கோயம்பேடு போய்வந்து பல்பு வாங்குனதை மறக்கவே முடியலை. மனசில் ஓரத்தில் நமநமன்னு இருந்துக்கிட்டே.......
சென்னையைவிட்டு போறோமுன்னதும் இங்கே போகத்தான் வேணுமுன்னு முடிவு செஞ்சேன். இதுக்கு ரொம்பத்தோதா இன்னொரு காரணமும் கிடைச்சது. ஓசிச் சாப்பாடு. விட முடியுதா?
பொழுதோட கிளம்பிப்போய் புள்ளைத்தாய்ச்சியைக் கண்டுக்கிட்டு, அப்படியே தோழி வீட்டுக்குப்போய் வெட்டிவிழுங்கணும். ஜம்பமா , சொன்னது 'விசேஷமா ஒன்னும் செய்யாதீங்க. ஒரு 'தால் பாத் போதும்'.
வேதவாக்கா எடுத்துப்பாங்கன்னு யார் கண்டா? :(
ஸ்ரீ வைகுந்தவாசன் கோவிலுக்குள் நுழைஞ்சேன். நவதிருப்பதிகளில் இருக்கும் நுழைவுவாசல் போல சிம்பிளான முகப்பு. முன்வாசல் திறந்திருந்தாலும் கோவில் கருவறை முன்மண்டப வாசக்கதவு பூட்டி இருக்கேன்னு விசாரிச்சதில் பட்டர் வந்து விளக்கேத்தி வச்சுட்டு, இப்பத்தான் பூட்டிக்கிட்டுப்போனார். பக்கத்துக் கோவிலுக்குப் போயிருக்கலாம் இதோ வந்துருவார்ன்னு சொன்னாங்க. இந்தக் கோவிலுக்கு வலப்பக்கத்துலேதான் குசலவபுரீஸ்வரர் கோவில் இருக்கு. போனமுறை அதைமட்டும் பார்த்துட்டு வந்துருந்தேன். திருக்குளத்தின் முன்னே இருக்கும் மண்டபத்தின் (இங்கேதான் சரபேஸ்வரர் ஒரு தூணில் இருக்கார்) கடைசிவரை போயிருந்தால் இந்தக் கோவில் கண்ணுலே பட்டிருக்கும். அந்தக் கடைசியில் இருந்து எண்ணி நாலே எட்டு வச்சால் போதும்!
அதுவரை கோயிலை வலம்வரலாமுன்னு போனோம். தலவிருட்சம் நூல்கட்டுகளால் சுற்றியிருக்கு. இதுக்கு முன்னால் ஒரு புள்ளையார் சந்நிதி. கோவிலுக்குப் பின்பக்கம் ஒரு புத்து. கொஞ்சம் தள்ளி, மின்னும் சேஷவாகனம். கருவறை மேல் இருக்கும் அழகான விமானம் சமீபத்துலே புதுப்பிச்சு வர்ணம் அடிச்ச நிலையில் தெளிவான சுதைச்சிற்பங்களோடு.! ஒரு பக்கம் ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்ட பெருமாள். நாபிக்கமலத்தில் ப்ரம்மன். கால் அமுக்க ஸ்ரீதேவி இல்லாமல் தனியாக் கொட்டக்கொட்டக் கண்முழிச்சுக்கிட்டுச் சிந்தனை செய்யறார்.
தேவி இல்லாத பள்ளிகொண்டானை இதுவரை பார்த்ததே இல்லை. அட்லீஸ்ட் கொஞ்சம் ஓரடி தள்ளியாவது அம்மா உக்கார்ந்திருப்பாள். உசரே அடுத்த அடுக்கில் நரசிம்மம் குத்துக்காலிட்டு அய்யப்பன் போஸில்.. அதுக்கு மேல் அடுக்கில் ஒரு காலை மடக்கி, வலதுகையால் அருள் முத்திரை காமிக்கிறார் அதே நரசிம்மர்.
மும்மூணு அடுக்குள்ள சாயா விமானம். இந்த விமானத்தின் இன்னொரு பக்கம். இதே அரவணையில் ஒரு காலை மடக்கி உக்காந்துருக்கும் மஹாவிஷ்ணுவும் இரு பக்கமும் ஸ்ரீதேவி பூதேவியருடன். மூணாவது பக்கம் ராமன் லக்ஷ்மணன் சீதை. நோ ஆஞ்சநேயர்! நாலாவது பக்கம் பார்க்க இயலாது. கோவிலின் முன்மண்டபம் வந்து பார்வையை மறைச்சுருது.
கோவிலின் முன்மண்டபத்து வெளிச்சுவர்களில் முகப்பில் தசாவதார சிற்பங்கள். வலது புறம் புற்றில் இருக்கும் வால்மீகி முனிவரிடம் நாரதர் 'சேதி' சொல்றார். சீதையும் வால்மீகியும், சீதை மடியில் இரட்டையர், அஸ்வத்தை பிடித்துக் கட்டி வைக்கும் லவனும்குசனும்.
இடது பக்கம் ராமனை எதிர்த்து அம்பெய்யும் குசலவர்கள், வால்மீகியை வணங்கும் ராமன், ராமர் குடும்பம், வால்மீகி, குசலவர்களுக்கு மகாவிஷ்ணு காட்சியளித்தல் .எல்லாமே சுதைச்சிற்பங்கள்தான். ஆனாலும் முக அழகு சொல்லமுடியாதபடி ரொம்பத் திருத்தமாகவும் வசீகரமாவும் இருக்கு.
பட்டர் வரும்வரை, கொஞ்சம் கதையைப் பார்க்கலாமா? நாட்டுமக்களில் ஒருவர், சீதையைப் பற்றிச் சொன்ன 'அவதூறு' காரணம் ராமன் கர்ப்பிணி மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பிட்டான். பழிச்சொல் தாங்க முடியாத சீதை, உயிரைவிட உத்தேசிக்கும் சமயம், வால்மீகி முனிவர் அங்கே வர்றார். (இந்த சேதிதான் நாரதர் சொல்லி இருக்கணும்) 'தற்கொலை செஞ்சுக்கறது பாவம், அதிலும் வயிற்றில் இன்னொரு ஜீவன் வளர்ந்துவரும் சமயம் தற்கொலை செஞ்சுக்கறது மகா பாவம்'னு சீதைக்கு எடுத்துச் சொல்லி 'என்னுடைய ஆசிரமத்தில் வந்து தங்கிக்கோம்மா'ன்றார். தயங்கும் சீதையிடம், 'அரசிக்குரிய எந்த அலங்காரமும் அணிமணியும் இல்லாமல் ஆசிரமத்தில் இருக்கும் மற்ற சாதாரணப் பெண்களோடு தங்கினால் வேறெந்தப்பேச்சும் வராது'ன்னு சொல்றார். சம்மதிச்ச சீதை அதே போல சிம்பிளாத் தலைமுடியைக் கோடாலிமுடிச்சுப் போட்டுக்கிட்டு அங்கே போய் தங்கி, காலக்கிரமத்தில் ரெட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கறாள். பாய்ஸ்!
குழந்தைகள் வளர்ந்து வர்றாங்க. ஆசிரமத்துலேயே கல்வி, வில்வித்தை எல்லாம் படிக்கிறாங்க. அப்போதான் அஸ்வமேத யாகத்துக்கான குதிரை ஊர் ஊரா எல்லா இடங்களுக்கும் போய்க்கிட்டு இருக்கு. அப்படியே இங்கே இந்தப் பகுதிக்கும் வந்தப்ப, பசங்க ரெண்டு பேரும் அந்தக் குதிரையைப் பிடிச்சுக் கட்டிவச்சுட்டாங்க.
குதிரையோடு வந்த சத்ருக்னன், பசங்களிடம் 'குதிரையை விட்டுருங்க பசங்களே. இது அரசனோட அஸ்வமேத யாகத்துக்கான குதிரை'ன்னான். 'அதெல்லாம் விடமுடியாது. எங்க ஆசிரம எல்லைக்குள் ட்ரெஸ்பாஸ் பண்ணிருச்சு'ன்னாங்க. இதென்னடா வம்பாப் போச்சு. சின்னப் பசங்ககிட்டே சண்டை போட்டா நல்லாவா இருக்குமுன்னு அவன்போய் லக்ஷ்மணனிடம் விஷயத்தைச் சொன்னான். 'நான் வந்து என்னான்னு கேக்கறேன்'னு லக்ஷ்மணனும் கிளம்பி வந்தான். அவன் கேட்டுக்கிட்டாலும் குதிரையை விடமாட்டேன்னு பசங்க சொல்லிருச்சு. சண்டை ஆரம்பிச்சது. லக்ஷ்மணசத்ருகர்களை சண்டையில் ஜெயிச்சுத் துரத்துச்சுங்க பசங்க.
சேதி கேள்விப்பட்ட ராமன், தானே புறப்பட்டு வந்தான். அவனையும் பசங்க எதிர்த்து நின்னாங்க. அப்போ வால்மீகி முனிவர் வந்து, பசங்க யாருன்னு தெளிவு படுத்தினார். பசங்களுக்கும் அப்போதான் ராமன் தங்களோட தந்தைன்ற விஷயம் தெரியுது. அப்பாவை வணங்கி மன்னிப்புக் கேக்கறாங்க. அவரும் நடந்ததுக்கெல்லாம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டார். அப்போதான் வால்மீகி முனிவர் ராமன், மகாவிஷ்ணுவின் அவதாரமுன்னு விளக்கி, ஸ்ரீ வைகுண்டத்தில் வாசம் செய்யும் விஷ்ணுவின் திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்ட அவ்வாறே ஆச்சு.
கடவுளர்களின் வழக்கபடி ஆசி வழங்கிட்டு, 'என்ன வரம் வேண்டுமுன்னு கேளுங்கோ'ன்னதும், 'இதே திருக்கோலத்தில் இங்கே கோவில்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அனுகிரஹிக்கணுமு'ன்னு வேண்டினார் வால்மீகி. சரின்னுட்டார் பகவான். ஆனா ஸ்ரீவைகுண்டத்தில் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அவனை மெத்தையாப் போட்டுக்கிட்டு இருந்தோ, கிடந்தோ இருக்கும் கோலமில்லாமல் நின்னவாக்கிலே நின்னு அருள்பாலிக்கிறார். அஃப்கோர்ஸ், கூடவே தேவியரும் உண்டு. அதான் மூலவருக்கு வைகுண்டவாசர்ன்னு பெயர்.
ஒரிஜனல் வைகுண்டவாசன் இப்படி(யும்) இருக்கலாம்!
பட்டர் வந்து கோவிலைத் திறந்தார். இன்னும் ஒரு குடும்பம் தரிசனத்துக்கு வந்துருந்தாங்க. தீபாராதனை முடிஞ்சதும் அவுங்க போனபிறகு பட்டரிடம் பேச்சுக் கொடுத்தேன். (பல்பு வாங்குன கையோடு ஹோம்ஒர்க் கொஞ்சம் செஞ்சு வச்சுக்கிட்டதால் எளிதா இருந்துச்சு) மரவுரி தரித்த ராமர் இருக்காராமே. அவரைத் தரிசனம் பண்ணிவையுங்கோன்னதும் அவருக்குப் பரம சந்தோஷம். முன்மண்டபத்துலே இடது பக்கத்தில் சின்னச் சந்நிதியில் இருக்காங்க ராமனும் சீதையுமா. எப்பவும் கூடவே இருக்கும் லக்ஷ்மணர் கிடையாது.
மண்டபத்தின் வலப்பக்கம் இருக்கும் சிலைகளில் வால்மீகியும் இருபக்கமும் குசலவர்கள். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாம். அடுத்து நின்ற கோலத்தில் சீதை. பிள்ளைத்தாய்ச்சி. நிறைய வளையல்களை மாலைமாதிரி போட்டு வச்சுருக்காங்க. கர்ப்பிணியை இங்கே காட்டுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப்போனது லக்ஷ்மணனாம். இதுகூட சீதையின் செயலுக்கு ஒரு தண்டனையாம். பொன்மானா வந்த மாரீசன், ராமனின் அம்பு பட்டு இறக்கும் சமயம் 'லக்ஷ்மணா'ன்னு ராமர் குரலில் அலறினான். சப்தம் கேட்ட சீதை, தனக்குக் காவலாக இருந்த லக்ஷ்மனனைப் போய் 'என்ன ஏதுன்னு பார்க்க'ச் சொல்றாள். 'அது அண்ணன் குரல் இல்லை. அவருக்கு ஆபத்து ஏதும் வராது. வந்தாலும் தன்னைக் காப்பாத்திக்குவார். இங்கே உங்களுக்குக் காவலா இருக்கச் சொல்லிட்டுப்போன அண்ணனின் சொல்லைத் தட்டமாட்டேன்'னு லக்ஷ்மணன் சொல்ல, கோபத்தில் சீதை அவன்மேல் சந்தேகப்பட்டுத் 'தகாத எண்ணத்தோடு நீ இங்கே இருந்து போகமாட்டேங்கறே'ன்னு சொல்லிடறாள். அதுக்குப் பனீஷ்மெண்டாத்தான் லக்ஷ்மணனையே சீதையைக் காட்டுலே கொண்டுபோய் விடச்சொன்னார் ராமர்ன்னு சாவிச் சங்கிலி தோளில் தொங்க, பட்டர் அனந்த கிருஷ்ணன் சொன்னார்.
இதுக்குள்ளே நம்மைபற்றியும் என்ன ஏதுன்னு விசாரிச்சவரிடம், இந்தக் கோவிலைப்பத்தி எழுதணுமுன்னு வந்திருக்கேன்னேன். வெளியே படம் எடுத்துக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு அவர் கோவில் நிர்வாக அதிகாரிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்குங்கோன்னு செல் நம்பர் கொடுத்தார். ரொம்ப நல்லவராம். நல்லமுறையில் கோவிலை நடத்தராறாம். திரு.மோகனசுந்தரம். எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸர். இவரிடம் கேட்டு அனுமதி வாங்கித்தான் குசலவபுரீஸ்வரர் கோவிலில் கொஞ்சம் படங்கள் எடுத்திருந்தேன் போனமுறை. உடனே தொலைபேசியில் கூப்பிட்டு அனுமதி கேட்டதும், எடுத்துக்குங்கோன்னார். நன்றி தெரிவிச்சேன்.
கோவில் தலவிருட்சம் கொஞ்சம் ஸ்பெஷலானது. வில்வமரமும் வேப்பமரமுமாச் சேர்ந்து பெருசா, மூணு 'அடிமரங்களா'ச் சேர்ந்து வளர்ந்திருக்கு. இங்கே குடும்ப நலனுக்குப் பிரார்த்தனை செஞ்சு வழிபடறாங்களாம். திருமணம் தடைப்பட்டவர்கள், இங்கே வேண்டிக்கிட்டுச் நூல்சரடு, மரத்துக்குச் சுத்தி வழிபட்டா, சீக்கிரம் திருமணம் கைகூடுதாம்.
வால்மீகி தவம் செஞ்சப்ப அவரைச் சுத்தி புத்து வளர்ந்து மூடியதை நினைவுபடுத்தும் விதமா இங்கேயும் புத்து ஒன்னு இருக்கு. அதுக்குள்ளே 'அது' இருக்குமோன்னு நம்ம கோபாலுக்கு ஒரு சம்சயம்:-)
இன்னொரு விசேஷம் இந்தக் கோவிலுக்கு இருக்குன்னார் பட்டர். சீமந்தம் வளைக்காப்பு விசேஷங்களை நிறையப்பேர் இந்தக் கோவிலில் கர்ப்பிணி சீதை முன்னால் நடத்திக்கிறாங்களாம். சுகப்பிரசவமும் ஆரோக்கியமான குழந்தையும் கிடைக்குமுன்னு நம்பிக்கை. வெளிநாட்டில் இருக்கும் பலர், அங்கே சீமந்தமோ வளைக்காப்போ சாஸ்த்திரப்படி செஞ்சுக்கப் போதுமான வசதி இல்லாதவர்கள்'' இங்கே வேண்டிக்கிட்டு அவர்களுக்காக அந்தந்தக் குடும்பத்தினர் இங்கே சீதைக்கு வளைகள் அணிவித்து வளைக்காப்பு நடத்தறதும் உண்டாம்.எல்லாம் நல்லதா நடக்கும் என்ற நம்பிக்கைதான்னார். சீதையின் கழுத்தில் இருந்த வளைமாலையில் நாலு பச்சை வளைகளை எனக்குப் ப்ரசாதமாக் கொடுத்தார்.
நன்றி சொல்லிக் கிளம்பும் சமயம் போனவருசம் நடந்த மகாகும்பாபிஷேகத்தின் போது விழாவுக்காகச் சிறப்பாக எடுத்த மரவுரி ராமனும் சீதையும் இருக்கும் படத்தையும் (அதுக்குள்ளே வீட்டுக்கு ஆள் அனுப்பி எடுத்துவரச் சொல்லியிருக்கார்!) நம்ம பதிவில் போடறதுக்காகவே தந்தார்.
அனந்தகிருஷ்ண பட்டர் கொஞ்சம் அப்பாவிதான் போல. என்னையும் எழுத்தாளருன்னு நம்பிட்டார் பாருங்களேன்!
Thursday, June 03, 2010
பாவம் புள்ளைத்தாய்ச்சி........
Posted by துளசி கோபால் at 6/03/2010 02:45:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இப்ப இந்த கேள்வியை கேட்டலைன்னா தலை வெடிச்சுடும் போலிருக்கு.
இங்கு கோவிலுக்கு போவதே ஆபூர்வம். மூன்று திசைகளையும் திருப்தி படுத்த அழைத்துக்கொண்டு சென்றால் வெளியே உள்ளே கடைகளையும் தொங்கிக் கொண்டுருக்கும் பொருட்களையும் மூன்று பேருமே பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டு எப்படா தீபம் காட்டுவார்கள் என்று முடிந்ததுமே கோரிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்?
அப்படான்னு உள்ளே போய் ஏதோ ஒரு மூலையிலே போய் உட்கார்ந்து உள் மெய்ஞானத்தை பெயரளவுக்காவது யோசிக்க வேண்டியது தான்.
நீங்கள் கவனித்தல், புகைப்படம், ஆராய்தல், தெளிவான நடையில், எத்தனை தான் கணக்கில் வைத்துக்கொள்வீர்கள்???
உங்களுக்கு ஞானம் கிடைக்கிறதோ இல்லையோ இதை படிப்பவர்களுக்கு சுந்தர் சொன்னது போல் உள்ளுற திருப்தி உருவாகும்.
அதென்ன உங்களுடைய எழுத்துக்கும் (?) அனானி மக்கள் பிரச்சனை இருக்குதா?
ஒரு பக்கம் ஆதிசேஷன்மேல்பள்ளி கொண்ட பெருமாள் தேவி இல்லாமல் தனியாக கொட்டக்கொட்ட கண்முழித்து சிந்தனை செய்றார் என்று நீங்கள் சொல்வது போலத்தான் பெருமளும் அழகாக சிந்தனை செய்கிறார். அவ்வப்போது நினைவுகளில் சென்னையில் இருப்பது போல் இருக்கு டீச்சர். இது வசதிதான் இவ்வறு நினைக்கும்போது செல்லலாம்:))))
நிறைந்த தகவல்களுடன் ஸ்ரீ வைகுந்தவாசன். மிக்கநன்றி.
{{அனந்தகிருஷ்ண பட்டர் கொஞ்சம் அப்பாவிதான் போல. என்னையும் எழுத்தாளருன்னு நம்பிட்டார் பாருங்களேன்!}}
நீங்க அவரை சாவிச் சங்கிலியோட
போட்டோ எடுத்ததினால நம்பிட்டார்போல!!
இப்படி ஒரு ஆலயத்தைப்பற்றியும் இங்குள்ள சீதையின் சிறப்பைப் பற்றியும் தகவல் அளித்தமைக்கு நன்றிகள்
ஸீதா ராமர் படத்திற்கு ரொம்ப நன்றி
//தேவி இல்லாத பள்ளிகொண்டானை இதுவரை பார்த்ததே இல்லை//
முதல் திருத்தலமான திருவரங்கத்தில் கூடவா? :)
அடையாறில் கூடத் தனியாத் தானே இருப்பாரு?
//அஸ்வத்தை பிடித்துக் கட்டி வைக்கும் லவனும்குசனும்//
யாரு டீச்சர் இந்த அஸ்வத் பையன்? அவனை எதுக்கு லவ-குசா கட்டி வைக்குறாங்க? :)
//சின்னச் சந்நிதியில் இருக்காங்க ராமனும் சீதையுமா. எப்பவும் கூடவே இருக்கும் லக்ஷ்மணர் கிடையாது//
அருமையா இருக்கு படம்!
கொஞ்சம் தலையைச் சாய்த்த இராகவன்! மஞ்சள் பட்டில் சீதை!
யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே-ன்னு, அவள் நெஞ்சில் திருமாங்கல்யம்!
அதைத் தவிர வேறு ஒரு அணி மணியும் இல்லை! அது ஒன்றே போதும் அவள் பெருமையைச் சொல்ல!
//அவரும் நடந்ததுக்கெல்லாம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டார்//
பசங்க கிட்ட மன்னிப்பு கேட்டாரா இல்லை
எங்கள் சீதை கிட்ட மன்னிப்பு கேட்டாரா?
வாங்க ஜோதிஜி.
இப்பெல்லாம் பதிவுக்கு மேட்டர் தேத்தணும் என்பதே மனசில் உக்காந்து பிறாண்டிக்கிட்டு இருக்கே. அதான் கவனம் எல்லாம் அங்கே போயிருது.
அதுவுமில்லாமல் கோவில் இல்லாத ஊரில் 22 வருசமா இருப்பதும் கவனிக்க ஒரு காரணமா இருக்கலாம். இப்போ விட்டா பின்னே எப்போ?????
//சிம்பிளாத் தலைமுடியைக் கோடாலிமுடிச்சுப் போட்டுக்கிட்டு அங்கே போய் தங்கி, காலக்கிரமத்தில் ரெட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கறாள். பாய்ஸ்!//
புகைப்படத்தில் ஒருவன் வெள்ளைக் கலர்-ல இருக்கான்! இன்னொருவன் பச்சைக் கலர்-ல இருக்கானே! லவ-குசரில் யார் வெள்ளை? யார் கருப்பு? (குடும்பக் கலர்) :)
வாங்க சுமதி.
ஆஹா.... அப்படியா!!!!
பயணச்செலவைப் பங்கு போட்டுக்கலாமா?????
வாங்க மாதேவி.
நிறையத்தகவல்கள்!!!!!
மொக்கை இல்லை என உறுதி ஆயிருக்கு:-))))
வாங்க பிரகாசம்.
அவர் மட்டுமில்லைங்க. அங்கு வந்த இன்னும் நாலு பட்டர்களும்கூட நம்பிட்டாங்க!!!!
சீதாவும் ராமரும் நெட்லே வர விருப்பம் தெரிவிச்சதும் ஒரு காரணமா இருக்கலாம்:-))))
இராமன் வாலி வதத்துக்குக் கூடப் பின்னாளில், இன்னொரு அவதாரத்தில் கழுவாய் தேடிக் கொண்டான்!
ஆனால் அவன் சீதையை "நடத்திய"/"நடத்திக் காட்டிய" விதம்...
வீடேறி வந்தவளை காடேற "நடத்திய" விதம்...
அது இராமனுக்கு எந்நாளும் ஒரு களங்கமே!
மனிதனாய் வந்த அவதாரம்-அவன் தாரம்!
அது மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்றும் நடந்து காட்டியது!
எப்படி நடக்கக் கூடாது என்றும் நடந்து காட்டியது!
நம் மீது மிகுந்த அன்புள்ளவர்களை வீணே சந்தேகப்பட்டு, வார்த்தை கொட்டுவது-ன்னா என்ன? அது எப்படி வலிக்கும்? என்பதைச் சீதை முன்னமேயே உணர்ந்து கொண்டாள்!
இலக்குவனைச் சொல்லால் சுட்ட சீதைக்கு
இலங்கையில் அக்னிப் பிரவேசம் வாயிலாக...
"தீயினால் சுட்ட புண்-நாவினால் சுட்ட வடு" என்பதை ஏற்கனவே காட்டியாகி விட்டது!
ஆனால் இன்னொரு முறையும், அவளை நிறைமாதமாக, காடேற விட்டது...இலக்குவனைச் சொல்லால் சுட்டதற்காக அல்ல!
ஊரின் முன்னால், தன் வம்சப் பெருமையை நிலைநாட்ட...
வம்ச விளக்கை அல்லவா ஊதி அணைத்து விட்டான் அவன்? :(
இரகு குல இராகவ இராமா,
ஆண்மை தவறேல்!
பெண்மை தவறேல் என்று இருந்தவள் முன்...
உன் ஆண்மை தவறேல்!
வாங்க கே ஆர் எஸ்.
எங்கே தனியா? படுக்கைக்குக் கொஞ்சம் தள்ளி அம்மையார்கள் தரையிலே உக்கார்ந்துருக்காங்களே அடையாரில்.
ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளம்மா, ஐயாகூடவே மறைஞ்சு இருக்காங்களே.
தாயாரும் தலைக்குப்பின் இருந்ததாக நினைவு.
இந்த அஸ்வத், பையன்தான்ப்பா. ஆம்பளைக் குதிரை:-))))
கே ஆர் எஸ்.
ஐடெண்ட்டிகல் ட்வின்ஸ்ன்னா இப்படித்தான் இருப்பாங்க. ஒருத்தர் அம்மா மாதிரி ஒருத்தர் ஐயா மாதிரி:-))))
யார் யாருன்னு யாருக்குத் தெரியும்?
//ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளம்மா, ஐயாகூடவே மறைஞ்சு இருக்காங்களே.தாயாரும் தலைக்குப்பின் இருந்ததாக நினைவு//
திருவரங்கத்தில் ஐயாவுக்கு சங்கு சக்கரம் கூடக் கெடையாது!
நம்மள போல ரெண்டே கை! ஒரே படுக்கை தான்! ஆள் Flat :)
அவள் எப்பமே திருமார்பில் "அகலகில்லேன்" என்று இருப்பதால், ஐயா தனியாக இல்லீன்னாலும்...
ஊருக்கு போஸ் காட்டுவது என்னவோ தனிமையில் தான்! :)
//படுக்கைக்குக் கொஞ்சம் தள்ளி அம்மையார்கள் தரையிலே உக்கார்ந்துருக்காங்களே அடையாரில்//
ஓ, அடையாற்றில் பாம்புப் படுக்கையில் இருந்து, அவளைத் தரைக்குத் தள்ளி வுட்டுட்டாரா? OMG! சரியான MCP-யா இருப்பாரு போல இருக்கே :)
கே ஆர் எஸ்,
சீதையிடம் மன்னிப்புக் கேட்டுருப்பாரா?
நோ ச்சான்ஸ்.
புள்ளைங்ககிட்டே வேணுமுன்னா கேட்டுக்கலாம். அதுவும் சந்தேகம்தான்.
வால்மீகிகிட்டே மட்டும்தான் கேட்டுருக்கணும்.
மனுச அவதாரத்துலே 'மனுசனாவே' நடந்துக்கிட்டால் இப்படித்தான்:(
எப்படியோ வெள்ளிக்கிழமைக்கு ராமாயணம் படிச்சாச்சாச்சு. அதுவும் உத்தர காண்டம். சீதையை இத்தனை அலங்காரத்தோடு நான் பார்க்கவில்லை துளசி. காட்டில விட்ட மேனிக்கு, ஒரு அரக்கு வர்ணபுடவையில் அம்போ என்று தனியாகத் தான் நின்றிருந்தாள். அப்போது பார்த்த போதும் வலித்தது. இப்போதும் அப்படியே.:( வெகு அழகு படங்கள் அனைத்தும். வளையல்கள் அதைவிட அழகு:)
வாங்க வல்லி.
அதென்ன அரக்கு வண்ணப் புடவை??????
பார்டர் என்ன? செல்ஃபா? சின்னதா மாங்காய் டிஸைன் ஜரி உண்டா இல்லையா?????
எனக்குத் தெரிஞ்சாகணும்:-))))))
நாட்டுமக்களில் ஒருவர், சீதையைப் பற்றிச் சொன்ன 'அவதூறு'
================
Raman அப்படி சொன்ன பேமானிய அங்கேயே காலில் இருப்பதை கழட்டி அடி பின்னாமல், Jesus, what a farce this has been made into...
அவதூறு சொன்ன தீய சக்தியை கண்டு பிடித்து நாக்கை அறுத்தார்களா இல்லையா?
நான் இந்த கோவிலுக்கு போன போது இது மாதிரி நிதானமா பார்க்க முடியலை. அம்மை அப்பனை தரிசித்து விட்டு, சரபேஸ்வரர் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிற்பங்களை பார்வையிட்டு முடிக்கவும் மணி இரவு ஏழு தாண்டி விட பெருமாள் தரிசனம் கொஞ்சம் விரைவாக செய்ய வேண்டியதாகி விட்டது. அன்று ஏதோ விசேஷம் . கூட்டம் வேறு. புள்ளைதாச்சியை பார்க்கவே இல்லை. மறுபடியும் ஒரு முறை போய் வந்து பதிவு எழுதனும்னு நினைசுகிட்டு இருந்தேன்.
அந்த வில்வ மரம் நிறைய காய்கள். பெருமாள் கோவிலில் வில்வ மரம், தனி சன்னதி பிள்ளையார் ( தும்பிக்கை ஆழ்வார் இல்லை ), புற்று இதெல்லாம் எனக்கு புதுசா தெரிந்தது. புற்று எப்படீன்னு யோசிச்சேன். நீங்க விளக்கம் கொடுத்திட்டீங்க.
தல புராணம் அங்கே அன்னிக்கு இல்லன்னு சொல்லீட்டாங்க. உங்களுக்கு கிடைச்சுதா ?
http://www.virutcham.com
வாங்க் ராஜ்.
நோ சான்ஸ்...... அப்படிப் பின்னி இருந்தால் 'கதை'வளர்ந்திருக்குமா?
என்ன ஒன்னு இந்த 'அவதூறு' சொல்லுவது என்பது இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னும் மாறவே இல்லை பாருங்க:(
அதிலும் பெண்களை ஏசணுமுன்னா............
ப்ச்.... என்னவோ போங்க:(
வாங்க விருட்சம்.
தலபுராணம் வாங்கிக்கலை. அதான் அனந்தகிருஷ்ண பட்டர் அட்டகாசமா எல்லா விளக்கமும் தந்துட்டாரே!
Dear Madam,
My computer doesn't support Tamil fonts. I really enjoyed the post and the comments. Of course, all the posts. sarala nadai -il onga tamil romba nalla irukuthuga. inimai!! thenattam!!
thanks.
Meena.
meena.sivaji@yahoo.com
Dear Madam,
My computer doesn't support Tamil fonts. I really enjoyed the post and the comments. Of course, all the posts. sarala nadai -il onga tamil romba nalla irukuthuga. inimai!! thenattam!!
thanks.
Meena.
meena.sivaji@yahoo.com
வாங்க மீனா.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
பேசாமக் கலப்பையை இறக்குங்குங்க கணினியில்.
அப்புறம் தமிழில் உழுதல் எளிது:-))))
கொசுறுத்தகவல்: இலவசம் இலவசம்
எல்லாமே இலவசம்:-)
Post a Comment