Friday, June 16, 2006

ஆ.............விரல்!!! 3 கார் ஏலம்!

மறுநாள், ஞாயிறு என்பதால், திங்களன்றுதான் காரை, மதிப்பீடு செய்யுமிடத்திற்குக் கொண்டுபோனோம். முன்பகுதியில் 'ஹெட்லைட் உடைந்துவிட்டிருந்தது. 'பானட்'டின்மேல் அம்மைத் தழும்புபோல கொத்தியிருந்தது. எல்லாம் செங்கல் செய்த வேலை.ஆனால் ஓட்டும் நிலையில் இருந்ததால் பிரச்சனையில்லாமல் ஓட்டிக்கொண்டு போக முடிந்தது.


அங்கே அவர்கள், பழுது பார்க்கும் ஓரிடத்தின் விலாசம் சொல்லி, அங்கே கொடுத்தால் வண்டி விரைவில் கிடைக்கும் என்று பரிந்துரை செய்தனர்.உடனே அவர்கள் சொன்ன இடத்திற்கு வண்டியை கொண்டுபோனோம். அவர்களும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, வெள்ளிக்கிழமை தயாராகிவிடும் என்றும் சொன்னார்கள். சரி ஒரு நான்கு நாட்கள்தானே. சமாளித்துவிடலாம் என்றிருந்தோம்.


மகளுக்காகத் தனிக்கார் வாங்கியிருந்தோம். நம் வீட்டு 'கராஜ்'-ல் இரண்டு வண்டிகள் மட்டுமே நிறுத்த இடம் என்பதால், என்னுடையவண்டியை ஏற்கெனவே விற்றுவிட்டேன்.எனக்கும், கோபாலுக்கும் இப்போது ஒரு கார் தான் இருந்தது. எனக்கு வண்டி தேவையாக இருந்தால்அவரைக் கொண்டுபோய் அலுவலகத்தில் விட்டுவிட்டு, வண்டியை நான் எடுத்துக்கொண்டு போவேன். நம் வீட்டிலிருந்து ஒரு 3 நிமிட ட்ரைவ்தான் அவருடைய அலுவலகம்!


போன வருடம், மகளும் தனி வீடு பார்த்துக் கொண்டு போய்விட்டதால், இன்னுமொரு கார் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்துவிட்டோம். வாங்கியிருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும். இப்போது, ஒரு வண்டிகூட இல்லையே என்ற கவலை. கோபாலின் அலுவலகம் ஒரு 20 நிமிட நடையில்தான் இருந்தது என்றாலும், இங்குள்ள குளிர் காரணம் நடந்தெல்லாம் போக முடியாது .மேலும், மடிக் கணினியையும் தூக்கிக்கொண்டு போக வேண்டுமல்லவா?


மகளும், அவளுடைய வண்டியை சில நாட்களுக்குக் கடன் கொடுத்தாள். வெள்ளியன்று வண்டி கிடைக்கவில்லை. இன்னும் சிலநாட்கள் தாமதிக்கும் என்றும் சொன்னார்கள். வீக் எண்டும் வந்துவிட்டது.


ஞாயிறன்று, இங்கே ஒரு கார்களை ஏலம் விடும் இடத்திற்குப் போகலாம் என்று கோபால் கூறினார். மேலும் இன்று 'ரிசர்வ்' கிடையாது என்றார். நான், உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதற்கு, 'செய்தித்தாளில்' நேற்றே வந்திருந்ததே என்றார். இந்த ஊரில் ஞாயிறு அன்று நாளிதழ் கிடையாது. சனியன்றே வார இறுதிக்கென்று 'பேப்பர்' வரும்.


இங்கு புதிய வண்டிகள் வாங்க வேண்டுமென்றால் செலவு கூடுதல். குறைந்தது நம் இந்திய ரூபாயின் மதிப்பில் பத்து லட்சங்கள் ஆகும்.ஆனால், 'செகண்ட் ஹேண்ட்' வண்டிகள் என்றால் 2500 ரூபாய்க்குக்கூட கிடைக்கும். அது மிகவும் பழையதாகவும், பல கைகள் மாறியும் இருக்கும்! இதுவே நியூஸிலாந்து நாணய மதிப்பில் சொல்வதென்றால் 100 டாலரிலிருந்து 35,000 டாலர் வரை ஆகும். எல்லாம் காரின் 'மேக் & மாடல்' பொறுத்து. இவையுமே டொயோடா, சுபாரு, மிட்சுபிஷி, ஹோண்டா இந்த மாதிரி வண்டிகளுக்குத்தான்.பென்ஸ், பென்ட்லி என்றால் அவ்வளவுதான்! அதோட 'ரேஞ்சேஏஏஏஏஏ வேறே!'


நமக்கு வேண்டியது அதிகம் ஓடியிருக்காத, ஒரு மூன்று வருடப் பழக்கமான வண்டி. தானியங்கியாக இருக்கவேண்டும்.உள்ளே வசதியாகவும், ஹீட்டர் நன்கு வேலை செய்வதாகவும், நம்பிக்கையான 'ப்ராண்ட்' ஆகவும் உள்ளதுதான். 5 கதவுகளுள்ள, 'ஹாட்ச் பேக்' வண்டியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். விற்று விட்ட என் வண்டியை நினைக்கும்போதே நெஞ்சம் நடுங்கிவிடும். ஹீட்டிங்கும் சரியில்லை, சைடு வியூ மிர்ரர், பவர் ஸ்டீரிங் இப்படி ஒன்றும் இல்லை. அதையும் நான் ஏழரை வருடம் வைத்து ஓட்டி இருக்கிறேன் என்றால் என் நெஞ்சுரத்தை மெச்சவே வேண்டும். இது என்னிடம் வந்த கதையை பின்பு ஒருநாள் சொல்லுவேன்.


இங்கெல்லாம் உபயோகப்படுத்திய கார்களை விற்பதற்கென்றே கணக்கில்லாத இடங்கள் இருக்கின்றன. நகரம் முழுவதும் கொஞ்சம்பெரிய இடமாக, ஒரு பத்து, இருபது வண்டிகளை நிற்கவைப்பதற்குத் தோதான இடமாக இருந்தால் போதும். அடுத்த நாளே அங்கேஒரு 'கார் யார்ட்' முளைத்துவிடும்! அவைகளை வாங்குவதற்கும் ஆட்கள், ஏதோ பிரார்த்தனைக்குக் கோவில் கோவிலாக சுற்றுவது போல பார்த்துக்கொண்டே போவார்கள்.முக்கியமாக வார இறுதிகளில் இந்தக் கூட்டம் அதிகரித்துவிடும். நல்ல வண்டி வைத்திருப்பவர்களும்ஏதோ 'டைம் பாஸ்' போல இதில் கலந்துகொள்வார்கள்.


நாங்கள் இருவரும் ஏலம் விடும் இடத்திற்குச் சென்றோம். அங்கே, அன்று ஏலம் போடும் கார்களையெல்லாம் நம் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.பார்த்த எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்றும் சரிவரவில்லை.


அப்போது, அடுத்த ஹாலில் நல்ல வண்டிகள் இருந்தது கண்ணில் பட்டது. அதில் ஒன்று எனக்குப் பிடித்தமாதிரி இருந்தது. ஆனால் அது மறுநாள் மாலைதான் ஏலம் விடப்படும் என்றார்கள். சரி, நாளையே வரலாம் என்று வெளியே போனோம். அப்படியே போகிற வழியில்ஏதாவது 'கார் யார்ட்'ல் இதே மாடல் என்ன விலை என்று பார்க்கலாம். அப்போது நாளை ஏலம் கேட்க வசதியாக இருக்கும் என்றுபோய்ப் பார்த்தோம்.

இன்னும் வரும்

19 comments:

said...

ம்ம்ம்ம்!!

said...

ம்ம்ம்ம்!!

(எதுவுமே பேசலை மனசு.. பார்த்துக்குங்க :))

said...

சரி. லாபம். ரெண்டு

( இது என்ன பொன்ஸ் விடும் தூதோ?)

said...

அப்புறம்.......!??
கொஞ்சம் நகத்துங்க!
ஒரு ஆர்ட் ஃபில்ம் பாக்கறமாதிரி இருக்கு!

[ம்ம்ம்! உங்க ஓட்டு எனக்கில்லை!]
சொ.செ.சூ.வை.!!!!

said...

SK,

//சொ.செ.சூ.வை.!!!!//:-)))))))

பேசாம நாளை முதல் ரெண்டு பகுதியைச் சேர்த்துப் போட்டுறலாமா?

மானு ஏற்கெனவே சொல்லிக்கிட்டு இருக்காங்க.

said...

ஒரு லாரி இல்லெ ட்ரக் வாங்கிட்டா வசதியா இருக்குமே! யானைன்னாலும் வசதிதான்

said...

சிஜி,

யானை நல்லாதான் இருக்கும். ஆனா இந்தக் குளிர்லே அதாலெ இருக்க முடியாது. எங்க ஊர் Zoo வுலேயே யானை கிடையாது.

ஆக்லாந்துலேதான் ஒரே ஒருத்தர் இருக்கார். பேர் கேசவ். நாட்டுக்கே ஒரு நல்லவர்:-))

said...

zoo வுலெ இல்லாட்டி என்ன.........?

said...

துளசி சும்மா சொல்லிடராங்க அவங்களுக்கென்ன அங்கே இருக்காங்கனு. ஓட்டறவர்க்குத் தெரியும் வண்டி அழகுனு புது மொழி போடலாமா/ இந்த யானை ஓட, அந்த ஆனை ஆட நல்லா இருக்குப்பா பார்க்க. எனக்கென்னவோ நெக்ச்ட் யார்டிலே உங்க வண்டி நிக்குதோனு தோணுது.எல்லாம் ஒரு யூகம் தான்.

said...

சிஜி,

நற நற

நீங்க இங்கே வரும்போது ஒரு யானையைக் கொண்டுவரணும். ஆமா.

என்கிட்டே 100க்கும் மேலே வீட்டுலே இருக்கு.

said...

மானு,

உதவிக்கு ஓடிவந்ததுக்கு தேங்க்ஸ்ப்பா.

சிஜியோட 'குசும்பை' பார்த்தீங்களா?

said...

பென்ஸ், பென்ட்லி என்றால் அவ்வளவுதான்! அதோட 'ரேஞ்சேஏஏஏஏஏ வேறே!'//

ஆமாங்க துளசி.. அத பாக்கும்போதெல்லாம் ஹூம்..னு ஒரு பெருமூச்சு விடத்தான் முடியும்..

said...

வாங்க டிபிஆர்ஜோ,

பென்ஸ் கூடப் பரவாயில்லை. வாங்கிரலாம். இந்த பெண்ட்லி இருக்கே..... யம்மா......

கிட்டேயே போக முடியாது(-:

said...

//"ஆ.............விரல்!!!//

மிஸ், இது என்ன?

said...

நன்மனம்,

என்ன......... இது.......... வா?


ஒரு 'படைப்பாளி'க்கு இப்படி ஒரு கொடுமையா?

எப்படி மனசு வந்துச்சு?

ஐய்யகோ..............

said...

சரி.. சரி... இந்த ஒரு தடவ மட்டும் சந்தேகத்த தீர்த்து வெச்சுடுங்க, இதுக்கு அப்பறம் அட்டெண்டன்சோட நிருத்திக்கறேன்:-)

said...

சரி. நன்மனம்.

உங்க சந்தேகம் என்ன?
//"ஆ.............விரல்!!!//

இதுதானே?

இதுதான் டைட்டில். மினித்தொடரின் டைட்டில்.:-)))

said...

துளசி அவர்களே
இதைப்படிச்சவுடன் சிங்கப்பூரில் கார் வாங்குபவர்களை பற்றி தான் ஞாபகம் வந்தது.
சரியான விபரம் தெரியவில்லை எனக்கு.
10 வருடம் தான் நீ என் "உயிர்" என்று புது காரை வாங்கும்போதே கஷ்டமாக இருக்காது?

said...

வாங்க குமார்.

நாம்தான் எது வாங்குனாலும் ஆயுசுக்கும் வரணுமுன்னு இருக்கோம். இங்கே ஆளுங்க
வீடுன்னாலும் சரி, காருன்னாலும் சரி மாத்திக்கிட்டேதான் இருக்காங்க. சிங்கப்பூர்லேயாவது
10 வருசம். ஜப்பான்லெ எல்லாம் 5 வருசம்தானாமே.அதனாலெ அங்கே இருந்து அஞ்சு வருசப்
பழசை இங்கே இறக்குமதி செஞ்சு, அந்த பிஸினெஸ்தான் அமோகமா நடக்குது. அடிவிலைக்கு
வாங்கி, இங்கே நல்லா க்ரூம் செஞ்சு, பளபளன்னு ஆக்கி விக்கறதுதான்.


பி.கு: தயவுசெஞ்சு 'அவர்களே' வேணாமே.