Friday, May 26, 2006

நியூஸிலாந்து பகுதி 38

'வடக்கு வாழுது தெற்கு தேயுது' ன்னு ஒரு கோஷம் எங்கியோ கேட்டமாதிரி இருக்கா? எனக்கும்தான் அது ஞாபகம் இருக்கு. இங்கே, 'அப்ப' கதை வேற மாதிரி. இந்த நாடு ரெண்டு பெரிய தீவா இருக்குன்னுதான் உங்களுக்குத் தெரியுமே. இதுலே வடக்குத் தீவுலேதான் எப்பப் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாக் கிடந்துச்சு.அப்ப தெக்கே? அமைதிப் பூங்காதான். நிலத்துலே எல்லாம் விவசாயப் பண்ணைகள்! செழிப்போ செழிப்பு.


ஆனாலும் வருங்காலத்தைப் பத்தின ஒரு கவலை. புள்ளைகுட்டிங்க இருக்கறவங்களுக்கு இந்தக் கவலை இல்லாட்டாத்தானே அதிசயம்? பூலோகம் பூராவும் மனுஷ மனசு ஒண்ணுதான். சிலர் அண்டை நாடான ஆஸ்தராலியாவுக்குப் போனாங்க. இன்னும் சிலர் வேற எங்கியாவது போகலாமுன்னு நினைச்சு, கலிஃபோர்னியா( எம்மாந்தூரம்?)போனாங்களாம்.


செய்திகளை முந்தித்தருவது.... .......(இந்த) பத்திரிக்கைன்னு வருது பார்த்தீங்களா. மனுஷனுக்கு எப்பவும் செய்திகள்மேலே தீராத ஆசை. வெளியே வாசலிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலேன்னா தூக்கம் புடிக்காது. நாலுபேரு கூடுனாவும் 'அங்கே இப்படி, போனவாரம் போய்வந்த ஊர்லே இப்படி'ன்னு பேச்சை ஆரம்பிச்சுருவாங்க. இந்த ஆர்வம்தான் செய்திப் பத்திரிக்கையா உருவாச்சு. 1861லே நியூஸிலாந்தின் முதல் செய்தித்தாள் ஆரம்பிச்சது. 'ஒடாகோ டெய்லி டைம்ஸ்' ஆரம்பிச்சவர் ஜூலியஸ் வோகல்( Otago Daily Times- Julius Vogel)


இவர் பத்திரிக்கையாளர் கிடையாது. தங்கம் சம்பந்தப்பட்டவர். தங்கச் சுரங்கத்துலே இருந்து எடுக்கற மண்ணுலே எவ்வளவு தங்கம் இருக்கலாமுன்னு மதிப்பிட்டுச் சொல்றவர்.(Gold Assayer)இவர் ஆஸ்தராலியாவுலே இருக்கற தங்கவயல்களில் இந்த வேலையைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.


ஒடாகோன்ற இடத்துலே இருக்கற தங்கச்சுரங்கத்தைப் பார்க்க இங்கே நியூஸிக்கு வந்தப்ப, அதைப் பத்தின செய்திகளை சொல்லப்போய் செய்தியாளரா ஆகிட்டார். இப்பப் பதிவுகள் எழுதப்போய் பலபேர் எழுத்தாளரா மாறிப்போனமே அதே கதைதான்:-))))



எப்படி இந்த நாட்டையும், இங்கே இருக்கற மக்களுடைய வாழ்க்கையையும் முன்னேத்தலாமுன்னு நிறைய ஐடியாக்கள் வச்சிருந்தார். இதையெல்லாம் பத்திரிக்கையிலே எழுதிக்கிட்டும் இருந்தார். ரெண்டே வருசத்துலே நம்ம ஜனங்க இவரை பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி வச்சுட்டாங்க.( சமீபத்துலே நடந்த தமிழ்நாடுதேர்தல் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பாளி இல்லை,சொல்லிட்டேன்) 1863 முதல் 1869 வரை, ஆறு வருஷத்துக்கு, நிதி மந்திரியா இருந்தார்(Colonial Treasurer)


இருந்த இடத்துலேயே இருக்கறதுக்கு மனுஷன் என்ன மரமா? இன்னும் சொல்லப்போனா, பூமிக்கடியிலே மரம் கூட வேரை இப்படியே பல திசையிலும் பரத்திக்கிட்டேதானே இருக்கு? ஜனங்க குதிரை சவாரியிலேயே ஊர் ஊராப் போய்ப் பாக்கறாங்க. சிலபேர் சின்னப் படகுகளிலே ஏறி, கரையோரமாவெ போய் நல்ல இடம்இருக்கா? இன்னும் எப்படியெல்லாம் இருக்கு இந்த நாடுன்னு சுத்திப் பார்த்துக்கிட்டு வராங்க. அப்பெல்லாம்ஆக்லாந்து நகர் லே இருந்து, வெலிங்க்டன்( தலைநகரம்)க்கு போகவர ரோடே இல்லேன்னா பாருங்க.



முதல் ஐடியா நல்ல ரோடு போடறது.


ஐடியா மட்டும் இருந்தாப் போதுமா?அதையெல்லாம் நிறைவேத்தக் காசுக்கு எங்கே போறது? ஏன் கடன் வாங்குனா என்ன?இது நடந்தது 1870லே. நம்ம வோகல் சொன்னார்,' அரசாங்கம் ஒரு ஆறு மில்லியன் பவுண்டு கடன் வாங்கணும்.'எங்கெ இருந்து? மாட்சிமை தாங்கிய மகாராணிகிட்டே இருந்துதான். சரி. வாங்கியாச்சு. ம்ம்ம்.... அப்புறம்?' இந்தக் காசை வச்சு நல்ல ரோடு, ரெயில் பாதை, கப்பல் வந்து போக பக்காவா துறைமுகம்னு உண்டாக்கலாம்.அங்கங்கே இருக்கற ஊர்களை இந்த ரோடும் ரயில் பாதைகளும் இணைச்சுரும். வசதி வந்துருச்சுன்னு தெரிஞ்சாஇன்னும் நிறையாட்கள் இங்கே வந்து செட்டில் ஆயிருவாங்க. இதையெல்லாம் ஒரே நிமிசத்துலே செஞ்சுற முடியுமா?எல்லாம் ஒரு பத்து வருசத்துக்குள்ளே முடிச்சிறலாம்'னு.



இதுக்கு முன்னாலே இங்கெவந்து குடியேறுனவுங்க பெரும்பாலும் தனியாத்தான் வந்தாங்க. திமிங்கிலம், கடல்சிங்கம் இதுகளை வேட்டையாட வர்றவங்க, கப்பலோட்டும் மாலுமிங்க, சுரங்கத் தொழிலாளிங்க இப்படி ஒரு கூட்டம்.


நாடு முன்னேறப்போகுதுன்ற விவரம் தெரிஞ்சபிறகு, 1870களிலே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆளுங்க புதுசாக் குடியேறுனாங்க. இதுலே முக்காவாசிப்பேர் புள்ளையும் குட்டியுமாக் குடும்பத்தோட வந்தவங்க.

இவுங்கதான் வடக்குத்தீவுலே காட்டு மரங்களையெல்லாம் வெட்டி ரோடு, ரெயில் பாதைன்னு போட்டவங்க.


இங்கெருந்த மரங்கள், காடுகள் எல்லாம் எத்தனையோ நூற்றாண்டு காலப் பழசு. ரிமு, டோடரான்னு சொல்றமரங்கள் காடா வளர்ந்து இருந்துச்சு. ஒவ்வொரு மரமும் நல்லா வைரம் பாய்ஞ்சு இருந்துச்சாம். பல மரங்கள்25 மீட்டர் உயரமாம். ஹய்யோடா .... கிட்டத்தட்ட 81 அடி உயரம். பருமன் 2 மீட்டராம். ஒரு மனுஷனாலேகட்டிப் பிடிக்க முடியாது. திருமலை நாயகர் மஹால் தூண்கள் போல இருந்திருக்கும்,இல்லே?


'ஸ்காண்டிநேவியா'லே இருந்து வந்தவங்கதான் இந்த காடு வெட்டிகளாம். எல்லாம் இளவயசுக்காரங்க. ரொம்ப ஏழை ஜனங்க. போதாக்குறைக்கு இங்கிலீசு பேசத் தெரியாதவங்க. எதோ ஒண்ணுரெண்டு வார்த்தைதான் தெரியுமாம்.இது போதாதா? அவுங்களை வேலை வாங்க. ஆனா பாவம், இந்த ஸ்காண்டிநேவியர்ங்க. இந்த மாதிரி ஒரு அடர்த்தியானகாடுகளை இதுவரை பார்த்ததே இல்லையாம்.


ஆமாம், இவுங்கதான் ஏழைங்களாச்சே, இங்கே வர்றதுக்கு கப்பல் டிக்கெட் வாங்கக் காசு? ஆ......ங். "இதோ பாருங்க,நீங்க டிக்கெட் வாங்க வேணாம். உங்க டிக்கெட்டுக்கு உண்டான காசை நாங்களே செலவு செய்யறோம். அங்கே புதுஊருக்குப் போனபிறகு, உங்க வேலைக்கு நாங்க கேரண்ட்டி. தினச் சம்பளமா 5 ஷில்லிங் உங்க குடும்பத்துக்குத் தரப்போறோம். அதுலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த டிக்கெட்டுக்கு உண்டான காசைக் கழிச்சுரலாம்,என்ன?"


பிரிட்டிஷ்காரன் பேசுன இங்கிலீசு பாஷையைப் புரிஞ்சும் புரியாமலும் தலையை ஆட்டிக் கேட்டுக்கிட்டு வந்துச்சு இந்தக்கூட்டம்.


மொதல்லே இவுங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 40 ஏக்கர் நிலம் ச்சும்மாக் கொடுத்தாங்களாம். ஆனா ஒரு கண்டிஷன்.சொந்த நிலத்தை சீர் செய்யறதுக்கு முன்னே, ரோடு வரப்போது பாருங்க, அந்த இடங்களையும், ரெயில்பாதை வரப்போறஇடத்தையும் மரமெல்லாம் வெட்டி, சுத்தப் படுத்திக் கொடுத்துரணும். 'தனக்கு மிஞ்சி......'ன்ற கதையெல்லாம் கிடையாது,ஆமாம்.


சரின்னுட்டு, அவுங்க வேலைகளை ஆரம்பிச்சுட்டாங்க. மரங்களுக்குத் தீ வச்சு விட்டுடணும். இலைகள் எல்லாம்எரிஞ்சு மொட்டையானபிறகு, கோடாலி, ரம்பம் எல்லாம் வச்சு வெட்டிச் சாய்க்கணும். பெரியபெரிய மரத்தைச் சாய்ச்சு உறுதியான பாகத்தையெல்லாம் 'வீடு கட்டிக்க, கப்பல் கட்ட'ன்னு எடுத்துக்குவாங்க.மீதி இருக்கற அடிமரத்து வேரையெல்லாம் வெட்டிவிட்டுட்டு, ஒரு மூணு நாலு மாசத்துக்கு அப்படியே காயப் போட்டுரணும். நல்லாக் காய்ஞ்சபிறகு தீ வச்சு விட்டுருவாங்க. எரிஞ்சு சாம்பலானபிறகு, அந்த சாம்பலை வாரிக்கிட்டுப்போய் இவுங்க நிலத்துக்கு எருவாப் போட்டுருவாங்க.


அவுங்கவுங்க நிலத்துலே வீடு கட்டிக்கிட்டாங்க. ரெண்டு ரூமுங்க. படுக்கை அறை ஒண்ணு. அடுக்களை ஒண்ணு.மரங்களை அப்படிஅப்படியே வச்சுக் கட்டுனதாலே ஜன்னல்னு ஒண்ணும் வைக்கலை. தரைகூட மண் தரைதான். நல்லாமிதிச்சு மிதிச்சு திம்ஸ் போட்டு கெட்டிப் படுத்திக்கிட்டது.


ஆம்புளைங்கெல்லாம் மரம் வெட்டிக்கிட்டு இருக்கறப்ப, பொம்பளைங்களும், புள்ளைங்களும் சாப்பாடு தேடிக்கிட்டுப்போறதுதான். காட்டுலே 'வேகா' ன்னு கோழி மாதிரி ஒரு பறவை புதருலெயே முட்டை வைக்குமாம், அந்த முட்டைகளைத்தேடி எடுக்கறது, புறாங்களைப் புடிக்கறது, தேன் கூடுகளைக் கண்டுபிடிச்சுத் தேன் எடுக்கறதுன்னு பல ஜோலிகள்.ஆங்... மறந்துட்டேனே, இதுலே ஆத்துலே போய் மீன் புடிக்கறதையும் சேர்த்துக்குங்க.அதான் பள்ளிக்கூடமுன்னு ஒண்ணும் இல்லையே(-:


ஆனா வோகல் சொன்னமாதிரி பத்து வருசத்துலெ இதெல்லாம் முடிக்க முடியலை.


1874லே, மொதநாலு வருசத்துலே 417 கிலோ மீட்டர் ரெயில்பாதைதான் போட முடிஞ்சதுன்னா பாருங்க. ஆனா காடுவெட்டிங்க வந்து பத்து வருசத்துலே நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதென்னவோ உண்மை. 1881 வருசம்கணக்குப் பார்த்தப்போ, இங்கே இருந்த மொத்த ஜனத்தொகையிலே 42 சதமானம் சின்ன வயசுக்காரங்கதான்.எல்லாம் 15 வயசுக்குக் கீழே!


அப்பெல்லாம் ஐரோப்பாவுலே பஞ்சம் இருந்துச்சாம். இங்கே சாப்பாடு பிரச்சனையே இல்லை. பாலும் தேனுமாஓடுது. புள்ளைங்களை வளர்க்கறதுக்கு இதைவிடத் தோதான இடம் வேற என்ன இருக்கு? ன்ற நினைப்புலேதான் பலரும் வந்து சேர்ந்தாங்களாம்.


ரோடு வேலையை முடிச்சுட்டு, அவுங்கவுங்க இடத்தையும் சீர் செஞ்சு கோதுமை விதைச்சாங்களாம். கூடவே காய்கறிகள், ஆடு, மாடு, குதிரைன்னு பண்ணை வீடுகள் உருவாக ஆரம்பிச்சது அப்பத்தான்.


ஆனா அதுக்குள்ளே பள்ளிக்கூடங்கள் இங்கெ ஒண்ணு, அங்கே ஒண்ணுன்னு ஆரம்பிச்சிருந்தது. 1879லே மொத்தம்57 பள்ளிக்கூடங்கள். மவோரிகளும் அவுங்க புள்ளைங்களைப் படிக்கறதுக்கு அனுப்புனாங்க. பள்ளிக்கூடம் கட்டறதுக்கு நிலமும் இலவசமாக் கொடுத்தாங்க. டீச்சருங்களுக்கு சம்பளம் கொடுக்கவும் உதவி செஞ்சாங்க. டீச்சருங்க பள்ளிக்கூடத்துலே இங்கிலீசு சொல்லிக் கொடுத்தாங்க. எல்லா டீச்சருங்களும் வெள்ளைக்காரங்கதான்.


தினம் ஸ்கூல் முடிச்சு வந்ததும், பெரிய புள்ளைங்களுக்கு ஒரு வீட்டு வேலை காத்திருக்கும். மாவு அரைக்கற வேலை.ரெண்டு மணிநேரம் இதுக்கே போயிருமாம். தினம் ரொட்டி செய்யறதுக்கு மாவு வேணுமுல்லே?


வருசம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. பியானோ வாசிக்கப் படிக்கறதுன்றது ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. ஏன், இப்பவும்பியானோ கத்துக்கறது பரவலாத்தான் இருக்கு. வீட்டு வீட்டுக்குப் பியானோ வர ஆரம்பிச்சது அப்பத்தான்.


1900களிலே பல் வைத்தியருங்க, தையல்காரங்க, கடிகாரம் ரிப்பேர் பண்ணறவங்க, போட்டோ புடிக்கறவங்க,பியானோவை ட்யூன் செஞ்சு கொடுக்கறவங்கன்னு தொழில் தெரிஞ்சவங்க, பண்ணை வீடுகளுக்குப் போய்தேவையானதைச் செஞ்சு கொடுத்து பிழைப்பு உண்டாக்கிக்கிட்டாங்க.


'எல்லாரும் இப்படி லைனா வந்து நில்லுங்க.தையக்காரர் அளவெடுக்க வந்துருக்கார்'னு அம்மாங்க கூப்புடறசத்தம் கேக்குதா?

20 comments:

said...

//அதான் பள்ளிக்கூடமுன்னு ஒண்ணும் இல்லையே(-://

இதுக்கு ஏங்க அழுவாச்சி? எவ்வளவு நல்ல விஷயம். இப்ப பள்ளிக்கூடத்துக்கு போய் படிச்சுட்டும் பல பேர் நல்லது கெட்டது தெரியாம தான இருக்காங்க?

சரி சரி டீச்சருக்கு பள்ளிகூடம் இல்லேனா பசங்கள ஒரே எடத்துல எப்படி பாக்கறதுனு வருத்தத்துல சொல்லிருப்பீங்கனு நெனக்கிறேன்.:-)

said...

//இங்கே சாப்பாடு பிரச்சனையே இல்லை. பாலும் தேனுமாஓடுத//
நிறைய எறும்பும் இருந்திருக்குமோ?? :O)

said...

வரலாற்றை இண்டெரெஸ்டிங்கா
சொல்லித்தர முடியும்னு நிரூபிக்கிறீங்க
டீச்சர்
யாரங்கே! 10 மசால்வடை கொரியர்லே
அணுப்பு-- எனக்கு!

said...

ஸ்கன்டினேவியாக்காரங்களே மரம் மாதிரி நெடு நெடுன்னு இருப்பாங்களே.. :O)
ரெண்டு தீவையும் எப்பத்தான் இணைச்சு முடிச்சாங்க??

said...

நன்மனம்,

கரெக்ட். 24 மனிநேரமும் புள்ளைங்களை வீட்டுலெ வச்சுப் பாருங்க, அப்பத்தெரியும் பள்ளிக்கூடத்தோட அருமை:-))))

said...

முகில்,

வாங்க. புதுசுங்களா?. நல்லா இருக்கீங்களா?

ஈ நிஜமாவே பெருசு பெருசா இருக்குதுங்க. கொஞ்சம் வெய்யில் வந்துட்டா அவ்ளோதான்(-:

said...

சி.ஜி,

உங்க வாய் முகூர்த்தம். இன்னிக்கு நம்ம விட்டுலெயே 'மசால்வடை' செஞ்சாச்சு.
அந்தப் பத்தையும் இன்னிக்கே தின்னுருங்க. திருப்பிச் சுட்டா
கொலஸ்ட்ரால் கூடுமாம். கிவியன் சொல்லி இருக்கார்.

said...

ஏங்க ஷ்ரேயா,

இது என்னங்க ராமாயணக் காலமா?
தீவுகளை இணைக்கறதுக்கு?

இப்பவும் 'போட்' தான் இருக்கு. அதுக்கே 3 மணி நேரம் ஆகுதேங்க.

said...

முகிலு முகிலு முகிலம்மா
என் ட்ரேட்மார்க் ஸ்மைலியை சுட்டுட்டீங்களே.. நியாயமா?

துளசி, முகில் புதுசுதாங்க. இவங்களையும் சோதில கலக்கப் பண்ணின பெருமை என்னுது!!! :O)

said...

மூ..ஊ..ஊ..ணு மணி நேரமா? ஜாலியா இருக்கும் போலருக்கே!! ;O) ($$ எவ்வளவு??)
அப்ப விமானமுன்னா எவ்வளவு நேரமெடுக்கும்?

said...

ஷ்ரேயா,
முகிலைக் கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி.

விமானம் 30 அல்லது 35 நிமிஷம் பயணம்தான்.

போட் டிக்கெட் ரொம்ப இல்லை . 50$ ன்னு நினைக்கிறென்.

said...

நன்றி அரவிந்தன்.

நீங்களெல்லாம்தானே என் வகுப்பு மாணவர்கள்:-)))

நானும் கொடுத்து வைத்தவள்தான், நல்ல அருமையான மாணவர்கள் கிடைத்தமைக்கு.

said...

அப்பாடா, கற்காலத்திலிருந்து கொஞ்சம் தற்காலம் வந்திருக்கிறதே.:)
செய்தித் தாள் இல்லாமல் எப்படிதான் இருந்திருப்பார்களோ ?

said...

// ஒடாகோன்ற இடத்துலே இருக்கற தங்கச்சுரங்கத்தைப் பார்க்க இங்கே நியூஸிக்கு வந்தப்ப, அதைப் பத்தின செய்திகளை சொல்லப்போய் செய்தியாளரா ஆகிட்டார். இப்பப் பதிவுகள் எழுதப்போய் பலபேர் எழுத்தாளரா மாறிப்போனமே அதே கதைதான்:-)))) //

நீங்க வேற டீச்சர்...இப்பல்லாம் எழுத்து வியாபாரியா இல்லாட்டி எழுத்தாளர்னு ஒத்துக்கமாட்டேங்குறாங்களாமே......

ஒரு நாடு எப்படி உருவாகிறதுங்கற விலாவாரியா வெளக்கீருக்கீங்க. இந்தியாவுக்கு அப்படிச் சொல்ல முடியாது. அதோட பழமை சேர்ந்த புதுமை அப்படி.

அன்னைக்கு அப்படி வந்து பாடுபட்டவங்களோட சந்ததியினர் இன்னைக்கு நல்லா சந்தோஷமா இருக்காங்கள்ள...அதுதான் முன்னோர் செஞ்ச புண்ணியங்கறது.

said...

மணியன்,
இந்த நாட்டோட வரலாறே வெறும் 165 வருசம்தான். அதுலே மொதல் 20 வருசம் முடிஞ்சதும்தான் பேப்பர் வந்துருச்சே:-)))))

said...

ராகவன்,

இங்கே 165 வருசம்தான் வரலாறே.

நம்ம ஊர் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருச வரலாறை வச்சிருக்கேப்பா.

யானைக்கு முன்னாலே எறும்பு மாதிரிதான் :-)))))

ஆனா, லஞ்ச லாவண்யம் இல்லாததாலே அரசாங்கம் செய்யறது மக்களுக்கு நேராப் போய்ச் சேர்ந்துருது. முன்னேற்றம் முடங்காம இருக்கு.

said...

காலை வணக்கம் துளசி.
இணைய சரித்திரம் நல்லப் போகுதுங்க. நம்ம ஊருக்கு அங்கே போனாங்க?பாலுக்கு,தண்ணீக்கு கஷ்டப்படலியா?எல்லா ஊரும் இப்படித்தான் இருக்கு.சாமி நம்ம ஊரையும் இப்படி ஆக்கினால் நல்லா இருக்கும்.ஸ்விஸ்ஸ் லேயும் கடின உழைப்பும் கூடவெ செழிப்பும் இருக்கு.ந்ம்ம கண்ணன் அங்கே எல்லாம் கடைக்கண் அருள் செய்தார் போல இருக்கு. நன்றி துளசி.

said...

மானு,

காலை வணக்கம்.

கண்ணன் நம்ம் ஊர்லேதான் பிறந்தார். அப்ப செழிப்பாதான் இருந்திருக்கும்.

செல்வத்தையெல்லாம் கொள்ளையடிக்கக் கொடுத்துட்டோம்.

இப்ப கஷ்டம் என்னன்னா, கூட்டம். ஜனத்திரள். கட்டுப் படுத்தலைன்னா இன்னும் கஷ்டம்தான். இதிலே சுரண்டல் வேற ஜாஸ்தி(-:

said...

நல்ல தொடர், உதாரணங்களுடன் ஓட்டம் அருமையாயுள்ளது.

said...

நன்றி சிவமுருகன்.