Monday, June 28, 2010

பீமா நகர், C/O பஞ்சபுரத்தில் ஒரு மாலை.

இப்படியாப்பட்ட இடத்தில் வந்து பனிரெண்டு வருசம் என்ன.... ஆயுசு முழுக்கவே இருக்கலாமுன்னுதான் எனக்குத் தோணுச்சு. சுட்டெரிக்கும் வெய்யில், இங்கே தன் வேலையைக் காமிக்க முடியாமத் திணறித்தான் போகும்.

சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பனிரெண்டு வருசம் வனவாசம் செய்யப் புறப்பட்ட பாண்டவர்கள் வந்து தங்குன இடம். இங்கே இருக்கும் பீமாதேவி கோவிலே இதுக்கு ஒரு சாட்சி. அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாம். யாரும் கவனிக்காம இடிபாடாகி கிடைச்சவரை சிற்பங்களை எடுத்துத் தனியா வச்சுருக்காங்களாம். கோவிலைப் பார்க்க முடியலை. தொல்பொருள்துறையின் 'கவனிப்பில்' இருக்கு. மாலை அஞ்சு மணிக்கு கேட் மூடிருவாங்களாம்:(

நாம் ஆடி அசைஞ்சு ஏழேகாலுக்குப் போனால்............ போகட்டும் இன்னொரு நாள் போய்ப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் இந்த இடத்துக்கு பஞ்சபுரா, பீமாநகர்ன்னு பெயர்கள் இருந்துருக்கு. இப்போ 'பிஞ்சோர்'ன்னு சொல்றாங்க.
சண்டிகரில் இருந்து ஷிம்லா செல்லும் பாதையில் சரியா 20 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கோட்டைச்சுவர் நம்ம கண்ணில் படாமப்போகாது. சட்னு பார்த்தால் மெல்லிசா ஏதோ சினிமாவுக்குச் செட் போட்டாப்புலெ தெரியுது. உள்ளே நுழைய ஆளுக்கு 20 ரூபாய் டிக்கெட்டு. முன்வாசலைக் கடந்து போனால் கண்ணுக்கு முன்னே விரியும் பசுமை! கொஞ்சம் தூரத்தில் வளைவு வளைவாய் மொகலாயக் கலைகளோடு இருக்கும் கட்டிடம். சட்னு பார்த்தால் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்கும் சின்னப் பள்ளிவாசலை நினைவு படுத்துது. இடைப்பட்ட வெளியில் நட்ட நடுவில் அதை நோக்கிப்போகும் நீரோடை.

கட்டிடத்தின் ரெண்டு பக்கமும் இருக்கும் வாசலில் வழியா எட்டிப்பார்த்தால் ஏராளமான அலங்கார வளைவுகளோடு இன்னொரு அழகான கட்டிடம் தொலைதூரத்தில். ஒரு ஏழெட்டுபடி இறங்கிப்போகணும். அது ரங்மஹலாம். இங்கேயும் அதே நீரோடை மேலிருந்து வழிஞ்சு அப்படியே இறங்கி ஓடுது. ரெண்டு பக்கமும் அழகான புல்வெளிகள், அசோகமரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மாந்தோப்புகள்.
ரங்மஹலில் ஒரு சுவரில் எதிர்வரிசை எண்களோடு உள்ட்டாவா ஒரு கடிகாரம். ஆண்ட்டி க்ளாக்காம்! உள்ளூர் (கால்கா) வாசி ஒருத்தரின் கண்டுபிடிப்பு.
ரங்மஹலில் நின்னு நேரா அந்தப் பக்கம் பார்த்தால் இன்னும் ஒரு இருபதடி ஆழத்துலே தோட்டம் நீண்டு போகுது. கூடவே 'நீர் வழி' யும். நீச்சல் குளம்போல ஒரு அமைப்பில் செயற்கை நீரூற்று அமைப்பு.
இறங்கி நடந்தால் பெரிய சதுரவடிவக் குளத்தின் நடுவிலே ஜல்மஹல். ஒளரங்கஸேப் உக்காந்து எதாவது பானம் குடிச்ச பார்! ஆனால் அவர்தான் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அற்புத மனிதராச்சே! ஓய்வு எடுத்தார்ன்னு வச்சுக்கலாமா? இப்போ இந்த ஜல்மஹலை கேஃபே பார் னு ஆக்கிவச்சுருக்காங்க. இந்த நிமிஷம் அங்கங்கே இடிச்சுப்போட்டு வச்சுருக்காங்க. கிட்டத்தட்ட பனிரெண்டுகோடிச் செலவில் பராமரிப்பு/ புனரமைப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு மொத்தத் தோட்டத்திலும். சவுகரியக்குறைவுக்குப் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கு ஹரியான மாநில அரசாங்கம்.

டிக்கெட் வாங்கி, நாம் தோட்டத்துக்குள் நுழையும் இடத்தில் இருந்து இப்படியே ஏழு அடுக்குகளா இறங்கிப் போகுது மொத்தத் தோட்டமும். கூடவே நீரோடையும் இறங்கி இறங்கி வழிஞ்சு வழிஞ்சு ஒரு ஓட்டம். வழிநெடுக வண்ணவிளக்குக்களும், தண்ணீர் பீச்சியடிக்கும் அமைப்புமா அழகாத்தான் இருக்கு. கோட்டைச்சுவர்கள் அரண்கட்டி நிக்கறது பத்தாதுன்னு கொஞ்ச தூரத்தில் சுற்றிவர மூணு பக்கமும் மலைகளும் இன்னொரு அரணா நிக்குது.
இமயமலையின் பேரக்குழந்தைகளான ஷிவாலிக் மலைப்பகுதிகளை ஒட்டி
மொத்தம் 100 ஏக்கர் இடமாம். மொகலாய மன்னர் ஔரங்கஸேபின் வலதுகை போல இருந்த அமைச்சர் ஃபிடாய் கான் ( Fidai Khan) வடிவமைச்ச தோட்டம். பதினேழாம் நூற்றாண்டு. அப்போ இவர் முழு பஞ்சாப் மாநிலத்தின் கவர்னரா இருந்துக்கார். மொகலாயர்கள் காலத்துக்குப்பின் பராமரிப்பு இல்லாமல் பாழடைஞ்சு போயிருந்த இந்தத் தோட்டத்தை பாட்டியாலா மகாராஜா யதுவீந்தர் சிங் ஏற்றெடுத்து சீரமைப்பு செஞ்சு இப்ப புதுப்பொலிவோடு ஜொலிக்குது. உள்ளூர் வெளியூர் மக்களுக்கு இது ஒரு பொக்கிஷமுன்னு சொல்லணும்.
கோடைகாலத்தில் ராத்திரி பனிரெண்டு மணி வரையிலும் , குளிர்காலத்தில் ராத்திரி பத்து வரையிலுமா தோட்டம் திறந்து வைக்கிறாங்க. இருட்டானதும் வண்ணவிளக்குகள் அலங்காரம் பிரமாதமா இருக்குமுன்னு கேள்விப்பட்டதால் நாங்க கொஞ்சம் தாமதமாத்தான் போய்ச்சேர்ந்தோம். வெளியே தலைகாட்ட முடியாம பொளக்கும் வெயிலுக்குப் பயப்படாமக் கொஞ்சம் சீக்கிரமாப் போயிருந்தால் அங்கே இருக்கும் நர்ஸரி, மினி Zoo எல்லாம் போயிருக்கலாம். அப்படியே பத்தாம் நூற்றாண்டு பீமாதேவியையும் தரிச்சு இருக்கலாம்.
வண்டியை விட்டு இறங்குன விநாடி, நம்மை வரவேற்பதுபோல் ஒரு 'ஆந்தி' (கொடுங்காற்று) சுழற்றி அடிச்சது. ஐயோன்னு கத்த வாயெடுத்தால் வாய்க்குள்ளே மண்:( அஞ்சே நிமிசத்தில் எல்லாம் அடங்கிருச்சு. உள்ளே வேடிக்கை பார்த்துக்கிட்டே போனோம். அங்கிருக்கும் மாமரங்களில் இருந்து பழங்களைப் பறிச்சு விற்பனைக்கு வச்சுருக்காங்க. வெளியே விற்கும் அதே விலைதான். ஆனால் மரத்தில் இருந்து டைரக்ட்டா ஃப்ரெஷா கிடைக்குதே. கூடவே சப்போட்டாப் பழங்களும். மாமரங்களுக்கு இடையிடையே இதுகளும் இருக்கு. தராசு ஒன்னும் இல்லை. ச்சும்மாக் குத்துமதிப்பா எடுத்துப் பையில் போட்டுத் தர்றாங்க.

திடீர்னு ஒரு மழை பிடிச்சது. பெரிய பெரிய மழைத்துளிகள். ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்கு விடாம ஒரு மழை. தொப்பலா நனைஞ்சுக்கிட்டே ஓடிவந்து படியேறி ரங்மஹலுக்கு வந்து கூட்டத்தில் நீந்தி ஒடுங்கினோம். விளக்குப் போடும்வரை இருக்கலாமா இல்லை மழை விட்டுருக்கும்போதே கிளம்பலாமான்னு யோசனை. கேட்டில் வந்து கேட்டால் ஏழரைக்கு விளக்கு போடுவாங்களாம். (இங்கே அந்திநேரம் இருட்டவே ஏழேமுக்கால் எட்டு ஆகிருது) இன்னும் முக்காமணி நிக்க வேணாம். இன்னொருநாள் ஆகட்டுமேன்னு கிளம்பி வெளியே வந்தோம்.

நாலு பெட்டிகளொடு பொம்மை ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. முப்பது ரூபாய் டிக்கெட். பழையகாலத்து ரயில் எஞ்சின் ஒன்னு பார்வைக்கு வச்சுருக்காங்க. அலங்கார விரிப்பை முதுகில் தாங்கிய ஒட்டகங்கள் மக்களைச் சவாரிக்குக் கொண்டு போகுது. ஒரு குதிரையும் சேவைக்குத் தயாரா நிக்குது. பொம்மைகள், விளையாட்டுச்சாமான்கள், நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகளும் தீனிக்கடைகளும் ஏராளம். மக்கள் கொஞ்சமும் அசராமல் வாங்கித்தின்னுட்டுத் தரையெங்கும் குப்பைகளைக் கடாசிட்டுப் போறாங்க:( ஏகப்பட்ட இரைச்சலும், அதிசப்தமாப் பாடும் பாட்டுக்களுமா குழந்தைகளுக்கான ஒரு வேடிக்கை விநோதப்பூங்கா வேற. தனி டிக்கெட். சின்ன செயற்கைக்குளங்களில் நீர்விளையாட்டு.
இந்தியாவில் அமைதி என்றதுக்குப் பொருளே இல்லை. நாராசமா பேரோசையோடு ஒலிக்கும் பாடல்களையும் ரசிச்சுக்கிட்டே அவைகளை மீறிய தொனியில் பேசிக்கிட்டே இருக்காங்க. சத்தமே பார்ட் ஆஃப் த லைஃப். அநேகமா இந்தியாவை விட்டுக் கிளம்பும் சமயம் எனக்கு ரெண்டு காதும் அவுட்தான்.
ஏழேகால் ஆகி இருந்துச்சு. இன்னும் காமணி இருந்து லைட்டைப் பார்க்கலாமுன்னு தோணுச்சு. இன்னொரு நுழைவுச்சீட்டு வாங்கணுமா இல்லை இதுலேயே போகலாமான்னு தெரியலை. விசாரிக்கலாமுன்னு டிக்கெட்டைக் கையில் பிடிச்சுக்கிட்டு போனா நாம் வாயைத்திறக்கு முன்னேயே டிக்கெட்டைப் பிடுங்கி முந்தி கிழிச்ச அதே இடத்தில் இன்னும் கொஞ்சம் கிழிச்சுட்டு உள்ளே அனுப்பிட்டாங்க.
ஏழரைக்கு ஆரஞ்சு விளக்கு மட்டும் ஆரம்பிச்சது. இன்னும் வரும் வருமுன்னு காத்திருந்தோம். ஊஹூம்..... ஏகே 47 வச்சுருந்த ( கோபாலுக்கு எந்தத் துப்பாக்கியைப் பார்த்தாலும் ஏகே 47தான். பிஸ்டலைக்கூட இப்படித்தான் சொல்வாரோ என்னவோ!) காவலரிடம் விசாரிச்சால் நல்லா இருட்டுனபிறகுதான் ஒவ்வொன்னாப் போடுவாங்களாம். எட்டேகால் எட்டரை ஆனாலும் ஆகிரும். சட்னு இருட்டித் தொலைக்குதா என்ன? பார்த்தவரை போதுமுன்னு ஃபைனலாக் கிளம்பிட்டோம்.
தோட்டத்துக்குள்ளே அங்கங்கே இப்படி ஸ்பீக்க்ர்ஸ்களில் மெலிசான ஓசையில் ஹிந்திப்பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கு.


முகலாயர்கள் உண்டாக்கி வச்ச தோட்டங்களில் இதுதான் மூத்தது. இந்தப் பக்கம் வர நேரிட்டால் சொல்லுங்க. போய்ப் பார்க்கலாம்.
உள்ளேயும் ஒரு கோட்டை மதில் கொஞ்சம் பலமானதாக நிக்குது. திருட்டுமாங்காய் அடிக்கமுடியாது:-)காலநிலை: இரவு ஆரம்பிச்ச (அநேகமா அதிகாலை நாலு இருக்கலாம்) மழை இன்னும் விடலை. வர்றதும் போறதுமா இருக்கு. இப்ப வீட்டுக்குள்ளே 33.4 டிகிரி. வெளியே.... ? 41 வரை போகுமுன்னு சண்டிகர் டைம்ஸ் சொல்லுது.

22 comments:

said...

//வாய்க்குள்ளே மண்//

கண்ணன் ஆக வாய்ப்பு கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படணும் :)

said...

நியூசியிலை இருந்து எல்லா இடமும் போய் ஆராய்ச்சி நடத்தும் உங்களின் இயற்கை மீதான ஈடுபாட்டினை எப்படி வர்ணிப்பது. வெகுவிரைவில் நியூசி, மெல்பேண் பதிவர் சந்திப்பும் வைப்பம்.
புகைப்படங்களின் பகிர்வுக்கு நன்றிகள்!

said...

மேக மூட்டதுடனும்,மழை பெய்தும் படங்கள் ரம்யமாக உள்ளன. நீரோடை அருகில் எடுத்துள்ள படமும் அழகாக உள்ளது டீச்சர்:))

said...

படங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் படங்கள் எல்லாமே மிகத்தெளிவாக நாங்களே நேரில் பார்ப்பதுபோல் காட்சியளிக்கின்றன. ஸார் என்ன மாங்காய் சுட்டுவிட்டுவிட்டாரா?
கையைப் பின்னால் வைத்துக்கொண்டு சிரிக்கிறார்!!
டிக்கெட் கிழித்தவர் பரவாயில்லை. படம் சேதமாகாமல் ஓரத்தில் மட்டும் கிழித்திருக்கிறார்.

மாம்பழங்கள் விலை அதிகமானால் கூடப் பரவாயில்லை,கார்பைடு கல்லால் பழுக்க வைக்காமல் சுகாதாரமாகக் கிடைக்கிறதே.

said...

வாங்க சின்ன அம்மிணி.

அரியும் சிவனும் ஒன்னு என்று அறியாமல், அன்னிக்கு ஏகப்பட்ட கண்ணன்களும் கண்ணிகளுமா இருந்தோம்:-)))

said...

வாங்க தமிழ் மதுரம்.

முதல் வருகைக்கு நன்றி.

தமிழ்நாட்டை விட்டு வருசம் 36 ஆச்சு. இந்தியாவை விட்டு 29.அதான் விட்டதைப் பிடிக்கும் எண்ணத்தோடு, கிடைச்ச சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கிறேன்.

ஏற்கெனவே சிட்னியில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமா நடத்தி இருக்கோம்:-)))))

http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-2.html

said...

வாங்க சுமதி.

ஒரு மழை அடிச்சு ஓய்ஞ்சதும் காலநிலைகூட கொஞ்சம் இதமாக ஆனது.

said...

வாங்க பிரகாசம்.

கோபாலின் கைக்குப் பின்னால் மாம்பழப் பை :-)))


இங்கே ஊரெல்லாம் மாமரங்கள்தான். எல்லா ரோடுகளின் ரெண்டு பக்கமும் மாமரங்கள். அதை ஏலத்தில் எடுத்தவர்கள் அங்கேயே காய்களைப் பறித்து விக்கறாங்க. சின்ன மரப்பெட்டிகளில் பேக்கிங் கூட சைடு பை சைடா நடக்குது அங்கங்கே.

said...

டீச்சர், பதிவுலக நண்பர்களை திருப்தி படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களுடன் எல்லா இடத்துக்கும் வரும் கோபால் சாருக்கும் வணக்கங்கள்.

said...

அருமையான படங்கள், மனதை கவர்ந்து விட்டன.

said...

வழக்கம் போல பயணமும் படங்களும் கலக்கல் டீச்சர் ;)

said...

Thank you so much for the pictorial tour!!

said...

பீம புரி, உள்ள போக முடியாவிட்டாலும் அந்த மரங்களின் வரிசையும், நீரோடை அமைந்திருக்கும் அழகையும் பார்க்கும் ஏனோ சுந்தரகாண்டம் நினைவுக்கு வந்தது

சஃபோட்டாவும் அங்க கிடைக்கிறதா. பழங்கள் சாம்ராஜ்யம் நடத்துகின்றன சண்டிகரில். இங்கே ரெண்டு நாளா ராத்திரி மழை. பகல்ல வெய்யில். இருந்தாலும் அவாளவாகச் சூடுன்னு சொல்ல மாட்டேன். இந்த வெய்யிலுக்கு ஆந்தி வேற வந்ததுன்னால் கொஞ்சம் உஷ்ணம் குறையணுமே. படங்கள் வெகு அருமை துளசி.

said...

வாங்க நன்மனம்.

இதெல்லாம் தான் பெற்ற இன்பம் வகை:-)))

said...

வாங்க சித்ரா.

இடத்தின் அழகுலே கொஞ்சூண்டு கொண்டாந்தேன்.

ஆமாம்....ப்ரொஃபைல் போட்டோவில் நீங்களும் ரங்ஸுமா?

said...

வாங்க கோபி.

ஊருக்குப்போய் வந்தச்சா?

said...

வாங்க சந்தியா.

டூரில் கூடவே வர்றதுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

ஃபிடாய் கானை ராவணனா ஆகிட்டீங்களா:-)))))

அசோகமர வரிசை காரணமா?

அந்த வனத்தின் அழகை வர்ணிச்சு இருப்பதைப் படித்துப் பார்த்தால் ஆச்சரியமா இருக்குல்லே?

மழை வந்து கொஞ்ச நேரத்துலே சடார்ன்னு பழைய சூடு வந்துருதுப்பா:(

said...

பெரிய கூடல்மரங்கள்,மொகலாய கட்டிடம், கோட்டைமதில்,விளக்கொளி அனைத்துப்படங்களும் நேரில் பார்த்த நிறைவைத் தந்தது.

தொடர்ந்து புதிய ஊர்களைச் சுற்றிப்பார்க்கவரக் கசக்குமா? மிக்க ஆவலுடன்தான் வருகிறேன்.

மிக்கநன்றி துளசிகோபால்.

said...

வாங்க மாதேவி.

கூட நீங்கள் எல்லோரும் வரும் தைரியத்தில்தான் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன:-))))

said...

// 41 வரை போகுமுன்னு சண்டிகர் டைம்ஸ் சொல்லுது.//

நீங்கள் கொடுத்து வைத்தவர். இங்கே கத்தாரில் சென்ற வாரம் 52 டிகிரி வெயில். போட்டு சாத்தி விட்டது.

said...

வாங்க எக்ஸ்பேட்குரு.

ஐயோ 52ஆஆஆஆ??????

ஒருமுறை தெரியாத்தனமா ஜூனில் ஆக்ரா போயிட்டுத் தாஜ் மஹால் வாசலில் நின்னப்ப இதே 52. வாசலில் இருந்த ஐஸ் வண்டியில் ஒரு பெரிய ப்ளாக் ஐஸ் வாங்கி டவலில் சுற்றி தலையில் இருமுடிக்கட்டு ஏந்திக்கிட்டு தாஜ் பார்த்தேன்:(