Thursday, June 24, 2010

ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு

பாரத பூமியில், முருகனின் ஏழாம்படை வீடாக இருக்குதாம், 'சண்டிகர் முருகன் கோவில்'. முந்தின ஆறைத் தமிழ்நாட்டில் பார்க்கலாம். ஆறிடம் ஓட நேரமில்லைன்னா சிங்காரச்சென்னை, பெஸண்ட் நகரில் ஒரு அறுபடைவீடு கோவில் இருக்கு.

இந்திய அரசின் விமானப்படையினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சின்னக் கோவிலாக ஆரம்பிச்சதாம். அப்போ ஒரு வேல் மட்டும் மூலவராக வச்சு சின்னதா ஒரு சந்நிதி. சுற்றிவரத் தகரத்தால் மேல் கூரையிட்ட வெராந்தா. படிப்படியாக வளர்ந்த விதம் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம் (இன்னும் முழுவிவரமும் கிடைக்கலை).
ஸ்ரீ லக்ஷ்மிநாராயண் மந்திர்

யாகமண்டபம் நல்லா இருக்குல்லே?


இப்போது இருக்கும் கோவில் கொஞ்சம் பெருசாகத்தான் இருக்கு. நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் பாதி அளவு இருக்கும். ஸ்ரீ கார்த்திகேய ஸ்வாமி கோவில். செக்டர் 31D. Airforce Temple Complex. இந்த வளாகத்துக்குள்ளே முருகனைக் கடந்து போனால்.....பஜனை, சத்சங்கம் நடத்திக்க ஒரு சின்ன ஹாலும், அதை அடுத்து ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவிலும் (வட இந்திய முறைப்படிப் பளிங்குச்சிலைகள்) யாகம் செய்வதற்கான மண்டபம் ஒன்னும் இருக்கு. தமிழர்கள் கோரிக்கைகளை ஏற்று சின்னதா இடம் கொடுத்தாங்களாம். நமக்கு அப்போ.

தெருவில் இருந்து வளாகத்துக்குள்ளே நுழைஞ்சால் வாசலில் 'நான்'! நமக்கு இடப்புறம் அழகான சின்ன விமானத்தோடு கூடிய கோவில். கண்ணுக்கு முன்னால் கருவறை. படிகூட ஏறாமல் வாசலில் இருந்தேகூட வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் கார்த்திகேயனை தரிசிக்கலாம். நல்ல நீளமான படிகள். அர்த்தமண்டபத்தின் படியேறுமுன் முகப்பின் இரு பக்கமும் உசரத்தில் பரிச்சயமான முகங்கள். ஓருத்தர் நம்ம அவ்வை. அப்ப இன்னொருத்தர்? ஜடாமுடிக்கொண்டையைப் பார்த்து அவர் திருவள்ளுவர்ன்னு சாதிச்சேன். ஆனால்.... அவர் அருணகிரிநாதரா இருந்தார்!!!!!
உள்ளே போனால் நமக்கிடப்புறம் செல்லம்போல நிற்கும் சின்ன ஆஞ்சநேயர். இவரை மார்போடு அணைச்சுப்பிடிச்சுத் தூக்கி வந்தாராம் கோவில் காரியதரிசியாகப் பொறுப்பேத்து நடத்தும் நண்பர் ராஜசேகர்.
இங்கே வீடுமாற்றி வந்த பிறகு வந்த முதல் சனிக்கிழமை. பெருமாள் கோவிலைத் தேடிப்பிடிச்சுப் போனோம். அங்கே சந்திச்ச ஒரு தமிழ்ஜோடி சொன்ன தகவல்கள்தான் சண்டிகர் முருகனும் தமிழ்ச்சங்கமும். அடுத்துவந்த ஒரு ஞாயிறில் முருகனைத்தேடிக் கண்டடைந்தோம். கோவிலுக்குக் கிளம்புமுன்னே தமிழ்ச்சங்க விவரம் கிடைக்குமான்னு நமக்குக் கிடைச்ச தகவலைப் பயன்படுத்தினால்..... குறிப்பிட்ட நபர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் அது முடியுமுன்னும் சேதி.
கருவறை விமானம்

முருகனை வலம்வந்து வணங்கியபின், கோவிலில் விவரம் கேட்டால் இதே எண்ணைத் தந்தாங்க. சண்டிகர் முழுசும் வாழ்க்கை எண்களால் மட்டுமேன்றதால் மறுபடி அவரைக் கூப்பிட்டோம். எங்கே இருக்கீங்கன்னார். பக்கத்துலே இன்னொரு செக்டர் எண்ணுக்கு வழி சொல்லி அங்கே வந்துருங்கன்னார். அங்கே அவர் சொன்ன இடத்துக்குப் போனால் அவர் குடும்பமே காத்துருக்கு. தற்சமயம் இவர்தான் இங்கே எல்லாமே!!!! நிறையப் பேசினோம். மேட்டர் ஏராளமாக் கிடைச்சது:-)
கோவில் தூண்கள் ஒவ்வொன்னும் லட்சம் பெறும் ! மொத்தம் 33 லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதப்பட்டு ஒவ்வொன்னுக்கும் அடியில் ஒரு லட்சம் வச்சு பலமான அஸ்திவாரம் போட்டுருக்காங்க.


நம்ம கோபால் வேற ச்சும்மா இருக்காம, 'இவுங்க எழுதுவாங்க'ன்னார். 'கோவில் விஸிட் ஸ்பெஷலிஸ்ட்'னு மகுடம் வேற ( காசா பணமா.... ஆத்துலே போறதை அள்ளிக்கோ....)

ஆஹா.... உங்களை அந்த முருகனே இங்கே வரவழைச்சுட்டான். நீங்க நம்ம கோவில் தலபுராணம் எழுதித்தாங்கன்னார். திருதிருன்னு முழிச்சதைப்பார்த்து இங்கே ஏராளமாத் தமிழ்க்காரர்கள் இருக்காங்க. ஒரு பத்தாயிரம் குடும்பமாவது இருக்கும். அவுங்க இங்கே வந்தது, வாழ்க்கை முறைகள் எல்லாம் எழுதித்தாங்கன்னார். வரலாறுன்னதும் ஒரு பிடிப்பு வந்துச்சு. சரின்னுட்டேன். இப்ப அதிகாரப் பூர்வமா ஒவ்வொன்னையும் 'ஆராய்ஞ்சு எழுதும் பொறுப்பு கிடைச்சுருச்சு பாருங்களேன்.
'என்ன சாப்பிடறீங்க? தோசை, வடை'ன்னு அடுக்கிக்கிட்டே போறார். நாங்க உக்காந்து பேசுன இடம் கார்த்திக் ரெஸ்டாரண்ட்:-) ஓனர் 'குணா' வை அறிமுகப்படுத்தி வச்சார். அப்படியே அங்கே வந்த இன்னும் சில தமிழர்களையும். ரெண்டு இளைஞர்கள் வேற வந்தாங்க. 'மென்பொருள்' மக்கள், கோவிலுக்கு ஒரு வெப் சைட் தயாரிச்சுக்கிட்டு இருக்காங்க. பலே பேஷ் பேஷ். இங்கே பாருங்களேன், 'கார்த்திகேயனின் பக்கம்'.
(கடவுளர்களின் படங்கள் இங்கே கோவிலின் வெப்சைட்டில் இருக்கு )

முன்கதை போதும், வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.
மூணே படி ஏறி உள்ளே நின்னால் நமக்கு இடப்பக்கம் செல்லம் போல ஒரு நேயுடு இருக்கார்னு சொன்னேனில்லை? ரெண்டரை அடி உசரம் இருப்பார். தலையில் கிரீடம் சார்த்தி அவரை மூணடி ஆக்கலாம்:-)))
அஞ்சடிக்கு அஞ்சடின்னு சின்னதா ஒரு சந்நிதி. அவருக்கு நேரெதிரா ராமரோன்னு கண்ணை விரிச்சுப் பார்த்தால் அங்கே நவகிரகங்கள்.

நேயுடுவின் சந்நிதியின் மேல் முகப்பில் நம்ம ராமர் & கம்பேனியாக நால்வர். (கோவிலின் சுற்றுச்சுவரில் மதிலின் மேல் நேயுடு சந்நிதிப்பக்கம் யோக ஆஞ்சநேயர் சுதைச்சிற்பம் ரெண்டு.

கருவறையில், கையில் செவ்வேல் பிடித்த சேவல்கொடியோனின் இரு பக்கங்களிலும் வள்ளியும் தேவசேனா/தெய்வானை. நல்ல அழகான முகவிலாசம். அர்த்தமண்டபத்தில் உற்சவர் ஜொலிக்கிறார்.
கருவறைக்கு இருபுறமும் அழகான முகப்போடு ரெண்டு சந்நிதிகள். முருகனுக்கு வலப்பக்கம் பிள்ளையார். அவர் முன் பார்க்கிங் செஞ்ச வாகனம். அதையொட்டி சின்னதா ஒரு தொட்டிக்குள் பாறாங்கல் ஒன்னு சிதறு தேங்காய் உடைக்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்டைல் இது. முதல்முதலா 'சிங்கை சீனு'வின் கோவிலில் பிள்ளையார் சந்நிதிக்குமுன் பார்த்தது. என்ன ஒரு அட்டகாசமான ஐடியா. தேங்காய் ஓடுகள் சிதறி வளாகம் முழுசும் பரவாமல்......... அதன் பிறகு வேறொரு பயணத்தில் பிள்ளையார்ப்பட்டி, செட்டிநாடுப் பகுதிகளில் கவனித்திருந்தேன். இங்கே இந்த ஐடியாவைக் கொண்டு வந்தவர் கட்டாயம் செட்டிநாட்டுப் பகுதிக்காரராகத்தான் இருக்கணும். அதே அதே!! நண்பர் ராஜசேகர் காரைக்குடிக்காரர்.
தும்பிக்கையானை நம்பிக்கையோடு வலம்வந்து அடுத்தபக்கம் போனால் இதே முறையில் அழகான சந்நிதிக்குள் கிருஷ்ண மாரியம்மா. சிங்கத்தை வெளியே நிறுத்திவச்சுட்டு உள்ளே இருக்காங்க. அழகான சின்ன பலிபீடம் வேற! கருவறையின் வெளிப்புறச்சுவர்களில் இடது பக்கம் ரெண்டு தனித்தனி மாடங்களில் நர்த்தனகணபதி ( ஆனால் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்தான்.) தக்ஷிணாமூர்த்தி ஆகியோர், முருகனுக்கு நேர் பின்னால் மாமன் மகாவிஷ்ணு, வலதுபுறச் சுவர்களில் ப்ரம்மா, துர்கா. இந்தப் பிரகாரத்தில் கருவறைச்சுவரை ஒட்டியபடி சண்டிகேஸ்வரர் நம் 'ஆஜர்' பட்டியலைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார்.

கோவிலின் பிரகாரத்தில் வருசந்தோறும் இங்கே கொண்டாடப்படும் பண்டிகைகள் விழாக்களின் விவரங்கள், அந்தந்த கடவுளர்களுக்கான ஸ்லோகங்கள் எல்லாம் பளிச் ன்னு எழுதி வச்சுருக்காங்க. ரெண்டு வார்த்தை சொல்லி சாமி கும்பிட எளிதா அமைச்சது எவ்வளோ நல்லது பாருங்களேன்.


ஒரு வருசத்தில் கொண்டாடும் நிகழ்ச்சி விவரங்கள்

நவகிரக மண்டபத்தையொட்டி கோவிலின் வலது ஓரமா சின்னதா ஒரு மேடை. கலைநிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் எல்லாம் நடத்திக்கலாம். மேடைக்கு முன் சுமார் நூறு பேர்கள் வரை உட்காரலாம் என்ற அளவில் ஹாலில் இடம் இருக்கு. ஹாலின் கடைசியில் மாடிக்குப் போகும் வழி. அங்கேதான் கோவிலுக்கான டைனிங் ஹால். அன்னதானக் கூடம். அம்பதுபேர்கள் வரை தாராளமாக அமர்ந்து சாப்பிடலாம்.

இந்தக் கூடத்தைத் தன்னுடைய தகப்பனாரின் 59 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக முழுக்க முழுக்கத் தன் செலவில் கட்டிக்கொடுத்துருக்கார் நண்பர் ராஜசேகர்.
பிரகாஷ் கோவில் குருக்கள்.


கோவிலில் விதிப்படி பூஜைகளை நடத்த ஒரு குருக்கள் இருக்கார். இளைஞர். வயசு வெறும் இருபத்தியஞ்சுதான் வந்து ஒன்பது மாசமாச்சாம். சிங்காரச்சென்னை வாசி. மேற்கு மாம்பலத்துக்காரர். பாலக்காட்டில் குருகுலவாசத்தில் ஒன்பது ஆண்டுகள் வேதம் படிச்சுருக்கார். அதுக்குப்பிறகு தென்தமிழ்நாட்டில் சில கோவில்களில் வேலை. பழகப்பழக அப்படியே கடவுளர்களுக்குச் செய்யும் சாற்றுமுறை விதிகள் எல்லாம் கைவர ஆரம்பிச்சுருக்கு. சரியாச் சொன்னால் இவர் சாஸ்திரங்கள் எல்லாம் வைதீக முறைப்படி செஞ்சு வைக்கும் பண்டிட்தானாம். கூடப் படித்த நண்பர் தில்லியில் கோவில் வேலை கிடைத்து வந்தபிறகு தன் தோழனுக்கும் பரிந்துரைச்சதில் இங்கே வேலை ஆகி இருக்கு.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை:-)

டிஸ்கி: இது ஒரு 'ஆன்மீகப் பதிவு' கண்டதைத்தான் எழுதி இருக்கேன். அப்புறம் கண்டதை ஏன் எழுதினேன்னு கோச்சுக்கக்கூடாது ப்ளீஸ்.

காலநிலை: இந்த வாரம் பூராவும் 45+ தானாம்:( ஆனால் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மூனு மணிக்கு பெரிய பெரிய ஐஸ்கட்டிகளாக் கல்மழை பெய்ஞ்சுச்சு. நம்ம வீட்டு கேட்டுக்கதவுக்கிட்டே பொருத்தி இருந்த கண்ணாடி உருண்டைகள் மண்டையைப் போடவேண்டியதாப் போச்சு. அடிஅடின்னு ஒரு அரைமணி நேரம்தான்!

26 comments:

said...

//சின்னதா ஒரு தொட்டிக்குள் பாறாங்கல் ஒன்னு சிதறு தேங்காய் உடைக்க.//

காளஹஸ்தியிலும் இதேமாதிரிதான் இருக்குறதை பாத்திருக்கேன்.இன்னும் எழுதுங்க சண்டிகர் முருகனைப்பத்தி.

said...

யாக மண்டபத்தை பாக்க நல்ல ஐஸ்வர்யமா தான் இருக்கு.கோவிலும் சுற்றுப்புறத்தையும் பாக்க எல்லாமே நேர்த்தியா இப்படிதான் இருக்கணும்னு மெயின்டெயின் பண்ணறா மாதிரி இருக்கு.

மறுபடியும் ஒரு வாரம் லீவு எடுக்க போறேன் டீச்சர்..ஆப்சென்ட் போடாதீங்க...போயிட்டு வந்து நோட்ஸ் எடுத்துக்கறேன்.

said...

You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.

said...

முருகன் கோவில் நம் தமிழ்நாட்டு கோவில் போன்று நன்றாக உள்ளது டீச்சர்.

said...

//...நிறையப் பேசினோம். மேட்டர் ஏராளமாக் கிடைச்சது:-)..//

காத்திருக்கோம். :-)

said...

சண்டிகரிலும் நம்ம முருகனுக்கு கோவிலா என நான் ஆச்சரியப்பட்டதற்கு நிறையத் தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள். நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.


காளஹஸ்தியா? இன்னும் பார்க்கலை. அதுக்குள்ளே கோபுரம் இடிஞ்சுருச்சாமேப்பா:(

said...

வாங்க சிந்து.

(லீவுலே)போயிட்டு வாங்க சிந்து:-)

said...

Thanks Maria

said...

வாங்க சுமதி.

தமிழ்க்காரர்கள் கட்டிய கோவில்தான் இது!

ஸ்தபதியே தமிழ்நாட்டுலே இருந்து வந்தவர்தான்.

அதிலும் இன்னொரு வேடிக்கை என்னன்னா...... கோவிலுக்குள் பெரியார் பெயர்கூட கல்வெட்டா இருக்கு!

said...

வாங்க நன்மனம்.

பதிவருக்கான சிறப்பு குணங்கள் மேட்டர் தேத்துவதுதானேப்பா:-)))

said...

வாங்க டொக்டர் ஐயா.

தமிழன் எங்கே போனாலும் முருகன் கூடவே போயிடறான்.

ரெண்டு வருடம் முன்பு ஃபிஜித்தீவு முருகனைப்பற்றிச் சில இடுகைகள் எழுதி இருந்தேன்.
நேரம் கிடைச்சால் படிச்சுட்டுச் சொல்லுங்க.

said...

நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு.
வாழும் இடங்களில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு புத்துணர்வு அளிக்கும் உங்கள் எழுத்துக்களை தொடர்கின்றேன்.

said...

திருப்புகழ் குரூப் அங்கயும் சிறப்பாக நடக்குமென்று ஒருத்தங்க சொன்னாங்க..

அப்பறம் அந்த ஐஸ்கட்டியால் பல்பு உடைஞ்சது சொன்னீங்களே.. அடிக்கடி இந்தகோடையில் ஐஸ்கட்டி மழையை தில்லியில் அனுபவிச்சிருக்கேன்.. அடி பின்னிடும் ஸ்கூட்டரில் போறவங்க எல்லாம் ஓடி ஒளிவாங்க..

45 கஷ்டம் தான் . நான் பொள்ளாச்சியில் .. கூல் கூல் காத்து வாங்கிட்டிருக்கேன்..அடுத்தமாசம் அகெய்ன் வெயிலில் வாடனும்..

said...

சண்டிகரைப் பற்றிய தங்கள் அனைத்து பதிவுகளிலும் உள்ள படங்களைப் பார்க்கும்போது எங்கும் ஒரு தூய்மையும் ஒழுங்கும் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள நாங்கள அவற்றைக் கொம்புத்தேனாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். தங்கள் பதிவிகள் மூலம் இலவசமாக எங்களுக்கு உலகம் பூராவும் சுற்றிக்கட்டும் உங்கள் வாலிபருக்கும் எங்கள் நன்றிகள்

said...

ஆஞ்சநேயரின் முகப்பு வாயிலில் கூட வில் தெரிகிறதே! துளசி அருமையா விவரிச்சிருக்கீங்க.
செட்டி நாட்டவர் செய்யும் கோவில் தொண்டுகள் பிரசித்தி பெற்றவை. தமிழ்த் தொண்டும் நமக்குத் தெரிந்ததுதானே.
ஆனாலும் சண்டிகருக்கு வந்து இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டி ரிஉக்கிறார்கள் என்றால் நிஜமாகவே போற்றப்பட வேண்டியவர்கள் தான்.
எல்லாமே கவனமாக நேர்த்தியாச் செய்திருக்காங்க.

said...

முருகன் கோயில், யாக மண்டபம் எல்லாம் அழகாக இருக்கிறது.

said...

வாங்க ஜோதிஜி.

பலவருசங்களாக் கோவில்கள் இல்லாத ஊர்லே இருக்கறதால்..... அருமை தெரியுது. இந்தியாவிலேயே இருந்துருந்தால் ஒருவேளை இப்படி ஓடியோடிப் பார்த்திருக்க மாட்டேனோ என்னவோ?

said...

வாங்க கயலு.

திருப்புகழ் குழுவா? தேடணும் இனி.

இன்னும் மூணு நாளில் மழை வருமாம். பத்திரிகை ஜோசியம்!

said...

வாங்க பிரகாசம்.

அடடா.... படத்தை நம்பிட்டீங்களா????

குப்பையை ஒதுக்கிட்டுத்தானே ஃபோகஸ் செய்கிறேன்:-)

இந்தியர் எல்லோருக்கும் உள்ள பொதுகுணம் அப்படி சுலபத்தில் போயிருமா என்ன?

இங்கேயும் அழுக்கும் குப்பையும் இருக்கு. ஆனால் சென்னைக்கு இது பரவாயில்லைன்னு சொல்லலாம்.
மக்கள் தொகை இந்த நகரத்துலே அஞ்சு லட்சம். விகிதாச்சாரம் பார்த்தால் சென்னை = சண்டிகர்தான்.

ப்ளாஸ்டிக் பைகளைக் கடைகளில் தர்றதில்லை அவ்வளவா என்பது ஒரு ஆசுவாசம். துணிப்பைபோல ஒன்னு தர்றாங்க. பலவித நிறங்களில் இப்போ ஒரு கலெக்ஷன் சேர்ந்துருக்கு.

said...

வாங்க வல்லி.

முகப்பு வில் முருகனோடதுப்பா. வேடுவனா வந்தானில்லையோ!!!!

நீங்க சொன்னது சரிதான்ப்பா. கோவில்வேலைகலை இழுத்துப்போட்டுச் செய்யறாங்க. ஒரு நாள் கோவில் போனபோது உள் அறைகளையும் சந்நிதிகளையும் சீயக்காய்ப்பொடி போட்டுக் கழுவிவிட்டுக்கிட்டு இருந்தாங்க. எண்ணெய்ப்பிசுக்கு இருக்குன்னு.


மறுநாள் சங்கராச்சாரியார் அஞ்சு மணி நேரம் வந்து கோவிலில் இருக்கேன்னு சொன்னாராம். அதுக்காக அவர் தங்க அறைகளை ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

said...

வாங்க மாதேவி.

நல்ல மாலை நேரமுன்னா அங்கே யாகம் செய்யலாம். கூடி இருக்கும் மக்கள் வளாகத்துலே அமரலாம். பளிங்குத்தரைகள் பளிச். ஆனா குளிர்காலமாக இருக்கணும்.

said...

Tankyou Madam,

said...

வாங்க சுடலை.

முருகனின் அழகான வெப் சைட்டுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

said...

ஆகா! ஆகா! சண்டியின் வீட்டில் முருகனுக்கும் ஒரு படை வீடு! ஆகா! அதைப் பற்றி எழுதவும் தங்களுக்கே குடுத்து வைத்திருக்கிறது. பெருமை எல்லாம் உங்களுக்கே! எனது மனமார்ந்த பாராட்டுகள்.

said...

வாங்க ஜீரா.

ஆன்மீகச்செம்மலே இப்படிச்சொன்னால் எப்படி?

ஏண்டா இவகிட்டே சொன்னோமுன்னு முருகன் நினைக்காமல் இருந்தால் சரி:-)