சென்னையில் இருந்து கிளம்பனுமுன்னு முடிவானதும் இதே கம்பெனியைக் கூப்பிட்டு ஒரு செலவுக்கான மதிப்பீடு கேட்டோம். ஒரு 'நல்ல தொகை' சொன்னாங்க. எதுக்கும் இன்னொரு கம்பெனியையும் கேக்கணுமேன்னு வேற ஒன்னிலும் மதிப்பீடு கேட்டோம். அவுங்க இவுங்களைவிட 25 குறைச்சுச் சொன்னாங்க. என்ன ஒன்னு, ரெண்டாவது கம்பெனி சாமான்களை ட்ரக்லே ஏத்தி அனுப்பிருவாங்க. இங்கே வந்ததும் அவுங்க நியமித்திருக்கும் ஏஜெண்டு க்ளியர் செஞ்சு தருவார். முதல் கம்பெனி சொல்லுச்சு, நாங்க சாமான்களை கண்டெயினர் ட்ரக்கில் ஏத்திட்டு, இங்கே இருந்து ஒரு நபரைக் கூடவே அனுப்புவோம். அவர் கடைசிவரை இருந்து எல்லாப் பெட்டிகளையும் பிரிச்சு அடுக்கி அந்தந்த இடத்தில் வைக்க ஏற்பாடு செய்வார்.. பரவாயில்லையே இது நல்ல ஏற்பாடா இருக்கே! ஆனாலும் கேட்கும் தொகையில் 25 வித்தியாசம்? கண்ணை உறுத்துச்சு.
முதல் கம்பெனியைக் கூப்பிட்டு உங்களைவிட குறைஞ்ச தொகைக்கு எனக்கு கொடேஷன் கிடைச்சுருக்குன்னதும், தொகையைக் கேட்டவங்க டகால்ன்னு 23 குறைச்சுக்கிட்டாங்க. ரெண்டுதான் இப்போ கூடக் கொடுக்கணும். ஆனா ஒரு ஆள் சாமான்களோடு கூடவே காவலுக்குப் போறாரே! அப்ப அதுதானே நல்லது. அதன்படியே ஆச்சு.
நாம் சொன்ன நாளில் ஆறுபேர் காலையிலே வந்தாங்க. பரபரன்னு பேக்கிங் ஆரம்பிச்சது. ரெண்டு நாளில் எல்லாத்தையும் பொதிஞ்சுட்டாங்க. முதலில் இங்கே இருந்து சாதா ட்ரக்கில் வண்டலூர் கொண்டுபோய் அங்கிருந்து கண்டெயினர் ட்ரக்கில் ஏத்தறதா ஒரு ஏற்பாடு. அதான் இங்கே நம்ம ஏரியாவில் கண்டெயினர் அனுமதி இல்லையாமே. ஆனா......
எப்படின்னு தெரியலை அன்னிக்கு மாலையே ஒரு கண்டெயினர் ட்ரக் வந்து வீட்டுமுன்னால் நின்னது. அதுலே வந்த ரெண்டு பேரில் ஒருத்தர் ட்ரைவர். ஹரியானாக்காரர். சரக்கு சண்டிகருக்குப் போகுதுன்னு சொன்னதும் அவருக்கு பயங்கர சந்தோஷம். அவர் வீடு அங்கே பக்கத்துலேதானாம். போய் ரொம்ப நாளாச்சு. இந்தமுறை போகச்சான்ஸ் கிடைச்சுருச்சுன்னார். ட்ரக் ட்ரைவர்கள் வாழ்க்கையை 'ஆராய்ஞ்சால்' அதுலே ஏராளமான 'கதைகள்' கிடைக்கும்!
இன்னொரு சின்ன வண்டியில் அஞ்சு இளைஞர்கள் வந்து இறங்குனாங்க. எதுக்கு? பொட்டிகளை வண்டியில் ஏத்த!!! அடுத்த ஒரு மணி நேரத்துலே எல்லாத்தையும் ட்ரக்கில் அடுக்கியாச்சு. பூட்டலாமுன்னா அதுலே தொங்கும் பூட்டைத் திறக்க முடியலை. நம்ம கிட்டே பூட்டு ஏதாவது இருக்கான்னு கேள்வி. பால்கனியில் நின்னு சம்பவத்தைக் கவனிச்சுக்கிட்டு நிக்கும் என்னிடம், பூட்டு ஏதாவது நம்மகிட்டே இருக்கான்னு கோபால் கேக்கறார். 'ஓ. இருக்கே! ட்ரக்குக்குள்ளே அடுக்குன பொட்டிகள் ஒன்னில் இருக்கு. எடுத்துக்குங்க'ன்னேன்.
'ஙே ..............'
கடையில் ஒன்னு வாங்கியாந்தால் ஆச்சு. அதுக்குள்ளே ஒரு ஸீல் எடுத்து இதைவச்சு ஸீல் பண்ணிறலாமுன்னார் ட்ரைவர் ராஜேஷ் ஷர்மா.
அப்ப வழியில் ஆக்ட்ராய் கட்ட திறந்து பார்க்கணுமுன்னா?
அது அப்பப் பார்த்துக்கலாம். பிரச்சனை இருக்காது. விவரம் எல்லாம் பக்காவா இருக்குன்னார்.
ஒன்னு சொல்ல விட்டுப்போச்சே. சாமான்களை எல்லாம் பேக்பண்ணி பெட்டிகளுக்கு நம்பர்ஸ் போட்டு பக்கவா லிஸ்ட் தயார் செஞ்சபிறகு, அதுக்கெல்லாம் வேல்யூ போடணும். இன்ஸூரன்ஸு எடுக்கணுமேன்னதும் லிஸ்ட்டை வாங்கிப் பார்த்த கோபால் ஒவ்வொன்னுக்கும் மதிப்பு போட்டார். சரியா இருக்கான்னு நான் செக் பண்ணால்.....விஸ்வரூபம் எடுக்க வேண்டியதாப் போச்சு. ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் நீங்களே புரிஞ்சுக்குங்க. 42 அங்குல ப்ளாஸ்மா டிவி அஞ்சாயிரம்:-)
அப்புறம் எல்லாத்தையும் மாத்தி எழுதி ............... ம்ம்ம்ம்ம்ம்ம்
சரி. வாங்க வாசலுக்குப் போலாம். ட்ரக்கு நிக்குதே. ட்ரைவர்கூட வந்தவர் சொல்றார், 'இப்போ வண்டியை எடுக்க முடியாது. ராத்திரி 11 மணிக்கு மேல்தான் இந்தத் தெருவில் போக அனுமதி. அதுவரைக்கும் இங்கேதான் இருக்கப்போறோம்'. காலி வீட்டுலே நாம் இருந்து என்ன செய்ய? சென்னையை விட்டுக் கிளம்பும்வரை ஹொட்டேலில் தங்க ஏற்பாடு இருக்கேன்னு நாங்களும் கிளம்புனோம்.
" சார். உங்க கண்முன்னாலேயே சாமான்களை ஏத்துனா நல்லதுன்னு அனுமதி இல்லாத நேரத்துலே ( கூட) எப்படியோ வண்டியை இங்கே கொண்டுவர வழிகாட்டினேன். என்னைக் கொஞ்சம் கவனிங்க"
"நீங்கதான் வண்டியில் கூடவே போறவரா?"
"இல்லீங்க. நான் ட்ரக்கை இங்கே கொண்டுவர 'வழிகாட்டுனேன்' . அதுக்கு வேற ஆள் இருக்கார் கூடவே போக"
வழிகாட்டிக்கு ஸ்பெஷல் கவனிப்பாமுல்லே!!!!!!
எல்லோரையும் 'கவனிச்சுட்டு', ட்ரைவரின் செல் நம்பர் வாங்கிக்கிட்டு நாங்க கிளம்பினோம். கம்பெனி 10 நாளாகுமுன்னு சொல்லுச்சு. ராஜேஷ் சொல்றார் அஞ்சே நாளிலே போயிருவேன்னு! பத்திரமாப் போய்ச்சேருங்கன்னு சொன்னோம்.
நாலாம்நாள் செல்லில் கூப்பிட்டால் டெல்லிக்கு சமீபமா இருக்காராம். பிரச்சனை ஒன்னும் இல்லைன்னார்.
நாங்க அஞ்சாம்நாள் மாலை டெல்லி வந்து சேர்ந்து அங்கிருந்து காரில் சண்டிகருக்கு வந்துட்டோம். ஹோட்டேலில் தங்கல். ஆறாம்நாள் செல்லில் கூப்பிட்டால் டெல்லியில்தான் இருக்காராம். ' மூவிங் கம்பெனியின் டெல்லி கிளையின் பொறுப்பு இனிமேலே'ன்னார். கம்பெனியைக் கூப்பிட்டப்ப, சண்டிகர் நகருக்குள்ளே வீடுகள் இருக்கும் பகுதிகளில் கண்டெயினர் வர அனுமதி இல்லை. நாங்க எல்லா சரக்கையும் சாதாரண ட்ரக்கில் மாத்தி அனுப்புவோம். பயப்படாதீங்க. எல்லாம் பத்திரமா வந்துருமுன்னு சொன்னாங்க. நாளைக்குக் காலையில் எட்டுமணிக்குச் சாமான்கள் வந்துருமுன்னு சொன்னதால் நாங்க காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்து, காலி வீட்டில் இருந்த ஒரே கட்டில் மேல் 'ஏறி' உக்காந்து விக்விக்குன்னு 'தேவுடு' காத்தோம்!
பொறுமை இழந்து 12 மணிக்கு கம்பெனியைக் கூப்பிட்டால்..........
ட்ரக் விபத்தில் மாட்டிக்கிச்சு:(
ஐயோ...... யாருக்காவது அடிபட்டுருச்சா?
சரியாத் தெரியலை. இங்கிருந்து ஆட்கள் புறப்பட்டுப் போயிருக்காங்க. அவுங்க தகவல் தெரிவிச்சவுடன் உங்களுக்குச் சொல்றோம்.
அன்னிக்கு ராத்திரிவரை தகவலும் வரலை. என்னடா வம்பாப்போச்சு? யாருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணுமேன்னு நமக்கோ மன உளைச்சல்.
காலையில் போன் செஞ்சா யாராவது எடுத்தால்தானே? ஒருவழியா பதினோரு மணிக்குத்தான் வேலைக்கு வறாங்கபோல இந்தப் பக்கங்களில். வெறுத்துப்போச்சுன்னு வையுங்க.
கொஞ்சம் விடுவிடுன்னு 'டோஸ்' கொடுத்தபிறகு தகவல் எங்களுக்கே ரொம்ப லேட்டாத்தான் வந்துச்சு. அகாலநேரமுன்னு உங்களைக் கூப்பிடலைன்னாங்க. த்தோடா......
ஒரு ஆளுக்குக் கொஞ்சம் அடி. ட்ரைவருக்கு ஒன்னும் ஆகலை. ட்ரக் ஒரு பாலத்துலே இடிச்சு பாதித் தொங்கிக்கிட்டு இருக்கு. அதுலே இருக்கும் சாமான்களை ரோடில் இறக்கி வச்சுக் காவலுக்கு ஆள் போட்டுருக்கோம். வேற வண்டிக்கு ஏற்பாடு நடக்குது. அதுலே ஏத்தி வீட்டுக்கு அனுப்பிருவோம். எப்படியும் நாளைக் காலையில் சாமான்கள் வந்துரும்.
எங்கே விபத்து ஆச்சு? எந்த ஊர்லே?
உங்க ஊருக்குள்ளே வரும்வழியில்தான். வீடு வந்து சேர ஒரு அரைமணி நேரந்தான் இருந்தப்ப, விபத்து நடந்துருச்சு.
அட ராமா......
மறுநாள் காலையில் வீட்டுக்கு வர்றோம். கொத்தவால்சாவடிக்குக் காய் வரும் வண்டிபோல கண்டாமுண்டான்னு சாமான்களை அடுக்குன ஒரு லாரி டார்ப்பாலின் போட்டு வாசலில் நிக்குது. கூடவே ரெண்டு சைக்கிள் ரிக்ஷா வேற !
அழகா அம்சமா ஏத்துன ட்ரக் எங்கே.....கடைசியில் வந்து நிக்கும் இது எங்கே!!!!
கம்பெனி லோகோ இருக்கும் சட்டையைப் போட்டுக்கிட்டு ஒரு நாலு பேர் வந்தாங்க. டார்பாலின் பிரிச்செடுத்து, சாமான்கள் வீட்டுக்குள்ளே வர ஆரம்பிச்சது. அவுங்களுக்கு எக்ஸ்ட்ரா உதவியா மூணு உள்ளுர் ஆளுங்க. எல்லாம் அந்த ரிக்ஷாவாலாக்கள்தான். கொஞ்ச நேரத்துலே இன்சூரன்ஸ் மதிப்பீடு பண்ண ஒருத்தர் வந்தார். கம்பெனி அனுப்பிச்சுருக்காம். விபத்து நடந்துபோச்சுல்லே!!!!
முதல்லே அந்த விபத்தில் சிக்கினவர் என்ன ஆனார்? விபத்து எப்படி ஏற்பட்டுச்சு? ன்னு கேள்விகளால் துளைச்சு எடுத்துட்டோம். ட்ரக் ஒழுங்காத்தான் வந்துக்கிட்டு இருந்துச்சாம். கம்பெனி ஆள் ஒருத்தர் (டெல்லிக் கிளை) கூட வந்துக்கிட்டு இருந்தார் கேபினில். எதிரில் ஆடிக்கிட்டே கண்ட்ரோல் இல்லாம ஒரு கார் வந்துருக்கு. அதுக்கு இடம்விட வண்டியை ஒடிச்சுத் திருப்பியிருக்கார் ட்ரைவர். அதிர்ஷ்டம் பாருங்க அப்போ சம்பவம் நடந்த இடம் ஒரு பாலம். வண்டிபோய் பாலத்துச்சுவரில் இடிச்சு அந்தப் பக்கம் நழுவி நிக்குது. முன் சக்கரம் இரண்டும் அந்தரத்தில். இடிச்ச வேகத்தில் விண்ட் ஸ்க்ரீன் உடைஞ்சு தூளாகவும், நிலை குலைஞ்ச கம்பெனி ஆள் அந்த ஓட்டையினூடே நழுவித் தெறிச்சு அங்கே இருந்து வெளியே கீழே தண்ணி இல்லாத பாலத்தடியில் விழுந்துருக்கார்:(
பின்பாரம் அதிகமோ என்னவோ வண்டி தலை குப்புற விழலை. ட்ரைவர் சமாளிச்சு இறங்கி இருக்கார். எல்லாம் அதிகாலை இருள்பிரியும் நேரத்துலே நடந்துருக்கு. அக்கம்பக்க மனிதர்கள் உதவிக்கு ஓடிவந்து கீழே பள்ளத்தில் இருந்தவரைத் தூக்கி இருக்காங்க. நல்ல காலம். உயிருக்கு ஆபத்து இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துருக்காங்க. மேல்கை எலும்பு தோள்பட்டைவிட்டு நழுவிருச்சு. டிஸ்லொகேஷன்.
விபத்துன்னு போலீஸ் வந்து, இவர் கம்பெனிக்கு விவரம் சொல்லி, அக்கம்பக்கத்து ஆட்களோடு சாமான்களை இறக்கி ரோட்டுலே வச்சுன்னு களேபரம். கம்பெனி உடனே அஞ்சு பேரை அனுப்பி வச்சுருக்கு என்ன ஏதுன்னு பார்க்கச் சொல்லி. அட! பரவாயில்லையேன்னு முதலில் நினைச்சேன். ஆனா.........
கண்ணாடிப் பாத்திரங்கள் உள்ள பெட்டிகளைப் பிரிக்க வேணாம். தேவையானதை மட்டும் பிரிச்சுக்கலாமுன்னு நாங்க ஒரு திட்டம் போட்டு வச்சுருந்தோம். ஆடியோ சிஸ்டம் பாக்ஸ்லேயே இருக்கட்டுமுன்னு இவர் சொல்ல. என் பங்குக்கு டிவியும் பாக்ஸ்லேயே இருந்துட்டுப் போகட்டுமுன்னு நானும் சொல்ல...கடைசியில் நாமொன்று நினைக்க வேறொன்று நடந்துருச்சு. இப்ப இன்சூரன்ஸ் மதிப்பீட்டுக்காக எல்லாத்தையும் பிரிச்சே பார்க்கணுமுன்னு ஆகிப்போச்சு.
பெரிய சோஃபா, நாற்காலிகள், மேசைகள், ஃப்ரிட்ஜ், கட்டில் எல்லாம் பிரிச்சு அந்தந்த இடத்தில் போட்டாச்சு. டிவி, கண்ணாடிக் கேபினெட், ஆடியோ சிஸ்டம், மைக்ரோவேவ் எல்லாம் ஒரு நடுக்கலோடுதான் பிரிக்கப்பட்டுச்சு. எல்லாம் வேலை செய்யுதான்னு செக் பண்ணிக்கணும். அதேபோல் அடுக்களைச் சாதனங்கள் பிரிச்சு அடுக்கினோம். ஒரு கண்ணாடி க்ளாஸ் உடைஞ்சுருந்துச்சு. என்னுடைய மடிக்கணினி மேசை கால் வளைஞ்சு போய் நாட்டியப்போஸில். சுத்தியல் வச்சுத்தட்டிக்கொட்டிச் சரி செஞ்சாங்க. இன்னும் ரெண்டு அலமாரிகள் டேமேஜ். ஆளைவிட்டு அனுப்பி ஃபெவிக்கால் வாங்கியாரச்சொல்லி அவுங்களே ஒட்டிக்கிட்டி ஒரு மாதிரி சரிபண்ணாங்க. இதுக்குள்ளே எதுவானாலும் நடக்கட்டும் என்ற ஞானியின் நிலையில் நான் இருந்தேன்.
மாலை அஞ்சரை ஆனதும் வேலை நேரம் முடிஞ்சுருச்சு. மீதி நாளைக் காலைன்னு எல்லோரும் போயிட்டாங்க. இதுவரை அவிழ்த்தெடுத்த கார்ட்போர்டு, பேப்பர்கள், அட்டைகள் பொட்டிகள் பபுள் ராப் எல்லாம் ஒழுங்கா மடிச்சு ரிக்ஷாவாலாக்கள் எடுத்துக்கிட்டுப்போனாங்க. நாங்களும் ஹொட்டேலுக்குப் போயிட்டோம்.
மறுநாள் காலை எட்டரைக்கு மறுபடியும் ஆட்கள் வந்து பாக்கி இருந்த எல்லாத்தையும் பிரிச்சு, அடுக்கின்னு சாயந்திரம் வரை வேலை இருந்துச்சு. ஒரு வழியா முக்கிய பொருட்கள் ப்ரிண்டர்ஸ், ஸ்கேனர்ஸ் எல்லாம் வேலை செய்யும் கண்டிஷனில் இருக்கான்னு செக் பண்ணி மனசமாதானம் ஆச்சுன்னு வையுங்க. கோபாலுக்கு இந்தியாவில் ஹோம் ஆஃபீஸ் என்றபடியால் ஃபைல்ஸ், இன்னும் தேவையான மற்ற உபகரணங்கள்ன்னு அதுவே கால் ட்ரக் சாமான்களா இடம்பிடிச்சுருந்துச்சே! இந்த அழகில் என்னோட தையல் மெஷீன், ஓவர்லாக்கர், தையல் கேபினெட் இன்னபிற பொருட்கள் வேற. என்னமோ தைச்சுக் கிழிக்கற மாதிரி! (இன்னும் அந்த ரெடிமேட் தொடரை முடிக்கலை)
ரொம்ப ஒன்னும் டேமேஜ் இல்லை. போகட்டுமுன்னு சொல்லிட்டார் கோபால். க்ளெய்ம் பண்ணனுமுன்னா அதுக்கு நாம் ஒரு excess சார்ஜ் கட்டணுமில்லேன்னார். தொலையட்டுமுன்னு விட்டாச்சு. டெல்லி ஆட்கள் கிளம்பும்போது , ஒரு பேச்சுக்காக எப்ப டெல்லி போவீங்கன்னு கேட்டேன். இப்படியே நேராக் கிளம்பிடுவோம். நிறைய பஸ் இருக்கு. ராத்திரி போய்ச் சேர்ந்துருவோம்ன்னாங்க. ஏன்? முந்தாநேத்து நீங்க வந்த கார் எங்கேன்னா.....அப்பவும் பஸ்ஸுலேதான் வந்தோம் மேடம்ன்னாங்க.
அட ராமா!!!!! அவசர உதவிக்கு அரசாங்க பஸ்ஸா? கிழிஞ்சது போங்க. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு விபத்துன்னா பாய்ஞ்சு வரவேணாம்? அங்கே HR பிரிவு இல்லையா? இல்லே இது இந்தியா. இங்கே எல்லோரும் ஒன்னுபோல. மக்கள் உயிர் (அதாவது அரசியல்வியாதிகளைத் தவிர மற்ற பொதுமக்கள்) என்ற ஒன்னு இருக்கே அதுக்கு மதிப்பே கிடையாது. ரொம்ப சல்லிசு. ரூபாய்க்கு 1000 ன்ற கணக்கு:(
மறுநாள் நாங்க அறையைக்காலி செஞ்சுட்டு வீட்டுக்கு வந்தோம். ' ஒரு பத்துப்பதினைஞ்சு நாளா ஆக்கி அரிக்கலையே...பழக்கம் விட்டுப்போச்சுன்னா மீட்டெடுப்பது கஷ்டமாச்சே' ன்னு சோறு ஆக்க குக்கரை (மைக்ரோவேவ் குக்கர்) எடுத்தால்..... அடியில் பெரிய விரிசல்! போயிட்டுப்போகுது. இன்னொண்ணு இருக்கே அது போதுமுன்னு பார்த்தால் அதுலே அடிப்பகுதியில் ஒரு 'துண்டை'க் காணோம்!!!!!
'அப்பாடா..... சமைக்கும் வேலையில் இருந்து தப்புனோம்' என்ற உள் மகிழ்ச்சியிடன், முகத்தைக் கொஞ்சம் சோகமா வச்சுக்கிட்டு 'குக்கர்கள் எல்லாம் உடைஞ்சுபோச்சு. சமைப்பதெப்படி'ன்னு 'அப்பாவியாக் கேட்டேன்.
PIN குறிப்பு: இங்கே சரவணபவன்கள் இல்லை:(
நத்தை போல வீட்டையே தூக்கிட்டுப்போனால் இப்படித்தான்....... ஆனாலும் மூவர்ஸ் என்றொரு அற்புதம் நல்லாத்தான் இருக்கு.
Tuesday, June 01, 2010
நத்தை மனிதராகிறோம்!!! (தொடர்ச்சி)
Posted by துளசி கோபால் at 6/01/2010 03:22:00 PM
Labels: Chandigarh, Chennai, அனுபவம் movers
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
:-(
புதுக் குக்கர்கள் வாங்கிட்டீங்களா டீச்சர்?
வாங்க ரிஷான்.
இல்லை. இன்னும் வாங்கலை.
கொண்டுவந்ததுலே ஒன்னு வேற பொட்டியில் இருந்து உடையாமல் கிடைச்சது!
ஒவ்வொன்னுக்கும் மதிப்பு போட்டார். சரியா இருக்கான்னு நான் செக் பண்ணால்.....விஸ்வரூபம் எடுக்க வேண்டியதாப் போச்சு. ஒரே அப்பாடி,சாமி,வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு மாற்றலைச் சொல்ல முடியலை பாத்தீங்களா. ஊருக்கு வந்ததிலிருந்து ஒரே விபத்து செய்திகள் தான்.மனச் சங்கடம் சொல்லி முடியாது. பேப்பர் வாங்காம இருந்துடலாம்னு தோணுது.
உங்களை யாரும் சரித்திரம் எழுதலைன்னு சொல்ல முடியாது. நீங்க அதைப் படைச்சிக் கிட்டே, ரெகார்டும் செய்யறீங்க.!ஒரு //:))
// 'ஓ. இருக்கே! ட்ரக்குக்குள்ளே அடுக்குன பொட்டிகள் ஒன்னில் இருக்கு. எடுத்துக்குங்க'ன்னேன்.//
சுமார் 40 ஆண்டுகட்கு முன்பாக ஆடிடிங் சம்பந்தமாக, ஸர்ப்ரைஸ் செக் பண்ணுவதற்காக ஆந்திராவில்
உள்ள ஒரு அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.
அலுவலக காஷ் பாக்ஸ் கீயை மிஸ் ப்ளேஸ் செய்துவிட்டதாகவும் (தொலைத்துவிட்டதாகவும்) அது சம்பந்தமாக வங்கி கிளை அலுவலகத்தாருடன்
பேசிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். வங்கியின் லாக்கரில் அலுவலக காஷ் பாக்ஸ் கீயின் டூப்ளிகேட்டை
வைத்து ஒவ்வொரு வருடமும் அதை புதுப்பித்தும் மாற்றிக்கொண்டும் இருக்கவேன்டும் என்பது அலுவலக விதிகளில்
ஒன்று.
" இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. உங்களிடமிருக்கும் சர்டிபிகேட்டைக் காண்பித்து, அந்த லாக்கரைத்
திறந்து அந்த டூப்ளிகேட் கீயை எடுத்து காஷ் பாக்ஸை திறக்கவேண்டியது தானே ? " என்றேன்.
அது முடியல்லையே ! அந்த சர்டிபிகேட்டையும் அந்த லாக்கரில் அல்லவா வைத்துவிட்டோம் " என்றார்
அலுவலக அதிகாரி.
நிற்க. கமென்ட் அடிக்க பல சுவையான செய்திகள் இருப்பதால், அவற்றினை இன்ஸ்டால்மென்ட் ஆக
எழுதுகிறேன்.
தொடரும்.
சுப்பு ரத்தினம்.
//கொண்டுவந்ததுலே ஒன்னு வேற பொட்டியில் இருந்து உடையாமல் கிடைச்சது//
இந்த சமையல் வேலையிலிருந்து தப்பிக்கவே முடியாதா:-)))))
//42 அங்குல ப்ளாஸ்மா டிவி அஞ்சாயிரம்:-)//
எங்கே கிடைக்குதுன்னு அண்ணாகிட்ட கேட்டுச்சொல்லுங்க :-)))
விபத்து நடந்தது பரிதாபம்தான். நல்லவேளை உசிருக்கொண்ணும் ஆபத்தில்லை.
நீங்க இப்பத்தான் முதல் தடவையா நம்ம நாட்டுல வீட்ட ஷிஃப்ட் பண்றீங்களா? எனக்கு சுமார் ஒரு பத்து தடவ ஷிஃப்ட் செஞ்ச அனுபவம் இருக்கு. அனுபவமா அது? ஒவ்வொரு தடவையும் பிரசவ வேதனைதான்.
இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் மாறியது இல்லை அதனால் உங்கள் அனுபவம் எங்களுக்கு நிச்சயமாக உதவும் டீச்சர்.மைக்ரோவேவ் குக்கர் எனக்கு இது புதிது எப்படி பயன்படுத்துவது டீச்சர்.
துளசீம்மா! நீங்க ஒரு சரியான நியூஸி தான்!
உங்கள் சென்னை வீட்டுக்கு வந்த கன்டெய்னர், வண்டலூரிலேயே காலி செய்யப்பட்டு, சண்டிகரில் நீங்கள் பார்த்த லாரியில் ஏற்றப்பட்டுவிட்டது. இந்த பாக்கெர்ஸ் கதை சொல்வதில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரக்குமார் போன்றவர்களை இருக்குமிடம் தெரியாமல் அடித்துவிடுவார்கள். நமக்குத்தெரியாமலே ந்ம் காதில் எட்டுமுழம் பூவைச்சுற்றுவார்கள். சண்டிகரில் பாலத்தருகே ஆக்ஸிடென்ட் எல்லாமே கதை! நல்ல கதைசொல்லிகள்!
ஆனானப்பட்ட மூவர்ஸ் அன்ட் பாக்கெர்ஸ் ஆட்களிடம், இதைவிட சுவாரஸ்யமான கதைகளைக்கேட்டிருக்கிறேன்.நீங்கள் ரொம்ப லக்கி! குக்கர் அவன் அடியைத்தானே காணோம்!
நல்லகாலம், உங்கள் தலைப்பாகையோடு போயிற்று! அனுபவப்பட்டவன் சொல்றேன்!
பாரதி மணி
Bharathimany said:
//உங்கள் சென்னை வீட்டுக்கு வந்த கன்டெய்னர், வண்டலூரிலேயே காலி செய்யப்பட்டு, சண்டிகரில் நீங்கள் பார்த்த லாரியில் ஏற்றப்பட்டுவிட்டது. இந்த பாக்கெர்ஸ் கதை சொல்வதில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரக்குமார் போன்றவர்களை இருக்குமிடம் தெரியாமல் அடித்துவிடுவார்கள். நமக்குத்தெரியாமலே ந்ம் காதில் எட்டுமுழம் பூவைச்சுற்றுவார்கள். சண்டிகரில் பாலத்தருகே ஆக்ஸிடென்ட் எல்லாமே கதை! நல்ல கதைசொல்லிகள்!//
exactly !
meenatchi paatti.
http://ourceebrosgarden.blogspot.com
வாங்க வல்லி/
சரித்திரம்? ஊஹூம்.....
சமையலை செஞ்சுக்கிட்டே ........ன்னு சொல்லிக்கவா? :-)))))
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அதுதான் டபுள் ப்ரொடக்ஷன்!!!!
ரெண்டடுக்குப் பாதுகாப்பு:-)))))
வாங்க அமைதிச்சாரல்'
தப்ப முடியாது. அதான் தமயந்தி நம்மையெல்லாம் பழிவாங்கிட்டாளே....
கோபாலண்ணா...கலியுகக்கர்ணன்:-))))
கேட்டுச்சொல்றேன்.
வாங்க டி. பி.ஆர்
28 வருசத்துக்குப்பிறகு முதல் முறையா மாநிலம் விட்டு மாநிலம்.
இப்பச் சாமான்கள் வேறு கூடிப்போச்சே. அதான் வேதனையும் கூடி இருக்கு:(
வாங்க சுமதி.
எல்லாம் ப்ளாஸ்டிக்தான். பிரமாதமில்லை. ஆனால் சுலபமா சோறாக்க முடியுது.
நமக்காகவே சீனர்கள் அன்பு மேலிட்டு செஞ்சனுப்பறாங்க.
இப்ப இங்கே சென்னையில் ஒன்னு பார்த்தேன். இட்லிகூட செய்ய குழித்தட்டோடு ஒன்னு கிடைக்குது. இது லோக்கல் சமாச்சாரம்.
நீங்க அமெரிக்காவா? வால்மார்ட்லே தேடுங்கள். கண்டடைவீர்கள்.
வாங்க பாரதி மணி ஐயா.
ஹா.... அப்டீங்கறீங்க!!!! இருக்குமோன்னு எனக்கு இப்போ தோணுது. ஆனா கோபால் இருக்காதுன்னு சாதிக்கிறார்.
இந்தக் கம்பெனிகள் எல்லாம் இப்போ ஒரு 10 வருசத்துலே இங்கே இந்தியாவுக்கு வந்தவை. அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க.
அந்தக் காலத்துலே வேணுமுன்னா அப்படி நடந்துருக்கச் சான்ஸ் உண்டு.
அப்டி இருந்தால் ஒரு சாமான்கூட உருப்படியா வந்தே இருக்காதுங்கறார். இதுசம்பந்தமா எத்தனை பேரோட ஃபோனிலே பேசுனோம். பெரிய கம்பெனி வேற எல்லோருமா குழுவாவா பொய் சொல்வாங்கன்றார்.
கோபால் சரியான நியூஸிக்காரர். நாந்தான் கொஞ்சம் இப்படி அப்படி:-)
நியூஸி ஆட்கள் ரொம்ப naive.
இப்ப வீட்டுவிவாதத்துக்கு அருமையான டாபிக் கிடைச்சுருச்சு உங்க தயவால்:-)))))
கோபால் பாவம். 3 அகைன்ஸ்ட் 1
வாங்க மீனாட்சி அக்கா.
நீங்களும் அந்த 3 யில் ஒன்னு:-)))))
i support gopal sir all the time :)
வாங்க எல் கே,
2 x 3
சாமான்கள் ஒட்டுப்போட்டாச்சு. :(((((((((
வாங்க மாதேவி.
சாமான்களை ஒட்டுப்போட்டாச்சா?
ஹௌ ஹௌ ஹௌ?????
Post a Comment