Friday, June 11, 2010

என்னைப்பாடு. என்னைப்பாடுன்னா. என்ன ஒரு பாடு எம்பாடு

திருமங்கை ஆழ்வாரால் மங்களசாஸனம் செய்யப்பட்ட கோவில். ஆனால்... முதல்லே ஒரே ஒரு பாட்டுதான். இதுக்கும் ஒரு விளக்கம் இருக்கு. திருமங்கை ஆழ்வார் இங்கே வந்து தரிசனம் செஞ்சுக்கிட்டு ஒன்னும் சொல்லாமக் கிளம்பிப்போயிட்டார். தாயாருக்கோ...தாங்கலை. இது என்ன நியாயம்? அவராண்டைபோய் ஒரு பாட்டெழுதி வாங்கிட்டு வாருமுன்னு ரங்ஸை விரட்டுனாங்க. பெருமாள் கிளம்பி வெளியே வர்றதுக்குள்ளே திருமங்கை ஆழ்வார் கிடுகிடுன்னு ஸ்தலசயனப் பெருமாளைப் பார்க்க மல்லைக்குப் போயிட்டார். இவரும் விடாம பின்னாலேயே துரத்திக்கிட்டுப்போய் மல்லையில் அவரைப்பிடிச்சு, 'அதென்ன ஒன்னும் பாடாம வந்துட்டீர். ஏற்கெனவே சண்டையில் கோவிச்சுக்கிட்டு இங்கே வந்து நின்னவளை சமாதானப்படுத்தப் போதும் போதுமுன்னு ஆகிப்போச்சு. இப்ப நீர் ஒன்னும் பாடாம வந்ததுக்குக் கோவிச்சுக்கிட்டு என்னை அனுப்பி இருக்காள் ஒரு பாட்டு வாங்கிவாருமுன்னு. சீக்கிரம் பாடுனா எழுதிக்கிட்டுப் போயிருவேன்'ன்னார்.
கருவறை விமானம், உத்பல விமானமாம்

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்நூலை மெய்நூலென்று மோதி
மாண்டு அவத்தம்போகா தேவம்மின் எந்தை
எண்வணங்கப்படுவானை கணங்களேத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லை தலசயனத்தே'

ஓக்கேன்னு பாட்டோட திரும்பி வந்தா, தங்க்ஸிடம் பாட்டுக் கேக்க வேண்டியதாப் போயிருச்சு. அங்கங்கே அஞ்சு பத்துன்னு பாட்டுகள் பாடிக்கிட்டே போறவர், இங்கே வந்து ஒன்னும் சொல்லாமப்போனாரேன்னு நாமே பாட்டு கேட்டனுப்பினா இப்படித்தான் ஒரே ஒரு பாட்டை என்னமோ போனாப்போகுதுன்னு பாடறதா? சொல்லிக் கோவிச்சதும் இன்னும் என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டே பெருமாள் மறுபடி இவரைத்தேடி ஓடினார். அதுக்குள்ளெ ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போயிட்டார். அங்கே போய் அவரைப் பிடிக்கலாமுன்னு போனா, அப்பத்தான் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலனைப் பாட வாயைத் திறக்கிறார் திருமங்கை. இந்த பக்தவத்சலன் வந்து நிற்பதை ஓரக் கண்ணால் பார்த்துக்கிட்டே, பாடினாராம் இப்படி.

ஏற்றினை இயமயத்துளெம்மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும் ஐயனைக்
கையிலாழியொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர்நின்ற நித்திலத்தொத்தினை,
காற்றினைப் புனலைச்சென்று நாடிக்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.
(கோவிலில் மணவாளமாமுனிகள் சந்நிதிக்கு மேலே இந்த ரெண்டு பாட்டையும் எழுதி வச்சுருக்காங்க)

ஆமாம். ஏன் இப்படிப் பண்ணினாராம் திருமங்கை ஆழ்வார்? திருநின்றவூர் போய் தரிசனத்துக்கு நின்னப்ப, பெருமாள் கொஞ்சம் பிஸியாக இருந்துட்டாராம். இவரைக் கவனிக்கலையாம். அதான் கோச்சுக்கிட்டுப் பாடாமப் போயிட்டார். .
(திருக்கண்ணமங்கை பக்தவத்சலனை 14 பாசுரம் பாடி மங்களாசாசனம் பண்ணி இருக்கார்.)

ஆளாளுக்குக் கோச்சுக்குங்க.....பாவம் பெருமாள். நல்லவேளை....அம்மா 'இன்னும் போய் வாங்கிவா' ன்னு விரட்டாம விட்டுட்டாங்க.

இந்த ரெண்டு பாடல்களுக்கும் நம்ம தேசிகன் அவர்பக்கத்தில் கொடுத்த விளக்கம் இது. நன்றி தேசிகன்.

1. வீண் செயல்களை மேற்கொண்டு, தாழ்ந்தோர்க்கு அடிமை செய்யாதீர். பொய்யான நூல்களைக் கற்று, மெய் என நம்பி வீணாகாமல், உய்வடய வாருங்கள். ஞானிகளால் துதிக்கப்படும் தந்தையான மேகவண்ணன், திருநின்றவூரில் முத்துத் திரளாய் நிற்கிறான். பூஞ்சோலைக் காண்டவ வனத்தைத் தீயின் வாயில் இட்டு அழித்த எம்மானை, நான் கடல்மல்லைத் தலசயனத்தில் கண்டேன்.


2. காளை போன்றவன்; இமயத்திருப்பதியில் எழுந்தருளிய என் இறைவன்; இம்மை மறுமைக்கு மருந்தானவன்; மிடுக்குடன் உலகங்களையும் பரமபததையும் ஆள்பவன். கையில் சக்கரம் ஏந்திய என் ஐயன் பகைவருக்கு எமன் ஆவான். நீலமணி போல் உள்ள அவன் திருநின்றவூரில் எழுந்தருளினான். முத்துக் குவியல் போன்றவன். காற்றாகவும் நீராகவும் உள்ள இப்பெருமானை நான் சென்று நாடித் திருக்கண்ணமங்கையில் கண்டு கொண்டேன்.

பாதியில் பார்க்காம விட்டதைத் தொடர்ந்தோம். கருவறைக்கு வெளியே பின்பக்கமா சேனை முதலியாரை மறுபடி சேவிச்சுக்கிட்டுப் போனால் ஆதிசேஷனுக்குத் தனியா ஒரு சந்நிதி. சர்ப்ப தோஷம், ராகுகேது பரிகாரமெல்லாம் இங்கே செஞ்சுக்கறது விசேஷமாம். அதுக்கு அடுத்து கருவறைக்கு இடப்பக்கமா ஆண்டாளம்மாவுக்குத் தனிச் சந்நிதி. (வழக்கம்போல்) சரியான கவனிப்பு இல்லை:(
ஆண்டாளைச் சுற்றிக் கிறுக்கல்

வெளிப்பக்கச் சுவர்களில் நம்ம மக்கள்ஸ் ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுருக்காங்க. 'சுத்தமா வை' ன்னு நிர்வாகம் சொல்லுச்சேன்னு கொதிச்சுப்போயிட்டாங்க போல. இல்லே சுத்தமா வைக்கலைன்னு கொதிச்சுப்போய் நிர்வாகம் இப்பச் சொல்லி இருக்கோ? எல்லாம் அந்த ஆண்டாளம்மாவுக்கே வெளிச்சம். பிரம்மோத்ஸவ சமயத்துலேயாவது இதுக்கு ஒரு வெள்ளை அடிச்சுருக்கக்கூடாது? அந்தக் கோபுரத்துக்கு அடிச்சதுலே மீதி இல்லாமப் போயிருச்சா? என்னவோ போங்க.......
'ஹெல்ப்லெஸ்ஸாக் கிடக்கேன்'னு சொல்வதுபோல் காலொடிஞ்ச குதிரைவாகனம் ஒன்னு ஆண்டாள் மண்டபத்தில். ஐயோ...பாவம்:(
ஆழ்வார்கள் சந்நிதி, மணவாளமாமுனிகளுக்குத் தனிச்சந்நிதி, பரமபதவாசல் கருவறை விமானம் எல்லாம் பார்த்துக்கிட்டே வெளியே வந்தோம். சுத்தமாத்தான் இருக்கு பிரகாரம். தாயார் சந்நிதிக்கு அருகிலே ஆன்மீகப்புத்தகங்கள், டிவிடி, விசிடின்னு விற்கும் ஒரு ஸ்டால். பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் இதைக்கடந்த பத்து வருசங்களா நடத்தறாராம்.
கோபுரவாசலுக்கு நேரா'

அனுமன் சந்நிதி
கோபுரவாசலுக்கு நேர் எதிரா அந்தப்பக்கம் குறுக்கே ஓடும் வீதியைக் கடந்து இருக்கும் கல்மண்டபத்துக்குள்ளே ஆஞ்சநேயருக்கு ஒரு சந்நிதி இருக்கு. புதுசா வர்ணம் அடிச்ச தேர் ஒன்னும் பக்கத்துலே நிக்குது. ரொம்ப சிம்பிள் டிசைன். ரொம்பப்பணிவா கூப்பிய கைகளுடன் நிற்கும் நேயுடு. மண்டபத்தில் சுற்றிவர சுவர்களில் அழகிய வர்ணங்களுடன் பெருமாளையும் தாயாரையும், ராம் & கோவையும் வரைஞ்சு தள்ளி இருக்காங்க. கூடவே திவ்யப் பிரபந்தப் பாசுரப்படி ராமாயணம் முழுசும் எழுதிவச்சுருக்காங்க. நேரம் இருந்தால் ஆற அமர உக்கார்ந்து வாசிக்கலாம். நமக்கோ?????
போனவழியாகவே திரும்பிவந்தோம். ஸ்டேட் ஹைவே 50. மெயின்ரோடில் வந்து சேர்ந்த கொஞ்ச தூரத்தில் பேசும் ஆஞ்சநேயர் கோவில் (இவரும் எட்டடிக்குக் குறைவில்லை) சாலையைப் பார்த்தபடி கோவில் கொண்டுள்ளார். எப்படிப் பேசுவார்? கண் ஜாடை கை ஜாடையா? இல்லே....மீடியம் மூலமாகவா? அப்படித்தான் இருக்கணும். விவரம் கேட்க வண்டியை நிறுத்தலாமுன்னா அதுக்குள்ளே சீறிப்பாய்ஞ்சு நூறு மீட்டருக்கு மேலே ஓடிருச்சு. அப்படி என்னதான் அவசரமோ........
பேசும் ஹனுமன்

சரி போகட்டும். நம்ம அடுத்த ஸ்டாப் அந்த 'வால்' விசாரணை.

23 comments:

said...

நல்ல photos and coverage. எங்கே இருக்கு திருநின்றவூர்?

http://kadavur.blogspot.com

said...

இரண்டாவது படம்(கோபுரம்) அழகான கோணத்தில் அருமையாய் வந்துள்ளது.

said...

ஆமா டீச்சர் சண்டிகர்ல இருந்து எங்க திடீர்னு திருப்பி தமிழ்நாட்டுக்கு வந்துட்டீங்க?! போன வருஷத்துல இருந்து இதே குழப்பம்.. எப்ப எங்க இருக்கீங்கன்னு ஒண்ணுமே புரியலை. :(

said...

தலையங்கத்தைப் பார்த்ததுமே பயந்துகிட்டேவந்தேன் வருபவர்களை எல்லாம் பாட்டுப் பாடச் சொல்லப் போகிறீர்களே என்று.

தப்பிச்சேன்.நான்பாட்டுலே வீக் என்று ரீச்சருக்குத் தெரியும்தானே.

said...

வாங்க அப்பாதுரை.

சென்னைக்கருகில் திருவள்ளூர் மாவட்டம்தான். அம்பத்தூர் ஆவடி பட்டாபிராம் லைனில் போனால் அடுத்துவருவது திரு நின்ற ஊர்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா...... ஃபோட்டாக்ராஃபர் சொன்னா அப்பீல் ஏது!!!!!

said...

வாங்க பொற்கொடி.

உடலுக்கும் மனத்துக்கு வெவ்வேறு வேகம் இல்லையோ!!!!!

எப்போ எதை எப்படி எழுதுவேன்னு எனக்கே தெரியாது!!!!

நினைவுக்கு வருவதை எழுதிக்கிட்டே போகணும். நமக்குத் தொழில் எழுத்து!

(யாருப்பா...... நினைப்புதான் பொழப்பைக்கெடுக்குதா.......அச்சச்சோ)

said...

வாங்க மாதேவி.

கொலுவுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. ஒரு நாலு வரியை நல்லா ப்ராக்டீஸ் பண்ணிக்குங்க.

said...

// பிரம்மோத்ஸவ சமயத்துலேயாவது இதுக்கு ஒரு வெள்ளை அடிச்சுருக்கக்கூடாது? அந்தக் கோபுரத்துக்கு அடிச்சதுலே மீதி இல்லாமப் போயிருச்சா? என்னவோ போங்க.......//

:-)))

said...

நினைவுக்கு வருவதை எழுதிக்கிட்டே போகணும். நமக்குத் தொழில் எழுத்து!


உங்கள் அளவுக்கு இத்தனை நம்பிக்கையுடன் சொல்ல தைரியம் இல்லாவிட்டாலும் அந்த நம்பிக்கை தான் எழுதவே தூண்டுகிறது.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு இடுகையும் உங்கள் ஆத்மதிருப்திக்கு எழுதினாலும் இந்த இடுகையில் கவர்ந்த விசயங்கள் நிறைய குறிப்பாக ஆட்டோகிராப், போன்றவைகள் ரொம்ப பிடித்து இருந்தது.

நிச்சயம் உங்களுக்குப் பின்னால் இந்த இடுகையை தினம் பத்துப் பேர்கள் படித்தாலும் முழுமையாக உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள் தான் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.

நீங்கா பேறு போலவே நீண்ட நாட்கள் ஞாபகமாய் இது போன்ற எழுத்துக்கள் தமிழர்களிடம் ஆன்மீக எண்ணங்கள் இருக்கும் வரைக்கும் உயிர்ப்புடன் இருக்கும்.

வாழ்த்துகள்.

said...

நல்லா பெரிய கோவிலாகத்தான் இருக்கிறது டீச்சர். சென்னையில் இருந்த போது இந்த கோவில் எல்லாம் தெரியாமல் போயிடிச்சி. கிராமத்தில் இருப்பது போல இருக்கிறது டீச்சர்.

said...

வாங்க கிரி.

வயித்தெரிச்சலைச் சிரிச்சுத்தான் தீர்த்துக்கணும்!

said...

வாங்க ஜோதிஜி.

கூடுதல் புகழ்ச்சி ஒரு கூச்சத்தைத் தருது.

இதுக்கெல்லாம் அருகதையான்னு ஒரு பக்கமும், இன்னும் நல்லா எழுதணும் என்ற வேகமும் வருதே.

நன்றி.

said...

வாங்க சுமதி.

சென்னையைவிட்டு முப்பது கிமீ தாண்டிட்டாலே கிராமம்தான்.

said...

தலைப்பை பார்த்ததும் எம்பெருமான் உங்களைத்தான் பாடச்சொல்லிட்டானோன்னு நினைச்சேன் :-))))

said...

//என்னைப்பாடு. என்னைப்பாடுன்னா. //
நல்ல போடு போட்டேங்க

said...

டீச்சரின் பதிவுகளைப் படித்து வருகையில் நாமும் வான்கோழியாகவாவது மாறலாம் என்று ஒரு பதிவு என் பக்கத்தில் இட்டுள்ளேன். கீழே அதன் இணைப்பு
http://prakash-prakasham.blogspot.com/

said...

வாங்க அமைதிச்சாரல்.

எம்பெருமாளுக்கு நம்ம கவுஜ விருப்பம்(??) தெரியாதா என்ன? அதான் பதிவா எழுதச் சொல்லிட்டான்.

said...

வாங்க நீச்சல்காரன்.

முதல் வருகைக்கு நன்றி.

சாமியே இப்படிப்போய்க் கேட்டா அந்த ஆசாமி என்னதான் செய்வார்???

:-)))

said...

வாங்க பிரகாசம்..

பதிவுலகில் வான்கோழிகளே கிடையாது. (எல்லாம் கிறிஸ்மஸ் பண்டிகை பிரியாணிக்குப் போயிருச்சாம்)

முழுக்க முழுக்க கானமயில்கள்தான் நாம் எல்லோரும்.

வேணுமுன்னா பெரிய மயில் சின்ன மயில், குழந்தை மயில் இப்படிச் சொல்லிக்கலாம்:-))))

உங்க பதிவு பார்த்து அங்கேயே பின்னூட்டி இருக்கேன்.

said...

நான் படிச்சுட்டேனே துளசி.
பின்னூட்டம் இடத்தான் தாமதம்.
தேடித் தேடி,பாட்டுக் கேட்கப் பெருமாள் ஓடினது அழகு.
அப்படியும் ரெண்டுதான் கிடைச்சதாமா.
வயல் நடுவில கோவில் அழகுதான்.

ஆண்டாளும் ,தெய்மா வந்திருந்தா அவள் சந்நிதியின் கவனிப்பாங்களோ என்னமோப்பா. மனுஷிதானேன்னு போட்டு வைக்கிறாங்களோ என்னவோ:(

said...

வாங்க வல்லி.

மனுஷி என்பதாலா? இருக்குமோ!!!!

எனக்கென்னவோ சி.வீ. என்பதாலோன்னு ஒரு தோணல்.

மனிதர்கள் விதிக்கு தேவலோக விதி நேர் எதிராம்:-))))

said...

ஓ,அப்படியும் ஒரு ஆங்கிளா:)
அப்படீன்னா அவருக்கு ஊருக்கு ஊரு ,வேண்டப்பட்டவங்க இருக்காங்களே.
என்ன பண்றது!!