நம்ம லோட்டஸில் தினசரி வகையில் தினத்தந்தியும் வச்சுருப்பாங்க. பார்த்தே பல வருஷம் ஆனதால் முதலில் அதில் ஒரு நோட்டம் ! முப்பது பேரா? பகீர்னு இருந்தது....
அண்ணன் வீட்டுக்குப் போனதும் குசலவிசாரிப்புகள் ஆனதும், நம்ம பயணத்திட்டம் கேட்டவர் அதையே உறுதிப்படுத்தினார். இப்பப்போய் அங்கே போகணுமா ? கேன்ஸல் செஞ்சுட்டு, மார்ச் முதல் வாரம் போங்கன்னார்.
ஆகஸ்ட் மாச ஹொட்டேல் புக்கிங் பண நஷ்டம், இப்ப ஸ்பெஷல் தரிசனத்துக்குப் பட்ட பாடுன்னு பலதும் மனசுக்குள்ளே வந்து பயமுறுத்தியிருக்கும்போல..... 'பெருமாள் மேல் பாரத்தைப் போட்டுட்டுப் போய்வரணும் 'என்றார் நம்மவர். நானும் 'ப்ரயாக்ராஜில்தான் கூட்டம், அயோத்யாவில் அவ்வளவா இருக்காது'ன்னு என் பங்குக்குச் சொன்னேன். நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்கப்போகுதுன்னு...... ப்ச்....
இந்தக் கால்பிரச்சனை வேற இருப்பதால் எதுக்கு முன்னுரிமை என்பதிலும் ஒரு தயக்கம் இருந்ததே...கால் வலி இன்னும் அதிகமா ஆனா..... நகரவே முடியாதே..... கடைசி ஆசை நிறைவேறாமப் போயிருச்சுன்னா..........(நம்மவரின் மனக்குரல் !)
ஆய்ர்வேத சிகிச்சைக்குக் கேரளா போனால் நல்லது என்றாலும், அங்கேயே தங்குவதில் நம்மவருக்கு சிரமம்தான். எப்பவும் நோயாளிக்கு இருக்கும் சலுகை, கூட வர்றவங்களுக்கு இல்லைதானே ? அதனால் இங்கே சென்னையிலேயே இருக்கும் சிலபல கோட்டக்கல் ஆயுர்வேத கிளை மருத்துவ மனைகளில் சிகிச்சை எடுத்தால் நல்லது. தினமும் சிகிச்சைக்குப்போய் திரும்பி லோட்டஸுக்கு வர்றமாதிரி....
திநகரில் நம்ம மங்கேஷ் தெருவில் ஒரு மருத்துவர் இருக்கும் விவரம் கிடைச்சுப் போனால்..... சொன்ன நேரத்தில் சொன்னபடி எங்கே ? நாம் காத்திருக்கும்போது, ஆற அமர வந்த பணியாளர், கதவைத்திறந்து உள்ளே வந்து உக்காருங்கன்னார். சின்ன அறைதான். அலமாரிகளில் மருந்துகள் நிறைஞ்சுருக்கு. சிகிச்சை அங்கேதானான்னு தெரியலை. விசாரிச்சதில் கன்ஸல்டேஷன் மட்டுமாம். ஓ..... டாக்டர் எப்ப வருவாராம் ? தெரியாதாம் ! சிலநாட்கள் வர்றதே இல்லையாம்.....
இருக்கட்டுமுன்னு அங்கிருந்து கிளம்பி, கூகுளாரின் வழிகாட்டுதல்படி நுங்கம்பாக்கம் போனோம். கொஞ்சம் பெரிய மருத்துவமனையாகத்தான் இருக்கு ! தி நகர் மருத்துவர் பெயரும் வாசல் போர்டில் இருக்கு ! ஆ...... ஒரு நாலைஞ்சு மருத்துவர்கள் இருக்காங்க இங்கே ! வெவ்வேற நாட்களில் வருவாங்களாம் !
கொஞ்ச நேரக் காத்திருப்புக்குப்பின் அன்றைய மருத்துவர் வந்தாங்க. அவுங்க பெயர் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு ! ஜனனி ! அட ! நம்ம ஜன்னு ...
பரிசோதனைக்குப்பின் '21 நாட்கள் சிகிச்சை எடுக்கணும். தினமும் வந்து போகலாம். உள் நோயாளியா இருக்க வேண்டியதில்லை'ன்னாங்க. நம்ம அயோத்யா பயணம் முடிச்சுதான் வரமுடியும்னு சொன்னதும், அதுவரை காலுக்குத் தடவ வேண்டிய குழம்பும் ( இது நம்ம குழம்பில்லை. மலையாளக்குழம்பு. தைலமுன்னு சொல்வோமே அது !) உள்ளுக்கு சாப்பிடவேண்டிய மாத்திரைகளுமா ரெண்டு வாரத்துக்கு எழுதிக்கொடுத்தாங்க. ரெண்டாவது யோசனை இல்லாம குடுகுடுன்னு போய் மருந்துகளை வாங்கினார் நம்மவர்.
எந்த மருந்து மாத்திரைகளையும் உள்ளுக்கு எடுத்துக்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லையாக்கும்...
ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே.... இந்த முறையும் நமக்கான சாரதி, நம்ம விஜிதான். நல்ல பையர். நம்ம புள்ளெமாதிரிதான்.
பாண்டிபஸார் கடைகள் விஸிட், நம்ம டெய்லர் கடை, கீதா கஃபே எல்லாம் இடைக்கிடை நடந்துக்கிட்டுட்டு இருந்துச்சுன்னுத் தனியா சொல்லவேணாம்தானே ? பாண்டிபஸாரில் நடைபாதை நெடுக நடக்க முடியாதவர்களுக்காக ஒரு வண்டி இயங்குவதைப் போன பயணத்துலேயே கவனிச்சுருந்தேன். அப்ப கால் நல்லாத்தானே இருந்துச்சு..... இப்ப இந்த வண்டியைப் பயன்படுத்திக்கணும்தான்! ஓட்டுனர் பழனி, ரொம்ப நல்லவரா இருக்கார். ஒரு கோடியில் இருந்து மறுகோடிவரைக் கொண்டுபோனார் !
நம்மவரின் ப்ரேஸ்லெட் கொஞ்சம் லூஸாக இருந்ததால், அதைச் சரியாக்கிக்கலாமுன்னு நம்ம சீநிவாச ஆசாரியின் , மங்கேஷ் தெரு கடைக்குப்போனால் மூடி இருந்தது. அப்புறம் அண்ணிதான் சொன்னாங்க... அவர் வேற இடத்துக்குக் கடையை மாத்தியிருக்கார்னு. தேடிப்போய் நம்ம வேலையை முடிச்சுக்கிட்டோம். ஒரு இஞ்சுத் துண்டு வெட்டி எடுத்து என்னாண்டை கொடுத்தார்.
கூடியவரை உறவுகளையும் நட்புகளையும் சந்திப்பதை மறக்கவில்லை. எல்லோரும் அன்பு மழையில் நம்மைக் குளிர்விச்சது உண்மை ! நம்ம அநந்தபதுமன் தரிசனத்துக்குப் போயிட்டு, அப்படியே நம்ம நைன்வெஸ்ட் நானானியின் வீட்டுக்கும்போய், புதுவரவு பட்டுவைக் கொஞ்சிட்டும் வந்தாச் !

பதிவுலக நண்பரும், எங்கள் பிள்ளையுமான கார்த்திக், கைநிறையப் பரிசுப்பொருட்களோடு குடும்பத்துடன் வந்து சந்திச்சார். பரோபகாரி ! போனமுறை நம்மவர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த காலங்களில் இவர் செய்த உதவிகளை, இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல.... எப்பவுமே என்னால் மறக்கமுடியாது. இந்தப் பயணத்திலும் இவர் உதவிக்கொண்டே இருந்தார் ! இந்த இயல்பான குணம் அமைவது அபூர்வம் !

'நம்மவர்' படிச்ச எஞ்சிநீயரிங் கல்லூரியில் அவருடைய க்ரூப் மக்கள் சேர்ந்து ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடப்போவதாக ஒரு ரெண்டு வருஷத்துக்குமுன் தகவல் அனுப்பியிருந்தாங்க. நேரில் கலந்துக்க முடியாது என்பதால் எதோ குறிப்பிட்ட தொகை ஒன்னை அனுப்பி இருந்தார். விழா முடிஞ்சதும், அங்கங்களுக்குண்டான பரிசுப் பொருட்களை உள்ளுர் விலாசத்துக்கு அனுப்புவோம் என்றதும், கார்த்திக் அவர்களின் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னார் நம்மவர். அதில் ஒரு 'தங்கக்காசு'ம் இருப்பதாகவும், அதை மட்டும் சென்னையில் ஒரு விலாசத்தில் போய் நேரில் வாங்கிக்கணும் என்றும் சேதி. எல்லாம் அப்படியே ஆச்சு.
'தங்கத்தைத் தபாலில் அனுப்ப முடியாதென்பதால், அதை விட்டுட்டு, மற்ற பரிசுப் பொருட்களை நமக்குக் கொலுப்படிகள் வாங்கி அனுப்பும்போது அந்தப் பொதியில் வச்சுருந்தார். ஒன்னும் சொல்லிக்கற அளவுக்குத் தரமான சமாச்சாரமெல்லாம் இல்லைதான். ஆனால் 'சம்பந்தப்பட்டவருக்கு' அது மதிப்புள்ளதா இருந்துருக்கணும். போகட்டும்.....
வீட்டில் பத்திரமா வச்சுருந்த அந்தத் 'தங்கக்காசு' நம்மவரிடம் அன்றைக்கு வந்துசேர்ந்தது. கல்லூரியின் பெயர், வருஷம் ஏதாவது பொறிச்சுருக்குமோன்னு பார்த்தால் சுத்தம். குறைஞ்சபக்ஷம் 50 ன்னு போட்டுருக்கலாம். ஒரு பக்கம் ஜார்ஜ் மன்னரின் தலை, அடுத்த பக்கம் தூத்துக்குடியில் இதைச் செஞ்சு கொடுத்த கடைப்பெயர். விழாக்குழுன்னு ஒன்னு இருந்துருக்கும்தானே.... எல்லாருக்குமா மேல்மாடி காலி ? தலையில் அடிச்சுக்க இன்னும் நாலு கைகள் இல்லையேன்னு கவலைப்பட்டேன்.
'சம்பந்தப்பட்ட நபருக்கு' அது மதிப்பு வாய்ந்ததா இருக்குமோ என்னவோ..... நமக்கெதுக்கு வம்புன்னுட்டு, நம்ம ஆசாரி கடைக்குப்போய் ப்ரேஸ்லெட்டில் வெட்டியெடுத்தத் துண்டையும், இந்தக் காசையும் கொடுத்து, சுத்திவர சின்ன டிசைனில் வளையமும் செயினில் மாட்டும்வகையில் ஒரு சின்ன வளையமும் போட்டுக்கொடுக்கச் சொன்னேன்.
ஞாயிறு வரட்டும்னு காத்திருந்து மச்சினர் பேரனைப் பார்க்கப்போய் வந்தோம். நம்மவனை விடச் சரியா மூணுவாரம் மூத்தவன். முதலில் கொஞ்சம் தயங்கினாலும், அப்புறம் தாத்தாவிடம் ஒட்டிக்கிட்டான். குழந்தை நல்லா இருக்கணும்.
பொதுவா, இந்தியப்பயணங்களில் முடிந்தவரை தினமும் எதாவது கோவிலுக்குப் போய்வர்றதுதான் வழக்கம் என்றாலும், இந்த முறை வழக்கத்தை மாத்திக்கவேண்டியதாப் போயிருக்கு. முடிஞ்சபோது கோவில்னு இருந்தேன். ரதசப்தமி தினம், அல்லிக்கேணி கண்டேனேன்னு போய் வந்தோம். எனக்கு ரொம்பவே பிடிச்சவர் நம்ம பார்த்தசாரதிதான். ஒளிவு மறைவு, இருட்டு, விரட்டுன்னு ஒன்னும் இல்லை. பளிச்னு நம்ம மேல் பார்வை செலுத்துவார் !


திடீர்னு நம்மவருக்குப் பல் பிரச்சனை. நம்ம கார்த்திக்தான் ஒரு இடம் சொன்னார். தி நகரிலேயே இருப்பதுதான் நமக்கு வசதி ! டாக்டர் ஹரிணி ! 'டென்டல் ஹௌஸ்' என்ற பெயரில் க்ளினிக். நம்ம ராகவேந்த்ரா கோவில் இருக்கு பாருங்க.... அதுக்கு ரெண்டாவது கட்டடம். சின்ன சமாச்சாரம் என்று போனது கடைசியில் கொஞ்சம் இழுத்துருச்சு. டாக்டர் ஹரிணி, நல்ல ஃப்ரெண்ட்லி டைப். நல்லாவே கவனிச்சுப் பார்த்தாங்க. ஒரு பத்துமுறை அவுங்களைப்போய்ப் பார்க்கும்படியாச்சு. ரொம்ப நிதானமா நமக்கு நேரம் ஒதுக்கித் தந்ததையும் பாராட்டத்தான் வேணும் !
போனமுறை நம் வலிகளுக்கு அக்குப்ரெஷர் சிகிச்சை கொடுத்த சித்ரா அவர்களும் என்னை சந்திக்க ஹரிணியின் பல் மருத்துவமனைக்கே வந்தார். நம்மவரை ஹரிணியின் வசம் ஒப்படைச்சுட்டு, நானும் சித்ராவும் லோட்டஸுக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு நல்ல தோழியுடன் செலவழித்த நேரம் அருமை !

இப்போ ஹரிணியும் நம்ம தோழிகள் லிஸ்டுலே இருக்காங்க என்பதையும் சொல்லிக்கொண்டு.......... ஹாஹா
தொடரும்......... :-)