Wednesday, November 04, 2009

எனக்கு நரகம் ஓக்கே!

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணுமுன்னு சிலபலர் நினைக்கும் உலகத்துலே 'தான் நரகத்துக்குப் போனாலும் சரி, மற்ற மக்கள் அனைவரும் சொர்க்கத்துக்குப் போகணுமுன்னு நினைச்ச பெரிய மனசு இருக்கே...அப்பப்பா.....

நாப்பத்தியொம்போதே நிமிஷங்கள்ன்னு கூகுளாண்டவர் சொன்னால் ஆச்சா? பயங்கரமான ட்ராஃபிக். எழுவது நிமிஷமாச்சுப் போய்ச்சேர! இவரை எங்கியாவது போகாத இடத்துக்கு இழுத்துக்கிட்டுப் போகணுமுன்னு நினைச்சு, மனசுலே வந்த சில இடங்களையெல்லாம் ஓரங்கட்டிட்டுக் கடைசியில் நானும் இதுவரை ஒருமுறை போகாத இடத்துக்கே போகலாமுன்னு கடைசி நிமிசம், சட்னு முடிவு பண்ணினேன். 'போகாத இடந்தனிலே போகவேண்டாம்' பாவம், பாட்டி சொன்ன மூதுரையை மீறிட்டேனே.......
பரபரப்பான மெயின்ரோடிலே இருந்து வலப்பக்கம் பிரியும் அலங்காரவளைவு வச்சச் சின்ன ரோடு. கொஞ்சதூரம் உள்ளே போய்த் திரும்புனதும் கோபுரம் கண்ணில் பட்டது. நமக்கு முன்னால், இடம் வலம் இப்படி மூணுபக்கமும் கோவிலோ கோவில், கோபுரமோ கோபுரம். இடப்புறம் இருக்கும் கம்பிக்கிராதி போட்ட மண்டபத்தின் முகப்பில் அழகான சிற்பங்கள்(சுதை) கதை சொல்லுது. ஸ்ரீராமானுஜர் அவதார ஸ்தலம். நாலு மொழிகளில் எழுதிவச்சுருக்காங்க. நல்லா இருக்கட்டும்.
படுத்துருக்கறவன் சட்னு எழுந்து கொஞ்சம் சாய்வா உக்கார்ந்து பேசறதுபோல் இங்கே முகப்பில் நடுநாயகமா இருக்கும் சிற்பம் பார்த்தவுடன் என் கண்கள் நட்டேன். ஓ...உன்னால் முடியும்!!


இங்கே அடையார் அநந்தபத்மநாபன் கோவிலில் மூலவரைப் பார்க்கும் போதெல்லாம் 'ஏண்டாப்பா...எப்போதும் இதென்ன படுக்கை? கொஞ்சம் எழுந்து உட்காரக்கூடாதா? பெட் ஸோர் வந்துடப்போகுது....அதுவும் இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்புனாப்போல புஜங்க சயனமா இல்லாம, விட்டேத்தியா ஆகாசத்தைப் பார்த்துக்கிட்டுப் போனாப் போகட்டும் என்றதுபோல் வலதுகையில் சிவன் தலையைத் தடவுவானேன்?. தலையை இல்லெம்மா.... சிவலிங்கத்தின் மீது குடைபிடிக்கும் பாம்பைத்தான் வருடிக்கொடுக்கறேன்னு சிலநாள் பதிலும் சொல்வாரா இருக்கும்! என்னமோ போ..... உன்னைப் புரிஞ்சுக்க முடியலை யாராலும்.....' புலம்பல் தானே வரும், போகும்.
ஆதிகேசவப்பெருமாள் கோவில் முகப்பு
வெள்ளைக் கோபுரவாசல்
வலப்பக்கமும் கம்பி கிராதி போட்ட வெளி மண்டபம். கடைகள் என்ற பெயரில் பிக்கல்பிடுங்கல் இல்லை. வண்டி நிறுத்த மட்டும் 15 ரூபாய் வாங்கிக்கிட்டாங்க. கோபுரவாசல் உள்ளே கால் வைக்கும்போதே இடதுபக்கம் அர்ச்சனைப்பொருட்கள் விற்கும் இடம்!!! பௌர்ணமிக்கு அர்ச்சனைப் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் விற்பனையாளர். இடமும் வலமுமாத் தலையை ஆட்டினேன். கொடிமரம் தங்கநிறத்தில் ஜொலிக்க, இடதுபுறம் ஓரமா ஏழெட்டுப் படிக்கட்டுகள் ஏறினோம். வயசான ஒருத்தர் விஸ்ராந்தியா உக்கார்ந்துருந்தார். கோவில் எத்தனை பழசுன்னு கோபால் கேட்டதுக்கு மூவாயிரமுன்னு சொன்னார்!

முன்மண்டபத்திலே அழகழகான யாளி சிற்பங்களுடன் அட்டகாசமான அலங்காரத்தூண்கள். இப்போதான் அலம்பித் துடைச்சமாதிரி ஒரு மினுங்கலோடு....பார்க்கவே பரவசமா இருக்கு. நமக்கு இடதுபுறம் கண்ணாடி பதிச்சத் தங்கமேடை. ஸ்வாமி அங்கே வந்து உட்காருவார்போல! பின் அலங்காரம் கண்ணாடியில் சூப்பராத் தெரியும். மேடையைச் சுத்திக் கம்பிக்கூண்டு. அதுக்கு நேரா நமக்கு வலப்பக்கம் பெரிய வாசல். ராமானுஜர் சந்நிதிக்குப் போகும் வழின்னு ஒரு அம்பு.

நுழைஞ்சால் நேரா சந்நிதி. கதவு பூட்டி இருக்கே...... நம்மைத் தொடர்ந்து உள்ளே நுழைஞ்ச பட்டரிடம் கேட்டோம். இதோ திறந்துடாலாமுன்னு பூட்டைத் திறந்தார். வாசலில் ரெண்டுபக்கமும் மூணடி உசரப் பாவை விளக்கு, மூக்கும் முழியும் லக்ஷ்ண்மா இருக்கு. பின்னிக்கலை. கொண்டை போட்டுண்டு இருக்காள்.

ராம அவதாரத்தில் லக்ஷ்மணனாகவும், க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் ராமானுஜனாகவும் (ராமனின் அனுஜன்) அவதாரம் செஞ்ச மூலவர் ஸ்ரீராமானுஜர். நெற்றியில் கல்வச்சத் திருமண் நெய்விளக்கில் ஜொலிக்க நிக்கறார். 'தான்  உகந்த திருமேனி'யாம். கையில் திரிதண்டம்.உற்சவரும் நல்லாப் பளிச்ன்னு அலங்காரத்தில். தானே தன்னைப்போல் சிற்பம் செஞ்சு தந்தாராம். (கோச்சுக்காதீங்க...... மாயாவதி நினைவு வந்து தொலைக்குதே...)

இவர் இன்னும் மனுஷ்யரூபத்தில் நம்மோடுதான் இருக்கார் என்ற ஒரு நம்பிக்கையால் ஐப்பசி மாசம் முதல் தை மூல நட்சத்திரம் வரை இவருக்கு வெந்நீர் அபிஷேகம்தானாம். குளிருக்கு அடக்கமாக் கம்பளிச் சொக்கா, தலைக்குல்லா எல்லாம் உண்டாம். தினமும் காலையில் அவருக்கு நிவேத்தியம் (ப்ரேக் ஃபாஸ்ட் ) சப்பாத்தியும் பாலுமாம்.

சந்நிதியை வலம் வந்தோம். வாகனங்களுக்கான பிரபைகள் ஏழெட்டு ஒரு பக்கமா இருக்கு. அதுலே ஒன்னு ரெண்டு பக்கமும் யானைகளுடன்! பெரிய திருவடிக்கு ஒரு சந்நிதி. அவருக்கு நேர் எதிரே ராமானுஜருக்கு வலப்பக்கமா ஆதிகேசவன், ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரோட கோவில்தான் இது. அருள்மிகு ஆதிகேசப்பெருமாள் கோவில். மூலவரும் அழகு. உற்சவரோ அதை விட அழகு. ஆனால் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததென்னவோ அங்கே இருந்த ஆழ்வார்கள் இருப்பிடம்தான். ஒவ்வொரு உற்சவர்கள் சிலையும்.... ரொம்பவே திருத்தமான முகம். ஒவ்வொன்னும் நிகுநிக்குன்னு ரெண்டு ரெண்டரையடி உசரம். தீர்க்கமான மூக்கு, வளர்த்துவிட்ட காதுகள், செப்புவாய், அழகான கண்கள்ன்னு ஆளை அப்படியேக் கட்டிப்போடும் விதமா இருக்கு. இத்தனை அழகோட இவர்களை நான் பார்த்ததே இல்லை.

இங்கே சேவிக்க நாம் வந்தப்ப மூலவர் சந்நிதி திறக்க இன்னும் யாரும் வரலையேன்னு உள்மண்டபத்தைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒரு பக்கம் வரிசைகட்டிய சில சந்நிதிகள். திருக்கச்சி நம்பி, நம்பிள்ளை, ஆளவந்தார், வேதாந்த தேசிகர்ன்னு தனித்தனியா மூலவரும், அவருக்குமுன்னே நிக்கும் உற்சவருமா. நல்லவேளையா இருட்டுலே நிக்காம சின்னதா மங்கிய வெளிச்சத்தில் எரியும் மின்சாரவிளக்கில் இருந்தாங்க. மண்டபத்தில் அழகிய சிற்பவேலைகளுடன் தூண்கள். நுழைவாசல் மேல் உள்பக்கமா வலப்பக்கம் தலை மாற்றிவச்சுப் படுத்திருக்கும் பள்ளிகொண்ட பெருமாள் தன் தேவிகளுடன். அழகிய நாட்டிய நங்கையர் ஆடிக்கிட்டு இருக்காங்க இடப்பக்கம். ஒருவேளை அவுங்க ஆட்டம் பார்க்கத்தான் இந்தப் பக்கம் தலை வச்சுருக்காரோ என்னவோ? தேவலோகத்து மானாட மயிலாட........
இப்பத்தான் இன்னொன்னும் நினைவுக்கு வருது. இந்த ஸ்தலத்துக்கு ஒரு காலத்துலே பூதபுரின்னு பெயர். பெயர்க்காரணக் கதையைக் கொஞ்சம் சொல்லவா?

கயிலையில் சிவன் ஆடிக்கிட்டு இருக்கார். தன்னை மறந்த ஒரு ஆட்டம், வேட்டி அவிழ்ந்ததுகூடத் தெரியாமல்...... (சிவகணங்கள்)பசங்க பார்த்துட்டுச் சும்மா இருக்குமோ? கொல்'ன்னு சிரிச்சதுகள். oops...னு வேட்டியை எடுத்துக் கட்டிக்கிட்டே, 'எவண்டா என்னைப் பார்த்துச் சிரிச்சது?' திருதிருன்னு முழிக்கும் கணங்களையெல்லாம்ப் பூதப் பிறவிகளாகப் பூலோகத்துக்கு அனுப்பிட்டார். லோகக் கடத்தல். இது ரொம்பவே அநியாயம் இல்லையா? நாட் ஃபேர் னு கணங்கள் அலற அலற, அங்கே போய் தவம் பண்ணுங்க. நல்ல காலம் வந்து சாபவிமோசனம் கிடைக்குமுன்னுட்டார்.

கணங்கள் வந்து சேர்ந்த இடம்தான் இது. சாபமிட்டவனை நினைச்சுத் தவம் செய்யாமல் மகாவிஷ்ணுவை தியானிச்சு தவம் நடக்குது. இதுக்கு என்ன தண்டனை அடிஷனலாக் கிடைக்கப்போகுதோ? நான் பயந்ததுபோல் ஒன்னும் நடக்கலை. மச்சானைக் கும்பிட்டால் பரவாயில்லைன்னு இருந்துட்டார். பெருமாளுக்கு மனம் குளிர்ந்துபோச்சு. படுக்கையைவிட்டு எழுந்து நின்னு, அநந்தனையும் எழுப்பி ஒரு குளம் வெட்டுன்னார். அது ஜம்ன்னு வாலாலே வெட்டியிருக்கும்! அநந்தன் வெட்டியதால் அதுக்குப் பெயர் அநந்த சரஸ். அந்தக் குளத்தில் பூதகணங்கள் முழுகுனதும் சாபவிமோசனம் ஆகி எல்லோரும் கைலாசத்துக்குப் போய்ச் சேர்ந்துட்டாங்களாம்.

அப்போ எழுந்து நின்ன பெருமாள், குளத்தைப் பார்வையிட்டுப் பூதகணங்களைக் கரையேத்த இங்கே வந்து அப்படியே ஆதிகேசவனா நின்னுட்டார்.

மூலவர் சந்நிதிக்குப் போகும்போது ஏற்கெனவே அங்கே ஒரு கும்பல். ஒரே குடும்பம். கோபால் விடுவிடுன்னு அவுங்ககூடப்போய் நின்னுட்டார். என்னை வா வான்னு தலையை ஆட்டிக்கூப்புட்டாரா....... நான் ஆழ்வார்கடியாளாக மாறி அந்த பதினொன்னைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அவுங்க போகட்டும் அப்புறம் சேவிச்சால் ஆச்சு. கூட்டத்தில் கோவிந்தாப் போடவேணாமுன்னுதான்.

நெய்தீபம் காட்டி ஆரத்தி எடுத்து தீர்த்தம் சடாரி எல்லாம் ஆச்சு. கோவில் எப்போலே இருந்து இருக்குன்னு கேட்டேன். 'அதான் அப்பவே சொன்னேனே 3000 வருசத்துக்கும் மேலே ஆச்சுன்னு' அச்சச்சோ..... அவரா இவர்!!! படிக்கட்டில் இருந்த பெரியவர் முகத்தைச் சரியாக் கவனிக்கலை(-: மேலும் என்னைச் சங்கடப்படுத்தப் பெருமாளுக்கு இஷ்டமில்லை. சட்னு அந்தகாரம். இப்போ பட்டரும் என்னைப் பார்க்க முடியாது:-) கருவறையில் மூணு மினுக் மினுக் மினுக். சிரிச்சுக்கிட்டே நிக்கறான். பட்டரிடம் பேச்சுக் கொடுத்தேன். (இங்கே போட்டோ எடுக்கக்கூடாது. யானைக்குத் தின்ன ஒன்னும் கொடுக்கக்கூடாதுன்னு வெளியில் ஒரு அறிவிப்புப் பார்த்ததால் கோவில் பற்றிய விவரங்களைக் குறிப்பு எழுதிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சுருக்கார்)

என்னவோ எழுதுனீங்களே, என்னன்னார். கோவிலைப் பத்தி எழுதணும் அதான் குறிப்பு எடுக்கறேன்னேன். ப்ரஸ்ஸா? (ஓ அப்படியும் சொல்லிக்கலாமோ!!!!) இணையப் பிரஸ்தானேன்னு, 'ஆமாம்'னு சின்னக் குரலில் மெள்ளப் பெருமாளுக்குக் கேக்காமச் சொன்னேன்:-)

சப்பாத்தி வெந்நீர் எல்லாம் அப்பத்தான் அவர் சொன்னார். போகட்டும். எழுத விஷயம் கிடைச்சது. அதுக்குள்ளே கோபால் கைப்பேசியில் வெளிச்சம் கொண்டுவந்தார். (அங்கங்கே ஆப்பரேஷனே இந்த வெளிச்சத்தில் செஞ்சாங்களேப்பா) போன பவர் , அஞ்சாறு நிமிஷத்தில் வந்துருச்சு. நாங்க பெருமாளிடமும் பட்டரிடமும் நன்றி சொல்லிட்டு வெளியே வந்தோம். பட்டரும் பின்னாலயே வந்து, இடுப்புச் சாவியை எடுத்துச் சந்நிதிக் கதவைச் சாத்திப் பூட்டினார். ராமானுஜனுக்கும் பூட்டு. அதென்ன ஆன்னா ஊன்னாக் கதவை இழுத்துப் பூட்டி எல்லாரையும் கம்பிக்குள்ளே சிறை வைப்பது? பாவம்தான் இந்த சாமிகள்...நமக்கு இருக்கும் சுதந்திரம்கூட இல்லை(-:

பெருமாளை வலம்வரலாமுன்னா அங்கே உள்மண்டபத்தில் ஒரு பச்சைத் திரையை ரெண்டு தூணுக்கும் நடுவிலே புடவை உலர்த்துவதுபோல் கட்டி உள்ளே ட்ரெஸ்ஸிங் ரூமா ஆக்கித் திரைமறைவில் உற்சவர்களுக்கு அலங்காரம் ஆகுது. விசாரிக்காம இருக்கலாகுமோ?

ஸ்வாமி புறப்பாடு, அஞ்சரைக்கு, பௌர்ணமி.

ஆஹா...இருந்து பார்த்துட்டே போகலாம். இடம் வந்தோம். கொடியிடை ஆண்டாள் கையில் கொஞ்சும் கிளியுடன் கம்பிக்கதவுக்குப் பின்னே . தலையையும் மூக்கையும் நல்லா நீட்டிப் பேசும் கிளி. இதைப்போல ஒரு கிளியை நான் பார்த்ததே இல்லை. எனெக்கென்னவோ ஆண்டாளைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு சின்ன துக்கம் வந்து நெஞ்சில் நிக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரைத் தவிர இதுவரை தரிசிச்சப் பெருமாள் கோவில்களில் எல்லாம் இப்படித்தான்.....பாவம். தனிச் சந்நிதின்னு 'இடம்' கொடுத்துட்டால் ஆச்சா? பேச்சுத் துணைக்கு யாராவது வேணாமா? வெறும் கிளிமட்டும் போறுமா? அட்லீஸ்ட் ஒரு பட்டர்? ஊஹூம்.....தாயார் சந்நிதியில் மாலை மரியாதை, புதுப்புடவை, அர்ச்சனை, அபிஷேகம், தீர்த்தம், குங்குமம், மஞ்சள்ன்னு பக்தர்கள் வர்றதும் போவதுமாவே இருக்கும். அதுக்கு நேரெதிரா ஆண்டாள் தனிமையில் 'அவனையே அல்லும் பகலும் நினைச்சு உருகறாள்'. மண்ணில் பொண்ணாப் பிறந்த பாவமோ என்னவோ...... வழக்கமாச் செய்வதுபோல் அவள் எழுதுன ஒரு பாசுரத்தையே அவளுக்காக என் மனசில் பாடிட்டு வந்தேன்.(தூமணி மாடத்து)

இடமாப்போய் அந்தப் பக்கம் மூலவருக்கு வலதில் இருக்கும் சந்நிதியில் தாயாரோன்னு பார்த்தால் ..... அம்மாவைக் காணோம். ஆனால் ஒரு சிலை மூலவரும் உற்சாவருமா இருக்கு உள்ளே. பெயரும் எழுதலை. இந்த மண்டபத்தில் சுற்றிவரத் தங்கச் சட்டமிட்டப் படங்கள். தஞ்சாவூர் பெயிண்டிங் ஸ்டைல். ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு. முழுக்க முழுக்கத் தெலுங்கில் விவரம் எழுதி இருக்கு. சரளமாத் தெலுங்கு பேசுவேனே தவிரப் படிக்கச் சொன்னால் அவ்ளோதான். எழுத்துக்கூட்டிப் படிக்கறதுக்குள்ளே பொழுது விடிஞ்சுரும். ச்சதுவேதானிகி அந்தகா தெலியது(-:

(57வது படத்தில் இருந்து தமிழ் எழுத்துக்களும் இருக்குன்றது ஒரு உபரித் தகவல்)

ஒன்னு ரெண்டுன்னு எண்கள் போட்டு 108 படங்கள் + மேற்கொண்டு 5 படங்கள்ன்னு உள்பிரகாரம் முழுசும் சுத்திவரவந்து ஸ்ரீராமானுஜரின் கருவறைக்குப் பின்னே முடியுது. ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கமா வாகனங்கள் எல்லாம் போர்வை போர்த்தி நிறுத்திவச்சுருக்காங்க. ஆனாலும் குதிரைக்காலும் யானைக் காலும் கண்ணுலே பட்டது. பெருமாள் கோவிலுக்கே உரிய லேசான மக்கல் வாசனை. அங்கே ஒரு கல்மேடை இருக்கு. ப்ரசாத மேடையாம். ஆஹா...டைனிங் டேபிளா?

வெளியே வந்து முன்மண்டபத்து அடுத்த பக்கப் படிக்கட்டுகளில் இறங்கிப்போனால் தாயாருக்கானத் தனிச் சந்நிதி. எதிராஜ நாதவல்லித் தாயார். பட்டர் இருக்கார். கதவு திறந்து இருக்கு. தரிசனம் ஆச்சு. மஞ்சளும் குங்குமமும் துளசியும் கிடைச்சது. அருமையான மஞ்சள் வாசனை அப்படியே ஆளைத் தூக்குது. தெரியாமல் கைகளைச் சேர்த்துத் தேய்ச்சுட்டார் நம்ம ஆள். அவ்ளோதான்..... பச்சக்..... தென்குலத்துப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு கேக்கவேண்டியதாப் போச்சு:-)))))

தாயார் சந்நிதிப்பக்கம் இருந்து ஆரம்பிச்சுப் பிரகாரம் முழுசும் சுவரில் பிரமாண்டமான வண்ண ஓவியங்கள். இதோ ரங்கநாதன், இது ரங்கநாயகி, ப்ரத்தியும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், உருட்டும்விழியுடன் மீசைக்காரன்...ஆஹா.... புரிஞ்சுருச்சு. அத்தனையும் அந்த 108 திவ்யதேசங்களில் குடிகொண்டிருக்கும் பெருமாள்கள். கட்டக் கடைசியில் மேற்கும் வடக்கும் சேருமிடத்தில் இருட்டில் வெங்கடேசன் ஆஃப் திருப்பதி.

இங்கே நின்னு பார்த்தால் கருவறை விமானங்கள் தங்கமா ஜொலிக்கிறது

வடக்குப் பிரகாரத்தில் கடைசியில் நெய்விளக்கு விற்பனை. குட்டி அகலில் திரிபோட்டு நெய் ஊத்தி வச்சுருக்காங்க. பக்கத்துலேயே மெனு.

1 விளக்கு : மன அமைதி
3 கல்விச் செல்வம்
9 நவகிரகக் கோளாறால் வரும் பிணி அகல
12 ஜென்மராசி தோஷம் நீங்க
27 நட்சத்திர தோஷம் நீங்க
108 நினைத்தவை கைகூடவும் சங்கடங்கள் விலகவும்
508 விவாகத் தடை நீங்க
1008 புத்திர தோஷம் நீங்கிச் சந்தானபாக்கியம் அடைய.

ஒரு நெய் விளக்கின் விலை ரூபாய் 2

ஆஹா......நமக்கு வேண்டிய மன அமைதியை ரெண்டே ரூபாயில் பெறலாமேன்னு யோசிக்குமுன்பே, அஞ்சு மணிக்கே ஸ்வாமி புறப்பாடு ஆகிருச்சு. ஓடிப்போனோம். கோபுரவாசல்முன்பு இருக்கும் வெளி மண்டபத்தில் தேவியருடன் ஆதிகேசவன். சாற்றுமுறை ஆகுது. மேளதாளங்கள் ஒலிக்க ஊர்வலம் புறப்பட்டாச்சு. அலங்காரத்துணி முதுகில் போர்த்த குதிரை, அதன் பின்னே ஆஹா ஆஹா நம்ம யானை.( பெயர் கோதை. வயசு பத்து)
"கோவிலில்தானே போட்டோ எடுக்கக்கூடாது. உனக்காகவே வெளியே வந்துட்டேன். நீ பாட்டுக்குப் படம் எடுத்துக்கோ. படமில்லாமப் பதிவு போட்டா உனக்கே பிடிக்காதுன்னு எனக்குத் தெரியுமே. உனக்காக யானைகூட இருக்கு. ஜமாய் ராணி."

"தேங்ஸ்டா பெருமாளே!"
கூரத்தாழ்வார் சந்நிதி.

வடக்கு மாடவீதியில் ஊர்வலம் போக நாங்க இந்தப் பக்கம் வந்தோம். கோவிலுக்கு வெளியே, நம்ம கூரத்தாழ்வாருக்குன்னு தனிசந்நிதி. தனிக்கோவில்ன்னும் சொல்லலாம். அந்தக் கட்டிடத்தின் பக்கச் சுவர்களை இடித்து மராமத்து வேலைகள் நடக்குது. தெற்கு மாடவீதியில் வடக்குப் பார்த்த ஒரு தனிக்கோவில். வெள்ளைக்கோபுரங்களுடன் அட்டகாசமா இருக்கு. ராமானுஜருக்கானது.
தெற்கு மாடவீதியில் அக்கிரஹாரத்து வீடுகள், வெளித்திண்ணையில் காற்றாட இருந்து கதைபேசும் பெண்கள் இப்படி பழைய நினைவுகளைக் கொண்டுவரும் காட்சிகள்.

பெருமாள் விவரம் சொல்ல லோகேஷை அனுப்பிட்டார். கோவில் கதையைச் சொன்னார். உள்ளுர்க்காரர். ஆனால் பெங்களுரில் வேலை செய்யறார். யானைக்குச் சரியாவே சாப்பாடு தர்றதில்லை. வெறும் நாலே நாலு உருண்டைதான். காலில் பெரிய சங்கிலியைப் போட்டுக் கட்டி வச்சுடறாங்க. பாவம். ஊரெல்லாம் தென்னை கிடக்கு. தென்ன ஓலையைத் தாராளமாப் பசி அடங்கத் தரக்கூடாதா? ஒட்டகம் கூட இருந்துச்சுங்க. அதுக்கு இத்துனூண்டு புண் (ஆள்காட்டிவிரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொட்டு அளவு காமிச்சு) இருந்துச்சுங்க. வெட்னரி டாக்டருக்கா பஞ்சம். அதுவும் கோவிலுக்குன்னா இலவசமாவே வந்து வைத்தியம் பண்ணிருவாங்க. ஆனா சரியாக் கவனிக்காம ....ப்ச்...பாவங்க.


கோதை

நிர்வாகம் ஒன்னும் சரி இல்லைங்க. இந்த யானை அஞ்சாவதோ ஆறாவதோ.......

கோவிலுக்கு எக்கச் சக்கமா சொத்து இருக்குதுங்க. ராமானுஜருக்கு மட்டும் ஆறு லட்சத்துக்கு நகை இருக்கு. கவனிப்பு சரி இல்லைங்க.


வாசலுக்கு வந்துருக்கேன்


அதுக்குள்ளே ஊர்வலம் தெற்கு மாடவீதிக்குள்ளெ வந்துருச்சு. வெள்ளைக்கோபுர வாசலில் நிக்கிறார் ஸ்வாமி. கோவிலுள்ளே ராமானுஜர் சந்நிதி திறந்ததும் அவருக்கு சேவை சாதிக்கிறார், நான் வந்துருக்கேன் உன்னைத் தேடின்னு.

ரெண்டு கோவில்களிலும் நூறு நூறு வருசம், அப்புறம் ஸ்ரீரங்கத்தில் நூறு வருஷமுன்னு மொத்தம் 300 வருஷங்கள் ராமானுஜர் ஜீவிச்சு இருந்தார். கடைசியில் ஜீவசமாதி ஆகி அப்படியே சிலையாகவே இருந்துட்டார் ஸ்ரீரங்கத்தில். அப்படியே உயிரோடு, நெஜமா மனுசர் இருக்கறதுபோலவே இருக்குமுங்க.

பாருங்களேன்...இந்தப் பெருமாளுக்கு இருக்கும் அக்கறை!!!! பதிவுக்காக நியூஸ் கொடுக்கவும் ஆள் அனுப்பறார்.

ஊர்வலம் முடிஞ்சு பழையபடி யதாஸ்தானத்துக்கு ஸ்வாமி திரும்பறார். வெளியே போறப்பப் போட்டுக்கிட்டுப் போன சொக்காயை அவிழ்த்தாச்சு யானைக்கும் குதிரைக்கும். குடைகளை மடக்கியாச்சு. கோபுரவாசலில் நுழைஞ்சு வரும் ஸ்வாமி கடக்கும்வரை அங்கே நின்னுக்கிட்டு இருக்கும் கோதைத் தன் துதிக்கையைத் தூக்கி சல்யூட் போஸில் அப்படியே நிக்கறாள். வாய்க்குக் கீழே அங்குசத்தின் முனை லேசாத் தொட்டுக்கிட்டு இருக்கு. ஓஹோ.... இதுதானா ரகசியம்!

கோபாலுக்கும் எனக்கும் தும் தும்முன்னு துதிக்கையாலே மெள்ள மொத்தி ஆசிகள் வழங்குனாள். மனசில்லா மனசோட வெளியே வந்தேன். கோவிலில் எங்கே பார்த்தாலும் இருக்கும் கம்பியழிகளுக்கான சூத்திரம் விளங்க ரொம்ப நேரமாகலை. மதில்சுவரில் ஓடியாடும் குரங்கன்மார் குடும்பம். ஒரு இடத்துலே நின்னாத்தானேக் கச்சிதமாக் க்ளிக்க முடியும்? குரங்குமாதிரி இங்கேயும் அங்கேயும் தாவினால் எப்படி?


ஓம் நமோ நாராயணா.......

45 comments:

said...

your narration is makes pleasant feel

Keep it up

:)

yasavi.blogspot

said...

கொஞ்சம் நீளமான பதிவு இருந்தாலும் நகைச்சுவைக்கு குறைவு இல்லை.

//என்னவோ எழுதுனீங்களே, என்னன்னார். கோவிலைப் பத்தி எழுதணும் அதான் குறிப்பு எடுக்கறேன்னேன். ப்ரஸ்ஸா? (ஓ அப்படியும் சொல்லிக்கலாமோ!!!!) இணையப் பிரஸ்தானேன்னு, 'ஆமாம்'னு சின்னக் குரலில் மெள்ளப் பெருமாளுக்குக் கேக்காமச் சொன்னேன்:-)
//

:))


அப்பறம் ஒரு சின்னப்பையன் மேளம் அடிக்கிறான். இன்னும் சிறுவர்கள் வேலை செய்வது தடுக்கப்படாமல் இருக்கு :(

கிட்டப் போய் விசாரித்தால் 20 வயசுன்னு சொல்லுவாங்க :)

said...

வாங்க யாசவி.

ஊக்கத்துக்கு நன்றி.

மீண்டும் வருக.

said...

வாங்க கோவியாரே.

சின்னப் பையன் மேளம் அடிக்கக் கற்றுக்கொள்ளும் மாணவன். இது அவனுக்கு ப்ராக்டிக்கல் வகுப்பு.

இது எப்படி இருக்கு?:-)

Anonymous said...

//கோவில் எத்தனை பழசுன்னு கோபால் கேட்டதுக்கு மூவாயிரமுன்னு சொன்னார்!//

பரவாயில்லாம பராமரிச்சுருக்காங்க போலிருக்கு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இந்த மூவாயிரம் ரெண்டாயிரம் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

இப்போ விஞ்ஞான முறைகளால் மிகச்சரியான காலத்தைக் கண்டுபிடிக்கலாமாம்.

அது போகட்டும். நம்பினால் பிரச்சனை இல்லை. தலை ஆட்டிக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம்.

ஆனால் மனசைக் குடையும் ஒரு கேள்வி இருக்கு.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு கோவில் இன்னும் ஏன் நல்லமுறையில் செயல்படக்கூடாது????

said...

ஓம் நமோ நாராயணா.......

said...

அட்டகாசம். கோதை பாவம் சோகமாப் போஸ் கொடுக்கிறாளே. இதுக்குத்தான்பா கோதை, ஆண்டாள்னு பெயர் வைக்கிறதுல இருக்கிற கஷ்டம். சின்னவீடு மாதிரித் தனியா வச்சிருவாங்க,.


ஸ்ரீராமானுஜர் 300 வருஷம்லாம் இல்லப்பா. 120தான்ன்னு செய்தி.
திருநாராயணபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்பூதூர். ஒண்ணு பொறந்த இடம் பூதூர்,
இன்னோண்ணு அபிமானத்தலம் மேல்கோட்டை திருநாராயணபுரம்.
இன்னோண்ணு ரங்கன் கிட்ட சரணாகதியா இருந்த இடம் ஸ்ரீரங்கம்.
அங்கதான் கால் நகங்கள் கூட வளர்ந்து வருவதா(ஜீவனோடு இருக்கிற அடையாளம்)
சொல்லுகிறார்கள்.

ஆண்டாள் க்கு உயர்வு நாச்சியார் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்,கும்பகோணம் ஒப்பிலா அப்பன் பூமாதேவி.நாதனோடயே சேவை சாதிப்பாள்.

said...

\\படுத்துருக்கறவன் சட்னு எழுந்து கொஞ்சம் சாய்வா உக்கார்ந்து பேசறதுபோல்//
அட ஆமாம் :)

said...

//கோவிலில் தானே போட்டோ எடுக்கக் கூடாது. உனக்காகவே வெளியே வந்துட்டேன்.//

பக்தர்களுக்கு மனம் இரங்கும்
மாதவ பெருமாள் அல்லவா!

துளசிக்கு அருள் புரியவில்லை என்றால்
எப்படி.

said...

பதிவு சுவாரஸ்யம்.

"படுத்துருக்கறவன் சட்னு எழுந்து கொஞ்சம் சாய்வா உக்கார்ந்து பேசறதுபோல் இங்கே முகப்பில் நடுநாயகமா இருக்கும் சிற்பம்" வித்தியாசமானதுதான்.

துளசி கோபாலின் நீண்ட நாள் "பெட் ஸோர்" கவலையை நீக்கப் போலும்.

said...

நல்ல பதிவு டீச்சர். அம்மா ஆண்டாள் எப்பவும் ரங்கு கூட லவ்ஸ்தான். அதுனாலதான் அவரை டிஸ்டப் பண்ணக்கூடாதுன்னு தனியா வச்சுட்டாப்புல போல. நான் எப்பவும் சொல்லறது. (சிற்றங் சிறுதான்,அப்புறம் வாழி திருனாமம் - திருவாடிப் பூரத்து).

கோவிலுக்குப் போனா சுவாமியை நினைக்கனும்(சுப்பிரமணி அல்ல), அதைவிட்டு கழுதை எல்லாம் நினைக்க கூடாது (மாயாவதியை சொல்லவில்லை).

டைனிங் டேபிள் ஹி ஹி இம்ம் மிளகு வடையும் புளியேதரையா இல்ல தத்தியேன்னமா? என்ன கிடைத்தது?

பொருமாள் முன்னாடி கோஸ்டி ஆச்சாரியன் பெயர் போடவில்லையா, ஆசிர்வாதம் வாங்கினிங்களா?

கோதை அழகா, குண்டா இருக்கா.

மொத்தம் மூன்று திருமேனி, தமர் உகர்ந்த திருமேனி(இங்க), தமோ உகந்த திருமேனி(சிருபெரும்புதூர்) தாமான திருமேனி(அரங்கம்).

கடைசியில் எங்க சொந்தக்காரங்க போட்டாவும் போட்டு கட்ரையை அசத்தி விட்டீர்கள். நன்றி டீச்சர்.

said...

நல்லா சொல்லிருக்கீங்க.. நிறைய விஷயங்களோட டீச்சர்..

சனிக்கிழமை தான் நான் முதன்முதலாக சென்றேன். (உங்களுக்கு தெரிஞ்சவரோட தான் :)

said...

இராமானுஜர் 120 வருடங்கள் இப்புவியில் வாழ்ந்தார்.. 300 அல்ல..

அதேபோல் ஜீவசமாதியும் கிடையாது.. அவர் பரமபதித்தபின், ரங்கநாதரின் ஆணைப்படி கோவிலினுள் பள்ளிப்படுத்தப்பட்டார்.. அதற்குமேலே அவருடைய திருவுருவச் சிலை எழுப்பப்பட்டது. நகங்கள் வளருவதெல்லாம் கிடையாது. கே.ஆர்.எஸ் வந்து உறுதிப்படுத்துவார்னு நினைக்கிறேன்.

said...

//'ஏண்டாப்பா...எப்போதும் இதென்ன படுக்கை? கொஞ்சம் எழுந்து உட்காரக்கூடாதா? பெட் ஸோர் வந்துடப்போகுது....//

ஆஹா டீச்சர் திருமழிசை ஆழ்வார் மாதிரி பேசுறீகளே... அவர்தான் குடந்தை ஆராவமுதனை சேவிக்கச் சென்று, “நான் வந்துருக்கேன் நீ என்ன பேசாமல் இருக்கிறாய், பேசு” என்று சொல்ல, பெருமாளும் படுத்திருந்தவாறே பேச ஆரம்பிக்க, திருமழிசை ஆழ்வார் மீண்டும், “அதென்ன படுத்துக்கொண்டே பதில் சொல்வது, எழுந்து உக்கார்ந்து பேசினால் தான் என்ன?” அயோத்தியில் இருந்து இலங்கை வரை நடந்த கால்கள் நொந்து படுத்துருக்கிறாயோ?” அப்புடின்னு கேட்டவர்...

அதேபோல் நீங்களூம்.. அருமை

said...

திருப்பெரும்பூதூர் மறக்கமுடியாத தலமாகி விட்டது..நாங்கள் சென்றிருந்த போது, கே.ஆர்.எஸ் அவர்கள் எம்பெருமானார் சன்னதி முன்பு, உரத்த குரலில் உள்ளம் உருகி.. பற்பம் எனத்திகழ் எனத் தொடங்கும் இராமானுஜர் வடிவழகைப் பாடி எங்கள் தரிசனத்தை சிறப்பாக்கி வைத்தார்..

said...

ஆமாம்,இது எந்தூரு கோவில்? படத்தை பெரிதாக்கி பார்க்கும் போது ஒரு விளமபர அட்டையில் ஸ்ரீபெரும்புதூர் என்று போட்டிருந்தது,அங்கா?
பதிவின் நடு நடுவே இடத்தின் பெயர் இருந்தால் இப்படி கேள்வி கேட்கவேண்டி வராது.
பதிவின் ”வாஸ்து” போட்டோ தவறாமல் வந்துவிட்டது போல் இருக்கு!! :-))

said...

கொஞ்சம் பெரிய பதிவா இருந்தாலும் படிக்க அலுப்பே தெரியாமல் உங்க வழக்கமான நகைச்சுவையோட இருந்தது டீச்சர் :)

said...

நேத்து தான் Mr KAILASHI ங்கறவரோட 04/09 POST ஸ்ரீ பெரும்புதூர் பத்தி படிச்சேன்.ஸ்தல புராணம், ராமானுஜர் பத்தி romba interesting informations எழுதி இருந்தார். இன்னிக்கு உங்களோடதும் படிச்சாச்சு. Lucky him!! கொஞ்சம் படம் எடுத்து போட்டிருக்கார். எங்களுக்கு போன இடத்துல எல்லாம் நீங்க சொல்லற மாதிரிர restrictions இருந்ததுனால photo எடுக்க முடியலை.
இங்க KENSINGTON மாம்பழம் சீ படறது இப்போ. நேத்து வாங்கும் போது நினைத்தேன்:))

said...

I've heard of the same story about Ramanujar and Thirukoshtiyoor. Thirukoshtiyoor nambi apparently taught Ramanujar, 'Namo Narayana' manthiram and said not to tell anyone else. Odane Ramanujar, kovil gopuram mela eri oorukku ellam sonaaram. Ramanujar upadesam pannina gopuram ellam eri paarthom, it is a beautiful place.

said...

துளசி ரீச்சர்! பதிவெல்லாம் சூப்பர்.. மெதுவா இப்ப படிக்கறேன்.. குட்டி குரங்கு கியூட்... அருமையான பதிவு..

said...

சிவன் கதை சூப்பரு ;))

said...

பக்தி,வர்ணணை,வரலாறு, நகைச்சுவை, இதுகூட உங்க ஆதங்கத்தையும் சேத்து கலக்கிட்டீங்க, தெளிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்.

//தென்குலத்துப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு கேக்கவேண்டியதாப் போச்சு:-)))))//

இதுக்கு "சபாஷ் கட்டபொம்மி"ன்னு சொல்லலாமா கூடாதா தெரியலியே:-)))))

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

எட்டெழுத்தைச் சொல்லிட்டீங்க. இனி எல்லாம் சுகமே!

said...

வாங்கப்பா வல்லி.

மனுஷனுக்குக் கற்பனைவளம் அதிகம்.

இன்னும் சில நூற்றாண்டுகள் போனால் இவர் 3000 வருஷங்களா இருக்காருன்னு சொல்லிக்கலாம்!

said...

வாங்க கயலு.

கொஞ்சம் பழசாகிப்போன சிற்பங்கள்தான். ஆனாலும் முகபாவம் அட்டகாசம்!

said...

வாங்க கோமதி அரசு.

நலமா?

பெருமாளின் மார்பில் எப்பவும் இருக்காளாமே..... 'அந்தத் துளசி'!

அதான் அம்மா கொஞ்சம் பரிந்துரைச்சிருக்கலாம்:-)

said...

வாங்க மாதேவி.

அனந்தனுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணுமா இல்லையா?

எழுந்தால் ரெண்டுபேருக்குமே நல்லது:-)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

மாயாவதி யானைச்சிற்பங்களும் அங்கங்கே வைப்பதால் கொஞ்சமே கொஞ்சம் மன்னிச்சுடலாமா?

விளக்கத்துக்கு நன்றிப்பா.

said...

வாங்க ராகவ்.

எல்லா விவரங்களுக்கும் நன்றி.

அந்தத்'தெரிந்தவர்' நேற்று மாலை வந்துருந்தார். ஏழு லோகங்களும் ஒரே இடம் என்றதுபோல் ஏழு முக்கிய புள்ளிகளுடன் பதிவர் சந்திப்பு அமர்க்களமா நடந்தது.

ஏம்ப்பா.... அங்கே போகும்போது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமுல்லே?

said...

வாங்க குமார்.

ஸ்ரீபெரும்புதூர் கோவில்தான். ராமானுஜர் என்றதும் புரிஞ்சுக்குவாங்க என்ற நம்பிக்கைதான்!

வாஸ்து தானே வாய்ச்சது:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

அடுத்த இடுகையைச் சுருக்கப்போறேன்:-)

said...

வாங்க ஜெயஸ்ரீ.

ஹை.....மாம்பழமா? ஜமாய் ஜமாய்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போல கோவிலில் மூலவர் தவிர மற்ற இடங்களில் படம் எடுத்துக்க ஒரு கட்டணம் வச்சால் நல்லா இருக்கும். கோவிலுக்கும் வருமானம் ஆச்சு.

said...

வாங்க உமா.

முதல் வருகை?

நலமா?

நிறையப்பேர் எழுதி இருப்பாங்க. இது நம்ம வர்ஷன்:-)

said...

வாங்க இலா.

லீவு முடிஞ்சதா?

குட்டிக்குரங்கைச் சரியா ஃபோகஸ் பண்ண முடியலைப்பா.

said...

வாங்க கோபி.

கதை.... இப்போதும் பொருந்துது:-))))

said...

வாங்க ஐம்கூல்.

தாராளமாச் சொல்லலாம். ஆனால்.... இந்த வசனம் எல்லாம் சினிமாவுக்குத்தானாம். உண்மைச் சரித்திரத்தில் பொம்மன் விஷயம் வேறென்னு படிச்சேன்(-:

said...

நன்றாக உங்கள் பாணியில் நகைச்சுவையுடன் ஸ்ரீபெரும்புதூர் பற்றி எழுதியுள்ளீர்கள்.

இராமனுஜர் மற்றும் ஆதி கேசவப்பெருமாளின் தங்க விமானத்தை கவனிக்கவில்லையா??

பௌர்ணமியன்றைக்கு பெருமாளின் புறப்படு உள்லது என்னும் புதுத் தகவல் கிடைத்தது நன்றி துளசியம்மா.

கோதை நாச்சியாரை மார்கழி மாதம் மற்றும் ஆடிப்பூரத்தின் போது மட்டுமே சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்ற உண்மையை எதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள்.

நன்றி துளசியம்மா.

said...

நேர்ல பாத்த எஃபெக்ட கொண்டு வந்துடறீங்க டீச்சர்.

said...

வாங்க கைலாஷி.

//இராமனுஜர் மற்றும் ஆதி கேசவப்பெருமாளின் தங்க விமானத்தை கவனிக்கவில்லையா??//

பார்த்தேனே! ஒரு வரியும் எழுதி இருக்கேனே அதைப் பற்றி:-)

said...

வாங்க அமித்து அம்மா.

இதுவரை பார்க்காதவர்களுக்காகவும், பார்த்தவர்கள் ஒருமுறை கொசுவத்தி ஏத்திக்கவும்தான் ......:-)

said...

ஆனால் மனசைக் குடையும் ஒரு கேள்வி இருக்கு.
இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு கோவில் இன்னும் ஏன் நல்லமுறையில் செயல்படக்கூடாது???

இந்த ஒரே ஒரு விசயம் தான் யோசிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

இருவர் புகைப்படம் கொடுத்து உள்ளீர்கள். விபரம் தர இயலுமா?

said...

வாங்க ஜோதிஜி.

இடப்பக்கம் இருப்பது (வெள்ளை சட்டை) துளசியின் ரங்க்ஸ்.

வலப்பக்கம் இருப்பவர்தான் யானைக்குச் சரிவர சிகிட்சை கொடுக்கலைன்னு கொஞ்சம் விவரம் சொன்னவர். அவர் பெங்களூருவில் வேலை செய்யும் உள்ளுர்க்காரர்.
(அவரைப்பற்றி இடுகையிலும் குறிப்பிட்டுள்ளேன்)

said...

நன்றி. மாமல்லபுரத்திற்கு 2001 ல் போனது. சமீபத்தில் போனீர்களா?

said...

ஜோதிஜி,

ரெண்டு வாரம் முன்பு போய்வந்தேன். எழுத நேரம் வாய்க்கலை. ஆனால்

கவனமா வேலை செய்வது எப்படின்னு சொல்லியிருக்கேன்.....

http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_30.html