Thursday, November 27, 2008

அக்கா ( பாகம் 4)

"கொஞ்சம் ஊதிக்கிட்டு வரயா?"

சரின்னு தலை ஆட்டுவேன்.

இதுவும் ஒரு வைத்தியம் தானாம். நம்ம மதீனாக்காதான் சொன்னாங்க, சாயந்திரமா தொழுகை முடியும் நேரத்துக்குப் பள்ளிவாசலில் புள்ளையை வச்சுக்கிட்டு நின்னாப் போதும். தொழுகை முடிச்சுவரும் பெரியவுங்க மந்திரம் சொல்லி புள்ளை முன்நெத்தியிலே ஊதுவாங்க. உடம்பு சீக்கிரம் நல்லா ஆயிருமுன்னு. ஒரு ஆறு ஆறறைக்கு அங்கே இருந்தாப் போதுமாம். நான் எதுக்கு இருக்கேன்? புள்ளையைத் தூக்கிக்கிட்டுப் போவேன். அப்ப நம்ம தரணி (மூனாவது) அடம் புடிச்சுக் கூடவே வரணுங்கும். அதுவும் சின்னப்புள்ளைதானே? அம்மாந்தூரம் நடந்து வருமா? ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூடக் குறையவும் இருக்கலாம்.
அவளை ஏமாத்திட்டுப் போகறதுக்குள்ளே இந்தா அந்தான்னு நேரமாயிரும்.
தொழுகை முடிஞ்சுறப்போகுதேன்னு புள்ளையைத் தூக்கிக்கிட்டு லொங்குலொங்குன்னு ஓட்டமும் நடையுமா மூச்சுவாங்கப் போய்ச்சேருவேன்.
புள்ளை எலும்பும் தோலுமாத்தான் இருந்துச்சு கனமில்லாமன்னு வையுங்க.


சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமாப் புள்ளைகளுக்குச் சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தால்......ஏதோ ப்ரோக்ராம் போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு கண்டுபிடிச்சுறலாம். அன்னிக்கு வியாழக்கிழமையா இருந்தா என் சந்தேகம் உறுதிதான். சினிமா. இன்றே இப்படம் கடைசின்னு நோட்டீஸ் ஒட்டிருவாங்க. வெள்ளிக்கிழமைக்குத்தான் புதுப்படம் போடுறது. புள்ளைங்களுக்குப் பாயை விரிச்சு வரிசையாப் படுக்க வச்சு, தானும் கூடவே படுத்துக்கிட்டு கதை சொல்லித் தூங்க வைக்கப் பார்க்கும். சின்னப்புள்ளைங்களுக்குக் கவனம் ஜாஸ்தி. ஏமாத்தறது ரொம்பக் கஷ்டம். விளையாட்டுக் காமிச்சாலும் வெள்ளாண்டுக் கிட்டேக் காரியத்துலே கவனமா இருக்குங்க. எல்லாத்துக்கும் நேரம்காலம் தெரியுதுன்னா பாருங்க. எமப் பசங்க. நேரமாக ஆக பாத்ரூம் போயிட்டு வரேன்னு போகும். பெரிய பொண்ணு, பின்னாலயே எனக்கும் வருதுங்கும். அக்கா போறமாதிரி போய் திரும்ப வந்து படுத்துக்கும். நாந்தான் வேலிப்பக்கம் நிக்கும் மதீனா அக்காகிட்டே நிலவரத்தை அப்பப்ப சொல்லுவேன். இன்னும் அஞ்சு நிமிசத்துலே வந்துரும். 'இப்பத்தான் சின்னதுக்குக் கண்ணு இழுத்துக்கிட்டுப் போகுது'ம்பேன்:-) எப்பவும் மதீனாக்காதான் அக்காவுக்குக் கூட்டு.

அக்கா, சட்னு எழுந்து அப்படியே கட்டுன புடவையோடு கிளம்பிரும். ஆனா எங்க வீட்டுலே இருந்தப்பச் செஞ்ச அழிசாட்டியம்? புடவையை நல்லா இஸ்திரி போடலை, ப்ளவுஸைச் சரியாத் தைக்கலை, இது நொள்ளை, அது நொட்டைன்னு ஆடுனதெல்லாம் இப்ப ஒன்னுமே இல்லை. புடவை மாத்திக் கட்டுனாப் புள்ளைங்க கண்டுபுடிச்சுருமில்லே! மதீனா அக்காவோட தம்பி, மச்சினன், வீட்டுக்காரர்ன்னு யாராவது கொட்டாய்வரைக் கொண்டுபோய் விட்டுட்டு வருவாங்க. சினிமா விடும் நேரத்துக்கு மாமா போய் இட்டாருவாரு. ஒருநாள் நானும் கூடப்போனேன். தரை டிக்கெட் எடுக்கறாங்க ரெண்டு பேரும். ஆத்துமணல் போட்டு . நல்லாத்தான் வச்சுருக்கு. ஆனாலும் எனக்கென்னவோ..... பெஞ்சுதான் பிடிக்கும். அதுக்கப்புறம் நானு எங்க மாமாகூடவே படத்துக்குப் போயிருவேன். மூத்த பொண்ணு ராணியும் எங்ககூட வரும். கலியாணம் கட்டுன புதுசுலேதான் அக்கா, மாமா கூட ஜோடியாப் போய்க்கிட்டு இருந்துச்சாம். இப்பெல்லாம் தனித்தனியாப் படம் பாக்கப்போறாங்க. புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு ஒண்ணாமண்ணாப் போலாமுல்லெ? நைநைன்னு ஒரே பிடுங்கலாம். ஆனாலும் ஒரு படத்தையும் விட்டுறமாட்டாங்க.....

சினிமாப் பாட்டெல்லாம் ஒருதடவை பார்த்துட்டுவரும்போதே எனக்கு மனசுலே 'கபால்'லு ஒட்டிக்கும். அச்சுஅசலா அப்படியே பாடுவேன். இங்கே அக்கா வீட்டுலே' மின்சாரம் இல்லாத சம்சாரம்'. அதனால் நாந்தான் ரேடியோ. அக்கா முந்தியெல்லாம் எங்க வீட்டுலே இருந்தப்ப பாட்டுப் பொஸ்தகமெல்லாம் வச்சுக்கிட்டு நல்லாப் பாடும். இப்ப பாட்டாவது பொஸ்தகமாவதுன்னு இருக்கு.

பொஸ்தகமுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. எங்க வீட்டுலே கல்கி, ஆனந்தவிகடன் வாங்குவாங்க. குமுதம் மட்டும் நல்ல குடும்பப் பத்திரிக்கை இல்லைன்னு எங்க அம்மாவுக்கு ஒரு அபிப்பிராயம். (தமிழே படிக்கத் தெரியாது அவுங்களுக்கு. அப்ப யார் அந்த உண்மையைப் 'போட்டுக் கொடுத்துருப்பாங்க?') வாராவாரம் காலையில் புத்தகம் வரும் நாளில் நான் காத்துக்கிட்டு(?) இருந்து (அதான் வெளியிலே விளையாடிக்கிட்டு இருப்பேனே எப்பப் பார்த்தாலும்) கையிலே கிடைச்சதும் அங்கியே உக்காந்து ஜோக்ஸ் எல்லாம் எழுத்துக்கூட்டிப் படிச்சுட்டுத்தான் உள்ளேயே கொண்டு போவேன். அதுக்குள்ளே அக்காக்கள் தொடர்கதை மட்டும் படிச்சுட்டு ரெண்டே நிமிஷத்துலே தரேன்னு எங்கிட்டே கெஞ்சுவாங்க. அண்ணன் பார்த்தா ஓடிவந்து பிடுங்கிக்கிட்டுப் போயிரும். நான் யாருக்கும் பிடிகொடுக்காம, 'ஜோக் புரிஞ்சே இருக்காது அதுக்கே ஒரேதாச் சிரிச்சுக்கிட்டு இருப்பேன்'.

புத்தகம் கையிலே கிடைச்சதும் எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு அக்கா அவசர அவசரமாத் தொடர்கதையைப் படிக்கும். அப்படி ஒரு கதைப் பைத்தியமா இருந்த அக்கா இப்போல்லாம் படிக்கறதே இல்லை. அடுப்புக்கிட்டே உக்காந்து கடுகு, மொளகாய், பருப்புன்னு பொட்டலம் கட்டிவரும் துண்டுப் பேப்பர்களை மட்டும் படிப்பதைக் கவனிச்சேன். மாமா, பள்ளிக்கூட லைப்ரெரியில் இருந்து புத்தகம் கொண்டுவரலாமேன்னு கேட்டப்ப, அக்கா சொன்ன பதில் அப்படியே என் நெஞ்சை நிறுத்திருச்சு.

ஆரம்பத்துலே மாமா, கதைப் புத்தகங்கள் நாவல் எல்லாம் கொண்டுவந்து கொடுத்துக்கிட்டுத்தான் இருந்தாராம். ரெண்டு குழந்தைகளானபிறகு வீட்டுலே வேலையும் கூடிப்போனதால் ராத்திரி படுக்கும் நேரம் மட்டும் கிடைக்கும் ஓய்வில், தலைமாட்டுலே சிம்னி விளக்கை வச்சுக்கிட்டுக் கொஞ்சம் படிப்பாங்களாம் அக்கா. அப்படி ஒருநாள் படிக்கும்போது, உடல் அலுப்பில் கொஞ்சம் கண்ணயர்ந்து போய் புத்தகம் விளக்கின்மேலே விழுந்து, விளக்கும் சரிஞ்சு மண்ணெண்ணெய் எல்லாம் கொட்டித் தீப்பிடிச்சுக்கிச்சாம். நல்ல வேளை மண்தரை. இல்லேன்னா தீ பரவி இருக்கும். லைப்ரெரி புத்தகம் எரிஞ்சு போச்சு. அன்னையிலே இருந்து புத்தகம் வீட்டுக்கு வருவதும் நின்னுபோச்சு. 'இனிமேல் கவனமா இருப்பேன். கொண்டு வாங்க' ன்னு சொல்ல அக்காவுக்கு நாவு இல்லாமப் போயிருச்சே(-:

இங்கே எனக்குப் பிடிச்சது இந்த மண்தரைதான். ஏன்னா..... நான் செய்யும் குழப்படிகளை உடனே மறைச்சுறலாம். சின்னச் சின்ன வேலைகளா நிறைய இருந்துச்சு அங்கே. அதுலே முக்கியமான ஒன்னு, விளக்குச் சிமினிகளைத் தொடைச்சு, மண்ணெண்ணை ஊத்தி வைப்பது. தினம் என்னதான் கவனமா இருந்தாலும் கொஞ்சம் எண்ணெய் கீழே சிந்திரும். மண்தரையிலே சட்னு இஞ்சிப்போகுமுன்னாலும் வாசனைகாட்டிக் கொடுத்துருமே...... வாசத்தெளிக்கன்னு சாணியை வெளியே ஒரு மூலையில் வச்சுருப்பாங்க. அதுலே கொஞ்சம் கொணாந்து பூசிவச்சுருவேன். ஆனாலும் அக்காவுக்கு மூக்கு பவர் ஜாஸ்தி:-)

தரை மொழுகறதுலே அக்காவுது ஒரு தனி டெக்னிக். முதல்லே நல்லா வீட்டைப் பெருக்கிரும். அப்புறம் சாணிகரைச்சு வாளியிலே வச்சுக்கிட்டு சாணித்துணியை அதுலே முக்கி, வீட்டுக்கடைசிச் சுவர் மூலையில் ஆரம்பிக்கும். கவுத்துப்போட்ட சி மாதிரி கைக்கு எட்டுன தூரத்துக்கு அரைவட்டமா மொழுகிக்கிட்டே வாளியையும் இழுத்துக்கிட்டே பின்னாலே நகர்ந்து வரும். பின்னாலே சுவருக்கு ஒரு மூணடி வரும்போது நிறுத்திரும். ரெண்டு எட்டு பக்கவாட்டுலே வச்சு, முதலில் ஆரம்பிச்ச சுவருக்குக் கிட்டே போகும். பழையபடி ஏற்கெனவே பூசுன இடத்துலே கொஞ்சம் ஓவர்லேப் ஆறதுபோல வேலையைத் தொடரும். அதான் 60 அடி நீளத்துக்கு ஒரே கூடமாட்டம் நீண்டு கிடக்கே அங்கே. கடைசியா விட்டுப்போன மூணடி இடத்தைப் பக்கவாட்டுலே திரும்பி உக்காந்து மெழுகிக்கிட்டே வாசக் கதவுக்கு
வந்துரும். பாதத்தைச் சுத்தி இருக்கும் இடம்தான் இப்ப பாக்கி. டக் னு வாளியை வெளியே எட்டி வச்சுட்டு நிலைப்படி தாண்டி வெளியே நின்னுக்கிட்டு குனிஞ்சு உள்பக்கமா கடைசியா மெழுகி முடிக்கும். இதுக்குள்ளே சாணித்தண்ணியெல்லாம் மண்தரையிலே அப்படியே இஞ்சிக்கும்.
தரையும் காய ஆரம்பிச்சுருக்கும்.

அடுத்து ஒரு பூந்தொடைப்பம் எடுத்துக்கிட்டு உள்ளே பாயும். பரபரன்னு தரையிலே ஈரம் முழுசும் காயறதுக்குள்ளே பெருக்கிக்கிட்டே வரும். சாணித்தூள் எல்லாம் திப்பிதிப்பியா கூட்டறதுலே வந்துருமா. இப்பத் தரை பிசிறில்லாமப் பட்டாட்டம் இருக்கும். இத்தோட விடாது. அடுத்துக் கோலமாவு எடுத்து அழகா பெருசா நடுவிலே கோலம் போடும். சுவரை ஒட்டி நீளமா ஒரு பார்டர் கோலம் வேற. லேசா இருக்கும் ஈரத்துலே கோலமாவு பச்சக்ன்னு ஒட்டிப் பிடிச்சுக்கும். அதுக்குப்பிறகு அந்த ஏரியா முழுசும் 144 போட்டாப்போலதான். யாரும் காலு எடுத்து உள்ளே வச்சுறமுடியாது. சுமார் ஒரு மணிநேரம் இந்தக் காபந்து. எனக்கு அப்பத்தான் உள்ளே நோட் புக்கை மறந்துட்டேன், பேனாவுக்கு இங்க் போடனுமுன்னு எதாவது வேலை இருக்கும் உள்ளாற போறதுக்குன்னே. எதுன்னு சொல்லு, நான் எடுத்தாறென்னு வையும். என்னமோ ஒரு கணக்கு வச்சு அந்த நேரம் ஆனதும் இன்னொருக்கா பூந்துடைப்பத்தாலே பெருக்கும். கோலப்பொடி எல்லாம் மண்ணாட்டம் வந்துரும். ஆனாலும் கோலம் மட்டும் பிசிறில்லாம பளிச்சுன்னு பசை போட்டு ஒட்டுனது கணக்கா இருக்கும். இனிமே யாரு வேணாலும் உள்ளே போலாம். ஆடலாம், பாடலாம், கீழே புரண்டு உருளலாம். 'கேட் ஓப்பன்'னு கத்திக்கிட்டேப் புள்ளைங்களோட சேர்ந்து நானும் ஓடுவேன்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதே கதைதான். திண்ணைகளுக்கும் அளவுக்குத் தகுந்தாப்போல கோலம் இருக்கும். பிசிறில்லாமல் விதவிதமா ரொம்ப அழகாக் கோலம் போடும் அக்கா. எங்க சின்னக்கா இருக்கு பாருங்க அதுக்கு ஒரே ஒரு அஞ்சு புள்ளிக்கோலம்தான் தெரியும். வருசம் முன்னூத்து அறுவத்தஞ்சு நாளும் அதேதான் முன்வாசலில். நான் சின்னக்கா வீட்டுக்குப் போகும்போதுதான் அந்த அலுத்துப்போன முன்வாசல் வேற கோலத்தைப் பார்க்கும். எனக்கும் இந்தக் கோலப் பைத்தியம் இருந்துச்சு. நாங்க ஆத்தூர் என்ற ஊருலே இருந்தப்ப, அங்கே எங்க வகுப்புலே இருந்த பொண்ணுங்களுக்கெல்லாம் கோலம்தான் உயிர். பாடநோட்டுகள் எல்லாத்துலேயும் கடைசிப் பக்கத்தைப் புரட்டுனா கோலமே கோலம். நானும் உடனே அந்த ஜோதியில் கலந்துட்டேன். தினம் மாய்ஞ்சு மாய்ஞ்சுப் பெரிய கோலங்களா வாசலில் போடுவேன். நம்ம வீட்டுப் பின்பக்கம் ஒரு மசூதி. அங்கே கட்டிடத்தைச் சுத்தி நிறைய மண்மேடுகளா இருக்கும். எல்லாம் மனுசங்களைப் பொதைச்ச இடமாம். பூசணிக் கொடிகள் தானா வளர்ந்து பரவலா, மார்கழி மாசம் எக்கச் சக்கமான பூக்களோடு இருந்தது எனக்கு வசதியாப் போச்சு. கோலத்து மேலே சாணி உருண்டையில் பூக்களை நட்டு அலங்கரிப்பேன்.
ரெண்டடிக் கட்டைச்சுவர்தான். குதிச்சுப்போய்வர அஞ்சு நிமிசமே ஜாஸ்தி.தொடரும்.........

52 comments:

said...

நாங்கள் யோசிக்க இயலாத ஒரு காலத்தைக் கண் முன் காட்டுகின்றீர்கள் டீச்சர்..:) தொடர்கின்றோம்.

said...

உள்ளேன் போட்டுகிறேன்,அப்புறமா படிக்கிறேன்

said...

ஐந்து புள்ளி வச்சும் கோலம் போடலாமா?..:))))

said...

/*
அக்காவுக்கு மூக்கு பவர் ஜாஸ்தி:-)
*/
உங்களுக்கு எழுத்து பவர் ஜாஸ்தி:-)
நல்லா எழுதுரீங்க

said...

படிச்சாச்சு.

1. இந்த கதையில் ஒரு இடத்துலயும் நீங்க பாடம் படிச்சதா வரலாறு இல்லைன்னு போட்டு கொடுத்துட்டீங்க:-) பேனாவுல இங்கு, நோட்புக்கு எல்லாம் லுலுவாயி.

2. ஒவ்வொரு இடமா, (அந்த கோலத்துக்கான‌ நேர்த்தியோட), உங்க அக்காவின் ஆசைகள் காணாமப் போயிடுச்சு. அது தான் இந்த கதையில நெகிழ வைக்கிற கரு:-( எல்லா வீட்டுலயும் அப்படி இருக்காங்க. (அவுங்க கணவர்கள்ல சிலர் பதிவர்களாயும் இருப்பாங்களாயிருக்கும்?

3. நிறைய விஷயத்தைக் கோடி காட்டுறீங்க. உங்க தனிமை / விருப்பு / வெறுப்புகள்லாம் ஒண்ணிரண்டு வார்த்தைகள்ல சொல்லி மிச்சத்தை எங்க கற்பனைக்கு விட்டுடுறீங்க....

ம், அப்புறம் என்ன ஆச்சு?

said...

சாணி மொழுகிறத ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க துளசி. அப்புறம் நீங்க சொல்லி இருக்கற மாதிரி தர்கா க்கு முன்னாடி உட்கார்ந்து ஒரு வயசானவர் மயில் இறகாலே மேல தடவறத பாத்துருக்கேன். மதம் வித்யாசம் இல்லாமா உடம்பு சரியில்லாத குழந்தைகளை அவர் கிட்ட கூட்டிடு போவாங்க பாத்ருக்கேன்.

said...

Ada namma ooru pakkama..oru 45km dhan difference...vanga vanga

said...

இஞ்சிக்கும்ன்னா என்ன? இழுத்துக்கும்மா?

க்ளாஸில் டவுட் வந்தா கேட்கச் சொன்னீங்க. கேட்டாச்சு.

said...

இ.கொ.,
இஞ்சிக்கும் = உறிஞ்சிக்கும்.

ஆ, இ.கொ. க்கு வேற பெயர்கள் கூட தோணுதே!! :-)))))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

//நாங்கள் யோசிக்க இயலாத ஒரு காலத்தைக் ....//

இருக்குமே ஒரு நாப்பது நாப்பத்தியஞ்சு வருசம். இதுவே ரெண்டு தலை முறைக்கு முந்தி இல்லையா?

அஞ்சு, மூணு, ஒன்னுன்னு புள்ளிகள் வைப்பாங்க:-)

said...

வாங்க நசரேயன்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கெக்கேபிக்குணி.

//படிச்சாச்சு.//

இதுவரை படிச்சது பிடிச்சதுங்களா?

நீங்க சொன்ன மூனாவது பாய்ண்ட்தாங்க நான் சொல்ல நினைப்பது.

ஒரு புள்ளியில் இருந்து நம்ம எண்ணங்கள் கிளை பிரிஞ்சு பயணிச்சுப்போகும் விதத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சோமுன்னா.....

வியப்பா இருக்குல்லே!!!

said...

வாங்க ராதா,

சில சமயங்களில் வீட்டுவீட்டுக்கும், பொதுவாக் கடைகளுக்கும் சாம்பிராணித் தட்டோடு வந்து அந்தப் புகையை மயில்பீலிக் கற்றைகளால் விசிறிவிடுவாங்க.

கெட்ட ஆவிகளை விரட்ட இருக்கும் வழி?

மனுஷனுக்குத்தான் நம்பிக்கை எத்தனை எத்தனை விஷயங்களில்!!!!

said...

வாங்க கோபிகிருஷ்ணன்.

நமக்கு எந்த ஊரு?

அந்தக் காலத்துலே பத்துப் பனிரெண்டு கிலோ மீட்டர் தூரமே ஏதோ வெளியூர் போல இருந்துருக்கு எனக்கு.

ரொம்பநேரம் பஸ்ஸுலே போவோம். இப்ப கூகுளில் பார்த்தால் 12 கிலோ மீட்டராம்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

உங்க சந்தேகத்தை நம்ம கெக்கேபிக்குணி நீக்கிட்டாங்க:-)))
புதிருக்குப் பயன்படுத்திக்கலாமா?

உ றி ஞ் சி யில் உ சைலண்டா ஆகிருச்சி. ஸ்லாங்கு.

said...

ஒரு கீழ்மத்தியதர வாழ்க்கை! ஒரு
டாக்டரின் மகளுக்கா?
கேட்டா அது தனிக்கதை; அப்புறம்
சொல்றேன்ம்பீங்க.......

said...

வாங்க சிஜி.

எனக்கு என்ன தெரியுதுன்னா.... அந்தக் காலத்தில் பணத்தை வச்சு எதையும் அளக்கலை. குணம்தான் பிரதானமா இருந்துருக்கு, கல்யாணம் உள்பட.

அதேபோல் பெண்களும் கிடைச்ச வாழ்க்கையைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க போல.

இப்பக்கூட ஃபிஜியில் குஜராத்திகள் சமூகத்தில் திருமணங்களில் மணமகனின் பொருளாதாரம் பிரச்சனையே இல்லை. ரொம்பப் பணக்கார வீட்டுப்பொண், சாதாரண குடும்பத்தில் வாழ்க்கைப்படுவதும், புது வீட்டில் இருக்கும் வசதிகளை ஏத்துக்கறதும் சகஜம்.

said...

உறவினர்களின் தோட்டத்துக்கு போனா இந்த மாதிரி வீட்டு வாசல்ல சாணி மெழுகறதைப்பாத்திருக்கேன். அது ஒரு கலை. அதுக்கு மேல கோலம் போடறது அதை விட அருமை. ம்.. நமக்கெல்லாம் இப்ப கோலம் போடறதே மறந்தாச்சு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நமக்குத்தான் வாழைப்பழம் தோலுரிச்சுக் கிடைக்குதே:-)

கோலம் ஸ்டிக்கர்கள்.

said...

பழைய நினைவுகளை அசை போடுறதே ஒரு சுவாரிஸ்யம் தானே டீச்சர்...உங்களோட சேர்த்தி எங்களையும் கூட்டிகிட்டு போறதுக்கு நன்றி.சாணி போட்டு மெழூகறதுக்கு கலர் பவுடர் பச்சை.மஞ்சள் கூட இருந்துச்சு.வீட்டுகுள்ளே மா கோலம் வெளியே பொடி கோலம்னு இருந்துச்சு...இப்ப தான் ஸ்டிக்கர் யுகமா போச்சு.

said...

அக்கா வாழ்க்கையில் ஏற்படற மாற்றத்தையும் அவங்க அதை சகஜமா எடுத்துக்கிட்டதுன்னு அழகா சொல்றீங்க..உங்க கவனிக்கும் திறன் தான் எனக்கு ஆச்சரியத்தை தருது..

குணம் தான் முக்கியம்ங்கறது இந்த காலத்துல பலருக்கு தெரியறது இல்லை..

said...

வாங்க சிந்து.

ஸ்டிக்கர் யுகத்துலே கார்பெட் போட்டுருக்கும் வீடுகளில் அதை ஒட்ட முடியலையேப்பா. அதுக்குத்தான் Blutak வச்சு ஸ்டிக்கரின் பின்புறம் இருக்கும் பேப்பரைக்கூட எடுக்காம நானும் கோலம் போட்டுருக்கேன்னு
ஷோ காமிச்சுக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க கயலு.

இப்பக் கொஞ்சநாளா கவனிச்சுப் பார்க்கறதும் சமயத்துலே மறந்து போகுதுப்பா.

எ.கா: முந்தாநாள் என்ன குழம்பு?:-))))

said...

ம்..அப்புறம்..
கண் முன்னால் காட்சிகள் தெரியுது டீச்சர்.. இதுக்கு மேல யாரும் சிறப்பா கதை சொல்லியா இருக்கமுடியாது.
//எனக்கு என்ன தெரியுதுன்னா.... அந்தக் காலத்தில் பணத்தை வச்சு எதையும் அளக்கலை. குணம்தான் பிரதானமா இருந்துருக்கு, கல்யாணம் உள்பட.

அதேபோல் பெண்களும் கிடைச்ச வாழ்க்கையைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க போல.//

கொடுத்து வச்ச ஆண்கள்...

said...

அனுபவங்களின் அகராதித் தொகுப்புன்னு உங்களைச் சொல்லலாம்....

பலதரப்பட்ட அனுபவங்களின் தொகுப்பான உங்கள் பகுதிகள்...அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.

வாழ்த்துகள்..

said...

வாங்க நான் ஆதவன்.

//கொடுத்து வச்ச ஆண்கள்...//

கோடியில் ஒரு சொல்!!!!

இப்ப நான் ஒன்னு சொல்றேன், யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க.

கடந்த சில இந்திய விஜயங்களில் நான் உணர்ந்தது என்னன்னா.....

நிறையப்பேர் greedy யா இருக்காங்கப்பா(-:

said...

'இனிமேல் கவனமா இருப்பேன். கொண்டு வாங்க' ன்னு சொல்ல அக்காவுக்கு நாவு இல்லாமப் போயிருச்சே(-:

- ரொம்ப டச்சிங்காயிட்டு...
ஃபீல் பண்ண வச்சிட்டிங்க....

said...

அருமையான விவரிப்பு காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வ்ந்தாற் போல.

எல்லா வீடுகளிலும் பத்திரிகைகளுக்கு அடிபுடியாதான் இருந்திருக்கு. புதுவாசம் மாறாம இருக்கையில முதல்ல நாம படிக்கறதிலே இருக்க த்ரில்லே தனி. எழுத்துக் கூட்டும் காலத்தில் விகடன் ஜோக்ஸ் தமிழை நல்ல வளர்த்தது:)!

தமிழ் பிரியன் said...
//ஐந்து புள்ளி வச்சும் கோலம் போடலாமா?..:))))//

நான் முதல்ல போட்டுப் பழகின கோலம்:)))! ஆனா நிஜமா அதோட நிறுத்தலயாக்கும்:)).

said...

//ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூடக் குறையவும் இருக்கலாம்.
அவளை ஏமாத்திட்டுப் போகறதுக்குள்ளே இந்தா அந்தான்னு நேரமாயிரும்.
தொழுகை முடிஞ்சுறப்போகுதேன்னு புள்ளையைத் தூக்கிக்கிட்டு லொங்குலொங்குன்னு ஓட்டமும் நடையுமா மூச்சுவாங்கப் போய்ச்சேருவேன்.//

இன்னிக்கு ஆரம்பத்திலேயே கண்கலங்க வச்சிட்டீங்க டீச்சர்.. 2 கிலோமீற்றர்னு லேசா சொல்றீங்க..இன்னிக்கு எங்களால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாம இருக்கு :(

said...

//அக்கா, சட்னு எழுந்து அப்படியே கட்டுன புடவையோடு கிளம்பிரும். ஆனா எங்க வீட்டுலே இருந்தப்பச் செஞ்ச அழிசாட்டியம்? //

ம்ம்..ஞாபகம் வருது..அப்ப நீங்க இன்னும் சின்னப் பொண்ணா இருந்தீங்க..உங்களுக்குத்தான் முதல்லயே ட்ரஸ் பண்ணிவிடுவாங்க..அவங்க ட்ரஸ் பண்ணிட்டு வர்றதுக்குள்ள நீங்க போய் மண்ணெல்லாம் விளையாடி அழுக்காகிட்டு வந்து அம்மாக்கிட்ட அவங்களுக்கு திட்டு வாங்கிக் கொடுப்பீங்க..அக்காக்கள் பொட்டு வைக்கிறதைக் கூடப் பார்த்துப் பார்த்து செஞ்சதா ஞாபகம் :)

said...

//குமுதம் மட்டும் நல்ல குடும்பப் பத்திரிக்கை இல்லைன்னு எங்க அம்மாவுக்கு ஒரு அபிப்பிராயம்.//

அப்பவும் அப்படித்தானா? :(

said...

//அடுப்புக்கிட்டே உக்காந்து கடுகு, மொளகாய், பருப்புன்னு பொட்டலம் கட்டிவரும் துண்டுப் பேப்பர்களை மட்டும் படிப்பதைக் கவனிச்சேன்.//

:(

said...

தரை மொழுகினதெல்லாம் கூட விலாவாரியா சொல்லியிருக்கீங்க டீச்சர்..வீட்டுல எல்லாவேலையும் பண்ணிக்கிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதையும் செய்றாங்கன்னா அக்காவுக்கு எவ்ளோ பொறுமை இருந்திருக்கணும்? எங்களால நினைச்சுக் கூடப் பார்க்கமுடியலை.
தப்பா எடுத்துக்காதீங்க டீச்சர். மாமா வீட்டுவேலை எதுவுமே பண்ணமாட்டாரா? ஒரு இடத்துல கூட நீங்க அதுபத்தி சொல்லலியேன்னு கேட்குறேன்.

said...

அக்காவும் அவங்க பொண்ணுங்களும் இதைப் படிக்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவாங்க டீச்சர் :)

said...

உங்க Auto Biography ரொம்ப நல்லா இருக்கு. கன்டினியூ பண்ணுங்க!

said...

"நாங்க ஆத்தூர் என்ற ஊருலே இருந்தப்ப, அங்கே எங்க வகுப்புலே இருந்த பொண்ணுங்களுக்கெல்லாம் கோலம்தான் உயிர்"
எந்த ஆத்தூர் டீச்சர்.. எங்க ஊரா

said...

//உங்க தனிமை / விருப்பு / வெறுப்புகள்லாம் ஒண்ணிரண்டு வார்த்தைகள்ல சொல்லி மிச்சத்தை எங்க கற்பனைக்கு விட்டுடுறீங்க //

கெக்கேபிக்குணி சொன்னமாதிரி ரொம்ப பிடிச்ச விஷயம் அதுதான்.

நல்லா போயிகிட்டிருக்கு...

said...

என்ன சொல்ல..!! ஞாபக சக்தியில "எங்க டீச்சரை" அடிச்சிக்க ஆளே இல்ல..பின்னுறிங்க ;))

இந்த தரை மொழுகறதுலே எல்லாம் பெரியம்மா வீட்டுல பார்த்துயிருக்கேன்.

கூடவே வருகிறேன்....

said...

முந்தா நாள் என்ன குழம்புன்னு மறந்தா பரவாயில்லை துளசி.. இன்னைக்கு குழம்பு வைக்க மறந்தாதானே ப்ராப்ளம்.. :)

said...

வாங்க பாசமலர்.

அனுபவங்களின் தொகுப்புதானே 'வாழ்க்கை'.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரமேஷ் ராமசாமி.

வணக்கம். புதுசா இருக்கீங்க! முதல்முறையா வந்துருக்கீங்க போல.

ஃபீலிங்ஸ் நிறைய வந்துருச்சுங்க நம்ம வாழ்க்கையில். அதான் அதை எழுதுனதைப் படிச்சாவும் ஃபீலிங்ஸ் வருது.

தொடந்துவரணும் நீங்க. வருவீங்கதானே?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அப்பெல்லாம் சினிமாச் செய்திகள் அவ்வளவா வந்ததா எனக்கு நினைவு இல்லை. அதுக்குன்னு தனியா பேசும்படம் னு ஒன்னு இருந்துச்சு.

ஆ.வி.யின் அட்டைப் பட ஜோக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். புத்தகம் கைக்கு வந்தவுடன் சிரிப்பில் ஆரம்பிக்கலாம்:-)

said...

வாங்க ரிஷான்.

நல்லா ஆழமாப் படிச்சிங்கன்னு உங்க பின்னூட்டங்களே சொல்லுது!

அப்பெல்லாம் ஆட்டோ கிடையாதுப்பா. எங்கே போகணுமுன்னாலும் மனுசங்க நடந்துதான் போறது வழக்கம். பக்கத்துக் கிராமங்களுக்கும் சிலர் நடப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு நடந்துதான் வருவாங்க.

ஊருக்குப் போகணுமுன்னாத்தான் பஸ். அதுவே பெரிய விஷயம். 'பஸ் புடிச்சுப் போனேன்'னு சொல்லிக்கலாம்.

இப்ப மனுசங்களுக்குச் சோம்பல் வந்துருச்சு. நானே பத்து ரூபா ஆட்டோவுக்குக் கொடுத்து ரோடைக் கடந்துருக்கேன் சென்னையில்:-)

மாமா, வீட்டுவேலைகளில் உதவுனதா நினைவில்லை. அப்ப ஆண்கள் யாரும் வீட்டுப்வேலைகளைச் செஞ்சாக் கவுரவக்குறைச்சலுன்னு சொல்லி வளர்க்கப்பட்ட காலம்.

பெண்களும் அவுங்கவுங்க வீட்டு வேலைகளை மனம் சுணங்காமல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. வேலைக்கு உதவியாட்கள் வச்சுக்கறது அக்கா வாக்கப்பட்ட ஊரில் பழக்கம் இல்லை போல.

எல்லா வாத்தியார் வீடுகளிலும் வேலையாட்களே கிடையாது.

said...

வாங்க அதுசரி.

நல்லா இருக்குன்னு நீங்க சொன்னா அதுவுஞ்சரிதான்:-)

said...

வாங்க கிருத்திகா.

உங்களுது எந்த ஆத்தூர்?

நாஞ்சொல்றது மதுரை சித்தையன்கோட்டை செம்பட்டி ஆத்தூர்.

said...

வாங்க கபீரன்பன்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

கற்பனைக்குச் சிறகுகள் உண்டு.

said...

வாங்க கோபி.

கூடவே வர்றதுக்கு நன்றி. விடாம வரணும் ஆமா:-)

said...

கயலு,

சிலநாள் நான் சாப்பிடவும் மறந்துருக்கேன். ஆனால் விரதம்னுன்னு ஒரு நாள் வந்துட்டா..... பசி பிடுங்கி எடுத்துரும்:-)))

said...

சொல்லவே முடியல மேடம்

வீடு மெழுகுவதைப்பத்தி இவ்வளவு அருமையா இது வரைக்கும் நான் வேற் எங்கயுமே படிச்சதில்ல.

அதுவும் அந்த கவுத்துப்போட்ட சி. சான்ஸே இல்ல.

said...

வாங்க அமித்து அம்மா.

இப்ப எங்கேங்க வீடு மெழுகறாங்க? எல்லாம் காங்ரீட், மார்பிள், டைல்ஸ்ன்னு ஆகிருச்சு இல்லே.

அதுவும் இல்லாம மாட்டுச் சாணம்கூட கிடைக்கறதில்லே. கிடைச்சாலும் ப்ளாஸ்டிக் தின்ன மாடுகளின் சாணம் எந்த கதியில் இருக்கும்!!!!!

said...

இந்த மந்திரக்கிறதை படிச்சா எங்க பாட்டி நியாபகம் வருது... நான் அடிக்கடி நைட் வீர் வீர் னு கத்துவேன்.. பாடி என்னை தூக்கி இடுப்புல வச்சுட்டு மந்திருச்சுட்டு வருவாங்க... ரவிக்கை போடாத பாட்டி, சுருட்டு குடிக்கும் பாட்டி, ம்ம்ம்ம்ம் அந்த அரவனைப்பில் தான் என்ன ஒரு நிம்மதி, சுகம்... இப்ப நினைத்தாலும் அந்த சுருட்டு வாசனை வருது... வெள்ளை வெளேர் என இருப்பாங்க...தீவிர பெருமாள் பக்தை..நெற்றீ, கை, கழுத்து என எல்லா இடத்திலும் பளீர் என நாமம்.... அதிகாரம், அன்பு, ஆளுமை..ஹ்ம்ம்ம்.. யக்கோவ்.. நான் தீர்ந்தேன்...

///எங்க சின்னக்கா இருக்கு பாருங்க அதுக்கு ஒரே ஒரு அஞ்சு புள்ளிக்கோலம்தான் தெரியும்.///

எனக்கு இன்னும் இந்த அஞ்சு புள்ளி கோலம் தான் தெரியும்... அதையெல்லாம் சுட்டிக்காட்டக் கூடாது ஆமா..:-))

said...

வாங்க மங்கை.

கோலமா? அப்டீன்னா என்ன? :-))))

மறக்க முடியவில்லை பாட்டியை மறக்க முடியவில்லை.