Sunday, May 17, 2009

ஆறாம் அவதாரம் ..........(2009 பயணம் : பகுதி 25)

இந்தியா போனால் மட்டும் தினமும் வீட்டுக்குப் போன் போட்டு தினசரி நடப்பை அண்ணன் அண்ணியிடம் சொல்லும் வழக்கம் ஒன்னு இருக்கு. எங்கே சுத்தறோமோ.... பத்திரமா இருக்கோமோன்னு அவுங்க வீணாக் கவலைப்படவேணாம் என்ற எண்ணம்தான். நேத்து வழக்கம் அனுசரிச்சப்போ...... பரசுராமர் கோவில் ஒன்னு அங்கே இருக்காம். முடிஞ்சா அதைப் பார்த்துட்டு வாங்கன்னு சேதி சொன்னாங்க அண்ணி.

ஆற்றுக்கால் பகவதி கோயில் போகணுமுன்னு ஒரு ப்ளான் இருக்கு. இந்தக் கோயிலை 'ஆட்டுக்கால் பகவதி, ஆட்டுகல் பகவதி'ன்னு பலவிதமா மக்கள் சொல்றதைக்கேட்டுட்டு அந்தந்த சமயத்துக்கேற்பக் கற்பனை செஞ்சுக்குவேன் முந்தியெல்லாம்.:-) ஆட்டுக்கல்லா வச்சு மக்கள் மாவாட்டுற மாதிரி!! அண்ணி குறிப்பிட்டப் 'பரசுராமர் கோயிலும் பார்க்கணுமு'ன்னு ரமேஷ்கிட்டே சொன்னப்ப மதியம் கோவில் பூட்டும் நேரமாயிருச்சு. எதாவது ஒன்னுதான் இப்போ போக நேரம் இருக்குன்னு சொன்னார். ஆட்டுகல்லை அப்புறம் பார்க்கலாம், இப்போச் சலோ பரசுராமர். இவருக்கு ஒருசில கோவில்கள்தான் இந்தியாவில் இருக்காம். அபூர்வமானதை விட்டுடக்கூடாது. ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிஷ ட்ரைவ்தான். அலங்கார வளைவின் மேலே கோடாலி ஏந்துன கையோட பரசுராமர் ஜம்முன்னு உக்கார்ந்துருக்கார். கோவில் வளாகம் பெருசா இருக்கு.
பெரிய மைதானத்தின் அந்தக் கோடியில் 'சட்'னு பார்க்க ஒரு வீடுபோலத்தான் இருக்கு கோவிலின் முன்பாகம். இடதுபக்கம் ஒரு பெரிய விருட்சம்.(அரசமரமோ இல்லை நாவல்மரமோ, சரியாக் கவனிக்கலை) சுற்றிவர இருக்கும் மேடையில் நாகர்கள். எதிரே சின்னப் புரைகளா இரண்டு சந்நிதிகள், உடையவர், பகவதி இருவருக்கும். இடதுபக்கம் கோவில் முகப்புவரை நல்ல க்ரானைட்க் கல்லில் மழமழன்னு இருக்கும் சதுரப்பீடங்கள் வரிசை. பத்து இருக்கலாம்.(ஹா....எண்ணலை)


முகப்புவழியா உள்ளே போனால் இடதுபக்கம் ஒரு வெராந்தாபோல ஒன்னு. நேரெதிரே இருக்கும் மண் முற்றத்தில் இறங்கினால் இடுப்பளவு உயரம்வரும் மேடைபோன்ற அமைப்பில் குட்டியா ஒரு கோவில். மூணு படி இருக்கு. நாமெல்லாம் படிக்கு இந்தப் பக்கம் நின்னு சேவிச்சுக்கணும்.
உள்ளே சந்தனக்காப்பில், தூக்கிப்பிடிச்சக் கோடாலியும் கையுமா பரசுராமர் நிற்கிறார். உயரம் மூணடிகூட இருக்காது. போத்தி உடம்பை ரெண்டா மடிச்சுக் குனிஞ்சு நெய்விளக்கேற்றி தீபாராதனை செஞ்சுக்கிட்டு இருக்கார். குனிஞ்சபடியே வெளியே வந்து (நிமிர்ந்து நின்னால் அவர் தலை இடிக்கும் அவ்வளோ தாழ்வா இருக்கு கூரை.) துளிச் சந்தனத்தைக் கையில் விட்டெறிந்தார். நீட்டிய நம் கையில் 'சொத்' ! ( தூக்கிப்போடறோமுன்னு சொல்லி இதொரு பழக்கம் இந்தக் கேரளக் கோவில்களில்) அவ்ளோதான் உச்சிக் காலப்பூஜை முடிஞ்சு நடை சாத்தியாச்சு. நல்லவேளை கடைசி நிமிஷம் ஓடிவந்துட்டோம்.

கோயில் உள்முற்றத்தில் சுற்றிவந்தோம். உள் வெராந்தாவிலும். முற்றத்திலும் பித்தளை/வெண்கலப் பலிபீடங்கள் தாமரைப்பூ வடிவில் இருந்தன.
பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய காரியங்களுக்குப் பெயர்போனது இந்தக் கோவில். அதான் பலியிடும் சோற்றை வைக்கப் பலிபீடங்கள் வெளியில் இருக்கோ? ஒவ்வொரு பீடத்துக்கும் உரிமையாளராத் தனக்குத்தானே பட்டா போட்டுக்கிட்டுச் சில நாய்கள் பீடங்கள் அருகில் பயங்கரத் தூக்கத்தில். சாப்பாடு பலமோ!!!
சிதறியச் சோற்றுப் பருக்கைக்களுக்குக் காத்திருக்கும் காகங்களும் ஓசையின்றிக் கரையாமல் அங்கங்கே உட்கார்ந்திருந்தன. பித்ருக்கள் காக்கை வடிவில் வந்து நாம் இடும் உணவை ஏற்றுக்குவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அதானே முக்கியமாக அமாவாசை தினங்களில் காக்காய்க்குச் சோறு வைக்கிறோம்.
கர்மம் செய்ய இங்கே வரும் அன்பர்களுக்காகத் தங்குமிடங்களும், இங்கே வந்து குளிச்சுச் சுத்தபத்தமா எல்லாக் காரியங்களும் செஞ்சுக்க வசதியாக் குளிமுரிகளும், வஸ்த்திரம் மாற்றும் இடங்களுக்கும் ஆண் பெண் இரு பாலருக்கும் வசதி செஞ்சுவச்சுருக்காங்க. நகருக்குள் இருந்தாலும் நிறையத் தென்னை மரங்களோடு கோயில் பரம்பு நல்ல குளிர்ச்சியா இருக்கு.

மகிழ்ச்சி, துக்கம் எல்லாம் நிறைஞ்சதுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லாமச் சொல்வதுபோல கோவில் வளாகத்தையொட்டியே கல்யாண மண்டபம் ஒன்னும் இருக்கு. ராஜலக்ஷ்மி கல்யாண மண்டபம்.

ஜமதக்னி என்னும் முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் மகனாகப்பிறந்தவர் இந்தப் பரசுராமர். இவர் மகாவிஷ்ணுவின் தசாவதார வரிசையில் ஆறாவது அவதாரம். ஜமதக்னி முனிவருக்குத் தினமும் பூஜைக்கான ஆயுத்தங்கள்,பணிவிடைகள் செய்வது மனைவி ரேணுகாதேவியின் கடமை. தினமும் ஆத்துக்குப்போய் (இது அந்த ஆம் இல்லை. ஆறு) பூஜைக்கானத் தண்ணீர் கொண்டுவருவாங்க இந்த அம்மா. போற போக்கிலே ஒரு குடத்தைத் தூக்கிட்டுப்போகக்கூடாதோ? ஜாலியாக் கையை வீசிக்கிட்டுப் போயிருவாங்க. அங்கே போனதும் குளிச்சுச் சுத்தபத்தமா ஆத்து மணல் கொஞ்சம் வாரி எடுத்து அதுலே ஒரு குடம் செய்து அதுலே தண்ணி கொண்டுவருவாங்களாம். இப்படி இருக்கும்போது ஒரு நாள் குடம் செஞ்சு அதுலே தண்ணீர் மொண்டுக்கிட்டு இருக்கறப்ப மேலே ஆகாயத்தில் பறந்து போன கந்தர்வனின் பிரதிபலிப்பு தண்ணீரில் தெரிஞ்சிருக்கு. நகையும் நட்டும் பட்டும் பீதாம்பரமுமா ஜொலிச்சுக்கிட்டுப் பறந்துபோன கந்தர்வனின் அழகு கண்ணைப் பறிச்சிருக்கும்தானே? அழகை யாராவது அசட்டை செய்ய முடியுமா? அட! என்ன அழகா இருக்கான்னு மனசுலே ஒருவினாடி நினைச்சாங்க. அவ்ளோதான்...... தண்ணீர் ரொப்பிக்கிட்டு இருந்த பானை 'டபக்'ன்னு உடைஞ்சு போச்சு. ஆத்துமணலுக்குப் பஞ்சமா என்ன? இன்னொரு குடம் செஞ்சுக்கலாமுன்னு கரைக்கு வந்து மணலை வாரிக் குடம் செஞ்சா..... அது நிக்கமாட்டேங்குது. பொலபொலன்னு மணல் உதிர்ந்து போகுது. என்னடா..... இது சோதனைன்னு கலக்கத்தோட திரும்பத் திரும்ப முயற்சி செய்யறாங்க அந்த அம்மா. ஊஹூம்.... பலன் இல்லை(-:


ஆசிரமத்துலே 'தண்ணிக்காக'க் காத்துக்கிட்டு இருக்கார் கணவர். அம்மா வந்த பாட்டைக் காணொம். என்ன ஆச்சுன்னு 'ஞான திருஷ்டி'யிலெ பாக்கறார். அம்மா மணலைப் பிசைஞ்சுக்கிட்டுக் கண்ணீரோடு நிக்கிறாங்க. ஐயோ பாவம். தினமும் நேரம் தவறாமக் கொண்டுவந்து சேவை செஞ்சாங்களே. இன்னிக்கு ஏதோ கஷ்டமுன்னு ஒரு கணமும் நினைக்காம..... மனைவியின் கற்பு(?) களங்கப்பட்டுப்போச்சுன்னு கொதிச்சுப்போய் நிக்கிறார் இவர். ரேணுகாதேவி கலக்கத்தோடு ஓடிவந்து, ' இன்னிக்குப் பானை செய்ய வரலை. தண்ணீர் மொள்ளும்போது அழகான கந்தர்வன் வானத்தில் போறதைப் பார்த்தேன். பானை உடைஞ்சு போச்சு'ன்னு விஷயத்தைச் சொல்றாங்க. முனிவர் சாமியாடறார். கற்பிழந்த மனைவி இனி வேணாம். கொன்னு போடணுமுன்னு சொல்றார். அப்ப அவரே கொல்லவேண்டியதுதானே? தன்னுடைய மகன்களையெல்லாம் கூப்பிட்டு 'உங்கம்மாவைக் கொல்லு'ன்னு ஒவ்வொருத்தருக்கும் ஆணையிட, பரசுராமரைத் தவிர மத்தவங்க யாரும் தாயைக் கொல்ல முன்வரலை.
' தந்தை சொல் மிக்க மந்திரம்' இல்லைன்னு பரசுராமர் தன் கையில் இருக்கும் பரசு(கோடாரி. இது சிவபெருமான் கொடுத்ததாம்) தூக்கி அம்மாவை ஒரே வெட்டாத் தலைவேறு முண்டம் வேறுன்னு போட்டுத் தள்ளிட்டார். மனம் குளிர்ந்து போச்சு அப்பா ஜமதக்னி முனிவருக்கு. 'ஆஹா.... நீயல்லவோ என் மகன்'னு ஆனந்தம் பொங்கிவர, உனக்கு என்ன வரம் வேணுமோ கேள்'ன்னு சொன்னார். நம்ம பரசுராமர் அடக்கமான குரலில், தாயை உயிர்ப்பிச்சுத் தரணும்'ன்னார். கேட்டதைக் கொடுக்கவேண்டியதாப் போச்சு. அதுவும் மந்திர வித்தை மாதிரி மூணே முக்கால் நாழியோ ஏதோ ஒன்னு அந்த நேரத்துக்குள்ளே தலையையும் உடம்பையும் ஒன்னு சேர்த்து வச்சுட்டால் உயிர் வருமுன்னு சொல்லி வந்துச்சாம். இதுலே இன்னொரு விதமான கதையும் செவிவழியா வந்து சேர்ந்த காலமும் உண்டு. (மேற்படிக் கதையே, ரொம்ப சிம்பிளா எங்க அம்மா சொல்லிக் கேட்டதுதான் ஒரு காலத்தில்)

ரெண்டா வெட்டுண்ட மனைவியைத் தூக்கிக் கடாசிட்டாராம் முனிவர். அதுக்குப்பிறகுதான் மகனைப் பாராட்டி வரம் வழங்குனார். கிடைச்ச வரத்தின்படி தாயை உயிர்ப்பிக்க நேரம் கடந்து போகுமுன் தலையையும் உடலையும் தேடிக்கிட்டே பரசுராமர் போய்க்கிட்டு இருக்கார். தலை ஒரு இடத்தில் ஆப்ட்டது. உடலைக் காணோம். நேரமோ முடியப்போகுது. அப்போ அங்கே ஒரு தாழ்ந்த இனப் பெண்ணின் உடல் மட்டும்(?) கிடந்ததாம்.(அந்தம்மாவுக்கு ஏன் இந்த கதி வந்துச்சுன்னு தெரியலை. யாரைப் பார்த்தாங்களோ?) ஆபத்துக்குப் பாவமில்லைன்னு தாயின் தலையை அந்த உடலோடு சேர்த்துவச்சுட்டாராம். உயிர் வந்துருச்சு...கூடவே இன்னொரு பிரச்சனையும்...... அதனால்தான் ரேணுகா தேவி கோயில்களில் தலை மட்டுமே உள்ள சிலை வச்சு வழிபாடு நடக்குதுன்னு போகுது கதை.

தாயைக் கொன்ன பாவம் செஞ்சோமேன்னு மனம் வருந்திக் கோடாரியைத் தூக்கி வீசி எறிஞ்சாராம் அப்ப உருவானதுதான் கேரளான்னு இன்னொரு கதை இருக்கு. இவரோட அப்பா ஜமதக்னியை ஒரு அரசர் கொன்னுட்டாராம். அதனாலே பரசுராமருக்கு க்ஷத்திரியர்கள் என்னாலே மகா வெறுப்பாம். இவரைப்போலவே தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு மக்களுக்குப் போதிக்கும் ஏழாவது அவதாரமான ராமர் அவதரிச்சதும் அதே காலக் கட்டம்தானாம். ராமன் ஒரு க்ஷத்ரியனாச்சேன்னு அவரோட சண்டை போடப்போய், ராமனும் தன்னைப்போல ஒரு அவதாரமுன்னு உணர்ந்து ராமருக்கு இவர் தன் வில்லைக் கொடுத்தாருன்னும் இன்னொரு கதை இருக்கு. நம்ம நாட்டில் கதைகளுக்காப் பஞ்சம்?

நாம் இப்படிக் கதைவிட்டுக்கிட்டு இருக்கும்போது.... உத்தரப்பிரதேசத்தில் ஸஹ்ஜன்பூர் என்ற இடத்தில்தான் பரசுராமர் பிறந்தாருன்னு அங்கத்து மக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம். கோயில் ஒன்னு அங்கே இருக்குன்னு ஆதாரம் காட்டுறதாக் கேள்வி.

நல்லவேளையா அந்த ஜமதக்னி இப்போ இல்லை. இந்தக் காலத்துலே அவருடைய ரூல்ஸ் படி பொண்ணுங்க யாருமே தேறி இருக்க மாட்டோம். 'ரொம்பவே அநியாயத்துக்குக் கற்புக் காவலனா இருந்துட்டோமோன்னு இப்பவாவது யோசிச்சாத் தேவலை'. இல்லேன்னா.....மண்டையில் அடிச்சுக்கிட்டு எல்லாம் கலிகாலமுன்னு சொல்லிக்கிட்டு இருப்பார்!!!!

இப்ப அப்படியே ப்ளேட்டைத் திருப்பிப்போட்டு பாருங்க, நம்ம ரேணுகாம்மா என்ன சொல்வாங்கன்னு.......

பொம்பளை மனசுக்குள்ளே என்னா நினைக்கணும் என்னா நினைக்கக்கூடாதுன்ற அளவுக்கு ஆணாதிக்கம் அதிகமாப்போயித்தானே என்னை இப்படியெல்லாம் கொன்னீங்க...... கலிகலின்றேயேப்பா...... இன்னொருத்தியை அழகா இருக்கான்னு நினைக்காத ஆம்பளை ஒருத்தனைக் காமி. கோடாரியை நானே கழுத்துலே போட்டு வெட்டிக்கிறேன்.....

கற்பு சமாச்சாரத்தை முப்பாலருக்கும் பொதுவில் வைப்போம்!!

தொடரும்..........:-)

24 comments:

said...

டீச்சர், "அப்படிப் போடு, போடு, அப்படிப் போடு"ன்னு போட்டுத் தாக்கியதற்கு, பெண்கள் சங்கம் 34வது வட்டம் சார்பாக மலர்மாலை, ஜோடா.

ஒரு +ம் தமிழ்மணப்பட்டையில் அடித்தாச்சு.

said...

நல்லா கத சொல்லுறீங்க..

said...

இந்திரனுக்கு ஒரு நீதி, இந்திரைக்கு ஒரு நீதி.

கசப்பு.
பாவம் அந்த ரேணுகா.
அவள் தலை ஒரு இடம் உடல் ஒரு குப்பத்து பெண்ணிடம் சேர்கிறது.
பரசுராமன் அவதார புருஷன் இத்தனைக்கும். என்னவோ போங்க.

said...

இப்பாவிருந்தா கோடாலியை திருப்பி போட்டிருப்பாங்க ரேணுகா....கேரளாவுக்கு இப்படியெல்லாம் வரலாறு இருக்கறது டீச்சர் சொல்லி தான் தெரியுது.

said...

ஷேத்ராடனம் நல்லா இருக்கு. பரசுராமர் உண்டாக்கியதால் கேரளாவுக்கு பரசுராமர் ஷேத்ரம்னும் பேர் உண்டு.அந்த சமயத்தில் கடல்ல இருந்த நாகங்கள் கஷ்டப்பட்டதால் பரிகாரமா அதுகளை வழிபட ஆரம்பிச்சாங்க. அவர் இருக்குற போஸை பாத்தா அடுத்தவன் மனைவிய அழகா இருக்கான்னு நெனைக்கிற ஆம்பிளைங்க நிச்சயமா பயப்படுவாங்க.எப்போ குதிப்பாரோ கோடரி கழுத்தில் விழுமோன்னு இருக்கு.கடைசி வரி நச். ஆமா, ரேணுகா ஒடச்சா மட்டும் மணல் குடமா???.

Anonymous said...

ரேணுகாம்மா சொல்லியிருக்கறதுதான் சரி. பரசுராமார் போஸ் நல்லா இருக்கு.அதாவது பாக்கறவங்க பயப்படற மாதிரி

said...

இந்த பகுதியில் கதையும் படங்களும் கலக்கல் ;))

அட 25வது பகுதியா!! ;))

said...

pazavangaadi pillayar temple, have u visited that.

said...

வாங்க கெக்கே பிக்குணி.

நீங்கதான் மேடையும் போட்டுப் போணியும் பண்ணிட்டீங்க:-))))
ப்ளஸ்ஸுக்கு நன்றிப்பா

said...

வாங்க தீப்பெட்டி.

அடிப்படையில் நான் ஒரு 'ஸ்டோரி டெல்லர்'. அதான் கதையா அடிச்சு விடறேன்:-)))

said...

வாங்க வல்லி.

ஆரம்பகாலத்துலே இருந்ததையெல்லாம் மாத்தி ஆணுக்கொருநீதி பெண்ணுக்கொரு நீதி என்பதை வலியுறுத்தத்தான் இந்தக் கதைகள் எல்லாம் ஆண்களாலே உருவாக்கப்பட்டவைகள்.

இப்போ நம்ம சமூகத்தில் மாற்றங்கள் வரத்தொடங்கிப் பெண்ணுக்கும் சம உரிமைக் கொடுக்கணும் என்ற குரல்கள் வருதே. அது இன்னும் சமூகத்தால் முழுசுமா அங்கீகரிக்கப்படணும் என்பதுதான் இப்போதைய ஆசை.

said...

வாங்க சிந்து.


நம் தேசத்தில் கதைகளுக்குப் பஞ்சமே இல்லைப்பா. எல்லாத்துக்கும் 'கதை' இருக்கு.

இல்லேன்னா?

பண்ணிருவோம்:-)))))

said...

வாங்க ஐம்கூல்

அவுங்க எங்கேப்பா உடைச்சாங்க?

அதுவால்லே உடைஞ்சுபோச்சு(-:

said...

வாங்க சின்ன அம்மிணி.

காலம் மாறிக்கிட்டே வருது:-)))))

said...

வாங்க கோபி.

ஆமாம்ப்பா. 'கால் செஞ்சுரி':-))))

said...

வாங்க குப்பன் யாஹு.

கிடைச்சவரைக்கும் தரிசனம்தான் எல்லா இடங்களிலும்.

இப்ப கிடைக்கலைன்னா பின்னே ஒரு சமயம் கிட்டுமாயிருக்கும். அல்லே?

said...

//இன்னொருத்தியை அழகா இருக்கான்னு நினைக்காத ஆம்பளை ஒருத்தனைக் காமி. கோடாரியை நானே கழுத்துலே போட்டு வெட்டிக்கிறேன்.....//

தூள்ள்ள்ள்ள்
கலக்கலா இருக்கு ....

said...

ஆணுகொரு நீதி , பெண்ணுகொரு நீதி .... இதை எங்க ஆரம்பிச்சு, எப்படி எழுதனம்னு தெரியல, ஆண் செய்வதெலாம் பெண்ணால் செய்யமுடியாதுன்னு தாழ்மையான கருத்து. அந்த காலத்து பாலச்சந்தர் படத்ல கமல் பேசறா மாதிரி இருக்கும், ஆனால் மறுக்க முடியாது... சாதரணமா, ஆம்பளைங்க வீட்ல , கேரளாவுல கோவிலில், சட்டை போடாம இருக்கலாம் ஆனால் மாத்தி யோசிக்கமுடியாது.

இயல்பில், ஒரு ஆண் நிறைய சமயங்களில் அடுத்த பெண்களை பற்றி யோசிப்பான், அவன் அப்படி யோசிக்க்கிறதினால பெரிய பாதிப்பு உண்டாவதில்லை, ஆனால் அதே யோசனையுடன், ஒரு முனைப்புடன் வேலையில் இறங்கினால் - வாழ்கை பாழ் தான். பெண் மிக மென்மையானவள், ஒரு சின்ன சமிக்ஜை - சிக்னல் கொடுத்தாலே போதும், ஒரு நூறு ஆண்கள் பாய்வார்கள். ....அதனால், இது மாதிரி கதை வந்திருக்கலாம். பெரியவர்கள் அதில் உள்ள தாத்பரியத்தை சொல்லலாம்- அடியேன் ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

said...

அது ஒரு கனாக் காலம் , உங்க பேர்லயே தெரியுது:) தப்பா நினைக்காதீங்க.

1. ஆடை வேறுபாடுன்னு நுழைச்சது ஆண்கள். ஏனெனில், //இயல்பில், ஒரு ஆண் நிறைய சமயங்களில் அடுத்த பெண்களை பற்றி யோசிப்பான் //

இப்ப ஒரு நாட்டுல கூட இப்படி நடக்குதாம்: "நீ பிறப்பால் "குக்கூ" மொழி பேசுபவன், நாங்க கொடுக்கிற இந்த அடையாளத்தைத் தாங்காமல் நடந்தால், உனக்கு முக்கியமானவற்றை (குழந்தைகள், உறவுகள்) எல்லாத்தையும் அழிச்சுடுவோம்". ஆணோ, பெண்ணோ, உயிர் வாழ்தலுக்கு ஒரு நியதி உண்டே. அடையாளத்தைத் தாங்காமல் நடப்பானா குக்கூ?

2. என்ன அநியாயமா இருக்குங்க? மணமான ஆண்கள் இதை உறுதியாச் சொல்லுவீங்களா: "இயல்பில், ஒரு ஆண் நிறைய சமயங்களில் அடுத்த பெண்களை பற்றி யோசிப்பான், அவன் அப்படி யோசிக்க்கிறதினால பெரிய பாதிப்பு உண்டாவதில்லை". அவனுக்கு பாதிப்பு உண்டாவுதோ இல்லியோ, வீட்டுல கட்டாயம் உண்டுங்க. உங்க வீட்டம்மாவோட கொஞ்சம் பேசணும் போலிருக்கே:-)

எங்க தலைமுறை (உங்க ப்ரொஃபைல் படி, நான் கட்டாயம் உங்களை விடச் சின்னவள்)யில, "போடாங்"னுடுவோம். நேத்திக்கு என்னுடைய கண் டாக்டர் எவ்ளோ அழகுன்னு சொல்லிட்டிருந்தேன் என் கணவர்கிட்ட, அவர் அழகா சிரிச்சிட்டு விட்டுட்டாரு.

said...

வாங்க ஞானசேகரன்.

கலக்குனாத்தானே ஒரு காலத்திலாவது தெளியும்:-)))))

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

இந்தச் சட்டை விஷயம் மகாப் பெருசாச்சே.

ஒரு காலத்துலே தாழ்ந்த இனப் பெண்கள் சட்டையே போடக்கூடாதுன்ற கொடுமைகள் எல்லாம் நடந்துருக்குல்லே.

கோயில்களில் ஆண்கள் சட்டையோடு வரக்கூடாதுன்றதே ஒரு அபத்தம்தான்.

நான் கழட்டலாம். உன்னாலே முடியாதுன்றது.... இதுகூட ஒரு ஆணாதிக்கம்தான். நடராஜர் காலை உயரத்தூக்கி ஆடிச் சக்தியைத் தோற்கடிச்ச மாதிரி. இல்லீங்களா?

//பெண் மிக மென்மையானவள், ஒரு சின்ன சமிக்ஜை - சிக்னல் கொடுத்தாலே போதும், ஒரு நூறு ஆண்கள் பாய்வார்கள். //

சரியாப் போச்சு..... மென்மையானவளைப் பாதுகாப்பதுதானே வேண்டியது. மென்மைன்னு கசக்கிப்போட நூறு பேர் பாய்வது என்ன நியாயம்?

பெண்களைக் கெடுத்தால், பெண்களுக்கே கூடுதலான பாதிப்புன்றதால், அவுங்கவுங்க வீட்டுப் பெண்களைக் காப்பாத்த ஆண்கள் இப்படி உபாயம் செஞ்சுருக்கலாமோ என்னவோ. ஆனால் மனசுக்கும் காவல் போட முடியுமா?

said...

கெக்கேபிக்குணி,
ஆமாங்க. இப்பெல்லாம்
பொண்ணுங்க சினிமாக்காரர், பாட்டுக்காரர், ஸ்போர்ட்ஸ்காரர் போஸ்டர்களையெல்லாம் அறைகளில் ஒட்டிவச்சுக்கறாங்க.

அழகு, திறமை இதுகளைப் பாராட்டுதறதால் ஒரு களங்கமும் வந்துறாது.

said...

ஆறாம் அவதாரம் சூப்பர் ஆணாதிக்கம் பத்தி உங்க கருத்தும் சூப்பர் நானும் எதை வழி மொழிகிறேன்

said...

வாங்க அருண்மொழி.

ஆறாவதின் 'நோக்கம்' என்னவா இருக்குமுன்னு யோசிக்கணும்!!

ஜஸ்ட் 'தலை சீவறதா' இருக்காதுல்லே?