Friday, September 23, 2005

நியூஸிலாந்து. பகுதி 3

'பிரசவத்துக்கு இலவசம்'


இது என்ன ? ஆட்டோவுலே எழுதியிருக்குறதா? இல்லங்க. இங்கே நியூஸிலாந்து நாட்டில்தான் 'பிரசவத்துக்கு இலவசம்'.ஆஸ்பத்திரி, டாக்டர், இப்படி அப்படின்னு ஒரு செலவும் கிடையாது!!!ஏன் தெரியுமா? இங்கே ஜனத்தொகை ரொம்ப இல்லை. நாடு முழுவதும் இருக்கற ஜனங்களைக்கூட்டினாலே 40 லட்சத்துக்கு மேல இல்லை. ஆனா ஆடுங்க 480 லட்சம் இருக்கு. ஆளுக்கு 12 ஆடுகள்.அதனாலே அரசாங்கமே மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆதரிக்கின்றது. சிவப்பு முக்கோணம் எல்லாம் இல்லீங்கோய்....மேலே படிக்கறதுக்கு முன்னாலே ஒரு நிமிஷம். நேத்து பாயிண்ட்ஸ் பத்திப் போட்டிருந்ததுபோனவருஷ நிலவரம். இப்ப சமீபத்துலேஆன மாறுதல் இதுன்னு தோழி ஒருத்தர் தனிமடலில்சொன்னாங்க. இதைக் கவனியுங்க. எல்லாவிவரமும் இப்ப இணையத்துலேயே கிடைக்குது.


இந்த system எல்லாம் இப்போ மாறி விட்டது.இப்ப 100 points இருந்தால் Expression Of Interest apply பண்ணலாம். பதிலுக்கு NZIS Invitation to Apply அனுப்பும்.
சீக்கிரமா அப்ளை செஞ்சு வந்து சேருங்க. வலைஞர்கள் மகாநாடு நடத்தணும்:-))))

ஒரு பெண், தான் கர்ப்பமுற்றிருப்பதாக நினைத்தால், உடனே அவ்ர்களுடைய குடும்ப டாக்டரிடம்பரிசோதனை செய்யவேண்டியது. அந்த நிலை உறுதியானால், அந்த மருத்துவரே ஒரு 'மிட்வொய்·ப்'எனப்படும் பேறுகால உதவிசெய்யும் மருத்துவத் தாதியை ஏற்பாடு செய்துவிடுவார். அல்லது, அவர்கள்தரும் பெயர் பட்டியலில் இருந்து, உங்களுக்கு பிடித்தவரை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அனேகமாக,கர்ப்பிணி வசிக்கும் இடத்துக்கு சமீபமாக இருப்பவரை தெரிவு செய்வார்கள். அப்போது தானே, கூப்பிட்ட குரலுக்கு ஆள் வரும்.


அதன்பின், அந்த மருத்துவத் தாதி, கர்ப்பிணியின் வீட்டுக்கே சென்று, எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு, தேவையான ஆலோசனைகளையும், கரு நல்ல நிலையில் வளர்கின்றதா என்றுஅறிய உதவும் 'ஸ்கேன்' ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து விடுவார். இரத்தசோகை உள்ளதா என்றும்பரிசோதனை நடக்கும். அவ்வப்போது, தொலைபேசி மூலமும், நேரிலும் வந்து கவனித்துக் கொள்வார்கள்.


பிரசவ காலம் நெருங்கிவரும்போது, அடிக்கடித்தொடர்பு கொண்டு கவனிப்பார்கள். கர்ப்பிணியும்,அவரது'பார்ட்னரும்'(கவனிக்கவும், கணவன், மனைவி என்ற சொல் பிரயோகம் இல்லை. எல்லாம் 'பார்ட்னர்ஷிப்'தான்)கைத்தொலைபேசி மூலமும் மருத்துவத்தாதியை என்நேரமும் தொடர்பு கொள்ளலாம். முதல்முறையாகப்பெற்றோர் ஆகிறார்களென்றால், இருவருக்கும் வகுப்புகள் வேறு நடக்கும்.பிரசவ வலி கண்டவுடன் என்னசெய்யவேண்டும்?, குழந்தையை எப்படிப் பிடித்து தூக்க வேண்டும், ஆடை, 'டையாபர்' அணிவிப்பது எப்படி,ஈர நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்துவது இத்யாதிகள்.


வலி வந்தவுடன், ஆசுபத்திரிக்குப் போய்க் குழந்தையைப் பெற்று எடுக்கும் வரையிலும், அந்தத் தாதிகூடவே இருந்து உதவி செய்வார்கள். சுகப் பிரவசமோ, சிக்கலானதோ எதற்கும், தேவையான எல்லாஏற்பாடுகளும் இலவசமே.


குழந்தை பிறந்தவுடன்,வேறு ஒரு மருத்துவ மனைக்கு( இது முன்பு தனியார் மருத்துவமனையாக இருந்தது)தாயும், குழந்தையும் கொண்டு போகப்படுவார்கள். அங்கே 2 நாள் முதல் ஒரு வாரம் வரையிலும்உங்கள் விருப்பம்போலத் தங்கலாம். 'ஐந்து நட்சத்திர ஹோட்டல்' போன்ற ஆடம்பரத்துடன் இருக்கும்இங்குள்ள அரசாங்க மருத்துவமனைகள். தனியார் மருத்துவமனைகள் ஏறக்குறைய இல்லவே இல்லைஎனலாம். எல்லா 'வார்டு' களிலும், ஏராளமான காலிப் பூச்சாடிகள் வைத்திருப்பார்கள். நோயாளியைப்பார்க்கவரும் பார்வையாளர் கொண்டுவரும் பூக்களை வைப்பதற்காம்.


சரி. குழந்தை பிறந்து விட்டது. இனி அவர்கள்பாடு என்று போய்விட மாட்டார்கள்.'plunket' என்றஅமைப்பு, குழந்தையின் நலனைக் கவனிக்க வந்துவிடும். வீட்டிற்கு வந்து, குழந்தையைக் குளிப்பாட்டுவது,சரியானபடி உணவு( பால் தான்) புகட்டப் படுகின்றதா, எடை கூடிவருகிறதா, தடுப்பு ஊசிகள் போன்றஅனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். வீட்டீற்கு வரும்போதே, குழந்தையின் கார் பயணத்திற்கென்றே விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட , கூடைபோன்ற 'கார் சீட்' தரப்படும். சிறு தொகை ஒன்றை வசூலிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். (முந்தியெல்லாம் இது இலவசமாக இருந்தது)இதனை, 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். குழந்தைக்கான சாமான்கள் விற்கும் 'பேபி சிட்டி'போன்ற கடைகளில்வாங்கலாம். குழந்தை பெரிதானவுடன் விற்றுவிட்டால் ஆச்சு! இது இல்லாமல் பயணம் செய்தால், போலீஸ் பிடித்துக் கொண்டு, அபராதம் கட்டவேண்டும். மேலும், பாதுகாப்பு தரவில்லை என்ற வழக்கும் போடுவார்கள். இங்கே கார் வைத்திருப்பதுமிகவும் அவசியம். 'சோறு' இல்லாமல் இருப்பார்களே தவிரக் 'கார்' இல்லாமல் இருக்க மாட்டார்கள்.சொல்ல மறந்து விட்டேனே! அப்பாவுக்கு 7 வேலை நாட்கள் சம்பளத்துடன் லீவு உண்டு. தாய்க்குஉதவுவதற்காக. 'paternity leave'


சமீப காலமாக, 'ஹெல்த் இன்ஷ¥ரன்ஸ்' ( தமிழில் என்ன? .....காப்பீடு ?)நிறுவனம் ஒன்று,முன்னேற்பாடுடன்( pre organaised) செய்யும் அறுவை சிகிச்சைகளுக்கு, (இதயம், சிறுநீரகமாற்று, இடுப்பெலும்பு மாற்று போன்றவை) ஒரு மருத்துவமனை கட்டியுள்ளது.இது இன்னும் நன்றாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில்'ஹெல்த் இன்ஷ¥ரன்ஸ் பாலிஸி' எடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த சேவை.இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேனே. எல்லா மருத்துவ மனைகளிலும் சாப்பாடு நன்றாக இருக்கும்.தினமும்,3 'மெனு கார்ட்'தருவார்கள். நமக்குப் பிடித்த உணவைக் குறித்துக் கொடுத்தால் போதும். 3 course meal. கூடவே குடிக்க 'wine'ம் தருவார்கள். நமக்குப் பழக்கமில்லை என்று சொன்னால்ஒரு விசித்திரப் பார்வை வீசப்படும். 'பாத்தாப் பாருன்னு' இருப்போம். நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது,மருத்துவமனையில் இருந்தால், மாலை நேரத்தில் அவர்களைப் பார்க்கப்போவோமல்லவா? அப்போதுஅங்கே உணவுக் கூடத்திலிருந்து 'பசியைத்தூண்டும் ஒரு வாசனை' வரும் பாருங்க! ஆஹா!!!!ஆனால், நோயாளி அவைகளை ரசித்து, ருசித்து உண்ணும் மனநிலையில் இருக்கவேண்டுமே?


எல்லா சேவைகளும் சரியென்றும் சொல்ல முடியாது. ஒரு முறை எங்களுக்குஏற்பட்ட அனுபவம் மிகவும் பயங்கரமானது.அதைப் பற்றி வேறு ஒருசமயம் சொல்வேன்.


ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு அரசாங்க மருத்துவமனை உள்ளது. இது தவிர,பெரிய நகரங்களில் முதியோர் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையும் உள்ளது. இது தவிர 'முதியோர்கள் இல்லம்' நிறைய உள்ளன.அவையெல்லாம், தனியார்கள் நடத்துபவை.மிகச் சிலவற்றைத்தவிர,வணிக நோக்கத்துடன் நடப்பவைகளேபெரும்பாலும்.


பொது மருத்துவராக உள்ளவர்களைபற்றியும் ஒரு விஷயம் இங்கு சொல்லணும். திங்கள் முதல் வெள்ளி வரைதான் அதுவும் 9 முதல் மாலை 5 வரை மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும். மாலை 5 மணிக்கு மேல் காலை 9 வரை அல்லது வார இறுதிகளில் ஏதாவது ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால், அரசாங்க மருத்துவமனைக்கோ அல்லது 'after hoursurgery' என்று இயங்கும் இடத்திற்கோ போகலாம்.அரசாங்க மருத்துவமனை என்றால் இலவசம்.மற்ற இடம் என்றால் இரட்டிப்பு காசு. நம்ம வீட்டில் பிள்ளைகளுக்கெல்லாம், வெள்ளிக்கிழமை மாலை5 மணிக்குமேல்தான் வாந்தி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும். இந்த ஊருக்கு வந்த புதிதில் அனேகமாகஎல்லா வார இறுதிகளிலும் ' எமெர்ஜென்ஸி க்ளீனிக்' எனப்படும் 'ஆ·ப்டர் அவர் சர்ஜெரி'யில்தான்வரிசையில் அமர்ந்திருந்தோம். நம்முடைய முறை வருவதற்குள், இந்த வாந்தியெல்லாம் நின்று போயிருக்கும்.


குழந்தைகளின் ( 18 வயது வருவரை) உரிமைகளைப் பற்றி கதையே எழுதலாம். அப்புறம் சொல்வேன்.

நண்றி: சங்கமம் 2004
********************************************************************


15 comments:

said...

12 ஆடுகளை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள்?

:)

said...

துளசி
பிரசவம் மற்றும் ஆப்பரேஷனாவது டாக்டர் செய்வாங்களா, அதுவும் மிட்-வொய்ப் தானா? //வரிசையில் காத்திருப்பதற்குள் வாந்தியெல்லாம் நின்று போய்விடும்// நல்ல விஷயம்தானே! வாரத்தில் ரெண்டுநாள் லீவில் போய்விடும் வசதிக்காகவாவது அங்கு வந்து உங்கள் வலைஞர்கள் கூட்டத்தில் சேர்ந்திடலாம் போலிருக்கே!சொந்த அனுபவம்னு ஏதோ `பயங்கர' முன்னறிவிப்போட என்ன வரப்போகுதோ? நீங்க போற நேரம் பார்த்துதானா டயட்ரியில் சமையல் செய்வாங்க, புரியாத பசங்க!

said...

தங்கமணி,

தமிழ்மணம் மேயாத நேரத்துலே இந்த 12 ஐயும் கொஞ்சம் மேய்ச்சுக்க வேண்டியதுதான்.

சமைக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னா, அதுலே இருந்து ஒண்ணை எடுக்கலாம்:-)))))

said...

தாணு,
அது எப்படிங்க சாப்பாடுன்னு எங்கியாவது எழுதுனா உடனே அங்கே 'டாண்'ன்னு ஆஜர் ஆயிடறீங்க? :-)))

இங்கே ஆஸ்பத்திரியிலே சமையல் இல்லை. எங்கியோ செஞ்சு கொண்டுவராங்க. ச்சும்மா அந்தப் பாத்திரத்தைத்
திறக்கறதுக்கே இந்த வாசனை.

said...

ஒரு முறை எங்களுக்குஏற்பட்ட அனுபவம் மிகவும் பயங்கரமானது.அதைப் பற்றி வேறு ஒருசமயம் சொல்வேன்.//

மக்களே... இதுலேருந்தே இந்தத் தொடர் எழுதுறது "நம்ம" துளசி இல்லேன்னு தெரியவில்லையா? துளசி எப்ப கொசுவர்த்திய ஏத்துற சந்தர்ப்பத்தை சும்மா விட்டாங்க! :O)

said...

ஷ்ரேயா,
அந்த பயங்கர அனுபவம்முந்தி ஆரம்பிச்சு 8 பகுதிவரை எழுதி முடிக்காம அப்படியே வச்சிருக்கேன். முடிச்சுட்டு அதைத்தனியா ஒரு தொடர்(!) போட்டுறாமாட்டேனா:-)

said...

// குழந்தை பெரிதானவுடன் விற்றுவிட்டால் ஆச்சு! //

எவ்ளோ பெரிசா ஆனப்புறம்... விற்பனை ஏஜ் லிமிட் எதுவும் உண்டா... எடைக்கு எடை காசா இல்ல எப்படி ;-))

said...

மகப்பேறு செலவு இலவசமா??
நம்ம ஊரில் (இந்தியா) எல்லாம் இலவசம்தான் . என்ன இந்த அளவுக்கு சொகுசாக இருக்காது.
உங்க நாட்டுல நிறைய ஆடா இருக்கிறதுனால மனுசங்களுக்கு மரியாதை . நம்மூரில் ஆட்டுக்குத்தான் மரியாதை.

அப்புறம் அமெரிக்கா பத்தி நான் ஏதானும் சொல்லனுமே :-))
இங்க மகப்பேறு இலவசம் கிடையாது. வருமானம் குறைந்தவர்களுக்கு Medicare என்னும் முறை உள்ளது.
மற்றபடி மருத்துவம் இங்க விலை உயர்ந்த சமாச்சாரம்தான்.

உங்களுக்குத் தெரியுமா? குவைத்தில் மருத்துவம் 100% இலவசம்.
(அங்க இரண்டுமாசம் இருந்தேன்னு சொல்லாதீங்க )

said...

முகமூடி,

விக்கறது குழ்ந்தையையா?

அந்த பேபி கார் ஸீட்டை மட்டும்தான்:-)

said...

கல்வெட்டு,

இங்கே மகப்பேறுக்குமட்டுதான் வைத்தியம் ஃப்ரீ.
மத்தபடி பொதுவா மருத்துவச் செலவுக்கு இன்ஷூரன்ஸ் இல்லேன்னா செத்தோம்.

எதுக்கெடுத்தாலும் இந்த 'யூஸர் பே' சிஸ்டம்தான்.

குவைத்தா?

அண்ணன் ஒரு 9 வருசம் ஓமான்லே இருந்தாங்க.
இப்பப் போலாம், அடுத்தவருசம் போலாம், இப்படி நினைச்சுக்கிட்டே போகாமக் கோட்டை விட்டுட்டேன்.
ஆனா இப்ப ஒரு 'எமரேட்ஸ் ஏர்லைன்ஸ்' இந்தியாவுக்கு மலிவா டிக்கெட்டு தருது. ஆனா குவெய்ட் வழியாப் போகணுமாம்.
அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கோம்,ஒருதடவை போயே தீரணுமுன்னு.

said...

//விக்கறது குழ்ந்தையையா?

அந்த பேபி கார் ஸீட்டை மட்டும்தான்:-)
//

நான்கூட முகமூடி நினைச்சமாதிரி, குழந்தையைத்தான் விக்கிறீங்களோ எண்டு நினைச்சிட்டன். பின்னூட்டத்தில தெளிவுபடுத்தினதுக்கு நன்றி.

said...

வசந்தன்,

உங்களுக்கும் முகமூடிக்கும் லொள்ளு ஜாஸ்தி:-)

தேங்க்ஸ் வசந்தன்.

ஏனா?

பின்னூட்டத்தின் எண்ணிக்கையை ஏத்துனதுக்கு.

said...

இங்கும் (அமெரிக்காவில்) மருத்துவ காப்பீடு இல்லையென்றால் அவ்வளவுதான்.

said...

உண்மையாவே சோறு கண்ட இடம் சொர்க்கம் போலத்தான் இருக்கு துளசி. வீட்லே சமையல் ஆள் எஸ்கேப் ஆயிட்டதாலே, நானே சமைச்சி நானே சாப்பிட வேண்டியிருக்குதே! ஜோதிகா மாதிரி கும்முன்னு இருந்த எம்பொண்ணு ஸ்லிம்ரன் ஆயிட்டா! இந்த வைத்தியம்கூட நல்லாத்தான் இருக்கும் போலே!

said...

ஆமாங்க மரம்.

எல்லா இடத்துலேயும் கையுலே காசு வாயிலே தோசை!

தாணு,

ச்சும்மாச் சும்மா டயட், அது இதுன்னு ஆரம்பிச்சிருப்பீங்க, அதான் சமையல் உதவி எஸ்கேப்:-)))


இப்பவாவது தெரிஞ்சதே இந்த உண்மை. அதுவரைக்கும் சந்தோஷம்தான்.

யாரங்கே, சீக்கிரம் ஒரு மசால் தோசை கொண்டுவாங்க.( எனக்குத்தான்)