Tuesday, December 21, 2010

அரச குடும்பம் ஓக்கேவா? அப்பீல் பண்ணலாமா? தீக் (DEEG) தொடர்ச்சி.

மாடியில் அடுத்து ராஜாவின் படுக்கை அறை. இவர் ஏழடி உயரமாம். அதனால் எட்டடி நீளக் கட்டில் போட்டுவச்சுருக்காங்க. அத்தனையும் வெள்ளி.
அந்த அறையின் ஒரு பக்கச் சுவர் முழுசும் நல்ல நுண்ணீய வேலைப்பாடுள்ள பளிங்குச் சுவர். அஞ்சு பேனல் இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டிஸைன். லேஸ் போட்டு வச்சதுபோல. எப்படித்தான் இத்தனை சிறு துளைகளோடு பளிங்கு உடையாமல் வெட்டினாங்களோ!!!!அந்த ஜன்னலின் வழியாப் பார்த்தால் கீழே இருக்கும் விஸிட்டர்ஸ் ஹால் தெரியும்.

பாத்ரூமில் வெஸ்டர்ன் டாய்லெட், பாத் டப்! இதை அடுத்து இன்னொரு அறையில் காற்றுக்கான அமைப்பு. இதை ஒரு காலத்தில் வேலைக்காரர்களைக் கொண்டு இயக்குவாங்களாம். மலைக்கள்ளன் சினிமாவில் மலையைத் தாண்டிப்போக ஒரு தொட்டிலை அடிமைகளை வச்சு இயக்குவாங்க பாருங்க அதே போல ஒரு மெக்கானிசம். இப்போ ஒரு சின்ன மோட்டர் பொருத்தி இருக்காங்க. ஸ்விட்ச் போட்டதும் துணிகள் மாட்டுன மரச்சட்டங்கள் சுத்தும் வேகத்தில் காற்று பிச்சுக்கிட்டு வருது. மாடி பூராவும் சீரான வேகத்தில் காற்று வீசுது. இப்ப இதை பார்வையாளர்களுக்கு இயக்கிக் காட்டறாங்க.

என்ன ராஜ வாழ்க்கை பாருங்க! 'கீழ்தளத்தில் ஒரு கோவில் இருக்கு. ராஜாவும் குடும்பமும் அனுதினமும் காலை குளிச்சு முடிச்சு முதல்வேலையா பூஜை செஞ்சுட்டுத்தான் சாப்புடுவாங்க. அங்கே போய் தரிசனம் செஞ்சுட்டுப் போங்க' ன்னார். படம் எடுக்க முடியலையேன்னு எனக்கு மகா வருத்தம். நுழைவுச்சீட்டு வாங்குன இடத்தில் புத்தகம் படங்களோடு கிடைக்குமுன்னு சொன்னது ஒரு ஆறுதல்.

வெளியே வந்து கீழ்தளத்தில் இருந்த ராஜாவின் பூஜை அறைக்குப் போனோம். ஜெய் ஆஞ்சநேயான்னு ..சஞ்சீவி மலையுடன் அனுமன். ஒரு பண்டிட் இருக்கார். படம் எடுக்கத்தடை இல்லை இங்கே. துளி டிக்காஷன் விட்ட காஃபிக் கலர். ஜேட் ன்னார். ஆனால் பச்சையா இல்லையே....... இது ஜேடு கல்லில் ஒரு வகை. ஒரே கல்லில் செதுக்கிய சிலை. 400 வருசத்துக்கு மேல் வயசானது. வேற இடத்தில் இருந்த இவரை 1942 இல் இங்கே கொண்டுவந்து ப்ரதிஷ்டை செஞ்சுருக்காங்க.
கோபால் பவனத்துக்கு நேரெதிரா ஒரு பளிங்கு மேடை ஊஞ்சல். பலகையையும் சங்கிலியையும் கழட்டி வச்சுருக்காங்க. இது ராஜா ஆக்ராவில் நடந்த போரில் ஜெயிச்சு ஆக்ரா கோட்டையில் இருந்து வெற்றிச்சின்னமாக் கொண்டுவந்து இங்கே வச்சுருக்கார்.
ஊஞ்சல் மேடை

ஆமாம்....ராஜா ராஜான்னே சொல்லிக்கிட்டு இருக்கேனே......எந்த ராஜான்னு யாருக்கும் கேக்கத் தோணலையா?

ஜாட் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவினைக்கு முன் இருந்த பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. வீரம் உள்ள மக்கள். விவசாயமே தொழில். முகலாயர்கள் ஆட்சியிலே ரொம்பக் கொடுமைக்கு ஆளானாங்க. ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் போய் தங்களுக்குள்ளே ஒரு தலைவனை நியமிச்சுக்கிட்டு அவுங்களை எதிர்க்கத் தொடங்குனாங்க. அந்தத் தலைவர் சுராமன், சிற்றரசர் ஆனார். பரத்பூர் சமஸ்தானம் இதுதான். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மருமகன் பதன்சிங் இந்த தீக் என்ற ஊரை தலைநகரமா ஆக்கிக்கிட்டார். இந்த தீக் ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிட்டுள்ள தீர்காப்பூர் என்று சொல்றாங்க.

ஜாட் சாம்ராஜ்யத்தில் பரத்பூர் மகாராஜா பதன் சிங் மரணத்துக்குப்பின் அவருடைய மூத்தமகன் சுராஜ்மல் ( இவரோட அப்பா பதன்சிங் 30 பிள்ளைகள் பெத்து அதுலே போனது போக பாக்கி இருபதில் சுராஜ்மல் மூத்தவர்) தலைநகரைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைதான் நாம் ஊருக்குள்ளெ நுழையும்போது பார்த்த தீக் கோட்டை. இவருடைய ஆட்சியில் மொகலாயர்களுடன் நாலைஞ்சு முறை போர் நடந்துருக்கு. சண்டைபோடப் போனப்ப அந்த மாளிகை கோட்டை டிஸைன்கள் எல்லாம் ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. அதே மொகல் ஸ்டைலில் 'தீக்'லேயும் கோட்டைக்கு வெளியே நேர் எதிரா ஒரு அரண்மனை கட்டினார். கோபால் பவனத்து முன்னாலே நின்னால் நேரெதிரா கோட்டை!

உள்ளே தனித்தனியா இருக்கும் மாளிகைகளுக்கு சுராஜ் பவன், கேஷவ் பவன், கிஷன் பவன் நந்த் பவன், ராம் பவன், ஹர்தேவ் பவன் பெயர்கள் வச்சுருக்கார். பவனோ பவன்ஸ்.
ஒவ்வொரு மாளிகையும் ஓப்பன் ப்ளான் லிவிங். கூடம் கூடமாப் போய்க்கிட்டே இருக்கு. அலங்காரத்தூண்களும் வளைவு நெளிவு வாசல்களுமா! ஆனால் இதுலே எப்படித் தங்கி இருப்பாங்க. அறைகளே இல்லையே? ப்ரைவஸி இல்லாம ...... ஒருவேளை திரைச்சீலைகள், வேலைப்பாடுள்ள மரத்தடுப்புகள் இப்படி வச்சுருந்துருக்கலாம். வெவ்வேற ஊர்களில் அரச மாளிகைக்குள்ளே போகும்போதெல்லாம் என் விசாரம் இது:(

ஹர்தேவ் பவன்

அங்கங்கே வெவ்வேற டிசைனில் நீர் ஊற்றுகள் சின்னச்சின்ன தோட்டங்கள்,எதைச்சொல்றது எதை விடுறதுன்னு (நன்றி.சிவசங்கரி)
ஒரு மாளிகையின் வெளிப்புறம் மேல்தளத்தில் ஒரு பெரிய கம்பிக்கூண்டு. அதுலே புலி இருக்குமாம். அதையொட்டிக் கீழே லேப்ரிந்த் போல ஒரு விளையாட்டுக்கான அமைப்பு. சின்னதா கோலி உருட்டி விளையாடுவாங்களோ என்னமோ. புலிமேலேயும் ஒரு கண்ணு வச்சுக்கிட்டே ...... இருக்கும் இருக்கும்.
அடுத்து இருக்கும் கிஷன் பவன் தர்பார் ஹால். உள்ளே ரெண்டு புலிக்குட்டிகளைப் பாடம் பண்ணி வச்சுருக்காங்க. கூண்டில் பிறந்த வீட்டுப்புலிகள். சிம்மாசனம் ஒன்னு நடுவிலே இருக்கு. இதையொட்டி இருக்கும் ஒரு கோட்டை மதில். உள்ளே வாட்டர் டேங்க். கொள்ளளவு கொஞ்சம்தான். அறுபது லட்சம் கேலன். இதுக்குத் தண்ணீர் ரொப்பவே நாலு கிணறுகள் இருக்கு. அதுலே இருந்து பெர்ஸியன் வீல் சிஸ்டம் மூலமாத் தண்ணிர் இறைச்சு நிரப்ப ஒரு வாரம் ஆகுமாம். இங்கே இருந்துதான் தண்ணீர் எல்லா நீரூற்றுகளுக்கும் போகும். எல்லா அலங்கார நீரூற்றுகளையும் ஒரே சமயததில் திறந்துவிட்டால்........இவ்வளோ தண்ணீரும் ஒருசில மணி நேரத்துலே தீர்ந்துரும். அப்ப எத்தனை நீரூற்றுகள் இருக்குமுன்னு பாருங்க! அதான் இப்ப எதுலேயுமே தண்ணீர் இல்லாமக் கிடக்கு!!!!

தண்ணீர் டேங்க்

சும்மாச் சொல்லக்கூடாது நடைபாதைகள் சேரும் இடங்கள்கூட அழகான வேலைப்பாட்டுடன் பார்த்துப் பார்த்துக் கட்டுன அரண்மனை! கேஷவ் பவனையொட்டி கோபால் சாகர் போலவே இங்கே வலது பக்கம் ரூப் சாகர்,
பதன்சிங் மகாராவின் தம்பி ரூப் சிங் கட்டிவிட்டுருக்கார் குடிமக்கள் பயனுக்காக. ஆரம்பத்துலேயே அழகான படிக்கட்டுகளுடன் எல்லா வேலையும் பக்காவா செஞ்சுட்டதால் இதுக்கு 'பக்கா தலாப்'னே ஒரு பெயர். அப்ப கோபால் ஸாகர்? அதுலே ஒரு பக்கம் மண்தரையா விட்டு வச்சுட்டதால் அது 'கச்சா தலாப்'!

கேஷவ் பவனில் அழகிய தூண்கள் அரண்மனைக் கிளிகள்ன்னு எல்லாம் மனசை அப்படியே கொள்ளையடிச்சுக்கிட்டுப் போகுது. இதோட ஒரிஜனல் படம் கிடைச்சது. அதுலே சுத்திவரத் தூண்கள். நடுவிலே காலியான இடமா இருக்கு. ஆனால் இப்போ நாம் பார்க்கும்போது நடுவிலே செங்கல் வச்சு சுவர்கள் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. ச்சேச்சே...... மண்டபத்தின் அழகு போயே போச்:(


எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்(:

பத்துப்பனிரெண்டு அரண்மனை நாய்கள்தான் நல்ல தூக்கத்தில் இருக்குதுங்க. இந்த அரண்மனையும் மண்டபங்களும் தோட்டமும் பல படங்களில் நடிச்சுருக்கு. நூர்ஜஹான் னு ஒரு ஹிந்திப்படம் முழுக்க முழுக்க இங்கே எடுத்ததுதானாம்.
கேஷவ் பவன் பின்புலம் கோட்டை. மண்டபத்தைச்சுத்தி நாலுபக்கமும் நீர் ஊற்று.
மேலே தண்ணீர் வரும் அமைப்பில் உலோகக் குண்டுகளை வச்சுருக்காங்களா,. தண்ணீரின் வேகத்தால் அந்த குண்டுகள் ஒன்னோடொன்னு உராயும்போது இடிச் சத்தம் போல கேக்குமாம். மழையில் இருக்கும் ஒரு ஃபீலிங்க்ஸ்!!!!! எப்படியெல்லாம் உக்காந்து யோசிச்சு இருக்காங்க பாருங்க.

நடந்த போர்களில் வெற்றியே கண்ட ஜாட் வீரப் பரம்பரையின் ஊர். முகலாய ஆட்சிக்குப்பின் வந்த ப்ரிட்டிஷ் ஆட்சியிலும் இவுங்க கூட்டுச்சேராம கடைசிவரை தனி சமஸ்தானமாவே இருந்துருக்காங்க. இந்தியாவை விட்டுப்போகுமுன் பிரிட்டிஷார், சும்மா உள்ளே வந்து பார்க்க அனுமதி கேட்டும் கொடுக்கலையாம். இதைப் பார்க்காமப் போன ஆதங்கத்தில்தான் சரித்திர சம்பவம் உள்ள நிறைய ஆங்கில சினிமாக்களை இங்கே வந்து படப்பிடிப்பு நடத்தி இருக்காங்க.

இந்த பிரமாண்டமான அரண்மனையில் இருக்கற தண்ணீர் போதாதுன்னு நந்த்பவனில் ஒரு நீச்சல் குளம்! ராஜா, ராணி(களு)க்கு மட்டும். அங்கங்கே உள்ள தோட்டங்களில் ஒரு இடத்தில் புல்தரையின் நடுவில் ஒரு மேடை. ராசா வூட்டுக் கல்யாண மேடை. புல்தரையில் சுத்திவர விருந்தினர்களுக்கு இருக்கை போட்டுருவாங்களாம். எல்லாமே க்ராண்ட் ஸ்கேல்!

புல்வெளியில் மணமேடை

அடுத்த பிறவி உண்டுன்னு உறுதியாச்சுன்னா சாமியாப் பொறக்கணுமுன்னு சாமிகிட்டே கேக்கணுமுன்னு இருந்த நினைப்பு இப்போ கொஞ்சம் ஆட்டம் காணுது. ஒரே ஒரு பிறவி மட்டும் அரண்மனை வாசியா இருந்தால் தேவலை. ஆனா 'அவன்' சதிச்சுட்டான்னா? அரண்மனைவாசியா..... ஓக்கே. அங்கே சேடியாப் போன்னுட்டால்! கவனமா அரசி, அரசியாக மட்டுமேன்னு ஒரு கண்டிஷன் போடணும்.

மனநிறைவோடு வெளியே சிங்கவாசலுக்கு வந்து அலுவலகத்தில் படங்கள் இருக்கான்னா....ஒரு புத்தகமே கிடைச்சது. எல்லாம் வெளிப்புறக் காட்சிகள்தான். அதான் நாமே எடுத்தோமே. கோபால் பவன் சமாச்சாரங்கள் எல்லாம் கிடைக்குமான்னா இல்லை. அங்கெல்லாம் படம் எடுக்க நமக்குத்தான் அனுமதி இல்லை. அரசாங்கமே நல்ல ஃபோட்டாக்ராஃபரை வச்சு படங்கள் எடுத்து அதை சிடியாப் போட்டு விற்பனை செய்யலாமே. வருமானமும் கிடைக்குமில்லே பராமரிப்பு செலவுக்கும் ஆகுமே. (ஆமா.... ஆளுங்க வாங்கிட்டாலும்........)

புத்தகமே இருவது ரூபாய்தான். அதுக்கு கழிவு வேற 10 சதமாம். ரெண்டு ரூபாயைத் தேடுறார் கேஷியர். போகட்டுமுன்னு சொன்னார் கோபால். முதல் பதிப்பு போட்டு 38 வருசம் ஆகி இருக்கு. ரெண்டாம் பதிப்பின் முதல் புத்தகம் நாம்தான். வெளிவந்து நாலே வருசம்தான் ஆகி இருக்கு.

விக்ரம்

இந்த ஊரில் டீ, தின்பண்டங்கள் எல்லாம் அருமையா இருக்கும். சாப்பிட்டுட்டுப் போங்கன்னு உபசாரம் செஞ்சார் விக்ரம். விருந்தோம்பல் இன்னும் நம்மைவிட்டுப் போகலை! அவரையும் கொஞ்சம் கண்டுக்கிட்டுக் கிளம்பினோம். தின்றதுக்கு வாயைத் திறக்கமாட்டேன். ஏற்கெனவே விருந்தாவன் போய் வந்ததில் இருந்து தொண்டை தகராறு செய்யுது. வலி ஆரம்பிச்சு இருக்கு. என்னதான் துப்பட்டா மாஸ்க் போட்டாலுமே........ மாசுதான் காரணம். (வரும்வழியிலேயே ஒரு மெடிக்கல் ஷாப்பில் மருந்து ஒன்னு தாற்காலிக நிவாரணத்துக்கு வாங்கிக்கிட்டோம். அதைவச்சு ஒப்பேத்திக்கணும்)
திரும்பிப்போகும்போது கோட்டை வாசலை எட்டிப்பார்க்கலாமுன்னு போனால்.....உட்புறம் இருக்கும் மதில் சுவரெல்லாம் வறட்டி தட்டிக் காயவைச்சுருக்காங்க. உள்ளெ தோட்டங்களில் சின்னச்சின்ன குழுவா இளைஞர்கள். அரட்டை, பேண்ட் ப்ராக்டீஸ் விளையாட்டு இப்படி.....
கோட்டைக்குள்ளே பாழடைஞ்ச மஹல்கள்

உள்ளே நல்லாவே பாழடைஞ்சு கிடக்கு. கொஞ்சம் சீர் செஞ்சால் சுற்றுலாப்பயணிகள் மூலம் வருமானம் வர வழி உண்டு.

கோட்டைக்குள் சில குடும்பங்கள் வசிக்குது போல. இவ்வளோ தண்ணீர் இருக்குமிடத்தில் அடுக்குன குடங்களில் குடிதண்ணீர் சுமந்து வரும் பெண்.

தீக் போய்வரும்வழியில் ரெண்டுமுறை கோவர்தனகிரி தரிசனமும் ஆச்சு. தலயாத்திரை முடிஞ்சது. நாளைக்குக் காலை சீக்கிரமா ஊரைவிட்டுக் கிளம்பறோம். எங்கே? ச்சலோ ஆக்ரா!

தொடரும்.....................:-)


16 comments:

said...

எங்களுக்குப் பார்க்கக் கிடைக்காத இடங்களுக்கு எல்லாம் சுற்றுலா செல்லக் கிடைத்திருக்கிறது. சிறப்பான கைட் ஆக புகைப்படங்களுடன் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

said...

இந்தியாவுல இத்தனை இடம் இருக்குதா! உங்க பதிவை எல்லாம் சேத்து வச்சு முடிஞ்சா இந்த இடமெல்லாம் ஒரு தடவையாவது பாக்கணும்.

said...

அந்த ஊஞ்சல்மேடை ஜம்முன்ன்னு இருக்கு. அப்படியே காத்தாட ஊஞ்சலாடிக்கிட்டே இருந்தா நல்லாத்தான் இருக்கும் :-))

said...

எனக்கும் ஊஞ்சல் மாட்டும் இடம் ரொம்ப பிடிச்சது.

அப்பறம் இந்த திறந்த அறைகள் கவலை எனக்கும் வரும்..எப்படி இருந்தாங்களோ..

said...

அரண்மனை மண்டபம்,நீருற்று,அரண்மனை நாய்கள் எல்லாம் நல்லாருக்கு டீச்சர். அடுத்து ஆக்ரா ரெடி டீச்சர்:))))

said...

கோட்டைக்குள்ளே பாழடைஞ்ச மஹல்கள்

சிரிக்காதீங்க அடிக்க வராதீங்க. நாங்களும் இப்ப உங்களை பார்த்து கத்துக்கிட்டு வர்றோம்ல......

மஹால்தானே?

said...

வாங்க டொக்டர் ஐயா.

நானும் இதுவரை போக முடியாத, பார்க்காத இடங்களை மற்றவர்கள் அனுபவத்தால் பார்த்துக்கறேன்.

எல்லாத்தையும் எல்லோராலும் பார்க்க முடியறதில்லைங்களே:(

said...

வாங்க அப்பாதுரை.

பார்த்தது கடுகளவு. இன்னும் பார்க்காதது மலை அளவு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

பலகையும் சங்கிலியும் போட்டுருந்தால் ஆடிட்டுத்தான் வந்திருப்பேன்:-))))

said...

வாங்க கயலு.

பல கோட்டைகளில் சமையலறையைக்கூடக் காணோமே! ஒருவேளை கீழ்தளத்தில் அமைஞ்சு இருக்குமோ?

said...

வாங்க சுமதி.

ஆக்ரான்னதும் தாஜ் தான் மனசுலே வருது இல்லே!!!!

said...

வாங்க ஜோதிஜி.

சரியான உச்சரிப்பு 'மஹல்'தான். ஹிந்தி வார்த்தை.

பெயர்கள் இடங்கள் எல்லாம் அதனதன் ஒரிஜினல் உச்சரிப்புலே சொல்லணுமுன்னு நான் நினைக்கிறேன்.

நாம்தான் தமிழ்ப்படுத்தறோமுன்னு ....

அம்ரித்ஸர் = அமிர்தசரஸ்

ஆஸ்ட்ராலியா = ஆஸ்திரேலியா

மஹல் = மஹால்

இப்படி பலதும் இருக்கு.

ஆமாம்....ஸ்டாலின் ஏன் இசுடாலின் ஆகலை????

said...

தீக்!
அந்நியர்களுக்கு எதிரா எழுந்த தீ' அப்படீங்கற மாதிரி இருக்கு.
ஏதாவது தூண்டுதல் இருந்தால்தான் அடுத்த எதிர் பகுதி சக்தி பெறும்னு ஒரு எடுத்துக்காட்டு.
இப்படி அவலப்பட்டுக் கிடக்கிறதே:(
மற்ற இடங்கள் வெகு அழகு. என்ன விஸ்தீரணம்பா.!!சுத்தமா இருந்துட்டா
மத்த நாடுகளைவிட நாம் நல்லாவே இருப்போம்.

said...

வாங்க வல்லி.

சுத்தம் = கடவுள் என்பதை இன்னும் புரிஞ்சுக்கலையேப்பா:(

said...

அந்த ஊஞ்சலில் எல்லோரையும்.... அப்படி ஆட்டுது.

மஹால் மிகவும் நன்றாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி.

ஊஞ்சலைக்கண்டால் 'ஆடாம' இருக்கமாட்டோமுன்னுதான் 'கழட்டி' வச்சுட்டாங்கப்பா:(