Wednesday, July 19, 2006

நியூஸிலாந்து பகுதி 52

மராய் MARAE


நான் முந்தியே சொன்ன மாதிரி 'மராய்'ங்கறது ஒரு மீட்டிங் ப்ளேஸ். இது மவோரிகளுக்கு மட்டுமில்லாமல் மற்ற இனமக்களும் இவுங்களைச் சந்திக்கறதுக்கு இருக்கற இடமுன்னு வேணா வச்சுக்கலாம்.


இவுங்களோட கலாச்சாரத்தைப் புரிஞ்சுக்கறதுக்கு இப்படி ஒரு இடத்துக்குப் போனா, நமக்கே ஒருதெளிவு பிறக்கும். மவோரிகளும் இதைப் புரிஞ்சுக்கிட்டு, வெளியாட்களை வரவேற்கறதுக்கு ரொம்ப ஆர்வம் காட்டுறாங்க.
எந்த இடத்துக்கும் போறதுக்கு முன்னாலே அங்கெ இருக்கற நிலமை, அங்கே அனுஷ்டிக்க வேண்டிய முறைகள், நியமம் எல்லாம் ஓரளவாவது தெரிஞ்சுக்கிட்டுப் போறதுதான் நல்லது. தேவையில்லாமவர்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம் இல்லையா?


அங்கேபோய் ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லி, நம்மாலேதான் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியாதே(-:எதுக்கு வம்பு?


மவோரிகளைப் பொறுத்தமட்டில் மராய் ஒரு புனிதமான இடம். இங்கே அவுங்களோட முன்னோர்கள் இன்னும் அரூபமாக இருப்பதா நம்புறாங்க. இங்கேதான் அவுங்களுக்கு ஏகப்பட்ட நிம்மதியும், சொந்த வீட்டுலே இருக்கற நினைப்பும் வருதுன்னு பல மவோரிகள் சொல்றாங்க. என்னதான் வெளி நாட்டுலே இருந்தாலும், ஊருக்கு வரும்போது இந்திய மண்ணைத் தொட்டதும் நம்மை அறியாமலேயே மனசுக்குள்ளே ஒரு பெருமிதம் நமக்கு வருது பாருங்க அதே உணர்வு.


என்ன விசேஷமா இருந்தாலும் சரி, பிறந்த நாள், கல்யாணம், ச்சும்மா பழைய சொந்தங்களையெல்லாம் கூட்டிவச்சுப்பேசறதுன்னு எதுக்கெடுத்தாலும் இந்த இடம் அவுங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை, தன்னுணர்வைத் தருமாம்.அவுங்க தெய்வங்களைக் கும்பிடறதுக்கு, அவுங்க இனத்துலெ இறந்தவங்க உடலை வச்சு துக்கம் அனுஷ்டிக்க,இல்லேன்னா செத்துப்போன சொந்தங்களை நினைச்சு அழன்னு எதுக்கும் இவுங்களுக்கு இருக்கற இடம்தான் இது.


இங்கே போய் ஒரு நாள் தங்கி வரலாமுன்னு முடிவு பண்ணி அங்கே போனோமுன்னு வையுங்க. என்னென்ன நடக்கும்?


முதலில் ஒரு குழு நம்மை அங்கே வரவேற்பாங்க. குழுன்னு சொன்னதும் மராய்க்கு ஒரு தலைவர் இருப்பாருன்னு நினைப்போம். அதுதான் இல்லை. ஏன்னா இது அவுங்க இடம். எல்லாருக்குமே இதுலே பங்கு. தலைமையா இருந்து அதிகாரம் செஞ்சுக்கிட்டு இருக்காம எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யறதுலே எல்லாருக்கும் பங்கு.


நீங்க அங்கே இருக்கும்போது இன்னொரு விஸிட்டர் வந்தாங்கன்னா, நீங்களும் வரவேற்புக் குழுவிலே இருப்பீங்க.


குழந்தைகள் ஒரே ஒரு இடத்தை விட்டுட்டு எல்லா இடங்களிலும் போய் விளையடலாம், பார்க்கலாம். அந்த ஒரு இடம் என்னன்னா விஸிட்டர்களை வரவேற்கும் முற்றம். இந்த மராயில் அந்த சமயத்தில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் ஒருஅப்பா அம்மா ஸ்தானத்துலெ இருந்து எல்லாப் பிள்ளைகளையும் கவனிக்கணும்.


பதின்மவயதுப் பிள்ளைகள் பெரியவங்களுக்கு உதவியா இருக்கணும். சப்பாடு பரிமாற, சாப்பாட்டு மேசையை ஒழுங்குபடுத்த, பாத்திரங்களைச் சுத்தம் செய்ய, வேண்டிவந்தால் சமையலில் உதவின்னு எல்லாம் செய்யத் தயாரா இருக்கணும்.


பெரியவர்கள் அடுக்களைப் பொறுப்பு. முக்கியமா தீ அடுப்பில் வேலை, ஹாங்கி தயாரிப்பு. பொதுவா மத்த சுத்தபத்தம்,ஒழுங்கு எல்லாம் கவனிக்கணும்.


இவுங்க இல்லாம வயசான பெரியவங்களும் இருப்பாங்க.( நம்ம தாத்தா பாட்டிங்க போல) இவுங்களுக்கு பழையகதைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் அத்துப்படி. விருந்தினர்களை வரவேற்கறதுலே முன்னாலே நிக்கறவங்க இவுங்கதான்.


நாம் போய் முற்றத்துலே நிக்கிறோம். அவுங்க எதிரில் நிக்கிறாங்க. முதலில் நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கணும்.கை குலுக்கலோ, இல்லை லேசான அணைப்போ ( கட்டிப்புடி வைத்தியம்?) இல்லேன்னா மவோரிகள் முறைப்படிமூக்கோட மூக்கு உரசலோ நடக்கும். நாம் கொண்டு போகும் அன்பளிப்பைக் கொடுக்கணும். இப்பெல்லாம் இது காசு பணமாவே இருக்கு. நாமும் ஒரு குழுவாப் போனோமுன்னா எல்லாருடைய காசையும் சேர்த்து ஒரே சமயத்துலே கொடுக்கணும்.


உள்ளே நுழையும் போது பேச்சு கூடாது. அமைதி. சில மராய்களில் ஆண்களும், சில இடங்களில் பெண்களும் முதலில் காலடி வச்சு உள்ளே போகணும். இது ஒவ்வொரு மராய்களிலும் ஒவ்வொரு மாதிரி. ஆணா, பெண்ணான்னு அவுங்களெ சொல்லுவாங்க.தாத்தாவோ இல்லை பாட்டியோ நம்மளைக் கூட்டிக்கிட்டு உள்ளே போவாங்க.


உள்ளெ போனவுடன், டெ கரங்கா (Te Karanga - The call of Welcome), இதுலே பங்கெடுக்கறவங்க எல்லாருமே பெண்கள்தான். "ஹாரே மாய் ஹாரே மாய் ஹாரே மாய்" . நம்ம கூட வர்ற பாட்டியோ தாத்தாவோ இப்ப இதுக்கு இசப்பாட்டா பதில் சொல்லிருவாங்க.


இப்ப டெ பொஃபிரி( Te Powhiri). இதுவும் வரவேற்புதான். இதுலே அங்கே இருக்கற சகல ஜனங்களும் பங்கெடுப்பாங்க.இதெல்லாம் சாதாரண சமயங்களில் நடக்கும். ஆனால் இதே மரணம் சம்பந்தப்பட்டச் சடங்கு, இறந்தவர்கள் உடல்பார்வைக்கு வச்சுச் செய்யற சடங்கா இருந்தா எல்லார் கையிலேயும் மரத்தின் ஒரு சின்னக்கிளை இருக்கும். இந்தச் செடிகள் துக்கத்தை அறிவிக்கும் அடையாளம்.


பொதுவா மராய்க்குள்ளே வந்துட்டோமுன்னா, முன்னோர்களை நினைச்சு மெளனமா கொஞ்ச நேரம் நிக்கணும்.அதுக்கப்புறம் எல்லாரையும் உக்காரச் சொல்வாங்க. இங்கேயும் வயசுக்குத்தான் முதல் மரியாதை. சின்னவயசு ஆட்கள் தரையில்தான் உக்காரணும்.


சிறப்புப் பேச்சாளர்களா இருக்கறவங்க ச்சின்னதா ஒரு சொற்பொழிவு நடத்துனதுக்கு அப்புறம் விஸிட்டர்கள் சார்புலே ஒருத்தர் நன்றி சொல்லி ஒரு பேச்சுன்னு நடக்கும். கடைசியாப் பேசுனவங்க, நாம் கொடுத்த அன்பளிப்பைத் தரையிலே வைப்பாங்க. மராய் சார்பில் மற்றொருத்தர் அதை அங்கீகரிச்சு எடுத்து வைப்பாங்க, கூடவே ஒரு நன்றி சொல்லும் சிற்றுரை.

ஆச்சு. மறுபடி கை குலுக்கல், மூக்கு உரசுதல் எல்லாம் மீண்டும் ஒருக்கா. இப்ப நாமும் நம்மோட மவோரி மொழி அறிவை எடுத்து விடலாம். இதுக்குள்ளே நாமும் ரெண்டு வார்த்தைகள் படிச்சிருப்போமே.டெனா கோஇ, கிஆ ஓரா ( Tena Koe, Kia Ora)


உள்ளெ அழகான பெரிய ஹால்.மரச்சிற்ப வேலைகள் பிரமாதமாக இருக்கும். சரிவான கூரைகளிலே அழகழகான பாய்கள். பின்னல் வேலைகள் . நடுவிலே இருக்கும் பெரிய தூண் சிற்பவேலையால் ஜொலிக்கும். இது மேற்கூரையைத் தாங்கிப் பிடிச்சிருக்கும். இவுங்களுக்கு வானமே பிதா, பூமியே மாதா என்றதால் ரெண்டையும் இணைக்கும் பாலம்தான் இந்தப் பெரிய தூண்( Pou Tokomanawa)


சாப்பாட்டு ஹாலிலும் உணவு பறிமாறுனதும், மராய் குழுவில் ஒரு மூத்தவர் கடவுளுக்கு நன்றி சொல்வார்.அப்புறம் சாப்பிடலாம். ஆனால் மறந்து போயும் அடுக்களையிலோ, வேற எங்கெயோ, மேஜை மேலே மட்டும்உக்காந்திராதீங்க. இது ரொம்பவும் மரியாதை கெட்ட செயலாக்கும். உணவு வைக்கிற மேசைக்குத் தனி மரியாதை கொடுக்கணும்.


சாப்பாடு ஆச்சுன்னா கொஞ்சநேரம் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்துட்டுப் படுக்கப் போகணும் இல்லையா? அங்கேயும் சில நியமங்கள் இருக்கு. இந்த ஹாலுக்குப் பேர் டெ ஃபாரெ மொஇ. விசிட்டர்களும், மராய் ஆட்களும் தனித்தனிப் பகுதி.நடுவிலே இருக்கும் கதவுக்கு வலது பக்கம் நாமளும், இடது பக்கம் மராய் ஆட்களும். ரெண்டு பகுதியிலும் கதவுக்குப் பக்கம் இருக்கற படுக்கைகள் முதியவர்களுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும்.


வரிசையாப் படுக்கைகள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தலையணை. நம் பைகள், குளிர்கோட் எல்லாம் படுக்கையின் கால் பக்கத்தில்வைக்கணும்.
முக்கியமாக் கவனிக்க வேண்டியது. படுக்கைமேலே ஏறி யாரும் குதிச்சு விளையாடக் கூடாது.படுத்திருக்கறவங்களை தாண்டித்தாண்டிப் போகக்கூடாது. அடுத்தவங்களுக்கு இடம் விடாம கையைக் காலைப் பரப்பிக்கிட்டு எல்லா இடத்தையும் புடிச்சுக்கக்கூடாது.தலைகாணிமேலே உக்காரக்கூடாது. தலை வைக்கும் இடம் பவித்திரம். அப்படி உக்கார்ந்தா அது ஒரு கெட்ட பழக்கம்.தலையணை தலைக்கு மட்டும்.( இது என்னங்க, இப்படியெல்லாம் எங்க பாட்டி சொல்லிக்கேட்டுருக்கேனே! ஹால்லேவரிசையாப் போட்டுருக்கற படுக்கைகள் மீது நடக்கக்கூடாது.அந்தப் படுக்கையிலே படுக்கறவங்களுக்கு உடம்பெல்லாம் வலிக்கும். அதே போல நோ தலைகாணி ஃபைட்)


குறட்டை விடும் பழக்கம் இருந்தா? என்ன செய்யலாம்? அடடடா.... கவலையே படாதீங்க. தாராளமா நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கலாம்.


காலையில் எழுந்ததும் முதல் வேலையா படுக்கைகளை ஒழுங்கா சரிப்படுத்திப் போர்வையெல்லாம் நீட்டா மடிச்சு வைக்கணும்.அன்னிக்குக் கிளம்பறீங்கன்னா, பைகளையெல்லாம் ஏறக்கட்டணும்.


சில மாராய்களில் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனைகள் நடக்கும். கிளம்பறதுக்கு முன்னாலேயும் எல்லாரும் கூடிஇருந்து உங்களுக்கு ஆசீர்வாதம் செஞ்சு வழி அனுப்புவாங்க. வரவேற்புக்கு இருக்கற முக்கியம் வழி அனுப்புறதுக்கும் இருக்கும்.


இதெல்லாம் சாதாரண விஸிட்டுக்கு. இதுவே வேற ஒரு துக்ககரமான சமயமுன்னா?


இதுக்குப் பேர் ட்டாங்கி ( Tangi)


இந்த ட்டாங்கின்னு சொல்றது Tangihanga வோட சுருக்கம்.


ஒருவர் இறந்துட்டார்ன்னா, அவரோட உடலைப் புதைக்கறதுக்கு முன்னாலே செய்யறது. பொதுவா வெள்ளைக்கார நாடுகளிலே இறந்துபோனவுங்க உடலை அடக்கம் செய்யறவரைக்கும் 'அண்டர்டேக்கர்'னு சொல்ற 'ப்யூனரல் டைரக்ட்டர்'கள்உடலைக் காபந்து செஞ்சு வைச்சிருப்பாங்க. மவோரிகள் பழக்கத்துலே இப்படி உடலைத் தனியா விட்டு வைக்கிற பழக்கம் இல்லை.
அதனாலே இவுங்க, உடலை மராய்க்குக் கொண்டுவந்து வைப்பாங்க. அடக்கம் நடக்கும்வரைக்கும் அங்கே குடும்பத்தினரும் நண்பர்களும் இறந்தவர்களோடு இருப்பாங்க. இறந்தவர்கள் உடலை, டுபபாகு ( Tupapaku)ன்னு சொல்றாங்க.சவப்பெட்டியைத் திறந்து வச்சு, உடலைத் தொட்டு அழும் வழக்கம் உண்டு. இப்படிச் செய்யறதாலே இவுங்களொடதுக்கத்தை ஆத்திக்கமுடியுதாம். தொலைதூரத்துலே வசித்தாலும், சாவு சமாச்சாரம் கேட்டா உடனே கிளம்பி வந்துருவாங்க.சவ அடக்கம் முடியும்வரை மூணு நாலுநாள் கூடவே இருக்கறதும் உண்டு.


வந்தவங்க, சொந்தக்காரங்க, இன்னும் நெருங்கிய சொந்தம் எல்லாமே டெ பொஃபிரியிலே பங்கெடுப்பாங்க. ஸ்பீச் கொடுக்கும்போது, இறந்த உடலைப் பார்த்து அவுங்ககிட்டே நேரில் பேசறதும் உண்டு. சவ அடக்கம் ஆறதுவரை உயிர் அங்கேயே உடலுக்குப் பக்கத்துலேயே இருக்குமாம்.( நாம்கூட இதை நம்பறோம் இல்லையா?)


சில ஊர்களில் மாராய்களுக்குப் பக்கத்துலேயே இடுகாடு இருக்கும். இதுக்கு உருபா( Urupa) ன்னு சொல்றாங்க.அங்கே போய் சவ அடக்கம் ஆனதும் அங்கேயே கேட்டுக்கு வெளியே பாத்திரத்துலே நிரப்பி வச்சிருக்கும் தண்ணியிலே கை கழுவிக்கணும். இடுகாடுன்றது ரொம்ப புனிதமான இடம். நம்ம ஊர்லேயும் சவ அடக்கம் முடிஞ்சதும் திரும்பி வர்ற வழியிலே ஆத்தங்கரையிலே முழுக்குப் போட்டுட்டு வர்றது ஒரு வழக்கமா இருக்குல்லையா?


நிறைய விஷயங்களிலே கவனிச்சுப்பார்த்தா, நம்ம இந்தியப் பழக்கங்களுக்கும், மவோரிகள் பழக்கங்களுக்கும்லேசுபாசா ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யுது.

15 comments:

said...

மறுபடியும் வரலாறா?

said...

தட்டுத் தடுமாறி வந்துட்டேன் ட்டீச்சர்
மவோரி & இந்திய பழக்கவழக்கங்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை
நன்றாக உணரும் வகையில் விளக்கி உள்ளீர்கள்

said...

ஹயோ ஹயோ
பூனை கண்ணை மூடிக்கொண்டால்
பூலோகம் இருண்டு போய் விடுமா?
ப்ளோக்கிற்கு தடை என்றால்
மாற்றுவழி இல்லை என்று சிலர்
பதிவைப் போட்டுவிட்டு பின்னூட்டங்களைக்கூட பார்க்காமல் தூங்கி விடுவது என்ன நியாயம்

said...

எந்த இடத்துக்கும் போறதுக்கு முன்னாலே அங்கெ இருக்கற நிலமை, அங்கே அனுஷ்டிக்க வேண்டிய முறைகள், நியமம் எல்லாம் ஓரளவாவது தெரிஞ்சுக்கிட்டுப் போறதுதான் நல்லது. தேவையில்லாமவர்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம் இல்லையா?//

ஆமாங்க துளசி..

இப்படி எல்லாருமே நடந்துக்கிட்டா எவ்வளவு நல்லாருக்கும்..

சண்டைய் ஏது சச்சரவு ஏது?

said...

ஓ,ஈ அப்படின்னு எல்லாம் பேரே தவிர விஷயமெல்லாம் நம்மூரு மேட்டர்தான்.

said...

மனசு,

'ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்' ன்னு இருக்கேங்க. அதான்...:-))))

said...

சிஜி,

ப்ளொக் பார்க்கமுடியாமத் தவிக்கற மக்கள்ஸ், 'பின்னூட்டம் வேற போடப் போறாங்களா?'ன்ற
மெத்தனம்தான். அதுலேயும் இது வெறும் சரித்திர வகுப்பு. மட்டம் அடிச்சுருவாங்கன்னு இருந்தேன்.
நீங்க நல்ல பிள்ளையா வகுப்புக்கு வந்துருக்கீங்க.:-)))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

பாதிச் சண்டை/கருத்து வேற்றுமைங்கறது புரிஞ்சுக்கறதுலே இருக்க தடுமாற்றம்தான்.

said...

கொத்ஸ்,

பேரும் நம்மது மாதிரியே 'ராமன், கிருஷ்ணன்'னு இருந்தா எவ்வளோ நிம்மதியா இருக்கும்.ஹூம்....

said...

//இல்லேன்னா மவோரிகள் முறைப்படிமூக்கோட மூக்கு உரசலோ நடக்கும்.//

இங்க அரேபியர்கள் கன்னத்தோட கன்னம் வத்து காற்றில் பரஸ்ப்ரம் உம்மா தந்து கொள்வது மாதிரி.

துளசியக்கா உங்க கிவி மவோரி பழங்குடிகள் பற்றிப் படிச்சதும் ஊட்டியிலே நம்ம நீலகிரி தோடர்களோட பாரம்பர்ய வீட்டுக்குள் ஊர்ந்து உள்ளே போய் வந்த நினைவு வந்தது. வீட்டு வாசலே இரண்டடி சதுரம் கொண்ட துவாரம் தான்.

இப்ப திரும்ப தோடர்கள் வீட்டுக்குள் போகணும்னா வாசல் நுழைவு துவாரத்திலேயே தொப்பை மாட்டி சிக்கிக்கும்.

Thanks God. Our ancestors strived & evolved to gift us a better world of comforts!

said...

துளசி,இப்படி அவங்க வழ்க்கமும் நம்ம வழக்கமும் ஒரே மாதிரி இருக்கே.
கேக்கவே நல்லா இருக்கு.நானும் அன்னியலோகம் வழியா வந்தேன்.பின்னூட்டம் வருனு நினைக்கிறேன்.

said...

ஹரிஹரன்,

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலே இப்படி ஒரு சின்ன வழி இருக்கு. அதுக்குள்ளெ ஊர்ந்து போகணும்.
அப்படிப் போயிட்டா மறுபிறவி கிடையாதாம். நானும் அதுவழியாப் போயிருக்கேன். ஹூம் அது ஒரு காலம்!

said...

மானு,

பாதாள லோகம், நாகலோகம், அன்னியலோகம்ன்னு ஏழுலகம் தாண்டித்தான் ப்ளொக் பார்க்கணுமாமே.
அப்பத்தான் 'பலன்' கிடைக்குமாம்:-))))

said...

டீச்சர், பாகன் கல்ச்சர் உடைய எல்லா நாட்டுப் பழக்க வழக்கங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும். மூலம் இயற்கையோட ஒட்டுனதா இருக்கும். அழிக்கப்படுகின்ற பாகன் கல்ச்சர்கள் எல்லாம் பேய்க் கல்ச்சர்களாகப்படும். அந்த மாதிரி ஆகாம மாவோரிப் பண்பாடு ஓரளவுக்குத் தப்பிச்சிருக்கிறது நல்லது.

நல்லா எடுத்துச் சொல்றீங்க...சரி..ஒன்னு ரெண்டு படம் போடக் கூடாதா?

said...

வாங்க ராகவன்.

இங்கே மத்த நாடுகளைப் பார்க்கிலும், 'பூர்வ குடிகளுக்கு' நிறைய வசதிகள் செஞ்சு
கொடுத்திருக்காங்க. அதான் இன்னமும் அவுங்க கலாச்சாரம் அழியாம இருக்கு.
உண்மைக்கும் சொன்னால், 100% சுத்த மவோரிகள் இருக்காங்களான்றதே சந்தேகம்தான்.
ஒரே ஒரு சதவீதம் இருந்தாலும் சலுகை ஜாஸ்திதான்.

படங்கள் போடலாம்தான். ப்ளொக்கர் சொதப்புதுன்னு இருந்துட்டேன். வேற ஒரு இடத்துலே
வலை ஏத்திட்டு லிங்க் கொடுக்கலாமுன்னு இருக்கேன்.