Wednesday, November 26, 2008

The Tram is fully packed :-)

"ஏங்க என்னைப் பார்த்தா டூரிஸ்ட் மாதிரி இருக்கா?"

"ஏன் இல்லாம? ஆமா.....எதுக்கு இப்ப டூரிஸ்ட் லுக் வேணும்?"

"ட்ராமுலே போகப்போறேன்ல. அதான்......."

தீபக் அண்ணன் சொன்னார், 'இந்த ட்ராம் டிக்கெட் ரெண்டு நாளைக்குச் செல்லுமாம். நாளைக்குக் காலையில் நாங்க கிளம்பிப்போயிருவோமே. நீங்க வேணுமுன்னா பயன் படுத்திக்குங்களேன்.'

ஆஹா..... வரணுமுன்னு இருக்கறது வழியில் நிக்காது. எவ்வளோ நாளா இந்த ட்ராமுலே போகணுமுன்னு நினைச்சுருக்கேன். மெட்ராஸ்லே அந்தக் காலத்துலே ட்ராம் வண்டி(?)யில் போவோமுன்னு பாட்டி தன் கொசுவர்த்திகளைச் சுத்தும்போது ( இந்த கொ.வ. சுத்துவது பரம்பரைப்பழக்கம். ஹிஹி) நமக்கு இதையெல்லாம் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமப் போச்சேன்னு நினைச்சுக்கறதுதான்.

இங்கே நம்மூர்லே ஹெரிட்டேஜ் சொஸைட்டின்னு ஒன்னு இருக்கு. இவுங்க இங்கே இருந்த பழங்காலச் சமாச்சாரங்களையெல்லாம் பராமரிச்சுத், திரும்பவும் கொண்டுவரணுமுன்னு அதிகம் ஆர்வம் காட்டுவாங்க. நம்மூரில் 'ஒரு ஹிஸ்டாரிக் பார்க்' ஃபெர்ரிமெட் (அட! நம்ம பெரியமேடு!) என்ற இடத்தில் அமைச்சு அந்தக் கால கிறைஸ்ட்சர்ச் நகரத்தை ஓரளவு நிர்மாணிச்சு வச்சுருக்காங்க. தீம் பார்க் மாதிரின்னு அங்கே வேலை செய்யறவங்க அந்தக் கால உடைகளை அணிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. பெண்கள் உடைகள்தான் பிரமிப்பைத் தரும்.உடல் முழுவதும் மூடி முகம் மட்டுமே வெளியில் தெரியும். குளிருக்கு அடக்கமா இருந்துருக்கும். அச்சாபீஸ், குதிரைக்கு லாடம் செய்யும் கொல்லன் பட்டறை, ரொட்டி சுடும் பேக்கரி, பழையகால ரயில் எஞ்சின், குதிரை வண்டின்னு ஏகத்துக்கும் இருக்கு. எல்லாம் இயக்கத்திலும் இருக்கு.

(அங்கே நாங்க போனப்ப ஒரு நிகழ்ச்சி நடந்துபோச்சு. காரில் விட்டுட்டுப் போயிருந்த கைப்பையை, களவாண்டுட்டாங்க. இந்தக் கதையை அப்புறம் ஒருநாள் சொல்றேன்)

வெறும் 150 வருசச் சரித்திரம் என்றதால் தோண்டி எடுக்க எளிதா இருக்கு பாருங்க. மேலும் நிறையப்பேர் அங்கங்கே இதை எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க. அந்தக் காலப் பதிவர்கள். இதையெல்லாம் ஆவணப்படுத்தி வைக்குது இந்த ட்ரஸ்ட். இதுலே நம்மைப் பத்தியும் ஒரு இடத்தில் இருக்குன்றதை இங்கே சொல்லிக்கவா? சமயம் பார்த்துக் கொஞ்சம் மேளமும் கொட்டத்தான் வேணும்:-))))


'ஓல்ட் கிறைஸ்ட்சர்ச்' என்ற தலைப்பில் johannes C Andersen எழுதுன புத்தகம் ஒன்னு எங்க லைப்ரரியில் கழிச்சுக்கட்டுன மூட்டையில் கிடைச்சது. இவர் ரெண்டு வயசுக் குழந்தையா டென்மார்க்கிலே இருந்து 1875 லே நியூஸி வந்தவர். அவருடைய கொசுவத்திகளை எழுதிவச்சதையெல்லாம் அழகாப் படங்களொடு (நம்மையே பீட் பண்ணிட்டாருப்பா. ஆனா அதெல்லாம் கருப்பு வெள்ளை) புத்தகமா, 1949 லே உள்ளூர் அச்சகத்துலேயே அச்சிட்டு பதிப்பிச்சு இருக்கார். அந்த அச்சகமே இப்ப 'சரித்திரம்' ஆகிருச்சு. புத்தகத்தை இதுவரை வாசிக்க நேரம் கிடைக்காம இருந்து இப்ப மூணுமாசமாக் கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சுக்கிட்டு இருக்கும்போது ஏகப்பட்ட 'அட! அப்படியா!!' ன்னு சொல்லும் சமாச்சாரங்கள் கிடைச்சது. ஒரு நாள் ஒரு பகுதின்னு குறிச்சுவச்சுக்கிட்டு அங்கேயெல்லாம் போய்ப் பார்க்கணும். நல்ல வெய்யில் வரட்டுமுன்னு காத்துருக்கேன்.

இங்கே நம்மூர்லேதான் வெள்ளையர்கள் முதல்முதலாக் காலடி எடுத்துவச்சுக் குடியேறுனது. இதைத்தான் இப்பவும் மெயின்லேண்ட்ன்னு குறிப்பிடுவாங்க. அதனாலே எதுன்னாலும் இங்கெ இருந்துதான் ஆரம்பிச்சதுன்னு வையுங்க.
1880 வது வருசம்தான் பொதுமக்கள் பயனுக்குன்னு போக்குவரத்துக்காக ட்ராம் வண்டி ஓட ஆரம்பிச்சது. ஆரம்பத்துலே குதிரைகள் இழுத்துக்கிட்டுப் போயிருக்கு. அப்புறம் நீராவி சக்தியாலே ஓடி இருக்கு. தனியார் கம்பெனிகள் ட்ராம்லைன் போட்டுருக்காங்க. அமெரிக்காவிலிருந்து மரங்களைக் கொண்டுவந்து மரச்சட்டங்களா அறுத்து இழைச்சுக் கட்டுமானம் நடந்துருக்கு. உள்ளே பித்தளையால் ஆன கைப்பிடி, குமிழ் இதெல்லாம் உள்ளூர் கம்பெனிகளே செஞ்சுருக்காங்க. சுருக்கமாச் சொன்னா, கீழே பொருத்தும் இரும்புச் சக்கரங்களை மட்டும் இறக்குமதி சரக்கு.
ஆரம்ப நாட்களில் ஓட்டுனரும் நடத்துனரும்


அந்தக் காலப்போக்குவரத்து


1903 வருசம் இதெல்லாம் மின்சாரத்தாலே ஓட ஆரம்பிச்சது. அதுக்காக பாதையின் ரெண்டு பக்கமும் தூண்கள் நட்டு வலைப்பின்னலா மின்வசதி செஞ்சதும் உள்ளூர் கம்பெனிதான். ரெண்டாம் உலகப்போர் முடியும்வரை ட்ராம் போக்குவரத்து ரொம்ப நல்லாவே செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. ட்ராம் லைன்கள் எல்லாம் இதுக்குள்ளே தேய்ஞ்சுபோய் மீண்டும் புதுப்பிக்கணுமுன்னு வந்தப்ப, அது எதுக்கு வீண் செலவு. பேசாம டீஸலில் ஓடும் பஸ்களை வச்சுக்கலாமுன்னு சிட்டிக்கவுன்ஸில் முடிவு செஞ்சாங்க. இங்கெல்லாம் இந்த நகரசபைகள்தான் நம்மூர் மாநில அரசுபோல் செயல்படுது. ஒவ்வொரு பகுதியா சேவையை நிறுத்திக்கிட்டே வந்து 1954 -ல் கட்டக்கடைசியா நின்னே போச்சு. கடைசி நாளில் நகரமக்கள் எல்லாம் சேர்ந்து இதுக்கு ஒரு வழியனுப்புவிழாவை அமர்க்களமாச் செஞ்சு ட்ராம் பெட்டிகளை ஃபெர்ரிமேட்க்கு இடம் மாத்துனாங்க.

கடைசி நாளில் கோலாகலம்


இதெல்லாம் நடந்து ஒரு 41 வருசம் கழிச்சு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும்விதமா பழைய காலச் சூழலைக் கொண்டுவர ட்ராம் வண்டியைப் பழையபடி ஓடவைக்கலாமுன்னு அதே சிட்டிக்கவுன்ஸில் முடிவு செஞ்சது. 'ஹிஸ்டாரிக்கல் ஹெர்ரிடேஜ் ட்ரஸ்ட்' இந்த முடிவை வெகுவாக வரவேற்று, பழைய ட்ராம் பொட்டிகளையே மறுபடிச் செப்பனிட்டு, பழைய நிலைக்குக் கொண்டுவந்தாங்க. இதுக்கே சில மில்லியன் டாலர்கள் செலவாச்சாம். புதுசா ட்ராம் லைன் போட்டாங்க. ஆனால் இது முழு ஊருக்கும் இல்லாம ஒரு 25 நிமிஷ ஓட்டத்துக்கு மட்டும் வர்ற மாதிரி ரெண்டரை கிலோமீட்டர் நீளம்தான்.

1995 இல் ஆரம்பிச்சப்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும், உள்ளூர் ஆட்களுக்கும் ரொம்ப சல்லிசா டிக்கெட் வச்சு ஒரு ரெண்டுவாரம் வரை வெள்ளோட்டம் விட்டாங்க. அப்ப எப்படியோ இதை நான் தப்ப விட்டுட்டேன்.
அதுக்குப் பிறகும் ட்ராமைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நாளைக்குப் போகணுமுன்னு தோணும். சரியான வாய்ப்பு அமையலை. காரில் போகும்போது ட்ராம் நம்மைக் கடக்கும் சமயம், அதுக்குத்தான் முன்னுரிமைன்னு இருப்பதால் காரில் இருந்தே பார்ப்பேன். எல்லா வியாபாரத்தையும் போல் இதுவும் நட்டத்துலே போக ஆரம்பிச்சதும், ட்ராமிலே போய்க்கிட்டே சாப்பாடு சாப்பிட, ரெஸ்டாரண்ட் ட்ராம்னு கொண்டுவந்தாங்க.
எல்லாம் 'யுனீக் எக்ஸ்பீரியன்ஸ்'னு சொன்னாலும், செலவு செஞ்சதையெல்லாம் ஒரே நாளில் எடுக்கணுங்கறமாதிரி டிக்கெட் விலையை வச்சால் உள்ளூர்க்காரன் எத்தனை முறை போவான் சொல்லுங்க. முழுக்க முழுக்கச் சுற்றுலாப் பயணிகள்தான் பயன்படுத்தறாங்க இப்பெல்லாம். புரிஞ்சதுங்களா.....நான் எதுக்கு டூரிஸ்ட் லுக் இருக்கான்னு கேட்டது....

இந்த ட்ராம் டிக்கெட் விலை இப்போ 15 டாலர் ஒரு ஆளுக்கு. கொள்ளையடிக்கிறான்னு நினைச்சுப்பேன். இங்கே முப்பது டாலர் அழறதுக்குப் பதிலா அடுத்த தெருவில் இருக்கும் கேஸீனோ ( இதுக்குப்போகவும் நடக்க வேணாம் இலவச பஸ் ஓடிக்கிட்டே இருக்கு நகரச் சதுக்கத்தைச் சுற்றி) போய் நல்லா விளையாடிட்டு வரலாமுன்னு தோணும்.

ரீஜெண்ட் தெருவழியா ட்ராம் வருது. இது காலத்தால் உறைஞ்சு போன கட்டிடங்கள் உள்ள ரொம்பவும் பழையகாலத் தெரு. கீழே ச்பெஷாலிட்டிக் கடைகளா காஃபி லவ்வர்ஸ், சிக்ஸ் சேர் மிஸ்ஸிங், டெடிபேர் ஷாப் தெருவின் ரெண்டு பக்கமும் இருக்கு. மாடியில் சின்னச்சின்ன அபார்ட்மெண்ட்ஸ். இள நீலம், க்ரீம், இளம்பச்சைன்னு ஒரு கலர் ஸ்கீம் வச்சு பெயிண்ட் அடிச்சு இருக்காங்க. மாடிகள் தெருவின் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி ஒன்னை ஒன்னு பார்த்தாப்போல எதிரும் புதிருமா இருக்கு. சின்னத் தெரு என்றதால் தரை முழுசும் டைல்ஸ் பாவி, ரோஜாச்செடிகள் வச்சு அலங்கரிச்சு இருக்கு.
பின்னால் 'press'தெரியுது பாருங்க அதுதான் உள்ளூர் பத்திரிக்கை அச்சாகும் இடம்.

ரீஜண்ட் தெரு

பத்திரிக்கைக்காரனுக்கு இன்னும் நூறு ஆயுசு. இதைத் தட்டச்சு செய்யும் சமயம், வாசலில் வந்து 'ப்ரெஸ் பேப்பர் ப்ரமோஷன் தரோம் அரைவிலைக்கு. ஒப்பந்தம் ஒன்னும் இல்லை. தினம் வீட்டுலே டெலிவரி செய்வோம். வேணுமா?'ன்னு கேட்டுட்டுப்போறார் ஒரு இளைஞர். யோசிச்சுச் சொல்றேன்னு சொல்லி இருக்கலாம். அதை விட்டுட்டு, மாலை ஏழுமணிக்கு வா. மால் வெட்டறவர்கிட்டே கேக்கலாமு' ன்னு சொல்லி அனுப்பி இருக்கேன். வேணும் என்பதை நானும், இல்லை என்பதை கோபாலும் சொன்னா ஈவனா ஆச்சு:-))))

ஸ்டேஷன்


ட்ராம் ஸ்டேஷன்னு சொல்லி அட்டகாசமா கட்டி இருக்காங்க. ரெண்டு தெருவைச் சுத்தி ஓடுது. மொத்தம் பதினோரு நிறுத்தங்கள். எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கலாம் ஏறிக்கலாம். அன்லிமிட்டட் ரைடு. மாலை ஆறுவரை ரெண்டு வண்டிகளும், அதுக்குப்பிறகு இரவு 9 வரை ஒரே ஒரு வண்டியுமா சேவை. ஒரு டிக்கெட்டுலே ரெண்டு நாளைக்கு விடாமச் சுத்திக்கிட்டும் இருக்கலாம்.

ஸ்டாப்

ட்ராம் ஓட்டுனர் போறவழியில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையும், காட்சிகளையும் வர்ணிச்சுச் சொல்லிக்கிட்டே ஓட்டுறார். பழைய கிறைஸ்ட்சர்ச் நகரப் புத்தகம் வேற இப்பப் படிச்சுக்கிட்டு இருக்கேனா..... அவர் சொல்றதுக்கு பொருள் நல்லாவே புரியறது மட்டுமில்லாம....சரியாச் சொல்றாரான்னும் பரிசோதிக்க முடிஞ்சது:-))))

ஓட்டுனர் வரவேற்பு உரை

ஏவான் நதிப் பாலம்

நகரச் சதுக்கம். பின்புலத்தில் கதீட்ரல்

ஞாயித்துக்கிழமை மாலை அஞ்சுமணிக்கு ட்ராமில் ஏறுனோம். சரியா 25 நிமிசம். கடைசி ரெண்டு நிறுத்தத்துக்கு இடையில் வரும்போது ,'தடதட தட தட'ன்னு நம்மூர் நீராவி எஞ்சின் காலத்துப் பாஸெஞ்சர் ரயிலில் கேட்ட அதே சப்தம். மஜாவா இருந்துச்சு. காட்சிகளும் கூட இதுலே உக்கார்ந்து பார்த்துக்கிட்டு வரும்போது, வித்தியாசமான கோணத்தில் ஏதோ வெளிநாட்டுலே இருப்பது போல இருந்துச்சுங்க.

ஓசிப் பயணச் சிரிப்பு


லைன்லே நிறுத்திட்டேன்:-)


போன பதிவில் சரித்திரம் படைச்சேன்னு சொன்னதுலே ஒரு தட்டச்சுப் பிழை வந்துருச்சு.

சரித்திரம் படிச்சேன்னு இருந்துருக்கணும்:-))))

எல்லா நிறுத்தத்துலேயும் ஆட்கள் இறங்குவதும் ஏறுவதுமா இருக்காங்க. சுற்றுலாக் கூட்டம். ட்ராம் இஸ் ஃபுல்லி பேக்டு. தீபக் பையா இத்தனை பேருக்குமா இப்படி ஓசி டிக்கெட் கொடுத்துட்டாரு!!!!

36 comments:

said...

சரிதான். அடுத்தது என்ன உங்க வீட்டிலேயே நீங்க விருந்தினரா ஒரு வித்தியாசமான தொடரா? :)

said...

உங்க ட்ராம் கதை நல்லா இருந்தது. ஆனா....

தீபக் பையா வந்துட்டு பைய பைய கிளம்பிட்டாரு போலிருக்கு. ஆனா....

அவருக்கு வாங்கின டிக்கட் (ரிக்கற்?, பல் உடையுது)ல நீங்க போனது குத்தம்.

உங்க அக்கா கதை நல்லா இருந்தது. வேலிக்கு அந்தாண்டை இருந்து, ரேணுகா பாப்பாவுக்கு விளையாட்டு காட்டிட்டே நான் வெயிட்டிங்கு. என்கூட இன்னும் நிறைய பேரு வெயிட்டிங்கு. உங்க குத்தம் பத்தி யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்... டோம்.

நீங்க டைம் எடுத்துக்குங்க. ஆனா மறக்காம கதையைச் சொல்லிடுங்க:-)

said...

வாங்க கொத்ஸ்.

சரியாப்போச்சு. ஐடியா ஒர்க்கவுட் ஆனாலும் ஆகலாம்:-)

இது சரித்திர வகுப்புக்கான பாடம். லீடர் சரியாக் கவனிக்கலை போல இருக்கு!

said...

எம்மா - இவ்ளோ பெரிய பதிவா - படங்கள் வேற - லைன்லே நிக்க வச்சு ஒரு படம் - ம்ம்ம்ம் துளசிக்கு நேரம் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் - எங்களுக்கெல்லாம் 24 தான் சொல்ராங்க

ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

புகைப்படங்களும் விளக்கமும் அருமை

said...

வாங்க கெக்கேபிக்குணி.

குத்தம் பார்த்தால் சுத்தம் இல்லையாம்!!

மனசுலே வச்சுக்குங்க.

அக்காவை நாளைக்கு அழைச்சுக்கிட்டு வருவேன்.

said...

வாங்க சீனா.

எனக்கு 86400 நொடிகள்:-)))

said...

வாங்க நசரேயன்.

இதுவும் ஒரு 'சரித்திரம்'
படிச்சதுக்கு நன்றி:-)

said...

நான் தண்டம் இல்லை. அதுனால தான் சாம, தான, பேதம். ஹிஹி. நாளைக்கு வரேன்:-)

said...

டிராம் வண்டி இப்போதான் பார்க்கிறேன்.. வைகை அணையில் மாதிரி இரயிலில் சுத்தியது தான் நினைவுக்கு வருகின்றது..:)

said...

எப்படியும் ட்ராம் வந்தா சினிமால வரமாதிரி ஓடிவந்து காப்பாத்திடுவீங்கன்னு நம்ப்பிக்கையில் நிக்கறாரோ..

தலைப்புல விளையாண்டுட்டீங்களா நேத்து.. :)

said...

நீங்க மட்டும் வாய் கொள்ளாம சிரிக்கறீங்க..கோபால்ஜியை ட்ராமில் போட்டோ எடுக்கலைனு தானே உம்முனு இருக்கார்? உங்க உரைநடை நாளுக்கு நாள் மெருகேரிட்டு வருது...கமண்ட்ஸ்க்கு ஏத்த போட்டோஸ்... வெல்டன் டீச்சர்.

Anonymous said...

ஏவான் நதியில punting போனாதான் நீங்க சுற்றுலா பயணின்னு முடிவாகும். அக்காவை அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு இப்படியா ஊர் சுத்தறது. மாணவர்கள் எல்லாம் கொதிச்சுப்போய் கிடக்காங்க ஆமாம்.

said...

நாளைக்குக் கட்டாயமா வாங்க கெக்கேபிக்குணி.

அக்கா வந்துருவாங்க:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

நானும் முதல்முறையா ட்ராமுலே ஏறுனது இப்பதான்.

யூரோப்லே ட்ராம் ஓடுதுன்னாலும் அது நம்மூர் கிறைஸ்ட்சர்ச் டவுன்பஸ் போலத்தான் இருக்கு.

இந்த ட்ராம், பழங்கால டிஸைனோட இருப்பது ஒரு தனி விசேஷம்.

said...

வாங்க கயலு.

லைன்லே நிக்கறவங்களைப் பார்த்தா ட்ராமே நின்னுரும். நான் ஓடிப்போய்க் காப்பாத்த வேண்டிய தேவை வராது:-))))

said...

வாங்க சிந்து.

டீச்சருக்கு வெல்டன்?

ரசிச்சேன்:-))))))

நிறைய படம் கோபால் இருப்பது இருக்கு. ஆனாலும் 'உம்'ன்னு இருக்கறதாத் தேடிப்பிடிச்சுப் போட்டேன்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

கெக்கேபிக்குணி வேற ஆறுதலா அமெரிக்காவுக்கு வாங்கன்னு கூப்புட்டாங்களா......
அவ்வளவு தூரம் போக முடியாதேன்னு உள்ளூர்லெ ஒரு ரெண்டு நாள் சுத்திட்டேன்.

said...

//சரியாச் சொல்றாரான்னும் பரிசோதிக்க முடிஞ்சது//

டீச்சரா கொக்கா?

ட்ராம் கதை நல்லா இருக்கு.

கோபால் சாரை நீங்க லைன நிப்பாட்டினீங்களா? இல்ல அவரே நொந்து போய் நின்னாரா? :)))

said...

ட்ராம் ஃபுல்லி பாக்டா. ஆளே காணோம்:) இதுதான் சரித்திரம் படைச்ச கதையா.


ட்ராம்ல கோபாலையும் நீங்க படம் எடுத்து இருக்க்கலாம். காணமப் போன மாதிரி முகம் வச்சிருக்காரே:)
படங்களெல்லாம் வழக்கம்போல் சூப்பர்னு சொல்லிடட்டா. விளக்கமும் சூப்பர்.

ஹைலைட் உங்களோட லைப்ரரி சேவை தான்.

Anonymous said...

:)

said...

வாங்க அம்பி.

நிக்கச் சொன்னா நின்னுட்டார்:-)))))

அப்ப உக்காரச் சொன்னா?

:-)

said...

வாங்க வல்லி.

நாலு பேருக்கு மேலே இருந்தால் கூட்டம் இல்லையா?

நிஜமாவே கூட்டம் வந்துருச்சுப்பா அடுத்த ஸ்டாப்லே.

தம்பட்டத்தை யாருமே கவனிக்கலையேன்னு இருந்துச்சு.
அட்லீஸ்ட் நீங்களாவது பார்த்தீங்களே!!!!

said...

போன பதிவில் சரித்திரம் படைச்சேன்னு சொன்னதுலே ஒரு தட்டச்சுப் பிழை வந்துருச்சு.

சரித்திரம் படிச்சேன்னு இருந்துருக்கணும்:-))))

ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்ட எக்கா.
அக்கா 4 - போடுக்கா.

said...

எனக்கு 86400 நொடிகள்//

நானும் இதை மைண்ட்ல வெச்சுக்கறேன்.

said...

ட்ராம் வண்டில போகணும்னு எனக்கும் ஆசைதான். இங்க கல்கத்தாவுலதான் இன்னமும் ட்ராம் இருக்காம். ஒரு தடவை போய் பாக்கணும்

said...

//இது சரித்திர வகுப்புக்கான பாடம். லீடர் சரியாக் கவனிக்கலை போல இருக்கு//

ரீச்சர்!லீடர்க்குதான் வேற வேலை குடுத்துட்டீங்களே.

அப்பறமா சொல்றேன், அப்பற்மா சொல்றேன்னுட்டு எத்தனை கிளாஸ்லே
பிரேக்கட் போட்டு வெச்சுருக்கீங்க.

அதையெல்லாம் excel file லே
format போட்டு , டிக் போடுற வேலை அவ்ரோடதுதானே.

யாருக்குத்தெரியும்.
அடுத்த மாசம் குறுக்கெழுத்துப்போட்டி
டீச்சரின் பதிவுலே விட்டுப்போனவைகள், அப்படிங்கற தலைப்பாக்கூட இருக்கலாம்.

said...

வாங்க அமித்துஅம்மா,

அக்காவுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்குன்றதே ஆச்சரியமா இருக்கு!

வந்துட்டாங்க. போய்ப் பாருங்க:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இப்பக் கல்கத்தாவுலேயா இருக்கீங்க?

ஹைதராபாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேனே....

said...

வாங்க பெருசு.

நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோமே!!!!

கொத்ஸ்க்கு ஐடியா தானே ?

அவர் புதிரில் பெரிய கில்லாடி ஆகிட்டார். நான் ரெண்டே ரெண்டு பதில் சொல்லிட்டு 'எஸ்' ஆகிட்டேன்.:-0

said...

நான் ஹைதலதான் இருக்கேன்.

என்னைப் பொறுத்தவரை எல்லா ஊரு்ம் கிட்டதில் தான் இருக்கு. ஒரு நாள் பயணத்தில் கல்கொத்தா போயிடால்ம்ல.

:)))))))))

said...

ஆஹா.....புதுகைத் தென்றல்.
ஜமாய் ராணி ஜமாய்:-))))

said...

ட்ராமையும் உங்க ஊரையும் அழகா சுத்தி காட்டிட்டீங்க.. நன்றி அக்கா :)

said...

மதராஸிலும் ட்ராம் ஓடியதாமே. சிட்டி கெளன்ஸில் (கார்ப்பரேஷன்) இன்று ஒரு ட்ராம் வண்டியை செப்பனிட்டு மெரீனாவில் காந்திசிலையில் தொடங்கி யுனிவர்சிட்டி வரையாவது ஓட்டினால் எப்படி இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு ஒரு ஆளுக்கு 100 ரூபாய். பாயிண்ட் டு பாயிண்ட். இடையில் நிற்காது, அரை டிக்கெட் கிடையாது என்று எழுதினாலும் மக்கள் படியில் தொங்கி போவார்கள்
சகாதேவன்

said...

வாங்க பிரேம்குமார்.

ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கிடையிலும் 'ஊர் சுத்திப் பார்க்க' நேரம் கிடைச்சதா? ;-))))

said...

வாங்க சகாதேவன்.

வணக்கம்.

முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க போல!!!

நம்மூர்லே இருக்கும் கூட்டத்துக்கு எத்தனை வண்டி விட்டாலும் தொங்கல் இல்லாம இருக்குமா?

ஓட்டுனர் கண்ட்ரோலில் கதவு மூடித் திறக்கும் அமைப்பு இருந்தால் ஒருவேளை சமாளிக்கலாமோ?