புனைவு எழுதுவது சாமானியப்பட்ட விஷயமில்லை. அதுவும் கதையோட்டம் எங்கேயும் ஜகா வாங்காமல் ஒன்னோடு ஒன்னா பின்னிக்கிடக்கு பாருங்க. அங்கேதான் படைத்தவன் நிக்கிறான்!!!!!

பேய் மட்டுமில்லை கடவுளுமே அப்படித்தான். உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை.

நம்பிக்கைதான் எல்லாத்துக்கும் அடிப்படை.

said...

இப்போ என்ன பேய்க்கதையா சினிமாக் கதையா:)
நான் இன்னோரு கதை சொல்லட்டுமா. பிரம்மன் விஷ்ணு பாதங்களுக்கு த் தண்ணீர் வார்த்தாரா அது ஆகச கங்கையா தேவலோகத்தில் இஷ்டத்துக்கு ஓடிக் கொண்டிருந்தது.
அதைத்தான் பகீஇர் அதன் கீழ கொண்டு வந்து இருக்காராம்.:)
ஆரத்திக்குக் காத்திருக்கோம்.

said...

ஆரத்திக்காக காத்திருக்கிறேன்.

said...

மின் ஆபரணங்கள் பூட்டிய கங்கை ஜொலிக்கிறாள்.:)

said...

கதைக்கான படங்கள் எங்கே புடிச்சிங்க டீச்சர் பொருத்தமாயிருக்கு,அடுத்த டூர் அப்ப சிம்லாவா:))))

said...

மாமி
நேற்று தான் அம்மாவிடம் பகீரதன் கதை பற்றி பேசிண்டு இருந்தேன். coincedental ஆ இன்னிக்கி அதை பற்றிய இடுகை.
ராமாயணத்துல பால காண்டத்துல விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர் களை தாடகை வதம் செய்ய கூட்டிண்டு போன போது வழில கங்கை கரை வந்து அதுல ஸ்நானம் பண்றா. அப்போ விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மனர்களுக்கு கங்கை கதை சொல்லி அது எப்படி பூலோகம் வந்தது னு இந்த கதைய சொல்றார். அதை சொல்லிட்டு இன்னொன்னும் சொன்னாராம் - இந்த கதைய யாரு சொல்றாளோ இல்ல கேட்கராளோ அவாளுக்கும் கங்கா ஸ்நான பலன் கிடைக்கும் னு, நீங்க இந்த கதை சொன்னதால உங்களுக்கும், கேட்ட எங்களுக்கு ஒரு கங்கா ஸ்நானம் பலன் கிடைச்சுது :)
நீங்க directa கங்கா ஸ்நானம் பண்ணினேளா?
இவ்ளோ கஷ்டமும் பட்டு பகீரதன் கங்கை ய கொண்டு வந்ததால அப்படி பண்ற பெரு முயற்சிக்கெல்லாமே பகீரத முயற்சி னு சொல்றோமாம். இன்னொன்னு கங்கை பாகீரதி ஆக ஓடி வரும் போது வேகமா வெள்ளப் பிரவாகமா வருமாம். அதே கங்கை ஆன பின்னாடி சாந்தமா ஓடுமாம். நீங்க கவனிச்சேளா.

said...

வாங்க வல்லி.

ஆஹா.... சரியாத்தான் இருக்கும்போல..... புவி ஈர்ப்புக்கு மேலே நடந்த சமாச்சாரம்! அதான் அப்போ அவ கீழே வரலையோ!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நானும் யமுனைக்கரையில் ஆரத்தியை தவறவிட்டதால் இங்கே பயங்கர எதிர்பார்ப்போடு போனேன்.

நாளைக்கு ஆரத்தி எடுத்துடலாம். நோ ஒர்ரீஸ்:-)))

said...

வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. அது ஒரு தனி அழகோடுத்தான் இருக்கு.

said...

வாங்க சுமதி.

அங்கே படித்துறைச் சுவற்றில் மாடங்களில் இருந்த புடைப்புச் சிற்பங்களைத்தான் படம் எடுத்துவந்தேன்.

சிம்லா போகணும். மெள்ளப் போகலாமுன்னு இருக்கேன், ரொம்பப் பக்கமாச்சே:-))))

said...

வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

பாலகாண்டம். அதேஅதே.

பாகீரதியைப் பார்க்கலை. இவளைத்தான் பார்த்தேன். சாந்த ஸ்வரூபிக்கே இவ்வளவு வேகமுன்னா.....

said...

நான் இன்னொரு ஆங்கிள் லே சொல்லவந்தது எல்லாமே
நீங்க சொல்லிவிட்டீக.
இந்த பகீரதன் கங்கை சமாசாரம் எல்லாமே ஒரு பக்கத்திலே
புராணக்கதை அப்படின்னு சொல்லி டிஸ்மிஸ் செஞ்சுட்டாலும்
நம்பும்படியாக இல்லைன்னு சொல்லிட்டாலும்,
" முயற்சி திருவினையாக்கும், முயற்சியின்மை
இன்மை புகுத்திவிடும்" என்னும் வள்ளுவனின் வாக்கை
ஒரு உதாரணம் காட்டி சொல்வது போல் இருக்கிறதல்லவா ?

அது இருக்கட்டும்.
// 'கங்கை ஆகாயத்துலே இருந்து பயங்கர வேகத்துலே பூமிக்கு வரும்போது தாங்கிப்பிடிக்க யாரும் இல்லைன்னா அப்படியே பாதாளத்துக்குள்ளே இறங்கிக் காணாமப் போயிருவாள். அதனால் தாங்கும் சக்தியுள்ளவரைத்
தேடு'ன்னார்.//

இன்னிக்கு தேதியிலே ஹரித்வார் கங்கை நதிக்கு நடுவிலே மழை காலத்துலே நிக்கறதுக்கு யாருனாச்சும்
முடியுமா பாருங்க !!

அந்த வேகத்தை போல சுமார் 100000000000000000000000000000000000000000000000000000000000000000 மடங்கு
வேகத்துலே அந்த கங்கை பாஞ்சதுன்னு சொல்றாக. யாரு சொன்னாங்க அப்படின்னு கேட்கறீகளா ?
எங்க மாமியாரு சொல்லிச்சு.

அதுக்கு ஹார்ஸ் பவர் கணக்கு போடணுமா முடியாது.
யர்த் க்வேக் பவர் கணக்குலே சொல்லப்போனா ஒரு 100000 ரிக்டர் .
நாம பார்த்தது, கேட்டது எல்லாமே 9 க்கு கீழே தான்.

மீனாட்சி பாட்டி.
http://Sury-healthiswealth.blogspot.com

said...

வாங்க மீனாட்சி அக்கா.

ப்ரம்மகுண்டத்துக் கால்வாய்லே கூட கம்பியைப் பிடிக்காம நிக்க முடியாது. இத்தனைக்கும் கங்கையில் குளிர்காலத்துலே தண்ணீர் குறைவாக இருக்கும் சீஸன்.இதுலே கங்கை நடுவில் மழைக்காலத்திலா!!!!!!!!!!!!