போன நவராத்ரி வந்துச்சு பாருங்க, அதுதான் இந்தியாவில் நான் 'கொலுவச்சுக் கொண்டாடிய' முதல் ராத்ரி! விசேஷமா ரொம்ப ஒன்னும் செய்யலைன்னாலும் ஒரு சில பொம்மைகளாவது புதுசா வாங்கிக்கணுமுன்னு 'பூம்புகார்' போய் 'மாமல்லபுரம் செட்' ஒன்னும் ஒரு நாலைஞ்சு பொம்மைகளுமா வாங்கினேன். பொம்மைகளை செலக்ட் செய்யும்போது கோபாலின் கண்ணைச் சந்திப்பதைக் கட்டாயம் தவிர்க்கணும். இந்த அடிப்படை விதி பொம்மைக்கு மட்டுமில்லை(யாக்கும்). மாமல்லபுரம் கோபாலே மனசுவந்து தானே வாங்கினார்!!!! அன்னிக்குப் பேய்ஞ்ச மழையே சாட்சி.
இருக்கும் சில பொம்மைகளை நிரவி வச்சு ஒப்பேத்தலாமுன்னாலும் ஒரு குத்துவிளக்கு இருந்தால் ஐஸ்வரியமா இருக்குமேன்னு ஒத்தைக்காலில் நின்னு திநகர் ரத்னா ஸ்டோர்ஸில் (அங்கே ரெண்டு கடைகள் இதே பெயரில் பாண்டிபஸாரில் இருக்கு) வாங்கினேன். விளக்கை எடுத்து வச்சவுடன், ஐயா ஒரு தூக்கு தூக்கிப் பார்த்துட்டு கேட்டது, 'இவ்வளவு கனமா இருக்கே. திரும்பிப்போகும்போது எப்படிக் கொண்டு போவே?'
'ம்ம்ம்...தலையில் வச்சு' ன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு, 'எல்லா சாமான்களும் எப்படிப் போகுமோ அதேபடிக்குன்னேன். சும்மாச் சொல்லக்கூடாது. ஜம்முன்னு இருக்கு. கேரள ஸ்டைல் வாழைப்பூ விளக்கு. 'கிண்'னுன்னு ஆறேகால் கிலோ.
ததும்ப எண்ணெய் விட்டால் ஒரு கால்கிலோ கொள்ளும். ஊருக்குக் கொண்டுபோய் எண்ணெய் ஊத்திக் கார்பெட் எல்லாம் வழிஞ்சு..... ஐயோ நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு(சாக்கு...சாக்கு)எனக்கோ நோகாம நோம்பு கும்பிடணும். இருநூத்தியம்பத்தைஞ்சு ரூபாய்க்கு அஞ்சு குட்டிபல்ப் வச்சு கரண்டாலே கொளுத்திவிடலாமுன்னு விற்பனையாளர் சொன்னதை அப்படியே கேட்டுக்கிட்டேன். எரியும்போது கனஜோரா இருந்துச்சு.
நவராத்ரியும் வந்து போச்சு. எண்ணி ஒரு மாசம்கூட இருக்காது. . விளக்குக் கருத்ததம்மா...:( உப்புக்காத்துலே அப்படித்தான் ஆகுமாம். 'என்ன செய்யப்போறே'ன்னு கேட்ட கோபாலுக்கு 22 வருசப் புளியை நினைவு படுத்தினேன். நியூஸிக்கு முதல்முதல்லே வரும்போது ஃபிஜியில் அக்கா வீட்டு மரத்துலே இருந்து பறிச்சுக் கொட்டையெடுத்து ஆய்ஞ்சு வந்த புளி. அப்பெல்லாம் நியூஸிக்கு உணவுச் சாமான்கள் கொண்டுவர ஒரு பிரச்சனையும் இல்லை. கொஞ்சநாள் பயனுக்குப் பின் அது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. கண்ணில் பட்ட காலம் வந்த போது... பழசாப்போயிருந்துச்சு. என்னதான் பழையபுளி நல்லதுன்னாலும்...... அறுதப் பழசு வேணுமா? ஒரு பக்கம் இருந்துட்டுப் போகட்டும். 'குச் காம் கோ ஆயேகா.....'
அச்சச்சோ..... இது கடைசியில் சென்னைக்கும் வந்துருச்சா? ஐயோ..... இது தப்பு...... எப்படி டிஸ்போஸ் செய்யலாம்? திறந்து பார்த்தால் நல்லாத்தானே இருக்கு. இருந்துட்டுப்போகட்டுமுன்னு கொஞ்ச நாள் விட்டு வைக்கலாமே. புளியைக் கொல்ல மனசு வரலையே...... அலமாரியின் அடியில் எங்கெயோ புளி பதுங்கிருச்சு.
நவராத்ரிக்கு வச்சுக் கொடுக்கும் ஐதீகம் ஒன்னு இருக்காமே.... பேசாம பித்தளை அலங்காரப் பொருட்களை வாங்கி, கூடவே ஒரு உருண்டைப் புளியும் வச்சுக் கொடுத்தால் நல்லா இருக்காது? புதுமை!!!!! ஊஹூம்ம்ம்ம்
கறுத்த விளக்குக்கு கறுத்த புளி பயங்கர மேட்சா ஒர்க்கவுட் ஆச்சு. சூப்பர்!ரெண்டு முறை ஓக்கே. மூணாம் முறை சோம்பல்.........
'எதுக்கு இப்படி அல்லாடுறே.... பேசாம விளக்கை லேமினேட் பண்ணி வச்சுக்கோ. அதுபாட்டுக்குப் பளிச்ன்னு எப்பவும் கிடக்குமு'ன்னு அண்ணி சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்டேன். அதுவுமில்லாமல் சண்டிகர் கிளம்பணுமுன்னு முடிவு செஞ்சுருந்த நேரம்.
அதே ரத்னா ஸ்டோர்ஸில்தான் கொண்டுபோய்க் கொடுக்கணுமாம். தூக்கிக்கிட்டுப் போனோம். பத்தே நாளில் பாலிஷ் போட்டு வந்துருமுன்னு சொல்லி வாங்கி வச்சுக்கிட்டு ஒரு ரசீது கொடுத்தாங்க. டைமிங் சரியா இருக்கு. (நினைப்புதான் பொழப்பைக்.......................)
மறுநாள் அங்கிருந்து கூப்பிட்டு, ஆயிரத்து நூத்தி நாப்பது ரூபா ஆகுமுன்னு சொன்னாங்க. பரவாயில்லை. செஞ்சுருங்கன்னேன். ஒரு வாரத்துலே வந்துரும். நீங்க ஃபோன் செய்யுங்கன்னார். தமிழ்நாட்டுலேதான் எதுக்கெடுத்தாலும் 'இந்த போன் செய்யுங்க போன் செய்யுங்க'ன்றது புழக்கத்தில் எக்கச்சக்கமா இருக்கு.
போன் செஞ்சேன். 'பட்டறையில் இருந்து வரலை. சாயந்திரமா போன் செய்யுங்க. '
செஞ்சேன்.
'ராத்திரி எட்டரைக்குத்தான் டெலிவரி பண்ணுவாங்க. நீங்க ஒரு ஒம்போது மணிக்கு ஃபோன் செய்யுங்க.'
செஞ்சேன்.
'இன்னும் வரலைங்க. நாளைக்கு இதே நேரத்துக்கு போன் செய்யுங்க.''
செஞ்சேன்.
இன்னும் வரலீங்களே. பட்டறை ஓனர் பையனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிப்போச்சுன்னு பட்டறையை மூடிக்கிட்டுப் போயிட்டார். ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் செய்யுங்க. இதே நேரத்துக்கு.'
செஞ்சேன்
'பட்டறை மூடிக்கிடக்குதுங்க. நான் போன் செஞ்சா யாரும் எடுக்கலை. எப்படியும் அடுத்தவாரம் வந்துரும் நீங்க ஃபோன் செய்யு....'
யோவ். என்னய்யா நடக்குது?????
"என்னங்க தினம் இப்படி எதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க. நாங்க ஊரைவிட்டுப் போறோம். சாமான்களை பேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்பத்தரலைன்னா நாங்க அதை மட்டும் தனியாக் கொண்டு போறது கஷ்டம். அந்தப் பட்டறை அட்ரஸைச் சொல்லுங்க. நாங்களே போய் வாங்கிக்கறோம்."
"இல்லீங்க. அது அம்பத்தூர்லே இருக்கு. நான் ஆளை அனுப்பிப் பார்க்கச்சொல்றென். அப்புறமா ஃபோன் பண்ணுங்க."
தினம் நாலுவேளை மருந்து சாப்பிடணுமுன்னு வைத்தியர் சொல்றதைக் கடைப்பிடிக்கிறோம் பாருங்க அப்படி..... தினம் நாலு வேளை ஃபோன்.
தமிழ்சினிமா ஏராளமாப் பார்த்த தாக்கத்துலே, 'நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. எனக்கு நாளைக்கு விளக்குக் கட்டாயம் வேணும்' கோபாலின் (வீர)வசனம்!
இதுக்குள்ளே சாமான்களை பேக் பண்ணி ட்ரக்குலே ஏத்தி அதுவும் கிளம்பிருச்சு. நாங்களும் தி. நகர் ரெஸிடன்ஸி டவருக்கு வந்துட்டோம். இனி ஃபோன் பண்ணமாட்டேன். நேரில் போய்க் கேக்கணும். போனோம்.
கடை மேனேஜரிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி பில் எல்லாம் காமிச்சு விளக்கு கட்டாயம் வேணுமய்யான்னு ......
'இன்னிக்கு வந்துருங்க. நான் எப்படியாவது வரவழைச்சுடுவேன். இதோ பையனை அனுப்பறேன்' னு அவரும் மூணுநாள் விடாம அவர் பங்குக்கானக் கடமையைச் செஞ்சார்.
"பாலீஷ் பண்ணலைன்னாக்கூடப் பரவாயில்லைங்க. திருப்பிக் கொடுத்துருங்க. பத்து நாள்ன்னு சொல்லிட்டு இப்ப எத்தனை பத்து போயிருக்கு பாருங்க."
"வந்தவுடன் நான் போன் பண்ணிடுறேங்க"
அப்பாடா..... ஒரு மாறுதலுக்கு அவுங்க போன் பண்ணுவாங்களா!!!!
இதுக்குள்ளே மாற்று ஏற்பாடா என்ன செய்யலாமுன்னு நமக்குப் பல யோசனைகள். ரசீதை, அண்ணியிடம் கொடுத்து விளக்கை வாங்கி வைக்கச் சொல்லலாமா? அப்படி வாங்கி வச்சாலும் எப்போ இதை திருப்பி எடுத்துக்கிட்டுப் போறது? கூரியர்லே அனுப்பி வச்சுறச் சொல்லலாமா? என்னடா இது ரோதனையாப் போச்சு. பாலீஷாவது மண்ணாங்கட்டியாவது......புளியையே நம்பி இருந்திருக்கலாமோ!!!
புறப்பட இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு. தினசரி கடமைகளில் ஒன்னா, 'விளக்கு வேணும்'னு காலையில் போய்ச் சொல்லிட்டு, இன்னிக்கு வந்துருமுன்னு மேனேஜர் சொன்ன பதிலை ஆர்வமாக்(??) கேட்டுக்கிட்டு, மாலை திரிசக்தி பதிப்பகத்தின் புத்தகவெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போய் நண்பர்களைச் சந்திச்சு அளவளாவி, 'போயிட்டு வாரேன்' எல்லாம் சொல்லி, பிடிச்சுக்கிட்ட அடைமழையில் கவிதாயினி மதுமிதா வீட்டில் தோசையெல்லாம் முழுங்கிட்டு அறைக்கு வந்தோம். இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு.
காலை மணி ஒன்பதே முக்கால். இன்னும் மழை விட்டபாடில்லை. ஏகப்பட்ட கடமைகள் பாக்கி இருக்கே. அதில் முதலாவதை முதல்லே முடிச்சுறலாமுன்னு ரத்னா ஸ்டோர்ஸ் போனோம். கடை இன்னும் திறக்கலை. கடைப்பணியாளர்கள் எல்லாம் தலையில் ப்ளாஸ்டிக் பைகளை மாட்டிக்கிட்டு, ஷட்டர்களில் சாய்ஞ்சு ஒண்டிக்கிட்டு நிக்கறாங்க. அந்தக் கூட்டத்தில் தெரிஞ்ச முகம் ஒன்னு. மேனேஜர். எங்களைப் பார்த்துட்டு படி இறங்கி வண்டிக்கிட்டே வந்தார். 'விளக்கு வந்துருச்சு. நேத்து ராத்திரி ஃபோன் அடிச்சா, நீங்க எடுக்கலை. இப்பக் கடை திறந்துரும். வாங்கிக்கிட்டுப் போங்க'ன்னார்.
'பெருமாளே....காப்பாத்திட்டேடா'ன்னு காத்திருந்தோம். ஷட்டர் திறந்ததும் மக்கள் வெள்ளம் திமுதிமுன்னு கடைக்குள் நுழைஞ்சது. அஞ்சு நிமிசம் கழிச்சு உள்ளெ போனோம். இதோ உங்க விளக்குன்னு பெருமிதத்தோட பையில் இருந்த விளக்கை எடுத்து கவுண்ட்டர் மேல் வச்சார் மேனேஜர்.
அய்ய..............
இது நம்ம விளக்கில்லை! கொம்புலே ஏறி நிக்குறமாதிரி இது என்ன ஸ்டைல்? வேற ஏதோ மாநிலத்து விளக்கு போல. தலையில் வாழைப்பூ குட்டியாவும், தேசலான தட்டா ஒரு எண்ணெய்குழி. யக்:(
(பயணத்துலே எங்கியாவது இதைப் பார்த்திருந்தா புதுவிதமான விளக்குன்னு பாராட்டி இருப்பேனோ என்னவோ)
"இது எங்கது இல்லைங்க."
"அதெப்படிங்க? இதுதானே நேத்து வந்துச்சு."
"அதுக்கு?"
விளக்கு விளக்குன்னு அல்லாடுனதெல்லாம் இதுக்குத்தானா?
"அந்த பில்லைக் கொண்டாங்க. இதுலே இருக்கும் நம்பரும் விளக்குலே இருக்கும் நம்பரும் ஒன்னுதானே?"
"ஆமா. அதுக்கு? விளக்கு எங்கது இல்லீங்களே. அது எப்படி இருக்கும்ன்னா..... "
கடையில் நம்ம ஸ்டைல் விளக்கு ஒன்னு எடுத்துக் காமிக்கலாமுன்னு தேடுனா கண்ணுலே ஒன்னுமே கிடைக்கலை. நாம் விளக்கு வாங்கின சமயம் நாலைஞ்சு இருந்துச்சே. அத்தனையுமா வித்துப்போச்சு? அங்கே இங்கே ஓடுனதில் மாடிப்படியின் ஓரத்தில் வரிசையா வச்ச அலங்காரச் சாமான்களில் ஒன்னா அதோ இருக்குன்னு கால்வலியைக் கூடக் கண்டுக்காமல் ஏறிப்போய் எடுத்தாந்தேன். தக்கையா இருக்கு. சின்னது.
"இதே ஸ்டைல்தான். இன்னும் பெருசா இருக்கும். இதை எடை பாருங்க"
கிட்டத்தட்ட நாலு கிலோ.
"நம்மது ஆறேகால் கிலோ. இங்கே பாருங்க. அங்கவஸ்த்திரத்தில் ஜரிகை மாதிரி பில்லில் ஓரமா எழுதி இருக்கீங்க"
'பாலீஷூக்குச் சாமான் அனுப்பும் புக்கைக் கொண்டா'ன்னு ஒரு பையனை விரட்டி, வந்ததும் புரட்டிப் பார்த்தார் டேமேஜர். நம்ம பில் போட்ட தேதியில் ஒரே ஒரு குத்துவிளக்குதான் பதிஞ்சுருக்கு. பில்லில் இருக்கும் நம்பரும் சரியா இருக்கு. ஆனால் விளக்கு சரி இல்லை.
"இந்தவிளக்கு எடுத்துக்குங்க. ஏழுகிலோ இருக்கு. பெருசு வேற"
"அதெப்டிங்க? இன்னொருத்தர் விளக்கை நாங்க எடுத்துக்கிட்டுப் போறது? அவுங்க வந்து தேடமாட்டாங்களா?"
நம்ம விளக்குக்குத் தப்பான எண் கொடுத்து யாரோ மாத்தி எடுத்துட்டுப் போனாங்களோ? இல்லே நம்பரே போடாம இங்கே கிடந்து யாரோ விலைக்கே வாங்கிட்டுப் போனாங்களோ?
" நான் விஜாரிச்சு வைக்கிறேன். அடுத்தவாரம் வந்து பாருங்க"
" விளக்கும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம். நீங்களே வச்சுக்குங்க. இதுக்காக அடுத்தவாரம் அம்பதாயிரம் செலவு பண்ணி வந்து கேட்டுட்டுப் போகணுமா? (கோபாலைப் பார்த்து) வாங்க போகலாம் "
கோபாலுக்கு என்ன தோணுச்சோ..... மாடிப்படிக்குத் திரும்பிப்போய் அந்த சின்ன விளக்கை எடுத்துக்கிட்டு வந்தார். 'எங்க விளக்குக்குப் பதிலா இதைக் கொடுங்க'ன்னார்.
"அப்ப உங்க விளக்கு வந்துருச்சுன்னா..... "
"அதெல்லாம் வராது. வந்தா நீங்களே வித்துக்குங்க."
"யாரும் வாங்க மாட்டாங்க. பழசுல்லே. ஸ்க்ராப்லே தான் போடணும்."
"ஏன் வாங்க மாட்டாங்க. பாலீஷ் பண்ணி புதுசா மின்னப்போகுதுல்லே."
"அண்ணாச்சி..... இந்த விளக்கைக் கேக்குறார். கொடுத்துறலாமா?"
எல்லாக் கூத்தையும் தெரிஞ்சுக்கிட்டே கவனம் இல்லாத மாதிரி இருந்த அண்ணாச்சி சொல்றார். "ஆயிர்ரூபா கொடுத்துட்டு எடுத்துக்குங்க".
"ஆறேகால் கிலோ விளக்கைத் தொலைச்சுட்டீங்க. இப்போ இந்த நாலு கிலோ விளக்குக்கு ஆயிரம் கொடுக்கணுமா? அப்போ ஆறேகால் கிலோவுலே விளக்கைத் தேடி இப்பவே கொடுங்க."
இதுக்குள்ளே கேஷ் கவுண்டரில் பில் அடைக்க வந்த சிலர், 'விளக்கு என்ன விலை'ன்னு நம்மகிட்டே கேக்க,
'யம்மாடி...நான் என்னன்னு சொல்வேன்.? நம்ம விளக்கு இன்னும் பெருசா அம்சமா இருக்கும் ஆறேகால் கிலோ விளக்கைத் தொலைச்சுப்புட்டாங்கம்மா. அதுக்கு பர்த்தியா இந்தச் சின்ன விளக்கை எடுக்கறோமுன்னு' கதாகாலஷேபத்தை நான் ஆரம்பிக்க......
அண்ணாச்சிக்கும் டேமேஜருக்கும் ஒரு பார்வை பரிமாற்றம்.
"சரி. இந்தாங்க. எடுத்துக்கிட்டுப் போங்க. நட்டம் எங்களுக்குத்தான். என்னா செய்யறது......"
வெற்றியா தோல்வியான்னு நிர்ணயிக்க முடியாத மனநிலையில்.........திரும்பி வரும்போது, 'எப்படியும் எக்ஸ்ட்ரா லக்கேஜு கொடுத்துத்தான் எடுத்துக்கிட்டுப் போகணும்.
" இப்போ ரெண்டேகால் மிச்சம். ஆமாம். அந்தப் புளி டப்பா பேக்கிங்கிலே போச்சா இல்லை எடுத்துக் கடாசிட்டீங்களா?"
விளக்கு சிறுத்ததம்மா.....னு
Monday, June 07, 2010
அங்காடித்தெருவில்..................
Posted by துளசி கோபால் at 6/07/2010 02:57:00 PM
Labels: Chennai T.Nagar, அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் விளக்கில் எண்ணையோ அல்லது நெய்யோ இட்டு தீபம் ஏற்றிப்பாருங்கள். அதன் அழகு தனியாகத்தான் இருக்கும்.விளக்கின் அடியில் கொஞ்சம் பெரிய தட்டு ஒன்று வைத்துவிட்டால் எண்ணெய் அதற்குள் நின்றுவிடும் இப்படி மின்சார பல்புகளை வைப்பது நாம் சாப்பிடும் பட்சணங்களை பிளாஸ்டிக்கில் செய்து சாப்பிட வைப்பதுபோல்.
விளக்கை லேமினேட்டா?? பாலிஷ் தான் கேள்வி பட்டிருக்கேன்..
அருமையான கதை டீச்சர். என்ன இப்பலாம் என் வீட்டு பக்கம் உங்களை காணோம் ??
நீங்க விளக்குக்கு அலைஞ்ச மாதிரி நான் சுடிதாருக்கு அலைஞ்சேன். காலைல போனா சாயந்திரம் வான்னுவாங்க. சாயந்திரம் போனா அடுத்த நாள் காலைல வான்னு சொல்லி....
வாங்க பிரகாசம்.
ரொம்பச்சரி. ஆனால்..... இடம் பொருள் ஏவல்ன்னு ஒன்னு இருக்கே.
இந்தியாவில் இருந்தால் சமாளிச்சுறலாம். வெளிநாடுகளில் பராமரிப்பு கஷ்டம்தான். நம்ம பிள்ளைகளுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது பாருங்க.
ப்ளாஸ்டிக் பக்ஷணம் நெசமாவே வந்தாச்சு. நிறைய வகைகளுக்கு இனி 'நோ'. படத்துலேயோ ப்ளாஸ்டிக்காவோ கண்ணாலே பார்த்து மனசாலே தின்னணும்:(
வாங்க அமுதா கிருஷ்ணா.
பாலீஷ் பண்ணிட்டு அதன்மேல் ஒரு லேயர் கலர்லெஸ் சமாச்சாரம் ஒன்னு போட்டுருவாங்களாம். மூணு வருசத்துக்கு பளபளன்னே இருக்குமாம்.
இது இந்தியக் காலநிலைக்கு. இதே எங்கூருலே பலவருசங்கள் அப்படியே இருக்குன்னு அனுபஸ்தர்கள் சொன்னதுதான். இவுங்க சொல்ற லேமினேஷன் அதுதான் போல!
வாங்க எல். கே.
ஆஹா.....
இது கதையல்ல நிஜம் னு தலைப்பு வச்சுருக்கணுமோ!
வரேன் வரேன். கொஞ்சம் ஓட்டம் கூடி இருக்கு இப்போ.
வாங்க சின்ன அம்மிணி.
அதுக்குத்தான் 'போன் செஞ்சுறணும்'.
இன்னும் தைக்கலைங்க. நாளைக்கு வாங்கன்னு சொல்வாங்க.
போன் கம்பெனிக்காரனைக் கோடீஸ்வரனா ஆக்காம வுடமாட்டோம்லெ.
நீங்கள் எள்ளலோடு எழுதியிருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் மிகுந்த எரிச்சலும் அயர்ச்சியும் ஊட்டுபவையாகவே இருந்திருக்கும் இல்லையா?
உங்கள் பொறுமையை சோதிச்சே 1.5 கிலோ தேத்திட்டார் போல கடைகாரர்.
"கதாகாலஷேபம்" வேளைகளில் நன்றாக வேலை செய்யும் போலும் :)) நன்றி.
வாங்க கையேடு.
சரித்திர டீச்சரைக் கணக்கு டீச்சர் ஆக்காம விடமாட்டீங்க போல!!!!!
அவர் தேத்துனது ரெண்டேகால் கிலோ.
இப்ப யோசிச்சுப் பார்த்தால் .....விளக்கு உள்ளே இருக்கு இதுவான்னு பாருங்கன்னு கூட்டிக்கிட்டுப்போய் நாலு சாத்து சாத்தியும் இருக்கச் சான்ஸ் இருக்குல்லே!
இப்படி ஒருத்தருக்கு நடந்ததா ஒரு பதிவு வந்திருந்துச்சு முன்னே.
கணக்குல நான் வீக்குன்னு தெரியும் ஆனா இவ்ளோ மோசமா இருப்பேன்னு நானே எதிர்பார்க்கலை... :)
படுபாவிபயலுக நம்ம விளக்கை இப்படி அநியாயத்துக்கு தொலைச்சிபுட்டாங்களே.. :((
அங்காடித்தெரு பொருத்தமான தலைப்பு டீச்சர் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒரு மாதிரியான கஷ்டம் என்றால் பொருள் வாங்குபவர்களுக்கு வேறுமாதிரியான கஷ்டம்:((((
vilakku vishayaththai "vilakka"maaththaan pathivu senjurukkeenga, apdye enakke nadandadu pola oru vali, kobam, iyalaamai unarnden. 36 varuda anyonyaththukku vaazhthukkal teacherukkum Gopal saarukkum
சில நகைக்கடைகளில் பாத்துட்டு நானும் மொதல்ல யோசிச்சதுண்டு. லேமினேஷன் செஞ்சு வெச்சுட்டா ஹாலில் அம்சமா இருக்குமேன்னு.இந்த தில்லுமுல்லுக்கு பயந்துதான் பீதாம்பரி போட்டு விளக்கிடுறேன். உங்க விளக்கு கடைக்குள்ளேயே இருந்தாலும் இருக்கும்..யார்கண்டது :-(
கல்யாணம் ஆன புதிதில் இரண்டு வீட்டிலும் இருந்து கொடுத்த விளக்குகளில் காரைக்குடியில் இருந்து வாங்கி வந்த விளக்குகளை தப்பித்தவறி காலில் போட்டு விட்டு விட்டால் எலும்பே முறிந்து விடும் போலிருக்கும். இங்கு திருப்பூரில் பேஷன் என்கிறார்கள். காற்றில் பறப்பது போல் எடை இருக்கிறது. ஆனால் விலையோ கொலை செய்யத் தூண்டுகிறது.
வாங்க ஸ்டார்ஜன்.
ஆமாம்ப்பா..... அநியாயம் பண்ணிட்டாங்க.....
வாங்க சுமதி.
நம்மூர்களிலே இந்த கஸ்டமர் சர்வீஸ், கஸ்டமர் கேர் என்பதுக்கெல்லாம் ஒரு 'பொருளும்' இல்லை:(
வாங்க குலோ.
வாழ்த்து(க்)களுக்கு நன்றி.
"இங்கெல்லாம் இப்படித்தாங்க"
எங்க அண்ணியின் பொன்மொழி இது. அப்படியே பார்க்கும் மனசு இருந்தால் பிரச்சனை இல்லை.
வாங்க அமைதிச்சாரல்.
யாருக்காவது விற்றுக்கூட இருக்கலாம்.
உடனே அதுக்கு tag போட்டுத் தனியா எடுத்து வைக்கணும் என்றதையெல்லாம் யாரும் பொருட்படுத்துனமாதிரி இல்லை.
விற்பனையாளர்கள் எக்கச்சக்கம் ஒவ்வொருகடையிலும். ஆனா யாருமே முகத்தில் ஒரு புன்சிரிப்பு கூட இல்லாமல் ஏனோதானோன்னு வேலை செய்யறாங்க. அவுங்க பிரச்சனைகள் ஏராளம் .
வாங்க ஜோதிஜி.
விலை கொலைன்றது ரொம்பச்சரி.
39 அங்குல உயரவிளக்கு ரெண்டு, ஒன்னொன்னும் பத்து கிலோ எடை. ஒரு 7 வருசத்துக்கு முன்னே நியூஸிக்கு வாங்கிப்போனேன். அப்பவே அதுக்கு 11 ஆயிரம் கொடுக்கவேண்டியதாப் போச்சு. 20 கிலோவுக்கு ஷிப்பிங் சார்ஜ் தனி.
நாட்டை விட்டுப்போன ஒரு உணர்வாலே நம்மூர் கலைப்பொருட்கள்ன்னாவே மனசு பறக்குது.
வாங்க மாதேவி.
இல்லையா பின்னே:-)))))
இதுலே வேடிக்கை என்னன்னா.... விஷயம் 'கேள்விப்பட்ட' எங்க அத்தை சொல்றாங்க..... 'அவன் கடையிலே சாமானையெல்லாம் தொலைச்சுருவானே அங்கே ஏம்மா கொடுத்தே?'ன்னு.
அப்ப அது ஊர் அறிஞ்ச ஆனால் நாம் மட்டுமே அறியாத ரகசியம்.
அதான் ஊர் உலகத்துக்குச் சொல்லிட்டேன்:-))))
//இப்படி மின்சார பல்புகளை வைப்பது நாம் சாப்பிடும் பட்சணங்களை பிளாஸ்டிக்கில் செய்து சாப்பிட வைப்பதுபோல்.//
பிரகாசம் சொல்லியதே என் கருத்தும்.
அம்மாதிரி அலங்காரத்துக்கு வைக்கலாமே தவிர.
பூஜைக்கு எண்ணையூற்றி விளக்கேற்றுவதே அழகு, தெய்வீகம்.
வாங்க நானானி.
அதெல்லாம் பூஜைக்கு சின்ன விளக்கு அம்சமா ஏத்திப்புடுவோம்.
பெருசு ஒரு அலங்காரத்துக்கு மட்டுமே!
எங்கூர் சூழலில் பெருசை மெயிண்டெய்ன் பண்ணுவது கஷ்டம்:-))))
நம்மூரில் வாடிக்கையாளர் உபசரிப்பு ஏனோ அதள பாதாளத்தில் இருக்கிறது ஊருக்கு திரும்பும் போது இப்படி ஏதாவது ஒரு வேலையை எடுத்து உருப்படியாக செய்ய வேண்டும்.கொஞ்சமாவது நாட்டின் பெயரை காப்பாற்றலாம்.
வாங்க குமார்.
நம்மூரில் இருக்கும் கூட்டத்துக்கு எந்தப் பொருளையும் ஒரு பத்து சதமானம் மக்கள் வாங்குனாவே போதும். அதான் வாடிக்கையாளர்களை சட்டை செய்யறதே இல்லை:(
Post a Comment