Wednesday, June 30, 2010

திராவிடருக்கு மட்டுமேன்னு தனியாவா?

அட வெங்காயமேன்னு தோணிப்போச்சு. இதைமட்டும் வாங்கலைன்னா நீ திராவிடனா இருக்கச் சான்ஸே இல்லை. கண்ணைத் திறந்து பார். உனக்குப் பழக்கப்பட்ட சமாச்சாரங்கள் நிறைஞ்சு வழியுது.

வெளிநாட்டுலேதான் குஜராத்திகள் வச்சுருக்கும் இண்டியன் ஸ்டோர்ஸைத் தேடிப்போறோமுன்னா இங்கே இந்தியாவில் கூடவா? நமக்காவஸ்யமுள்ளதொக்க அவிடே கிட்டுமுன்னு நம்மடெ கம்பேனியிலெ ஜோலி செய்யுன்னவர் பறஞ்ஞதா...... செக்டர் நம்பர் 47 D.
கடைக்குப்பெயர் சிங்லா. யாருலா இப்படிப்பேரு வச்சதுலா????? கடையின் ஒரு மூத்த உதவியாளர் ( ஆகக்கூடி அன்னிக்கு அவர்மட்டும்தான் சாமான்களை எடுத்துக்கொடுத்துக்கிட்டு ஓடியாடித் திரிஞ்சார்) சாமான்களுடனும் வாடிக்கையாளர்களுடன் பழகிப்பேசி இவருக்கும் கொஞ்சம் நம் மொழிகள் வந்துருக்கு. இட்லி அரிசி இருக்கு. தேங்காய் ஃபோட்கி தரேன். உல்லி வேணுமா? உல்லி வேணாம்? நாலுமுறை 'உல்லி உல்லி'ன்னு சொல்லிக்கிட்டே நம்ம மூஞ்சைப் பார்க்கிறார். இதைமட்டும் வாங்கலை..... நீ சவுத்காரனா இருக்கவே முடியாதுன்ற துளைக்கும் பார்வை.

தென்னிந்தியனா நம்மை நிரூபிச்சாகவேண்டிய கட்டாயத்தில் துப்பாக்கி முனையில் நிக்கறோமோ? ஒரு அரைக்கிலோ போடுங்கன்னு சொன்னதும்தான் அவர் முகத்தில், இதுங்க மத்ராஸிகள்னு ஒரு இளம்புன்னகை.
நமக்குப் பழக்கப்பட்ட மசாலாக்கள், கோழிக்கோடு அல்வா, கேரளத்திலிருந்து வரும் அடுமனை சமாச்சாரங்கள், இட்லிப் பாத்திரம், சாமிக்கு விளக்கு வைக்கச் சின்னதாப் பித்தளை விளக்குகள், கடலை முட்டாய் (ராஜபாளையத்துலே இருந்து வருதுப்பா) பொரியுருண்டை, முறுக்கு மிக்ஸ்ச்சர்ன்னு தீனி வகைகள். காய்கறி வகைகளில் ஏத்தக்காய், கப்ப, இளவன், முருங்கைக்காய், சாம்பார் வெங்காயம் (உள்ளி) முக்கியமாத் தேங்காய். அங்கேயே மட்டை உரிச்சுக்கொடுக்க ஒரு இரும்புக் கருவி. அழகா குடுமியை விட்டுட்டு உரிச்சுக்கொடுக்கறார் உதவியாளர். நமக்கு விருப்பமுன்னா அதை உடைச்சும் கொடுக்கறார்.

குமுதம் குங்குமம் ஆன்மீக மலர், மங்கையர் மலர், இன்னும் சில தமிழ்ப் பத்திரிகைகளும் வனிதா, இன்னும் என்னென்னவோ சில மலையாள வாரிகைகளும் ஒரு ஸ்டேண்டுலே கிடக்கு. பத்து ரூபாயிலிருந்து இருவது ரூ வரையிலும். சுடச்சுடப் புத்தம்புதுசா கிடைக்கறதில்லை. லேட்டஸ்ட்டுன்னா ஒரு ரெண்டு வாரப்பழசு. இதுலே படிக்காததுன்னு வேணுமுன்னு கோபால் தேடி எடுத்ததை வீட்டுலே வந்து பார்த்தால் 2008வது வருசம்.
கடை முதலாளி கல்லாவில் இருந்து துண்டுச்சீட்டில் பில்போட்டுக் காசு வாங்கிக்கறார். சூரஜ் பிரகாஷ் அம்பாலாவில் பிறந்து வளர்ந்தவராம். இப்ப இவர் மகனும் சேர்ந்து கடையைப் பார்த்துக்கறாங்க. கடையின் வயசு 42. சண்டிகர் நகரத்துக்கு வயசு 47. அப்போ.... ஒரு அஞ்சு வருசமா நம்ம மக்கள் நம்ம சாமான்கள் கிடைக்காமத் திண்டாடுனபிறகு வந்த கற்பக விருட்சம் இது.

புதுநகரம் உண்டானபோது ஆர்மி, ஏர்போர்ஸ் அலுவலகங்கள் இங்கே தொடங்குனப்ப நிறைய தென்னிந்தியர்கள் இருந்துருப்பாங்க. தனியா ஆக்கித்தின்னும் கஷ்டப்பட்டு இருக்கலாம். அதான் சிங்கிளா இருக்கும் ஆட்களின் தேவைக்கு சிங்லா ஆரம்பிச்சு இருக்கும். இப்போ இந்தக் கடைக்கு நியூ சிங்லான்னு பெயர் கொடுத்துக்கிட்டாங்க. நியூக்குப் பொருத்தமா மகன் விவேக் இப்ப அப்பாகூடவே இருந்து கடையை நடத்தறாரே!
இதே கடையை ஒட்டி அடுத்தடுத்தக் கட்டிடங்களில் தென்னிந்திய உணவகங்கள் ரெண்டு இருக்கு. ஒன்னு சௌத் ரத்னம், இன்னொன்னு கார்த்திக் ரெஸ்டாரண்ட். இது ரெண்டும் போதாதுன்னு கூடுதல் அட்ராக்ஷனா கையேந்தி பவன்கள் இங்கே சிங்லா முன்னால் மூணு நாலு. தென்னிந்திய ஸ்பெஷல்ஸ் இதுலே ரெண்டு.
வேல்முருகன். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர். (ஆஹா.....ஓட்டேரி நரி!) 30 வருசமா இங்கே இதே தொழில்தானாம். இப்போ பத்து பேர்களை வேலைக்கு உதவியா வச்சுருக்காராம்.

'சும்மாப் படம் எடுக்காதீங்க. இப்படித் தோசை ஊத்தறதுபோல எடுங்க'ன்னு நீளமான செவ்வகத் தவ்வாவில் ஒரு பக்கம் ஊத்தப்பமும், இன்னொரு பக்கம் மசாலா தோசையும் செஞ்சு காமிச்சார். ஒரு கைப்பிடி நிறைய பொடியா நறுக்குன வெங்காயத்தைத் தூவி இது வெங்காய ஊத்தப்பம். இன்னும் கொஞ்சம் முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் கேரட் நறுக்கல்ஸைத் தூவி இது வெஜிடபிள் ஊத்தப்பம்னார். ஒரு கரண்டி உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து ஏற்கெனவே தேசலாத் தேய்ச்சுப் பரத்திய தோசையின் நடுவில் வச்சு அதையும் கரண்டியால் தேய்ச்சுப் பரத்தி இது மசாலாத்தோசைன்னு சொல்லி மூணு பக்கமும் அழகா மடிச்சு ஒரு மசாலா முக்கோணம் செஞ்சு காமிச்சார்.

'சாப்பிட்டுப் பாருங்க' ன்னு ஒரே வற்புறுத்தல். 'பார்த்ததே கண்ணும் வயிறும் நிறைஞ்சு போச்சு'ன்னு சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். ஊஹூம்......அவர் மனம் நோகவேணாமேன்னு சுடச்சுடப் போட்டு வச்சிருந்த வடைகளில் (மெதுவடை, மசால்வடை) ரெண்டு மசால்வடையை மட்டும் பார்ஸல் வாங்கிக்கிட்டேன். ராத்திரிக்கு ரசம் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.

தினம் மாலை 6 மணிக்குத்தான் இந்தக் கையேந்திபவன்கள் வேலையை ஆரம்பிக்கிறாங்க. கண் முன்னால் சுடச்சுடச் செஞ்சு தர்றதாலும் உணவகத்தில் போய்ச் சாப்பிடுவதைவிட விலை கொஞ்சம் குறைவா இருப்பதாலேயும் நிறையக் கூட்டம் வருது. ராத்திரி பத்து பதினொன்னு ஆகிருதாம் கடையைக் கட்ட.
நியூ தமிழ்நாடு கேடரர்ஸ்னு அச்சடிச்ச கார்டு தந்தார். வீடுகளில் விசேஷமுன்னா வந்து செஞ்சு தருவாங்களாம். பதிவர் மாநாடு நடத்தும்போது வடைக்கு இவர்கிட்டேதான் சொல்லணும். நல்ல ருசியாத்தான் இருந்துச்சு.
இந்தக் கடைவரிசைகளில்(செக்டர் 47 D) ஒரு கடையில் இட்டிலி மாவு தோசை மாவு தயாரிச்சு விக்கறாங்க. எட்டிப் பார்த்தேன். வாசலில் மின்சார ஆட்டுக்கல் கடமுடான்னு ஓசையோடு அரைக்குது. ஒரு மூடி போட்டு வச்சுருக்கலாம். ஊஹூம்..... அரைச்ச மாவுன்னு ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டுலே கரைச்சு வச்சுருக்காங்க. புளிச்சு ரெடியா இருக்காம். கிலோக் கணக்கில் விக்கிறாங்க. பார்க்கவே சகிக்கலை. இந்த ஊரில் ஈக்கள் தொல்லை அதிகமா இருக்குன்றது ஒரு குறிப்பு. கவனமா இருக்கணும்.
வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உருட்டிவச்சப் பரோட்டா மாவு

மக்கள் எல்லாத்துக்கும் பழக்கப்பட்டு இருக்காங்க. உடம்பும் ஒத்துழைக்குது. நல்லா இருக்கட்டும்.

சாகர் ரத்னா இன்னொரு தென்னிந்திய உணவகம் செக்டர் 17 இல் இருக்கு. தில்லியிலே 40 பேரோடு ஆரம்பிச்சதாம். இப்போ 220 ஆட்கள் இருந்து உணவருந்தும் வகையில் ஏராளமான கிளைகளோடு அங்கே சக்கைப்போடு போடுவது போதாதுன்னு இந்தியாவின் மற்ற பாகங்களிலும் புதுக்கிளைகள் வந்துக்கிட்டே இருக்காம். பலமுறை டெல்லி சுற்றுலாத்துறை விருதுகளை வாங்கிய பெருமையோடு இங்கே சண்டிகரிலும் ஒரு கிளை கொழிக்குது. வாசலில் ஏராளமா நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. காத்திருந்து மக்கள் சாப்பிட்டுப் போறாங்க.
நாமும் ஒரு நாள் போனோம். எனெக்கென்னவோ சுமாரான சுவையாத்தான் தெரிஞ்சது. வடை ஒரு ப்ளேட்டுன்னா அதுலே நாலு வடைகள். பூரி ஒரு ப்ளேட்டுன்னா அஞ்சு பூரிகள் இப்படி! நம்ம கோபால் ஊத்தப்பம் பிரியர். வீட்டுலே மாவு இருக்கு. கொஞ்சம் வெங்காயம் நறுக்கிக் கொடுத்தா நான் செஞ்சுதரேன்னு சொன்னாக் கேட்டாத்தானே? ஆர்டர் செஞ்சு வந்தது சகிக்கமுடியாமல் இருக்குன்னார். ஆனால் அசல் சுவையை அறியாத வடக்கத்தி மக்களுக்கு சாகர் ரத்னா உண்மையிலேயே ஒரு அபூர்வ ரத்தினம்தான்னு அடுத்த மேசையில் சாம்பாரையும் சட்டினியையும் வழிச்சு வழிச்சு நக்கினவர்களைப் பார்த்தால் தெரியுது.

வடக்கர்களுக்கு நம்ம சாம்பார் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நியூஸியில் நம்ம தோழி ஒருத்தர், 'எனக்கு சாம்பார் வைக்கச் சொல்லிக்கொடு'ன்னு கேட்டு உசிரை வாங்குவாங்க. சரின்னு ஒரு நாள் பேப்பர் பென்சிலைக் கையில் கொடுத்து 'நான் சொல்லச்சொல்ல எழுதிக்கோ'ன்னேன். அளவு சொல்வதற்காக 'உனக்கு எவ்வளவு சாம்பார் வேணுமு'ன்னு கேட்டதுக்கு.........சின்னதா அங்கே மேசைமேல் இருந்த வாட்டியைக் காமிச்சாங்க. (இந்த வாட்டின்றது விளிம்பு இல்லாம மொட்டையா ஹோட்டேலில் தாலி மீல்ஸ்லே தட்டைச்சுத்திக் காய்கறி குழம்பு ரசத்துக்கு அடுக்கும் கிண்ணம்.)
பேப்பரையும் பென்சிலையும் பிடுங்கி வச்சுட்டு, 'சாம்பார் வைக்கும் நாளில் ஃபோன் பண்றென். வந்து வாங்கிக்கிட்டுப்போ'ன்னேன்.
சுந்தரம்ஸ் என்ற பெயரில் இன்னொரு தென்னிந்திய உணவகம் செக்டர் 26 இல் இருக்கு. இன்னும் உள்ளே போகலை. ஆனா இவுங்க ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட் ஒன்னு ஒரு ஷாப்பிங் மாலில் வச்சுருக்காங்க. அங்கே போய்ப் பார்த்தால் மெனு ஒன்னும் சரி இல்லை. வடை வேணுமுன்னு கேட்டதுக்கு அரைமணி நேரம் ஆகுமாம். யாருமே இல்லாமல் கடைக்காரர் போரடிச்சுக்கிட்டு இருக்கார்.. ரசத்தில் ஊறவச்ச வடை விலை கூடுதலாத் தெரிஞ்சது. . அதுக்கும் அரைமணி காத்திருப்பு:( அநியாயமா இருந்துச்சு. எல்லா ஃபுட் கோர்ட்டுகளிலும் சைனீஸ் நூடுல்ஸ்தான் இப்போதைக்கு ஹாட் ஸ்டஃப்!
எப்படியோ போங்கன்னு இருக்கவேண்டியதுதான் போல.


ஆமாம். நமக்குன்னு தென்னிந்தியக் கடைகளை வட இந்தியாவில் சிலர் வச்சுருக்கறதுபோல, நம்ம தென்னிந்தியாவில் வடநாட்டினருக்குன்னு தனிக்கடைகள் இந்த சாப்பாட்டுச் சாமான்களுக்காக இருக்கா?


காலநிலை: புழுக்கம் அதிகம். ஆனால் இன்னிக்கு 40 டிகிரிதானாம். பருவமழைக்குக் காத்திருக்கோம். ஜூன் கடைசியில் வரணும். சிலசமயம் பருவம் தப்புமாம். 2004 வது ஆண்டு ஜூலை 18க்கு மழை ஆரம்பிச்சதாம்.
சண்டிகர் டைம்ஸ் சொல்லுது

42 comments:

said...

காலநிலையோட சண்டிகர் ரவுண்ட் அப் சூப்பர். அந்த தோசை போட்டோ பசிநேரத்துல பதிவு படிக்கறவங்களுக்கு ஏக்கம் வரவெச்சிடும்.

said...

nice teacher. sambar joke very nice. en cabin ulla thaniya sricha velila irukkuravanga nan pitthan appdinu unmaiya kandu pudippanga. so vaaiyai pothi sirichen.

said...

சாப்பாட்டு விஷ‌ய‌த்துக்கெல்லாம் நான் வ‌ர‌லை.அந்த‌ 2008 விக‌ட‌ன் தான் என்னை குபுக் என்று சிரிக்க‌வைத்த‌து.

said...

நம்ம தென்னிந்தியாவில் வடநாட்டினருக்குன்னு தனிக்கடைகள் இந்த சாப்பாட்டுச் சாமான்களுக்காக இருக்கா?//

ஒரு முறை சென்னை தங்கசாலைத் தெருவிலே நடந்து பாருங்க! :)))) அன்னிக்கு நீங்க சாப்பிட்ட பாதுஷா கூட வட இந்தியச் சாப்பாட்டுக்கடையின் அனெக்ஸான மிட்டாய்க்கடையிலே வாங்கினது தான். இங்கே ஹரிஓம்பவன் னு ஒரு வட இந்தியக் கடை. பரோட்டா, சப்ஜி, மில்க் அல்வா, மசாலா பாலுக்குப் பேர் போனது. இப்போவும் இருக்கு. மதுரையிலே மேலச் சித்திரை வீதியிலே மேலக்கோபுரத்துக்கு எதிரே மூன்று ராஜஸ்தானிச் சாப்பாட்டுக் கடையும் ஒரு குஜராத்திக் கடையும் இருக்கு.

said...

Romba nala pathivu madam.Romba naal kalichu unga pathivu padikiren.Indiala irunthu vanthu irukura en appa vuku unga pathivugal than poluthu pokku.Innum ethini naal chandigar vaasam madam?

said...

என்ன இப்படிக் கேட்டுட்டிங்க! சென்னையில் எத்தனையோ பஞ்சாபி தாபாக்கள். மதுரையிலும் வட நாட்டு டூரிஸ்டுகளுக்காக வட இந்திய உணவகங்கள் உண்டே!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பசி நேரத்துலே நானே என் பதிவைப் பார்க்கமாட்டேன்:-)))

said...

வாங்க பித்தனின் வாக்கு.


நலமா? ரொம்பநாளா ஆளையே காணோம்?

சென்னையில் ஆணிகள் கூடிப்போச்சோ?

வாய்விட்டுச் சிரிங்க. நோய் (இருந்தால்) விட்டுப்போயிரும்:-))))

said...

வாங்க குமார்.

அதுலே இன்னும் கோராமை என்னன்னா அந்தப் புத்தகம் தீபாவளிச்சிறப்பிதழாக மூணு சேர்த்து வரும்பாருங்க. அதுலே ஒன்னு. பாக்கி 2 புத்தகம் காணோம்!

தனித்தனியா வித்துப் போயிருக்குமோ என்னவோ! நம்மைப்போல ஏழு பேர் இருப்பாங்களாமே:-))))

said...

வாங்க கீதா.

நாந்தான் சரியா விளக்கம் சொல்லலை போல. உணவகம் இனிப்பகம் இல்லைப்பா. பலசரக்குச் சாமான்கள் கடையைத்தான், தனியா வடக்கீஸ்க்கு இருக்கான்னு தெரியணும்.

said...

வாங்க ரம்யா .

அப்பாவுக்கு இது பொழுதுபோக்கா!!!!! பேஷ் பேஷ். ஒரு ஆயிரத்துச் சொச்சம்தான் இருக்கு.

தினம் மூணுன்னு ஒரு 350 நாளை ஓட்டச்சொல்லுங்க:-))))

சண்டிகர் வாசம் அநேகமா இந்த ஆண்டு இறுதிவரைன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க சரவணன்.

அச்சச்சோ..... தப்பு என் மேல்தான்.
நான் கடை இருக்கான்னு கேட்டது பலசரக்குச்சாமான்கள் விற்கும் கடைகளை.

உணவகங்கள் ஏராளமா இருக்கே. கன்யாகுமரியில் கூட ஒரு ராஜஸ்தான், குஜராத்தி சாப்பாடு மட்டுமேன்னு உணவகங்கள் பார்த்தேன்.

said...

பலசரக்குச் சாமான்கள் கடையைத்தான், தனியா வடக்கீஸ்க்கு இருக்கான்னு தெரியணும்//

இருக்கு துளசி, அதுவும் சென்னை டவுனிலே தான் கிடைக்கும். ஒரு தெருவே வட இந்திய பலசரக்குச் சாமான்கள் கிடைக்கும் தெரு. பேர் மறந்து போச்சு. கேட்டுச் சரிபார்த்துட்டுச் சொல்றேன்.

said...

grrrrrr id, password ketkuthe?? enna vishayam?? mirati vainga! :P

said...

ரெண்டு நாளைக்கு முன் இனிமே நீங்கள் எண்ணெய் பலகாரம்ன்னா வெண்ணெய்ல கால வச்சு வழுக்கிட்டு போற மாதிரி ஓதுங்கிடு என்றார்.
ஆனால் பசி நேரத்துல தெரியாம உள்ளே வந்துட்டேன்.

ஆமா என்ன வகையான புகைப்படக்கருவியை நீங்கள் பயன்படுத்துறீங்கள்.
பேசமா ஓளி ஓவியர் மாதிரி ஓளி ஓவியைன்னு பேரு வச்சுரலாமா?

said...

//பலசரக்குச் சாமான்கள் கடையைத்தான், தனியா வடக்கீஸ்க்கு இருக்கான்னு தெரியணும்.//

அக்கா, தெக்கீஸ்தான் இப்போ பாதி வடக்கீஸ் ஆயிட்டோமே. நம்ம கடைகள்லயே வேணுங்கிறது கிடைக்குது. ராஜம்மா மாதிரியான சிலபேரைத்தான் தேடணும்.மத்தபடி சோளம், தினை,வரகு எல்லாம் நாமளும் ஒருகாலத்துல உபயோகிச்சவங்கதானே.மளிகையில் பெருசா வித்தியாசம் இருக்கிறதில்லை.

தெக்கீஸ்லயும் மல்லூஸ்தான் கொடுத்துவெச்சவங்க. மூலைமுடுக்குலயும் ஒரு பொட்டிக்கடை வெச்சாவது கடமையை 'ஆத்துவாங்க'. நம்ம சமையலுக்கு வேணுங்கிறதை அவங்க கடைதான் சப்ளை பண்ணுது.

said...

பலசரக்கு கடை நம் ஊர் அண்ணாச்சி கடையை நினைவு படுத்துகிறது டீச்சர்.தோசை,வடை, பூரி அனைத்தும் படங்களே அருமையாக இருக்கு டீச்சர்.

said...

திராவிடர்னாக்க யாருங்க?தமிழ் நாட்டில் கருப்பு சட்டை அணிந்து சில காலிப் பசங்க சுத்துவாங்களே அவங்களா?

said...

தலைப்பைத் தவிர பயண அனுபவங்கள் நன்று. படங்கள் தெளிவு.

டெல்லிக்குப் பிழைக்கப்போனவர்கள் சிதறி சண்டிகர் போவதுண்டு.

சண்டிகர் என்று நேராகப்போவதில்லை.

ஒட்டேறிக்காரர் அப்படித்தான் போயிருப்பார்.

said...

கீதா,

இப்பெல்லாம் சென்னையில் டவுனுப்பக்கம் போகவே முடியறதில்லைப்பா. அப்படி ஒரு நெரிசல். போயிருந்தா இந்தக் கடைகளைக் கவனிச்சிருப்பேனோ என்னவோ?

ஒரே ஒரு நாள் பழங்காலக் கட்டிடங்களைப்பார்க்க ஆர்மீனியன் தெருவுக்குப்போயிட்டு அப்படியே அந்தோனியாரைக் கண்டுக்கிட்டு வந்தோம்.

மற்ற பகுதிகளில் இந்தவகையில் ஒன்னும் கண்ணுலே படலை.

ப்ளொக்கர் இப்படித்தான் சிலவாரங்களா நம்ம பதிவுக்கே பின்னூட்ட பதில் சொல்லப்போனாலும் ஐடி கேட்டு மிரட்டுது:(

said...

வாங்க ஜோதிஜி.

'வைத்தியருக்குக் கொடுக்கறதை வாணியருக்குக் கொடு'ன்னு ஒரு பழஞ்சொல் இருக்கு. அதை நல்லாவே நினைவில் வச்சுருக்கேன்.

ஆனாலும் வீட்டுலே எண்ணெய்ச்சட்டி அடுப்பிலே ஏத்தவேணாமுன்னு ஒரு விரதம் இப்போதைக்கு:-)))

புகைப்படக்கருவி ரொம்ப சாதாரணமானதுதான். சாம்ஸங் WB500.

இன்னும் புதுசா, இன்னும் நல்லதா ஒன்னு வாங்க சமயம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதென்னவோ உண்மை. நம்ம உணவகங்களில் சைனீஸ், வடக்கீஸ் சாப்பாடு வகைகள் அதிகம் இடம்பிடிச்சுக் கிடக்கு:(

இதெல்லாம் இப்போ ஃபேஷனாம்!

இங்கே சிங்லாவிலும் கேரளச் சாமான்கள்தான் அதிகம். புட்டு மாவு, வட்டப்பம் மாவுன்னு எக்கச்சக்கம் இருக்கு. 'வாடு' வகைகளும் இருக்கு.

said...

வாங்க சுமதி.


பெஸண்ட் நகர் சென்னையில் ஒரு கடை பிடிச்சுப் போயிருந்துச்சு. அண்ணாச்சி கடை மாதிரிதான். ஆனால் இஸ்லாமிய அன்பர் நடத்தறார். தமிழ்நாடு ஸ்டோர்ஸ்ன்னு பெயர். உள்ளெ காலடி வச்சதும் என்ன ஏதுன்னு விசாரிச்சு நிமிஷமாச் சாமான்களைப் பொட்டலம் கட்டிக் கொடுத்துருவாங்க. சூப்பர்மார்கெட்டில் இந்த மாதிரி சேவை கிடைக்கறதில்லைப்பா.
அ இ உ ன்னு ஒரு எழுத்துலே பில் போட்டுருவாங்க. கூட்டல் கணக்குலே ஒரு பிழை இருக்காது!!!!

said...

வாங்க மருது.

இந்திய தேசிய கீதத்துலே வருது பாருங்க, அந்த திராவிட தேசத்தையும் அதன் மக்களையும் சொல்லிக்கிட்டு இருக்கேன் இங்கே!!!!!

said...

வாங்க குலசேகரம்.

தலைப்பு............ செம்மொழி மாநாட்டுச்சேதிகளை அளவுக்கு அதிகமாப் பார்த்ததும் கேட்டதும் படிச்சதும் ஆக்கிவச்ச பாதிப்புன்னு நம்புங்க ப்ளீஸ்!

ஆமாம். நம் மக்கள் தலைநகரில் பிழைச்சுக்க வந்தவங்களாகவும் இருக்கலாம்தான்.

said...

Not Found
Error 404

said...

mmmmm ennamo achu comments pokave illai. :(

said...

கீத்ஸ்,

இப்ப சரியா இருக்குன்னு நினைக்கிறேன்.

said...

என்னத்தை சரியா இருக்கு போங்க?? கமெண்ட்ஸ் வரலையே?

நான் எழுதினது
ஆர்மெனியன் தெரு ஹைகோர்ட் அருகே. அவ்வளவு தூரம் போகவேண்டாம். தங்கசாலைத் தெரு செண்டரல் பக்கம். அங்கே இருந்து நடந்தே போகலாம். மதியமாய் நாலு மணிக்கு மேலே போனால் நிதானமாய்ப் பொருட்கள் வாங்க முடியும். ரங்கநாதன் தெருவின் நெரிசல் நிச்சயம் இங்கே கிடையாது. மலிவாயும் இருக்கும். தரமும் உத்தரவாதம். கந்த கோட்டம் அருகே உள்ள பெருமாள் செட்டிக் கடையில் நாங்க எங்க கல்யாணம் ஆனதிலே இருந்து பெருங்காயம் வாங்கிட்டு இருக்கோம். சில சமயம் பெருங்காயம் வாங்கவென்றே டவுனுக்குப் போறதுண்டு.

said...

Not Found
Error 404//

athu ennamoo theriyalai, unga blog ennai irandu nala pada paduththuthu. marupadiyum athe error, athe problem. :P:P:P

said...

வர்ணணைகள் நல்லாருக்கு.ஒரு ரவுண்டு உங்க கூடவே நடந்து வந்தது போல இருந்தது.

said...

மசாலாக்கடை,சாப்பாட்டுக் கடைஎல்லாம் ஜோராய் விரிந்திருக்கு.

said...

வீட்டுலே மாவு இருக்கு. கொஞ்சம் வெங்காயம் நறுக்கிக் கொடுத்தா நான் செஞ்சுதரேன்னு சொன்னாக் கேட்டாத்தானே? I am glad that I am not alone

said...

கீதா,

ரெண்டு வாரமா ப்ளாகர் கொஞ்சம் படுத்துது:(

said...

வாங்க ரிஷபன் மீனா.

கூட வந்ததுக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

கடைகள் இருக்குன்னாலும் அவை அமைஞ்சுருக்கும் கட்டிடங்கள் அவ்வளவா நல்லா இல்லேப்பா. எல்லாம் 47 வருசப்பழசு:(

said...

வாங்க சந்தியா.

இன்னொருத்தர் அழுதுகிட்டே நறுக்கி வச்ச வெங்காயத்தில் தான் டேஸ்ட் அதிகமாம். கோபால் சொல்றார்!!!!

said...

தில்லி மலாய் மந்திரைப்பற்றி எங்கேயாவது பதிவு போட்டிருந்தால் சொல்லவும்.

said...

தில்லி மலாய் மந்திரைப்பற்றி எங்கேயாவது பதிவு போட்டிருந்தால் சொல்லவும்.//

மலை மந்திர் அது. உத்தர ஸ்வாமி மலை. ஸ்வாமிமலையைப் போல் கட்டியது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் கடின உழைப்பால் கட்டப் பட்டது. அது பத்தி எழுதினா ஒரு பதிவா ஆயிடும். ஏற்கெனவே எல்லாரும் பதிவானு கேட்கிறாங்க. என்னோட பதிவிலே எழுதறேன்.:))))))))))

said...

என்னங்க குலசேகரம், மலாய் பால்கோவான்னெல்லாம் சொல்லிட்டீங்க!!!!


அது மலை மந்திர்.

டெல்லி கோவில்கள் ஒரு ஏழெட்டு போட்டுருக்கேன்.

இங்கே இந்த சுட்டியில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_28.html

இந்தப் பக்கத்துலேயே நூல் பிடிச்சுப் போனீங்கன்னா அதெல்லாம் இருக்கு.

said...

ஆளே இல்லாத கடையில டீயாத்துறது தெரியும்...மொதல் படத்துல அவரு என்ன ஆளே இல்லாத கடையில தோசை சுடறாரு?? :)))

ஆனா, தோசை நல்லாருக்கு...உங்க தளத்துக்கு வந்தாலே பசிக்க ஆரம்பிச்சுடுது டீச்சர்..:)))

said...

வாங்க அதுசரி.

தோசை கொஞ்சம் விவகாரம் பிடிச்ச வகை. தோசை சுட ஆரம்பிச்சா முதல் ரெண்டு தோசை கொஞ்சம் காலை வாரிவிட்டுரும். அதுவும் கஸ்டமர் வந்து முன்னால் நிக்கும்போது சரியா வரலைன்னா பேஜார். அதுக்குத்தான் தோசைக்கல்லை நல்லாச் சூடு செஞ்சு எல்லாம் சரியா இருக்கான்னு ஒன்னுரெண்டு செஞ்சு பார்த்துக்குவாங்க.

பக்கத்துலே சுருட்டிவச்சுருக்கறதைப் பார்க்கலையா? :-))))

அதென்னவோ இப்பெல்லாம் பேப்பர் தோசை, முறுகல்தோசைன்னு ரொம்பவே தேய்ச்சு அப்படியே தொட்டால் உடையுறமாதிரி மொறுமொறுன்னு கொடுக்கறாங்க. எனக்கு அது பிடிக்கறதே இல்லை.


ஒரு கடையில்(?) நல்லா தேய்ச்சு அப்படியே விட்டுட்டாங்க. தானா அது கல்லுலே இருந்து கிளம்பி வருது!
நல்லா மெத்துமெத்துன்னு கல்தோசை திங்கற ருசி இதுக்கு இல்லேன்னு ஒரு நினைப்பு!