நம்ம ராமநாதனோட பதிவுலே இருக்கற பின்னூட்டங்களைப் படிச்சதும் அதிலேயும் குறிப்பா கணேஷ்( கோகணேஷ்)
எழுதுனதைப் படிச்சவுடனே எனக்கும் ஒரு டாக்டரைப் பத்தி எழுதணுமுன்னு தோணுச்சு.
எல்லாம் கொசுவத்தி எடுத்துக் கொளுத்தி வச்சுகுங்க. ச்சின்னது போதும்!
அப்ப நாங்க பூனாவுலே இருந்தோம். நாங்க இருந்தது ஒரு பஜார். (அதான் சிலப்ப பஜாரித்தனம் வந்துருதோ?
போட்டும்) அந்தக் கடைத்தெருவிலேயே ஒரு க்ளினிக் இருந்தது. பத்தடிக்கு எட்டடின்னு ஒரு சின்ன இடம்தான்.
அதையே ரெண்டாத்தடுத்து வச்சிருந்தாங்க. முன்னாலே நீளமா ரெண்டு பெஞ்சு எதிரும் புதிருமா. பாதிபெஞ்சு
வெளியே ஃப்ளாட்பாரத்திலே நீட்டிக்கிட்டு இருக்கும். உள்ளே ஒரு மேஜை& நாற்காலி.அடுத்து திரை போட்டு மறைச்ச
இடத்துலே ஒரு எக்ஸாமினிங் டேபிள். பெருசாக் கற்பனை எல்லாம் வேணாம், அதுவும் பெஞ்சேதான். ஆனாக்
கொஞ்சம் அகலம் ஜாஸ்தி. காலையிலே 10 முதல் 2 வரை.அப்புறம் மாலையிலே 6 முதல் 9/10வரை. எப்படியும்
ஒரு நாளைக்கு நூறு, நூத்தம்பது ஆளுங்க வந்துருவாங்க.
காலையிலே ஒம்போது மணிக்கே நோயாளிங்க கூட்டம் திபுதிபுன்னு வந்துரும். அங்கே வேலை செய்யற பையன், கடையை, ச்சீச்சீ
க்ளினிக்கைத் திறந்து வச்சு, வந்தவங்களுக்கெல்லாம் டோக்கன் கொடுத்துருவான். ச்சின்னப்பையந்தான். ஒரு 13
இல்லேன்னா 14 வயசு இருக்கும். டீன் ஏஜுக்கே உரிய சுபாவங்களும், பழக்கங்களும் அவன்கிட்டே குறைவில்லாமல்
இருந்துச்சு. அப்பப்பத் திரையத் திறந்துகிட்டு உள்ளே போய் அங்கே 'வாஷ் பேசின்' இருக்கற சுவத்துலே
மாட்டியிருக்கற கண்ணாடியிலே 'அழகு' செஞ்சுக்கிட்டு வருவான். சீப்பும் கையுமாத்தான் தரிசனம்.
டாக்டர் பேரு 'அஷோக் குலிவால்'.ச்சின்ன வயசுதான். ஒரு பஜாஜ் ஸ்கூட்டர்லே வருவார் பத்துமணி வாக்கிலே. அவரு தனியாக்
கம்பவுண்டரு வச்சுக்கலே. நம்பர் பிரகாரம் பேஷண்டைப் பாப்பார். அந்தப் பையனும் நம்பர்ங்களைப் பார்த்து
மராத்திலே பேசிக்கிட்டே நம்பருங்களைச் சத்தமாக் கூப்பிட்டுகிட்டே வரிசையா அனுப்பி வைப்பான்.
எல்லாம் அக்கம்பக்கத்துலே இருக்கற ச்சின்ன காவ்( கிராமம்)லே இருந்து வர்றவங்க.
அதனாலே ஹிந்தி தெரியாது. மராத்திதான் பேசுவாங்க. நம்பர் சீட்டை வாங்கி இடுப்புலே சொருகிக்கிட்டு
அக்கம்பக்கம் இருக்கற கடைகளுக்கு உலாப் போறதென்ன, டீக்கடையிலே போய் டீ வாங்கி, சாஸர்லே ஊத்தி
ஆறவச்சு ஆத்திஆத்திக் குடிக்கிறதென்ன, புள்ளைங்களுக்கு வெள்ளாட்டுக் காட்டறேன்னு ரோட்டோரக்கடைகளுக்குக்
கொண்டு போறதென்ன, ஒண்ணும் இல்லேன்னா இருக்கவே இருக்கு 'தம்பாக்கு'!
இத்தினிபுகையிலையையும், கொஞ்சம் சுண்ணாம்பையும் எடுத்து( எல்லாம் இடுப்புலே ஒரு பையிலே அடக்கம்.
குழலாட்டம் ஒரு ச்சின்னத் தகரடப்பியிலே சுண்ணாம்பு, ஒரு காகிதப்பொட்டலத்துலே புகையிலை) இடது
உள்ளங்கையிலே வச்சு, வலது ஆள்காட்டி விரலாலே தேய்தேய்ன்னு உருட்டித் தேய்ப்பாங்க.அப்புறம் அதைச்
சுருட்டி அப்படியே எடுத்து,வாயை ஆன்னு தொறந்து கைக்கு எட்டுறவரை உள்ளே கொண்டுபோய் கடவாய்ப்
பல்லுக்குப் பக்கத்திலே கன்னத்துலே அதுக்கிட்டாங்கன்னா அவ்வளோதான். புளிச் புளிச்சுன்னு எச்சி துப்பிக்கிட்டே
ரோடோரமா குத்துக்கால் போட்டு உக்காந்துக்கிட்டு 'கப்பா மாரி'க்கிட்டு இருப்பாங்க. பூனாக் குளுருலே இளவெயிலுக்கு
இதமா இருக்கும்.
ஜென்மமே சாபல்யமானதுபோல முகத்துலே ஒரு நிம்மதி, புன்னகை எல்லாம் குடிவந்துரும்! ஒரு நாளாவது சரியான
நம்பர் உள்ளே போனதா இருக்காது. பையன் கத்தக் கத்த வேற யாராவது கிட்டேப் போய் நிப்பாங்க. கையைத்திறந்து
நம்பரைக் காட்டுனா அதுக்கும், இவன் கூப்புட்டதுக்கும் சம்பந்தமே இருக்காது. வேற வழி இல்லாம அவுங்களை உள்ளெ
அனுப்பிருவான். இதுதான் அங்கெ வாலாயம்.
நோயாளியை 'ஸ்டெத்'வச்சுப் பார்த்துட்டு, தண்ணிமருந்தைக் (கலக்கிவச்சிருக்கறது)குப்பியிலே ஊத்திக் கொடுத்துட்டு
ரெண்டு ரூபா வாங்கிக்குவார் டாக்டர். ச்சும்மாச் சொல்லக்கூடாது, கைராசி! நம்மூர்லே வெளியே வர்ரதுக்கு முன்னாலே
என்ன சாப்புடணுமுன்னு டாக்டரைக் கேக்கற வழக்கம் இருக்குல்லே, அதை மட்டும் மறக்காம ஒவ்வொருத்தரும்
கேப்பாங்க. அவரும் சளைக்காம'கிச்சடி'ன்னு சொல்வார். சகலருக்கும் கிச்சடிதான். பாரபட்சமே கிடையாது இதுலெல்லாம்!
ஒரு ஜலதோஷம், காய்ச்சல்ன்னா நாங்களும் அங்கேதான் போவோம். வீட்டுக்கு எதிர்வரிசை. இதைவிட 'ஹேண்டி'யா
வேற என்ன இருக்கு? நமக்கோ அங்கே ஸ்பெஷல் மரியாதை. மராத்தி தெரியாததாலே இங்கிலிப்பீஸ்லேதான்
பேசறது. அப்ப ஹிந்தியும் தகராறாச்சே. டாக்டர் வந்தாச்சான்னு கேட்டாவே போதும்,பையன் ஒரு நடுக்கத்தோட நம்மளை
உள்ளெ போகச் சொல்லிருவான்.
டாக்டர் நம்மைச் செக் பண்ணிட்டு, மருந்து மாத்திரை எழுதிக் கொடுப்பாரு. ரெண்டுகடை தள்ளி இருக்கு மெடிகல் ஸ்டோர்ஸ்.
நமக்கு ஒருநாளும் தண்ணி மருந்து பாக்கியம் இல்லை. எங்களுக்குள்ளெ நடக்குற ' இங்கிலிப்பீஸ் உரையாடல்'
திரைக்கு அந்தப் பக்கம் கூடி இருக்குற ஜனங்களால் ஆவலாகக் கவனிக்கப்படும். வெளியே வந்தவுடனே சிலர்
'சலாம் மேம்சாப்' சொல்லுவாங்க. ரொம்ப இன்னொசெண்டான மக்கள். நமக்கும் அதே ரெண்டு ரூபாதான். எப்பவாவது
ஊசி போட்டா அஞ்சு ரூபா. ஒரே தடவையிலே சரியாவும் போயிரும்!
நமக்குத்தான் கால்லே சக்கரமாச்சே. அந்த ஊரை விட்டுப் போயாச்சு. மூணுவருஷம் கழிச்சு, ஒரு ஹாலிடேக்கு
அங்கே போயிருந்தோம். அப்ப நாம முந்திக் குடியிருந்த இடத்துலெ இருக்குற பழைய நண்பர்களைச் சந்திக்கப்
போயிருந்தொம்.( எனக்குத்தான் எங்கே போனாலும் ச்சீக்கிரம் ஒரு நட்புவட்டம் கிடைச்சிருமே!)
அப்ப பேச்சுவாக்குலே, அஷோக் டாக்டர் எப்படி இருக்கார்? கல்யாணம் ஆயிருச்சா? க்ளினிக் இன்னும் நடக்குதா?ன்னு
கேட்டேன்.
அப்ப திடுக்கிடற மாதிரி சொல்றாங்க, 'அவர் இறந்து போயிட்டார்'னு. அய்யய்யோ என்னாச்சுன்னு கேட்டதுக்கு,
ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சாம். ஒரு நாளு பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போறப்ப எதிர்லே வந்த லாரி மோதிருச்சாம்.
ஆள் ஸ்பாட்லேயே அவுட்டாம். அய்யோ....
அப்புறம் இன்னொரு திடுக்.
அவர் 'டாக்டரே' இல்லையாம். போலி? உண்மைக்குமே அவர் கம்பவுண்டராம்! அடப்பாவமே.
Wednesday, September 14, 2005
டாக்டர் டாக்டர்
Posted by துளசி கோபால் at 9/14/2005 08:36:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//சுருட்டி அப்படியே எடுத்து,வாயை ஆன்னு தொறந்து கைக்கு எட்டுறவரை உள்ளே கொண்டுபோய் கடவாய்ப்
பல்லுக்குப் பக்கத்திலே கன்னத்துலே அதுக்கிட்டாங்கன்னா அவ்வளோதான்//
தம்பாக்கு விஷயத்துல அக்கா PhD போல தெரியது,அனுபவம் உன்டோ?
//'அவர் இறந்து போயிட்டார்'னு. அய்யய்யோ என்னாச்சுன்னு கேட்டதுக்க//
பின்ன எமன் வேலையை இவரு பார்த்தா அவருக்கு கோவம் வராதா?
//அவர் 'டாக்டரே' இல்லையாம். போலி? உண்மைக்குமே அவர் கம்பவுண்டராம்! அடப்பாவமே.//
எங்க ஊர்லேயும் இது மாதிரிABCD(A to Z ல்ல என்ன எழுத்து உன்டோ அதுல பாதி அவுங்க பெயர்க்கு பின்னால் இருக்கும்) நிறைய டாக்டர் இருக்கதான் செய்றாங்க என்ன செய்ய திருடனா பார்த்து திருந்தா விட்டால்.........
கார்த்திக்,
//தம்பாக்கு விஷயத்துல அக்கா PhD போல தெரியது,அனுபவம் உன்டோ?//
ஒளிச்சுமறைச்சா செய்றாங்க? எல்லாம் நம்ம கண்ணு முன்னாலேதானெ நடக்குது.
//திருடனா பார்த்து திருந்தா விட்டால்.........//
போலி டாக்டரை ஒழிக்க முடியாதுன்னுதானே சொல்லவர்றீங்க:-)))))))
நல்ல கதை. எப்படி எந்த உண்மை நிகழ்ச்சியையும் இப்படி அழகா எழதவருதோ உங்களுக்கு.
போலி டாக்டரை ஒழிக்க முடியாதுன்னுதானே சொல்லவர்றீங்க:-)))))))
அதே அதே :-)))))))
அலுவலகங்களில மாதிரி பணியுயர்வு (தானா கொடுத்துக்கொண்டதுதான்) போலருக்கு!
இப்ப போய் பார்த்தா அந்த சின்னப்பையன் சத்திர சிகிச்சை செய்திட்டிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல ;O)
வெங்கட்ரமணி,
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கதை
கேக்கற மஹா ஜனங்கள் எல்லாம் என்னைச் சுத்தியிருக்காங்கன்னு கற்பனை செஞ்சுக்கிட்டாவே போதும்.
தன்னாலெ மனசுலெ வர்றதை( அதான் கொசுவர்த்தி புகைஞ்சுக்கிட்டு இருக்குல்லே) எழுதுனாப்போதும்.
வருகைக்கு நன்றி.
( எப்படி ஃபார்மலாச் சொல்றேன் பாருங்க)
//இப்ப போய் பார்த்தா அந்த சின்னப்பையன் சத்திர சிகிச்சை செய்திட்டிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல //
ஷ்ரேயா,
ஹாஹாஹாஹாஹாஹா......தூள் கமெண்ட்
எதுலேருந்து/எப்பலேர்ந்து ஞாபகங்களுக்கு கொசுவர்த்திச் சுருளை சொல்றதுன்னு வந்துது?
ஷ்ரேயா,
தெனாலி பாக்கலையா? நினைவுச் சுழல்? ஃப்ளாஷ்பேக் போறதுக்கு முன்னாலே
சுருள்சுருளா சுத்துமே. அதான் 'கொசுவர்த்தி ( டார்ட்டாய்ஸ்) சுருள்'
அதான் அப்படிச் சொல்லிச் சொல்லி இப்ப கொசுவர்த்தியா வந்து நின்னுருக்கு.
பயனுள்ள தகவல். நன்றி துளசி. ;O)
ஷ்ரேயா,
????????? எது பயனுள்ளது?
நான் கேட்டதுக்கு விளக்கம் தந்தீங்களே..அதான்! :O)
எழுத்துப் பிழை அதிகமானதால் 'அழிச்சி கிழிச்சி' புதுசா...
போற போக்கில எனக்கு 'வழிமொழியிற தருமி'ன்னு பட்டம் வந்துடுமோன்னு பயமாயிருக்கு. ஏன்னா நான் சொல்ல நினைக்கிறதை யாராவது வந்து முந்தியே சொல்லிட்டுப் போயிருராங்க. இப்பகூட, பாருங்க, நான் வெங்கட்ரமணி சொன்னதை -"நல்ல கதை. எப்படி எந்த உண்மை நிகழ்ச்சியையும் இப்படி அழகா எழதவருதோ உங்களுக்கு." - வழிமொழிகிறேன்.
அதுசரி, ஒரு லிஸ்ட் கொடுத்திடுங்களேன் எங்கெங்கே இருந்தீங்க. கால்படாத இடம் ஏதுங்க?
ஆனாலும் பிறந்தது கரூர் அப்டீங்கிறிங்க. ஆனா வத்தலகுண்டு நம்ம ஊருங்கிறீங்க. ??
Posted to டாக்டர் டாக்டர்
Delete Comment Cancel
ஷ்ரேயா பின்னூட்டங்களிலிருந்து சுட்டது:
"Ramya Nageswaran said...
ஷ்ரேயா.. துளசிதளம் தவிர மிச்ச விஷயங்கள் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கா?? :-)))"
இப்படி full-time readers உங்களுக்கு இருக்காங்க!ம்ம்ம்..ஹூம்ம்.. பெருமூச்சுதான் வருது பொறாமையில. காது வழியே பீச்சி அடிக்கிற புகை அங்க வரை வருமே? வருதா?
ஏங்க தருமி,
நாமெல்லாம் மரமா? நட்ட இடத்துலேயே இருக்கறதுக்கு? ஒரு ஊர்லே,குழந்தைன்னு பிறந்துட்டா,
மேலே போறவரைக்கும்அங்கேயே குப்பை கொட்டிக்கிட்டு இருக்க முடியுமா?
நாடோடிங்க நாங்க. நிஜமாவே நாடு விட்டு நாடு ஓடுனவுங்க:-)
இன்னும் கால்படாத இடம் நிறைய இருக்குங்களே! பார்க்கலாம்.
அப்புறம் நீங்க 'அழிச்ச கமெண்ட்'ம் எனக்கு வந்துருச்சு. இமெயில் லிங்கு கொடுத்துருக்குல்லே,அங்கே!
எதுக்கு சிரமம்?
எனக்கு ஷ்ரேயா பக்கத்து வூட்டுக்கரங்களாச்சே.
அதாலே அப்படி ஒரு அபிமானம்.
ரெண்டுமணிநேர வித்தியாசம்தான்!
//அவர் 'டாக்டரே' இல்லையாம். போலி? உண்மைக்குமே அவர் கம்பவுண்டராம்! அடப்பாவமே.//
துளசி !! ராம்ஸ் பதிவப் படிச்சிட்டு தான் இப்படி ஒரு பதிவு போடணுமா?
அவர் பாவம் deject ஆயிரப் போறாரு....
அது சரி
// அதனால தானோ என்னவோ நிறைய பேருக்கு கடவுளாகவும் நிறைய பேருக்கு ஆண்டியாகவும் தெரியறார்.:-) //
அஷோக் டாக்டர் உங்களுக்கு இனிமே கடவுளாகத்தான் தெரிவாருன்னு சொல்லுங்க.....:-(
கொஞ்சம் சீரியஸ்
"முற்பகல் செய்யின்", "every action has equal and opposite reaction" அப்படீன்னு நிறைய இருக்கு சொல்றதுக்கு.
தப்பு செஞ்சா தண்டனை தான். ஆனா ஆண்டவன் கொடுக்கும் தண்டனைகளில் மரணம் ரொம்ப கசப்பானது.
உங்களுக்கு ஆதரவாளர்கள் அதிகமாகிக்கொண்டே வருவதாலும் பின்னூட்டங்கள் "மழை" யாகப் பொழிவதாலும் "பின்னூட்டப் புயல்" என்னும் பட்டத்தை வழங்கி கெளரவிக்கிறேன்.
துளசியக்கா
இத்தன ஊர்ல ஒரு நல்ல டாக்டரையே பாத்ததில்லியா? இப்படி எல்லாரும் பேசி வச்சுகிட்டு வரிசையா பதிவு, பின்னூட்டமெல்லாம் போட்டு எங்களையெல்லாம் வார்ரீங்க? :(
தாணு, எங்க இருக்கீங்க??? நீங்களும் நானும் சேர்ந்து ஒரு மருத்துவர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, அப்படி ஆரம்பிச்சா நம்மள திட்டறதுக்கு வேற மாதிரி கூட்டம் வரும். ;)
சரி, சீரியஸா.. இந்த மாதிரி போலி டாக்டர்களுக்கு நம்மூர்லே அளவே இல்லை. ஏதாவதொரு வாய்க்கு வந்த பேருடைய டிகிரி வாங்கிகிட்டு, எங்கனாச்சும் இந்தியாவின் ஒரு மூலையில குட்டி கிராமமா போய் செட்டிலாயாச்சுன்னா, இவங்கள கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா உங்க ஆளு தைரியமா பூனாவிலேயே பண்ணிருக்கார்.
ஒரு டிவி விடாம எல்லா டிவிலேயும் வேற நிறைய பேர் வந்து அவங்கவங்க சொந்த மூலிகை, இரசாயன மருந்து பத்தியெல்லாம் பிலிம் காட்றாங்க இப்பல்லாம்.
என்னென்ன டிகிரியெல்லாம் கிடைக்குதுங்கறதுக்கு ஒரு உதாரணம் இங்க பாருங்க. தெரபிக்கே ஸ்பெல்லிங் தப்பாப் போடற இவரு MD பட்டம் கொடுக்குறாரு (இல்ல இதுலயும் நேமாலஜி, நியுமராலஜியா?). இதயும் வாங்குறதுக்கும், வாங்கினவங்ககிட்ட ஏமாறறதுக்கும் நம்மூர்லே ஆளிருக்குறதுதான் கொடுமை,
துளசி,
நீங்க சொன்ன அதே விளக்கங்களுடந்தான் நிறைய உண்மையான டாக்டர்களின் க்ளினிக்கும் இருக்கிறது. அரசுவேலை, இல்லாட்டி நல்ல பசையுள்ள பெற்றோர் இருந்து பக்காவாக மருத்துவமனை- இவைகளெல்லாம் அமையப் பெறாமல் நீங்கள் சொன்ன மாதிரி க்ளினிக் நடத்துபவர்களும் அதிகம் காணப்படும் நாடு நம்முடையதுதான். நீங்கள் சொன்ன மாதிரி ஒன்று அல்லது இரண்டு விசிட்லேயே நோய் சரியாகிவிடும். எல்லா துறைகளைப் போல் survival problem மருத்துவத் துறையிலும் உள்ளது என்று நிறையப் பேருக்கு புரிவதில்லை.
வருகைதந்த மருத்துவர்களுக்கும், மருத்துவர் அல்லாதவர்களுக்கும் நன்றி.
கணேஷ்.
//ராம்ஸ் பதிவப் படிச்சிட்டு தான் இப்படி ஒரு பதிவு போடணுமா?
அவர் பாவம் deject ஆயிரப் போறாரு....//
அட தேவுடா, நான் உங்க 'டாக்டர் பழனி' யைப் படிச்சுட்டுல்லே பதிவு போட்டேன்!
//அஷோக் டாக்டர் உங்களுக்கு இனிமே கடவுளாகத்தான் தெரிவாருன்னு சொல்லுங்க//
மேலே போனவங்களை நாம சாமியாநினைச்சுக் கும்புடறது உண்டுதானே. அந்தக் கணக்குலே
அவரும் ஒரு கடவுளா ஆகியிருப்பாருதானே?
நமக்கு ஆயுசு கெட்டி. ஒண்ணும் ஆகலை:-)
இந்தப் பட்டமெல்லாம் வழங்கி கவுரவித்ததற்கு எவ்வளவு காசு கேக்கப் போறீங்க?
பாருங்க உங்களாலே தனித்தனியா பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதி எண்ணிக்கையை ஏத்தாம
அடக்கி வாசிக்கலாமுன்னு இப்ப இதுலேயே 'மருத்துவர்'களுக்குப் பதில் எழுதப்போறேன்.
ராமநாதன்,
//தாணு, எங்க இருக்கீங்க??? நீங்களும் நானும் சேர்ந்து ஒரு மருத்துவர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கணும்னு //
ஆமாம். பத்மாவை விட்டுட்டீங்க! இன்னும் நம்ம வலைப்பதிவாளர்களிலே இருக்குற வேற டாக்குட்டர்களையும்
சேர்த்துக்கலாம்தானே?
//பூனாவிலேயே பண்ணிருக்கார்//
இது 25 வருசத்துக்கு முந்திய நிகழ்ச்சி. ஆனானப்பட்ட சென்னையிலேயே நடக்கறப்ப பூனா எந்த மூலைக்கு?
தாணு,
ஆமாங்க. ரொம்ப எளிமையா க்ளினிக் வச்சு, குறைஞ்ச செலவுலே வைத்தியம் பாக்கற நல்ல மருத்துவர்களுக்கும்
நம்ம நாட்டுலே குறைச்சலே இல்லை.
அது பாருங்க, எக்கச்சக்கப் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கினவங்களுக்கு போட்டகாசை திருப்பி எடுக்கற நிர்ப்பந்தம்
வந்துருதில்லே. வியாபாரமாயிடுச்சுங்களே.
எங்க அம்மாவோட தாத்தா, அந்தக் காலத்துலேயே இலவசமாத்தான் வைத்தியம் பார்த்துவந்தாராம். ஏகப்பட்ட
சொத்து இருந்ததாலே இந்த வருமானம் வேணாமுன்னு இருந்தாராம்.
ஏதோ நீங்கெல்லாம் பார்த்து, மருத்துவத்தை சேவை மனப்பான்மையோடு செய்யறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
எல்லாம் நல்லா இருங்க.
Post a Comment