Friday, September 30, 2005

நியூஸிலாந்து. பகுதி 8

நியூஸிலாந்தின் முக்கிய நகரங்கள்! **************************************

இந்த நாட்டிலே மிக முக்கிய நகரங்கள் என்று சொன்னால் வடக்குத்தீவுக்கு மூன்றும், தெற்குத்தீவுக்குஇரண்டுமாக மொத்தமே ஐந்து தான்!
வடக்கே ஆக்லாந்து, வெலிங்டன், ஹாமில்டன். தெற்கே கிறைஸ்ட்சர்ச், டனேடின். இந்த நகரங்களின் நகராட்சிகள்,நம் இந்திய நாட்டின் மாநில அரசுகளின் சட்டசபைபோல இயங்குகின்றன!


மேயருக்கு, முதலமைச்சருக்குள்ள செல்வாக்கு இருக்கிறது.
ஒரு மேயர், சூப்பர் மார்கெட்டில் வந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு போவதை நம் நாட்டில் எங்காவதுபார்க்கும் வாய்ப்பு உண்டா? இங்கே மேயர்களை மட்டுமல்ல, பாராளுமன்ற அங்கத்தினர்கள், மந்திரிகள்,ஸ்போர்ட்ஸ் ஆட்கள் போன்ற எல்லோரையும் சாதாரணமாகவே கடை கண்ணிகளில் பார்க்கலாம்.நம் ஊரில் உள்ளதுபோல 'பரிவாரங்களுடன்'(வட்டம்,சதுரம்னு) இருக்க மாட்டார்கள்!
முக்கால்வாசி நகராட்சிகளில் பெண்கள்தான் 'மேயர்'பதவி வகிக்கின்றார்கள். பெண்களுக்கு நல்ல நிர்வாகத்திறமைஉண்டு என்பதை நிரூபிக்கப் பிறந்தவர்களோ? குட்டிக் குட்டி ஊர்களுக்கும் (நம்ம பஞ்சாயத்துகள்) கூட மேயர் இருக்கிறார்கள்.


அடுத்த மாதம் தேர்தல் வரப்போகிறது. இந்த முறை மும்முனைப் போட்டி. தற்போதைய ஆண் மேயரும், சென்றமுறைஇருந்த பெண் மேயரும், கூடவே ஒரு வியாபாரியும் நிற்கிறார்கள். இன்று,ஒரே நேரத்தில் மூவரும் தொலைகாட்சியில் தோன்றிஅவரவர் கருத்துக்களைச் சொன்னார்கள். இதில் முதல் இரண்டுபேருக்கும் அரசியல் அனுபவம் உள்ளது.


இருவரும்பார்லிமெண்டு உறுப்பினர்களாக இருந்தனர். இப்போதுள்ள ஆண் மேயர் காவல்துறை மந்திரியாக இருந்தவர்.


நான் இங்கே வந்த புதிதில், இப்படி யாரையாவது பார்த்தால், 'எங்கோ பார்த்த முகமாக உள்ளதே' என்றுயோசிப்பேன். பிறகுதான் ஞாபகம் வரும் இன்னார் என்று. அவர்கள் முகங்கள்தான் அடிக்கடி தொலைக்காட்சியில்வருகின்றனவே!


தேர்தல் என்றால் விளம்பரங்கள் இல்லாமலா? அதற்காக நம் வீட்டின் காம்பவுண்டு சுவர்களில் எல்லாம் எழுதிவிட மாட்டார்கள்.அந்த விளம்பரங்களை, ஒரு 'பாலிப்ரொப்லீன்' அட்டையில் அச்சடித்து, அதைக் கொண்டுவந்து, வீட்டு உரிமையாளர்களிடம்காட்டி, அவர்கள் அனுமதி பெற்ற பின்பு, ஆணி அடித்துச் சுற்று சுவரையோ, '·பென்ஸ்'ஸையோ பாழாக்காமல்,ஸ்க்ரூ ஆணியைச்செலுத்தி மாட்டுவார்கள். தேர்தல் முடிந்தவுடன், அவர்கள் அதைக் கழற்றிக் கொண்டு போவார்கள். இதையெல்லாம், அந்தவேட்பாளரே, தனியாக வந்து செய்துவிட்டுப் போவார்! இந்த 'ஸ்டைல்'கூட இந்த வருடம் தான் ஆரம்பித்துள்ளது. (கூடுதல் இந்தியர்கள் வந்துவிட்டதால் இருக்குமோ?) முன்பு இது போல விளம்பரங்கள் இல்லவே இல்லை. நாளிதழில் மட்டுமேவிளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன்ன. இந்தப் பெரிய நகரங்களைத் தவிர சின்னச் சின்ன நகரங்களும் பல உள்ளன. இனி ஒவ்வொரு முக்கிய நகரங்களைப்பார்ப்போம்.
ஆக்லாந்து நகரின் ஜனத்தொகை ஏறக்குறைய 14 லட்சம். இதுதான் மிகவும் கூடுதலான ஜனங்களைக்கொண்டது. அணைந்து, குளிர்ந்து போன எரிமலைகளுக்கு நடுவே உருவாக்கிய நகரம் இது. சில இடங்களில் எரிமலையில்உள்ள நடுப்பகுதியைக் காணமுடியும். பெரிய 'க்ரேட்டர்' உள்ளது. நாம் அதில் இறங்கிப்போகலாம்!


வசதிகளும், வேலை வாய்ப்புகளும் அதிகமுள்ளது. இங்கே பன்னாட்டு விமானதளம் உள்ளது.மிகவும்பரந்து விரிந்த நகரம். மக்கள்தொகை போலவே வண்டி, வாகனங்களும் அதிகம் இங்கே. காலையிலும்மாலையிலும் போக்குவரத்தின் காரணம் அடிக்கடி'ட்ரா·பிக் ஜாம்' ஆகிவிடும் இங்கே. ஆனால் ஜனங்களின் வசதிக்காக ரயில் வசதிகளும் உண்டு. 'சிட்னி'யில் உள்ள பாலத்தைப் போலவே இங்கும் ஒரு பாலம் கடலின்குறுக்காகக் கட்டி இருக்கிறார்கள்.


'ஸ்கை சிடி' என்ற சூதாட்டக்களம் 'காஸினோ'வில் உள்ள கோபுரம்தான், பூமத்திய ரேகைக்குத் தெற்கேயுள்ளமிகவும் உயரமான கோபுரம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கே பார்வையாளர்கள் மேலே ஏறிச் சென்று பார்வையிடலாம்.அங்கே ஒரு இடத்தில் உள்ள கண்ணாடித் தரையில் நின்று பார்க்கும்போது, அதல பாதாளத்தில் கார்களும், சாலைகளும்இருப்பது கண்டு மிகவும் 'பயமாக' இருக்கும். ஐய்யோ, இந்தக் கண்ணாடி உடைந்தால்..... என்ற எண்ணம் வருவதைத்தடுக்க முடியாது!


அட்டகாசமான ஒரு மருத்துவமனை குழந்தைகளுக்காக உள்ளது. மருத்துவமனையா, குழந்தைகளுக்கானபூங்காவா என்ற எண்ணமே ஏற்படும்!
வீட்டு வாடகையும், வீட்டின் விலையுமே மிகவும் அதிகம் இங்கே. ஆனால் வேலை வாய்ப்பு இருக்கும்காரணத்தினாலும், சீதோஷ்ண நிலை (அவ்வளவாகக் குளிர் கிடையாது, ஆனால் மழை அடிக்கடி பெய்யும்)காரணத்தினாலும் இந்தியாவிலிருந்து வரும் நம் ஆட்கள் இங்கே குடியேறுவதை அதிகம் விரும்புகின்றனர்.


இந்துக் கோயில்களும் இங்கே இருக்கின்றன. இதுவரை கோயில்களின் எண்ணீக்கை ஏழாகிவிட்டன.இவற்றில் இரண்டு கோயில்கள் 'இஸ்கான் ஹரே கிருஷ்ணா'வைச் சேர்ந்தவை. நான்கு கோயில்கள் குஜராத்திகளால் கட்டப்பட்டவை. வெளிப்புறம் வேறு வேறு அமைப்புகளாகக்காணப்பட்டாலும், உள்ளே விக்கிரக அமைப்புகள் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும்.கிருஷ்ணர், ராதை, சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமான், சிம்ம வாகனத்தில் காளி என்று எல்லாமேபளிங்குக் கற்களினால் ஆன சிலைகள்.



இப்போது புதிதாக ஒரு 'முருகன்' கோயில் வந்துள்ளது. இது நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கற்சிலைஅமைப்பில் உள்ளது. இங்கே பிள்ளையார், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கற்சிலைகளும் உள்ளன.முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இங்கே மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுளர்களுக்குஉற்சவமூர்த்திகளும் இருக்கின்றனர். அங்கே சமீபத்தில் 'தைப்பூசம் திருவிழா' மிக நல்ல முறையில் 'காவடி'வழிபாடுகளுடன் சம்பிரதாயமுறையில் நடந்தது.


இந்தக் கோயிலிலே இருக்கும் 'ஹாலில்' இசை, நடன வகுப்புக்களும், தமிழ்ப்பாடம் கற்பிக்கும் பள்ளியும்இருப்பது இன்னும் விசேஷம்!


இந்த நகரில் ஏராளமான 'சமோவாத் தீவைச்'சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். நியூஸிலாந்து அரசுக்கும், 'சமோவா'அரசுக்கும் உள்ள உடன்பாடு காரணம் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது.இன்று தொலைக்காட்சியில் கிடைத்தத் தகவலின்படி நாட்டின் மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 15 சதமானம் இருக்கிறார்கள்!
·பிஜித்தீவிலிருந்து வந்த இந்தியர்களும் நிறைந்த அளவில் இங்கே இருக்கின்றார்கள். தடுக்கி விழுந்தால் அது மற்றொருஇந்தியர் மேலாகவே இருக்கும் என்னும்படி,நகரின் சில பகுதிகளில் நம்ம ஆட்களைக் காணலாம்!


ஆக்லாந்தில் 'ஒட்டீரா' என்னும் இடத்தில் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள் நல்ல மலிவு விலையில் கிடைக்கிறது! இந்தியப் பொருட்கள் வீற்கும் கடைகளும் ஏராளம்! 22 காரட் தங்க ஆபரணங்களும் கிடைக்கின்றன என்றால் பாருங்களேன்!வெள்ளைக்காரர்கள் உபயோகிப்பது வெறும் 9 காரட் தங்கம்தான்! இந்த நாட்டிலெ தங்கம் கூட 50 சதமானம் தள்ளுபடிஎன்று விற்கிறார்கள். நம்புவீர்களா? ஆனால் இத்தனை கிராம், இவ்வளவு விலை என்று இருக்காது. எல்லாமே ஒரு நகைக்குஇந்த விலை என்றே இருக்கும்.
தமிழ்ச் சங்கம், கேரளா சமாஜம், ஆந்திரா க்ளப் என்று மொழிக்கொரு சங்கங்களும், எல்லாவற்றுக்கும் பொதுவாக இந்தியன்அசோசியேஷனும் நன்றாகவே நடந்துவருகின்றன. இது ஒரு 'குடியேறியவர்களின் நாடு' என்பதால் இங்கே ஏகப்பட்டசங்கங்கள் இருக்கின்றன. எதைச் சொல்வது எதை விடுவது என்று நினைத்து, நம் இந்தியர்களுக்கு தேவைப்படும்விஷயங்களையே சொல்கின்றேன்.


அடுத்து வருவது வெல்லிங்டன் நகரம். இதுதான் இந்நாட்டின் தலை நகர். தலை நகரங்களுக்கேயுள்ள தனிப்பட்ட வசதிகளும்இங்கே தாராளம்! ஆனால் இந்த நகரம் அமைந்துள்ளது ஒரு '·பால்ட் லைன்' மேலே!


பூமியின் அடியிலுள்ள பகுதிகள் பல ஒன்றுக்கொன்று நெருங்கிவந்து ஒட்டிகொண்டிருப்பது போல அமைந்துள்ளது என்று சொல்கிறார்கள் அல்லவா. அந்த மாதிரி இரண்டு பகுதிகள் ஒட்டினாற்போல இருக்கும் இடத்தையே '·பால்ட் லைன்'என்று சொல்கின்றனர். நில நடுக்கம் ஏற்படும்போது இந்தப் பகுதியில்தான் சேதம் அதிகம் இருக்குமாம். இதெல்லாம்தற்போதையக் கண்டுபிடிப்பல்லவா? இந்த விவரங்கள் ஒன்றும் அறியப்படாதிருந்த காலங்களில் ஏற்பட்ட நகரம்தான் வெல்லிங்டன். இந்த நாட்டின் சரித்திரமே 164 வருடங்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இங்கேயும் மக்கள் தொகை சுமாராக நாலேகால் லட்சம் உள்ளது.இந்தத் தொகை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார எல்லைக்கும் சேர்ந்தது.இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
நம் ஊரில் ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக சில பொருட்கள் இருக்குமல்லவா, 'காஞ்சீபுரம் புடவை, திருநெல்வெலி அல்வா, மணப்பாறைமுறுக்கு' என்று, அதெல்லாம் இங்கெ இல்லை. வடக்குமுதல் தெற்குவரை ஒரே சாமான்கள்.


இங்குள்ள எல்லா ஊர்களிலும் 'செயின் ஸ்டோர்' என்ற அமைப்பின்படி எல்லாக் கடைகளும் உள்ளது! உதாரணமாக '·பார்மர்ஸ்'என்ற நிறுவனம், நாடு முழுவதும் கிளைகளை வைத்துள்ளது. அவர்கள் விற்கும் பொருள்கள் எல்லாம் எல்லா ஊரிலும் அதே விலைதான்!(நமக்கும் நல்லதுதான். இங்கேயே வேறு ஊருக்குப் போகணுமென்றால், ஒண்ணும் சுமந்துகொண்டு போக வேண்டாம். அங்கங்கேவாங்கிக் கொள்ளலாம்தானே!)


இங்கும் நிறைய இந்திய மளிகை சாமான்கள் விற்கும் கடைகளும், நம் நாட்டு நகை, ஆடைகள் வீற்கும் கடைகளும் உள்ளன. இந்த ஊர்சாலைகள் எல்லாம் மிகுந்த ஏற்றம் இறக்கம் உள்ளதாகையால், 'ட்ராம்'களும் பேருந்துபோல் செயல்படுகின்றன. பேருந்துகளைப் பற்றிப்பேச்சு வந்துள்ளதால், இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்.



இந்த நாட்டிலே பேருந்துகளில் ஓட்டுனர் மட்டுமே இருப்பார். நடத்துனர் கிடையாது! ஓட்டுனரிடமே நீங்கள் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டுஉள்ளே போய் உட்காரவேண்டும். நீங்கள் குழந்தையுடன் பயணம் செய்பவராக இருந்து, குழந்தையின்'ஸ்ட்ரோலர்'( தள்ளுவண்டி)வைத்திருந்தால், ஓட்டுனரே இறங்கிவந்து அந்த வண்டியை, பேருந்தின் முன்புறம் மாட்டியுள்ள கொக்கியில் தொங்க விடுவார்.நீங்கள்இறங்கும் இடம் வந்ததும், அவரே வந்து அதை எடுத்து நடைபாதையில் உங்கள் அருகே வைத்தும் விடுவார்!
மேலும், சக்கர நாற்காலி உபயோகிப்பவர்களுக்காக, அவர்கள் அப்படியே ஏறுவதற்கு வசதியாக, நாம் பேருந்தில் ஏறுமிடத்தில் உள்ளபடிகள் அப்படியே கீழே சரிந்து, தரை வரை வந்து நிற்கும் வசதிகளும் உண்டு. அதற்கான விசையும் ஓட்டுனர் பொறுப்புதான்!பேருந்துகளில் பயணிக்கும்போது, நிறுத்தம் வந்தவுடன் இறங்கும்/ஏறும் வழிக்குள்ள கதவுகளைத் திறந்து மூடவும் பயன்படும் விசையும்ஓட்டுனரின் பொறுப்புதான். வண்டி ஓடும்போது எல்லாக் கதவுகளும் மூடப்பட்டே இருக்கும். வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கும்! இறங்கும் பயணிகள் ஓட்டுனருக்கு நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


பல்வேறு கலைகளின் தலைநகர் என்று வர்ணிக்கபடும் வெல்லிங்டனில் நம் இந்துக் கோவில்கள் இரண்டு உள்ளன.


பாராளுமன்றக் கட்டிடத்தின் பெயர் 'தேன்கூடு- பீஹைவ்' பொருத்தமான பெயர்தான். இந்த நாட்டுப் பிரதமர் பெண்ணல்லவா?ராணித் தேனீ அரசாட்சி செய்கின்றது. பள்ளி மாணவர்கள்,அடிக்கடி விஜயம் செய்வது பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடத்தான்!வருங்காலம் அவர்கள் கையில் அல்லவா?


'முதல்வன்' என்று ஒரு படம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இதேபோல் மாநகராட்சிகளில், பள்ளி மாணவர்களை ஒரு நாள்'மேயராக' இருக்கச் செய்து அவர்களின் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது!
வடக்குத்தீவில் பெரிய ஊர்களான ஆக்லாந்து, வெல்லிங்டனைத்தவிர ' பார்மஸ்டன் நார்த், கிஸ்பர்ன் என்று நடுத்தரஅளவிலுள்ள ஊர்களும், இன்னும் பல சிற்றூர்களும், கிராமங்களும் உள்ளன.


நம் நாட்டைபோல், இங்கே தனித்தனிக் கல்லூரிகள் இல்லை. ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் ஒன்றாக ஐந்து யுனிவர்சிடிகள் உள்ளன.இங்கேயும் 'கல்வி'ஒரு வியாபாரமாகிவிட்டது. வேறு நாடுகளில் இருந்து இங்கே படிப்பதற்காக வரும் மாணவர்களிடம் வசூலிக்கும்'ட்யூஷன் தொகை' மிகவும் அதிகம். ஆனாலும் மாணவர்கள் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களுக்குஅரசாங்கமே கல்வி கற்கக் 'கடன்'தருகிறது! படிப்பு முடியும்வரை வட்டியில்லாத கடன்!


மற்ற வசதிகள், உலகின் மற்ற பெரிய நகரங்களிலி இருப்பது போலவே! வெல்லிங்டன் நகரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதுஇன்னும் ஒன்று பாக்கி உள்ளது. அது என்ன? காற்று. எப்போதும் காற்று கொஞ்சம் பலமாகவே வீசுவதால், புடவை கட்டும் நாம்மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! என்ன புரிந்ததா?



'ஹாமில்டன்' நடுத்தர அளவில் உள்ள நகரம். இங்குள்ள சர்வகலாசாலையின் பெயர் 'வைக்காட்டோ யுனிவர்சிடி' இதிலுள்ள 'வைக்காட்டோ' என்பது இந்த ஊரில் ஓடும் ஆற்றின் பெயர். மாணவர்கள் கூட்டம் மிகுந்த நகரம். நம்ம 'பஞ்சாப்'மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் வழிபட 'குருத்துவாரா என்னும் சீக்கியக் கோயில்'கூட இங்குள்ளது!
பொதுவாகவே வடக்குத் தீவில் வேலைவாய்ப்புகள் அதிகம். கூட்டமும் அதிகம். காலநிலையும் பரவாயில்லை. நம் நாட்டில் முன்பு எப்போதோ 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று அரசியல் கட்சி ஒன்று சொல்லிக் கொண்டிருந்தது, இப்போது ஞாபகம் வந்துதொலைக்கின்றது!


அடுத்த வாரம் தெற்கே உள்ள தீவைப் பற்றிக் கூறுவேன்.


நன்றி: சங்கமம் 2004

6 comments:

said...

மாவட்டம்,வட்டம்,சதுரம்,உள்குத்து,வெளிக்குத்து இல்லாத அரசியல் ஒரு அரசியலா?
சீ இந்தப் பழம் புளிக்கும் :-)))

said...

கல்வெட்டு,

ஊழல் இல்லாத நாடுகளிலே ரெண்டாவது இடம் இதுக்குன்னு கேள்வி.
முதல் இடம் ஸ்விஸ்ன்னு சொன்னாங்க.

said...

// புதிதில், இப்படி யாரையாவது பார்த்தால், 'எங்கோ பார்த்த முகமாக உள்ளதே' என்றுயோசிப்பேன்//

எனக்குத் தொழிலே இதான். புதுசா பாத்த ஆள், தெரிஞ்சவங்கள்ல யாரை மாதிரி இருக்கிறாங்க என்று ஒரு "சுட்டி" குடுக்கும்வரை பாய் விறாண்டாத குறை!! ;O)

மாநாட்டு வேலையிலே பிஸியா?

said...

ஷ்ரேயா,
மாநாட்டுக்கு சமையல் நடக்குது.

said...

ஆகா.. வாசிச்சதுமே பசிக்குதே (இங்கே மத்தியானச் சாப்பாட்டு நேரம் என்பதைச் சொல்ல மாட்டேன்!).. ;O)

ம்ம்..மாநாடு எத்தினை மணிக்கு தொடங்குது?

துளசிம்மா, உங்க தளம் திறக்க முடியல்ல என்று கலையும் உங்கட ஆஸ்தான் பின்னூட்ட எண்ணிக்கைக் கவனிப்பாளரும் சொல்றாங்க. ரம்யாக்கா சொன்ன ஞாபகம்.. ஏனென்று தெரியுமா? வேற யாராவது சொல்லியிருக்கிறாங்களா?

said...

ஷ்ரேயா,

ஏன் திறக்கவரலைன்னு தெரியலையேம்மா( இதையும் நாயகன் ஸ்டைலில் வாசிக்கவும்:-)

மாநாடு 6 மணிக்கு ஆ'ரம்பம்'