Thursday, September 29, 2005

நியூஸிலாந்து. பகுதி 7

இந்தக் கூத்தைக் கேளுங்க!

நேத்து சாயந்திரம் தொலைக்காட்சியிலே முக்கியமான நியூஸ் என்ன தெரியுமா?

பள்ளிகளில் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறதாம்! எந்த் மாதிரி?


ஆசிரியர்களை வன்முறையில் தாக்குவதும், இழிவாகப் பேசுவதும், மிரட்டுவதும், உணர்வுபூர்வம்கொடுமை செய்வதும், இனவெறி கொண்டு ஏதேனும் செய்வதும் இன்னும் இந்த மாதிரி சிலவும்!


போன வருடம் மட்டும் 637 நிகழ்வுகள் நடந்திருக்கிறதாம். இவை பதியப்பட்டவையாம். ஆனால் பதியப்பாடாமல் இன்னும் பலதும் உண்டாம்! இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தார்களாம். இப்போது,அளவுக்கு மீறிப் போனதால் ஒவ்வொன்றாக வெளியில் வருகிறதாம்!


இப்போது ஆசிரியர்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றிக் கவலை அதிகம் படுகிறார்கள் என்றும், ஆபத்துநேரிடும்போது தற்காத்துக்கொள்ள 'panic buttons' ( அதை அழுத்தினால் சத்தம் வரும். மற்றவர்கள்உதவிக்கு வருவார்களாம். நம்ம ஊர் போலீஸ் விசில் மாதிரியா?)


இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் சொன்னது,'பசங்க எல்லாம் டீச்சருங்களை விட ரொம்பஉயரமாவும், பலசாலிகளாவும் இருக்காங்க. டீச்சருங்க சின்ன சைஸ். பின்னே எப்படி இருக்கும்?'


முன்பு அதாவது ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே, பிள்ளைகளுக்கு 16 வயதுவரை கல்வி தரவேண்டியது கட்டாயமாக இருந்தது.அதாவது அவர்கள் கல்வி கற்கும் மொத்த காலம் 11 ஆண்டுகள்.
அப்புறம் பிள்ளைகள், பெற்றோரைவிட்டுத் தனியே போய் வாழ ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு அரசாங்கமேவாழும் உதவித்தொகை கொடுத்துவந்தது! இதற்கு 'டோல்' (Dole) என்று பெயர். ஒரு சமயம் நடை பாதையில்இப்படி எழுதியிருந்தது,'I live on dole and I love it'


அதன் பின் அரசாங்கம், பிள்ளைகள் 18 வயதாகும் வரை உதவித்தொகை கிடையாது. அதனால் அவர்கள் 18 வயதுவரை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவித்தது. இந்த இரண்டு வருடங்கள் கட்டாயக் கல்வி இல்லை. ஆனால்பிள்ளைகள் வீட்டில் 'ச்சும்மா' இருக்கவேண்டுமே என்று பள்ளிகளுக்குப் போகின்றனர்.எல்லோரும் இப்படியில்லை.உண்மையாகவே படிப்பில் ஆர்வமும், நல்ல வேலைக்குப் போகும் தகுதிகள் பெறவும் ஏராளமான மாணவர்கள் தொடர்ந்து கல்லூரியில்படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.


இந்த 'ச்சும்மா' இருக்கும் மாணவர்கள் கொஞ்சம்தான். ஒரு 15 சதமானம் இருப்பார்கள். இரண்டு ஆண்டுகள் கூடுதலாகபள்ளியில் வைப்பதால் வந்த வினை என்று இப்போது கூக்குரல் ஆரம்பித்துள்ளது!


இந்த 'மாதா, பிதா, குரு, தெய்வம்' வெள்ளையர் உலகிலே இல்லாத ஒரு சமாச்சாரம்! நம் நாட்டிலும் இது அருகிவந்தாலும்,குறைந்தபட்சம் பாடப் புத்தகத்திலோ, சாஸ்த்திர சம்பிரதாயம் என்ற பேரிலோ எழுத்து உருவத்திலாவது இருக்கிறது!


ஒரு முறை, நான் 'இந்தியப் பள்ளி'களைப் பற்றி ஒரு ஆரம்பப்பள்ளியிலே உரையாற்றும்போது, நம் நாட்டிலே உள்ளகுழந்தைகள்தினம், ஆசிரியர்கள் தினம் இவற்றைப் பற்றிச் சொன்னபோது, எல்லோரும் 'ஆ'என்று பார்த்தார்கள். அவர்களுக்கு இப்படிஒன்று இருப்பதை நம்பவே முடியவில்லை!
நான் இங்கே முதலில் குடியேறியபோது, அவ்வளவாக இந்தியர்கள் கிடையாது! இன்னும் சொல்லப் போனால், இந்த நகரில் குடியேறியமுதல் தமிழ் நாட்டுக் குடும்பமே நாங்கள்தான்!


ஆகவே நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதற்கும், நான் நெற்றியில் வைக்கும் dot ( பொட்டு) என்ன என்று தெரிந்து கொள்வதற்கும்அதிக ஆர்வம் காட்டுவார்கள்.


நம் இந்திய உடைகள் மிகவும் அழகாக, பல வர்ணங்களில் இருப்பது மிகவும் அருமை என்றும் புகழ்வார்கள். அப்போதெல்லாம் இங்குவெறும் நான்கு நிறங்களில்தான் உடைகள் இருந்தன. சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம். அப்புறம் இருக்கவே இருக்கு வெள்ளையும்கறுப்பும்! கறுப்புதான் இவர்களுக்குப் பிடித்த கலரு' இந்த நாட்டின் தேசீய நிறமே கறுப்பு தான்! அதனால்தான், இவர்களுடையகிரிக்கெட் டீம் 'ப்ளாக் கேப்' ரக்பி டீம் 'ஆல் ப்ளாக்' பாஸ்கெட் பால் டீம் 'டால் ப்ளாக்'என்ற பெயர்களில் இருக்கின்றன.


ஒருமுறை, என் மகளின் இந்திய பாரம்பரிய உடைகளையெல்லாம் கொண்டுபோய், ஒரு சின்ன வகுப்புப் பெண்குழந்தைகளுக்கு அணிவித்தும், ஒரு சின்னப்பெண்ணுக்குப் புடவைக் கட்டி,மணமகள் அலங்காரம் செய்தும் இந்தியா தினம் கொண்டாடினேன்.மற்ற எல்லா வகுப்புக் குழந்தைகளும், மொத்த ஸ்கூலும், ப்ரின்சிபால் உள்பட எல்லா ஆசிரியர்களும் அசெம்ப்ளியில் கூடி எங்களுடன் இந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்தனர்!


ஆண் பிள்ளைகள் எங்களுக்கு ஒன்றும் இல்லையா என்று பரிதாபமாக் கேட்டனர். அதெப்படி ஆண்களுக்கு ஒன்றும் இல்லாதிருக்கமுடியும் என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது! அவர்களுக்கெல்லாம் ஒரு 'ஸ்டிக்கர்'பொட்டு வைத்து விட்டேன்.


இப்போது, இந்திய டிஸைன்கள் உலக அளவில் '·பாஷன்' ஆகிவிட்டதால் மேல்நாட்டு உடைகளிலேயும் கொஞ்சம் இந்தியன் 'டச்' வரஆரம்பித்துள்ளது.
ஆரம்பப் பள்ளிகளில்தான் இது சாத்தியம். பெற்றோருக்கு நல்ல சுதந்திரம், மரியாதை உண்டு.பள்ளியின் அநேக நடவடிக்கைகளில்'பேரண்ட் ஹெல்ப்பர்' என்று நாங்கள் பங்கேற்க முடியும். 'ஸ்கூல் கேம்ப்'களிலும்கூட நாங்களும் கூடவே போகலாம்.


பொதுவாகவே இங்கு குழந்தைகளுக்கு உரிமைகள் அதிகம். பெற்றோருக்குமே, தங்கள் பிள்ளைகளை அடிக்கும் உரிமை இல்லை!திட்டவும் கூடாது. மிரட்டவும் கூடாது. இப்படி இங்கே பெற்றோருக்குத்தான் அதிகம் 'கூடாதுகள்' ( கணவனுமே மனைவியை அடிக்கமுடியாது! ஒரு ·போன் போதும்!)
குழந்தைகள் தனிமனிதர்களே என்கிறார்கள். பெற்றோர் அடிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரிந்தால் உடனே அவர்கள் காவல்துறைக்கு·போன் செய்துவிடுவார்கள். சிலசமயம் அந்தப் பிள்ளைகளே 111 க்கு ( அதுதான் இங்கே காவல்துறை எண்) ·போன் போட்டுவிடுவார்கள்.உடனே அவர்கள் வந்து பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் '·போஸ்டர் ·பாமிலி' என்று குழந்தை நல அதிகாரிகளால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் தாற்காலிகமான கவனிப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பெற்றோர்கள்மேல் குற்ற நடவடிக்கைஎடுப்பார்கள். ·பிஸிகல் அப்யூஸ், மெண்டல் அப்யூஸ், எமோஷனல் அப்யூஸ், வெர்பல் அப்யூஸ் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்வைத்துவிடுவார்கள்.


குழந்தைகள் பெரியவர்களாக வளர வளர எல்லாம் மாறிப் போகிறது. அவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது, எல்லாமேதலைகீழ்தான்.
பிள்ளைகளுக்கு 14 வயதுவரை, அவர்களைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளியே போகக்கூடாது! அப்படிப் போகுமுன்'பேபி சிட்டர்'களுக்கு ஏற்பாடு செய்து, அவர்களை ஒரு பெரியவர்கள் கண்காணிப்பில் விடவேண்டும். 'ஹோம் அலோன்' என்று கேஸ்பதிவு செய்து விடுவார்கள்! ஆனால் அதே பிள்ளைகள் 16 வயதானவுடன், தனியே குடுத்தனம் கூடப் போகலாம்!


ரொம்பச் சின்னப் பிள்ளைகள் மாலை 7.30க்கு படுக்கைக்குப் போய்விடவேண்டும். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் 8.30க்கு. ஆனால் 16 வயதானவுடன் ராத்திரி 12 வரை ஊர் சுற்றினாலும் தாய் தகப்பன் வாயைத் திறக்க முடியாது!எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும்.'ஸ்கூல் கவுன்சிலர்' இருக்கிறார்கள். ஒழுங்காக இருக்கும் ( அப்பா அம்மா பேச்சைக் கேட்டு) பிள்ளைகளுக்குக் கூட அவர்கள் 'உரிமை'களை எடுத்துச் சொல்லியும் அந்த உரிமைகளை அச்சில் அடித்துவைத்து, அரசாங்கமே விநியோகிக்கும்புத்தகங்களைக் கொடுத்தும் ஒருவழி பண்ணிவிடுகின்றனர்! நம் பண்பாட்டில் எது எது கூடாது என்று நினைக்கிறோமோ, அது அத்தனையும்இஷ்டப்பட்டால் செய்து கொள்ளலாம். செக்ஸ் எஜுகேஷன் என்று அது வேறு.இதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால்,பள்ளிகளிலேயே, ஆணுறைகளும் வழங்கப்படுவது அதிர்ச்சிதருகிறது என்பதை மறுக்க முடியாது! 'பாதுகாப்பான உறவு' என்பதில்தான்கவனமே தவிர, அந்த உறவு வேண்டுமா என்பதில் ஒரு வேறுபட்ட கருத்து இல்லை. என்ன ஒன்று, யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாதாம்!அவர்களாக முடிவு செய்ய வேண்டுமாம்!


இதில் பெற்றோர் தலையிட முடியாது. மீறித் தலையிட்டால், கவுன்சிலரிடமிருந்து பெற்றோருக்கு அழைப்பு வரும். நம்மை உட்காரவைத்து,மணிக்கணக்காக நமக்கு 'உபதேசம்' செய்வார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது?


இந்தியப் பெற்றோர்களுக்கு, இங்கே வந்தபிறகு ஏற்படும் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி இதுதான். ஆங்கிலப் படங்களில் பலவற்றைப்பார்த்து, ஒருவிதமாக இவர்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டவர்களாகவும், தங்களை மேல்மட்டவாசிகளாகவும் நினைத்திருக்கும் பெற்றோருக்கும்கூட,அவர்கள் பிள்ளைகள் அந்தப் பாதையில் பயணிக்கும்போதுதான், அதோட உண்மையான கனம் புரியும்.
நாடு, இனம், மொழி, கலாச்சாரம் இவை வேறுபட்டு இருந்தாலும், பெற்றோர்கள் உலகெங்கிலும் பெற்றோர்கள்தானே! தங்கள் பிள்ளைகள்நல்லவர்களாகவும் வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும், நல்ல நிலையில் கல்வி பயின்று நல்ல வாழ்க்கை அடையவேண்டும்என்ற எண்ணம் எல்லோருக்கும் பொதுதானே? கெட்ட மனிதர்களாக இருந்தாலும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே எண்ணுவார்கள்? இதில் ஏதாவது மாறுபட்ட கருத்து வருமா?


அப்போது, ஒரே ஒரு வார்த்தை, வாக்கியம் போதாதா 'தாய் தகப்பன் பேச்சைக் கேள்' என்று. அதை விட்டு விட்டு, அளவுக்கு மீறிஉரிமைகளை அள்ளி வழங்கிவிட்டு, இப்போது மாணவர்களால், ஆசிரியர்களுக்கு ஆபத்து என்று விவாதம் நடக்கிறது!


இனி, அடுத்த 'ஷாக் நியூஸ்' வரும்வரை தினமும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் இது தொடரும்! நம் காதுகள் புளிக்கும்வரைவந்துகொண்டே இருக்கும்!நன்றி: சங்கமம் 2004


safe sex பற்றித் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால் இந்த 16/17 வயதில் இதைச் செஞ்சுபார்க்கத் தேவையா என்பதுதான் கேள்வி.தற்போது சூடாக இருக்கும் 'குஷ்பு சொன்னது' க்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா?

*****************

28/09/2005NewstalkZB

More than 1200 students have been expelled from schools so far this year, 227 fewer than last year, but the latest statistics from the Education Ministry show schools are fed up with students out-of-control behaviour.
The Ministry says schools are required to enrol the student elsewhere and are successful in doing so 25 percent of the time, but the figures show some students have slipped through the system and are unaccounted for.
Two students are untraceable and 13 have been referred to a tracing agency.


இது நேத்து வந்த நியூஸ்.

11 comments:

said...

//safe sex பற்றித் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால் இந்த 16/17 வயதில் இதைச் செஞ்சுபார்க்கத் தேவையா என்பதுதான் கேள்வி.தற்போது சூடாக இருக்கும் 'குஷ்பு சொன்னது' க்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா//

நீங்களும் ஜோதில கலந்துட்டீங்களா! :O|

said...

//நீங்களும் ஜோதில கலந்துட்டீங்களா//

பின்னே? ஓரமா நின்னா நம்மை இந்த வெள்ளம் அடிச்சுக்கிட்டுப் போயிராதா?:-))))

said...

ஷ்ரேயா,
இந்தக் கட்டுரை போன வருசம் சங்கமத்துலே வெளிவந்தது.

said...

ம்ம்.. கவனிச்சேன்.

ஊர்ல ஆசிரியர்களுக்கு மரியாதை உண்டுதான். ஆனால் மாணவர்களுக்கு இங்கெ போல கேள்வி கேட்டு (நல்லமுறையில்) தேவையானதை அறிய, தெரிஞ்சதை விவாதிக்க சுதந்திரமில்லையோ என்று தோணுது.

சொல்றதை கேட்டுட்டு அப்பிடியே நடந்துக்கணும் என்று எதிர்பார்ப்பார்கள். :O(

said...

இங்கும் ஒரு சர்வே(!!)., 52% மாணவ, மாணவிகள்., பள்ளி பாதுகாப்பான இடமில்லை என்று கருத்து கூறியிருக்கிறார்கள்.

said...

நம்பிக்கையே இல்லாமப் போயிருது பாத்தீங்களா?
பள்ளியிலே பாதுகாப்பு இல்லேன்னா எப்படிங்க?

நம்ம ஊர்லேயும் வாத்தியாருங்க சிலர் மாணவிங்ககிட்டே சில்மிஷம் பண்ணறதா அப்பப்ப பேப்பருலே வருதே. கவலையா இருக்குங்க.

said...

துளசி அக்கா1.,

ஆமா குஷ்பு சொன்னதப் பத்தி கருத்து சொல்லாம தப்பிக்க பாக்குறிங்களா?., உங்க எண்ணத்தையும் பதிவு பண்ணுங்க.

said...

மரம்,
குஷ்பு சொன்னதுக்கு என் கருத்தை நம்ம சித்ராவோட பதிவுலேயும் அப்புறம் இன்னும் சில நண்பர்களின் வலைபதிவுகளிலும் பின்னூட்டமாப் போட்டாச்சு.

அவுங்க என்ன சொன்னாங்க, மத்தவுங்க அதை எப்படித் திரிச்சாங்கன்னு பார்த்து/படிச்சு இப்ப அலுப்பா இருக்கு.

said...

//safe sex பற்றித் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால் இந்த 16/17 வயதில் இதைச் செஞ்சுபார்க்கத் தேவையா என்பதுதான் கேள்வி.//

என்ன சொல்றதுன்னு தெரியல அக்கா. எது சொன்னாலும் இங்க (வலைப்பதிவர்) தப்பா புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு. அந்த வயசுலதான் sex பற்றிய உணர்வுகளும் தேடல்களும் வரும் இது இயல்பான மனித (மிருக) குணம். ஆற்று நீரை தேக்கி நல்ல விவசாய நிலங்களுக்கு பயன் படுத்துவது போல் , இந்த உணர்வுகளை கட்டுப்படுத்தி திருமண வாழ்க்கையில் நல்ல விதமாப் பயன் படுத்தலாம். ஆனால் கட்டுப்படுத்தலே பல திரை மறைவுச் செயல்களைச் செய்யத் தூண்டுவதால் அதுவும் தவறாகிறது.

முதலில் sex தவறோ பாவமோ கிடையாது என்பதைப் போதிக்க வேண்டும்.

பதின்ம வயதில் sex வைத்துக் கொள்வதால் வரும் பாதகங்களை (risk) எடுத்துச் சொல்லலாம்.
அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிசமான உண்மை.

said...

கல்வெட்டின் கருத்துதான் என்னுடையதும்.

ஆனால் நம்மூரில் மாணவர்களால் ஆசிரியருக்குத் தொந்தரவு என்பதை விட ஆசிரியரால் மாணவர்களுக்குத் தொந்தரவு என்று உண்டு. நிறைய பத்திரிகைகளில் படிக்கின்றோமே. வீட்டுக்கு வீடு வாசப்படி போல. பெரிய வீட்டுக்கு பெரிய வாசப்படி. சின்ன வீட்டுக்கு சின்ன வாசப்படி.

said...

ராகவன்,

பெரியவீடு ச்சின்னவீடுன்னு இல்லை. ஜனங்க ரேஷியோ பார்த்தா எல்லாம் ஒரே விகிதம்தான் வரும். இல்லே?