Saturday, July 15, 2006

எவ்ரிடே மனிதர்கள் 9 -தாமஸ்

புது இடமா இருக்கறதாலே தூக்கம் சரியா வரலை. புரண்டு படுக்கறப்ப எங்கியோ யாரோ பாடற சத்தம்.


கண்ணை அகலமாத் திறந்து பார்க்கறேன். மசமசன்னு லேசா வெளிச்சம்.இருள் இன்னும் சரியா பிரியலை.எழுந்து வந்து ஜன்னல் பக்கம் நின்னேன். கீழே வீட்டோட திறந்த முற்றம் தெரியுது.


தலைப்பாவோட ஒரு உருவம், பாத்திரங்களையெல்லாம் 'பரட்பரட்'டுன்னு தேய்க்குது. அப்பப்ப பாட்டுவேற.ஓஹோ.... அப்ப பாட்டுச்சத்தம் இங்கே இருந்துதான் வருதா?


இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கறேன். ரெண்டு வாளி நிறையத் தண்ணீர் வச்சுக்கிட்டுத் தேய்ச்ச பாத்திரங்களை அழகாக் கழுவிக்கிட்டே ' எல்லாம் ஏசுவே, எனெக்கெல்லாம் ஏசுவே'ன்னு விட்டு விட்டுப் பாட்டு வருது.
எல்லாப் பாத்திரங்களையும் ஒரு வாளிக்குள்ளெ அடுக்கி எடுத்துக்கிட்டு உக்கார்ந்த இடத்துலே இருந்து எழுந்தப்பத்தான் கவனிச்சேன், மடிச்சுக் கட்டி இருந்த வேட்டியை.


உள்ளே போனவர், கையில் ஒரு துணி மூட்டையும், இன்னொரு வாளியுமா வர்றார். திரும்ப அதே பாட்டு. கை மட்டும் விறுவிறுன்னு துணிகளை அலசிப்பிழியுது. இடைக்கிடையில் கைப்பம்பில் தண்ணீர் அடிச்சுக்கறார்.
அதுக்கப்புறம், குடங்களை வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வந்து தண்ணீர் அடிச்சு நிறைக்கறதுக்கும், பளீர்ன்னு பொழுது விடியவும் சரியா இருக்கு.


கீழே இறங்கிவந்தால், சித்தி அடுக்களையில் காஃபிக்குப் பால் காய்ச்சிக்கிட்டு இருக்காங்க. 'அந்த ஆள்' யாருன்னு விசாரிச்சேன்.


குடித்தனக்காரராம். பேர் தாமஸ். வந்து ஏழெட்டு மாசமாகுதாம். தெக்கே (திருநெல்வேலியோ, தூத்துக்குடியோ எங்கேன்னு சரியாத்தெரியலையாம்) இருந்து வந்துருக்காங்களாம். ஒரு குழந்தை இருக்காம். கவர்மெண்ட் உத்தியோகம்தானாம்.


'அதென்ன சித்தி இவ்வளோ காலையிலே குழாயடியிலே உருட்டிக்கிட்டு இருக்காரு'ன்னு கேட்டேன். 'ஐய்யோ அதையேன் கேக்கறே? குடித்தனம் வந்த மறுநாளிலிருந்து இதே கதைதான். நாலு நாலரைக்கெல்லாம் எழுந்துக்கறார். மொதல்லே நானும் சொல்லிப் பார்த்தேன். இப்போ அட்லீஸ்ட் சத்தம்கித்தம் அதிகமாப் போடாமத்தான் வேலை செய்றார். எங்களுக்கும் பழகிப் போச்சு'ன்னாங்க.


சித்தி வீடு கொஞ்சம் பழைய காலத்து வீடு. வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். பெரிய ஒத்தைக் கதவு.உள்ளே நுழைஞ்சவுடன் ஆளோடி. அங்கே தரையிலேயே இடது பக்கமா ஒரு குழி இருக்கும். அது அந்தக் காலத்துலே நெல் குத்தவாம்.அதும் பக்கத்துலே ஒரு பெரிய உரல் நிக்கும். நானும் நினைப்பேன், நடந்து வரும்போது நம்ம காலு 'மளுக்'னு அந்தக் குழியிலே போகப்போகுதுன்னு. ஆனா இதுவரைக்கும் அப்படி நடந்ததெ இல்லையாம்! அப்புறம் கதவு இல்லாத வாசல்.அதுலே இறங்குனா இடது பக்கம் ஒரு முற்றம். வலது பக்கம் ஒரு ஹால் . முற்றத்தைச் சுத்தி உள் வெராந்தா. நாலு மூலையிலும் அறைகள். இதுலே முன்பக்க அறைகளில் இருக்கும் ஜன்னல், திண்ணையைப் பார்த்த மாதிரி இருக்கும். பின்கட்டில் 2 குளியலறை இன்னும் மத்ததுகள் இருந்துச்சு.


இடதுபக்கம் இருந்த அறைகள் ரெண்டையும் வாடகைக்கு விட்டிருந்தாங்க சித்தி. நான் விவரமெல்லாம் சேகரிச்சுக்கிட்டே காஃபியைக் குடிக்க ஆரம்பிச்சிருந்தேன். அப்ப நம்ம தாமஸ் ஒரு வாளி நிறைய ஆவி பறக்கும் தண்ணீரோடு பின்னாலே இருக்கும் பாத்ரூமுக்குப் போனார். அதை அங்கே வச்சுட்டுத் திரும்ப வந்தவுடன் அவுங்க போர்ஷனிலே இருந்து ஒருபெண் மாத்து உடைகளைக் கையில் எடுத்துக்கிட்டுப் போய் குளிச்சுட்டு வந்தாங்க.


தாமஸ் வீட்டு அடுக்களை ( தட்டி அடிச்சு மறைச்சுருந்த வெராந்தாதான்)யிலே இருந்து பாத்திரங்கள் உருட்டுற சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அடுத்ததா பக்கெட் சுடுதண்ணியிலே ,இவரே முற்றத்தில் வச்சுக் குழந்தையைக் குளிப்பாட்டுனார். இப்படி பரபரன்னு இவரே ஓடியாடிக்கிட்டு இருந்தார்.


சித்தி வீட்டு ஹாலில் சுவர்க்கடிகாரம் 'டாண்'னு ஒம்போது மணி அடிக்கும்போது வெள்ளையும் சள்ளையுமா டிப்டாப்பாஉடுத்திக்கிட்டு, கையில் ஒரு சின்னப் பையில் டிஃபன் பாக்ஸோடு மனைவி, குழந்தை பின் தொடர வெளியே வந்தார்.குழந்தைக்கு 'டாடா' காமிச்சுட்டுப் படி இறங்கினார்.


அந்தம்மா உள்ளே வந்துட்டாங்க. வாசல் திண்ணையிலே உக்கார்ந்திருந்த என்னப் பார்த்து சிநேகமா ஒரு சிரிப்பு. அது போதாதா?


அப்புறம் அவுங்க கிட்டே பேசலாமுன்னா அவுங்க போர்ஷன் கதவுதான் சாத்தி இருக்கே. மத்தியானம் மறுபடித் திண்ணையிலே உக்கார்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்ப அவுங்க ஜன்னல் திறந்து இருந்துச்சு.அதுலே இருந்து ரெண்டு பிஞ்சுக் கைகள் வெளியே நீட்டி இருக்கு. ஹை... பாப்பா. இந்தத் திண்ணையிலே இருந்துஅந்தத் திண்ணைக்கு நான் ஒரே தாவு. குழந்தை ஜன்னல் கம்பியைப் புடிச்சுக்கிட்டு நிக்குது. அம்மா, விளையாட்டு(??)காமிக்கிறாங்க.


என்னப் பத்திக் கேட்டாங்க. இப்படி ஒரு வாரம் சித்தி வீட்டுக்கு விஸிட் வந்துருக்கற கதையை எடுத்து விட்டேன்.சின்னதா சிநேகம் ஆச்சு. நம்ம தாமஸ் இருக்கார் பாருங்க. அவருக்கு அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்களாம்.அதுலே இருந்து அவரும் அவரோட அப்பாவும்தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்வாங்களாம். அதுக்கப்புறம் இவர் படிச்சு, வேலை கிடைச்சு வந்தபிறகும் கூட இவரே சமையல் செஞ்சு சாப்புட்டுக்கிட்டு இருந்தாராம்.



கல்யாணம் ஆகி ரெண்டரை வருசம்தான் ஆகுதாம். கல்யாணத்துக்கப்புறமும் இவர்தான் எல்லா வேலையும் செய்யறாராம். இந்தம்மாவை ஒரு வேலையும் செய்ய விடுறதில்லையாம். சமையல் மொதக்கொண்டு எல்லாம் இவரே.இந்தக்காவும்(அக்கா? இப்ப சிநேகிதியாச்சே!) எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்களாம். ஆனா தன் சமையல்தான் தனக்குப் பிடிக்குதுன்னு சொல்லிட்டாராம். எல்லாவேலையும் தன் கையாலேதான் செய்யணுமாம்.


கல்யாணம் ஆன புதுசுலே ஒண்ணும் செய்யாமச் சும்மா உக்கார்ந்து இருக்கறது இந்தக்காவுக்குப் பைத்தியம் பிடிக்கறமாதிரி இருக்குமாம்.


இப்ப?


அதான் குழந்தை இருக்கே. அதுகூட விளையாடிக்கிட்டு, அதுக்குப் பால், சோறுன்னு ஊட்டிக்கிட்டு நேரம் போயிருதாம்.


சாயங்காலம், இவர் ஆஃபீஸுலே இருந்து திரும்பவந்தவுடன் ராத்திரி சமையல் அது இதுன்னு வீட்டுவேலைகளை எல்லாம் நறுவிசாச் செஞ்சுருவாராம்.


இவரை எப்படி மாத்தறதுன்னே தெரியலைன்னு சொல்லி கண் கலங்குனாங்க. இதுவரை யார் கிட்டேயும் இதைப் பத்திப் பேசுனதே இல்லையாம். 'ரொம்ப நாளா மனசுலே வச்சு மறுகுனதை இப்படிப் பட்டுன்னு உங்கிட்டே சொல்லிட்டேனே'ன்னு சொல்லி அழுதாங்க. நானும் இன்னும் ரெண்டு நாளுலே அங்கிருந்து கிளம்பறவ தானே?


வேலை ஒண்ணும் செய்யாம 'ஜாலி'யா இருக்கறதுக்குப் போய் இந்தக்கா ஏன் இப்படிச் சடைச்சுக்குதுன்னு அப்ப எனக்குப் புரியலை.

இப்ப நினைச்சுப் பார்த்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான கவலைகள்!


ஆனா, 'எல்லாம் ஏசுவே' பாட்டை எப்பக் கேட்டாலும், எல்.ஆர். ஈஸ்வரி ஞாபகம் வருதோ இல்லையோ,நம்ம தாமஸ் ஞாபகம் உடனே வந்துரும்.


அடுத்தவாரம்: ரெட்டி
-----------


நன்றி: தமிழோவியம்

16 comments:

said...

முதலில் இந்தப் பதிவை தங்கமணி கண்ணில் படாம மறைச்சு வைக்கணும். என்ன டீச்சர் நீங்க இவ்வளவு டேஞ்சரசா எழுதிக்கிட்டு.... :)

said...

என்ன..... தங்கமணி பதிவையெல்லாம் படிக்கிறாங்களா?????

இப்பத்தான் 242 என்னன்னு போய்ப் பார்த்துக்கிட்டு இருந்தேன், இங்கே நீங்க வந்துட்டுப் போய் இருக்கீங்க.

said...

//இப்ப நினைச்சுப் பார்த்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான கவலைகள்!//

மிஸ், நீங்க தாமஸ் சார பேட்டி காணாம ஒரு பக்க கவலைய மட்டும் சொன்னா எப்படி.:-)

ஆனா நானும் சில பேர பார்த்திருக்கிறேன் வேலை செய்யறதுல எவ்வளவு சந்தோஷம் அதுவும் செஞ்ச வேலைய சொல்லிக்காட்டாம இருப்பாங்க பாருங்க அத பாத்தா தான் பொறாமையா இருக்கும், நாம ஒரு வேலை செஞ்சுட்டா அத பத்து தடவ சொல்லலேனா தூக்கமே சரியா வர மாட்டேங்குது.... ஹும்... அதெல்லாம் வரம் இல்லியா மிஸ்!

said...

நன்மனம்,

// நீங்க தாமஸ் சார பேட்டி காணாம ஒரு பக்க கவலைய ....//

இப்படி ப்லொக் எழுதப்போறேன்னு அப்பமட்டும் தெரிஞ்சிருந்தா.......
என்னெல்லாம் செஞ்சிருப்பேன்:-)))))


கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒரு கோர்ஸ் OCD பத்தித் தெரிஞ்சிக்கப்போனப்ப
இவர் ஞாபகம் வந்தது. இதுவும் ஒருவித டிஸ்ஸார்டர்தான்.

said...

//இதுவும் ஒருவித டிஸ்ஸார்டர்தான். //

இதெல்லாம் தொந்தரவு இல்லாத டிஸ்ஸார்டர். இத புரிஞ்சா பல நல்ல விஷயத்துக்கு இத பயன் படுத்தலாம்னு நெனக்கிறேன்.

said...

எல்லாம் ஏசுவே ஜிக்கி பாடினது இல்ல?

அவங்க(பொண்டாட்டி) வேலைக்குப் போறவங்களா இருந்தா பிரச்சினை வந்து இருக்காதுனு நினைக்கிறேன்.
ஆனால் அப்போது வாய்ப்பும் குறைவாக இருந்து இருக்கும். கஷ்டம்தான் இந்த மாதிரிக் கணவனோட குடித்தனம் நடத்தறது.
242? அது என்னது?

said...

நன்மனம்,

நல்வழியிலே பயன்படுத்தலாமா?

எப்படி?

said...

மானு,

ஜிக்கி பாடுனதா? நான் ஈஸ்வரின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேனே.

குழந்தை இருந்ததாலே கொட்டுகொட்டுன்னு உக்காரவேணாம்.
இல்லையா?

242 நாட் அவுட். கொத்தனாரோட ஸ்கோர்:-)))))

said...

இதுக்குத்தான் சமைக்கத் தெரிஞ்ச புருசனக் கட்டக்கூடாதுங்குறது. அதான் இப்பிடி.
;-))))

டீச்சர், மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் என்னுடைய நண்பர்கள் பலர் (மொழி வேறுபாடின்றி) கொஞ்சமாவது சமையல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் மென்பொருளில் வேலை செய்யும் நண்பர்களில் யார் வீட்டிற்குச் சீக்கிரம் போகிறார்களோ அவர்கள் சமைக்கும் வழக்கமும் ஆங்காங்கு காண்கிறேன். ஆனால் அவர்கள் எல்லாருமே தமிழர்கள் அல்லர். அதுதான் உண்மை.

said...

"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையில்"என்பது இதுதானோ?தாமஸால் பிரச்சினை ஏதுமில்லை.
அவரை 'திருத்துறேண்டா பேர்வழி'னு
ஏதேனும் செஞ்சாதான் பிரச்சினை ஆகும்

said...

என்னக்கா ஏக்கப் பெருமூச்சு.... கோபால் சார நினைத்தா??

(சாருக்கு மசால் வடை எல்லாம் செய்யத்தெரியாதா?)

[தமிழ்மணமும், தேன் கூடும் பத்திதிதி................ எரியுுது, செலவில்லாம வடை போட்டு எடுத்துறலாம்:-))))))]

said...

ராகவன்,

நீங்க சொன்னதுபோல, ரெண்டு பேருமாச் சேர்ந்து சமைச்சாலோ, வீட்டு வேலைகளைப்
பகிர்ந்துக்கிட்டாலோ வம்பில்லை. இது வேற மாதிரி. ஒண்ணையும் செய்யவிடாம தானே
எல்லாம் செஞ்சால் மனைவிக்குக் குற்ற உணர்ச்சி வருதுல்லே?

இங்கே நம்ம வீட்டுலேயும் இந்த வேலை நான், இந்த வேலை நீன்னு பாகம் பிரிச்சிருக்கே.
வேலைக்கு உதவ யாரும் இல்லையே. எல்லாம் நாங்களேதானே செய்யணும்.

said...

சிஜி,

அவரை அப்படியேதான் விடணும். வேற வழி? ஒரு நாள் வேலை செய்யாட்டாக்கூடத் துடிச்சுப் போயிடுவார்.

said...

மனசு,
இப்பத்தான் 4 மசால் வடை தின்னுட்டு வந்தேன். தமிழ்ச்சங்க மிட் விண்ட்டர் விழா. பாட் லக் தான். வேற ஒண்ணும் சாப்புடலை. வெறும் ம.வ. 4 மட்டும்:-)))))

தமிழ்மணம் எரியுது, சரி. தேன்கூட்டுக்கு என்னவாம்?

said...

அப்புறம் கதவு இல்லாத வாசல்.அதுலே இறங்குனா இடது பக்கம் ஒரு முற்றம். வலது பக்கம் ஒரு ஹால் . முற்றத்தைச் சுத்தி உள் வெராந்தா. நாலு மூலையிலும் அறைகள். இதுலே முன்பக்க அறைகளில் இருக்கும் ஜன்னல், திண்ணையைப் பார்த்த மாதிரி இருக்கும். பின்கட்டில் 2 குளியலறை //

அடடடடா என் சின்ன வயசு தாத்தா வீடு ஞாபகம் வந்திருச்சிங்க..

எனக்கு இந்த சனிக்கிழமை தொடர்ந்து மீட்டிங்க்ஸ் இருந்ததால பதிவு போட முடியலை..

ஹூம்.. வீட்லருந்துக்கிட்டு ஜாலியா பதிவு மேல பதிவா போடறீங்க..

இந்த ரெண்டு வாரமா எழுத முடியாம வேலை பெண்டு கிழியுது..

இன்னும் 40 மாசம்.. அப்புறம் நம்ம மனசுக்கு பிடிச்சத செய்லாம்:)

said...

டிபிஆர்ஜோ,

இப்ப இந்த மாதிரி வீடுங்க எல்லாம் போயிருச்சுருங்களே. எல்லா இடத்துலேயும் அடுக்குமாடிங்க வந்துருச்சு.

40 மாசம் கழிச்சு என்ன செய்யலாங்கறதுக்குத்தான் திட்டம் போட்டுக்கணும்.