Friday, June 25, 2010

ஜெய் ஹனுமானுக்கு அரோஹரா.... (பூநூல் தொடர்ச்சி)

விழாவுக்கான அழைப்பிதழில் காலை ஏழரை முதல் கணபதி ஹோமம் ஆரம்பிச்சு வரிசையா கலசாபிஷேகம்,. ஸ்ரீ ராம நாம ஹோமம், ஹனுமனுக்கு மஹா அபிஷேகமுன்னு நாள் பூராவும் நிகழ்ச்சிகள். முக்கிய நிகழ்ச்சி ஹனுமனுக்கு பூநூல் சார்த்துவது பதினொன்னேமுக்காலுக்கு. இவர் வந்து ஏழுவருசம் முடிஞ்சுருச்சு. சபாஷ்! சரியான வயதுதான் பூநூல் போட்டுக்க:-)
'வெள்ளைக்காரர்போல சரியான நேரத்துக்கு' உள்ளே நுழைஞ்சோம். பிள்ளையார் பக்கம் காலையில் நடந்து முடிஞ்ச யாகத்தின் மிச்சங்கள் சாட்சி. இப்போ நம்ம கிருஷ்ணமாரியம்மன் பகுதியில் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு மேடையில் அஞ்சு கலசங்கள். நடுவில் இருக்கும் கலசத்தின் மாவிலைமேல் ஒய்யாரமா இருக்கும் வெள்ளிப்பூநூல்.
முன்னால் இருக்கும் யாககுண்டத்தில் கொழுந்துவிட்டெறியும் அக்னி. யாகத்தை நடத்திக்கொடுக்கன்னே தில்லியில் இருந்து வந்துருக்கும் பண்டிட். நல்ல இரும்பில் சதுரமான பெரிய யாககுண்டம். புகை சூழாமல் இருக்க அதுக்கு நேராய் கோவில் உள்கூரையில் எக்ஸாஸ்ட் ஃபேன். சூப்பர் ஐடியா.
மிகவும் வயதான ஒரு தம்பதியர் (94 + 84) யாகம் நடப்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். குண்டத்தைச்சுற்றி இன்னும் சிலர். நம்ம ப்ரஸாத்gகாருதான் இன்றைய விழாவுக்கான மெயின் உபயதாரர். நாங்கள் ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருந்தோம். முறைப்படி இதை முடிச்சதும் இன்றைய விழாவுக்கு ஸ்பான்ஸர் செய்தவர்கள் மகாகலசங்களை ஏந்தி வலம்வந்து ஹனுமன் சந்நிதிக்கு வந்து சேர்ந்தாங்க.

பால் தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் இப்படி வரிசையா அபிஷேகங்கள் எல்லாம் முறைப்படி நடந்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற முழக்கத்தோடு ஹனுமனுக்கு பூநூலும் சாத்தி, பதினாறு உபசாரங்களும் ஆச்சு. ஆரத்தி காமிச்சு நமக்கு தீர்த்தம் சடாரி எல்லாம் திவ்யமாக் கிடைச்சது.
ஃபிஜித்தீவில் நம்ம முருகன், மாரியம்மன் கோவில்களிலும், வீடுகளில் நடக்கும் பூஜைகளிலும் எதுவானாலும் சரி கோவிந்தா கோவிந்தா ன்னு முழக்கத்தோடுதான் பூஜையை முடிப்பாங்க. மாமனுக்கும் மருமகனுக்கும் அப்படி ஒரு இணக்கம். நாம்தான் அனாவசியமாக் குழப்பிக்கறோமோ?


பண்டுரீத்திகோலு, ராம நன்னு ப்ரோவரான்னு தியாகையர் பாடல்களைப் பாடுனாங்க உள்ளூர் இளைஞிகள் இருவர். முற்பகல் நிகழ்ச்சிகளின் கடைசிக்கு வந்துட்டோம். மாடிப்படியேறி மேலே போனோம். பந்தியில் உக்கார்ந்தோம். சக்கரைப்பொங்கல்(மாதிரி.) கோவிலில் செஞ்சதாம். பஞ்சாமிர்தம்(ஹனுமனுக்கு அபிஷேகம் செஞ்ச பிரசாதம்) நம்ம கார்த்திக் ரெஸ்டாரண்ட் குணாவின் அறுசுவையில் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, ரசம் மோர். சாப்பிட்டு முடிச்சப்ப மணி ரெண்டரை.


பிரஸாத்காரு & குடும்பம்

வெள்ளைச்சட்டை: குணா. கார்த்திக் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்

தில்லிப்பண்டிட், அன்னதாதாவையும் அன்னமிட்ட கைகளையும் ஆசீர்வதிச்சார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நாம் சாம்பார் ரசமுன்னு சாப்பிடும் வரிசை முறைகளில் வாழ்க்கை இருக்குன்னார். எப்படி? காதைத்தீட்டினேன்.

முதலில் இலையில் சோறு வெள்ளைவெளேர்ன்னு பரிமாறுகிறாங்க. இது நாம் பூமியில் வந்து பிறக்கும் தருணம். புதுசாப்பிறந்த குழந்தை கள்ளம்கபடு சூதுவாதறியாமல் களங்கமில்லாமல் வெள்ளைமனசோடு இருக்கு.

அடுத்து சாம்பார். அதுலே காய்கறிகள் கலவை. காய்கறிகளைத் 'தான்' என்று சொல்வது வழக்கம். இப்படி வெள்ளை மனசுலே 'தான்' என்ற அகங்காரம் சேர்ந்தவுடன் மனசு குழம்பாட்டம் குழம்பிடுது மனுசனுக்கு.

அப்புறம் ரசம். இதுலேயும் பூண்டு தக்காளின்னு காய்கள் இருந்தாலும் சாம்பார்போல கெட்டியாக் குழம்பி இருக்காது. 'தானும்' அவ்வளவா இல்லை. கொஞ்சம் தெளிவான வகை. மனுசன் கல்வி கேள்விகளால் கொஞ்சம் தெளிவடைஞ்சு மாறிக்கிட்டு இருக்கான்.

கடைசியா மோர், தயிர். மறுபடியும் பரிசுத்தம் என்பதுபோல வெண்மை. வெள்ளையான சோறும் இதனுடன் கலக்கும்போது பளிச்சிடும் வெண்மை! தெளிவடைஞ்ச மனசோடு இருப்பவன் மறுபடி மனத்தூய்மை அடையறான்

ஆனால் ஒரேதா இப்படி இருந்துட்டா....வாழ்க்கை நடத்த முடியாது. எல்லாரும் ஏமாத்திட்டுப்போயிருவாங்க. கொஞ்சம் 'சுருக்'னு உஷாராவும் இருக்கவேண்டி இருக்கே. அந்த 'சுருக்'கைக் காமிக்கத்தான் மோர்/தயிர் சாதத்துக்கான கொஞ்சமே கொஞ்சமாய் துளி ஊறுகாய் நல்ல காரஞ்சாரமாய்.

ஆஹா..... இவர்கிட்டே நிறைய பேசணும்னு அவருக்குத் தோதான சமயம், எப்ப டெல்லி கிளம்பறார்ன்னு விசாரிச்சேன். பெயர் ஜெகன்னாதன். அட பூரி! ஆமாவாம். அவர் பெற்றோர் பூரி தரிசனம் செஞ்சுவந்தபிறகு பிறந்தவராம். தில்லி 'ஆர் கே புரம் குரு'ன்னு சொன்னாவே தில்லிவாழ் தமிழ்மக்களுக்குத் தெரியுமாம். மறுநாள் காலை 6 மணி வண்டிக்கு தில்லிக்குத் திரும்புறாராம்.

இவரும் காலை 5 முதல் கோவில் வேலைகளில் ஓடியாடிக்கிட்டே இருந்திருக்கார். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கட்டும். மாலை நிகழ்ச்சியின்போது சந்திக்கிறேன்னு சொல்லிட்டு வந்தோம்.

மாலை நிகழ்ச்சியாக அஞ்சு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை. அஞ்சே முக்காலுக்கு சுந்தகாண்டம் முழுசும் பாடலாப் பாட பஜனை ஸ்பெஷலிஸ்ட் தம்பதி சுனில்குமார் த்யான் ஜி & மஞ்சித் த்யான் ஜி வர்றாங்க. மூணு மணி நேரம் அவுங்களுக்கு ஒதுக்கி இருந்துச்சு. அதுக்குப்பிறகு சமூஹ ஆரத்தி. எல்லோரும் வீட்டுலே இருந்தே விளக்கு தட்டு எண்ணெய் திரி எல்லாம் கொண்டாங்கன்னு ஒரு குறிப்பு விழா அழைப்பிதழில் பார்த்தேன். (வேற யாரும் பார்த்த மாதிரி தெரியலை!!)

கடைசி நிகழ்ச்சியா டின்னர்.

இந்தியாவில் இருக்கும்போது இந்தியனாகவே இருக்கணுமுன்னு சிலபல நிகழ்ச்சிகளால் ஒரு சங்கல்ப்பம் செஞ்சுக்க வேண்டியதாப் போயிருந்துச்சு. அதையொட்டி நாம் போகவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் சரியாக இருக்குமுன்னு ஒரு 'கணக்கு'ப்போட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமப் புத்தகத்தோடு (பெரிய எழுத்து!)அஞ்சரை மணிக்குப்போய்ச் சேர்ந்தால்...... கணக்குத் தப்பாயிருச்சு:( கிடைச்சவரை லாபமுன்னு பாதியில் போய்க் கலந்தோம். சுமாரான கூட்டம் இருந்துச்சு. மஞ்சள் உடைகள் போட்ட ஒரு இளைஞர் குழுவைக் கவனிச்சேன். ஆராயணும். பக்கத்தில் இருக்கும் வேதபாடசாலை வித்யார்த்திகளாம்!!!
ஆறுமணிக்கு அடுத்த நிகழ்ச்சியாக சுந்தரகாண்டம் பாடல். ஜஸ்ட் பதினைஞ்சு நிமிஷம்தான் ரன்னிங் லேட். பரவாயில்லை. இந்த காலதாமததை சரிக்கட்டும்விதமா ஒரு வேகம் எடுத்தாங்க பாருங்க. ஆஹா.... சண்டிகர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ். புல்லட் ட்ரெயின் தோத்தது போங்க!!!! கடவுள் வணக்கப்பாடலைத் தவிர வேற ஒன்னுமே எங்களுக்குப் புரியலை. இதுலே கூடி இருந்த மக்கள்ஸ் ஆளாளுக்குக் கையில் புத்தகம் வேற! ஒரே ராகத்துலே ஏற்ற இறக்கம் இனிமைன்னு ஒன்னும் இல்லாம தலையில் ட்ரில் செஞ்சு நுழையறார் நம்ம ஹனுமன்! ஒரு ஒன்னரை நிமிச வீடியோ க்ளிப் எடுத்தேன். அதென்னவோ சரியா பதிவாகலை. (உங்களுக்கு அதிர்ஷ்டமில்லைன்னு வச்சுக்கணும். மாத்தி யோசிக்க வேண்டாம் மக்களே)
இதுலே பாருங்க அந்த ஹால் கொஞ்சம் சின்னதுதான். ஜன்னல்களும் கிடையாது. கோவிலின் ஒரு பக்க உள்ப் பிரகாரம்தான். பாடகர் கூடவே அவர் மனைவி பாடறாங்க. மைக் வச்சுருக்கு அவுங்களுக்கு. அதுவரை ஓக்கே. உள்ளூர் இளைஞர் குழு மாணவி ஒருத்தர் பாடகர்களுடன் சேர்ந்து பாடினார். (ட்ரெய்னி?)ஆனால் இவுங்களுக்கு ரெண்டு பக்கமும் கீ போர்டு & டோலக் கலைஞர்கள். அவுங்களுக்கும் ஒலி பெருக்கி வச்சதுதான் கொஞ்சம் கூடிப்போச்சோன்னு இருந்துச்சு. அவுங்க வாசிப்புதான் குரல்களை அப்படியே அமுக்கிப்பிடிச்சு வச்சுக்கிட்டு 'டுபுக்டுபுக்'ன்னு மேலே எழும்பி வந்துக்கிட்டேஏஏஏஏஏ இருந்தது.

நான் மட்டும் மெதுவா 'எஸ்' ஆகி ஹனுமனிடம் வந்தப்பக் கோவில் காரியதரிசியைக் கண்டேன். 'என்னங்க இது ? இப்படின்னு....லேசா ஆரம்பிச்சதும், 'இங்கே வடக்கத்திக்காரர்களுக்கு சுந்தரகாண்டம்ன்னா உயிர்'ன்னார். அதுக்கப்புறம் நான் ஏன் வாயைத் திறக்கப்போறேன் சொல்லுங்க:-))))

மூலவர் கார்த்திகேயனுக்கு தீபாராதனை செய்துக்கிட்டு இருந்தார் ஜகன்னாதன். பிரகாரத்தின் மறுபக்கம் போய் உக்கார்ந்து பேச ஆரம்பிச்சோம். வெரி இண்டரஸ்ண்டிங் பெர்ஸன். அம்பாள் உபாசகர். தோள்மேலே உக்கார்ந்து அம்பாள் இவரை கைடு செஞ்சுக்கிட்டு இருக்காளாம்!!! ஆமாம் அம்பாள் எப்படி இங்கே இப்படின்னு கேள்விகளால் நிறைஞ்சுருந்த என் முகத்தைப் பார்த்துட்டு, அவரே ஆரம்பிச்சார். இவருடைய குருநாதர் அம்பாள் உபாசகர். அவருடைய கனவில் அம்பாள் வந்து, இன்ன இடத்தில் இந்தமாதிரி ஒரு பையர் இருக்கார். அவரை உன் சிஷ்யப்பிள்ளையா ஏத்துக்கோன்னு சொல்ல, அவர் அம்பாள் கொடுத்த கைடன்ஸ்படி இவரைத்தேடிக் கண்டுபிடிச்சு சிஷ்யனாக ஆக்கி தீட்சையெல்லாம் கொடுத்து தனக்கு வாரிசாக்கினார். குருவின் காலத்துக்குப்பின் அம்பாளுக்கு அமர தோள் வேணுமோல்லியோ? ஜெகன்னாதனின் தீட்சைக்குப் பிறகு கிடைச்ச பெயர் சரணானந்தா. தேவியே சரணமுன்னு இருந்துட்டார். வயசு இப்போ அறுபத்தியேழாகிறது.

அவர் கொடுத்த கார்டுலே 'அஸ்ட்ராலஜர்'ன்னு போட்டுருக்கேன்னு பார்த்தப்ப, இவருக்குத் தில்லியில் சோதிடம் பார்ப்பது, வீடுகள் கோவில்களில் எல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களை நடத்திக்கொடுக்கும் சாஸ்திரிகள்ன்னு பல முகங்கள் இருக்குன்னார். முகமுன்னதும் இன்னொன்னும் சொல்லலாம். ஒருவருடைய பிறந்த நாள் நட்சத்திரம் இப்படி ஒன்னுமே சொல்லாமல் இருந்தாலும், வந்த நபரின் முகம் பார்த்தே வரப்போகும் இன்னல்கள், அவற்றுக்குண்டான பரிகாரங்கள் எல்லாம் சொல்லிடுவாராம். இவர் எங்கே சொல்றார்? எல்லாம் அம்பாள் இவர்மூலம் சொல்ல வைப்பதுதான்! ஒன்னும் குறுக்கே பேசாமல் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டேன்.
ஆனால் ஒன்னு எதுவுமே நம்புனால்தான் தெய்வம். நம்பிக்கை என்பது அவரவர்களுக்கு வெவ்வேறு இல்லையா? நம்பிக்கைன்னதும் தெய்வநம்பிக்கையைப் பத்திப்பேச்சு வந்தது.

என்னதான் நம்முடைய திறமை கல்வி, பேங்குபேலன்ஸ்ன்னு ஏகப்பட்டது இருந்தாலும் கடவுளின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை தடுமாறாமல் தண்டவாளத்துலே போகும் ரயில் போல் சீராக ஓடும்ன்னார். ( இப்போ தண்டவாளத்துலே அங்கங்கே வச்சுக்கிட்டு இருக்கும் தடங்கல்கள் பற்றி நான் ஒன்னும் சொல்லலை)

கடவுளைக் கும்பிட நாம் மெனெக்கடவே வேணாம். இரு கைகளையும் சேர்த்து விரல்கள் அதன் ஜோடியைத் தொட்டால் போதும். ஆமா.... கைகூப்பி வணக்கம் சொல்றமே அதேதான். அந்த அஞ்சு விரல்களும் பஞ்ச பூதத்தைக் குறிக்குது. நிலம் நீர் நெருப்பு வளி வான் இப்படி. காலையில் குளிச்சு முடிஞ்சதும் அவரவர் மதத்துக்கேற்ற இறைவனை மனசுலே நினைச்சுக் கைகூப்பினாலே போதும்.

இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக் கும்பிடணுமுன்னா ஒரு பூவோ ஒரு இலையோ போதும். ஒரு துளி தண்ணீர். ஒரு ஊதுவத்தி அதுலேயே நெருப்பு, காற்று எல்லாம் வந்துருது. ஒரு பத்து பதினைஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் சந்தனக்கட்டைத் துண்டு ஒன்னு வாங்கி வச்சுக்குங்கோ. கற்பூரம் ஏத்தணுமுன்னா செலவு கூடவே கரும்புகை. அதனால் அது வேணாம். சந்தனக்கட்டையை ஒரு இழை இழைச்சால் வரும் துளிச்சந்தனம் நெற்றிக்கு. இந்தக் கட்டையே ஒரு பத்து வருசத்துக்கு வரும். சாமி கும்பிட செலவே இல்லைன்னார்.

இது எனக்கு ரொம்பவே பிடிச்சது. காட்சிக்கு மட்டுமல்ல கும்பிடவும் எளியவனா இருக்கணும் கடவுள். இதோ வர்றேன்னு மூலவரைப் பூஜிக்க வந்த குடும்பத்துக்கு தீபாராதனை காமிக்க எழுந்து போனார். அப்போ வந்த நம் வாசகநண்பர்களில் ஒருவர், என்னங்க அவர் வரலையான்னதும் நானும் எழுந்து போய் கோபாலைப் பார்த்தால்...... சோதிச்சது போதுமுன்னு தோணிருச்சு. அவர் கண்ணில் ஒரு கெஞ்சல். எனக்கே ஐயோன்னு போயிருச்சு:(

மூன்று மணி நேர பஜனை நிகழ்ச்சியின் படி இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருக்கு. இன்னொரு சமயம் ஆகட்டுமுன்னு எழுந்துபோய் முருகனிடம் சொல்லிட்டுக் கிளம்பிட்டோம்.

சுந்தரகாண்டம் புத்தகத்தை ஒவ்வொரு பகுதியாப் படிச்சு அதுக்கு விளக்கவுரை சொல்லிக் கேக்கறதுதான் எங்களுக்கு இனியதா இருக்கு. இப்படிப் பாடலாக் கேட்டது இதுதான் முதல்முறை. அதான் மனசுலே ஒட்டவே இல்லை. பேசாம நானே புத்தகத்தைக் கொண்டுவந்து விளக்கமாப் படிச்சுருக்கலாமோ?
'வந்திருந்த கூட்டத்தில் நம்ம தென்னிந்தியர்கள் குறிப்பாத் தமிழ்க்காரர்கள் எத்தனைபேர்ன்னு விரல்விட்டு எண்ணிடலாம். இதுலே எது இங்கத்து வழக்கமோ அப்படிச்செய்யறதுதானே நல்லது. கோவிலுக்கும் ஆட்கள் வரணுமில்லையா? நாமோ கொஞ்சநாள் இங்கிருக்கும் விருந்தாளிகள். ஊரோடு ஒத்து வாழ்ன்னு இருக்கணும். மனசை அடக்கிக்கிட்டு பேசாம வா' ன்னு சொன்ன கோபாலின் பக்கம் நியாயம் இருக்குல்லே?

முருகா முருகா.

30 comments:

said...

many thanks for sharing the pictures and post.

said...

சாப்பாட்டின் விளக்கம் ரொம்ப நன்றாக உள்ளது டீச்சர்:)))

said...

சாப்பாட்டுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா :-)).

வடக்கத்திக்காரங்களுக்கு சாமிகும்பிடறதுன்னா பாடறதுதான்.எங்க பக்கத்து வீட்டுல பஜனை அடிக்கடி நடக்கும். பாடிக்கிட்டே இருப்பாங்க. திடீர்ன்னு யாராவது எழுந்து, பாட்டுக்கேத்தமாதிரி ஆடவும் ஆரம்பிச்சுடுவாங்க.பூஜையில் வாசிக்கிறதுன்னா அது கதை சொல்ற அங்கம் மட்டும்தான்.

Anonymous said...

சாம்பார், ரசம், தயிர் வரிசைக்கு விளக்கம் அருமை

said...

அம்பாள் தோள் மேல வந்து உட்கார்ந்துக்கறது அதிசயமா இருக்கு. சாதம் சாப்பிடறவங்களுக்கு இந்த விளக்கம் சரிதான்.
சப்பாத்தி சாப்பிட வரும்போது வேறு படுமோ என்னவோ. படங்கள் வெகு அருமை துளசி. நியூசி புத்தகத்தை செம்மொழி மாநாட்டில்,பதிவர் பேசப் போவது குறித்து ஏதாவது தெரிந்ததாப்பா?

said...

//அடுத்து சாம்பார். அதுலே காய்கறிகள் கலவை. காய்கறிகளைத் 'தான்' என்று சொல்வது வழக்கம். இப்படி வெள்ளை மனசுலே 'தான்' என்ற அகங்காரம் சேர்ந்தவுடன் மனசு குழம்பாட்டம் குழம்பிடுது மனுசனுக்கு.

அப்புறம் ரசம். இதுலேயும் பூண்டு தக்காளின்னு காய்கள் இருந்தாலும் சாம்பார்போல கெட்டியாக் குழம்பி இருக்காது. 'தானும்' அவ்வளவா இல்லை. கொஞ்சம் தெளிவான வகை. மனுசன் கல்வி கேள்விகளால் கொஞ்சம் தெளிவடைஞ்சு மாறிக்கிட்டு இருக்கான்.

கடைசியா மோர், தயிர். மறுபடியும் பரிசுத்தம் என்பதுபோல வெண்மை. வெள்ளையான சோறும் இதனுடன் கலக்கும்போது பளிச்சிடும் வெண்மை! தெளிவடைஞ்ச மனசோடு இருப்பவன் மறுபடி மனத்தூய்மை அடையறான்
// அப்ப நடு நடுவே அப்பளம், சிப்ஸ் இதெல்லாம் நெற நெறன்னு கடிச்சு தின்கறோம். வடையை புளந்து கடிச்சு
சாப்பிடறோம். இதெல்லாம் நாம வாழ்க்கையிலே அண்டை அசலோட போடற சண்டையோ !!

இப்படிக்கு
சும்மா வாயை மூடிட்டு இருக்க முடியாத‌
சுப்பு தாத்தா

said...

படங்கள் அனைத்தும் அருமை. ஒரு டாகுமெண்டரி படம் பார்ப்பதுபோல் அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்துவிட்டீர்கள். மேலும் அந்த தம்பதிகளின் படம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி. திருமண வாழ்வில் சுமார் 70 வருடங்கள் கழித்திருப்பார்கள். நேரில் அவர்கள் ஆசி வாங்க முடியாவிட்டாலும் அவர்கள் படத்தையாவது கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

said...

பூனூல்போட்ட ஆஞ்சனேயர் அழகாகக் காட்சி தருகிறார்.

94+84 தம்பதியர் அருமையான படம்.

said...

முருகா முருகா!!

said...

அனுமானுக்கு ஏன் பூநூல் என்று தில்லி பண்டிட் சொன்ன விள்க்கம் ஏதாவது உண்டா?

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுமதி.

சாப்பாட்டு விளக்கம் புதுசா இருக்கேன்னுதான் நம்ம மக்கள்ஸ்க்குச் சொன்னேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பஜனைதான்ப்பா!!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

கர்நாடகா தர்மஸ்தலாவில் முதலில் ரசமாம்!

said...

வாங்க வல்லி.

சப்பாத்தி & சப்ஜிக்கு விளக்கம் அடுத்தமுறை கேட்டுறலாம்.

தென்னிந்தியர்களுக்கு மட்டும்தான் விளக்கமாம்.

இனி வட இந்திய தென் இந்திய சாஸ்த்திரங்கள் தனித்தனியான்னு கேட்டுக்கணும்.

தோளொடுதான் நான் பேசுவேன்.... ஸ்டைலு நம்ம அம்பாள்:-)))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஆஹா..... கேட்டீங்களே ஒரு கேள்வி!!! போட்டீங்களே ஒரு போடு!!!!

ஜகன்னாதன் அங்கிளுக்கு கேள்வித்தாள் ஒன்னு தனியா தயாரிச்சுடலாமா?

said...

வாங்க பிரகாசம்.

70 வருசமுன்னதும் திகைப்பாத்தான் இருக்கு. அதுலே பாதிக்கும் கொஞ்சம் கூட இருப்பவர்கள் ஆசி வேணுமான்னு சொல்லுங்க. அனுப்பிடலாம்.

said...

வாங்க மாதேவி.

தவறாமல் வந்து வாசிச்சுப் பின்னூட்டம் இடுவதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றிப்பா.

said...

வாங்க குமார்.

அரோஹரா

said...

வாங்க குலசேகரம்.

அடுத்தமுறை கேட்டுடலாம்.

பூஜை முடிஞ்ச ரெண்டாம் நாள் கோவிலுக்குப் போனால்.... ஆஞ்சநேயர் பூநூலைக் காணோம்!

குழந்தை அவுத்து வச்சுருச்சு!!!!

said...

ஆசிகளை தாராளமாக அனுப்புங்கள். எதிர்பார்த்திருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிவிழா ஆண்டு முடிந்து 4 மாதம்தான் ஆகிறது.

கர்னாடகத்தில் பல கோயில்களில் முதலில் ரசம்தான் பரிமாறுகிறார்கள்.
முதலில் சாம்பார் சாப்பிட்டால் விக்கிவிடும் என்பதற்காக முதலில் ரசம் இடுவார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அது எந்த அளவு நிஜம் என்பது தெரியவில்லை.

said...

Any Idea Why ambal here is Krishna Marriamman rather than, Karu-marriamman.. There is an interesting story for that too..

said...

Oh... I forgot to tell one thing.. photographs are fantastic and style of narration is wonderful.. Please continue the good work..

said...

வாங்க ஆனந்தா.

முதல் வருகைபோல இருக்கு! வரணும் வரணும்.

வடமொழியில் க்ருஷ்ண என்றால் கறுப்பாம்.
அதனால் கரு மாரியைத்தான் கிருஷ்ணை, கிருஷ்ணமாரின்னு சொல்லி இருக்காங்கன்னு குருக்கள் சொன்னார்.

வருகைக்கு நன்றி.

said...

பிரகாசம்,

அனுப்பிய ஆசிகள் வந்து சேர்ந்தனவா?

நம்ம கீதா சாம்பசிவம் சொல்லித்தான் முதலில் ரசம் என்பதே தெரியும். நான் கர்நாடகா கோவிலில் எங்குமே உணவருந்தவில்லை.

said...

ஆஹா!! தொடர்வண்டியில்(மெயிலில்) வந்ததை கெட்டியாகப் பற்றிக்கொண்டோம். கண்டறியாதன கண்டபோது விட்டுவிட முடியுமா?

said...

names of every deity were specially given by Kanchipuram Achariyar..To make the murugan more common to north indians' His holiness gave, Sri Karthikeya Swamy instead of Murugan or subramanya etc.. In that sense, He wrote Krishna Marriamman instead of Karumariamman.. Since, the name came from His Hand, temple committe kept the same..(ofcourse, gurukal may be correct too..)..

said...

Nice post and pics.

I am somewhat uncomfortable with doing "Paal Abhishekam" to perumal using Pocket Milks.

I feel that , it will create Thoshams. Because, "These kind of pocket milks" contains, chemicals, BUFFALOES Milk , this is very very sinful.

Again our people thinks that "If we do it without knowing" its not bad (theriyama senja thappillai). But That thought itself is sinful, because only to do with knowing god gave us 6 senses.

I would kindly request anyone doing "Milk Abhishekam" to use cow's milk rather than pocket milks.

said...

நீங்க சொல்வது சரியாகத்தான் இருக்கும்.

வட இந்தியாவில் கார்த்திகேயந்தான். நம் தமிழ்க் கோவில்களைத்தவிர அவன் இங்கே 'பிரமச்சாரி'!!!!

பெண்கள் கோவிலுக்குள் வரத் தடை கூட இருக்கு பூனாவில்:(

said...

வாங்க ப்ரவீண்.

முதல் வருகையா?

நன்றி.

பொதுவா பாலபிஷேகம் ஒரு சாஸ்திரத்துக்குக் கொஞ்சம் செஞ்சுட்டு மீதிப்பாலை குழ்ந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்தால் கடவுளுக்கு இன்னும் மகிழ்ச்சியாத்தான் இருக்கும்.

இது என் சொந்தக் கருத்து.

நீங்க சொல்வது பாக்கெட் பால் வேணாம் என்பதும் சரிதான். வருங்காலத்தில் பால் என்றாலே பாக்கெட் என்றுதான் ஆகும்.

எங்கூரில் எருமையே இல்லை. எல்லாமே பசுக்கள்தான்.

பிஜி என்ற நாட்டிலும் எருமைகளே கிடையாது!