ஒரு தட்டு நிறைய களிமண்ணை எடுத்துவச்சுக்கிட்டு சாவகாசமா, புள்ளையார் பிடிக்கறேன். குத்தம் சொல்லமுடியாத
அளவுக்கு அருமையா வருது. பார்க்கறதுக்கு அசல் புள்ளையாரேதான். அம்சமா இருக்கார்
ஏன் இருக்க மாட்டார்? மனக்கோயிலே, மானசீகமா செய்யறப்ப ஒழுங்கா வரமாட்டாராமா? 'சுரேஷ் பினாத்து'னமாதிரி
களிமண்ணைத் தலையிலே தேடறதுக்கு ரிஸ்க் எடுக்க முடியாது. அளவுவேற கொஞ்சமா இருக்கும்!. பத்தலைன்னா
எங்கே போறது? இப்பப் பாருங்க, கையிலே ஒரு பொட்டு அழுக்கு இல்லே, வேலையும் படு சுத்தம்!
ஒரேடியா அலட்டிக்கவும் கூடாதுல்லே. இங்கே 'ப்பாட்டரி க்ளாஸ்' நடத்தறாங்க. அங்கே போய் களிமண்ணு நிஜமாவே
வாங்கிக்கிட்டு வரலாம்தான். ஆனா நம்ம கைவண்ணம் ? புள்ளையார் பிடிக்க... என்னவோவா முடிஞ்சதாமே?
நாங்க இந்த வீட்டுக்கு முகப்புலே வைக்க ஒரு புள்ளையார் வேணுமின்னு, நெட்லே தேடி சில டிஸைன் எடுத்து இங்கே
இருக்கற ஒரு 'பாலி ப்ராடக்ட்ஸ்' கிட்டே கொடுத்தேன். சரி. செஞ்சு பார்க்கலாமுன்னு சொல்லி' செய்யவும் செஞ்சாங்க.
தலை, கை, காலுன்னு தனித்தனியா இருந்ததைச் சேர்த்து ஒரு வட்டத்துலே வச்சப்ப அழகா இருந்துச்சு.
அதுக்கப்புறம் அதுமேலே ப்ளாஸ்டர் கோட்டிங் செஞ்சப்ப எப்படியோ கொஞ்சம் இப்படி அப்படி ஒட்டிக்கிச்சு. வேற வழியில்லாம
அதை முகப்புலே வச்சிட்டோம். அதுலே பாருங்க அசப்புலே பாத்தா அந்த 'என்னவோ' போலவும் இருக்கு.
எனக்குக் குரங்கும் பிடிக்குமுன்றதாலே அதை ரொம்பவும் பொருட்படுத்தலை.
நம்ம வீட்டு வழியாப் போறவங்க இதைக் கவனிச்சுப் பாக்கறாங்க போல. எப்பவாவது நாம வெளியே இருந்தமுன்னா
அது என்னன்னு கேப்பாங்க. 'எலிஃபெண்ட் காட்'னு சொல்வேன். இன்னும் உத்துப் பாத்துட்டு ஆமா, தும்பிக்கை தெரியுதுன்னு
சொல்றவுங்களும் இருக்காங்க. ரெண்டுபேரா இருந்தாங்கன்னா அவ்வளவுதான். ஒருத்தர் சொல்வாங்க 'மங்கி'ன்னு,
அடுத்தவர் சொல்வார் யானைன்னு. இதுலே யார் சரின்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ஆர்வமாக் கேப்பாங்க. ஜெயிச்சவுங்களுக்கு
வெற்றிப் புன்னகை வந்துரும். அப்பெல்லாம் நினைச்சுக்குவேன், 'பழமொழி பொய்யில்லை!' எவ்வளளோ அனுபவத்துலே வந்ததுதானே
ஒவ்வொரு பழமொழியும்? எங்க இவருக்கு திடீர்னு ஒரு நாள் பழமொழி புத்தகம் வேணுமுன்னு தோணியிருக்கு.
நான் ஊருக்குப் போகும்போது சொல்லியனுப்பிச்சார். நானும் தேடு தேடுன்னு தேடி, நம்ம சென்னை மவுண்ட் ரோடுலே
இருக்கற 'ஹிக்கின்பாதம்ஸ்'லே கி.வா.ஜ. தொகுத்த பெரிய ( பெரியன்னா நிஜமாவே பெரீய்ய, தலகாணி சைஸ்லே)
புத்தகம் ஒண்ணு வாங்கிக்கிட்டு பேக்கேஜ் வெயிட் கூடிப் போச்சுன்னு 'ரீடிங் மெட்டீரியல்'ன்னு கையிலே சுமந்துக்கிட்டு
வந்தேன். (ப்ளேன் உள்ளே போனதும் ஹேண்ட் லக்கேஜ்லே வச்சுட்டேன்.)
இதுதான் எங்கிட்டே ஒரு 'கெட்ட'பழக்கம். எதாவது சொல்லவந்தா நிறுத்த முடியறதில்லை. அதுசம்பந்தமான வர்ற பல
ஞாபகத்துலே இழுத்துக்கிட்டே போயிருவேன். கமிங்க் டு த பாயிண்ட் ? புள்ளையார்.
கோபால் காலையிலே எழுந்ததும் பயபக்தியா 'கண்பதி ஆர்த்தி அஷ்டவினாயக் கீத்' ஜெய்தேவ் ஜெய்தேவ் ஜெய்மங்கள
மூர்த்தி...ன்னு மராத்தி பாட்டு போட்டுட்டார். இதே பாட்டுங்க, முந்தி நம்ம 'ஆஷா போன்ஸ்லே' பாடி டேப் வந்திருக்கு.
நம்ம கிட்டேயும் இருக்கு. பூனாவிலே இருந்தப்ப பாட்டுங்களைக் காதாலே கேட்டுட்டு, அப்ப உடனே டேப் வாங்கிக்காம
( டேப் வாங்குனா, எதுலே போட்டுக் கேக்கறது? அடுப்புலேயா?) பூனாவை விட்டு வந்தபிறகு, மறுபடி பூனா போனப்ப
(அண்ணனைப் பாக்க)வாங்குனது! (அப்ப்ப்ப்பா... எத்தனை விஷயத்தை இதுலே நைஸாச் சேர்த்துட்டேன்)
இவர் போனவருசம் மும்பை போனப்ப ஒரு 'கண்பதி ஆர்த்தி சி.டி., பாடுனது அனுராதா பொடுவால்'னு வாங்கிக்கிட்டு
வந்தாரா, அதைப் போட்டுப் பாத்தா எல்லாமே நம்ம பழைய டேப்புலே இருந்ததுதான். ஆனா கூடவே 'அஷ்டவிநாயகா துஜா
மஹிமா கசா...ன்னு ஸ்ரீகாந்த் குல்கர்ணி பாடுனதும் இருக்கு. 16 நிமிஷம் பாட்டு. அருமை. இன்னும் சில பாட்டுங்களும்
கூடுதலா சேர்த்திருக்காங்க. குவாலிட்டியும் நல்லாவே இருக்கு.
மராத்தி முடிஞ்சவுடனே, தமிழ் போடணுமா இல்லையா? ( மராத்தா த்ராவிடன்னுதானே ஜனகண மன லே வருது)
நம்ம சீர்காழி பாடுன 'கணேசா சாங்க்ஸ்' தேடி எடுத்துப் போட்டேன். 'விநாயகனே வினை தீர்த்தவனே....'ன்னு
வெங்கலக்குரலெடுத்துப் பாடறார். கொஞ்சம் சத்தமாவேற வச்சேன்.அப்படியே தமிழ்நாட்டுக்குப் போயிட்டமாதிரி இருக்கு.
அப்படியே 'நான் ஸ்டாப்'பாப் போட்டுட்டு வேலையைப் பாக்க ஆரம்பிச்சேன். 'முன்னை முழுமுதலே மூத்த கணபதியே,
வாக்குதரும் நல்வாழ்வுதரும்,ஒருமணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட, காக்கும் கடவுள் கணேசனை நினை,
வெற்றிமுகம் தரும் வேழமுகம் வரும்' இப்படி அடுக்கடுக்காப் பாட்டுங்க வீடு முழுக்கப் பரவிக்கிட்டே போகுது.
'டபுள் க்ளேஸ்' இருக்கறதாலே சத்தம் வெளியே கேக்காதுன்னுஒரு நம்பிக்கை!
இப்பத்தான் அடுத்த கண்டம் வருது, பிரசாதம் செய்யறது. இந்தக் 'கொழுக்கட்டை' இருக்கே, பேஜார் பிடிச்சது. வருசாவருசம்
தகராறுதான்! சீனாக்காரன் 'மடி'யாச் செஞ்சு அனுப்பற அரிசிமாவுலே கிண்டற மேல்மாவுதான்! ப்பிச்சுக்குன்னு ஈஷிண்டு வரும்.
ஆனாலும் விடாமச் செய்யறதுதான், உனக்காச்சு எனக்காச்சுன்னு . இந்த வருசம் முதல் முறையா அட்டவணையை மாத்திட்டேன்.
ஒரு பாயசம் செஞ்சுறலாம்தான். செஞ்சுட்டு? அய்யா குடி, அம்மா குடின்னு, அதைக் குடிக்க ஆள் தேடணுமில்லெ.
ஒண்ணும் செய்யாம விடவும் மனசு வரமாட்டேங்குது. இந்தச் சங்கிலியைப் பொறுத்தவரை இங்கே நம்ம வீட்டுலே நாந்தான்
கடைசி லிங்க். அதனாலே இருக்கறவரையும், முடிஞ்சவரையும் செஞ்சுறணுமுன்னு இருக்கேன். நல்லவேளை, இன்னைக்கு ஆஃபீஸ் நாளூ.
இவர் வீட்டுலே இருந்தா, 'எதுக்கும்மா கஷ்டப்படுறே? ஒண்ணும் வேணாம்'ன்னு சொல்வார். ஏன்னா இவருக்கு இனிப்பு
அவ்வளவாப் பிடிக்காதுல்லே.( அது ஏன் நம்ம பிரசாதம் வகையெல்லாம் அநேகமா இனிப்புப் பொருளா இருக்கு?)
புள்ளையாரும் எல்லார்வீட்டுலேயும் மாவுக்கொழுக்கட்டைத் தின்னு போரடிச்சு போயிருப்பார் இல்லையா?
எடு சேமியாவை! இன்னிக்குக் சேமியாக்கேசரிக் கொழுக்கட்டை! (செய்முறை வேணுன்னா தனிமடல் போடுங்க மக்களே)
காலம் மாறிக்கிட்டே இருக்கறது சாமிக்குத் தெரியாதா என்ன?
அனைவருக்கும் விநாயகச் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!!!
Wednesday, September 07, 2005
புள்ளையாரே புள்ளையாரே....
Posted by துளசி கோபால் at 9/07/2005 01:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
82 comments:
//காலம் மாறிக்கிட்டே இருக்கறது சாமிக்குத் தெரியாதா என்ன//
:O)
உங்களோட பெரிய தொல்லையாப் போச்சுங்க! அலுவலகத்திலேருந்து உங்க பதிவு வாசிக்க முடியுதில்ல.."வெறும் சிரிப்புதாங்க வருது".
கணபதி பப்பா "மோரியா"!!!!
நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்..தமிழ்மணத்துலே வரக்காணோம்! :O(
எதுக்கும் ஒரு "க்ளிக்கு" போய்ப் பாருங்க!
இன்னொருக்கா "பிரசுரித்தேன்". சுகம் வந்திட்டுது! :O)
//ஒரு பாயசம் செஞ்சுறலாம்தான். செஞ்சுட்டு? அய்யா குடி, அம்மா குடின்னு, அதைக் குடிக்க ஆள் தேடணுமில்லெ.
//
இங்க அனுப்புங்க துளசி. வீட்டுக்கு வந்திருக்கும் விநாயகருக்குப் படைக்கப் பாலடைப் பிரதமன் உண்டாக்கிட்டிருக்கோம். அதோட சேர்த்து விளம்பிடலாம் :-)
இங்கேயும் சீர்காழி (விநாயகர் அகவல், கணபதியே வருவாய்), லதா மங்கேஷ்கர் (சுக கர்தா, துக்க ஹர்தா வர்தா விக்னாசி) மாறி மாறி தமிழும் மராத்தியுமா வரவேற்றுக்கிட்டிருக்காங்க.
வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருத யுகந்தான் மேவுகவே.
(மகாகவி பாரதி - விநாயகர் நான்மணி மாலை)
நன்றி இரா.மு.
பாரதியாரோட விநாயகர்நான்மணி மாலை எப்பவோ படிச்ச ஞாபகம் இப்பத்தான் வருது.
'பாலடை' அடை இப்பெல்லாம் ரெடிமேடு கிடைக்குதாமே. நிஜமாவா? நீங்க எப்படி? முழுக்க முழுக்க வீட்ட்டிலேயே தயாரிச்சதா?
'இவிடே ஒரு ரைஸ் ஸ்டிக் கிட்டும். அதும் புழுங்கிப் பாலிலே இட்டால் மதி!'
நாந்தான் அந்த மராத்திப் பாட்டைப் பாடுனது 'ஆஷா'ன்னு தப்பா எழுதிட்டேன். அது ஆஷாவோட அக்காதான். மாப்பு
//'பாலடை' அடை //
இது என்ன? இனிப்பான பதார்த்தமா?
ஷ்ரேயா,
ரெசிபி இதோ
http://www.onamfestival.org/palada-pradhaman.html
எனக்கு பிடிச்ச பண்டிகையே பிள்ளையார் சதுர்த்திதான். காரணம் கொழுக்கட்டைதான். அதனால் அதை மாற்ற வேண்டாம் என்று (காலம் மாறினாலும்) பிள்ளையார் சார்பாகவும், கொழுக்கட்டைப் பிரியர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
//'பாலடை' அடை இப்பெல்லாம் ரெடிமேடு கிடைக்குதாமே. நிஜமாவா? நீங்க எப்படி? முழுக்க முழுக்க வீட்ட்டிலேயே தயாரிச்சதா?//
துளசி,
நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்லே வாங்கினது.
தங்கமணி,
எப்படியோ ஆனது ஆச்சு. அடுத்த வருசம்(நான்)பொழைச்சுக் கிடந்தா கொழுக்கட்டைதான்.
அதுக்குள்ளே நீங்க பொடிநடையாகவாவது இங்கே வந்து சேர்ந்து உதவி செய்வீங்கன்னு நம்பறேன்:-)
செய்முறைக்கு நன்றி துளசி.
//அடுத்த வருசம்(நான்)பொழைச்சுக் கிடந்தா.. //
இதென்ன இப்பிடி சொல்றீங்க! தங்கமே தில்லாலே நீங்க சொல்றது கொஞ்சமும் நல்லால்லே!! :O(
ஷ்ரேயா,
செய்முறை அனுப்புனது நான் இல்லே.
நம்ம இரா.முருகன் அவர்கள்.
விதி எப்ப முடியுமுன்னு யாருக்காவது தெரியுமா ஷ்ரேயா?
மஹாபாரதத்துலே ஒரு இடத்துலே யமனுக்கும் தர்மருக்கும் நடக்குற சம்பாஷணை கிடைச்சாப் பாருங்க.
நான் கூட அனுப்புவேன். ஆனா நம்ம புத்தகம் இரவல் போயிருக்கு!
சாதா கொழுக்கட்டை சாப்பிட்டு எவ்வளவு வருசமாச்சின்னு அவனவன் இங்க கணக்க போட்டுட்டு இருக்கான்... காலம் மாறுது அதனால வெரைட்டியா சேமியாக்கேசரிக் கொழுக்கட்டைன்னு அங்க சில பேரு டென்சன் பண்றாங்க... இதுக்கெல்லாம் பிள்ளையாரை கூப்பிட்டு டென்சன் பண்ண கூடாது... அந்த மூஞ்சுறுதான் இவங்க பழந்துணிய கடிச்சி எதுனா பண்ணனும்.
கெட்டது(இதுலே மரணம் அடங்குமா இல்லையான்ற விவாதத்தை இப்போதை தள்ளி வைப்போம்)எதுவுமே நினைக்க/சொல்லக் கூடாதாம். ஏன்னா அதை நிறைவேத்த எங்கேடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று துர்தேவதைகள் தலைக்கு மேலே திரியுமாம். சொல்லிருக்காங்க. இந்தக் கருத்து அனுராதா ரமணன் (I think)கதையொன்று (ஏதோ 16 னு பெயர் வருதுன்னு நினைக்கிறேன்..அதிலே கூட கதாநாயகிக்கு பிள்ளையார் பிடிக்கும்)வாசித்ததும் கொஞ்ச நாள் என் மண்டைக்குள் வலுப்பெற்றது.
ஆனா இந்த மனம் தான் "கிளை தாவி"யாச்சே..சும்மா இருக்காது. :O(
"இதுதான் எங்கிட்டே ஒரு 'கெட்ட'பழக்கம். எதாவது சொல்லவந்தா நிறுத்த முடியறதில்லை. அதுசம்பந்தமான வர்ற பல
ஞாபகத்துலே இழுத்துக்கிட்டே போயிருவேன்"
வயசாகிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு வர்ர வியாதியோ..பல ஞாபகம் அவங்களுக்குத்தானே. ஆனா, உங்களுக்கு ஏன் இந்த 'சின்ன' வயசிலேயே வந்திருச்சு?!
செய்முறைக்கு நன்றி இரா.முருகன்.(அட! பிள்ளையார் தம்பி!:O)
ஷ்ரேயா,
எங்க பாட்டி சொன்னதைச் சொல்றேன்.
'நம்ம கண்ணூக்குத் தெரியாத (நல்ல)தேவதைகள் வானத்துலே பறந்துக்கிட்டே இருக்குமாம். அப்ப 'ததாஸ்து'ன்னு சொல்லிக்கிட்டே பறக்குமாம். அதுக்கு அர்த்தம் 'அப்படியே ஆகக்கடவது'ன்ற ஆசீர்வாதம்.
அதான் நாம கெட்டது பேசுனோமுன்னாலும் அதே ஆசிதானம். அப்படியே நடந்துருமாம். அதனாலே எப்பவும் நல்லதே சொல்லணுமாம்.'
முகமூடி,
நம்ம வீட்டுலே ரெண்டு பூனைங்க இருக்கு.
(ஆனா அதுங்க எலியைப் பிடிக்காது. வேணுமுன்னா நீயே போய்ப் பிடிச்சுக்கோன்னு எங்கிட்டே சொல்லிருதுங்க)
//உங்களுக்கு ஏன் இந்த 'சின்ன' வயசிலேயே ..//
தேங்க்ஸ் தருமி.
ஷ்ரேயா,
//ஏதோ 16 னு..//
தெரிஞ்சுருச்சு . அது கிச்சா16 தானே?
நாந்தான் (வழக்கம் போல) அரைகுறையா விளங்கியிருக்கிறன் போல! :O|
தேவதைகள் கண்ணுக்குதான் தெரியாது! "ரேடார்"ல தெரியுமா? :O)
இல்லல்ல..வேற பேர். (வேற கதாசிரியரோ தெரியவில்ல. உண்மைக்கதைன்னு போட்டிருந்துது. பிடிச்ச கதை. (மறந்து போச்சே!) :O(
டி.ராஜ்,
தேங்க்ஸ் வாழ்த்தினதுக்கு.
இப்பெல்லாம் தேவதைகள் பின்னூட்டத்துலே வந்து 'ததாஸ்து' சொல்லுதாம்.
அதுங்களுக்கு மட்டும் காலம் மாறாதா என்ன?:-)))
முக்கியமானதை விட்டுட்டீங்களே!
wireless!!
இங்கு சிங்கைல ஒரு உணவகத்துக்கு சென்ற போது கொழுக்கட்டை வச்சிருந்தாங்க .வாங்கி சாப்பிட்டேன் .நல்லா இருந்துச்சு.எங்க ஊருல சின்ன வயசுல விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு இலைப்பணியாரம் சாப்பிட்டது ஞாபகம் இருக்கு.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
ஏங்க ஜோ,
சிங்கையிலே சைனாக்காரங்க சாப்பாடுலேயே கொழுக்கட்டை இருக்கே.
உள்ளேதான் பூரணத்துக்குப் பதிலா எதாவது மாமிசம் இருக்கும்.
துளசி, நல்லா அடுத்தவருசமும் அப்புறம் பலவருசம்மும் கொழுக்கட்டை செய்வீங்க. ஜோ சொல்ற இலைப்பணியாரம் என்பது நாட்டுப் பூவரச இலையில் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டையா என்று தெரியவில்லை! ஆனால் அந்தக்கொழுக்கட்டைக்கு நான் அடிமை. அதிலும் அந்த அரிசிமாவை மெல்லிய ரேக்கு போல செய்வதால் அதனுள்ளிருக்கும் பூரணம் கூட மங்கலாகத் தெரியும். அதெல்லாம் இப்ப எதுக்குடா தம்பி!
//சிங்கையிலே சைனாக்காரங்க சாப்பாடுலேயே கொழுக்கட்டை இருக்கே.
உள்ளேதான் பூரணத்துக்குப் பதிலா எதாவது மாமிசம் இருக்கும்.//
ஹி..ஹி.. உண்மை தான்.நானும் முதல் தடவ 'ஆஹா! நம்ம ஊர் கொழுக்கட்டை தான்" -ன்னு வெளித்தோற்றத்தை பார்த்து முடிவு பண்ணி வாங்கி சாப்பிட்டேன் .பரவாயில்லைன்னாலும் மறுபடியும் ஆசையா வாங்கி சாப்பிடுற மாதிரி இல்ல.
தங்கமணி
//அதனுள்ளிருக்கும் பூரணம் கூட மங்கலாகத் தெரியும். அதெல்லாம் இப்ப எதுக்குடா தம்பி!//
அதானே? பேசாம அடுத்தவருசம் இங்கே வந்துருங்க. இலைக் கொழுக்கட்டை செஞ்சுரலாம்.
ஜோ,
:-)))))))
// ஜோ சொல்ற இலைப்பணியாரம் என்பது நாட்டுப் பூவரச இலையில் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டையா என்று தெரியவில்லை!//
அதே தான் தங்கமணி அண்ணா.!எங்க ஊரில் கருப்புகட்டி உபயோகித்து செய்வார்கள்.எனக்கும் ரொம்ப பிடிக்கும்
//அதானே? பேசாம அடுத்தவருசம் இங்கே வந்துருங்க. இலைக் கொழுக்கட்டை செஞ்சுரலாம்//
நான் எவ்வ்வ்வ்ளோ தரம் என்டு முயற்சி செய்து, அது எப்ப சரியா வந்து.. ம்ஹூம்.. அதெல்லாம் சரிவராது, அடுத்த முறைக்கு எனக்கும் ஒரு சீட்! நானும் வந்திர்றேன். :O)
வழமையா வாற சைஸிலே சந்தேகம்: மோதகத்தை நினைச்சுக்கொண்டுதானே நீங்க கொழுக்கட்டை கொழுக்கட்டை என்று சொல்லிட்டிருக்கிறீங்க?
ஷ்ரேயா சந்தேகத்தை உடனுக்குடனே தீத்துரணும்.
வெங்காயம், பூண்டு போன்ற உருவத்திலே இருந்தால் மோதகம். மத்த 'டம்ப்ளிங்க்ஸ்'எல்லாம் கொழுக்கட்டை!
எனக்கு பற்றீஸ் மாதிரி (கையிலே அடங்கக்கூடியதான சைஸிலே 1/2 வட்ட வடிவிலே பொரித்தெடுக்கும் பண்டம்) வடிவத்திலே இருப்பது கொழுக்கட்டை. உருட்டி (வெங்காய வடிவிலே) இருப்பது மோதகம்.
நீங்க கதைச்சது எதைப்பத்தி?
ஷ்ரேயா அதேதான். ஆனா நீராவியிலே வேக வைக்கணும்
//ஷ்ரேயா அதேதான்//
எதேதான்? :O(
ஆஹா
கொழுக்கட்டையா? அதுவே ஜாஸ்தி. இதுல சேமியாகேசரி அப்டி இப்டின்னு வரைட்டி வேற. நல்லா அனுபவிக்கிறீங்க.
இங்க பிள்ளையாருக்கு காபி, பிஸ்கெட் தான் தினமும் நேவேத்தியம்.
இத்தன பேர் நம்மூர் கம்பூட்டர் காரங்க இருக்கீங்களே.. இந்த "Send a file" மாதிரி "Send a kozhukkattai" னு mail attachment அனுப்ப ஏதாவது வழி செய்யக்கூடாது??? இதவிட வேற என்ன முக்கியமான வேலையாம் உங்களுக்கெல்லாம்???
வெங்காயம்= மோதகம்
அரைவட்டம் = கொழுக்கட்டை
இப்படிக்கேட்டே பின்னூட்ட எண்ணிக்கையை வளர்த்தாச்சு:-))))
வந்துட்டீரா? இப்ப இருக்கறது ஊருலேதானே? அப்ப எதுக்கு காஃபியும் பிஸ்கெட்டும்?
குத்தாலம் போய் திரும்பலையா இன்னும்:-)
கொழுக்கட்டைக்குள்ளே சேமியாக் கேசரியை பூரணமா வச்சா தீர்ந்தது வேலை.
அக்கா
இந்தியாலேர்ந்து திரும்பி வந்தாச்சு :(
நான் இருந்ததால, எங்க வீட்டுல ஒரு ரெண்டு வாரம் முன்னாடியே வந்து முதல் சுற்று தின்னுட்டு போய்ட்டார் பிள்ளையார். தேங்காய், எள்ளு அப்புறம் எதோ உப்புப் பூரணம்.
இன்னிக்கு மறுபடியும் அவருக்கு மட்டும் ரெண்டாவது ரவுண்டு.
சரி, நேரமாச்சு.. இங்கேயே உக்கார்ந்திருந்தா, அப்புறம் எங்க சீப் எனக்கு படையல் வெச்சுடுவாரு. கிளம்பறேன்.
ஒரிஜினல் கொழுக்கட்டை செய்யும் முறை.
ஒரு கிளாஸ் அரிசியில் லேசாய் தண்ணி தெளித்து பிசிறி வைக்கவும். ரெண்டு மணி நேரம் அப்படியே பரப்பி வைக்கவும். மிக்சியின் சின்ன ஜாரில் போட்டு நன்கு பொடி செய்யவும். சல்லடையில் சலித்தால் மாவு வரும்.
அடுப்பில் தேவையான நீர் வைத்துக் கொதிக்க விடவும். (அளவு கண் அளவுதாங்க) குறைவா இருந்தா பரவாயில்லை. பக்கத்து அடுப்பில் கைவசத்திற்கு வேறு தண்ணீர் கொதிக்கட்டும். கொதித்த நீரில் சிட்டிகை உப்பையும், ஒரு ஸ்பூன் நல்லெண்ணைய் விடவும். சுடு தண்ணியில் நீள கரண்டி ஒன்றை சாய்த்து வைத்து, அதன் மீது அரிசி மாவை சரித்து கொட்டவும். அப்படியே மூடி வைக்கவும்.
பத்துநிமிடம் கழித்து, கை ஆறும் சூடில், பிசைந்தால் மாவு கையில் ஒட்டாமல் வரும். கையிலும் நல்லெண்ணெயும், தொட்டு கொள்ள காய்ந்த அரிசி மாவும் தேவை. அதிகம் இருந்தால் பிரிஜ்ஜீல் வைத்து பிறகும் செய்யலாம். இதுதாங்க கம்ப சூத்திரம். சிப்பு வடிவிலோ, நீளமாகவோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.
இப்படிக்கு,
கொழுக்கட்டை பிரியை
பி.கு பூரணம் செய்வது வெகு சுலபம். இங்க எல்லாம் துருவின தேங்காய் கிடைக்கிறது. அதையும் பொடி செய்த வெல்லத்தையும் போட்டு, ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டு, சேர்த்து கிளறி கம்மென்று வாசம் வந்தால், ரெண்டு ஏலக்காயை தட்டி போட்டால் ஆயிற்று.
( பல வருடங்களுக்கு முன்பு மல்லிகா பத்ரிநாத், சன் டீவியில் செய்து காண்பித்தார். அதை வெளியே சொல்லாமல் இந்த கொழுக்கட்டையை செய்து எல்லாரையும் ஆச்சரியப்பட செய்து வருகிறேன்)
உஷா,
ரெஸிபிக்கு நன்றி.
என்னோடது நம்ம மீனாட்சி அம்மாள்! புத்தகம் தாள்தாளா கிடக்கு!
இப்பெல்லாம் ஒரு அஞ்ச்சாறு கொழுக்கட்டைக்கு மெனக்கெடணுமான்னு ஆகிப் போச்சு. அப்பத்தான் 'சைனா + அரிசிமாவு
ஆபத்பாந்தவனா வந்தது. அதுகூட சிலசமயம் சொப்பு அழகா வரும். சிலசமயம் காலை(கையை) வாரிடும்.
அப்புறம் கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட்டாச்சா?
துளசியக்கா! புள்ளையாரு தின வாழ்த்துக்கள்! நம்ம பொழப்பு இங்க நாலுபேருக்கு புள்ளையாரு மெயில் ஃபார்வேர்டு பன்னதுலயே முடிஞ்சிருச்சு... சாயந்திரமாவது கோவிலுக்கு போகனும்..(எல்லாம் அந்த சுண்டல் கடாட்ச்சம் கிடைக்கும்ன்ற நம்பிக்கை..! )
//இத்தன பேர் நம்மூர் கம்பூட்டர் காரங்க இருக்கீங்களே.. இந்த "Send a file" மாதிரி "Send a kozhukkattai" னு mail attachment அனுப்ப ஏதாவது வழி செய்யக்கூடாது??? இதவிட வேற என்ன முக்கியமான வேலையாம் உங்களுக்கெல்லாம்??? //
தமிழ்மணம் படிக்கறது... ஹிஹி..
துளசி
சீனாக்காரன் மாவையும் வெந்நீர்ல நல்லெண்ணெய் விட்டு மாவு போட்டு கிளறினா நல்ல சொப்பு செய்ய வரும்.
dumbling னு சொல்லி office partyக்கு செஞ்சு எடுத்திட்டு போவென். (low fat, low calorie) சீக்கிரம் தீர்ந்துடும்
//அதுலே பாருங்க அசப்புலே பாத்தா அந்த 'என்னவோ' போலவும் இருக்கு.
எனக்குக் குரங்கும் பிடிக்குமுன்றதாலே அதை ரொம்பவும் பொருட்படுத்தலை//
:-))))
//ஒரிஜினல் கொழுக்கட்டை செய்யும் முறை.
//
ஒரு நுனிப்புல் மங்கையிர் மலராகிறது !
இளவஞ்சி,
கர்நாடகாவிலேயா இருக்கீங்க?
அப்ப வீட்டுலே கொ.க. செய்யலையா?
சீக்கிரம் கோயிலுக்குப் போங்க. சுண்டல் தீந்துரப்போகுது!
பத்மா,
அதான் 'சிலசமயம்' நல்லா வந்துருது.
காய்கறி உசிலி கூட இந்த 'டம்ப்ளிங்க்ஸ்'லே வைக்கலாம்.
நன்றி கல்வெட்டு
ரவியா,
இதானே வேணாங்கறது:-)
ஒரு ரெஸிபி சொன்னா உடனே மங்கையர் மலரா?
எல்லாம் உங்களுக்கு( ஆம்புளைங்களுக்கு) சொன்னதுப்பா. சீக்கிரம் செஞ்சுபார்த்துட்டு நல்லா வந்தா வீட்டம்மாவுக்குக் கொடுங்க:-)
கொழுக்கட்டை - என் வீட்டிலேயும் ஒரு "பாவப்பட்டவர்" இருக்கிறார். அவர்லே ட்ரையல் பார்த்திர வேண்டியதுதான்! ;O)
செய்முறைக்கு நன்றி உஷா.(இந்த முறை சரியா பேர் சொல்லிட்டேன் துளசி! குழப்பல!)
ஷ்ரேயா,
// என் வீட்டிலேயும் ஒரு "பாவப்பட்டவர்" இருக்கிறார். //
அந்த 'பாவப்பட்டவர்' புள்ளையார் என்று நம்புகின்றோம்:-)))))))
Thulasikka, I am not able to access your site easily these days from Thamizhmanam link(it does not load) from my computer. I am accessing it now from my husband's office computer (that is the reason for the english typing). This applies to a few other sites also. Does anyone else have this problem?
வீட்டிலே பிள்ளையார் நிறைய வடிவங்கள்ல இருக்கிறார்தான். ஆனா நான் சொன்னது சத்தியமா அவரை அல்ல!
// அந்த 'பாவப்பட்டவர்' புள்ளையார் என்று நம்புகின்றோம்//
நீங்க நம்புறதெல்லாம் உண்மையா இருந்தா எவ்வளவு நல்லது! ;O)
இல்லையே ரம்யா, இங்கே என்னோடதுலே எல்லாம் வர்றதே.
கம்ப்யூட்டர் அறிவே இல்லாத கணினி கைநாட்டு நானு ன்னு உங்களுக்கு இதுவரை தெரியாதா?
தமிழ்மணம் மன்றத்துலேதான் கேக்கணுமுன்னு நினைக்கிறேன்.
அதுலே இன்னும் நான் பதிவு பண்ணீக்கலையே(-:
ஷ்ரேயா,
ரம்யாவோட ப்ராப்ளம் என்னன்னு கொஞ்சம் பாக்கறீங்களா?
வீட்டுலே புள்ளையார் பலவிதமா இருக்காரா?
அடிச்சக்கை. நானும் புள்ளையாரும் யானையுமா சேர்த்துக்கிட்டு வர்றேன்.
எனக்கு சரியாத்தானே தெரியுது?
ரம்யா - துளசி சொல்ற மாதிரி தமிழ்மண மன்றத்தில "ஊடாடினீங்க" என்றால் யாராவது பதில் சொல்வாங்க. கவர்ச்சியான தலைப்பு இருக்கிறா மாதிரிப் பர்த்துக்கங்க! அப்பத்தானே நிறையப் பேர் பார்வையில படும்! :OD
// எடு சேமியாவை! இன்னிக்குக் சேமியாக்கேசரிக் கொழுக்கட்டை! (செய்முறை வேணுன்னா தனிமடல் போடுங்க மக்களே) //
பிள்ளையாரைப் படுத்தினது போதாதுன்னு எங்களுக்கு வேரையா...
இதில "காலம் மாறிக்கிட்டே இருக்கறது சாமிக்குத் தெரியாதா என்ன?"ன்னு டகால்ட்டி வேற....ம்ம்......
கொழுக்கட்டை பிடிக்கப் போய் கேசரியா முடிஞ்சுதா???
ஆஹா.....
பெருசுங்களை இப்படி உங்க மாதிரி சிறுசுங்க கலாட்டா செய்யறதாலேதான்
தமிழ்நாட்டுலேயும் இப்ப டெல்லியிலும்கூட
மழை பெய்யறதில்லைன்னு இங்கே டிவி.யிலே சொன்னாங்க:-)))
என்னமோப்பா, இப்படி வாய்க்கு ருசியாவும் புதுமையாவும் செய்யக் கத்துக்கிட்டா நாளைக்கு வர்றப்போறவங்களுக்குச் சமைச்சுப் போட வசதியா இருக்கும். ஹூம்..... சிறுசுங்க எங்கெ பேச்சைக் கேக்குதுங்க? ஹூம்....
அப்ப என்ன சொல்றீங்க.. 'சிரபுஞ்சி'ல சிறுசுங்க எல்லாருமே பெருசுங்க சொல்லுக் கேட்கிறாங்களா? :O)
//ஹூம்..... சிறுசுங்க எங்கெ பேச்சைக் கேக்குதுங்க? ஹூம்....//
அதானே.பசங்களா இனி மேப்பட்டு எல்லாரும் துள்சிப் பாட்டி சொல்ரதைக் கேட்டு நடக்கோணும்....
ஷ்ரேயா,
இப்ப எதுக்கு 'சிரபுஞ்சி'யை இழுக்கறீங்க?
பேச்சு தமிழ்நாடு & டெல்லிதானே?
அடங்காத சிறுசு:-))))))
எல்லாரும் சுதர்சன சொன்னமாதிரி இப்படி வரிசையிலே 'லைனா' நில்லுங்க பாட்டிப் பேச்சைக் கேக்க:-)
துளசி, நீங்க பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடி இரண்டு நாள் ( !!) கழிச்சுதான் நாங்க கொண்டாடியிருக்கோம் :-) இன்னிக்குதானே இங்க 7 ந் தேதி :-) ரொம்ப நாள் கழிச்சு பண்டிகைகளை மகன்களுக்கு நினைவுப் படுத்த ஒரு சான்ஸ். கொழுக்கட்டை நன்றாக இருந்தது அம்மா என்று ரசிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கே.... :-) உங்களுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
குறைந்தபட்சம் மும்பை கூடக் கிடையாதா இந்த விளையாட்டுலே? (சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும்) :O)
(துளசி கையேட்டின் படி பாத்தா மும்பையிலே திடீரென்று நிறைய சிறுசு 1 - 1.5 மாசத்துக்கு முன்னால "அடங்கியிருக்கு" போல!) ;O)
பாட்டி..அதென்ன "வரிசையிலே" லைனா நில்லுங்க?
sideஓரம், நடுcenter catchபிடி மாதிரியா? ;O)
// சிங்கையிலே சைனாக்காரங்க சாப்பாடுலேயே கொழுக்கட்டை இருக்கே.உள்ளேதான் பூரணத்துக்குப் பதிலா எதாவது மாமிசம் இருக்கும் // ;-))
// இங்க பிள்ளையாருக்கு காபி, பிஸ்கெட் தான் தினமும் நேவேத்தியம் // ;-)))
// என்னோடது நம்ம மீனாட்சி அம்மாள்! புத்தகம் தாள்தாளா கிடக்கு! // ஒரு முறை அவங்க புஸ்தகத்த படிக்க சந்தர்ப்பம் கிடைச்சுது... ஆனா ஒன்னும் செய்ய முடியல... பின்ன அளவு எல்லாம் வீசை, ஆழாக்கு ன்னு என்னவோ பாஷையில இருந்தா...
// ஒரிஜினல் கொழுக்கட்டை செய்யும் முறை // உஷா, என்ன பொறுத்த வரைக்கும் கொழுக்கட்டை செய்யறது, ராக்கெட் விஞ்சானி ஆகறதை விட கஷ்டம் போலருக்கே
// நம்ம பொழப்பு இங்க நாலுபேருக்கு புள்ளையாரு மெயில் ஃபார்வேர்டு பன்னதுலயே முடிஞ்சிருச்சு... // ;-))
// dumbling னு சொல்லி office partyக்கு செஞ்சு எடுத்திட்டு போவென் // இங்கயும் நிறைய தேசிஸ் எடுத்து வராங்க.. சில சமயம் பூரணம் கூட வைக்கிறதில்லை ;-(
முக்கிய அறிவிப்பு :: இந்த வருடம் எனக்கும் 5 கொழுக்கட்டை சாப்பிட கிடைத்தது... ;-))
//முக்கிய அறிவிப்பு :: இந்த வருடம் எனக்கும் 5 கொழுக்கட்டை சாப்பிட கிடைத்தது... ;-))//
முகமூடி..ஒஸ்ரேலியாப் பக்கமிருந்து ஏதோ புகையிற "வாசனை" வரல்ல? ;O)
கேள்வி கேட்டதும் துளசிப் பாட்டி ஓடிட்டாங்க போலருக்கு! :O(
// ஒஸ்ரேலியாப் பக்கமிருந்து ஏதோ புகையிற "வாசனை" வரல்ல? //
என்னங்க ஷ்ரேயா.. நீங்க செய்யிலயின்னாலும் நியூசியில இருந்து கொழுக்கட்டை (எ) கிச்சடி (நன்றி கணேஷ்) ஒரு நாள் கூரியரில் வரவழைத்து சாப்பிடலாமே.. பாட்டி அனுப்பலையா..
முகமூடி,
இந்த ஷ்ரேயாவுக்கு ரொம்ப சோம்பல். கொஞ்சம் கொழுக்கட்டையெல்லாம் செஞ்சு செஞ்சு பழகுனாத்தானே பண்டிகை அன்னிக்கு நல்லா வரும்? அப்பப்ப இங்கே அனுப்பியும் வைக்கலாம்தானே?
ஆமா, அஞ்சு கொழுக்கட்டை உங்களுக்கே உங்களுக்கா?
மீனாட்சி அம்மாள் புத்த்கம் இப்பெல்லாம் உங்களைப் போன்ற
'வீசை, ஆழாக்கு' தெரியாதவங்களுக்காக 'இங்கிலிபீஸீல்' வருது.
உங்களுக்காக ஒரு கன்வெர்ஷன் டேபிள்ஸ் போட்டு அனுப்பட்டுமா?
வீசை=1.4 கிலோ இப்படி.....
ஷ்ரேயா,
ஆஃபீஸ்லே கொஞ்சம் 'வேலையும்' பார்க்கணுமுன்னு இங்கே கோபால் சொல்றார்:-)
// தமிழ்நாட்டுலேயும் இப்ப டெல்லியிலும்கூட மழை பெய்யறதில்லைன்னு இங்கே டிவி.யிலே சொன்னாங்க:-))) //
நான் ஜூட் வுடறேன் சாமி..... இந்த வம்பே வேண்டாம்.....
அப்புறம் மழை பெய்யக்கூடாதுன்னு கணேஷ் தான் சூழ்ச்சி பண்றான்னு கேஸ் போட்டாலும் போடுவாங்க நம்ம நாட்ல
அருணா,
கொழுக்கட்டை சரியா வந்ததா?
நாங்க 'டேட்லைன்'லே இருக்கறதாலே எல்லாத்துலேயும் முந்திரிக்கொட்டைங்கதான். ஊருக்கு முன்னே எல்லாம் நடந்துரும். மொத சூரியன் எங்களுக்குத்தான்:-)
கணேஷ்,
:-))))))))))))
// கொழுக்கட்டை சரியா வந்ததா?//
துளசி, 31 வருஷ சர்வீஸ¤லே தொடர்ந்து உருப்படியா செய்யற ஒரே காரியம் - சமையல்; அதுலே சோடை போக உட்ருவோமா? :-)
என்னங்க அருணா,
நானும் முப்பத்து ஒன்னரை வருஷமா செஞ்சும் இந்தக் கொழுக்கட்டை அப்பப்ப சத்தாய்க்குதே!
நல்லா வரலேன்னா 'புள்ளையாருக்கு' அதிர்ஷ்டம் இல்லேன்னு இருந்துருவேன்:-)
சரியாச் சொன்னீங்க துளசி - நான் ஒரு சோம்பேறிங்க. நல்லாத் தெரிஞ்ச பலபேரு சொல்லிருக்காங்க! இப்ப நீங்களும்!! :O) செய்து பாத்திரலாம்தான்.ஆனா பாருங்க ஒரு சின்ன சிக்கல் - செய்தா முதல் தரமே குறைஞ்சபட்சம் pass பண்ணனும் என் பலகாரமெல்லாம். இல்லாட்டி அவ்வளவுதான். சட்டி சுட்டதடா கைய விட்டனடா என்று தூக்கிப் போட்டிருவேன்.
அலுவலகத்துலே வேலை செய்யணும்தான். ஆனா கொழுக்கட்டை பற்றின ஆராய்ச்சில கலந்துகொள்ளவும் வேணுமே! ;O)
முகமூடி - துளசி புதுசு புதுசா என்னென்னமோ செய்து பாக்கிறாங்க...இஞ்சாலதான் ஒன்றுமே எட்டிப்பார்க்க மாட்டேங்குது! :O(
(அது மாட்டேன்னுதா இல்ல இவங்க அனுப்பறதில்லயா???என்று நீங்கதான் கேட்கணும்) ;O)
ஷ்ரேயா,
இப்பதான் புதுசா ஒரு ஏர்லைன்ஸ் மலிவுன்னு சொல்லி நீங்க (ஆஸிங்க) ஆரம்பிச்சிருக்கீங்களே. அதுலேதான் ரெகுலர் சர்வீஸ்னு போட்டு தினம் குழம்பு, கூட்டு, கொழுக்கட்டைன்னு அனுப்பணும் போலெ:-))))
//ரெகுலர் சர்வீஸ்னு போட்டு தினம் குழம்பு, கூட்டு, கொழுக்கட்டைன்னு அனுப்பணும் போலெ//
நான் வேணாம்னா சொல்லப்போறேன் ;O)
சென்னையில் அம்மா கொழுக்கட்டை செய்தார்கள்.
பெங்களூரில் நான் பிள்ளையாருக்கு பாயாசம் காட்டினேன். பருப்புப் பாயாசம். பாசிப்பருப்பை லேசாக எண்ணெயில்லாமல் வறுத்து அதைக் குழைய வேக வைத்தாயிற்று.
வேண்டிய அளவு மண்ட வெல்லம் தட்டி வைத்துக் கொண்டேன். (சற்று அதிகமாகவே).
வாணலியில் நெய்யை ஊற்றி ஏலத்தைப் பிய்த்துப் போட்டுப் பொரித்து பிறகு முந்திரியைத் தள்ளினேன். முந்திரி நிறம் மாறியதும் வெல்லத்தைப் போட்டு லேசாக தண்ணீர் விட்டுப் பாகுப் பதம் வந்ததும் வெந்த பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கிளறினேன். பாயாசப் பதம் வருகையில் லேசாக நெய்யைக் காட்டி இறக்கினேன்.
பக்கத்து வீடு, நண்பர் வீடு, வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள். (அப்ப பிள்ளையார் பாராட்டுன மாதிரிதான.)
நண்பன் வீட்டில் மதிய உணவு. நானும் அவனது அக்காவும் சேர்ந்து கொழுக்கட்டை செய்ய முயன்றோம். கடைசியில் பேருக்கு பத்து கொழுக்கட்டை செய்து வைத்தோம். முயற்சி தோல்விதான்.
//நான் பிள்ளையாருக்கு பாயாசம் காட்டினேன்.//
:-)))
//கொழுக்கட்டை செய்து வைத்தோம். முயற்சி தோல்விதான்//
இதுக்கெல்லாம் மனம் தளராது நம்ம விக்ரமாதித்யனை( வேதாளம்என்ன பாடு படுத்துச்சு?)போல மீண்டும் மீண்டும் வருசாவருசம் செஞ்சுபார்க்கணும்.
அதுக்கப்புறம்( ஒருவேளை) வெற்றியோ வெற்றிதான்!
Post a Comment