"அதோ அந்தப் பார்க் பெஞ்சுலே உக்காந்துக்கிட்டு, பையிலே இருக்கற காய்களையெல்லாம்எடுத்து முன்னாலே வச்சுக்கிட்டு, இது நாலணா, இது எட்டணான்னு ஒவ்வொண்ணுக்கும் விலையை வாய்விட்டுச் சொல்லி நல்லா மனசுக்குள்ளே பதிய வச்சுக்கிட்டு இருக்கறது யாரு?"
அஞ்சு நிமிஷம் இந்தக் கணக்கெல்லாம் போட்டுட்டு, கையிலே இருக்கற ச்சில்லறையை எண்ணி அதுலே கொஞ்சத்தை எடுத்து, இடுப்புலே நல்லா முடிஞ்சுக்கிட்டு, காயை எல்லாம் வாரிப் பையிலே போட்டுக்கிட்டு மெதுவா எழுந்து நடையைக் கட்டுறாங்க.
"அட... யாரு இப்படி எல்லாம் செய்யறதுன்னு கேக்கறேன்லே?"
"வேற யாரு. நைனம்மாதான்."
"யாரோட நைனம்மா? உங்க நைனாவோட அம்மாவா?"
"இல்லைப்பா. அவுங்க வீட்டுலே புள்ளைங்க எல்லாரும் நைனாம்மான்னு கூப்புடுதுங்க இல்லெ. அதைப் பார்த்துப்பார்த்து இப்ப எல்லோரும் அவுங்களை அப்படித்தான் கூப்புடறொம்."
"ஓஹோ..அப்படியா."
"ஆமாம். நீ பார்க்குன்னு சொன்னியே எந்தப் பார்க்? மொதல்லே அங்கே ஏது பார்க்?"
"பஞ்சாயத்து அங்கே பூங்கா வைக்கப்போறொமுன்னு சொல்லி இடம் ஒதுக்கி வச்சுருக்கறது நிஜமாவே உனக்குத் தெரியாதா? மரம்கிரம் வர்றதுக்கு முன்னாலேயே நாலு காங்க்ரீட் பெஞ்சுங்களைக் கொண்டுவந்து நாலு பக்கமும் போட்டு வச்சுட்டாங்கல்லெ. அதைத்தான் சொல்றேன்."
"என்னாத்துக்கு அந்தப் பெரியம்மா, அதாம்ப்பா, நைனாம்மா தினம் இப்படிச் செய்யுது?"
"அது ஒண்ணுமில்லை. நைனம்மாவோட மருமக டீச்சரா இருக்குது. காலையிலேயே சமையலை முடிச்சுக்கிட்டுப் பசங்களுக்கும், தனக்குமா டிபன் பாக்ஸ்லே சோறு எடுத்துக்கிட்டுப் போகணும்.சமையலுக்கு ஒரு ஆள் வச்சிருக்காங்கதான். ஆனா காலையிலே காயெல்லாம் வாங்குனாத்தான் ஃப்ரெஷா இருக்குமாம். அதுக்குக் காய் வாங்கற டூட்டியை நைனம்மா தானே எடுத்துக்கிச்சு."
"வயசாச்சுலே. ராத்தூக்கம் அவ்வளவா இல்லை. பொழுது விடியுதான்னு கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு இருக்கும். பலபலன்னு பொழுது விடியறப்பயே எழுந்து, குளிச்சுட்டு, நெத்தியிலே தாயாராட்டம் ஒ ருநாமத்தைப் போட்டுக்கும்."
"அது நாமம் இல்லை. திருஷ்ணமுன்னு சொல்வாங்க."
"சரி.. ஏதோ ஒண்ணு. சாமியைக் கும்புட்டுக்கும். அதுக்குள்ளெ மருமக எழுந்து வந்துருமாம். அன்னிக்கு என்ன சமையல், என்னென்ன வாங்கணுமுன்னு கேட்டுக்கிட்டு, பையைத் தூக்கிக்கிட்டு கிளம்பிரும்.நல்லா வெடவெடன்னு ஒல்லியா இருக்குல்லே, வேகம்வேகமா நடந்து போறதைப் பாக்கணுமே."
"ரயிலடிக்கு பக்கத்துலே கூடைக்காரங்க வந்து கடை பரத்தறதுக்குள்ளே இந்தம்மா ஆஜராயிரும். முக்காவாசிநாளு இவுங்கதான் போணி பண்ணறது. அதுனாலே கொஞ்சம் இப்படி அப்படிக் குறைச்சுக் கொடுக்கறதுதான்.அதுக்கப்புறம் தான் இருக்கு வேடிக்கை. பார்க்கைத் தாண்டித்தானே போகணும். அப்பக் கொஞ்ச நேரம் அங்கேஉக்காந்துக்கும்."
"பாவம். வயசாச்சுல்லே. ரெஸ்ட் எடுத்துக்கிட்டுப் போகும்போல. இதுலே என்ன வேடிக்கை?"
"ம்ம்.. நாலணாவுக்கு வாங்குன காயை அஞ்சணா, ஆறணாவுக்கு வாங்குனதை எட்டணான்னு இதுவேஒரு கணக்குப் போட்டுக்கிட்டு, அதிகப்படி வர்ற ச்சில்லறையை எடுத்துத் தனியா வச்சுக்கும். வூட்டுக்குப்போனதும், மருமககிட்டே, இது அஞ்சணா, இது எட்டணான்னு எல்லாத்துக்கும் ஒரு கணக்கைச் சொல்லிட்டு,இந்தாம்மா நீ கொடுத்ததுலே பாக்கின்னு மீதிக்காசைக் கொடுக்கும். அந்த மருமகளும், காலையிலே அரக்கப்பரக்க வேலையை முடிக்கற அவசரத்துலே இருப்பாங்க. கணக்கெல்லாம் வேணாம் அத்தை. யாரு கேட்டா?நீங்க காயை இப்படிக் கொடுங்க. நான் நறுக்கிக் கொடுத்துட்டு மத்தவேலையைப் பாக்கறென்னு சொல்லும்."
"இந்தம்மா, அதையெல்லாம் காதுலேயே போட்டுக்காது. சொல்ற கணக்கை ஒருதரத்துக்கு ரெண்டுதரமாச் சொல்லிட்டுத்தான் நகரும். தினம் இதே கதைதான்."
"ஆமாம். இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? "
"அங்கே சமையலுக்கு இருக்கறது எங்க பக்கத்து வீட்டு செல்லமாக்கா தானே. அது சொல்றதுதான்."
"இது என்னாப்பா , என்னத்துக்கு இந்தம்மா இப்படி காசு அடிக்குது? விசித்திரமா இருக்கே."
"இதுக்கே விசித்திரமுன்னா, இனி நாஞ்சொல்லப் போறதுக்கு என்ன சொல்வியோ?"
"சொல்லு, சொல்லு."
"சமையல் முடிஞ்சதும், ச்சின்னச்சின்ன கிண்ணம் கொண்டுவந்து, கொழம்பு, ரசம், காய், கூட்டு எல்லாம் ஒரு ஆளுக்கு வேணுங்கற அளவு எடுத்துத் தனியா அடுக்களை அலமாரியிலே வச்சிருமாம்."
"ஒருவேளை, ஆச்சாரமா இருக்கறவங்களோ என்னமோ?"
"அதெல்லாம் இல்லையாம். இப்படி எடுத்து வச்சிட்டு, கொஞ்சம் தண்ணி எடுத்து, குழம்பு, ரசத்துலே கலந்து வச்சுருவாங்களாம்."
" அய்யய்யோ"
"டீச்சரும், புள்ளைங்களும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஸ்கூலுக்குச் சீக்கிரம் போயிருவாங்களாம்.மகனுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் போகணுமாம். மகன் சாப்புட வர்றப்ப, எடுத்து வச்சிருக்கறதைக் கொண்டுவந்து தானே பறிமாறுமாம்."
"அடக் கடவுளே.... அப்ப எடுத்து வச்சது, தான் சாப்புடறதுக்கு இல்லையா?"
"ம்ஹூம்..... தண்ணியைக் கலந்து வச்சுருச்சே, அந்தக் குழம்பைதான் தான் ஊத்தித் தின்னுமாம்.சில்லரைக் காசுங்களையெல்லாம் அப்பப்ப நோட்டா மாத்திச் சுருட்டி இடுப்புலேயே எந்நாளும் வச்சுக்குமாம்."
"நைனம்மாவுக்கு எத்தனை பசங்களாம்?"
"ஒரு பொண்ணு, ஒரு பையன். அவ்ளோதான். நல்லா செல்வாக்கா இருந்தவங்களாம். பொண்ணை வேற ஊர்லே கட்டிக் கொடுத்துருக்கு. இந்தப் பையந்தான் கொஞ்சம் தாம்தூம்னு செலவழிக்கற ஆளாம். ஷோக்கும் ஜாஸ்தியாம்.நிறைய நகைநட்டை பையன் தலையெடுத்துதான் அழிச்சுட்டாராம். பாட்டியம்மாவுக்கு எப்பவாவது தலைவலின்னு நம்ம செல்லமாக்கா தலையை அமுக்கிப் புடிச்சுவிடுமாம். அப்பப் பார்த்துருக்காம் உச்சி மண்டையிலே ஒரு ச்சின்னக்குழி இருக்குமாம். அந்தக் காலத்துலே உச்சிபில்லை எப்பவும் வச்சுப் பழகி இப்படி ஆயிருச்சாம்."
இதெல்லாம் நடந்து ரொம்ப நாளைக்கப்புறம் இவுங்க மறுபடி சந்திக்கறாங்க. மறுபடி பேச்சு நைனம்மாவைப் பத்தி வருது.
"ஏம்ப்பா, இப்பெல்லாம் அந்த நைனம்மாவைக் காணொமே? என்ன ஆச்சு? எதாவது உடம்பு சரியில்லாமக்கிடக்கறாங்களா, என்ன?"
"இல்லைப்பா. கொஞ்ச நாளைக்கு முன்னாலே பையனுக்கும், அம்மாவுக்கும் பலத்த சண்டையாம். பொண்ணு வீட்டுக்குப் போறேன்னு கிளம்பிப் போயிருச்சாம்."
"அடடா... அப்பக் காயெல்லாம் யாரு வாங்கியாறாங்க?"
"டீச்சரம்மாவே ஸ்கூலு முடிஞ்சு போகச்சொல்ல வாங்கிட்டுப் போயிடறாங்களாம்."
இன்னும் சிலமாதங்களுக்குப் பின்.
"என்னப்பா, டீச்சரு வூட்டுலே எதாவது விசேஷமா? வாசல்லே பந்தல் போட்டுக் கூட்டமா இருக்கு."
"நம்ம நைனம்மா தவறிடுச்சாம்ப்பா. அதுக்கு கருமம் பண்ணிக்கிட்டு இருக்காங்க."
"அடடடா....எப்பவாம்? எங்கே, பொண்ணு வூட்டுலேயா?"
"இல்லைப்பா. பொண்ணு வூட்டுக்கே போகலையாமே. ரொம்ப நாள் கழிச்சு, சொந்தக்கார் வீட்டு விசேசத்துலே அக்காவைப் பார்த்தப்ப அம்மா எப்படி இருக்கு? ன்னு கேட்டுருக்கார். அப்பத்தான் தெரிஞ்சதாம் அம்மா அங்கே போகவே இல்லைன்னு."
"அப்புறம்?"
"இந்தம்மா கோச்சுக்கிட்டு, திருப்பதியிலே போய் அங்கேயெ தங்கிருச்சாம்,சத்திரத்துலே அங்கெ இங்கேன்னு.அப்புறம் இவரோட நண்பர் ஒருத்தர் பார்த்துட்டுவந்து சொன்னாராம். மருமக கிளம்பிப் போயிருக்கு. அங்கேபோய் கேட்டப்ப, 'மூணுநாளைக்கு முன்னாலே இங்கே இருந்த ஒரு பாட்டியம்மா செத்துப்போச்சு. யார் என்னன்னு விவரம் இல்லை. நாங்களே தர்மக் கொள்ளி போட்டுட்டோம். அந்தம்மா இடுப்புலே மூணாயிரத்துச் சொச்சம் ரூபாநோட்டு சுருட்டி வச்சிருந்தது. இதான் அந்தப் பாட்டியம்மாவோட மாத்துப் பொடவை, கழுத்துலே போட்டுருந்த துளசி மாலைன்னு காமிச்சிருக்காங்க. போனது மாமியாருன்னு உறுதி ஆகிப்போச்சு.
அந்தக் காசை கோயில் உண்டியிலெ போடச் சொல்லிட்டு, அந்தப் பொடவையை மட்டும் வாங்கிக்கிட்டு டீச்சர் வந்துட்டாங்க. அதான் இன்னிக்குக் கருமாந்திரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க."
"த்சு த்சு த்சு...... பாவம்ப்பா"
( கொஞ்சம் நடையை மாத்திப் பார்த்தேன். சம்பவம் என்னவோ உண்மைதான்.)
---------
அடுத்தவாரம்: ஸ்டீவன்-
----------
நன்றி: தமிழோவியம்
Saturday, July 01, 2006
எவ்ரிடே மனிதர்கள் : 7 நைனம்மா
Posted by துளசி கோபால் at 7/01/2006 03:06:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//அந்தக் காலத்துலே உச்சிபில்லை எப்பவும் வச்சுப் பழகி இப்படி ஆயிருச்சாம்."//
இப்படின்னா என்ன? எதோ நகை மாதிரி தெரியுது...
துளசி, என்னை ஆறு எழுத சிவகுமார் அழைத்து இருக்கிறார்.
உங்க பேரும் போட்டு இருக்கேன்.
உங்களை வெற யாரோ அழைத்தாச்சுனு தெரியும். இருந்தும் போட்டு விட்டேன்பா.
நைனம்மா தமிழோவிஅத்தில் படிச்சுட்டென்.
பாவம். அவங்களூக்குப் புண்ணியம் நிறயவே சேந்து இருக்கும்.
முதல்லே நைனம்மா மேலே கோபம்
வந்தது.பிறகு மகன் மீது காட்டும்
பாசத்தைக் கண்டு வியப்பு;கடைசியில்
பரிதாபப் பட வைத்து விட்டீர்களே....
அந்த ட்டீச்சரும் நைனம்மாவைப்
படுத்தியதாகவும் தெரியவில்லை...ப்ச்
நைனம்மா எதுக்காக காசு சேர்த்து வச்சுதோ ஆனா அது போய் சேர வேண்டிய எடத்துலதான் சேந்துருக்கு.
இது மாதிரிதான் அமெரிக்காவுல ஒரு பிச்சைக்காரர் ப்ளாட்பாரத்துல செத்துக்கிடந்தாராம்..
அவர் யாரு என்னன்னு விசாரிச்சிக்கிட்டுப் போய் போலீஸ் வீட்டை சோதனை போட்டப்போ அங்க கட்டு கட்டா டாலர் நோட்டுங்க இருந்துதாம்..
மனுசன் சேர்த்துவச்சத அனுபவிக்காமயே போய் சேர்ந்துட்டார்.
என்னன்னு சொல்றது.. விசித்திரமான மனிதர்கள்தான்..
உங்க இந்த புதுநடையும் நல்லாத்தான் இருக்குது:)
கொத்ஸ்,
இது 'ராக்கொடி'னு சொல்வாங்க தமிழ்நாட்டுலே. உச்சந்தலைக்குப் பக்கத்துலே வைக்கும் அலங்காரம்.
தங்கத்துலே செஞ்சு கல் பதிச்சு இருக்கும்.
பரதநாட்டிய அணிகலன்கள் இருக்கு பாருங்க, அதுலேயும் இருக்கும்.
அதைச் சுத்திப் பூவட்டமா வச்சுப்பாங்க.
சென்னையிலே ஒரு ஆண்ட்டீக் நகைக் கடையிலே இது ஸ்பெஷலா செஞ்சு தராங்களாம். உங்க வீட்டம்மாவுக்கு வாங்கும்போது, டீச்சருக்கும் ஒண்ணு வாங்கி அனுப்பிருங்க.
வல்லி,
நிறையபேர் கூப்புட்டாச்சு. இன்னும் நான் அனங்கவே இல்லை. அடுத்தவாரம் முடிஞ்சா எழுதிப்பிடணும்.
நைனம்மா, பாவம்தான் ஒரு விதத்தில்.
சிஜி,
பசங்க மேலே கண்மூடித்தனமான அன்பு வைக்கிற பெத்தவங்க மனசுத்தான்.
அந்த மகன் ஆடாத ஆட்டமில்லை.
பாவம்தான் அந்தப் பாட்டி.
டிபிஆர்ஜோ,
காசு இருந்தாவே ஒரு புது பலம்தான். ஒருவேளை அந்த மனோ தைரியத்துக்காகச் சேர்க்க ஆரம்பிச்சு பிறகு ஒரு அடிக்ஷன் ஆயிருது போல.
துளசியக்கா,
சில மனிதர்களை அவர்கள் வாழ்கின்ற காலத்தில் உரியவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை.
ஐயோ பாவம் நைனம்மா என்று பரிதபப்படுவதைத்தவிர வேறு என்ன செய்வது?
//நைனம்மாவோட மருமக டீச்சரா இருக்குது.//
உங்கள வேற எல்லோரும் டீச்சர் னு சொல்றாங்க?
எவ்ரிடே மனிதர்கள் எல்லாமே நல்லா இருக்கு துளசிக்கா.
சிலபேர் இப்படித்தான் காரணமில்லாமல் காசு சேர்த்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் முதுமை என்னும் Senility வந்துவிட்டால் கொஞ்சம் rationalityயும் குறையத் தொடங்கும்.
ஹரிஹரன்,
மனுஷங்களைப் புரிஞ்சுக்கறது அத்தனை எளிதா என்ன?
மனசு,
வாங்க. பெரிய மனசுதான் உங்களுக்கு. எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க:-)))
மணியன்,
காசு, பணம்ங்கறது வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்புதானே.
அது ச்சின்ன அளவிலாவது தன்கிட்டே இருந்தா ஒரு தைரியம் வரும்போல இருக்கு.
அதான் சிலர் இப்படி....
சரியாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான நபராக தான் தெரிகின்றார்.
சிவா,
அந்தம்மாவுக்கு பணம் ஒரு பாதுகாப்பு உணர்வு கொடுத்துருக்கும் போல.
மகனுடைய படாடோபச் செலவுலே அநேகமா எல்லாமே போயிருச்சு. இனி என்ன
ஆகுமோன்ற ஒரு பயம். அதேசமயம், மகன் மேலே ஒரு தீராத பாசம்.
மனுஷர்களைப் புரிஞ்சுக்கறது கஷ்டம்தான். இல்லையா?
துள்சிங்க,
நான் நேத்தைக்கே இந்த (நிஜக்)கதையை படிச்சிட்டேன், ஆனா பின்னூட்டமிட முடியவில்லை. அதான் இப்பொ.
அந்த பாட்டியம்மா மாதிரி கொஞ்சம் கேரக்டர்கள் இருக்காங்க... அந்த பணம் சேர்க்கப் பட்ட முறை அந்த பாட்டியம்மா நம்முடையெ நிலையில்லாமை என்ற வாழ்க்கை தத்துவத்தை புரிஞ்துகிட்டு அதன்படி செஞ்து மாதிரி தெரியுது. யாரு எப்பொ மாருவாங்கன்னு தெரியாம. அதனாலேதான் அந்த பணச் சேமிப்போ "கைலாசம்" போக உதவுமின்னு?! இருக்கலாமின்னு தோணுது.
என் பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க அப்படி :-)
எப்படியோ உங்களெ "என்னொட ஐயப்பன் சாமீ" பதிவுலே இருந்து உங்களுக்கு வழங்குகிற மரியாதை நிமித்தம் புரமோட் பண்ணிட்டேன் பார்த்தீங்களா... எந்த பேசிஸ்-லெ பண்ணேன்னு :-)) பாருங்க மறக்கமா.., நன்றி
வாங்க தெ.கா,
//சேமிப்போ "கைலாசம்" போக உதவுமின்னு?! இருக்கலாமின்னு தோணுது.//
டிக்கெட் எடுக்கக் காசுன்னு சொல்றீங்களா? :-))))
பி.கு: நீங்க குடுத்த புரமோஷனைப் பார்த்தேன்.
துள்சிம்மா,
//டிக்கெட் எடுக்கக் காசுன்னு சொல்றீங்களா? :-)))) //
இப்படியும் இருக்கலாமில்லையா? யாருக்கும் சுமையா இருக்கக் கூடாது தான் செத்துப் போயிம் கூடன்னு.
அதனாலெதான் அந்த சேமிப்புன்னு நான் நினைக்கிறேன். "கைலாசத்திற்கு" போவதற்கு ஆட்கள் நிறையெ பேரு சுத்தி நின்னு கடைசிக் காரியங்கள் பண்ணனுமில்லையா, அதுக்குத்தான் அந்த பணம். ரொம்ப டீசண்டான பாட்டி போல. :-)))
தெ.கா,
மனுஷன் மனசு ஒரு புதிர்தான்.
அது என்ன நினைக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியுமா?
பாட்டி, போகும்போது 75க்கு மேலே இருக்கும்.
Post a Comment