எங்கியோ தூரத்துலே குழந்தை அழும் சத்தம். முழிச்சிருக்கேனா தூங்கறேனான்னு தெரியாத ஒரு அவஸ்தை. குழந்தையா இருக்காது. புரண்டு படுக்கறப்ப இன்னும் கொஞ்சம் சத்தம் கூடுனாப்புலெ இருக்கு. நம்ம குழந்தையா இருக்குமோ? இருக்கச் சான்ஸ் இல்லை.ம்ம்ம்ம்........ ஐய்யோ ...நம்ம வீட்டுக்குள்ளே இருந்துதான் கேக்குது. குழந்தை முழிச்சுக்கிச்சுப் போல இருக்கே.
படுக்கையை விட்டு எந்திரிக்கவே முடியலை. கஷ்டப்பட்டு எழுந்து நின்னா...... காலெல்லாம் பின்னுது.ஒரு அடி எடுத்து வைக்கவும் முடியலை. அழுகைச் சத்தம் பலமாக் கேக்குது. கண்ணைத் திறந்தா ஒரே எரிச்சல். அரைக்கண்ணுலே பார்க்கறேன். இவர் நல்லா தூங்கிக்கிட்டு இருக்கார். பாவம். பகலெல்லாம் வேலைக்குப் போயிட்டு வந்து தூங்கற மனுஷனைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு.
விளக்குப் போட்டால் எங்கே தூக்கம் கலைஞ்சிருமோன்னுட்டு இருட்டுலேயே தடவித்தடவி குழந்தை இருக்கற அறைக்குப் போறேன். நல்ல வேளை, தெருவிளக்கு ஜன்னல்வழியா அந்த அறைக்குள்ளே வருது. கட்டிலில் இருக்கற குழந்தை இன்னும் சத்தமா அழறான். விளக்கைப் போடாட்டி, சீக்கிரம் அமைதியாயிருவான்னு நினைச்சேன்.
" ஏண்டா.... அதுக்குள்ளே முழிச்சுக்கிட்டு இப்படி அழறே? பசியா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம் " இருக்காதே.பால் கொடுத்து இன்னும் ரெண்டு மணி நேரம் கூட ஆவலையே.... மெதுவாக் குழந்தையைத் தூக்குனேன்.ஈரம் பண்ணி இருக்கான். அங்கேயே ஒரு ஓரமாக் கட்டிலில் உக்கார்ந்து, தெருவிளக்கு வெளிச்சத்துலேயே நாப்கினை மாத்துனேன். மடியிலே போட்டுக் கொஞ்சம் நேரம் ஆட்டுனா அப்படியே தூங்கிருவான்.
குழந்தையைத் தட்டிக் கொடுக்கறேன். 'ஷ்...ஷ்...ஷ்... அழாதேடா.... அம்மா இங்கதான் இருக்கேன். உன் மேலே அம்மாவுக்குப் பிரியம் ஜாஸ்தி. ம்ம்ம்ம்ம்.... தூங்கு... தூங்கு....... 'ஐய்யோ கண்ணெல்லாம் இப்படித் தீ மாதிரிஎரியுதே.... தூக்கம் தூக்கமா வருதுடா அம்மாவுக்கு.... நீ தூங்கு செல்லம்......
குழந்தையோட அழுகை நிக்கவே இல்லை. எதுக்குத்தான் இப்படி கத்துதுன்னு தெரியலை. சத்தம் என் மண்டைக்குள்ளெ குடைஞ்சு ஏறுது. ஏய்... இப்ப நீ எதுக்குடா அழறே....? என்ன கேடு காலம்? அதெல்லாம் பால் குடிச்சாச்சு. இல்லே...
இருட்டுக்குள்ளெ அழற குழந்தையைத் தூக்கி வச்சுக்கிட்டு உலாத்தறேன். இதுதான் இனிமே வாழ்க்கையா? தினம்தினம் இதே கதையாப் போச்சே...... எனக்கு மட்டும் ஏன் இப்படி? இந்தக் குழந்தை எதுக்கு இப்படிவீறிட்டு அழுகுது? ஐய்யோ.....
" ஏய்... உனக்குப் பசியாடா? இப்பத்தானே முழுங்குனே.... சனியனே.... தூங்கப் போறியா இல்லையா? கோவத்தைக் கிளப்பாதே.... தூங்கித்தொலையேன்..... எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. தூங்கு தூங்கு.....எதுக்கு இப்படி என் குரல் கடுமையா ஆயிக்கிட்டே போகுது? சாந்தமாப் பேசுனா குழந்தை தூங்கிருவான்....
ம்ம்ம்ம்....உனக்கு இப்ப என்ன வேணும்? தூங்கு... தூங்கு....இப்பக் குழந்தை விக்கி விக்கி அழுது. சனியன்,ராத்திரியெல்லாம் இதுகூட ஒரே போர். இப்படின்னு தெரிஞ்சிருந்தா.... குழந்தை பெத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.
ச்சீ... தூங்கு. நடுச்சாமத்துலே எதுக்கு இப்படிக்கத்தறே .... ஊரையே தூக்கிட்டுப் போறமாதிரி.... வாயை மூடறயா இல்லையா...... குழந்தையோட ரெண்டு தோளையும் புடிச்சுக்கிட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்கறேன். நிறுத்து அழுகையை நிறுத்து ...... கோபம் கண்ணை மட்டுமென்ன மனசையும் மறைக்குது. பிசாசு... தூங்காமஇப்படி உயிரை வாங்குது..... 'தட்' என்ன சத்தம்?
ஐய்யோ.... நான் என்ன செஞ்சுருக்கேன்? கட்டிலிலே குழந்தையைவீசி எறிஞ்சுருக்கேன். ஒரு நொடி சத்தமே இல்லை. சைலண்ட்டா இருக்கு. குழந்தையைத் தொட்டுப் பாக்கறேன்.ஆடாம அப்படியே கிடக்குறான். தூக்கறேன்... தலை சரியுது. ஆஆஆஆஆஆஆஆஆஆஅ இப்ப சத்தம் போட்டுக்கூவி அழறது யாரு? நாந்தான்....... ஐய்யோ பிள்ளையை என்ன செஞ்சுட்டேன்........
அம்மான்னா அன்பா இருக்க வேணாமா?
என் கண்ணுலே ஆறாப் பெருகுது கண்ணீர். படிச்சுக்கிட்டு இருந்த புத்தகம் கை நழுவி விழுந்துச்சு. திரும்பிப் பார்த்த இவர், 'என்னத்தைப் படிச்சுட்டு இப்படி அழறே?'ன்றார்.
பழைய புத்தகக் கடையிலே போய் துருவித்துருவிப் பொருக்கறப் பழக்கம் எப்ப ஓயுமோ தெரியலை. '100 நியூஸிஅனுபவங்கள்'. ஒரு சமயம் ஆயிரக்கணக்கான அனுபவங்கள் 'ஹ்யூமன் டெவெலப்மெண்ட் கோர்ஸ்'க்காக சேகரிச்சதாம். அப்ப அதுலே கலந்துக்கிட்ட ஆளுங்க எழுதிக் குவிச்சிருக்காங்க. அதுலே இருந்து ஒரு நூறு அனுபவங்களைப் புத்தகமாப் போட்டுருக்காங்க. 21 வருசப் பழசு இந்தப் புத்தகம். அப்பெல்லாம் இந்த 'ப்ளொக்' இல்லையே(-: இருந்திருந்தா....?அவுங்கவுங்க பதிவுகளாப் போட்டுருப்பாங்க இல்லையா?
பெரிய பெரிய எழுத்தாளர்கள்ன்னு சொல்றவங்க எழுதற புத்தகங்களைப் படிக்க எனக்கு எப்பவுமே ஆர்வம் கிடையாது.அதுலெயும் நிறையப் பேர் புகழ்ந்தாங்கன்னா.... எனக்கு அந்தப் புத்தகம் மேலெ இருக்கற கொஞ்சநஞ்சப் பிடிப்பும் விட்டுப் போயிரும். நான் தேடித்தேடி எடுத்துப் படிக்கிறதுகள் எல்லாம் அவ்வளவா 'வெளிச்சம் பார்க்காத' புத்தகங்கள்தான்.சாதாரண ஜனங்கள் எழுதுனது.
போஸ்ட்நேடல் டிப்ரஷன் இவ்வளவு கடுமையானதா? வீசி எறிஞ்ச குழந்தையையே மனசு சுத்திச்சுத்தி வந்துச்சு.'ஓ மை காட்' அப்ப இந்தப் பசங்களுக்கும் முடிவு இப்படித்தான் வந்துச்சோ?
போனமாசம், இங்கே ரெட்டைப் பிள்ளைங்க ரெண்டு பேர் இறந்துட்டாங்க. வயசு? வெறும் மூணே மாசம். மண்டையிலே பலமான அடியாம். அடிபட்டு அஞ்சுநாள் கழிச்சுத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க. ஒரு குழந்தைக்குத் தொடை எலும்புகூட உடைஞ்சிருந்துச்சாம். கடவுளே...... நினைச்சுப் பார்க்க முடியலை.
இன்னும் யாரையும் கைது செய்யலை. அந்தக்குடும்பம் வாயைத் திறக்கவே இல்லையாம். இன்னும் இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டு இருக்கு. நேத்துதான்..... குழந்தைகளோட பெரியம்மாங்க ரெண்டு பேர் டிவியிலே சில விஷயங்களைச் சொன்னாங்க. தினமும் டிவியிலே இந்தக் கொலையைப் பத்துன செய்திகள் வந்துக்கிட்டே இருக்கு. முடிச்சுகள் மெல்ல மெல்ல ஒவ்வொண்ணா அவுந்துக்கிட்டு இருக்கு.
இங்கே பாருங்க.
ஒருவேளை ஏழ்மை நிலை காரணம் இப்படி அலட்சியமா இருந்துட்டாங்களொன்னு நினைச்சேன். டிவியிலேஅதையும் சொல்லிட்டாங்க. வாரம் ரெண்டாயிரம் டாலர்கள் அரசாங்க உதவி கிடைக்குதாம் இந்தக் குடும்பத்துக்கு.எல்லாம் நம்மோட வரிப் பணம்தான். டிவியிலே சொன்னதுதான்.
இங்கே சாதாரண வேலை செய்யற ஒரு ஆளுக்குச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மணிக்குப் பத்து டாலர்.வாரம் 40 மணி நேர வேலை. அப்ப வாரம் 400. அதுலே வரியாகப் பிடிச்சுக்கறது 80. கைக்குக் கிடைக்கும்காசு 320 டாலர்கள். இது உடல் உழைப்பு செய்யறவனுக்கு.
இப்பக் கணக்குப் போட்டுப் பாருங்க, ஒரு வேலையும் செய்யாம அரசாங்க உதவிப்பணம் வாங்கிச் செலவு செஞ்சுக்கிட்டு இருந்துட்டு, பிள்ளைகளை என்ன செஞ்சிருக்காங்கன்னு.
மனசே சரியில்லைங்க. மனுஷங்க ஏங்க இப்படி....?
Monday, July 24, 2006
அம்மா என்றால் அன்பு ?
Posted by துளசி கோபால் at 7/24/2006 02:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
//நல்ல வேளை, தெருவிளக்கு ஜன்னல்வழியா அந்த அறைக்குள்ளே வருது. //
விட்டலாச்சாரியார் படமா?
//மனுஷங்க ஏங்க இப்படி....? //
மனுஷங்கதான்க்கா இப்படி.
துளசி, அநத இரட்டையர் கேஸூச்கு போலீஸ் எதுக்கு இவ்வளவு நேரம் குடுக்கறாங்கன்னு புரியலை. பரவாயில்லை நல்ல புத்தகமாத்தான் தேடி படிக்கிறீங்க.
ஆமா ஒரு நியுஸி பெண் போலீஸ் பார்ட் டைம் ஜாபா கார்ல் கேர்ளா வேல பாக்ரத பத்தி பரபரப்பா நியூஸ் படிச்சாங்களே அத பத்தி ஒரு பதிவு வரும்னு பாத்தேன், போன மாசம் என்னடான்னா ஒரு டாக்டர் இதே தொழிலா மாத்திட்டாரு, ரொம்ப இன்வெஸ்மனட் பண்ணவேண்டாம் பாருங்க. என்னமோ போங்க.அவனவன் நியுசிய என்னமோன்னு நெனச்சுக்கிட்டிருக்காங்க உங்க சீரியல வேர படிச்சுப் போட்டு.
கள்ளிப்பாலை நீ குடிச்சு கண்ணுறங்கு மகளே!
வீட்டுக்கு வீடு வாசப்படி!
//என் கண்ணுலே ஆறாப் பெருகுது கண்ணீர். படிச்சுக்கிட்டு இருந்த புத்தகம் கை நழுவி விழுந்துச்சு. திரும்பிப் பார்த்த இவர், 'என்னத்தைப் படிச்சுட்டு இப்படி அழறே?'ன்றார்//
நேற்று பிரின்ஸ் பற்றிய எனது பதிவிற்க்கு வந்த பின்னூட்டத்தின்((//ஐய்யோ.... பாவம் புள்ளெ.
கடவுள் அருளாலெ நல்லபடியா வந்து சேர்ந்துரணுமுன்னு நாங்களும் பிரார்த்திக்கிறோம்.//))
((//அப்பாடா..... மனசுலே பாலை வார்த்தீங்க.
அந்தப் புள்ளைக்கு இனி ஆயுசு 100. நல்லா இருக்கட்டும்//))
மூலமும் தங்களின் தாய்மை உள்ளம் பற்றி அறிவேன்.என்னதான் நியுஸிலாந்து போனாலும் நீங்க நம்ம தமிழ்ச்சி இல்லையா... இதே இரக்க குணம் மாறாமல் இருக்க வாழ்த்துக்கள்..
//கள்ளிப்பாலை நீ குடிச்சு கண்ணுறங்கு மகளே!//
என்ன SK... இது இந்தியா பற்றிய உ.கு மாதிரி இருக்குதே..
//வீட்டுக்கு வீடு வாசப்படி!//
நாட்டுக்கு நாடு சிசுக்கொலை..
அன்புடன்...
சரவணன்.
மனசு,
'வெளிச்சம்' போயிருச்சு. அதைத்தான் சிம்பாலிக்காச் சொல்றதா உடான்ஸ் விடவா?
வாங்க சுரேஷ்.
குழந்தைகளோட குடும்பம் மவோரிகள் என்றதாலெ இப்படி நேரம் எடுக்குதோன்னு தெரியலை.
நம்மூர் போலீஸா இருந்தா..... முட்டிக்கு முட்டி?
இங்கேதான் எல்லாமே சிஸ்டமேடிக்கா நடக்கணுமே.
SK,
என்னத்தைச் சொல்றதுங்க. அங்கே ஒருவிதமுன்னா இங்கே ஒரு விதம்.
கடைசியிலே நமக்குத்தான் மனசு பேஜாராப் போயிருது.
அம்மான்னா அன்பா இருக்க வேணாமா?//
வேணும்..
குழந்தையா இருக்கறப்போ நிச்சயம் வேணும்.. இந்த தாய் குழந்தைய தூக்கியெறிஞ்சதுக்கு அன்பு இல்லைன்னு ஆயிருமா? தெரியலை.. தாய் என்ன நாம எல்லாருமே சில சமயங்கள்ல அப்படித்தான் நடந்துக்கறோம்.. அதுக்காக அன்பு இல்லேன்னு சொல்லலாமா? தெரியலை..
இந்த அன்பே வெறித்தனமா மாறி பொசஸ்சிவ்னசா மாறுனதத்தான் நான் மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் 3ல சொல்லியிருந்தேன்..
அது தாய்ப்பாசத்தின் வெறித்தனமான உச்சக்கட்டம்.
மனிதர்களில் பலவிதங்கறா மாதிரி தாய்மார்களும் பலவிதம்:(
ஆனா மேலை நாடுகள்ல தாய்ப்பாசம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாம போய்க்கிட்டிருக்குங்கறது என்னவோ நிஜம்தான்..
வாங்க டிபிஆர்ஜோ
கூட்டுக்குடும்பம் இப்ப இல்லாமப் போனதுதானே பலவித மன அழுத்தங்களுக்கும் காரணம்?
என்னமோ மனசு இப்படிச் சிந்திக்குது.
துளசி, உங்களுக்குனு புத்தகம் கிடைச்சுது பாரு.
ஏற்கனவே இளகின மனசு.இப்படி இருக்கிற அம்மாக்கள் சகஜம்தான்.என்ன எங்களுக்கெல்லாம் ஒரு பாட்டி குழந்தை அழுதால் எடுத்துக்கொள்ளக் கிடைத்தார்கள் மத்தவங்க நிலமை எப்படியோ. ஆனால் தூக்கிப் போடற கொடூரம் ரொம்ப ஜாஸ்தி இல்லை.
ஒரு நிமிஷம் உங்க கனவோ இதுனு பயமாப் போச்சு.நம்ம ஊரில இல்லாமைக் கொடுமை.அவங்க ஊரில அது இல்லையே. வெரும் கொழுப்பு தான். சாமி நல்லாவெ கண்டுப்பார் அவங்களை.
வாங்க சரவணன்.
தாய் உள்ளம் & தாய் பாசம் இதுக்கெல்லாம் தமிழ்க்காரங்களா இருக்கணுமுன்னு இருக்கா?
இது உலகத்துலே இருக்கற எல்லா ஜீவன்களுக்கும் பொதுதானேங்க.
ஒரு பூனையைப் பாருங்க. என்னமா தன் குட்டிகளைக் காப்பாத்துது.
வல்லி,
நானும் இப்படித்தான் நினைச்சேன். கூட்டுக்குடும்பம் இருந்தா நிலமையே வேறன்னு.
//" ஏய்... உனக்குப் பசியாடா? இப்பத்தானே முழுங்குனே.... சனியனே.... தூங்கப் போறியா இல்லையா? கோவத்தைக் கிளப்பாதே.... தூங்கித்தொலையேன்..... எனக்குத் தூக்கம் தூக்கமா வருது.// பெத்த தாயா இல்லப் பேயா? நம்ம பொறுமையின் அளவுகோலை துள்ளியமாக காட்டிவிடும் தாய்மை ;-)
இது 100% திமிரு! இது ஒரு இந்திய நடந்தது அல்ல என்பதை
//*இருட்டுலேயே தடவித்தடவி குழந்தை இருக்கற அறைக்குப் போறேன்.*// இந்த வரிகள் சொல்லுது. நம்ம ஊருல குழந்தையை வேற அறையில் தூங்க வைக்க மாட்டாங்களே :)
இப்படியும் அம்மாகள் இருக்காங்க! ஐயோ! மேல்நாட்டில் அன்புக்கு விலை அவ்வளவுதானா?
சரியா சொன்னீங்க இங்க பணகஷ்டதில் தான் சில கொடுமைகள் குழந்தைக்கு நடக்குது! அங்க அன்பு பற்றாகுறையினால் நடக்குதோ!!!
வாங்க ஜெஸிலா.
அழகா இருந்த ஃபோட்டோவைக் காணோம்?
தாய்ன்னாவே பொறுமை இயல்பா வந்துரும்தான். ஆனா சிலருக்கு இப்படி ஆயிருது.
அதுக்கும் டிப்ரெஷந்தான் காரணமாம். என்னத்தைச் சொல்றது போங்க.
துள்ளியம்= துல்லியம் ( எழுத்துப்பிழை ஆஜராவறதுக்கு முந்தி நானே சொல்லிட்டேன்)
தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்.
ஜெயசங்கர்,
நீங்க சொன்னதைப் பார்த்ததும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. நம்ம வீட்டுலே மகள் பத்துவயசு வரை
என்கூடத்தான் படுக்கும். ஆனா அவளுக்குன்னு ஒரு தனி அறை எல்லா அலங்காரத்தோட இருக்கும். அவளோட
தோழிகள் வந்தா பெருமையாக் கொண்டு போய் காமிப்பாள். யாருக்கும் மூச்சு விடறதில்லை, நம்மோட தூங்கற
விஷயத்தை. இங்கே ஸ்லீப் ஓவர்ன்னு ஒவ்வொரு நாள் யாராவது நண்பர்கள் வீட்டுலெ போய்த்தூங்கற வழக்கம்
இருக்காம். நாமதான் அங்கெல்லாம் அனுப்ப மாட்டமே. அதுலே ஒரு பொண்ணு, இவளோட ரூமைப் பார்த்துட்டு,
இந்த வீக் எண்ட் நான் உன் வீட்டுலே ஸ்லீப் ஓவர் வரட்டான்னு இவளைக் கேக்குது. இவள் பேய் முழி முழிச்சுக்கிட்டு
என்கிட்டே சொல்றாள்.
'சரியாப் போச்சு, நீயே எங்க கூட, இதுலெ இந்தப் பொண்ணை எங்கே தூங்கவைக்கறது? அதெல்லாம் வேணாம்'னு
சொல்லிட்டு, நைஸா, அந்தப் பொண்ணுகிட்டே, என் மகள் அம்மாகூடத்தான் தூங்கும்.அதனாலெ முடியாதே'ன்னு
சொன்னேன். அதுக்கு அந்தப் புள்ளை சொல்லுது, 'அதனால் என்ன பரவாயில்லை. நான் அவ ரூம்லே படுத்துக்கறேன்'ன்னு.
அப்புறம் இன்னொரு நாள் பார்க்கலாம், இப்ப வேணாம்னு சொல்லி தப்பிக்க நான் பட்ட பாடு... அப்பப்பா....:-))))
படிக்கக் கனமாக இருந்தது. பிரசவத்தின் பின், குழந்தை வளர்ப்பில் ஓய்வற்ற ஒரே மாதிரி வேலைகளால் அயற்சியுறும் பெண்களுக்குத் தேவையான கவனிப்பும், கனிவும் இந்தமாதிரி கொடூரங்களைத் தடுக்குமோ!
அந்தப் பெண்ணுக்கு என்ன என்ன துன்பமோ?
அம்மா அப்பா இல்லாம நிம்மதியா தூங்கலாமுனு நினைச்சதோ?
என்னங்க துளசி பீல் பண்ண வச்சுட்டீங்க.
:(
//அதுக்கு அந்தப் புள்ளை சொல்லுது, 'அதனால் என்ன பரவாயில்லை. நான் அவ ரூம்லே படுத்துக்கறேன்'ன்னு.//
நல்ல காமெடியா தான் இருக்கு.
நம்மளும் வெளியில் வரும் வரைக்கும் எல்லாம் ஒன்றாக தூங்கி தான் பழக்கம்.
வாங்க செல்வா.
ஒவ்வொருத்தருக்கும் இதைப்பத்தியெல்லாம் ஒவ்வொரு எண்ணம் இருக்குல்லையா. எனக்குத் தோணுறது
என்னன்னா.... இங்கே பிள்ளைகளுக்கு உரிமை எக்கச்சக்கம். ஆனால் சுதந்திரம் னு சொல்றது பொறுப்பு உணர்ச்சியோடு
வருதுன்றதை யாரும் எடுத்துக்கறதில்லை. உயர்நிலைப் பள்ளிக்கூடத்துலேயே பசங்க என்னென்ன செய்யலாமுன்னு
விலாவரியாச் சொல்லிடறாங்க. . 'அப்பா அம்மாபேச்சைக் கேக்கணும்'ங்கறதைத் தவிர
மத்த எல்லாத்துக்கும் அரசாங்கமே புக்லெட் போட்டுத் தருது. காண்ட்ராஸெப்டிவ், இன்னும் தேவையானது எல்லாம்
கிடைச்சிருது. நம்மளைமாதிரி ஒரு கலாச்சாரத்துலே இருந்து போறவங்களுக்கு இதுதான் பெரிய ஷாக்.
பசங்க எல்லாம் தாந்தோணிங்களா இருக்குதுங்க. 14 வயசுலேயே குழந்தை பெத்துக்குதுங்க. அதுங்களுக்கு 'சோலோ
மதர்'ன்னு அரசாங்கம் காசு கொடுக்குது. அதனாலே பெத்தவங்களைப் புல்லா நினைக்குதுங்க.
அப்பா,அம்மாகூட சுமூக உறவு இருந்தா, அவுங்களே வந்து உதவி செய்வாங்க. 'இது என் குழந்தை, எனக்குத்தெரியும்
என்ன செய்யணுமு'ன்னு சொல்லி அடாவடி பண்ணுதுங்க. நாலுநாள் புதுக்குழந்தை ஜோர் போனபிறகுதான் தெரியுது
புள்ளை வளர்க்கறது எவ்வளோ பெரிய பாடுன்றது. அதனாலே டிப்ரெஷன் கூடிப்போகுது.
இப்ப இந்த 'லிவிங் டுகெதர்' வந்த பிறகு இன்னும் மோசமான நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கு.
சமூக உறவு சரியா இருந்தாத்தானே எல்லாம் சரியாகும்?
வல்லி,
ஒரு நாள் அப்பா அம்மாவைப் பார்த்துக்கச் சொல்லலாம். இல்லையா அவுங்ககூடப்போய் கொஞ்ச நாள் இருக்கலாம்.
இப்படி எத்தனையோ 'லாம்'கள் இருக்கு. ஆனா அதுக்கு என்ன சங்கடமோ?
நாகை சிவா.
இப்ப புதுசா ஒரு கிரைம் வந்துக்கிட்டு இருக்கு. யாரையாவது இப்படி தங்கவச்சிட்டு, அதுங்க நம்மமேலே பழி போட்டுட்டா?
நாம் வேற இனம். அதனாலெ பயப்படத்தானே வேண்டி இருக்கு. இங்கே கிண்டர்கார்டன் ஸ்கூலிலே ஒரு வாத்தியார்,
ஒரு பையனை 4 வயசு 'என்னவோ' செஞ்சுட்டாருன்னு சொல்லி கேஸ் நடந்து...... அதுலெ அந்தப் பிள்ளை சொன்ன
வாக்குமூலம்தான் நம்ப முடியாம இருந்துச்சு. ஒருக்கிலும் அப்படி நடந்தே இருக்க முடியாது. பசங்களுக்குக் கற்பனை
வளம் ஜாஸ்தியாச்சே.
கடைசியிலே அந்த ஆளு நிரபராதின்னு தீர்ப்பு ஆனாலும், பேர் கெட்டுருச்சா இல்லையா? எவ்வளோ அசிங்கம்?
அதுக்கெல்லாம்தான் கொஞ்சம் தூரமாவே இருக்கணும்.
துளசியக்கா,
"இட்ஸ் மை லைஃப்னு" தன் சுக, சௌகர்யங்களைப் பெரிதாகப் பார்க்கும் ஆட்டிட்யூட்தான் இந்த மாதிரி மனிதத் தன்மை அற்றுப்போகவைத்து அதற்கு "போஸ்ட் நேடல் டிப்ரஷன்னு" பேர் வைத்தழைக்கப்ப்டுகிறது.
நம்மூர் இந்த மாதிரி நுணுக்கமான பாசம், உணர்வுகளில் என்றும்
நிரந்தர வல்லரசு.
//இப்ப புதுசா ஒரு கிரைம் வந்துக்கிட்டு இருக்கு. யாரையாவது இப்படி தங்கவச்சிட்டு, அதுங்க நம்மமேலே பழி போட்டுட்டா?//
அங்கேயுமா? இங்கதான் 10,000 வருஷத்துக்கு முன்ன வந்து மூதாதயரைக் கொடுமைபடுத்தியதா இன்னும் வேண்டாத பழி சொல்லித் திறியராங்க.
சே! துளசியக்கா பதிவுப் பின்னூட்டதிலேயும் தமிழ்மணத்துல திரிஞ்சதுல ஏறுன பொடியைச் சிந்திட்டேனோ?
//கூட்டுக்குடும்பம் இப்ப இல்லாமப் போனதுதானே பலவித மன அழுத்தங்களுக்கும் காரணம்?
என்னமோ மனசு இப்படிச் சிந்திக்குது.//
இரட்டை குழந்தைகள் கேஸ்ல கூட்டுக்க்கும்பமே, இதுக்கு என்ன சொல்றீங்க?
Thulasi
Post natal depression has many different reasons. I am kind of frustrated to see many comments stating that women in other countries (western) have no love or patience. I dont know when people will stop making general comments.
It is not about "thaaymai" it is a psychological condition post natal depression and even men have that even though they dont go through pregnancy.
//ச்சீ.தூங்கு............வாயை மூடறியா இல்லையா....//
ஆற்றாமை, இயலாமையின் விளைவாக எந்தவொரு அன்னையும் இது போன்ற வார்த்தைகளை ஏதோ ஒரு நொடியில் பயன்படுத்தி இருக்கக்கூடும்.சொற்களின் வீரியம் வேறு படலாம்.ஆனால் அச்சொற்களை சொல்லத்தூண்டும் உணர்வு ஒன்றேதான்
ட்டீச்சர், ப்ளீஸ் "சித்தி" படத்தின் கீழ்வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்
"காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
கண்ணுறக்கம் ஏது?........."
இந்த சமூக அவலத்தின் காரணத்தை சரியாகச் சுட்டியுள்ளீர்கள்
"கள்ளிப்பாலை நீ குடிச்சு
கண்ணுறங்கு மகளே" சபாஷ் SK
ஒரு பதிவிற்கு நல்ல தலைப்பைக்
கொடுத்துள்ளிர்கள்
ஹரிஹரன்,
நம்மூர்லேயும் பொண் குழந்தைகளைச் சில இடங்களில் ' பிறந்தவுடனேயே முடிச்சுறாங்களே'
நீங்க கேள்விப்படலையா?
வெள்ளைக்கார நாடுகளில் மட்டும் பிள்ளைங்க பிறந்து வளரலையா என்ன?
அதுக்காக எல்லா அம்மாங்களுமே இப்படி ஆயிடறாங்களா என்ன?
எல்லாம் இந்த ஹார்மோன் பிரச்சனையாலேதான்னு சொல்றாங்க.
மருத்துவர்கள்தான் இதைத் தெளிவாச் சொல்லணும்.
சுரேஷூ,
விதின்னு ஒண்ணு இருந்தா விதி விலக்குன்னு ஒண்ணு இருக்காதா?
கூட்டுக்குடும்பம்ங்கறதாலேதான் இப்ப இந்த பெரியம்மாங்க உண்மையைச்
சொல்ல முன்வந்திருக்காங்க.
அதுவுமில்லாம, இந்தக் குழந்தையின் அம்மாவுக்கு 'கிரிமினல் ரெக்கார்ட்' இருக்காம்.
டீன் ஏஜ் அம்மா இல்லை. ஏற்கெனவே ரெண்டு பிள்ளைகள் ஃபோஸ்டெர் ஃபேமிலியிலே
இருக்காங்களாம். ஏழு பிள்ளைங்களோட அம்மான்னு சொல்றாங்க டிவியிலே. நிங்களும்
பார்த்திருப்பீங்கதானே?
வாங்க பத்மா. நலமா? எங்கே ரொம்ப நாளாக் காணொம்?
நீங்க ஒரு பதிவு எழுதுங்க பத்மா இந்த போஸ்ட் நேடல் டிப்ரெஷனைப் பத்தி.
நீங்க சொன்னாச் சரியா இருக்கும்.
//இந்தப் பசங்களுக்கும் முடிவு இப்படித்தான் வந்துச்சோ?
பிள்ளைகளை என்ன செஞ்சிருக்காங்கன்னு.
//
பெத்த மனம் 'பித்து' என்பதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கு ... நியூஸ்லான்ட் நீயூஸ்சென்ஸ் :(((
GK,
//
நியூஸ்லான்ட் நீயூஸ்சென்ஸ்//
நியூஸ் சென்ஸ்(சேஷனல்?)
நம்பிக்கையோடு வளர்த்த மகன் தாய்தந்தையர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு விடுவதை சகித்துக்கொள்ளும் இந்த உலகம் தாய் ஒரு டிகிரி தவறினால் என்ன ஆகும் என்பதை உணரவேண்டும்.நல்ல படைப்பு. கண்ணுறக்கம் எங்களுக்கு இல்லாமல் பண்ணிவிட்டீர்களே. அன்பன் தி ரா ச
வாங்க சிஜி.
கடைசி ரெண்டு வரி
'காலமிதைத் தவறவிட்டால்
தூக்கமில்லை மகளே'
இப்படி வருமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேனே(-:
ஃப்ரஸ்ட்ரேஷன் அளவுக்கு மீறிப் போனதால் வந்த வினைதான். இல்லையா?
வாங்க தி.ரா.ச.
அந்த ரெட்டைப் பிஞ்சுகள் நிலை தெரிஞ்சதுமுதல் எனக்கும் ராத்தூக்கம் போயே போச்சு.
நம்ம நாட்டுலே முதியவர்கள் பாதுகாப்புன்றது இப்போ ரொம்ப பிரச்சனையாத்தான்
இருக்கு. கூட்டுக் குடும்ப முறையும் போயிருச்சு. பிள்ளைகளும் நாடுவிட்டு நாடு போயிடறாங்க.
இங்கே நியூஸியில் முதியவர்கள் இல்லம் ரொம்ப நல்ல முறையில் நடக்குது. அதுவுமில்லாம, இப்ப 60+ யூனிட்ஸ்
நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. அதுலே ஒண்ணு வாங்கிக்கிட்டுப் போயிடராங்க பலரும்.
எல்லோருமே அதே வயசுன்றதாலே நல்ல நட்பு ஏற்படுதாம். தனிமை உணர்வு போயிருதுன்னு
சொல்றாங்க.
நம்ம ஊரில் சில வீடுகளில் தாய்தகப்பனைக் கூடவே வச்சுக்கிட்டு, மரியாதை இல்லாம நடத்தறதாக்
கேள்விப்பட்டேன். அதைவிட முதியோர்கள் இல்லத்தில் இருந்தால் சுயமரியதையாவது
மிஞ்சும்.
இது இன்னும் விவாதிக்கப் படவேண்டிய விஷயம். முதியோர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கட்டாயம்
கிடைக்கணும். இன்னும் சில வருஷங்களில் நாமும் இந்த நிலைக்குப் போவோம்தானே?
இதில் பாதி படிக்கும் போது ஒரே சிரிப்பாக வந்தது ஏனென்றால் இப்படி என் வீட்டில் ஒரு நாள் இரவு நடந்தது.
மணி இரவு 1 மணியிருக்கும்,குழந்தை அழுகை.. பாலுக்கு.மனைவிக்கு கோபம், 2 மணிநேரத்துக்கு முன்பு தானே கலக்கி கொடுத்தேன்.ராத்திரி தூங்க முடியவில்லை பகலில் கழிவரை கூட போகமுடியவில்லை.என்ன வாழ்கை இது என்று ஒரு அடி போட்டாள்.பிறகு நான் எழுந்து உன்னால் முடியவில்லை என்றால் என்னிடம் சொல் அதற்காக எதற்கு குழந்தையை அடிக்கிறாய்? என்று கேட்டுவிட்டு நான் பால் கலந்து கொடுத்தேன்.
இது அவர்கள் சுதந்திரம் பாதிக்கப்படும் போது ஏற்படுகின்ற உணர்வுகள்.
இப்படி நடந்தது ஒரே ஒரு தடவை தான்.
தூக்கி போடுவது கொஞ்சமும் எதிர்பார்க்காது.வேறு என்னத்தச்சொல்ல அதான் மத்தவங்க நிறையவே சொல்லிட்டாங்களே!! பரிதாபம் தான்.
சாரி முழுசா படிக்கல லேட்டா வரலாமா ???
முருகா...இதெப்படி....கொடுமையால்ல இருக்கு....யாருக்கோ அடிபட்டாலே பதறுது..இதுல...ஒன்னும் சொல்லலை.
Post natal depression பற்றிய எந்தவிதப் புரிதல்களும் இல்லாமல் இங்கே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களைப்படித்தேன். அதிலும் ஏதோ நம்மூர்க்காரர்கள் - முக்கியமாக அம்மாக்கள்தான் தாய்மையே உருவானவர்கள் போன்ற பிம்பமும் பின்னூட்டங்களில் அழகாகக் கட்டியெழுப்படுகிறது.
வாழ்க வளர்க!!!
வேறென்ன சொல்றது?
ஏதோ உலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே சுயநலவாதிகள் மற்றும் கொடூரமானவர்கள் போலவும் நாம்தான் மொத்த அன்புக்கும் பாசத்துக்கும் முழுக் குத்தகை எடுத்தவர்கள் போலவும்... குட் குட்!!!
மேலை நாடுகளில், போஸ்ட நேட்டல் டிப்ரஷன் மற்றும் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று அனுமானிக்கிறார்களோ அவற்றுக்கெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வது. இதைப்பற்றியெல்லாம் சொல்லவேண்டும். துளசி, நீங்கள் இங்கே பின்னூட்டமிடுபவர்கள் சொல்வதுபற்றி ஒன்றுமே சொல்லாததைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது!
இங்கே, கனடாவில்: டொராண்டோவில் ஒரு மூன்று - நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு தமிழ்ப்பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டாள். பெற்றோர்கள் இருந்தாக்ரள். உறவினர்கள் இருந்தார்கள். அவளுடைய கடைசிப்பிள்ளைக்கு வயது: நாலு மாதம். இங்கே அது ஒரு பெரிய செய்தி. துருவித் திருவி விசாரித்தார்கள். எங்கே தாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்று தேடினார்கள். போஸ்ட் நேட்டல் டிப்ரஷன் பற்றி அவளுடைய குடும்பத்தவருக்கு பெரிதாகத் தெரியவில்லை. :( வழக்கம்போலத் தமிழரிடையே குடும்பத்தில் பிரச்சினை, கணவன் கொடுமை (குடும்பங்களில் அதுவும்நடக்கிறது. ஆனால், இங்கே அது காரணாமில்லை.). பாவம், இரண்டு வேலை செய்து ஏறக்குறைய 12-16 மணி நேரம் வெளியே இருக்கும் அந்த மனிதர் உடைந்துபோனார். இவர்களும் தமிழர்கள்தாம். அன்பை பாசத்தையும் குத்தகை எடுத்திருந்தவர்கள்தாம்!!!
வாங்க மதி. நலமா?
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே //எந்தவிதப் புரிதல்களும் இல்லாமல்....//
இது எவ்வளவு தீவிரமான பிரச்சனைன்னு நம்ம மக்கள்ஸ் புரிஞ்சுக்கணுமுன்னுதான்
கோடி காட்டி இருக்கேன்.
பின்னூட்டம் போடறவங்க அவங்க கருத்துக்களைப் போடட்டும். நாம் அதுக்குப் பதில்
சொல்லி இந்த விஷயத்தைப் புரியவைக்க முடியாது. நம்ம வலை ஆட்களையும் அவ்வளவு
எளிதா நினைச்சுறக்கூடாது பாருங்க. மனசுக்குள்ளெ புகுந்துருச்சுன்னா, துருவித்துருவி
விஷயங்களைத் தேடிப் படிக்கிறவங்கதானே. 'இனிஷியல் ஷாக்' லே வர்ற காமெண்ட்ஸ்தான்
எல்லாம்.
நம்ம வலைஞர்களில் இருக்கும் மருத்துவர்கள் இதைப் பத்தி எழுதுவாங்களான்னு ஒரு
எதிர்பார்ப்புத்தான் எனக்கும்.
முழுக்க முழுக்க ஹார்மோன் பிரச்சனையா, இல்லே மன அழுத்தம் ஏற்படும்போது அதை
வெளியே பேசித் தீர்க்காம, மனசுக்குள்ளேயே போட்டு மருகிக் கிடக்கறதாலேயான்னு இன்னும்
கொஞ்சம் தீவிரமா ஆராயணும்.
ரொம்பப் பரவலா இல்லாம ஒரு ச்சின்ன அளவுலேதான்( தேங்க் காட்) இது இருக்குன்றதாலே
அவ்வளவா மக்களிடையில் பேசப்படலையோன்னுதான் நினைக்கிறேன்.
மின்னுது மின்னல்,
என்னங்க நீங்க? இது நம்ம வீடுன்னு நினைச்சுக்குங்க. எப்பவேணா வரலாம்:-))))
வாங்க ராகவன்.
மனசுக்குக் கஷ்டம்தான். ஆனா ஏன் இப்படின்னு யோசிக்கவேண்டிய காலம்.
வடுவூர் குமார்,
பிள்ளை வளர்க்கறதுங்கறது சும்மா லேசுபட்ட காரியம் இல்லீங்களே.
என் மகளும் குழந்தையா இருந்தப்ப, நான் உடம்பை ஃபிட்டா வச்சுக்கறென்னு தினமும் சாயந்திரம்
பேட்மிண்ட்டன் விளையாட ஆரம்பிச்சேன். அது என்னன்னா வேறமாதிரி வலியைக் கொண்டு வந்துருச்சு.
ராத்திரியிலே எழுந்தா நடக்க வராது. ஸீ லயன் மாதிரி அப்படியே தரையிலே இழைஞ்சு இழைஞ்சு போய்
பாலைக் கலக்கினா, அது சீக்கிரத்துலெ ஆறாது. ஃபேன் முன்னாலே காமிச்சு அதை ஆறவச்சு பாட்டிலில்
ஊத்தறதுக்குள்ளே அம்மாளு வீட்டையே இடிச்சுடறமாதிரி அழும். அப்பா தூக்கிவச்சுக்கிட்டு உலாத்துவார்.
இப்ப சில வருசங்களுக்கு முந்தி, அக்காவோட மருமகள் 3 மாசக் குழந்தையோடு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க.
குழந்தை குடிக்கிற சூட்டுக்குத் த்ண்ணியை ஆத்தி ப்ளாஸ்க்லே ஊத்தி வச்சுக்கிட்டு, குழந்தை அழ ஆரம்பிச்ச அடுத்த
10 வினாடியிலே பாலைக் கலக்கிட்டாங்க. இப்படிஎல்லாம் செய்யலாமுன்னுகூட அந்தக் காலத்துலெ எனக்குத்
தெரியலை பாருங்க.(-:
பன்னிரண்டு பெத்த பாட்டியக் கேட்கனும், எப்படி சமாளிச்சேன்னு!!!!!
கூட்டுக் குடும்பம் என்பது எவ்வளவு சாதகம் இல்லையா?
வாங்க கஸ்தூரிப் பெண்.
கூட்டுக்குடும்பம் சாதகமா இல்லே பாதகமான்னு பட்டி மன்றம் ஒண்ணு நடத்திறலாமா?
ஓ! தாராளமா, நடுவர் நம்ம சாலமன் பாப்பையாதானே????
நெஞ்சு பொறுக்குதில்லையே...
கஸ்தூரிப்பெண்,
அதுக்கு ஏங்க பாப்பைய்யா? அவர் டிவியிலே பிஸியா இருப்பார். நம்ம வலைஞர்களிலே யாரையாவது
நியமிச்சாப்போச்சு. எப்படிங்கறீங்களா? ஒரு போட்டி. அதுக்கு எழுதி அனுப்புவாங்க. அதுலே சிறந்தது எதுன்னு
நம்ம மக்கள்ஸ்ஸை ஓட்டுப் போடச்சொல்லி, ஜெயிக்கிறவங்க நடுவர். இதுதான் பரிசுன்னு சொல்லிருவொம்லே:-))))
சிஜி,
ஏன் இந்தப் பாட்டு நல்ல எளிமையான மெட்டுலே நல்லாத்தானே இருக்கு. அவுங்க பாடுனாங்கன்றதாலே
நல்லா இருக்கறதை இல்லைன்னு சொல்லணுமா?( அவுங்க என் ட்வின் ஸிஸ்ட்டர்ன்ற விஷயம் உங்களுக்கு
இதுவரை தெரியாது போல)
வாங்க தேவ்.
இப்படிப் பாட்டுப் பாடி என்ன செய்ய? இதையெல்லாம் தவிர்க்க ஆக்கப்பூர்வமா எதாவது செய்யணும்தானே.
"அம்மா என்றால் அன்பு"க்கான பின்னூட்டம் ஒன்றில் "...ஜெயலலிதாவை சொல்றீங்களா"என்று என் புகைப்படத்துடன் வந்துள்ளது
இப்பின்னூட்டம் நான் அனுப்பவேயில்லை!
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும்
தகுதியற்ற யாரோ ஒரு இழிபிறவியின்
விஷமத்தனம் இது
அப்பின்னூட்டத்தைத் தயவுசெய்து
நீக்கிவிடுங்கள்
(புகைப்படத்தை அனுப்புமளவிற்கு
எனக்கு கனிணிஅறிவு உண்டா என்பது ட்டீச்சருக்கே தெரியுமே. அப்படி இருந்தும் இதை எப்படி வெளியிட்டீர்கள், துளசி?
அய்யோ அய்யோ
நான் போடாத பின்னூட்டத்திற்கு
பதில் வேறா?
தேவுடா தேவுடா
அவுங்க உங்க ட்வின் சிஸ்டர் வேறயா?
இருக்கும் இருக்கும் போட்டோ பார்த்தா அப்படித்தான் தெரியுது.
முதல்லே அந்த பின்னூட்டத்தை எடுங்க,ப்ளீஸ்
சிஜி,
மன்னிக்கணும். நீங்க சொல்றமாதிரியே 'பாட்டு' இருந்துச்சா அதனாலெ கவனிக்கலை.
உங்களுக்கும் போலி வருமுன்னு நான் நினைச்சுப் பார்க்கலை. அதான் குழப்பம்.
இனி ப்ரொஃபைல் சரி பார்த்துட்டுப் போடுவேன்.
ட்டீச்சருன்னா ட்டீச்சர்தான்!
நன்றி ட்டீச்சர்
namma oor ammaakkalaip patri.
http://lettersforall.blogspot.com/2006/08/my-dear-3.html
I totally agree with mathy and padma.
பிரேமலதா,
இது நிஜமாவே உண்மையா? கடவுளே.......
விரும்ப வேணாம்ப்பா. ஆனா இவ்வளோ வெறுப்பு எப்படி வரும்? புரியலையே?
உறவுன்னு வேணாம். சக மனுஷங்களை இவ்வளவுதூரம் எப்படி வெறுக்க முடியுது?
துளசி
Postnatal depression பற்றி எனக்கு தெரிந்த விஷயங்கள சொல்ல ஆசப் படறேன்.. . என்னோட profession லே.. Post Graduate படிப்பு முடித்து நான் முதன் முதலில் வேலை பார்த்தது..கோவையில் உள்ள மிகப்பெரிய மருத்தவமனை.. மகப்பேரு மருத்துவத்துக்கும்.. புற்று நோய் மருத்துவத்துக்கும் பெயர் பெற்றது..
ஒரு நாள் மகப்பேறு OP ல் ஒரே சத்தம்.. நர்ஸ் tension ஆகி கத்திக் கொண்டிருந்த்தார்.. என்ன என்று பார்த்தால்..ஒரு பெண்ணை சிலர் கையை பிடித்து இளுத்து திட்டிக் கொண்டிருந்தனர்..யாரெண்று போய் பார்க்கலாம் என்று எட்டி பார்த்தால்.. எங்கள் வீட்டு கட்டட பணி செய்த பேபி என்கிற பெண்... அவளுக்கு இரண்டு நாள் முன் தான் ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.. குழந்தைக்கு பால் ஊட்ட மறுப்பதாக அவளின் தாயார் சொல்லி அவளை திட்டிக் கொண்டிருந்தார்.. நான் அருகில் சென்று என்ன பேபி என்று கேட்டால்.. என்னை அவளுக்கு அடையாளம் தெரிய வில்லை.. கணவன் எங்கே என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.. மன நிலை பாதிக்கப் பட்டிருக்கிராள் என்பதை தெரிந்து கொண்டேன்..செவிலியருக்கு இது புரியவில்லை.. (அவ்ளோதான் awareness... )இது தெரியாமல் அவளை இரண்டு நாட்களாக திட்டி, கஷ்படுத்தியிக்கிறார்கள்... இத்தனையும் OP ல் வைத்து...டாக்டரிடமும் சொல்லாமல்..(nurse நானே manage பன்னிக்குவேன் என்று சொல்லி இத்தனையும் செய்து இருக்கிறார்)பிறகு நான் cheif dr இடம் சொல்லி அந்த பெண்னை வேறு டாக்டரிடம் refer செய்தேன்(அந்த மருத்தவமனையில் மனநோய் மருத்தவம் இல்லாததால்) .. but it was too late.. அந்த பெண் ஒரு வாரத்தில் இறந்து விட்டாள்.. தற்கொலை செய்துகொண்டாள்..
இதற்கு காரணம் நான் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்ன பிறகு தான் தெரிந்த்தது,, எங்கள் வீட்டு கட்டுமான பணியில் இருக்கும்போதே அந்த பெண்ணிற்கும் கட்டிட மேஸ்திரிக்கும் தொடர்பு இருந்தாகவும் ( அவன் ஏற்கனவே திருமனமானவன்) குழந்தை அவனுக்கு பிறந்ததாகவும் அம்மா கூறினார்..பேபியின் காதலை கேள்விபட்ட அவளின் பெற்றோர் அவளுக்கு வேறு திருமணம் செய்து வைத்துவிட்டனர்..அனால் கணவன் இவளின் காதலை கேள்விப்பட்டு கைவிட்டுவிட்டான்..
இப்பொழுது பேபி again to sqaure one.. மீண்டும் கட்டிடவேலைக்கு வந்து மேஸ்திரியின் வலையில் சிக்கி..கர்பம் ஆனாள்.. இதை கேள்வி பட்டவுடன்.. மேஸ்திரி அவளை வேளையை விட்டு துரத்தி விட்டான் (disciplinary action)எப்படியோ எல்லோரும் பேசி அவளுக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக மேஸ்திரி ஒப்புகொண்டான்..
ஆனால்.. பேபியின் நேரம்.. மேஸ்திரிக்கு புற்று நோய் வந்து நான்கே மாதத்தில் இறந்து விட்டான்.. பெற்றோர்..ஊர் மக்கள்.. என்று எல்லோருக்கும் அவள் கேலிகூத்தானாள்..
ஆறுதல் சொல்லவோ ஆதரிக்கவோ யாரும் இல்லாத அவளின் இந்த நிலைமையை அவளாள் ஏற்றுக் கொள்ள முடியாததனால் Postnatal Depression...
ஆரவனைப்பும் ஆதரவும் தேவை பட்டபோது பேபியை யாரும் கண்டு கொள்ளவில்லை
guilty.. தூக்கமின்மை.. சரியான சீரான சத்துணவு இல்லாமை..மிகக் குருகிய காலத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுதல் போன்றவை காரணிகள்..
Around 1 in every 10 women has post natal depression.. அதிர்ச்சியாகதான் இருக்கிறது..அனால் இது தான் உண்மை..severity மாறுபடும். oestrogen, orogesterone level குறையும் போது depression வரலாம் என்பது ஒரு கருத்து.. அனால் இதுபோல harmone குறைபாடு இருந்தும் மனரீதியாக பாதிக்கப்படாத பெண்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. அதனால் post partum depression பற்றிய விளிப்புணர்வே இதற்கு தீர்வு.. விளிப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும்..ஆண், பெண் இரு பாலாருக்கும்..
மங்கை,
வாங்க. நலமா?
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, ஆண் பெண் இரு பாலருக்கும் இதைப் பற்றிய
விழிப்புணர்வு வரணுமுன்னு. அதேதான்.
பாவம், அந்தப் பொண்ணு பேபி. ஆதரவே இல்லாத இளம் தாய். வாழ்க்கையிலே
அன்பும் ஆதரவும் வேணுங்கறதுலே எந்த ஒரு ஐயமும் இல்லை.
ஆமாம் துளசி அவர்களே
அந்தப் பெண்ணுக்கு முதலில் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய கடமை
கட்டிட வேலைக்கு வந்து மேஸ்திரியிடம் ஏமாந்துபோனாள் இதற்கு காரணம் அவளுக்குள் இருந்த insecurity..
பெண்கள் சிலர் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து இருந்த்தும்.. they dont have choice.. assertive ஆக இருக்க முடிவதில்லை... அல்லது தெரிவதில்லை.. அதன் விளைவாக இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுகின்றன..
எந்த குடுபத்திற்க்காக உழைத்து கொட்டினாலோ அவர்கள் கொஞ்சம் மனிதநேயத்தோடு நடந்து கொண்டிருந்தால் இன்று அந்த குழந்தை அனாதை ஆகி இருக்காது..
This is a cycle,...இப்பொழுது அந்த பெண் குழந்தை ஆதரிவில்லாமல் இருப்பதால் again இது போன்ற சூல்நிலைக்கு தள்ளப்படலாம்....
மங்கை,
வெறும் துளசி போதும். 'அவர்களே வேண்டாமே ப்ளீஸ். அப்படிச் சொன்னா, ஏதோ அந்நியப்பட்ட மாதிரி இருக்கு.
//பெண்கள் சிலர் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து இருந்த்தும்..
they dont have choice.. assertive ஆக இருக்க முடிவதில்லை...
அல்லது தெரிவதில்லை.. அதன் விளைவாக இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுகின்றன.. //
இது என்னவோ கசப்பான நிஜம்தான். சில பல நிர்பந்தங்களில் இப்படி மாட்டிக்கிட்டு வாழ்க்கையையே
தொலைத்த சிலரையும் நான் பார்த்திருக்கேன். 'வலையில் அகப்பட்ட மான்'
அப்புறம் வீண் கவுரவம் பார்க்கும் மிகமிக நெருங்கிய சொந்தங்கள், எங்கே அவுங்க நம்மை ஏத்துக்க மாட்டாங்களொன்னு
இந்தப் பெண்களே பயந்துக்கிட்டு சேற்றிலேயே இருந்துடறாங்க. தப்பி வெளியே வர எத்தனை பேரால முடியுது?
எல்லாம் ஒரே அவலம் தாங்க.
சரி வெறும் துளசி...
அவர்களே வாபஸ்....
:-)))))))))
சரிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சந்தோசமுங்க....
மங்கை
Thulasi,
athu unmai (no tamil font at work).
and, there are SEVERAL cases like that.
daughters hated because they are girls is another common (pleas note "common") case. there are several and several of us who were hated and ill-treated by our mothers. my whole family treated me inferior (not exaclt ill-treatement, but told me i am inferior, less worthy ever time, every second, every inch of my life. they still do).
பிரேமலதா,
நிஜமாவா? அடடா..... பொண் குழந்தைகள் வீட்டுக்கு லக்ஷ்மியாச்சேப்பா.
இந்தக் கணக்குலே பார்த்தா.... என் பொண்ணுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவச்சிருக்கு.
எல்லாம் அந்தம்மா சொல்லுக்குத்தான் ஆடிக்கிட்டு இருக்கோம்.
சரி. போனதை என்ன செய்யமுடியும்? நமக்குப் பிறந்ததை/பிறக்கப்போறதைக் கொண்டாடணுமுன்னு
நினைச்சுக்க வேண்டியதுதான்.
யோகன்,
//இப்படிப் பல சம்பவங்கள் இன்றைய அவசர வாழ்வில் உலக பொதுப் பிரச்சனையாகியுள்ளது.//
இதேதான். எல்லா நாட்டிலும் பெண்களுக்கு மன அழுத்தம் இந்த அவசர வாழ்க்கையிலே கூடித்தான்
போகுது. அதுலேயும் குழந்தைப்பேறுக்குப் பிறகு அதிகப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிவாரணம் வேணும்.
Post a Comment