Monday, June 21, 2010

கொத்தவால்சாவடியும் கோயம்பேடும் பின்னே சண்டிகரின் ஸப்ஜி மார்கெட்டும்

தோழி வீட்டில் ஏதோ விசேஷம். இதுலே எல்லாம் பங்கெடுக்காம இருக்கவே மாட்டேன். உதவிக்கு உதவி அதேசமயம் புது இடம், நிகழ்வு எல்லாம் பார்க்கும் ஆசை.(பதிவராகும் லக்ஷ்ணம் அப்பவே இருந்துருக்கு.!)

காய்கறிகள் எல்லாம் கொஞ்சம் கூடவே வாங்கணும் போலாமுன்னு கொத்தவால் சாவடிக்குப் போனோம். அப்பெல்லாம் ரயில், பஸ் எல்லாத்துலேயும் நாம் ஏறிப்போகலாம். இப்போ அதுல்லே நம்ம மேலே ஏறுது:( கோட்டை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து நடை. வெளியூர் போகும் பஸ் ஸ்டாண்டு நடந்து போகும் தெருவில் பாதி வழியில் வரும்.

பூக்கடையை ஒட்டி வெளிப்பபுறத்தில் ஏழெட்டு மளிகை சாமான்கள் விற்கும் கடைகளும் இருந்துச்சு. அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' சாலையைக் கடந்து எதிர்ச்சந்துலே ( இதுவும் ஒரு தெருதான். ஆனால் அப்போவே இடக்கு மடக்காச் சின்னச் சந்துபோல இருக்கும்)நுழைஞ்சு போய்க்கிட்டே இருந்தால் எப்போ நம்ம காலடியில் வாழைச்சருகுகள் நம்ம செருப்பில் சிக்கி நம்மை விழவைக்குதோ அப்போ, மார்கெட் வந்தாச்சுன்னு பொருள். இதுக்குப்பெயர் கொத்தவால் சாவடி. வெளியூர்களில் இருந்து வரும் லாரி லோடுகள் ஓயாம வந்து நிக்கரதும் சரக்கு இறக்கறதுமா ஒரே இரைச்சலும் ரகளையுமா இருக்கு. கொண்டு போகும் சுமைகளின் கனம் தாங்காமல் ஒரு ஓட்டம், கத்தல், இடித்தல்ன்னு பயமா இருக்கு எனக்கு.

என்னடி இந்த மாதிரி இருக்குன்னா.... இன்னிக்கு அவ்வளவாக்கூட்டம் இல்லென்றா புண்ணியவதி. ரொம்ப உள்ளே போகாமல் அங்கங்கே சாக்குப்பைகளில் குவிச்சு வச்சுருந்த காய்கறிகளை வாங்கிக்கிட்டுத் திரும்புனோம். சின்னச்சின்னதா கோலிகுண்டுகள் போல இருந்த உருளைக்கிழங்கு மட்டும் எனக்கு நல்லாவே நினைவில் இருக்கு. இதை எப்படித் தோல் உரிக்கப்பாங்கன்னு என் கவலை.

உருளைக்கிழங்கு தோலுரிக்கன்னதும் எனக்கு எங்க பாட்டி மனசுலே வந்துருவாங்க. நம்ம வீட்டில் வெந்த உருளைக்கிழங்கை உரிச்சுத்தரச்சொல்லி சித்தி கெஞ்சறதும், பாட்டியோடு உக்கார்ந்து நாங்க ஒரு கை கொடுப்பதும் வழக்கம். நாங்க உரிக்கும் அழகுக்கு, அப்போ பாட்டி தவறாம ஒரு கதை சொல்வாங்க.

அந்தக் காலத்துலே பொண்ணு பார்க்கப் போகும்போது ஒரு வீசை உருளைக்கிழங்கை (வேகவச்சது) உரிச்சுக் காட்டச் சொல்வாங்களாம். 'தோலை மட்டும்' நிதானமா உரிச்சு, கிழங்கு நல்லா மொழுமொழுன்னு இருந்தால் பொண்ணு நல்ல சிக்கனமானவளா இருப்பாளாம். இந்தக் கணக்கில் பார்த்தால் எனக்குக் கல்யாணமே நடந்துருக்காது.

அதெல்லாம் உரிக்க வேண்டாம். நல்லாக் கழுவிட்டு அப்படியே தோலோடு ஒரு சாக்குப்பையில் வச்சுத் தேய்ச்சால் போதும். முக்காவாசி அப்படியே தோலெல்லாம் தனியா வந்துரும் அதை வேகவச்சு முழுசுமுழுசாவே கறி பண்ணிடலாம். இதுக்குப் பெயர் ball பால் கறின்னாள் தோழி. எல்லாத்துக்கும் என்னைப்போலவே அவளும் பெயர் வைப்பதில் கில்லாடி.

இது நடந்து ஏகப்பட்ட வருசங்களுப்பிறகு கொத்தவால் சாவடியை கோயம்பேடுக்கு மாத்திட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். சென்னைக்கு ஒரு சமயம் வந்தபோது, நம்ம மாமியின் மருமகள் சொன்னாங்க, சாலிக்கிராமத்துலே இருந்து கோயம்பேடு மார்கெட் ரொம்பப் பக்கம்தான். சனிக்கிழமைகளில் போய் வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்துருவோம்.. ஒரு சனிக்கிழமை அவங்களோடு போய்ப் பார்க்கணுமுன்னு நினைச்சேன். ஆனால் கூட்டம் வருமுன் காலையில் போயிட்டு வந்துருவாங்களாம். எட்டுமணிக்குப்போனால் சரியா இருக்குமுன்னு சொன்னாங்க. நானோ, தி.நகர் கெஸ்ட் ஹவுஸில் இருக்கேன். எப்போ கிளம்பி எப்போ போறதுன்னு சோம்பலால் போகலை.

அடுத்தமுறை என் சென்னை விஜயத்தில், அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு பெற்று இந்தியாவுக்கே வந்துட்டார். வீடும் கோயம்பேடு குமரன் நகரில். ஒருநாள் வேற எங்கியோ போகும் வழியில் வளைவு வளைவா ஒரு கட்டடம் இருப்பதைப் பார்த்து, இதை சினிமாவில் பார்த்துருக்கேன்''னேன். இதான் கோயம்பேடு மார்கெட்''ன்னாங்க அண்ணி.

அட! உள்ளே போய்ப் பார்க்கலாமான்னு ஆசையாக் கேட்டேன். வெற்றுகிரக ஜீவி ஒன்னு வண்டிக்குள்ளே உக்கார்ந்துருக்கோன்ற மாதிரி ஒரு பார்வை பதிலாக் கிடைச்சது. நான் கப்சுப்:(

சண்டிகர் வந்த புதுசு. காய்கறி வாங்க எந்த செக்டர் போகணும்? விசாரிச்சதுலே 26ன்னு பதில் வந்துச்சு. சலோன்னு கிளம்பிப்போனால்......
சொல்லமறந்துட்டேனே.... இங்கெல்லாம் கடைக்குப்போனால் நாம் பை எடுத்துக்கிட்டு போகணும். வெறுங்கை வீசிக்கிட்டுப்போய் .பால் தயிர் மோர் கொண்டுவந்து ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சு. சண்டிகர் வீதிகள் புண்ணியம் பண்ணலை. அபிஷேகம் ஜஸ்ட் மிஸ்டு.

கூட்டம் முண்டியடிக்கும் இடத்துலே பார்க்கிங். நம்மைப் பார்த்ததும் ஒரு பொடிப்பயல் (அஞ்சு வயசு இருக்கும்) ஓடிவந்து மூணு கட்டுக் கொத்தமல்லி பத்துரூபாய். போணியே ஆகலைன்னு அழமாட்டாக்குறையாச் சொல்லுது. குச்சிகுச்சியா கொஞ்சூண்டு இலைகள். ஐயோன்னு வாங்கிட்டேன். நாலு எட்டுலே அட்டகாசமா பசேல்ன்னு அடர்த்தியான கட்டுகளா வச்சு அதே பத்து ரூபாய்க்கு மூணு. கோபால் சட்னு என்னைத் திரும்பிப்பார்த்ததை நான் கவனிக்காதது போல நெத்தியை மட்டும் நாசுக்காத் துடைச்சுக்கிட்டேன்:-)
ஒப்பனைகள் சிறிதுமில்லாத கிராமத்து முகங்களைப் பார்த்தேன். நேரடி விற்பனை. இதைத்தரகர்கள் இல்லை. விலையும் மலிவுதான். ஆனால் காய்கறிகள் எல்லாமே குறைஞ்சது ஒரு கிலோ வாங்கணும். உருளைக்கிழங்கு வெங்காயம் என்றால் மினிமம் ரெண்டு கிலோ. பூண்டுக்குவியலில் பற்களாக ஒரு குப்பல். அது மட்டும் அரைக்கிலோ.
வெள்ளரிக்காய் பெருசும் சிறுசுமா ரெண்டு வகைகள், முள்ளங்கி, தக்காளி, சுரைக்காய், திண்டா, கத்தரிக்காய், பாவக்காய், கீரைவகைகள், வெண்டைக்காய், குடமிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், சேப்பங்கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய் இப்படி இருக்கு இன்றைய நிலவரம்.

பலாப்பிஞ்சுகளை ஒரு இடத்தில், நமக்குத் தேவையானதைச் சொன்னால் அழகா தோலை வெட்டி வீசிட்டு, துண்டு போட்டுத் தர்றாங்க. இது கிடைக்குதுன்னா..... பலாப்பழமும் கிடைக்கும்போல இருக்கேன்னாலும் பிஞ்சுகளின் குவியலைப் பார்த்தால் பழுக்க விடமாட்டாங்க போல இருக்கே:(
முலாம்பழம் இப்போ சீஸனாம். மாம்பழமும் இருக்கு. வகைகளின் பெயர்கள்தான் புதுசு புதுசா. ரெண்டரைக்கிலோ நூறு ரூபாய். ஸஃபேதா. நறுக்கினால் உள்ளே வெள்ளையாக இருக்குமாம். (க்ரீம் நிறத்தில் பழுப்புவெள்ளையாக இருந்துச்சு) தஸ்ஸேரா, கேஸர், சிந்தூரா இப்படி.


இது ஸஃபேத்தா
இது தஸ்ஸேரி


இது சிந்தூரா

ஊர்முழுக்க மாமரங்கள் நிக்குதே! அதுலே இருந்து என்ன வகை வருமாம்? க்யா மாலும்!

செக்டர் 33 D யில் ஞாயிறுதோறும் சந்தை. அதையும் தேடி ஒரு நாள் போனோம். லிச்சிப்பழங்கள் வரத்தொடங்கி இருக்கு. கிலோ நூறு. வெயிலில் உலராமல் இருக்க தண்ணியிலே போட்டு வச்சுருக்காங்க. பக்கத்து வீட்டு மரத்துப்பழத்தைவிட பெரிய சைஸ்!
லிச்சி/லைச்சி (கிவீஸ் உச்சரிப்பு)
தர்பூசணிப்பழங்களும் இளநீரும் குவிஞ்சுருக்கு. இந்தக் கடும்கோடையைச் சமாளிக்க இயற்கையின் வகைவகையான சிருஷ்டி.
'விண்டோஸ் 2010' ஜன்னல் வச்ச மக்காச்சோளம் கிடைக்குது.

வாதுமைப்பழம்

ஒருநாள் நல்ல பழக்கடை ஒன்னு கண்ணில் பட்டது. நம்மூர் பங்கனபள்ளி, தாய்லாந்துலே இருந்து வரும் மெகா சைஸ் கொய்யாப்பழம், சீன இறக்குமதியான ஸ்வீட் புளி, வாதுமைப்பழம் இப்படி சிலவகைகள். இந்தப் புளியிலே குழம்பு வச்சா நல்லாவா இருக்கும் என்ற என் கேள்விக்கு இங்கே நமக்குக் கிடைச்ச புதுத் தோழி சொன்னது , அது அப்படியே சாப்பிடவாம்!!! இவுங்க நம்ம செக்டரில் பால்பூத்துக்கு எதிர்வீட்டில் இருக்காங்க. புன்னகைத்துச் சின்ன அறிமுகத்தோடு நட்பாகிட்டோம்.

சீனப்புளி

"எவ்ரி டே ஐ கோ ஃபார் அ வாக். பட் நோ ஒன் டாக்ஸ் டு மீ மேத்தோ..பெங்காலி ஹைனா...... "

' ஆர் ராங், மிஸஸ் பானர்ஜி........ பீப்பிள் டாக் டு மீ'ன்னு மடல் அனுப்பணும்:-)

இங்கே கருவேப்பிலை கடையில் இல்லவே இல்லை. விசாரிச்சுக் களைத்த நிலையில் புதுத்தோழி நீருவிடம் சொன்னால்..... வீட்டு வாசலில் நிக்கும் செடியைக் காமிச்சு, 'இஸ் மே ஸே தோட் கி ஜாயியே. சாம்பார் ரஸம் மே ச்சோடேங்கேத்தோ பஹூத் டேஸ்ட்டி ஹோத்தா ஹை' ன்னாங்க. ஆஹாங்...... அப்படியா?

"எப்ப வேணுமுன்னாலும் பறிச்சு எடுத்துக்கிட்டு போங்க. பூரா துனியா தோட் கி ஜாதா யஹாங் ஸே."

ஓஹோ......தேங்க்ஸ் ஜி.

நம்ம செக்டரில் வீட்டுவீட்டுக்கு மரம் இருக்காம். ஒரு மழை வரட்டும்.புதுசாக் கன்றுகள் முளைக்கும். தரேன்னாங்க. யோசனையுடன் நம்ம வீட்டுக்குள் நுழைஞ்சால் கேட்டுக்கதவை ஒட்டிய பகுதியில் என் இடுப்பளவு உசரத்துலே ஒரு செடி எட்டிப்பார்க்குது.

நம்ம பேட்டைக்குப் பக்கத்துலேயும் ஒரு மார்கெட் இருக்கு. ஆஸாத் மார்கெட். நம்முடைய சின்னத்தேவைகளுக்கு இனி அதுவே போதும். கிலோக் கிலோவா வாங்கி, சாப்பிட ஆளில்லாமல் தூக்கிப்போடணுமா என்ன?

இங்கே எங்கு தேடியும் நம்மூர் பழமுதிர்ச்சோலை போல ஒன்னைக் காணோம். அதுலே காய்கறி, பழங்களை எடைபோடும் விதம் ஒரு எரிச்சலைத் தந்தாலும் அது எவ்வளவோ தேவலைன்னு இருக்கே. நிழலின் அருமை இந்த வெயிலில் தெரிகிறது!


காலநிலை: கடுமையான வெய்யிலைத் தவிர வேறொன்னையும் காணோம். அதே 45 டிகிரி. மழை இன்னும் மும்பையை விட்டுப் பயணப்படலை:( இந்த மாசக்கடைசி வரை இப்படித்தானாம்.

46 comments:

said...

டீச்சர்,

எங்க போனாலும் கேமராவோடு தான் போவீங்க போல...

உங்களோடு பயணிக்கும் நடை ...

said...

WOW! Very nice photos!
ஊரை அப்படியே கண் முன்னாலே கொண்டு வந்துட்டீங்களே.....!!!


ஆமாம், உருளை கிழங்குல தோல் உரிக்கிரதுல, இத்தனை சமாச்சாரமா?

said...

இர‌ண்டு பேருக்கு கிலோ க‌ண‌க்கில் வாங்கினா எப்ப‌ காலி ப‌ண்ணுவ‌து? மாத‌ம் ஒரு முறை தான் காய்க‌றி ப‌ர்சேஸ்!!
இங்கும் வெய்யில் தூக்கி அடிக்குது.சென்னையில் இருந்து வ‌ந்த‌ வீட்டுக்கார‌ம்மாவுக்கே கொடுமையாக‌ இருக்காம்.

said...

கொத்தவால் சாவடியின் கொத்தமல்லி கீரைக்கட்டு மணம் அப்போ எவ்வளவு நல்லா இருந்தது. நான் சொல்கிறது 45 வருஷத்துக்கு முன்னாடி:)
அப்புறம் கோயம்பேடும் போனேன். ரொம்ப அந்நியமாத் தெரிஞ்சது மாங்காடு போகும்போதெல்லாம் வேண்டாத அத்தனை காய்கறிகளையும் வாங்கி, பிள்ளைகளைப் படுத்தின அனுபவமும் உண்டு.
இந்த மார்க்கெட் நல்லா இருக்கேப்பா.
அந்தப் பையன் மாதிரிப் பசங்க நம்ம சரவணபவன் வாசலில் பூ விக்கிறவங்களோட உறவுகளாம்:)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். மாம்பழம்ம்ம்ம்ம். ரொம்ப நல்ல் போட்டோக்கள் துளசி.

said...

Madam,

watermelon section is Missing,
pls wirte something about that also,

said...

//
போய்க்கிட்டே இருந்தால் எப்போ நம்ம காலடியில் வாழைச்சருகுகள் நம்ம செருப்பில் சிக்கி நம்மை விழவைக்குதோ அப்போ, மார்கெட் வந்தாச்சுன்னு பொருள்
//

:-)

said...

wooow maa romba naal kazhichu ippothan unka thalam paarthen so nice maa ,. ungaloda newsland book padichittu thiruppi comment adikiren ,. atttai mugappai paarkirappave newland bookla niraya visyam irukum pola padichittu solren

said...

// லிச்சிப்பழங்கள் வரத்தொடங்கி இருக்கு. கிலோ நூறு//

எங்கூர்ல டஜன் நாப்பது ரூபாய். கூட்டிக்கழிச்சுப்பாத்தா கணக்கு சரியா வரலியே :-((

மும்பையிலிருந்து மழையை, மூணு நாள் முன்னாடியே ஃப்ளைட் ஏத்தி அனுப்பியாச்சே. இன்னும் வந்து சேரலியா :-)))))

said...

எங்க ஊர் மார்கெட்ல ஒரு ரவுண்ட் அடிச்சா மாதிரி இருந்துச்சு. இங்க வருண பகவான் அட்டடெண்டன்ஸ் கொடுத்தாச்சு. சும்மா கூலா இருக்கு. அத மட்டும் சொல்லிக்கிறேன்.

said...

நல்லா தான் இருக்கு அந்த ஊரு மார்கெட்டும் ;)

said...

லிச்சி, வாதுமைப்பழம் இங்கில்லை.

said...

காய்கறிகளை பச்சை பசேல்னு பாக்கும்போது நம் ஊர் மார்கெட்டுக்கு மனம் ஏங்குது டீச்சர்.

said...

துளசீம்மா! உங்க போட்டோக்களைப்பார்த்ததும், சில வருடங்களாக சென்னையில் நான் மிஸ் பண்ணும், தஸ்ஸேரி, லங்டா,ஸஃபேதா மாம்பழங்களை படத்திலேயாவது பார்க்கமுடிந்தது. உங்களைப்போல நானும் எந்த ஊருக்குப்போனாலும், காய்கறி மார்க்கெட்டுக்கு போய்விடுவேன். அம்பாரமாக அடுக்கியிருக்கும் காய்கறிகளைப்பார்ப்பதே சந்தோஷமாக இருக்கும்!

பஞ்சாபிகளுடன் நெருங்கிப்பழகினால், உயிரையே கொடுப்பார்கள்!

பாரதி மணி

said...

அதென்ன இளநீருக்கு பிளாஸ்டிக் கவரெல்லாம் போட்டு லேபிள் ஒட்டியிருக்கிறார்கள்?

said...

அந்தக் காலத்துலே பொண்ணு பார்க்கப் போகும்போது ஒரு வீசை உருளைக்கிழங்கை (வேகவச்சது) உரிச்சுக் காட்டச் சொல்வாங்களாம். 'தோலை மட்டும்' நிதானமா உரிச்சு, கிழங்கு நல்லா மொழுமொழுன்னு இருந்தால் பொண்ணு நல்ல சிக்கனமானவளா இருப்பாளாம். இந்தக் கணக்கில் பார்த்தால் எனக்குக் கல்யாணமே நடந்துருக்காது.//

குத்துவிளக்குல உள்ள எத்தனை திரிகளை ஒரு தீக்குச்சியில் பற்ற வைப்பார் மருமகள் என்கிற பரீட்சையைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன கொடுமை.

said...

அன்புடையீர்!
தங்களின் புத்தகத்தின் அட்டைப் படம் இருந்தால் அதன் சுட்டியையோ அல்லது புகைப்படத்தையோ
lathananth@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் செம்மொழி மாநாட்டின்போது ஆற்றவுள்ள எனது உரையில் அதனை இடம் பெறச் செய்ய இயலும்.

said...

Adhu enna sweet Puli?

Puli-appadiye saapittale super-a irukkum. Chinna vayasil nanbargaloda serndhu puliyampazham, puliyanggai ellam parichu saapiduvom. Super taste.

said...

""போய்க்கிட்டே இருந்தால் எப்போ நம்ம காலடியில் வாழைச்சருகுகள் நம்ம செருப்பில் சிக்கி நம்மை விழவைக்குதோ அப்போ, மார்கெட் வந்தாச்சுன்னு பொருள்""

டீச்சரோட ரைமிங் சூப்பர்.மார்கெட் டூ மார்கெட் விரிவா சர்வே பண்ணியிருக்கீங்க.

”வாதுமை பழம்” இப்படி கூட ஒரு பழம் இருக்கா?

said...

வாங்க காவேரி கணேஷ்.

புது ஊர்லே இருக்கும் புதுமைகளை உங்களுக்கு வேற யார் சொல்லுவா?

அதான் கேமெராவும் கையுமா:-))))

said...

வாங்க சித்ரா.

அந்தக் காலத்துலே எதுக்கும் எதுக்கும் சம்பந்தம் பாருங்களேன்.

முன்னோர்கள் கில்லாடிகள்:-))))

said...

வாங்க குமார்.

ஆஹா.... வீட்டம்மா வந்துருக்காங்களா? அடை, இட்லி, தோசை எல்லாம் கிடைச்சதா?

நியூஸியில்தான் எல்லாத்தையும் ஃப்ரீஸர்லே அடைக்கணுமுன்னா இங்கேயும் அப்படியான்னு யோசனைதான். பொழுதன்னிக்கும் பவர் வேற போயிருது. சாமான்கள் கெட்டால் அது ஒரு வம்பு.

இனிமே நம்ம செக்டர் கடை மட்டும்தான்:-))))

said...

வாங்க வல்லி.

சரவணபவன் வாசலில் 'மஞ்சு'ன்னு ஒரு பூக்காரம்மா. சின்ன வயசு. நம்மைப் பார்த்ததும் ஓடிவந்துருவாங்க. மற்ற பூக்காரர்களை விரட்டி விட்டுருவாங்க. அம்மா என்னாண்டதான் வாங்குவாங்கன்னு. இதே டயலாகை முதல்முதலில் பார்த்தப்பவே சொன்னாங்கப்பா:-)))))

மாம்பழத் திருவிழா வருது. பேசாமக் கிளம்பி வாங்க.

said...

வாங்க சுடலை.

தண்ணி சம்பந்தமா நம்ம பதிவுலே எதுவும் வரவேணாமுன்னுதான் வாட்டர்மெலன் போடலை. ராவா அடிச்சுக்கட்டும்:-))))

said...

வாங்க மெனக்கெட்டு.

சிரிப்பானுக்கு நன்றி

said...

வாங்க பிரபாகர்.

கருத்துக்கு காத்திருக்கேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

குஜராத், ராஜஸ்தான் எல்லாம் போயிட்டு இங்கே வர நாளாகுமாம்.

இன்னிக்கு பகல் மூணு மணிக்கு திடீர்னு அரைமணி நேரம் ஆலங்கட்டி மழை.

அப்புறம் வெய்யில் அதே 45க்கு வந்துருச்சு:(

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்கூர் கொய்யாப்பழம் செம டேஸ்ட்.

நாங்க வருணனுக்கு வெயிட்டிங்:(

பயபுள்ளே எங்கே சுத்துதுன்னு தெரியலை!

said...

வாங்க கோபி.

எல்லா ஊர் மார்கெட்டுக்கும் ஒரு விசிட் அடிச்சத்தான் எனக்குத் தூக்கம் வரும்:-))))

said...

வாங்க மாதேவி.

நாங்க சின்னப்புள்ளைகளா இருந்த காலத்தில் வாதுமை மரம் ஒன்னு வீட்டு வாசலில் இருந்துச்சு. பழுத்தால் சிகப்பா இருக்கும். அதை எடுத்து மேற்புறம் உள்ள சதைப்பற்றானதை மென்னு துப்புவோம்.புளிப்புக் கலந்த ஒருவகை இனிப்பா இருக்கும். அப்புறம் அந்தக் கொட்டையைக் கல்லில்வச்சுத் தட்டி உடைச்சு உள்ளே கல்லடியால் நொறுங்கிப்போன பருப்பையும் விடமாட்டோம்:-)

இங்கே உள்ளது பார்க்க அதைப்போல இல்லை. ஒரு நாள் வாங்கித் தின்னுட்டுச் சொல்றென்.

said...

வாங்க சுமதி.

எனக்கும் நியூஸியில் இருக்கும்போது நம்மூர்க் காய் கிடைக்கலைன்னு ஏக்கமா இருக்கும்.

said...

வாங்க பாரதி மணி ஐயா.

அடுத்த மாசம் மாம்பழத் திருவிழா. போயிட்டு வந்து சொல்றேன்:-)

பசேலுன்னு காய்கறி மலைகள் பார்க்க அழகுதான். அதான் சமைக்கலைன்னாலும் போய்ப் பார்த்துக்குவேன்:-)

லங்(க)டா.... ஒன்னு இப்ப தோழனாகி இருக்கு. ஒரு கால் மட்டும் அப்படி. மற்ற மூணும் நல்லா இருக்கு:-)

said...

வாங்க பிரகாசம்.

சுத்தத்துக்கு கேரண்டீ. வீட்டில் கொண்டுவந்து கத்தியில் சுலபமா துளை போட்டுக்கலாம்.

இங்கே மேல்பக்கம் மட்டும் சீவி வச்சுருக்குல்லே? சிங்கப்பூரில் முழுசுமாச் சீவி அழகா வெள்ளை டப்பா போல கிடைக்கும். உள்ளே வழுக்கையை எடுக்க ஒரு நீண்ட கைப்பிடியுள்ள ஸ்பூனும் தருவாங்க.

said...

வாங்க டிபிஆர்.

குத்துவிளக்குலே திரி பத்த வைக்கறதெல்லாம் பாலச்சந்தர் பட ஸ்டைலு இல்லையோ!!!!

said...

வாங்க லதானந்த்.

செம்மொழி மாநாட்டுலே உரையாற்றப்போகிறீர்களா?

இனிய வாழ்த்து(க்)கள்.

விவரங்கள் உங்களுக்கு மடலில் அனுப்பி உள்ளேன். நன்றி.

said...

வாங்க ப்ரசன்னா.

வாங்கிப் பார்த்துட்டுச் சொல்றேன்.

said...

வாங்க சிந்து.

உள்ளே பாதாம் இருக்கோ என்னமோ!!!!

said...

{{அந்தக் காலத்துலே பொண்ணு பார்க்கப் போகும்போது ஒரு வீசை உருளைக்கிழங்கை (வேகவச்சது) உரிச்சுக் காட்டச் சொல்வாங்களாம். 'தோலை மட்டும்' நிதானமா உரிச்சு, கிழங்கு நல்லா மொழுமொழுன்னு இருந்தால் பொண்ணு நல்ல சிக்கனமானவளா இருப்பாளாம். இந்தக் கணக்கில் பார்த்தால் எனக்குக் கல்யாணமே நடந்துருக்காது}}


என்ன இருந்தாலும் ஸார் இவ்வளவு பொறுமைசாலியாக உருளைக்கிழங்கு எல்லாம் உரிச்சுக் கொடுப்பார்னு நினைக்கல.

said...

ஸபேத்தா என்பது சப்போட்டாவா?

இங்க நம்ம வீட்டுக்காரம்மா கேட்கச் சொன்னது என்ன இந்த பழம் ரொம்ப பெரிசா இருக்கேன்னு?

said...

Aha.! Unga varnanai pramatham.. Writer Sujatha pola. Naan ippo Agra vanthirukken.. Ingeyum athe mathirithaan irukku. Enn? inge manushanga kooda nirya madugalum ulavum-nadu roddile..Sari mithikkamal nadakka pazhaganum..Continue madam.. (Balaraman R)

said...

வாங்க பிரகாசம்.

எங்கெ? கோபாலுக்கு இந்த டெஸ்ட் வைக்க மறந்துட்டேனே அப்போ!!!

ஆனா வெளிநாட்டு வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம். இல்லேன்னா வண்டி ஓடாது.

இங்கே வெள்ளைக்காரகள் வீட்டில் பாத்திரம் கழுவுவது ஆண்களுக்கான வேலை.
அதான் டிஷ்வாஷர் கண்டுபிடிச்சதின் அவசியம்!

நாங்க ஒரு குழுவுடன் கேம்ப் போயிருந்தப்ப, சமையலை நாங்கள் முடிச்சுப் பரிமாறி சாப்பிட்டானதும் எல்லா ஆண்களும் பாத்திரம் கழுவப் போயிட்டாங்க.

இவர் திருதிருன்னு முழிக்கிறார். அதுக்காக விட்டுற முடியுமா? பாத்திரம் தேய்ப்பதில் இவுங்க ஸ்டைல் வேற மாதிரி.அதனால் கழுவிவச்சதை எடுத்து துடைச்சு அடுக்கும் வேலையை இவருக்கு ஒதுக்கிட்டாங்க:-))))

அதையெல்லாம் படம் எடுத்து வச்சுருக்கேன். வரலாறு முக்கியமாச்சே:-))))

said...

வாங்க ஜோதிஜி..
ஸஃபேத்தா என்பது ஒரு மாம்பழவகை.

ஸஃபேத் = வெள்ளை ( ஹிந்தியில்)

உள்ளே வெள்ளையாக இருப்பதால் இந்தப் பெயர்.

said...

வாங்க பலராமன்( சரியா?)

முதல்முறை நம்ம வீட்டுப்பக்கம் வந்துருக்கீங்க போல! நன்றி.

ஆக்ரா பக்கம்தானே மதுரா இருக்கு. கோகுலத்தில் மாடுகளுக்கு என்ன பஞ்சம்? அது கண்ணன் ஊராச்சே.அதனால் மாடுகளுக்குத்தான் முன்னுரிமை.

துவாரகைப்பகுதிகளிலும் இதே கதைதான். அங்கே அந்த மாடுகளின் முன்னோர்கள் எல்லாம் கண்ணன் இடம்பெயர்ந்து அங்கே வந்தப்ப கூட வந்தவையாம்.

said...

dhool madam. Koncha naala than unga blog padichittu varen.Super writing. Intha blogi rathiri padika satham pottu sirikka mudiyama pochu. Laugh out loud.(LOL) Thamiz inithu athila ezhuthara ungal ezhuthu inithilum inithu.
Thanks to "Kalaimakal" athu moolama than ungal ezhuthu yenaku arimugam.

said...

வாங்க காஞ்சனா.

முதல் வருகைக்கு நன்றி.

அருமையான வாசகர்களை அளித்த கலைமகளுக்கு நானும் நன்றி சொல்லிக்கறேன். அதுலே வந்தே நாலு மாசங்களாச்சே.

அடிக்கடி வந்து போங்க.

உங்கூர்லேதான் செம்மொழி மாநாடு சக்கைப்போடு போடுதுபோல!!!!

said...

super blog after a very long time happened to a good thamizh article . Iam a fan of sujatha and thaalikum osai jeyashree . friend kitta paesinaapla oru feel

said...

வாங்க சசிகலா.

You made my day!

நன்றிப்பா.