Tuesday, September 20, 2005

நாலில் இருந்து பதினாலு வரை...

புள்ளையார் தமிழ்நாட்டு சாமி இல்லை. சாளுக்கிய நாட்டுலே இருக்கற வாதாபின்ற நகரத்திலிருந்துதான் மொதமொததமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தார்னு அன்னிக்கு சித்ராவோட ஒரு பதிவுலே படிச்சேன். அப்ப நாம இப்பச் செஞ்சுக்கிட்டுஇருக்கற காரியத்தை( அதான் புலம் பெயருதல்!)ஆரம்பிச்சுவச்ச புண்ணியவான் இவர்தானோ?


எப்படியோ இப்ப அவர் தமிழ்நாட்டுக்குடியுரிமை வாங்கி, நிலையா நிலைச்சுட்டார். அதுமட்டுமா, எந்தக் காரியமும்அவர் இல்லாட்டா நடக்காதுன்றமாதிரியும் பண்ணிட்டார். நல்ல சாமர்த்தியசாலிதான்,இல்லே? போகட்டும்.



இங்கேதான் நம்ம பக்கம் ஒருநாள் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடிட்டு விட்டுடறோம், இல்லையா? ஆனா மஹாராஷ்ட்ராவிலே பத்துநாள் இருந்து செமத்தியா எல்லா பூஜை, படையல்களையும் வாங்கிகிட்டுத்தான் போறார்.
எல்லாரும் கதை கேக்க ரெடியா இருக்கீங்களா? கொஞ்சம் இருங்க,நானு 'கொசுவத்திச் சுருளை' ஏத்திக்கறேன்.


அப்ப (1977) நாங்க 'பூனா'விலே இருந்தோம். வந்த கொஞ்சநாளிலேயே புள்ளையார் சதுர்த்தியும் வந்து போச்சு.ஏன், வந்து போச்சுன்னு சுவாரசியம் இல்லாம மொணங்கறேனா? வீடு கிடைக்காம ஒரு மாளிகை(!)யிலே தங்கி\யிருந்தோம்.ரொம்ப 'ஹை செக்யூரிட்டி ஏரியா'( என்ன தப்பா நினைக்கிறீங்க? ஜெயில் இல்லீங்க.நம்புங்க, நிஜமாவே மாளிகைதான்.மிலிட்டெரிஏரியா)வாப் போனதாலேயும், நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கறதுக்குத் தேவையான மொழி அறிவு ( இந்தி தெரியாதுன்றதை இப்படிநாசுக்காச் சொல்றேன்)அப்ப இல்லாததாலும் கொஞ்சம் அடங்கியே(!) இருந்தோம்.


அதுக்கடுத்தவருஷம் கொஞ்சம் தேறிட்டோம்லெ. அதுக்குள்ளே நம்ம மாமி, மாமாவோட நட்பு கிடைச்சதுலே எங்கஉலகமே மாறிடுச்சு. 'கண்பதி' வந்துருச்சு. புள்ளையார் சதுர்த்தின்னு நீட்டிவலிச்சுச் சொல்லாம நாங்களும் பூனா ஸ்டைல்லேமராத்திக்காரங்க சொல்றமாதிரி 'கண்பதி'ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டோம். அங்கே நம்ம ஆஞ்சநேயர் கூட 'மாரு(த்)தி''தான்!
மாமி சொல்லிட்டாங்க, கண்பதி முடியுறவரைக்கும் இங்கேயே ,அவுங்க வீட்டிலேயே தங்கிரணுமுன்னு! அங்கேயே குட்டியா ரெண்டு ரூமு.அவுங்களுக்கே பத்தாது. ஆனாலும் தாராளம்.அப்பத்தான் நானும் கத்துக்கிட்டேன், இடம் பெருசாஇருந்து ஒரு பிரயோசனமும் இல்லை. மனசுதான் பெருசா இருக்கணுமுன்னு! தினம் ராத்திரிக்கு அங்கே போறதுன்னுஒருமாதிரி ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம். அவுங்க வீடு இருந்தது 'ராஸ்தா பேட்(டை)'. இவர் சாயந்திரம் வேலை முடிஞ்சுவந்தபிறகு, காஃபி ,டிஃபன்(?) சாப்டுட்டு 'ச்சலோ ராஸ்தா பெட்'தான். எப்படியும் அங்கே மாமி வீட்டிலே சாப்புடு சாப்புடுன்னு ஒரே தொந்திரவு(!) தான்றதாலே நம்ம வீட்டுலே சாயங்காலக் காப்பித்தண்ணியோட கடையைக் கட்டிறதுதான்.
அங்கே போயிட்டா ஒரே ஊர் சுத்தல்தான். அநேகமா அங்கே ராத்திரிக்கு 'அரிசி உப்புமாவும் மாங்காய் இனிப்பு ஊறுகாயும்'தான். என்னோட ஃபேவரைட் ஆச்சே, தினம் தின்னாலும் அலுக்காது! சிலநாள் இட்டிலி, தோசைன்னு இருக்கும்.பாபுவும், வத்சலாவும்( மாமியோட பசங்க)வேலையிலே இருந்து வந்தவுடனே கிளம்பிடுவோம்.


அங்கே பேட்டைக்குப் பேட்டை 'படா' பந்தல் எல்லாம் போட்டு கண்பதியை ரகம்ரகமா அலங்கரிச்சு வச்சிருப்பாங்க.சதுர்த்தியன்னிக்கு ஆரம்பிச்சு பத்துநாள் விழா. பதினாலாம் நாளான சதுர்த்தசியன்னிக்கு கொண்டாட்டம் வேற மாதிரி!சொல்றேன் சொல்றேன்.....


கண்பதி வர்றதுக்கு நாலஞ்சுமாசத்துக்கு முன்னாலேயே எந்தமாதிரி அலங்காரம்ன்றது திட்டம் போட்டுப் பரம ரகசியமாவச்சுக்குவாங்க. அதுக்கப்புறம் ஆரம்பிக்கும் காசு வேட்டை. நிறைய இளைஞர்கள் ஒரு படையா சேர்ந்துக்கிட்டு இந்தக்காசு வசூலுக்குப் போவாங்க. அவுங்களோட இஷ்டதெய்வம் கண்பதின்றதாலே ரொம்ப உற்சாகத்தோட கிளம்பிருவாங்க.சாமி பேரைச் சொல்லி வசூல் செஞ்சு, ஆசாமிங்க துன்னுருவாங்களொன்னு நாம பயப்படத் தேவையில்லை. அதெல்லாம்நல்ல ஒழுங்குமுறையாத்தான் நடந்துக்குவாங்க. ஒரு ரகசிய இடத்துலே பக்காவா ப்ளான் பண்ணி, கண்பதி செய்யஆரம்பிச்சுருவாங்க. தனித்தனியாச் செஞ்சுவச்சதையெல்லாம் பண்டிகைக்கு மொதநாள் தெருவை அடைச்சுப் பந்தல்போட்டு போறவர்ற ஜனங்க பாத்துராம மறைவுக்காக தகரம் எல்லாம் வச்சு உள்ளே அலங்கரிச்சுக்கிட்டு இருப்பாங்க.ஜரிகை மாலைங்களும், நிஜப்பூ மாலைங்களும், கலர்க்கலரான சீரியல் பல்பு செட்டுங்களுமா வேலை நடந்துக்கிட்டுஇருக்கும். பேட்டைக்குப் பேட்டை, சிலப்ப தெருவுக்குத் தெரு இதே கதைதான்! பயங்கரப் போட்டிங்கதான். கடைசியிலேஎந்தப் பேட்டைப் புள்ளையார் ஜெயிக்கப்போறாருன்னு ஊரே ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருக்குல்லெ. முதலிடம் சும்மாக்கிடைச்சுருமா? ஒவ்வொண்ணுக்கும் ஒரு 'தீம்' வேற!


இதெல்லாம் எப்ப, எப்படி ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் மூக்கை நுழைச்சேன். சுதந்திரப் போராட்டம் நடந்துக்கிட்டுஇருந்த காலங்களிலே, பொதுக்கூட்டம் கூட்டறதுக்கு தடை இருந்துச்சாம். அப்ப நம்ம திலகர், அதாங்க பாலகங்காதரதிலகர், கோபால கிருஷ்ண கோகலே போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம்,சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியிலேபரப்பவும், செய்திகளைப் பரிமாறிக்கவும் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கிட்டாங்களாம். மத சம்பந்தமானகூட்டம்ன்றபடியாலே வெள்ளைக்காரங்க அரசாங்கம் கொஞ்சம் மெத்தனமா இருந்துருச்சாம். அதுதான் அப்படியேவளர்ந்து இன்னிக்கு இப்படி பெரிய கொண்டாட்டமா ஆயிருச்சாம்.


(அப்ப சென்னையிலே எல்லாம் இப்படி இல்லை. காலையிலே புள்ளையாரை வச்சுக் கும்பிட்டு கொழுக்கட்டை தின்னுட்டு,அன்னைக்கே கிணத்துலேயோ, ஆத்துலேயோ போட்டுருவாங்க. இப்பப் பத்திரிக்கைகளிலே வர்ற சேதிகளைப் பார்த்தா'மஹாராஷ்ட்ராவை மிஞ்சிடுச்சு மெட்ராஸ்'ன்னு இருக்கு. நேத்து இங்கே எங்கூருப் பேப்பருலே கண்பதி பத்தி போட்டுந்தாங்களாம்.நம்ம கிவி நண்பர்/நண்பிங்க ஃபோன் செஞ்சு வாழ்த்துச் சொன்னாங்க எனக்கு! என்ன போட்டுருந்தான்னு பார்க்கணும். )


நாங்க மொதல்லே, அக்கம்பக்கம் கிட்டக்க இருக்கற கண்பதியைப் பாக்கப் போவோம். இவுங்களைமட்டும் தினம் தப்பாமப்போய்க் கண்டுக்கிட்டு வருவோம். நேத்து இருந்ததைவிட எதுனா கூடி இருக்கா? பூமாலை இன்னிக்கு என்ன கலர்? இப்படிமுக்கியமானதையெல்லாம் 'நோட்'பண்ணிக்கிடுவோம். வீடுதிரும்புறப்ப நம்ம 'பாய்ண்ட்'எல்லாம் சொல்லி விவாதம் வேற!
சாப்பாடு ஆனபிறகுதான் இன்னும் மஜா. மாமியோட பசங்களும் ஏறக்கொறைய எங்க வயசுன்றதாலே அப்படியேப்பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டோம். அதுக்குள்ளே மணியும் ஒம்பதரை/பத்து ஆயிருக்கும். முக்கியமான எல்லா தெருக்களிலும்போக்குவரத்தை நிறுத்திருவாங்க. இஷ்டம் போல ரோடுலே குறுக்கேயும் நெடுக்கேயுமா போற வார ஜனக்கூட்டத்துலே அப்படியேநாங்களும் ஐக்கியம்தான். வண்டி வருதான்னு கவலைப்படாம டக்குன்னு தெருவைக் கடந்துபோற சுகம் இருக்கே,ஆஹா.ஆனா என்ன, அங்கங்கே தெருமத்தியிலே ச்சின்னச்சின்ன குன்றுகள் இருக்கும். அதைக் கவனிச்சுப் போகணும்.கொஞ்சம்கூடகவலையில்லாமல் ,'தேமே'ன்னு படுத்திருக்கற மாடுங்கதான் அது. பெரிய கொம்புங்களோட பாக்கறதுக்குப் பயங்கரமாஇருந்தாலும் அங்கே இதுங்க சாதுப் பிராணிங்க. கடந்து போற ஆட்களும் அதைத் தொட்டு கண்ணுலே ஒத்திக்கிட்டுப்போகுங்க. பசு லக்ஷ்மியாச்சே! சில இடங்களிலே புள்ளையாருக்குக்காக கலை நிகழ்ச்சி வேற! 'பொம்மலாட்டம்'தான் எனக்குரொம்பப் பிடிச்சது. லேட்டஸ்ட் சினிமாப் பாட்டுக்கு அந்த பொம்மைங்க ஆடற ஆட்டம் இருக்கே, தூள்!


நமக்கு அதுக்குள்ளே செவி வழிச் செய்தியா எந்தப் பிள்ளையார் ஜோரா இருக்கார்ன்ற நியூஸ் வந்திருக்குமே. இதுலேவழியிலே நம்மைப் பாக்கறவங்க தெரிஞ்சவுங்களோ, தெரியாதவுங்களோ, தகவல் பரிமாற்றம் செஞ்சுகிட்டுத்தான்போறது வழக்கம். உடனே எந்த ஏரியான்னு கேட்டுக்கிட்டு அங்கே பாயறதுதான். எல்லாம் 'நடராஜா சர்வீஸ்'தான்.காலுங்க களைச்சுப் போய் இனி நடக்கமுடியாதுன்ற நிலமை வரும்போது,( அவ்வளவு சீக்கிரம் வந்துருமா என்ன?சின்ன வயசுதானே?) வீட்டுக்குத் திரும்புவோம். அங்கங்கே மசாலாப் பால் பெரிய கடாய்களிலே காய்ச்சிக்கிட்டேஇருப்பாங்க. சூடான வியாபாரம்! அதையும் ஒரு கிளாஸ் அடிச்சுட்டு போய்ப் படுத்தோம்னா அவ்ளோதான்.


தூக்கம் சுகமறியாது கதைதான். எட்டுக்கு அஞ்சு இடத்துலேயே நாலுபேரு முடங்கிடுவோம். காலையிலே மாமி,சுடச்சுட ஃபில்டர் காஃபி ரெடி செஞ்சுட்டு எழுப்புவாங்க. அப்பத்தான் கல்தரையிலே உருண்டதோட பலன் தெரியும்.அந்தக் காஃபியைக் குடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கிட்டு நேரே நம்ம வீடுதான். டபுள்ஸ்.


கொஞ்சம்கூட சலிக்காம இதே கதைதான் பத்துநாளும். கடைசிநாளான ஆனந்தசதுர்த்தசிக்கு அரசாங்க விடுமுறை.காலையிலே இருந்தே ஆரம்பிச்சுரும் ட்ரம் சத்தம். புள்ளையாரைத் தண்ணியிலே கரைக்கற நாள். பூனாவுலேகடல் கிடையாதில்லையா. அதனாலே மூலா ஆறும், மூத்தா ஆறும் சந்திக்கற இடத்துலே தான் இது நடக்கும்.அந்த இடத்துக்கு 'சங்கம்'ன்னு பேரு. எல்லா ஏரியாவுலே இருந்தும் கண்பதி புறப்பட்டுருவார். ச்சும்மாப் போக முடியுமா?தாரை, தப்பட்டை வேணாமா? அதுக்குத்தான் இந்த பெரிய பேரல் ட்ரம்ங்க. அதைத் தூக்கிப் பிடிக்கவே ரெண்டுபக்கம்ரெண்டு ஆளூங்க.அடிக்கறவரோட இடுப்புலே தாம்புக்கயிறாலே பிணைச்சிருப்பாங்க. அடிக்க அடிக்க ஊரே அதிரும்.


நாங்க பால்கனியிலே நின்னுக்கிட்டே இந்த ஊர்வலங்களைப் பாக்கறதுதான். கீழே இறங்கிப் போய்ப் பார்த்தா அந்தக்கூட்டத்துலே ஒண்ணும் சரியாத் தெரியாது. குங்குமத்தைத் தட்டுலே குமிச்சுவச்சுக்கிட்டு எல்லார் நெத்தியிலேயும்பூசிக்கிட்டே போவாங்க ஊர்வல கோஷ்டிக்காரங்க. எவ்வளவு குங்குமத்தை நெத்தி தாங்கும்?


'வசதி' உள்ள கண்பதி, வெறும் ட்ரம் இல்லாம முழு வாத்திய கோஷ்டியோட போவார். பத்தடிக்கு ஒருதடவை நின்னு,சினிமாப் பாட்டெல்லாம் வாசிச்சுட்டுத்தான் நகரும் இந்த கோஷ்டி. கண்பதி க்காகவே ஒவ்வொரு சீசனிலும் ஒருகுத்தாட்டப்பாட்டு கட்டாயம் ஹிந்தி சினிமாவுலே வந்துக்கிட்டு இருந்த காலம்.


இசையைக்கேக்கக்கேக்க நம்ம காலு தானாவே ஆடும். வேடிக்கைப்பாக்கற ச்சின்னக் குழந்தைங்க( நிக்கத் தெரிஞ்சாபோதும்) தானாவே ஆடும் பாருங்க ஒரு ஆட்டம்! இசைக்கு எவ்வளவு வலிமை, அது எப்படி நம்ம உடம்புலே ஊடுருவிப்போகுதுன்னு அப்பத் தெரியும்.


தண்ணி குடிக்கக்கூட உள்ளே வரமுடியாது. அடுத்தடுத்து வர்ற ஊர்கோலத்தை 'மிஸ்' செஞ்சுட்டா? அன்னிக்குப்பூராடி.வி.யிலே வேற சங்கத்துலே கண்பதி கரைக்கறதையும், ஊர்வலம் நகரின் பலபாகங்களிலே இருந்து வந்துக்கிட்டுஇருக்கறதையும் காமிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பாங்க.


கடைசிச் சத்தம் ஓயறவரை நின்னுபார்த்துட்டுத்தான் மறுவேலை. அசம்பாவிதம் ஏதும் நடந்திராம இருக்க ஊர் முழுக்க பலத்த போலீஸ் காவல் வேற. எங்கே பார்த்தாலும் ஜனங்களுக்குச் சரியா போலீஸ்!
'கண்பதி பப்பா மோரியா, அக்லேவர்ச்சே லவுக்கரியா' கூவலோ கூவல். புள்ளையாரே, இப்பப் போயிட்டு அடுத்தவருசம் சீக்கிரமாவா'ன்னு அன்பாக் கட்டளை போடுற கூப்பாடு!!!!


ஆனாலும் இந்த ஜனங்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டம் கூடுதல்தான்.



மோரியாரே பப்பா மோரியாரே, கண்பதி பப்பா மோரியா!!




21 comments:

said...

துளசி
பல புது செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி. இங்கே நியுயார்க்கில் பிள்ளையாரை நதியில் கரைத்து, தண்ணீரை மாசுபடுத்தியதாக பல வருடங்கள் முன்பு அபராதம் கட்டினர்கள்.

said...

பத்மா - நகர சபையிடம் அனுமதி பெறவில்லையா?

said...

ஷ்ரேயா
தண்ணீரில் இவற்றை கரைப்பது குற்றம். அனுமதியெல்லாம் கிடைக்காது. இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றூ தெரியவில்லை

said...

அது எந்தப் பதிவு என்று சொல்ல முடியுமா? ஏனென்றால் சளுக்கிய நாட்டில் இருந்து பிள்ளையார் தமிழ்நாட்டில் குடியேறினார் என்ற அந்தச் செய்தி தவறு. சாளுக்கியர் காலத்திற்கும் முன்பாக தமிழ்நாட்டில் மூத்த பிள்ளையார் (முருகன் தான் இளைய பிள்ளையார் என்று முதலில் அழைக்கப் பட்டவர்.) வழிபாடு இருந்திருக்கிறது. பிள்ளையார்பட்டிப் படிமம் நரசிம்ம பல்லவன் காலத்திற்கும் முந்தியது. அது சங்க காலம் முடிந்த நிலையில் வடிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்ந்தவர்கள் சொல்லுவார்கள். (தவிர பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் கல்வெட்டு ஒன்றும் அங்கு இருக்கிறது.) பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் எங்கு ஏற்பட்டது என்ற கேள்வி இன்னும் முடிவுக்கு வராதது. வரலாற்றாசிரியர் ந. சுப்பிரமணியன் சிலம்பில் புகார்க் காண்டத்தில் வரும் சதுக்க பூத வழிபாட்டில் இருந்து கணபதி வழிபாடு எழுந்திருக்கலாம் என்று கருது கோள் வைப்பார். அதைப் படித்துப் பார்த்தால் உண்மையாய் இருக்குமோ என்று தோன்றுகிறது. அகத்தியர், தமிழ் உலகம் மடற்குழுவில் முந்தைய மடல்களில் இந்தக் கேள்வி பேசப் பட்டிருக்கிறது. தேடிப் பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

said...

பத்மா,

முந்தியெல்லாம் புதுக்களிமண் பிள்ளையார்தான். கலர் எல்லாம் கிடையாது. அதனாலே அவரை
நீர்நிலைகளிலே போட்டாலும் பிரச்சனையில்லாம இருந்தது. இப்ப என்னென்னவோ வர்ணங்களும்,
களிமண்ணுக்குப் பதிலா வேற சாதனங்களும் உபயோகிக்கறதாலே தான்
சுற்றுப்புறச்சூழலுக்கு பங்கம் வந்துருதுன்னு சொல்றாங்க.

எளிமையா இருந்தவரையும் காலம் எப்படி மாத்திருச்சு பார்த்தீங்களா?

said...

ஷ்ரேயா,

இங்கேயும் நகரசபை அனுமதி கிடைக்குமான்னு தெரியலை. முதலாவதாக நம்ம வீட்டு
வெண்கலப் பிள்ளையாருக்கு, வெளியே போக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது:-))))

said...

வணக்கம் இராம.கி. அய்யா,

பெரியவுங்க நம்ம 'வீட்டுக்கு' வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

நம்ம சித்ராவோட பதிவு ( பிள்ளையாரைப் பத்தி எழுதுனது) இதுலே இருக்கு.


http://www.oviyam.blogspot.com/

கம்யூட்டர் கணபதி வாழ்க!

பிள்ளையாரும் அவ்வையாரும்


நீங்க 'குறிப்பிட்ட இடங்களையும்' படிக்கப்போறேன். தகவலுக்கு நன்றி.

யானையும் , அதன் வடிவாக இருக்கும் பிள்ளையாரும் எனக்கு மிகவும் விருப்பம்
என்பதால் 'அவரை'ப்பற்றித் தெரிந்து கொள்வதிலும் மகிழ்ச்சியே.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி வீட்டுப் பிள்ளையாருக்கு வெளியே போகத் தடையா!!

யாரங்கே!!! தடையுத்தரவு போட்டவருக்கு ஐந்து படி களி உடனே அனுப்பவும்! :O)

said...

ஷ்ரேயா இது நிஜமாவே 'டூ மச்'
எப்படி என் னாலே அஞ்சுபடி களியையும் திங்க முடியும்?:-)))))

said...

நீங்களேவா தடையுத்தரவு போட்டீங்க? ஏன்? :O(

said...

ஷ்ரேயா,
அவர் பாட்டுக்குப் போயிட்டா அப்புறம் எங்கேன்னு தேடுறது?

வெண்கலமா இருக்கறதாலே தண்ணியிலே போட்டாக் கரைஞ்சிடமாட்டாருன்னாலும்....

உண்மையைச் சொன்னா அவர் 'படி தாண்டாப் பத்தன்':-)))))

said...

துளசி !!
தங்கள் பதிவுகள் கண்டு யாம் மெய்சிலிர்த்தோம். வேண்டும் வரம் கேட்பீராக !!

said...

// Go.Ganesh said...
துளசி !! தங்கள் பதிவுகள் கண்டு யாம் மெய்சிலிர்த்தோம். வேண்டும் வரம் கேட்பீராக!!//


துளசி, பனிமழை குளிரிலே சிலிர்த்திருப்பாரு சிலவேளை. எதுக்கும் ஒரு jumper குடுங்க! :O)

said...

கணேஷ்,
இப்பெல்லாம் சூட்சமம் பேருலே இருக்கோ?

சிலிர்த்த 'மெய்'யை பொய்யாக்கினாப் போதும்.

ஷ்ரேயா,

நன்று சொன்னீர்.

said...

தத்துவம் இப்பிடி வந்து உதிருதே.. கொஞ்சம் பொறுங்க, பொறுக்கிக் கொள்கிறேன்! ;O)

said...

அண்ணன் சாளுக்கிய நாட்டுலே இருக்கற வாதாபின்ற ஊர்காரர்..தம்பி பக்கா தமிழ்க்கடவுள்.. அதெப்படினு ரொம்ப நாளா குழப்பம் எனக்கு...

பல நல்ல தகவல்கள் தந்த அக்காவுக்கு ஒரு டிரம் நிறைய கொழுக்கட்டை தரலாம். இருந்தாலும் ஒரு 'ஓ' மட்டும் இப்போதைக்கு.. :)


///மெய்சிலிர்த்தோம். வேண்டும் வரம் கேட்பீராக////
வேறென்ன , பிள்ளையார் சைஸ்க்கு ஒரு ஒட்டியானம் நம்ம அக்காவுக்கு வேனுமாம்..முடியுமா கனேஷ்..??

said...

அன்புள்ள துளசி அக்கா,

எவ்வளவு பெரிய பதிவு..

நம்ம ஊர்ல பிள்ளையாரை வச்சி தான் இப்பொ ஒரு கட்சி வளருது..

89ல சின்னதா ஒரு பிள்ளையார் ஊர்வலத்துல பெரிய மசூதி (திருவல்லிக்கேணி)யில் இருந்து செருப்பு வந்து விழுந்ததாக ஒரு பிரச்சினை அடி தடி கலவரம் எல்லாம் நடந்தது. அது தான் ஆரம்பம்.. அது வரை எத்தனையோ ஆர் எஸ் எஸ் ஷாகாக்கள் இருந்தாலும், தாணு லிங்க நாடருடைய இந்து முன்னணி தான் இந்துக்களின் கட்சி.. அப்புறம் கோவைல குண்டு வெடிச்சங்க.. ஒரு கட்சி இன்னிக்கி தமிழ் நாடு முழுக்க பிள்ளையார் விழா கொண்டாடறாங்க. அந்த கட்சி தமிழ் நாட்டுல வளரக் காரணமே முஸ்லிம்கள் தான்.. எல்லாம் பண்ணிட்டு அமைதிப் பூங்கவான தமிழ் நாட்ட கெடுத்துடாதேங்க ந்னு சுஜாதாவுக்கு கடிதம் போடராங்க.

சில நிகழ்வுகள் ஒரு கலாசார மாறுதலை கொண்டு வந்துவிடுகிறது பாருங்கள்.

அன்புடன் விச்சு

said...

வீ.எம்,

ரெகமெண்ட் செஞ்சதுக்கு தேங்க்ஸ்பா.

said...

விச்சு,

நம்ம நாடுன்னு இல்லே, கவனிச்சுப் பார்த்தா மதமும்,
அரசியலும் அநேகமா சேர்ந்தேதான் இருக்கு.

ரெண்டையும் கண்டுபிடிச்சது மனுஷந்தானே?

said...

// அக்லேவர்ச்சே லவுக்கரியா' //

என்னங்க இது? இதுக்கு அருஞ்சொற்பொருள் சொல்லீருங்க. இல்லைன்னா மூளை எதையாவது தப்பா நெனச்சிறப் போகுது.

மகாராஷ்டிராவில் கணேஷ் சதுர்த்தி போலவே கல்கத்தாவில் துர்காபூஜா. அங்க போய்க் கொண்டாடுவதும் நன்றாக இருக்கும்.

ஆனால் வங்களத்தில் மிகவும் சிரத்தையாக எந்த கெமிக்கலும் இல்லாமல் இயற்கைப் பொருட்களைக் கொண்டே துர்கை சிலைகளைச் செய்கிறார்கள். பிளாஸ்டர் ஆப் பாரீசை எங்கும் பார்க்க முடிவதில்லை. களிமண் சிலைகள்தான். வண்ணச்சாந்துகளும் இயற்கை வண்ணங்களே. தலை மயிருக்குக் கூட மூங்கிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். பாராட்ட வேண்டிய பண்பு இது.

said...

என்ன ராகவன்?

கடைசி பாராவுலே விளக்கம் இருக்கே.
'அடுத்த வருஷம் (லவுக்கர்) சீக்கிரம் வா'

கல்கத்தாவாசிங்களை பாராட்டணும். இந்த பூஜையைப் பத்தி நிர்மலா முந்தி எழுதியிருந்தாங்க.