Saturday, July 29, 2006

எவ்ரிடே மனிதர்கள் 11 பானு அண்ணி

"சர்ஃப் .........கடையிலே இப்ப சேல் போட்டுருக்கு. போய் வாங்கிட்டு வரேன்."


" ----- கடையை விட ------ கடையிலே பார், இன்னும் கம்மி. "


எவ்வளவு கம்மின்னு பார்த்தா ஒரு செண்ட். ஆனா ஒரு செண்ட்ன்னா ஒரு செண்ட். எதுக்காக அனாவசியமா,அவசியமான பொருளுக்கு கூடுதல் விலை கொடுக்கணும்?


இதுதான் பாயிண்ட். என்னவோ ஒரு பழமொழி சொல்வாங்க பாருங்க, பென்ஸ்லே கணக்கா இருந்தாலே பவுண்டா சேர்க்கலாமுன்னு( ஏங்க .. பழமொழி சரிதானா? இல்லே நானே எதாவது உடான்ஸ் விட்டுட்டேனா?)

தினப்படி வேலைகளே இங்கே முழி பிதுங்கிரும். இதுலே வீட்டுக்கு வர்ற ஜங்க் விளம்பரங்களைப் பார்க்கறது மட்டுமில்லாம, எங்கெங்கே என்னென்ன பொருட்கள் மலிவா இருக்குன்னு பார்த்து, அவசியமானதைத் தான்மட்டும் வாங்கிக்காம நமக்கும் ஞாபகப்படுத்துவாங்க நம்ம பானு அண்ணி.


நாங்க அண்ணின்னு சொல்றமே தவிர, இவுங்க வேற மாநிலத்து ஆளுங்கதான். அவுங்க பாஷை வேற, நம்மது வேற. அதனாலே என்ன? அன்பா இருக்கவும், கரிசனம் காட்டவும் பாஷை ரொம்ப முக்கியமா ?


காலையிலே 5 மணிக்கு எழுந்தாங்கன்னா, வீட்டுவேலை நெட்டி முறிச்சிரும். ஒரு நிமிஷம் ச்சும்மா இருந்து நான் பார்த்ததே இல்லை. மச்சினர், அவர் மனைவி, ரெண்டு பிள்ளைங்க. இவுங்களுக்கு ரெண்டு பையனுங்க. மாமியார்னு பெரிய கூட்டுக் குடும்பம்.


வீடு இருக்கறது கடை வீதியில். மாடியில் வீடு. கீழே கடை. அப்படி ஒண்ணும் பெரிய கடை, வியாபாரமுன்னு சொல்ல முடியாதுதான். ஆனாலும், அந்தக் கடையில் வியாபாரம் பார்த்தேக் குடும்பத்தை மேலே கொண்டுவந்துட்டாங்க. அண்ணனுக்கு ( பானு அண்ணின்னா, அவுங்க வூட்டுக்காரர் நமக்கு அண்ணன் இல்லையா?) மூத்தவர் ஒருத்தர் இருக்கார். அவரைப் படிக்க வச்சதே நம்ம அண்ணந்தாங்க. நல்லாப்படிக்கிறவர், படிக்கட்டுமுன்னு தையல்கடை, துணிக்கடைன்னு வச்சு உழைச்சிருக்கார். இவரோட தம்பிக்கும் படிப்பு ஏறலை. கடை, வீடுன்னு ஒரே சமயம் கவனிக்க முடியாம அண்ணியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.


அண்ணியோட குடும்பம் ரொம்பப் பணங்காசு உள்ளதுதான். ஆனா வரதட்சிணைப் பழக்கம் எல்லாம் இல்லை. தான் பணக்கார வீட்டுப் பொண்ணாச்சே, இங்கே எப்படின்னு இல்லாம அண்ணி வந்து குடும்பத்தைச் சேர்த்து அணைச்சு இவ்வளோ தூரம் கொண்டு வந்துட்டாங்க. இப்ப மூத்தவர் எஞ்சிநீயர் படிப்பு முடிச்சு, நல்ல இடத்துலே கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளோடு சுகமா வேற ஊர்லே இருக்கார். நல்ல வேலை.கைநிறையச் சம்பாதிக்கிறார்.


கடைசித்தம்பி, இப்பவும் கீழே இருக்கற கடையைப் பார்த்துக்கறார். அவரோட பிள்ளங்க இன்னும் மூணு,நாலு வயசுங்கறதாலெ பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கலை. அவரோட மனைவியும், பிள்ளைகளும் கடையிலேயே இருப்பாங்க. ரெண்டு ஆளுக்கு மேலே மூணாவது ஒரு கஸ்ட்டமர் வந்துட்டாப் போதும், உடனே மேல்வீட்டுலே இருக்கற அண்ணிக்குப் ஃபோன் போட்டுருவாங்க.அண்ணியும், செய்யற வேலையை அப்படியே விட்டுட்டுக் கீழே போய் கடையிலே நிப்பாங்க. இப்படி மேலேயும் கீழேயுமா நாளுக்கு பத்திருவது தடவை ஓடிக்கிட்டே எல்லா வேலையையும் நறுவிசாச் செஞ்சுருவாங்க.


மாமியார்க்குத் தேவையான மருந்து மாத்திரை வாங்கி வைக்கறது, அவுங்களுக்கு சாமி கும்பிடக் கூடமாட உதவின்னு இருக்கறது மட்டுமில்லாம, கல்யாணமாகி இத்தனை வருசமாகியும் அவுங்களைக் கேக்காம எதையும் செய்ய மாட்டாங்க.வருசத்துக்குப் போடற ஊறுகாய்க்குக்கூட 'உப்பு இவ்வளவு போதுமாம்மா?'ன்னு கேப்பாங்கன்னா பாருங்களேன்.


எந்த நேரம் போங்க, நீட்டா உடுத்தி இருப்பாங்க. சத்தமாப் பேசக்கூட மாட்டாங்க. நாங்க எல்லாருமா உக்காந்து சாப்புடறப்போ, பறிமாறிக் கொடுக்கறதும், கூட்டமா எல்லாரும் இருந்தாலும் சத்தமே வெளிவராம அண்ணன்கூடப் பேசறதும், அதுக்கு அவர் பதில் சொல்றதும் இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு அதிசயம்தான். நம்ம வீட்டுலே 'கரடியாக் கத்துனாலும் காதுலெ விழாது'.


சனிக்கிழமையானா, காலையிலே மார்கெட் கிளம்பிப் போய் வாரத்துக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வருவாங்க.எல்லாத்துக்கும் நடராஜா சர்வீஸ்தான். நாங்க போனபிறகு, எங்க வசதிக்காக மார்கெட் போற நேரம் கொஞ்சம் பிந்திப் போச்சு.இப்படி ஒரு வாரம், ரெண்டு வாரம் இல்லை, நாங்க அங்கே இருந்த 6 வருசமும் விடாம உதவியா இருந்தாங்க எங்களுக்கு.


எண்ணிப்பார்த்து 14 வகைக் காய்கள் வாங்குவாங்க. நாளுக்கு ரெண்டு வகை. ஒவ்வொண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட கடை.பழம் வாங்கறதும் இப்படித்தான். எல்லாருக்கும் டாலருக்கு ஆறு ஆப்பிள்ன்னா வழக்கமா வாங்கறதாலே இவுங்களுக்கு மட்டும் ஏழு கொடுப்பார் கடைக்காரர். ஒரு நாளைக்கு ஒண்ணு வீதம் ஏழு நாளைக்கு ஏழு. தினமும் காலையிலே சாமி கும்பிடும் போது சாமி பிரசாதம் இதுதான். அழகா ஸ்லைஸ் செஞ்சு சாமி முன்னாலே இருக்கும். நாங்கெல்லாம்ஆளுக்கொண்ணு எடுத்தாலும் எல்லாருக்கும் சரியா வந்துரும். சாமிக்கும் கணக்குன்னா கணக்குதான்.அவுங்க வீட்டுலே எல்லாரும் ரெண்டு நேரமும் சப்பாத்திதான் தின்னாலும், தினம் சோறும் சமைப்பாங்க. என்ன... ஒருசாஸ்த்திரத்துக்குச் சமைச்சதுபோல இருக்கும். அத்தனை பேர் இருக்கற வீட்டுலெ அரைக் கப் அரிசி. நல்ல பாசுமதிஅரிசிச்சோறு. பொறுமையா அடுப்பிலே வச்சு சோறு பொங்கி வடிப்பாங்க. அதுவே பாதிக்கும்மேலே மீந்துரும். நாங்கஅங்கே சாப்புடற நாளுதான் எல்லாத்தையும் தீர்த்துருவோம். மீந்த சோறை ஒரு தட்டுலே பரத்தி, அதுக்கு ஒரு சல்லடை மூடி போட்டு வெயில்லே வச்சு கலகலன்னு காய வச்சிருவாங்க. ஒரு நாலைஞ்சு நாளைக்கு ஒருதடவை, இதுவரைக்கும் காயவச்சதையெல்லாம் சேர்த்து எண்ணையிலே பொரிச்சு எடுப்பாங்க. அதுமேலே கொஞ்சம் மிளகுதூள், உப்புத் தூவிட்டாங்கன்னா அட்டகாசமான பொரி. இதே நானா இருந்தா ஒரு அரைக்கரண்டி சோத்துக்கு இவ்வளவும் செய்யணுமான்னு யோசிப்பேன்.


நான் சொல்றதையெல்லாம் கேட்டுட்டு அண்ணி ரொம்பக் கருமின்னு நினைச்சுறாதீங்க. எல்லாம் ஒரு சிஸ்டமேடிக்கா செய்யணும். அனாவசியமா எதையும் வேஸ்ட் செய்யக்கூடாதுன்றதுதான் முக்கியமாக் கவனிப்பாங்க. வருசத்துக்கு ஒரு தடவைபூண்டுச் செடிகளை நட்டு அது முளைச்சு வரும்போது அந்தத் தாள்களை வச்சு ஒரு கறி செய்வாங்க. அதே போல மாசம் ஒருதடவை வீட்டுலே விருந்து. ரெண்டு மூணு வாரத்துக்கொருமுறை அக்கம்பக்கம் பிக்னிக் போய் வர்றது.இதுக்கெல்லாம் கொஞ்சமும் அசறாம வகைவகையாச் சாப்பாடு செஞ்சு கொண்டு வருவாங்க. நவராத்திரி, தீபாவளி சமயங்களிலே தினம் விருந்து, பூஜைன்னு அமர்க்களம்தான்.


அண்ணன், இப்ப முயற்சி எடுத்து ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுக் கம்பெனிக்கு முதலாளியா ஆயிட்டார். பெரிய பங்களா வாங்கி இடம் பெயர்ந்தாச்சு. வருமானம் கொட்டுது. மகன்கள் பெரியவங்களாயி, மருமகள்கள், பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஆனாலும் அன்னிக்கு இருந்த மாதிரியேக் கொஞ்சம்கூட மாற்றமில்லாம அண்ணி இருக்காங்க.வயசான பிறகு வர்ற நோய்நொடிகள் அப்பப்பத் தலை காட்டுனாலும் சுறுசுறுப்பு, கணக்குப் பார்த்துக் குடும்பம்நடத்தறது, மாமியார்க்கு பணிவிடைன்னு ஒண்ணும் குறையில்லாம செஞ்சுக்கிட்டு இருக்காங்க.


நான் பலவிஷயங்களை அவுங்ககிட்டே இருந்து கத்துக்கிட்டேன். நேரம் தவறாமை, கணக்காக் காசு செலவு செய்யறது,முக்கியமா, 5, 10, செண்ட்டுதானேன்னு தேவையில்லாம காசை வீணாக்காம இருக்கறது, சுறுசுறுப்பு, பெரியவங்களுக்கு மரியாதைன்னு நிறைய.


இவ்வளவு அளக்கறனே, என்கிட்டே இருந்து அவுங்க எதாவது கத்துக்கிட்டாங்களான்னு யோசிச்சுப் பார்த்தா.......ஆங்.... அண்ணந்தான் ஒண்ணே ஒண்ணு கத்துக்கிட்டார். அது காஃபி குடிக்கிற பழக்கம். என்கிட்டே... நல்ல பழக்கம்? இனிமேத்தான் தேடிப் பார்க்கணும்.


ரெண்டு வருசத்துக்கு முன்னாலெ அண்ணனும், அண்ணியும் இங்கே நம்ம ஊருக்கு வந்து நம்மோட ஒரு வாரம் தங்கிட்டுப் போனாங்க.நானும் தேடித்துருவிப் பார்க்கறேன், எதாவது மாற்றம் இருக்கான்னு..... ஊஹூம்.... தலை மட்டும் நரைச்சிருக்கு.அவ்வளவுதான். வந்த இடத்துலெயும் அக்கடான்னு இருக்காம, பரபரன்னு சப்பாத்தியை செஞ்சு அடுக்கறாங்க.


அண்ணி ஒரு நிறைகுடம். என்னைக்கும் தளும்பாது
.------------

அடுத்தவாரம்: ராஜகோபால்
------------------


நன்றி: தமிழோவியம

22 comments:

said...

நான் நேற்றை இந்தப் பதிவை தமிழோவியத்தில் படித்து விட்டேன்.
அவங்க போல எல்லாக் குடும்பப் பெண்களும் சிக்கனமாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

"ஐந்து விரலும் ஒன்று போலவா இருக்கிறது", இல்லேயே!! :))

said...

துளசிக்கா,
எனக்குக் கூட இந்த மாதிரி ஒரு சாந்தா மன்னி இருந்தாங்க.. நினைவுப் படுத்திட்டீங்க..

என்ன எங்க மன்னி முப்பது வயசுலயே வீட்டுக்கு அதிகமா உழைச்சு தன்னைக் கவனிச்சிக்காம, சீக்கிரமே போய்ச்சேர்ந்துட்டாங்க!! :( ..

பானு அண்ணி ரொம்ப நாள் நல்லா இருக்கணும்..

said...

"ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும்
பின்னால் ஒரு பெண் இருப்பாள்"

அண்ணியும் அப்படிப்பட்ட ஒரு பெண்

said...

அட, எனக்கும் பானு அக்காவைத் தெரியுமே!

said...

அண்ணியை த.ஓவியத்திலேயே படிச்சுட்டேன்.
ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.
எங்க வீட்டிலேயும் ஒரு ஜய மன்னி இருக்காங்க. பொறுமையின் அவதாரம். அதுவும் மாமியார் இறந்த பிறகு வீட்டையும் மைத்துனரகளையும் ஒண்ணா சேத்து திதி செய்ய வைத்து, விட்டுக்காரர்,பிள்ளை, பெண்கள்,பேத்தி பேரன் எல்லாரையும் கவனிப்பவர். அசராத உழைப்பு. அவங்களைப் பத்தி நீங்க எழுத வச்சிட்டிங்க. நன்றி துளசி.

said...

வாங்க மகேஸ்.

பெண்கள் மட்டுமில்லைங்க, ஆண்களும் சிக்கனமா இருந்தாத்தானே நல்லது.
இல்லேன்னா ஒரு கை மட்டும் சேர்க்க, இன்னொரு கை வாரி இறைச்சாப்புலே ஆயிருமுல்லே?

said...

பொன்ஸ்,

உங்க சாந்தி அண்ணியை நினைச்சா பாவமா இருக்குங்க. 30 வயசுதான்னு சொல்றிங்க.
சாவற வயசா அது? அடடடா..... (-:

said...

சிஜி,

அப்படியே உங்க பழமொழியை உல்ட்டாவாவும் சொல்லலாம். இப்ப என் வெற்றிக்கு(????)
பின்னாலே கோபால் இருக்கற மாதிரி:-))))))

said...

அடப்பார்ரா இந்த பதிலை!
இதும்பேர்தாம்
கிடுக்கிலே கடுக்கன் கழட்றது இன்றது

said...

அம்மா,
ஏதோ ஒரு நல்ல விசுபடம் பார்த்த ஒரு திருப்தி.

பல குடும்ப பெண்கள் இப்படி இருப்பதால் தான் உலகமே விழாமல் சுற்றுவதாக அப்பா சொல்லி பலமுறை கேட்டுள்ளேன்.

வள்ளுவரும் அதே தானே சொல்லீருக்கார், பெய்யன பெய்யும் மழை (பிரதீப்போட பதிவு அல்ல).

இப்பவெல்லாம் சினிமா பார்க்கனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு, இன்னும் கொஞ்சநாள்ல்ல தமிழ் நாட்டுக்கு போகப்போறேன், நிரந்தரமா(?)பார்ப்போம்.

//நம்ம வீட்டுலே 'கரடியாக் கத்துனாலும் காதுலெ விழாது'.//

இருந்தாலும் இப்படியா அவுங்கள போட்டுகுடுக்குறது?

//ரெண்டு வருசத்துக்கு முன்னாலெ அண்ணனும், அண்ணியும் இங்கே நம்ம ஊருக்கு வந்து நம்மோட ஒரு வாரம் தங்கிட்டுப் போனாங்க.நானும் தேடித்துருவிப் பார்க்கறேன், எதாவது மாற்றம் இருக்கான்னு..... ஊஹூம்.... தலை மட்டும் நரைச்சிருக்கு.அவ்வளவுதான். வந்த இடத்துலெயும் அக்கடான்னு இருக்காம, பரபரன்னு சப்பாத்தியை செஞ்சு அடுக்கறாங்க.//

எல்லாம் உடன் பிறந்தவை அழியாது.

said...

சிவமுருகன்,

வாங்க. நலமா?

தமிழ் சினிமாவோட ட்ரெண்ட் மாறிக்கிட்டு இருக்கு. நீங்க இனிமேல் பலநல்ல படங்களைப் பார்க்கும்
வாய்ப்பும் வரலாம்.

எப்ப தமிழ்நாட்டுக்கு மாறப்போறிங்க?

அப்புறம் அந்த //கரடிக் கத்தல்// சுருக்கமாப் பல வீடுகளில் இருக்குன்னு பரவலான ஒரு நம்பிக்கைதான்:-))))))

ஆமா, கரடி கத்துமா?

said...

கொத்ஸ்,
அட, நம்ம பக்கத்து வீட்டு பானு அக்காவைத்தானே சொல்றிங்க?
பின்னே எப்படி தெரியாம இருக்குமாம்?:-))))))

said...

சிஜி,

நன்றி :-)))))))

said...

மானு,

உங்க ஜயா மன்னியைப் பத்தி எழுதுங்களேன். இப்படிப்பட்டவங்களைப் படிச்சாலாவது,
பொறுமை எனக்கு வருதான்னு பார்க்கலாம்.

குடும்பம் சிதறிடாமல் இருக்க இப்படி வீட்டுவீட்டுக்கு ஒருத்தரைக் கடவுள் அனுப்பிடறார் போல இருக்கு.

said...

எல்லாம் ஒரு சிஸ்டமேடிக்கா செய்யணும். அனாவசியமா எதையும் வேஸ்ட் செய்யக்கூடாதுன்றதுதான் முக்கியமாக் கவனிப்பாங்க. //

ஆமாங்க. எங்க வீட்டம்மா இவ்வளவு வருசத்துக்கப்புறமும் இந்த பக்குவம் வரலை. ஆனா என் மூத்த பொண்ணு சமைச்சா இப்படித்தான் செய்வா. நாம எல்லாரும் சாப்ட்டு முடிச்சதும் ஏறக்குறையை எல்லா பாத்திரமுமே காலியாயிரும். அப்படி எப்படித்தான் அளவெடுப்பாளோன்னு நினைப்பேன்.

என் மருமகனும் சொல்வாரு. எங்கம்மா சமைச்சா ரெண்டுநாளைக்கு மிச்சம் இருக்கும். இவ செஞ்சா சில சமயத்துல வயத்துக்கே பத்தமாட்டேங்குதுன்னு..

அதாவது எதுவுமே கொஞ்சமா இருந்தா பசியடங்காதாம். நிறைய இருந்தா பசியே எடுக்காதாம்..

சரிதானே..

said...

டிபிஆர்ஜோ,

நம்ம வீட்டுலேயும்

இப்படி ஒருத்தர் இருந்தாங்க.
நான் இந்த லிஸ்ட்டுலே 'அடங்க மாட்டேன்'

சொல்லிக்கற சமாதானம் என்னன்னா...? அப்ப ஃபிரிட்ஜ் இல்லை அவுங்ககிட்டே:-)))

said...

துளசி, ஜோ சார் சொல்றதும்
உண்மை.
எங்க மருமகள் இருவருமே சுத்தமா அழகா சமைப்பாங்க.
என் கை (ஓவர்) தாராளம். இன்னும் எல்லாரும் வீட்டிலே இருக்கிற மாதிரி சமைப்பேன். மீதி இருந்துகிட்டே இருக்கும். மினிஅம்மா இருப்பதால் நஷ்டம் கிடையாது. பானு அண்ணிகிட்டே வகுப்பு எடுக்க சொல்லணும்னு தோணுது.

said...

மானு,

நானே 'தூபுர தண்டி'

என்கிட்டே சொல்லுங்க:-))))

said...

அது என்னங்க தூபுர தண்டி? கொஞ்சம் விளக்க முடியுமா, நன்றி.

said...

அது என்னங்க தூபுர தண்டி? விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி.

said...

வாங்க ஸ்டெட்ஸன்.

மூணுவருசத்துக்கு முந்தின பதிவு இது. உயிர்த்தெழுந்துருக்கு !

தூபுரதண்டி= கணக்கில்லாமச் செலவு செய்பவள்.

முக்கியமாச் சமையலில்.... வேண்டிய அளவைவிடக் கூடுதலா வாரிப்போட்டு (உப்பை இல்லைங்க) சமைக்கும் குணம்.

எடுத்துக் காட்டு: ஒரு பத்து முந்திரிப்பருப்பு தேவைன்னா....ஒரு கைப்பிடி நிறைய அள்ளிப்போடுதல்.

said...

துளசி, தற்செயலாகப் பார்த்தது இந்த 3 வருஷத்திய பதிவு, உடன் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி. இந்தச் சொல்லுக்கு இப்படியும் ஒரு பொருள் உள்ளதென்று இப்போது புரிந்து கொண்டேன். ஆனால் இது தெலுங்கா சமஸ்கிருதமா? என்ன பாஷை இது? இந்த வார்த்தைக்கு வெறு ஒரு அர்த்தமும் உண்டு என்று தங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனால் அதை இங்கே எடுத்துச் சொல்ல முடியாது. மீண்டும் உடன் மறுபடி கொடுத்ததற்குத் தங்களுக்கு நன்றி.