Thursday, June 15, 2006

ஆ.............விரல்!!! 2. கடைச் சுவர்!

யாரோ பின்னால் இருந்து லேசாக தள்ளியதுபோல கார் தானாக நகர்ந்து கடையின்சுவரைத் தொட்டது.

அவ்வளவுதான்!

சினிமாவில் கடைசிக் காட்சியில் கதாநாயகன், வில்லன் வீட்டிற்குள் சுவரை இடித்துக் கொண்டுகாரில் நுழைவானே அந்த 'ஸீன்' நடந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு மாற்றம். கதாநாயகனுக்குப் பதிலாக நான் அந்த 'ஸீனில்' நடித்துக் கொண்டிருக்கின்றேன்! வீட்டுக்குப் பதிலாகக் கடை!சுவரிலிருந்த செங்கல்கள் அப்படியே இடம் பெயர்ந்து காரின்மேல் அழகாய் அப்படியே ஆடாமல்,அசங்காமல் வரிசையாக ஏதோ கொத்தனார் அடுக்கி வைத்தாற்போல் நிற்கின்றன.ஒரே ஒரு வினாடியில் எல்லாம் நடந்துவிட்டது. என் கண்களையே நம்பமுடியாமல், நான் இன்னும் காருக்குள்தான் இருக்கிறேன்!என்ன நடந்தது என்ற விவரம் கூட என் மூளையில் இன்னும் பதிவாகவில்லை!


அதே சமயம், என் தோழியும் வந்து சேர்ந்தார். என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்டுக்கொண்டே என் காரின் கதவைத் திறக்க முயன்றார். அதற்குள் நானும் சுதாரித்துக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். எப்படி இது நடந்தது என்று யோசனை செய்து கொண்டே காரின் சக்கரத்தைப் பார்த்தவுடன், புரிந்துவிட்டது. கீழே முழுவதும் 'ப்ளாக் ஐஸ்'. கறுப்பு ஐஸ் வழுக்கிவிட்டது. என் தோழியும்எனக்கு ஏதாவது அடி பட்டதா என்று திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் 'ஷாக்'தான்.


அன்று சாவியின் தேவை இல்லாமலேயே கடைக்குள் சுவர் வழியாகவே போக முடிந்தது!


உடனே, எங்கள் 'இன்ஷூரன்ஸ் கம்பெனி'க்குப் ஃபோன் செய்தேன், விபத்தைப் பற்றிச் சொல்ல.அங்கிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? என்னுடையது பதினேழாவது ரிப்போர்ட்டாம்!! கார் ஓடும் நிலையில் இருந்தால், அதை அவர்களின் விபத்து மதிப்பீடு செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லும்படிக் கூறினார்கள்.


இப்போது, மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டியது, கடைச் சுவரின் ஓட்டையை அடைப்பது தான்!


தோழியின் கணவருக்கு ஃபோன் மூலம் செய்தி போனது. உடனே ஓடி வந்தார். கட்டிடத்தின் உரிமையாளருக்கும் விவரம் அறிவிக்கப்பட்டது. சுவரை மீண்டும் கட்ட ஆட்கள் உடனே கிடைக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தாற்காலிக ஏற்பாடாக ஒரு பலகை வைத்து மூடலாம் என்று முடிவானது.


இதற்கிடையில், கோபால், ஆக்லாந்து வந்து சேர்ந்துவிட்டு, அங்கேயிருந்து ஃபோனில் கூப்பிட்டார்.நான் விபத்தைப் பற்றிச் சொல்லலாம் என்று ஆரம்பித்தபோது, என் தோழி, என்னைத்
தடுத்தார்.

"வீணாக அவரைக் கலவரப்படுத்த வேண்டாம். உங்களுக்கு அடி ஏதும் இல்லையே. அவர் பிற்பகல் வந்தவுடன்,நேரில் சொல்லலாம்" என்றார்.
தோழியின் கணவர் எங்களுக்கு உதவியாக, இடிந்த சுவரை அப்புறப்படுத்தவும் அந்த இடத்திலுள்ள மண்,சிமெண்டு முதலானவைகளை சுத்தம் செய்யவும் ஆரம்பித்திருந்தார். எங்களிடம், 'ப்ரூம் ஸ்டிக்' இல்லாதகாரணத்தால், நம் பக்கத்துக் கடையிலிருந்து கடன் வாங்கி வந்தேன். மண்ணை அள்ளும்போது, அதன் கைப்பிடி 'மளுக்'கென்று உடைந்துவிட்டது.'பட்ட காலிலே படும்' என்பது இதுதானோ?


அவர்களிடம் சென்று விவரத்தைக்கூறி மறுநாள் புதிய பிடியுடன்திருப்பித்தருகிறேன் என்று சொல்லியதற்கு, அவர்கள் கடையைச் சுத்தம் செய்வதற்கு இன்றே தேவை என்றார்கள்.நமக்கு அருகிலுள்ள கடைகளிலும் புதியது கிடைக்கவில்லை. ஆகவே, என் மகளைத் தொலைபேசியில் அழைத்து,விவரம் சொல்லி, நம் வீட்டிலிருந்து கொண்டுவரச் சொன்னேன்.


என் மகளும் உடனே நான் கேட்டதைக் கொண்டுவந்தாள். கடையின் சுவர் இருந்த கோலத்தைப் பார்வையிட்டு,என் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில்"அம்மா, உனக்கு அடி, காயம் ஒன்றுமில்லைதானே?" என்று கேட்டாள். அவளிடம், அப்பா விமான நிலையத்திலிருந்து வாடகைக் காரில் வீட்டுக்கு வந்துவிடுவார். அவரிடம் வீட்டுச்சாவி இல்லை. நீ வீட்டுக்குப் போய் அங்கேயே இரு என்று அனுப்பி வைத்தேன்.


பிற்பகல் கோபால் வந்ததும், இதைப் பற்றி மகளிடம் அறிந்தவுடன் உடனே இருவருமாகக் கடைக்கு வந்தனர். கடை,கார் எல்லாம் பார்த்துவிட்டு நான் என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டேன் என்று தெரிந்துகொண்டபின், தோழியின் கணவருடன் சேர்ந்து பலகைகள் வாங்கிவந்து, கடைக்கு காபந்து செய்யப்பட்டது.

இன்னும் வரும்.

24 comments:

said...

//அன்று சாவியின் தேவை இல்லாமலேயே கடைக்குள் சுவர் வழியாகவே போக முடிந்தது!//

அது...

ஆமா துளசி அக்கா, உங்களுக்கும் ஒண்ணும் ஆகலியே.. அன்னிக்கு நான் அங்கே இல்லாததால இப்போ கேட்டுடறேன். ;)

said...

பர..பர..பர.....
சீக்கிரம் மூணாவது பதிவுக்கு வாங்க!!

நீங்கதான் நம்ம பதிவுக்கெல்லாம் வரவே மாட்டேங்கறீங்க!
ஹி..ஹி!1

said...

காருக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டீங்க.. விரலுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே?!!

said...

ரமணி,

ஒண்ணும் ஆகலைன்னும் சொல்ல முடியாது. தலைக்கு எதோ ஆகித்தான் எழுத
ஆரம்பிச்சிருப்பேனோ?:-))))

said...

SK,

இதென்ன இப்படி வீட்டுக்கு வரலைன்னு கொறைப்பட்டுட்டீங்க?

வந்து பாக்குறதுதான். கவிதையா(????) இருக்கறதாலே ஒண்ணும்
சொல்லாம திரும்பறதுன்னு ஆயிருது.

ஆமாம், இது என்ன? //ஹி..ஹி!1 //ஒரு தடவையா?

ச்சும்மா:-)

said...

பொன்ஸ்,

பொறுமை என்னும் நகை( அதான் 13 ரூபாய்க் காதணி) அணியலையா?

said...

துளசி, தலைக்கு நல்ல ஷேக் கிடைச்சு இருக்கு. அதனால் தான் இப்போ நல்லா எழுத முடியுது. பாவம் துளசி.என்ன ஒரு அதிர்ச்சி !"இன்று ஒரு தகவல் " கேட்ட மாதிரி தினம் ஒரு அனுபவம்.சீக்கிரம் 2 எபிசோட் போடுங்க.:-))

said...

//அன்று சாவியின் தேவை இல்லாமலேயே கடைக்குள் சுவர் வழியாகவே போக முடிந்தது!//

நல்லவேளை உங்க கடையானதுனால சரியாப் போச்சு. அடுத்தவங்க கடைக்குப் போக இப்படி முயற்சி பண்ணினா என்ன ஆகுறது?

(சரி உண்மையைச் சொல்லுங்க. அன்னிக்கு கடைச் சாவி கொண்டு போக மறந்துட்டீங்க இல்லை. நல்லவேளை பனிக்காலமா இருக்கவே ஒரு காரணம் கிடைச்சுது. இதுவே சம்மரா இருந்தா?)

//சுவரை மீண்டும் கட்ட ஆட்கள் உடனே கிடைக்க மாட்டார்கள் என்பதால//

இப்போ எல்லாம் என்ன பண்ணனும், யாரைக் கூப்பிடணும்ன்னு தெரியும்தானே. :)

said...

வல்லி,

வாங்க. இதுதான் 2 வது 'எபிஸோட்'!!!

ரொம்ப மோசமான ஷேக்:-)))

said...

கொத்ஸ்,

அப்ப நீங்க யாருமே பரிச்சயம் இல்லையேப்பா. இருந்தா விட்டு வச்சிருப்பேனா?:-)))

said...

ஆகா.....கடையத் தொறந்து வைக்கிறது...கடையத் தொறந்து வைக்கிறதுன்னு சொல்வாங்க. அது இதுதானா........

தரையில ஐஸ் இருந்தாலே நடக்க முடியாம வழுக்கும். இதுல ரோட்டுல இருந்தா? அதுல கார் ஓடுனா........ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்.

said...

ராகவன்,

இது கொஞ்சம் டேஞ்சர்தான். ரெண்டு நாளைக்கு முன்னாலெ ('பனி' பதிவு போட்ட அன்னிக்கு)
ஒரு அம்மா இப்படிக் காரோடு வழுக்கி சின்ன ஓடையிலே விழுந்து கார் முங்கிருச்சு. நல்லவேளை
ஜன்னல்வழியா வெளியே வந்து அங்கிரூந்த ஒரு மரத்தோட வேரை பிடிச்சுக்கிட்டு அரைமணி போல
கத்தி இருக்காங்க. குப்பை அள்ளற லாரி ஆளுங்க பார்த்துட்டுக் காப்பாத்தி இருக்காங்க.

குளிருக்கு கோட், ட்ரவுசர் எல்லாம் போட்டுருந்ததாலே ஊறிப்போய் கிடந்தாங்களாம். கரை ஏற வேற பிடிப்பு
இல்லாம இருந்துருக்காங்க. பாவம்.

said...

பனியால இப்படிப் பட்ட பாதிப்பும் உண்டோ?இதெல்லாம் தாக்குப்பிடிக்கறவங்க பலசாலிங்கதான்

said...

வாங்க சிஜி,

நம்மளைப் பார்த்தாலே நம்ம 'பலம்' தெரியலையா?:-))))

said...

என்ன கைவசம் ப்ரூம் ஸ்டிக் இல்லையா..

ஒரு கடைக்கு என்னென்ன தேவைன்னு மொதல்லயே லிஸ்ட் போட்டு வாங்கிடறதில்லையா?

அதுசரி.. அதென்ன பதினேழாவது ரிப்போர்ட். அத்தன தரம் வண்டிய இடிச்சிருக்கீங்களா என்ன?

ஓ! அன்னைக்கி உங்களையும் சேர்த்து பதினேழு பேர் இடிச்சிட்டோம்னு கூப்டுருக்காங்க.. சரிதானே:)

said...

டிபிஆர்ஜோ,

நாங்கதான் மாடர்ன் ஆளுங்களாச்சே. கடைக்கு ஒரு எலெக்ட்ரிக் வேக்குவம் க்ளீனர்தான் வாங்கி இருந்தோம்.
துடைப்பக்கட்டைக்கு தேவை வருமுன்னு தோணலையே.

said...

அதுவாக நகர்ந்த கார் மோதி ஒரு பக்கம் சுவர் விழுந்து விட்டதா? அவ்வளவு உறுதியாகவா நியூசில் கட்டடம் கட்டுகீன்றார்க்கள். ஒரு வேளை நீங்களும் காரில் இருந்தால் கணம் அதிகமோ என்னவோ?

said...

நாகை சிவா,
சொந்த ஊரு நாகையே தானா? ச்சும்மாக் கேட்டேன்:-)

எல்லாம் பழைய கட்டிடம். அதுவும் கமர்ஸியல் கட்டிடம் சிங்கிள் லெவல்
இப்படித்தான் ப்ளாக்ஸ் ( நம்ம ப்லொக்ஸ் இல்லை) காங்க்ரீட் வச்சுக் கட்டிடறாங்க.

said...

ஆமாங்க.... சொந்த ஊருதாங்க......... நீங்க எதுக்கு கேட்டிங்கனு புரியுது:))))). அக்கா தம்பிகுள்ள இது எல்லாம் சகஜம் தானுங்க. கண்டுக்காதீங்க., ப்ரீயா விடுங்க.

said...

துளசி நான் கேட்டது 2 எபிசோட்ஸ் அ டே.
இதென்னப்பா,,அது யாரு (BUD SPENCER)ஸ்பென்ஸரும் இன்னொருத்தரும் வர படம் மாதிரியே போகிறதே கதை.

said...

நாகை சிவா,

கண்டுக்கலை:-)

said...

மானு,

இருக்கறதே 13 எபிஸோடுதான்.
அளவாப்போடணுமாமே ஆத்துலே போட்டாலும். முதுமொழி?

அதான் :-)))

said...

லேட்டா வந்ததிலே சஸ்பென்ஸ் போய்விட்டது. இருந்தாலும் எந்தநடையிலும் கதை சொல்லும் உங்கள் பாணி தனிதான்.
ஒரு பத்தாம்பசலி கேள்வி: அடுத்தவரிடம் விளக்குமாறு கைமாத்தலாக வாங்கலாமா?

said...

வாங்க மணியன்.

(தமிழ்)விளக்குமாற்றை வாங்கக்கூடாதா? அப்ப இதுதான் இங்கிலீஷ் விளக்குமாறாச்சே.ப்ரூம் ஸ்டிக், ஒரு ப்ரஷ்தானே.
அதனால் கடன் வாங்கினால் தோஷமில்லைன்னு வச்சுக்கலாம்.