Wednesday, June 21, 2006

ஆ.............விரல்!!! 11 & 12

ஆ.............விரல்!!! 11 மீண்டும் ஆம்புலன்ஸ்


என்ன செய்வதென்று புரியாத நிலையில் வீட்டுக்கே திரும்ப வந்தோம். தோழியும் அவர்வீட்டிற்குப் போய்விட்டார். இன்னும் இரண்டுமுறை கழிவறை விஜயம். மூன்றாம் முறை போனபோது வெறும் ரத்தம் வெளியேறியது. அவ்வளவு ரத்தத்தைப் பார்த்த இவர் மயங்கிச் சாய்ந்துவிட்டார். அவரை மெதுவாக வெளியில் கொண்டு வந்தபின், இனியும் தாமதிப்பது சரியில்லை என்று ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன்.


அவர்கள் வருமுன்பு மற்றொருமுறை கழிவறை. இந்த தடவை எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு ப்ளாஸ்டிக் பாத்திரத்தை டாய்லெட்டில் வைத்து அதை பயன்படுத்தச் சொன்னேன். அது பூராவும் ரத்தம். இவரோ,அழ ஆரம்பித்துவிட்டார், 'அன்னிய நாட்டில் உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடப்போகிறேன்' என்று. எனக்கும் பயத்தில் நெஞ்சு படபடக்கிறது என்றாலும், 'கடவுளே! என்னைக் கைவிட்டுவிடாதே. இவருக்கு நல்லபடியாக குணம் ஆனால் -------'என்று மனதில் கடவுளுடன் பேரம் பேசிக்கொண்டே 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. இப்பவே ஆஸ்பத்திரிக்குப் போறொம். அங்கே போனால்எல்லாம் சரியாகும்' என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தேன். வயிற்றில் பயங்கர வலி என்று துடித்துக்கொண்டிருந்தார். கண்கொண்டு காண முடியாது.


ஆம்புலன்ஸ்காரர்கள் வீட்டிற்குள் தபதபவென்று நுழைந்தார்கள். விவரம் சொல்லி, கழிவறையைக் காண்பித்தேன்.அவருக்கே ஒரு ஷாக்! நல்லவேளை சாம்பிள் இருக்கிறது என்று சொல்லி, ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்துசில ப்ளாஸ்டிக் டப்பாக்களைக் கொண்டுவந்து கழிவை அதில் எடுத்துத் தனியாக வைத்தனர். இவரை மெதுவாக வண்டியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குப் போய்ச் சேர்ந்தோம்.


இதற்குள், தோழிக்கு விவரம் சொல்லி, அவர்களும் ( அவர் கணவருடன்)அங்கே வந்து விட்டனர். ஏற்கெனவே அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டையும், வாங்கிய மருந்துகளையும் கையோடு கொண்டு போயிருந்தேன்.அங்கேயும் ஒரு பத்து நிமிடக் காத்திருப்பு இருந்தது. அதற்குள் அங்கே இருந்த மற்றொரு மருத்துவர், மருந்துச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, குடலில் உள்ள லைனிங் பிரிந்து இப்படி ரத்தவெள்ளமாக வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார். சிலருக்கு இந்த மருந்து ஒத்துக்கொள்வதில்லையாம். முன்பே தோழியும் இதைத்தான் சொல்லியிருந்தார்."ஐய்யய்யோ, இந்த மருந்தா சாப்பிடுகிறார். ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சே" என்று.சாம்பிள் கழிவை உடனே பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இவருக்கு உடனே 'ட்ரிப்' ஏற்ற ஆரம்பித்தனர். ஒரு மணிநேரமானதும், கொஞ்சம் வலி குறைந்தாற்போல் இருந்தது. கண்மூடித் தூங்க ஆரம்பித்திருந்தார்.


'நீங்கள் வீட்டிற்குப் போங்கள். அவசியம் என்றால் நான் ஃபோன் செய்கிறேன்' என்று கூறி தோழியையும் அவர் கணவரையும் வீட்டிற்கு அனுப்பினேன். மெதுவாகப் பொழுது புலர்ந்தது. இதுவரை நான்கு பாட்டில் ட்ரிப் ஏற்றி இருந்தார்கள்.நானும் கடவுளைப் பிரார்த்தித்தபடி அங்கே உட்கார்ந்திருந்தேன். மனது ஒன்றும் சரியாகவே இல்லை. என்னென்னவோ குழப்பமான சிந்தனைகள்.


காலை ஏழு மணியானபோது, ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து பரிசோதித்துவிட்டு, முன்பு எழுதித் தந்த மருந்துக்குப் பதிலாக வேறு ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். வீட்டிற்குப் போகலாம் என்றும், எதாவது பிரச்சனை என்றால்உடனே திரும்ப வரவேண்டுமென்றும் சொன்னார். அதிகாலையில் யாரையும் தொந்திரவு செய்யவேண்டாமென்றுஒரு வாடகைக்காரில் வீடு வந்து சேர்ந்தோம். அதன்பின் தோழிக்கு தகவல் சொன்னேன். அவர்கள் வந்து இந்த மருந்துச் சீட்டைப் பார்த்தபின் மருந்து வாங்கலாம் என்றிருந்தேன்.


இவருக்கும் வயிற்றுவலி நன்றாகவே குறைந்திருந்தது. தூங்கி விட்டார். உணர்ந்ததும் கொஞ்சம் கஞ்சி தயாரித்துக் கொடுத்தேன்.

வயிறு முற்றிலும் சரியாக ஒருவாரமானது. கைக்கட்டைப் பிரித்துப் புதுக் கட்டு போட்டுக்கொள்ள ஆஸ்பத்திரியில் அதற்கென்று இருந்த பிரிவுக்குப் போனோம். நன்றாக ஆறிவருவதாகச் சொன்னார்கள். இன்னும் ஒரு வாரம் கழித்து அடுத்த ட்ரெஸ்ஸிங்.


இதற்குள் நம் வண்டியைச் சரி செய்துவிட்டதாக ஃபோன் வந்தது. மகளுடன் சென்று அதைக் கொண்டு வந்தேன்.நன்றாகப் புதியது போல இருந்தது. அடி வாங்கின சுவடே இல்லை! இதே போல இவருக்கும் குணமாகி விட்டால் எவ்வளவு நல்லது.


ஆஸ்பத்திரியில் இருந்து நம் ஜிபிக்கு ரிஸல்ட் வந்திருக்குமே. அது உண்மையாகவே வைரஸ்தானா? அப்படியானால் என்ன வைரஸ்? என்று மண்டைக் குடைச்சல். இரண்டு முறை ஃபோன் செய்து கேட்டதற்கு நம் மருத்துவரின் வரவேற்பாளர் இன்னும் வரவில்லை என்று சொன்னார்.

விடாமல் ஆஸ்பத்திரிக்குப் போன் போட்டேன். இங்கேப்ரைவஸி ஆக்ட் என்று ஒன்று இருக்கிறது. விவரங்களைச் சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே சொல்வார்கள். ஃபோன் பில்லோ.எலக்ட்ரிசிடி பில்லோ கட்டவேண்டிய சமயம், நாம் தொலைபேசியில் விவரம் கேட்டால் நம் பெயர் ஏற்கெனவே அங்கே கொடுத்திருக்கவில்லை என்றால் சொல்ல மாட்டார்கள்.அதனாலெயே எல்லா இடங்களிலும் கணவன், மனவி இருவர் பெயரும் பதிந்து வைக்க வேண்டும்.வீடு வாங்கினால் கூட ரெண்டு பேர் பேரிலும்தான் பதிவார்கள்.


ஆஸ்பத்திரியில் ஜிபிக்கு அனுப்பிவிட்டோமென்று சொன்னார்கள். கிடைத்த பத்து நிமிஷ இடைவெளியில் மருத்துவரைப் பார்க்கப்போனேன், எதிர்வரிசைதானே?


என்னைப் பார்த்ததும் வரவேற்பாளரின் முகத்தில் 'சட்'டென்று ஒரு மாற்றம். ஒருவேளை அப்படித் தோன்றியதோ?

இன்னும் ரிப்போர்ட் வரவில்லை என்றார்கள். நான் உடனெ ஆஸ்பத்திரியில் அனுப்பி ரெண்டு நாளாயிற்றாம். ஏன் தாமதம் என்றேன். உடனே கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு, எழுந்துபோய் அடுத்த பகுதியில் இருக்கும்அலமாரிகளில் குடைந்து எங்கள் ஃபைலைத் திறந்து பார்த்துவிட்டு அங்கெயே வைத்துவிட்டு, மறுபடி என்னிடம் வந்து,ஆமாம். வந்திருக்கிறது, வைரல்தான் என்றார்கள். நானும் விடாமல், என்ன வைரஸ்? என்றதற்கு 'ராட்டா வைரஸ்' என்றார்கள்.


அவர்கள் நடவடிக்கை, பாடி லேங்குவேஜ் என்று சொல்கிறொமே ( அதானே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது)அது சந்தேகம் தருவதாகவே இருந்தது. அன்று பிற்பகல் வீட்டிற்கு வந்த மருத்துவர் தோழியிடம் விவரம் சொல்லி,அது என்ன வைரஸ் என்று விசாரித்தேன்.


" அதுவா, நம்மூரில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பேதியில் கழியும்போது, அதான் குழந்தைக்கு தோஷம் என்று சொல்வோமே அதற்குக் காரணமானது.( இது பற்றி நம்ம வலைஞர்களில் இருக்கும் மருத்துவர்கள் கருத்துச் சொன்னால் நல்லது)


இப்போது எனக்கு நிச்சயமாகியது, இவர்கள் என்னவோ செய்துவிட்டு அதற்குச் சப்பைகட்டு கட்டுகிறார்கள்.ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் என்ன செய்திருக்க முடியும்?


இங்கே டாக்டர்கள் மேல் எல்லாம் வழக்குப் போட முடியாது. எதற்கெடுத்தாலும் ஏ.சி.சிதான்.


ஆ.............விரல்!!! 12. இனி எல்லாம் சுகமே
---------------

காயம் முழுவதும் ஆறிவிட்டது. புதிய தோல் வளர ஆரம்பித்து மொட்டையாக இருந்த விரலை மூடத்துடங்கியது.இன்று முதல் 'பிஸியோ தெரபி' பிரிவுக்குப் போக வேணும். வாரம் மூன்று முறை. அங்கே இருந்த தெரப்பிஸ்ட்க்கு என் மகள் வயசுதான் இருக்கும். சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே எந்தமாதிரி பயிற்சி செய்யவேண்டுமென்று சொன்னது எங்களுக்குப் பிடித்திருந்தது. மூன்று வாரப் பயிற்சி முடிந்த போது நல்ல குணம் தெரிந்தது. உள்ளங்கையை முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தால் அபூர்வ சகோதரர்கள் மாதிரி இருக்கிறது. குள்ளக் கமல்!


இவரும் தானே காரை எடுத்துக் கொண்டு ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

கார்? அதே கார்தான்!

'சனியன், வந்ததும் வராததுமாக இரத்தக்காவு வாங்கிவிட்டது.'

நண்பர்கள் வரும்போதெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

" முதலில் இதை ஒழித்துக் கட்டி விடுங்கள்"

" அருமையான வண்டி. ஆனால் எப்படி இந்த விபத்து நேர்ந்தது? ப்ரீக்."

" இன்னுமா இந்த வண்டியை வைத்திருக்கின்றீர்கள்?"

" அதான், ரத்தம் பார்த்துவிட்டதே. இனிமேல் ஒன்றும் ஆகாது"

" வந்த விலைக்குத் தள்ளி விடுங்கள்"

" வேறு எதாவது பெரிதாக ஆகாமல் அந்தவரை சுண்டுவிரலோடு போச்சு"

" நம் நேரம் சரியில்லை என்றால் வண்டி என்ன செய்யும்?"

இப்படிப் பலரும் பலவிதமாக.

ஆமாம். நேரம்தான். நேரம் என்று சொன்னவுடந்தான் கவனத்துக்கு வந்தது, இந்தக் காரில்கடிகாரமே கிடையாது. அதற்கென்று இருக்கும் இடம் வெறுமையாக இருக்கிறது. அதெப்படி?எல்லா வண்டிகளிலும் கடிகாரம் கட்டாயமாக இருக்கிறதல்லவா?


அப்புறம் மூன்று மாதம் போனவுடன்,'ஹோண்டா கார்ஸ் சர்வீஸ்' அழைப்பு அனுப்பி இருந்தது.ஒரு இலவச செக்கப்,காருக்குத்தான்! கொண்டு போனோம். எல்லாம் பர்ஃபெக்ட்தான். இந்த மாடலில் கடிகாரம் கிடையாதாம்!!!! ஆஹா.......


ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் இவர் போய்த் திரும்பும்வரை ஒரு படபடப்பு இருந்தது.அப்புறம்அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது.

ரெண்டு வருசம் வைத்திருந்த பிறகு, போனவருடம் மகளுக்குத் தந்துவிட்டோம். அவளுடைய வண்டிகொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்திருந்த நேரம். இரவு, நேரம் கழித்துத் திரும்பும்போது ரிப்பேராகிவழியில் நின்றால் ஆபத்தாயிற்றே. அதனால் அதை விற்றுவிட்டோம். அதுவும் ஒரு ஹோண்டாதான். சிகப்பு நிறம்.


இதற்கிடையில் நாங்களும் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு இடம்பெயர்ந்து விட்டோம். இந்த வீடு இவரின் அலுவலகத்துக்கு ரொம்பவே சமீபம். ஆறேழு நிமிஷ நடை. பல நாட்களில் இவர் நடந்தே போய்விடுகிறார். பகல் சாப்பாட்டுக்கு வந்து போவது, மாலை வீடு திரும்புவது என்று, நாளுக்கு நாலுமுறை ஏழு நிமிஷ நடைப்பயிற்சி.

தேவைப்பட்டால் மட்டுமே என் காரை எடுத்துக் கொண்டு போவார். மற்றபடி வீக் எண்ட் சுற்றல் மட்டும்தான்.


இன்னொரு கார் வாங்க வேண்டும். அதுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். சிலசமயம், 'கொஞ்சம் நல்லதாகஒரு பெரிய வண்டி வாங்கிக்கலாம்' என்றும், சிலசமயம்,'எல்லாம் இதுவே போதும். ஓடும்வரை ஓடட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்' என்றும் இருக்கிறது.

இந்த வீடு கட்டியதும் கூட 'வீட்டைக் கட்டிப்பார்' என்ற தலைப்பில் எழுதி வைத்துக் கணினியில் சேமித்து வைத்துள்ளேன்.உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால், அதுவும் ஒரு தொடராக வெளிவரலாம்!.


அதுவரை இனி எல்லாம் சுகமே என்று சொல்லியும் முடித்துவிட முடியாது. ஒரு ஏழெட்டு மாதத்துக்குமுன்பு,பலகைக்கு ஆணியடிக்கிறேன் பேர்வழி என்று, ஒரு ஆங்கிளில் சுத்தியை வைத்து அடித்து, இடதுகை ஆள்காட்டி விரலில் நகம் பெயர்ந்து தொங்கி, அவசர சிகிச்சைக்கு ஓடி.........


இப்போது புது நகம் வந்துவிட்டது. இப்படி எத்தனையோ அட்வெஞ்சர்கள்.


இங்கெல்லாம் 'டூ இட் யுவர்செல்ஃப்' படி எல்லா வேலையும் நாமெ செய்கிறொம் அல்லவா. அந்தக் கணக்கில் இவர் எதாவது வேலை செய்ய ஆரம்பித்தால், நான் காரை வெளியே எடுத்து வைத்துத் தயாராக இருக்க வேண்டும். எங்களுக்கும் இப்போது ஆஸ்பத்திரியின் அவசரசிகிச்சைப் பிரிவுகள் நடபடி எல்லாம் அத்துப்படி:-)


சுருக்கமாகச் சொன்னால், இவர்தான் நம் வீட்டு 'டிம் த டூல் மேன் டெய்லர்'


இனி உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி!


இப்படியே முடித்துக் கொ(ல்)ள்கின்றேன். பொறுமையாகப் படித்து பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி.

சிஜி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சஸ்பென்ஸ்: திடீரென்று யாராவது என்னை 'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால் வியப்படைய வேண்டாம்

37 comments:

said...

அதென்னங்க அந்த டாக்டரை சும்மா விட்டீங்க? ஏன் வழக்குப் போட முடியாது? அதென்ன ஏ.சி.சி? அதுக்கப்புறம் அந்த ஜி.பி.யை மாத்துனீங்களா இல்லையா?

(அப்பாடா கிளாஸில் தூங்கலைன்னு காமிக்க நிறையா கேல்வி கேட்டாச்சு)

said...

//இவருக்கு நல்லபடியாக குணம் ஆனால் -------'என்று மனதில் கடவுளுடன் பேரம் பேசிக்கொண்டே// & //'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால்//

இதுதானா அது?

எல்லாம் சரி, அப்புறம் மருத்துவர் தப்பை ஒத்துக்கொண்டாரா? நுகர்வோர் (consumer)என்ற முறையில் ஏதாவது முறைப்பாடு செஞ்சீங்களா? you can't leave these things alone!!! :O(

said...

வாங்க கொத்ஸ்.

இது ஆக்ஸிடெண்ட் காம்பன்சேஷன் கார்ப்பரேஷன்.

இங்கெ எல்லாத்துக்கும் இதுதான். இதுக்குன்னு தனி வரிகூட இருக்கு. பெட்ரோல் போடறோமே அதுலெ கூட இவுங்களுக்கு இவ்வளவு சதமானமுன்னு காசு போயிரும்.

அதே ஜிபிதான். மொதல்லே பார்த்தது 'நம்ம' டாக்டர் இல்லை.
ரெண்டாவது பழகுன பிசாசு புது தேவதையைக் காட்டிலும் மேல்

மூணாவது வீட்டுக்குப் பக்கம்.

said...

ஷ்ரேயா,

மொதல்லே மருந்து எழுதிக்கொடுத்தது ஆஸ்பத்திரி மருத்துவர். நம்ம டாக்டர் இல்லை.

ஆஸ்பத்திரியிலும் ஒரு வேளை புதுசா
படிச்சுட்டு வந்தவரா இருந்தார்.

ஆனது ஆச்சு, உயிருக்கு ஆபத்தில்லாமப் போச்சே,இனியும் இதை தூக்கிப் பிடிச்சு ஒண்ணும் செய்யவேணாமுன்னு இருந்துட்டோம்.
அப்புறம் இதுக்கெல்லாம் மெனெக்கெட இவருக்கு நேரமும் இல்லை. நான் தான் கத்திக்கிட்டு இருப்பேன்.

said...

துளசி,சொல்வது சரிதான். இருந்தாலும்...இவ்வளவு மனசு அழற்சி கொடுத்தவர்களை உதைக்காமல் விடக்கூடதுனு தோணுது.சரியான நேரத்தில் கவனிக்க வந்ததால் போச்சு.என்னய்ய அவஸ்தை. புதுசா கார் வாங்கும்போது என்னவெல்லாம் ஏற்பாடோ அதெல்லாம் பக்கவா செய்துடுவீங்க. நமக்கெல்லாம் அனுபவம் கை கொடுக்கும்.இன்பம் வந்து சேர்ந்ததே, துன்பம் தள்ளிப்போனதே.:-)))))))

said...

வல்லி,

//இன்பம் வந்து சேர்ந்ததே, துன்பம் தள்ளிப்போனதே.:-))))))) //

இதேதான். இப்ப இருக்கற இன்பம் எப்பத் துன்பமா ஆகப்போகுதுன்னு யாருக்குத் தெரியும்?

எல்லாம் ஒரு அனுபவம்தான்.

said...

எல்லாம் நல்லபடியா முடிஞ்சதில்
சந்தோஷம்!
ஆமா..விரல்காயம் யாரால் ஏற்பட்டது என்ற சஸ்பென்ஸை உடைக்கலியே

said...

சிஜி,

//விரல்காயம் யாரால் ஏற்பட்டது //

யாருக்குத் தெரியும்? விதி தான் அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு இருந்துச்சோ?

இது விபத்து. எப்படின்றதுதான் தெரியுமே தவிர யாராலேன்னு தெரியாது.

தெரியாம இருக்கறதுதான் நல்லதும்கூட.

இல்லைன்னா வாழ்நாள் முழுசும் நரகம்தான்.

said...

உங்க பதில் classic.

said...

//இவர் எதாவது வேலை செய்ய ஆரம்பித்தால், நான் காரை வெளியே எடுத்து வைத்துத் தயாராக இருக்க வேண்டும். எங்களுக்கும் இப்போது ஆஸ்பத்திரியின் அவசரசிகிச்சைப் பிரிவுகள் நடபடி எல்லாம் அத்துப்படி//

:-)))

//'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால்//

I understand the depth of your affection and care for Gopal

Wishes and prayers for your perpetual good health

If the same happened in Kuwait what could be the comment by doctors "Just one finger only.. be happy that you have all other 4 fingers"

Namakkellam manasega doctor "Vaidhyanatha Swamy" & Marundheeswarar-um than!

Honda Civic car- oru Aligator-nu ippathan therinjukitten!

Nalamodeirukka vendugiren!

Hariharan

said...

ஆகா....யாரங்கே...அந்த டாக்டரைப் பிடிந்து சட்டப்படி தண்டியுங்கள்.

எல்லாம் நல்லபடி முடிஞ்சதுல சந்தோஷம்.

அது சரி.....எங்க? அதச் சொல்லலையே?

said...

ஹரிஹரன்,

//I understand the depth of your affection and care for Gopal//

இருக்காதா பின்னே? 32 வருஷம்தான் ஆயிருக்கு கல்யாணம் முடிச்சு:-)))


//Namakkellam manasega doctor "Vaidhyanatha Swamy" &
Marundheeswarar-um than!//

இதென்னவோ சத்தியம். கடவுளுக்கு மிஞ்சிய வைத்தியர் யார்?
அதுனாலெதான் ஆபத்துலே வைத்தியர் 'சாமி'யாக் கண்ணுக்குத்தெரியறார்.

//Wishes and prayers for your perpetual good health
Nalamodeirukka vendugiren!//

ரொம்ப நன்றி உங்க வாழ்த்துகளுக்கு.

வலை பதிய வந்து இப்படி நல்ல உள்ளங்களைச் சேர்த்துக்கிட்டதுதான்
எதையோ சாதிச்சுட்டோம்ன்ற திருப்தியைக் கொடுக்குது.
நல்லா இருங்க.

said...

ராகவன்,

எல்லாம் இங்கே 'கிறைஸ்ட்சர்ச், நியூஸியி'லேதான் நடந்தது.

said...

நன்றி சிஜி.

said...

நியூசி யில் பயனர் சட்டம் மருத்துவர்களை கட்டுப் படுத்தாதா ? ஆச்சரியமாக இருக்கிறதே!
//" இன்னுமா இந்த வண்டியை வைத்திருக்கின்றீர்கள்?"

" அதான், ரத்தம் பார்த்துவிட்டதே. இனிமேல் ஒன்றும் ஆகாது"

" வந்த விலைக்குத் தள்ளி விடுங்கள்"

" வேறு எதாவது பெரிதாக ஆகாமல் அந்தவரை சுண்டுவிரலோடு போச்சு"

" நம் நேரம் சரியில்லை என்றால் வண்டி என்ன செய்யும்?"

இப்படிப் பலரும் பலவிதமாக.//

இந்த பலர் நம்மூர் காரங்க தானே ?

said...

வாங்க மணியன்,

//இந்த பலர் நம்மூர் காரங்க தானே ?//

பின்னே? எல்லாம் நம் இந்தியர்கள்தான்.

said...

துளசி, யானை நமக்கும் சிநேகிதம் ஆச்சே! துதிக்கையை உடைப்பேனா என்ன? எல்லாம் இந்த ப்ளாக்கர் பண்ணுற அட்டகாசத்தில் தான் உடனே வெளியிடணும்னு அவசரப்பட்டுட்டேன். திருத்தாமல் இருந்துட்டேன். இன்னிக்காவது யானையைச் சாக்கு வைத்து வந்தீங்களே, ரொம்ப நன்றி.

said...

துளசி, இன்னிக்குத் தான் எல்லாம் படிச்சேன். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உங்க கணவர் நல்லபடியாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்த வாரம் கூட்டுப் பிரார்த்தனையில் உங்க பேரும், திரு கோபால் அவர்களின் பேரும் சேர்த்துக்கிறோம். ஆண்டவன் அருள் புரிவாராக.

said...

கீதா,

வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா?

இந்த சம்பவம் நடந்து இப்ப மூணு வருசம் ஆகப்போகுதுங்க.

கடவுள் அருளால் இப்ப எல்லாம் நலம்தான்.

உங்க அன்புக்கு நன்றி.

said...

யப்பா.. இவ்ளோ சொதப்பல்களா பண்ணியிருக்காங்க அந்த மருத்துவர்கள்.... அப்படியும் அவுங்களை சட்டம் பாதுகாக்குது... ஹீம்.... நல்லவேளை எல்லாம் சரிஆகிடிச்சு... காரணமே தெரியாத விபத்து, நமக்குள்ள இருந்த தைரியத்தை கொண்டுவந்ததோ ?

said...

வாங்க யாத்திரீகரே.

பயணம் எல்லாம் எப்படி? மொதல்முறையா வீட்டுக்கு வந்துருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?

ஆமாங்க. எப்படியோ எல்லாம் நல்லா ஆகிருச்சு.

இந்த விபத்துலெ நடந்த கூடுதல் நன்மைன்னா எங்களுக்குள்ளே இன்னும் அன்பும், புரிதலும் அதிகமானதுதான்.

said...

திகில்கதை லெவலுக்கு கொண்டு போய்ட்டீங்க.
நல்ல முடிவு தெரிந்து சந்தோஷம்.
வாழ்க...

said...

ஏங்க ஜீன்ஸ் படத்துல மாதிரி டாக்டர் மேல கேஸ் போடலமே?
BTW, முதல் முறையாக உங்கள் பதிவில்..

said...

வாங்க தருமி.

நல்லதா முடிஞ்சதாலேதான் எழுதவே தோணுச்சு.

ஆனா எப்பவும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கணுமே( டச் வுட்!)

said...

கார்த்திகேயன்,

வாங்க. மொதமுறையா வந்துருக்கீங்கன்னு நீங்களே சொல்லிட்டீங்க. காஃபி, டீ எதாவது
சொல்லட்டுமா?

இந்த நாட்டுலெ இப்படியெல்லாம் கேஸ் போட முடியாதுங்க. ஆனா புகார்
கொடுக்கலாம். அதுக்குன்னு மெனெகெட்டு ஓட நமக்கு நேரம் இல்லீங்களே.

said...

இப்படியே முடித்துக் கொ(ல்)ள்கின்றேன். பொறுமையாகப் படித்து பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி.//

நல்லா த்ரில்லிங்கா போச்சிங்க.. குட்..

சிஜி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சஸ்பென்ஸ்: திடீரென்று யாராவது என்னை 'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால் வியப்படைய வேண்டாம்//

இது ரெண்டு வருசத்துக்கு முன்னால நடந்ததுன்னுட்டு திடீர்னு மொட்டைத்தலையுடன் பார்த்தாங்கறீங்க..

said...

டிபிஆர்ஜோ,

சாமிக்கு வேண்டிக்கறப்ப 'இன்னது செய்யறேன்னு சொல்லிக்கறதுதான்' ஆனா
எப்ப?ன்னு சொல்லமாட்டோம்லெ.:-)))

அதது வேளை வந்தா நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு டைம் வரணுமே!
அதான் ஒரு முன்னறிவிப்புக் கொடுத்தேன்:-)

said...

// G.Ragavan said...

அது சரி.....எங்க? அதச் சொல்லலையே? //

//துளசி கோபால் said...
ராகவன்,

எல்லாம் இங்கே 'கிறைஸ்ட்சர்ச், நியூஸியி'லேதான் நடந்தது. //

மிஸ், ராகவன் எங்கேனு கேட்டது

//யாராவது என்னை 'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால் வியப்படைய வேண்டாம் //

இத இல்லயா?

உண்மைய கதையா அழகா சொல்லி இருந்தீங்க. அதுவும் 7வது பின்னூட்ட பதில்ல சில உண்மைய அழகா சொல்லி இருந்தீங்க.

said...

நன்மனம்,

ராகவன் கேட்டது அதுவா?
ஓஓஓஓஓஓஓ

இன்னும் ஆகலை:-)

said...

Rota virus is a dirty virus that strikes infants and toddlers and very rare for adults. It is very contagious. Rota virus causes fever, forceful frequent vomiting and very frequent, large volume diarrhea.
We usually encounter this type of diarrhoea only in infants and very malnourished children. In our country specially in Tamilnadu, I have seen old people hanging the affected children upside down and swing them twice saying that ' kudal eeriducchu.'. Most people visit the mosques in the evening so that the affected children are "manthirikkarathu". But ultimately the children have to be treated in the hospital. The drip rate is adjusted according to the degree of dehydration and the baby's weight. This is a very serious life threatening in children. People who baby sit the children should take all the necessary precautions to wash their hands after changing the diapers. Better to have disposable diapers rather than cloth ones. very rare in adults.

said...

வாங்க டெல்ஃபின்.

உங்க விளக்கம் அருமை. பலருக்கும் பயன்படும்.

உங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி
ஆ... விரல் படித்ததாக்கம்
அவ்வப்போது என் விரலை பாத்துக்கிறேன்.
சரியாகத்தான் இருக்கா என்று.
போடுங்க அந்த வீடு விஷயமும் !!

said...

வாங்க குமார்.

வீடு விஷயம் எத்தனைபேருக்குப் பிடிக்குமுன்னு தெரியலையே.

துணிஞ்சு போடலாமா?:-)))

said...

தூங்கி எழுந்து கேட்கிறேன் என்று நினைக்கிறேன்.
இது நடந்ததெல்லாம் நியூசிலாந்தா என்று ஆச்சரியமாக உள்ளது!!!!

ஆமாம், கடை என்ன ஆகியது? இல்லை நான் ஒரு பகுதி படிக்க விட்டு விட்டேனா?

said...

கஸ்தூரிப்பெண்,

//ஒரு பகுதி படிக்க விட்டு விட்டேனா? //

இல்லை. நாங்கதான் கடையை விட்டுட்டோம். ச்சும்மா ஒரு ஆறுமாசத்துக்கு நடத்திப்பார்த்தோம். சரிவரலை. அதாவது வந்ததெல்லாம் விளம்பரம்,கடைக்கு இன்ஷூரன்ஸ், வாடகை, வரி, பவர், ஃபோன்'ன்னு போயிருச்சு.

ஓவர்ஹெட் கூடுதல்.

said...

ஓ! அதுதானா காரணகர்த்தா….

“கல்யாணம் கட்டிப் பார், வீட்டை கட்டிப் பார்” என்று சொல்வார்கள். அது போல வீடு கதை அடுத்து! தொடரப்போவது கல்யாணக் கதையோ!!!!

said...

கஸ்தூரிப்பெண்,


//கல்யாணம் கட்டிப் பார்// இதை உங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டேன்.
உங்க பொண்ணுதானே 'பெரியமனுஷி'ன்னு சொன்னீங்க:-))))