Sunday, June 18, 2006

ஆ.............விரல்!!! 5 & 6

ஆ.............விரல்!!! 5 கார் வந்தது! கூடவே?
----------
மறுநாள், இவர் வேலைக்கு மகள் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். நானும் என் வேலைகளைச் சீக்கிரம் முடிக்கமுயன்று கொண்டிருந்தேன்.


அப்போது பார்த்து, நம் வீட்டுக் குளியலறையில் ஒரு ஒரு ஹீட்டர்/விளக்குப் போட,எலக்ட்ரீஷியன் வந்தார். அவரை, மற்றொருநாள் வருமாறு சொன்னதற்கு, நீங்கள் பதினோரு மணிக்குத்தானே போகவேண்டும். நான் வேலையை ஆரம்பித்து செய்துகொண்டிருக்கின்றேன்.அதற்குள் முடிக்க முடியும் என்று நினைக்கிறேன். அப்படி முடிக்க முடியவில்லையென்றால், மீதி வேலையை நாளை வந்து முடிப்பேன் என்றார். சரி, சின்ன வேலைகளுக்கு ஆட்கள், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர் போன்றவர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதே. செய்யும்வரை செய்யட்டும் என்று வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன்!


அந்த ஆள் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் இந்தச் சின்ன வேலைக்கே ஒரு பத்து நாட்கள் வேண்டும்போல் இருந்தது. அப்போது கோபால் தொலைபேசியில் கூப்பிட்டு, நான் வங்கிக்குப் போய்வந்தேனா என்று கேட்டார். நான் இன்னும் இல்லை என்று காரணத்தைக் கூறியவுடன், அவரே வங்கிவேலையை முடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அன்று பிற்பகல் 'மிகவும் முக்கியமான' ஒரு வேலை இருப்பதால் நான் 11 மணிக்குத் தயாராக இருந்தால் போய் வண்டி 'டெலிவரி' எடுத்துவிடலாம் என்றும் சொன்னார்.


நான் சமையலை முடிப்பதில் தீவிரமானேன். அதே சமயம் 'எலக்ட்ரீஷியன்'க்கும் ஒரு குரல் கொடுத்தேன், மறுநாள் வந்து வேலையை முடிக்குமாறு.

ஒரு இருபது நிமிட இடைவெளியில், கோபால் வீட்டுக்குள் வந்தார்.
"வங்கிக் காசோலை எடுத்தாச்சா?"


எல்லாம் ஆச்சு. வண்டியைக் கொண்டாந்துட்டேன்!

எப்படிப் போனீங்க?

மகளுக்கு ஃபோன் செய்தேன். அவள் வருகிறேன் என்றதாலே , நாங்க ரெண்டுபேருமாப் போனோம். என்னை அங்கே இறக்கிவிட்டு, அவள் அவளுடைய வண்டியைக் கொண்டு போனாள்.

பின்னாலே 'எலக்ட்ரீஷியன்' வண்டி நிக்குதே, எங்கே நிறுத்தினீங்க?

முன் பக்கம்தான். வந்து பாரேன்!

நான் வெளியே வந்து பார்த்தபோது, புது ஜ்வலிப்புடன் சாதுவாக நிற்கிறது நம் 'சில்வர் ஹோண்டா'

எல்லாம் சரியா இருக்கா?

நல்லாதான் இருக்கு. நீ பாரு! உள்ளே உக்காந்து பாரு, ஸீட் உயரம் உனக்கு சரியா இருக்கான்னு!

நான் 'ட்ரைவர் ஸீட்'டில் அமர்ந்தேன். இவர் கார் கதவை வெளியில் இருந்து சாத்தினார்.

நான் 'ஸீட்டின் உயரத்தை அதிகரிக்கும் குமிழைத் திருப்பிக் கொண்டே, தற்செயலாகத் திரும்பினால், இவர் கையைத் தூக்கியவாறே, பேயறைந்த முகத்துடன் நிற்கிறார். தூக்கிய கையிலிருந்து, ரத்தம் வழிகிறது. நான் அலறிக்கொண்டே வெளியிலிறங்கி," ஐயோ ! கைக்கு என்னாச்சு?" என்று கேட்க "விரலு துண்டாயிடுச்சு" என்கிறார். " எப்படி ? என்னாச்சு? ஐயோ! விரல் எங்கே? என்று நான் கதறிக்கொண்டே கேட்க, 'கீழே பாரு, உன் காலடியிலே!"
ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று கத்திகொண்டே நான் பார்க்க, அங்கே ஒரு நகத்துடன் கூடிய விரல்துண்டு!


இன்னும் வரும்


ஆ.............விரல்!!! 6 ஆம்புலன்ஸ் ---------------


நான் அழுதுகொண்டே அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்து, அதை ஒரு glad wrap -ல் சுற்றி,ஃப்ரிஸரில் வைத்துக்கொண்டே, தொலைபேசியில் 'ஆம்புலன்ஸ்' ஸைக் கூப்பிட்டேன். இங்கே, போலீஸ், ஆம்புலன்ஸ், தீ விபத்து எல்லாவற்றுக்கும் ஒரே எண்தான், 111.


நான், ஹிஸ்டீரியா வந்தவள்போல, அழுது, அரற்றிக்கொண்டு அவர்களிடம் ஆம்புலன்ஸ் அனுப்பச் சொல்கிறேன்.


Please calm down. What happened to your husband ? Listen to me, please listen to me.You are the only person who could be a help till we come. What have you done with that piece of the finger?


I kept it in the freezer.


Good girl. tell your husband to hold the hand above his head. Don't panic! We are on the way.


நான் 'எலக்ட்ரீஷியனை' உடனே போகும்படிச் சொல்லி விட்டு, அடுப்பையும் அணைத்துவிட்டு வெளியே பாய்ந்தேன்.


மகள் ஓடி வருகிறாள் அம்மா,அம்மா என்று கூப்பிட்டபடி. எப்படி அவள் இங்கே என்று அழுதுகொண்டே கேட்கிறேன்.


"அப்பாதான் கைத்தொலைபேசியில் கூப்பிட்டார். கவலைப் படாதே அம்மா, என் நண்பனுக்கு கால்விரல் துண்டாகி,அதை மறுபடி வைத்துத் தைத்துவிட்டார்கள். அப்பாவின் விரல்துண்டு எங்கே?"


"ஃப்ரீஸரில்"


ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. 'நீங்க ரெண்டுபேரும் போங்க. நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு, அந்த 'எலக்ட்ரீஷியனை' அனுப்பிவிட்டுஆஸ்பத்திரிக்கு வருகிறேன்' என்றாள்.


பத்தொன்பதே வயதான பெண்ணுக்கு என்ன மனவுறுதி பாருங்கள்! பெரிய மனுஷி போல பொறுப்பாகப் பேசுகிறாள்!


கோபாலும், நானும் ஆம்புலன்ஸில் பயணிக்கிறோம். என் மூடிய கையில் விரல்துண்டு! போகும்வழியிலேயே இரத்தஅழுத்தம் போன்றவைகள் சரிபார்க்கப் படிகின்றன! கோபாலும், கைத்தொலைபேசியில் ஆபீஸுக்கு விவரத்தைச் சொல்லி, பிற்பகல் நடக்கவிருந்த மீட்டிங்கை, மற்றொருவர் மேற்பார்வையில் நடத்தும்படியும், அடுத்த நாள் வேலைகளைப் பற்றி மாலையில் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்.



தாற்காலிகமாக ஒரு 'ஸ்டெரலைஸ்' செய்த துணியை, விரல் வெட்டுப்பட்ட இடத்தில் போட்டிருந்தாலும் ரத்தம் வருவது நிற்கவில்லை. அவருடைய சட்டையெல்லாம் ரத்தம்!


ஒரு கையால் கைத்தொலைச் பேசியில் பேசியபடியும், ரத்தம் வழியும் கையைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் உட்கார்ந்திருக்கும் கோபாலைப் பார்க்கிறேன். வெறும் தலைவலி என்றால்கூட அரற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் கோபாலா இது? சாந்தமாக பேசிக்கொண்டிருக்கிறாரே?

இன்னும் வரும்

23 comments:

said...

நீங்க டென்சன் ஆனதினால தான் கோபால் சார் கூலா இருந்திருப்பாரு.. ஆனாலும் அது கோபால் சார் விரலா.. நான் கூட கதை ஆரம்பத்துல உங்க விரல்ல ஏதாச்சும் லேசா பட்டிருக்குமோன்னு நினைச்சேன்.

ஆனா, விரல் தனியா விழுந்து கிடக்கறது எல்லாம்.. படிக்கவே பயங்கரமா இருக்கு!!! :(

said...

பொன்ஸ்,

எனக்கும் 'அப்ப' ரொம்பப் பயமாத்தான் இருந்துச்சுப்பா.

என்னென்னவோ நடந்து போச்சு.

said...

துளசி, சாரிப்பா. என்ன கஷ்டம் இது.ரீடர்ஸ் டைஜஸ்ட் டிராமா இன் ரியல் லைஃப் படிச்ச மாதிரி இருக்கு. இப்போ குணமாயி நல்லா இருப்பாரு. ஆ...விரலுக்கு இந்த அர்த்தமா?
எங்க அம்மா கையை கார்க் கதவிலே சாத்திய அருமையான மகள் நான்.எவ்வளவு வலித்ததோ. சீகிரம் அடுத்த பதிவைப் போடுங்க.

said...

அடடா, காரின் கதவை மூடும்போது விரல் மாட்டிக்கொண்டுவிட்டதா ? இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தாலே மனம் பதறுகிறதே, நீங்கள் பதட்டப் பட்டதில் ஆச்சரியமே இல்லை. இந்த தலைமுறையினரை நாம் பொறுப்பில்லாதவர்கள் என தவறாக எடை போடுவதை இம்மாதிரி சந்தர்ப்பங்களில் தெரிந்து கொள்ள முடிகிறது. நட்சத்திரத்தின் குமார் பாத்திரம் போல they rise to the occasion.

said...

மானு,

வலியிலே அம்மா துடிச்சிருப்பாங்கல்லெ (-:

பயங்கரம்ப்பா.

said...

ஆமாங்க மணியன்.
இன்னும் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மகள் நடந்து கொண்டதை நினைக்கும்போதும்,
அவளைப் பற்றிப் பயப்படவேண்டாம். நல்ல மனிதத்தோடு இருப்பவள்தான் என்று உறுதியானது.

அதுவே ஒரு நிம்மதிதான்.
இளைய தலைமுறை தெளிவோடுதான் உள்ளது. நமக்குத்தான் புரிந்துகொள்ள நேரம்தேவை.

said...

//நான் 'ட்ரைவர் ஸீட்'டில் அமர்ந்தேன். இவர் கார் கதவை வெளியில் இருந்து சாத்தினார்.

நான் 'ஸீட்டின் உயரத்தை அதிகரிக்கும் குமிழைத் திருப்பிக் கொண்டே, தற்செயலாகத் திரும்பினால், இவர் கையைத் தூக்கியவாறே, பேயறைந்த முகத்துடன் நிற்கிறார். தூக்கிய கையிலிருந்து, ரத்தம் வழிகிறது. நான் அலறிக்கொண்டே வெளியிலிறங்கி," ஐயோ ! கைக்கு என்னாச்சு?" என்று கேட்க "விரலு துண்டாயிடுச்சு" என்கிறார்.//
Could you please explain a little mor4e?

said...

மேடம், இப்ப நல்லா ஆகி இருக்கும்னு நம்பறேன். தலைப்ப இப்ப படிக்கும் போது உங்க குரல்ல கேக்கற மாதிரி இருக்கு.

கோபால் சார்க்கு கை வலிய விட மன"வலி"மை ஜாஸ்தியா இருந்திருக்கு.

said...

SK,
அதுதானே எனக்கும் புரியலை. நான் ட்ரைவர் ஸீட்லே. இவர் வெளியிலே.
கதவை மூடறார். அடிபட்டது வலது கையில். கதவு எட்ஜ்லே வலக்கை பெருவிரல்தான்
இருக்கும் இல்லையா. ஆனா துண்டானது சுண்டு விரல். எப்படி? விரல் நசுங்காம
துண்டாத் தெரிச்சு விழுந்துருச்சே, ஏதோ கத்தியிலே அரிஞ்சாப்புலே.

ஃப்ரீக் ஆக்ஸிடெண்ட்ன்னு சொல்றாங்க.

said...

நன்மனம்,

நன்றி.
இப்ப நல்லா இருக்கார்.

said...

படிக்கவே பயங்கரமா இருக்குது மேடம். லேசா அடி பட்டாலே எவ்வளவு வலிக்கும். விரலே துண்டானா... நினைச்சாலே வலிக்கு

said...

ராம்ஸ்,

வாங்க. ரொம்ப வலிதான். ஆனா எதிர்பாராம அடி படும்போது முதல்லே வலி உறைக்காது. எத்தனைதடவை கத்தியிலே கை பட்டு கை கீறிடுது. அப்புறம்தான் வலி உணருவோம். அதுவே நாமே கத்தியை எடுத்துக் கையைக் கீறிக்கப்போனா..... கத்தி கையிலே படறதுக்கு முன்னேயே வலி வந்துரும்.

said...

என்ன கொடுமை? எதிர்பாராத ஷாக்...
நல்லபடியா முடிஞ்சுதா?

said...

வாங்க சிஜி,

மூணு வருசம் ஆகப்போகுது. ஆனா நினைச்சாவெ 'பகீர்'தான்(-:

said...

//ரொம்ப வலிதான். ஆனா எதிர்பாராம அடி படும்போது முதல்லே வலி உறைக்காது.//
ஆமாங்க துளசி, இது போன்ற நமக்கு தெரியாமல் திடீர் என்று ஏற்படும் காயங்களின் வலி உடனடியாக தெரியாது. நேரம் செல்ல செல்ல வலி எடுக்க ஆரம்பித்து தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு சென்று விடும்.

//உங்க விரல்ல ஏதாச்சும் லேசா பட்டிருக்குமோன்னு நினைச்சேன்.//
பொன்ஸ்க்கு உங்க மேல எப்படி ஒரு பாசம் பாருங்க..........

said...

நேரில் பாத்தப்போ ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலை.
நல்லவேளை..விரலை சரியா எடுத்துட்டு போன உங்க சமயோசிதம் கை கொடுத்திருக்கு...இல்ல..இல்ல...விரல் கொடுத்திருக்கு.

said...

தருமி,

அப்படிச் சட்டுன்னு கண்ணுக்குத் தெரியாதுதான். ஆமாம், கை குலுக்குனப்பவும்
கவனிக்கலையா?

அடுத்தமுறை கவனிச்சுப் பாருங்க.:-)))

said...

யோகன்,

ஆபத்து சமயத்தில் மனசுக்கு ஒரு பக்குவம் வந்துருதோ?

said...

அடுத்தமுறை கவனிச்சுப் பாருங்க.:-)))//

:-))

said...

ஆகா! படிச்சதும் பயமாப் போச்சு..ஒரு மாதிரி ஆச்சு....சரி..அடுத்த பாகத்த மொதல்ல படிக்கிறேன்.

said...

ஐயையோ அப்புறம்?

நாங்கூட சென்னையில அவர மீட் பண்ணப்போ இத கவனிக்கலை. அவ்வளவு அழகா ஸ்டிட்ச் பண்ணிட்டாங்களா?

பத்தொன்பதே வயதான பெண்ணுக்கு என்ன மனவுறுதி பாருங்கள்! பெரிய மனுஷி போல பொறுப்பாகப் பேசுகிறாள்!//

ஆமா என் மகள் தனி வீடு பார்த்துக்கொண்டு சென்றபிறகுன்னு படிச்சதா ஞாபகம்.. திருமணத்திற்கு முன்பே உங்களை விட்டு தனியாக இருக்கிறாரா?

said...

டிபிஆர்ஜோ,

இங்கெல்லாம் 17 வயசானதும் தனியா வீடு எடுத்துக்கிட்டுப் போயிருதுங்க பசங்க. மூணுநாலுபேராச் சேர்ந்துக்கிட்டு வாடகைக்கு இடம் எடுத்துக்குறாங்க. இதுக்குப் பேர் flatting.

said...

சரிங்க ராகவன்