Saturday, June 25, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 12

'பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை மொறைச்சுப் பார்த்தா மாதிரி' ன்ற பழஞ்சொல்லு
கேட்டிருப்பீங்களே! அதேதான்!!!! இந்த ஊருக்கு வந்தபிறகு, மொதமுறையா ஒரு
'சூப்பர் மார்கெட்'க்கு வீட்டுச் சாமான் வாங்கப் போயிட்டு, ஒரு ஐலில்( இதுக்குத் தமிழ்
என்னவா இருக்கும்? முத்து உதவி செய்யுங்க) ரெண்டு பக்கம் நெடூக இந்தப் பசங்கள்
சாப்பாடா இருக்கறதைப் பார்த்துட்டுத்தான் அப்படியே பிரமிச்சு நின்னுட்டேன்!!!!


நம்ம வீட்டுலே 'செல்லப் பிராணிகளை பசங்கன்னு சொல்றது வழக்கம்!!!

மனுஷங்களுக்குக் கூட இத்தனை வகைவகையான சாப்பாடு இல்லே! ஹைய்யோடா....
என்னன்ன மாதிரி காம்பினேஷன்!!!! இதுமட்டுமா, அதுங்க கழுத்துக்குபோடற பட்டைங்க,
உடம்புலே இருக்கற பூச்சிங்களைக் கொல்ல மருந்து, அப்புறம் விளையாட்டுச் சாமான்கள்,
சாப்பாடு வைக்கவும், குடிக்கத் தண்ணி வைக்கவும் அழகழகான பாத்திரம், தட்டு, கிண்ணம்,
போரடிச்சா ச்சும்மாக் கடிச்சுக்கிட்டு இருக்கறதுன்னு சிலது, இப்படி ஏகப்பட்ட சமாச்சாரங்க!!!

கடைக்கு வர்றவங்களொட தள்ளுவண்டியிலே, அநேகமா எல்லாத்துலேயும் ரெண்டு டின் பூனை
நாய் சாப்பாடு இல்லாமலில்லே!!! சிலபேரு, பூனை 'அப்பியிட' ஒரு பெரிய சாக்குப்பைலே
'கேட் லிட்டர்' வாங்கிக்கிட்டும் போவாங்க. லிட்டர் ட்ரே, அதுக்குன்னு ஒரு ஸ்பெஷல் ஸ்கூப்பு
இப்படி உபச்சார சாதனங்கள் வேற!!!!

மூலைக்கு மூலை நம்ம ஊருலே முக்குக்கடை இருக்கறாப்போலெ, இங்கே ஊரெல்லாம் அங்கங்கே
'வெட்னரி க்ளினிக்'!!!! அங்கே பூனையைத் தூக்கிக்கிட்டுப் போறதுக்குன்னு வலைக்கம்பி போட்ட
கூண்டு வேற கிடைக்குது!!! இங்கெல்லாம் 'பெட் ஷாப்'ன்றது ஒரு பெரிய பில்லியன் டாலர் கச்சோடம்!!

இப்ப நாங்க வேற வீடு மாத்தி வந்துட்டோம். இங்கெல்லாம் புள்ளைங்களுக்கு 5 வயசானதும்
பள்ளிக்கோடத்துலே போட்டுறணும். சரியா அஞ்சாவது பொறந்த நாளுக்குக் கொண்டுபோய்
சேர்த்துடணும். சட்டமே இருக்கு! அதனாலே 'ஸ்கூலு'க்குப் பக்கமா வீடு பாத்துக்கிட்டு வந்துட்டோம்!
மகளுக்கு அடுத்த மாசம் அஞ்சாவது பொறந்தநாள் வருதே!!!!

இந்த வீட்டுலேயும், நாங்க வந்த சில நாளுலேயே, கறுப்பும், வெள்ளையுமா ஒரு பூனை வர ஆரம்பிச்சது.
எங்கிருந்துதான் வருதுங்களோ? எப்படித்தான் தெரியுதோ நம்மைப் பத்தி? ச்சும்மா வாசல்லே வச்சு
விளையாடறதுதான்!!! உள்ளெகிள்ளெ கிடையாது!!! அதுக்கு 'ஸ்பாட்'ன்னு பேரு வச்சாச்சு.

இப்படி இருக்கச் சொல்ல, நம்ம பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒரு குடித்தனம் வந்துச்சு. குடித்தனம்ன்னா
குழந்தை குட்டியெல்லாம் இருக்குமுல்லெ! இங்கெயும் இருந்துச்சு! 13 பசங்க!!!!! பெரீய்ய குடும்பம்!
அம்மா பேரு ஃபியோனா. அவுங்க ரெண்டு மகளுங்க, குரங்கணா, கறுப்பு மொட்டை. ஒவ்வொண்ணுக்கும்
நாலு நாலு குட்டிங்க! இதில்லாம ஹாஃப் க்ரோன் அளவுலே, ஜிஞ்சர், டைகர், ப்ளாக்னு மூணு! எல்லாம் நாங்க
வச்ச பேருங்கதான்!!!!

ஃபியோனா ஒரு 'கேட் லவ்வர்'!!!! காலையிலே ஏழரைக்கு வேலைக்குப் போனா, ராத்திரி பத்தரைக்கு
வருவாங்க போலெ. ஏன்னா அந்த நேரத்துக்குத்தான், பூனைங்களுக்குச் சாப்பாடு கொடுக்கறதுக்காக
'பூஸ் பூஸ், கிட்டி கிட்டி'ன்னு கூப்புடற சத்தம் கேக்கும். ஒரு அரைமணி நேரத்துக்கு இப்படிக் கூப்புட்டுக்
கிட்டே இருப்பாங்க. இதுங்கெல்லாம்தான், நம்ம வீட்டுலே சாப்புட்டுட்டு 'மிதப்புலே' கிடக்குதுங்களே!
லேசுலே போகாதுங்க.

நம்ம வீட்டுக்கு முன்னாலே இருக்கற 'சன் டெக்'லே ஒரு அம்மாவும் நாலு புள்ளைங்களும், பின்னாலே
தோட்டத்துலே இன்னொரு அம்மாவும் அதோட நாலு புள்ளைங்களுமா அப்படியே கூட்டமாக் கிடப்பாங்க.
பால் கொடுக்கற தாய் இல்லையா? பசிக்காதா? நாம அந்தப் பக்கம் போறப்ப வர்றப்பெல்லாம் பாவமா
மூஞ்சியை வச்சுக்கிட்டு, ஆஆஆஆன்னு வாயைத் தொறந்துகிட்டுச் சின்னதாக் குரல் ரொம்ப எழும்பாமக்
கத்திக்கிட்டு ஒரு பார்வை பாக்கறப்ப ,எப்பேர்ப்பட்டக் கல்மனசுன்னாலும் அப்படியே கரைஞ்சுடும்!

அந்த ஹாஃப் க்ரோன் மூணும் அதும் பாட்டுலே விளையாடிக்கிட்டு இருக்கும். கதவு திறந்து இருந்தா
அப்படியே நைஸா வீட்டுக்குள்ளேயும் வந்துரும்! முதல்லே பாவமா இருக்கேன்னு பிஸ்கெட் மட்டும்
போட ஆரம்பிச்சேன். சொல்ல மறந்துட்டேனே, இந்த பூனை நாய்ங்களுக்குன்னே விதவிதமான
பிஸ்கெட்டுங்க வேற கடைகளிலெ குவிஞ்சு கிடக்கும்!! வேற வேற ஷேப், சைசுன்னு ஒரேஅட்டகாசம்!!!!

எவ்வளவு போட்டாலும் நொடியிலே தின்னுடுங்க! எங்க இவர் முதல்லே கத்திக்கிட்டு இருந்தார், 'துரத்து
அதுங்களை'ன்னு!! அந்தப் பரிதாபக்கேஸ் மூஞ்சுங்களைப் பார்த்ததும், 'ஏதாவது இருந்தாக் கொண்டாந்து
போடும்மா'ன்னு சொல்ற லெவலுக்கு வந்துட்டார்!!! ஆனாலும் செலவு ஏறிக்கிட்டேப் போறதைப் பார்த்துட்டு,
அந்த ஃபியோனாகிட்டே சொல்லலாமுன்னு பார்த்தா, ஆளைப் புடிக்கறதே கஷ்டமால்லெ இருக்கு!

குரங்கணாவோட பசங்க அழகுன்னா அப்படி ஒரு அழகு. பச்சை, நீலம்னு கண்ணூங்க வச்சுக்கிட்டு
அருமையான அழகோட இருந்துச்சுங்க. மகளுக்கு ஸ்கூல் நேரம் போக இதுங்களோட விளையாடறதே
முக்கிய வேலையாப் போச்சு!

இப்படியே கொஞ்ச நாள் போய்க்கிட்டு இருந்துச்சு! ஒரு நாள் நான் வீட்டு வேலை செஞ்சுக்கிட்டே
தளர்ந்து போய் தற்செயலா தலை நிமிந்து ஜன்னல்லே பாக்கறென், ஃபியோனா அவுங்க வீட்டுக்குள்ளே
போறாங்க.

'தளர்ந்துபோயி'ன்னு ஏன் சொல்றேன் தெரியுதா? இங்கே வந்ததிலிருந்து, வீட்டுவேலைக்கு உதவியாளர்
யாரும் கிடையாது! 'தன் கையே தனக்குதவி'தான். ஒரு மணி நேரத்துக்கு குறைஞ்சது 10 டாலர் கூலி
கொடுத்தா, ஆளு கிடைக்கும். நமக்குக் கட்டுப்படி ஆக வேண்டாமா? வெள்ளைக்காரங்க பாத்திரம்
தேய்க்கிறதே, ( எங்கெ தேய்க்கிறாங்க?) ஒரு மாதிரி இருக்கும். சிங்குலே தண்ணீ நிறைச்சு அதுலே
சோப் திரவத்தை ஊத்தி, பாத்திரங்கைெள அதுலே முக்கி முக்கி எடுத்து வச்சிருவாங்க. அப்புறம்
ஒரு 'டீ டவல்'லே துடைச்சு காய வச்சுருவாங்க. எனக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்!!!!
அதனாலெ எல்லாம் 'நாமே'தான்!!!

கதவைத் திறந்துக்கிட்டு ஓடுறேன், ஃபியோனாவைப் பாக்க!!! சொன்னேன், 'இந்த மாதிரி நிறைய
பூனைங்களை வச்சுக்கிட்டு இருக்கே! அதுவும் அதுங்க பசியிலே நம்ம வீட்டையே சுத்திச்சுத்தி
வருதுங்க. அதுங்களுக்கு நேரத்துக்குச் சாப்பாடு போட ஏதாவது ஏற்பாடு செய்'யுன்னு!!!!
அதுக்கு அவுங்க சொன்ன பதில் என் நெஞ்சுலே பால் வார்த்துச்சு!

இங்கே இடம் பத்தலைன்னு 'கன்ட்ரி'க்குப் போறாங்களாம். இத்தனை பூனைங்களுக்கும் சாப்பாடு
கொடுக்கணுமேன்னுதான் ரெண்டு இடத்துலே வேலை செய்யறாங்களாம். அதாலேதான் ராத்திரி
வீடு வர லேட்டாகுதாம்! அங்கே போயிட்டா, அவுங்க சிநேகிதி பக்கத்து வீட்டுலே இருக்காங்களாம்.
அவுங்களும் நிறையபூனை வச்சிருக்காங்களாம். அவுங்க பாத்துப்பாங்களாம்!!!

'எப்பப் போறீங்க'ன்னு கேட்டதுக்கு, 'நாளைக்குக் காலி செய்யறேன். அதுதான் சாமான்கள் எல்லாம்
'பேக்' செய்ய இப்ப வந்தேன்'னு சொன்னாங்க!!!!! இந்த நல்ல விவரத்தை எங்க வீட்டுலே மகளுக்கும்,
இவருக்கும் சொல்லி, 'நாளையிலே இருந்து இந்தப் பூனைங்க வராது. கிராமத்துக்குப் போகுதுங்க'ன்னு
இருந்தேன்.

மறுநாள் பொழுது விடிஞ்சது. வாசல்லே யாரும் இல்லே! அமைதியா இருந்துச்சு! மகளைக் கொண்டுபோய்
பள்ளிக்கூடத்துலே விட்டுட்டுத் திரும்பிவந்தேன். பின்பக்கம் இருக்கற கொல்லைப்புற வாசற்படியிலே
மூணுலே ஒண்ணான 'ப்ளாக்' சுருண்டு படுத்துக்கிட்டு இருக்கு!!!!!

பக்கத்து வீட்டு ஜன்னல்கள் எல்லாம் திறந்து கிடக்கு. யாரோ நடமாடறாங்க. அங்கே ஓடுனேன். அந்த வீட்டு
ஓனர் வீட்டைச் செக் பண்ணிக்கிட்டு இருக்கார். விவரம் சொல்லி, ஃபியோனா வோட ஃபோன் நம்பர்
தெரியுமான்னு கேட்டா, அவருக்குத் தெரியாதாம். இத்தனை பூனைங்க இருக்கற விவரம் கூட அவருக்குத்
மொதல்லே தெரியாதாம். அப்புறம் தெரியவந்ததும்தான், வீட்டைக் காலி செய்யச் சொல்லிட்டாராம்!!
'சிட்டிக் கவுன்சிலு'க்குத்தெரிஞ்சா வம்பாயிருமாம்!!!!

இப்படியாக இந்த 'ப்ளாக்' நம்ம வீட்டுப் பூனையாயிருச்சு. அதுக்கு வேற பேரு வச்சு 'சுவீகாரம்'
எடுத்துக்கலாமுன்னு தீர்மானிச்சோம். இதுவும் நாங்க வச்ச பெருதான். ஆனாலும் வெள்ளைக்காரப்
பேரா இருக்குலே?

'கற்பகம்'னு நாமகரணம் ஆச்சு! கற்பு, கற்புன்னு கூப்பிட்டா வேடிக்கையா இருக்கேன்னு அதுக்கு
கப்புன்னு ச்செல்லப்பேரும் வச்சோம்!!!


இன்னும் வரும்!!!!






7 comments:

said...

//கற்பு, கற்புன்னு கூப்பிட்டா வேடிக்கையா இருக்கேன்னு //

:))

said...

Thanks Ravia

said...

// இன்னும் வரும்!!!! // - சொன்னது துளசி.

ஞானபீடம் said:

எது வரும்? இன்னும் நாலு 'பூச்ச'யா?

'பூச்ச' ரொம்ப இஷ்டம் போலிருக்கு!

'பூச்ச'க்கி தயிர்சாதமும் தந்தூரிச் சிக்கனும் போடுங்க!
நல்லா புசு புசு -ன்னு வரும்!

**************
- ஞானபீடம்
**************

said...

//'கற்பகம்'னு நாமகரணம் ஆச்சு! கற்பு, கற்புன்னு கூப்பிட்டா வேடிக்கையா இருக்கேன்னு அதுக்கு
கப்புன்னு ச்செல்லப்பேரும் வச்சோம்!!!///
:-) :-)

said...

ஞானபீடம்,

தயிர்சாதமும், தந்தூரிச்சிக்கனும் நம்ம வீட்டுப் 'பெரிய பூச்ச'யில்லே சாப்பிடுது:-))))

முத்துத்தம்பி,
நன்றி!!!!

said...

கப்புன்னு சிரிச்சிட்டேன்!

பெரிய நாய் பொம்மை டாப்புல வெச்சு
ஒரு வான் பார்த்திருக்கிறீர்களா?
தூரத்தில் வரும்போதே, அது நாய் வண்டின்னு தெரியணுமாம்!

said...

வாங்க நானானி.

ஆஹா.........இது பரணால் வந்த மறுவாழ்வு:-)))))

கப்பு எங்களைக் கப்னு பிடிச்சுருச்சுங்க.

சரியா ரெண்டுவருசம் ஆச்சு இதை எழுதி!