Monday, May 29, 2006

நியூஸிலாந்து பகுதி 39


இப்பக் கையிலே கொஞ்சம் காசு பொரள ஆரம்பிச்சிருச்சு. நாமே எப்பவும் வீட்டுவேலை செஞ்சுக்கிட்டு இருக்க முடியுமா?அங்கெ இங்கிலாந்துலே பணம் படைச்சவங்க வீட்டுலே வேலைக்காரர்கள் இருக்கறதையெல்லாம் பார்த்த ஞாபகம்இன்னும் இருக்கே. அதனாலெ வீட்டு வேலைக்கு ஆள் வேணுமுன்னு அங்கே இங்கிலாந்துலேயே விளம்பரம் கொடுத்துப் பார்க்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. சிலர் அதையும் செஞ்சாங்க.


ஆனா, எல்லாருக்கும் இந்த சொகுசு வாழ்க்கை கிடைக்குமா? ஆம்புளைப் பசங்க எல்லாம் பண்ணை வேலைக்கும்,ச்சின்னச்சின்ன பேக்டரி வேலைக்கும்,பொட்டைப் புள்ளைங்க எல்லாம் வீட்டு வேலைக்கும் போய்க்கிட்டு இருந்துச்சுங்க.வயசு என்னன்றீங்க? பதினொண்ணு, பன்னெண்டுதான். பாவம் பசங்க.


ஜோஸஃப் வார்டு( Joseph Ward) ன்ற பொடியன், வயசு 12தான் இருக்கும். 1869லே ஒரு போஸ்ட் ஆபீஸுலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். நாலு வருசம் போச்சு. ஒரு நாள் போஸ்ட் மாஸ்ட்டரை என்னமோ கிண்டல் செஞ்சுட்டான்னு, வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. பையன் நல்ல ஸ்மார்ட்டு. அப்படி இப்படின்னு ச்சின்னச் சின்னவேலை செஞ்சு, அப்பப்பக் கொஞ்சம் படிச்சுக்கிட்டுப் பெரியவனா ஆனப்புறம், நல்ல பதவியிலே வந்து உக்கார்ந்துட்டார்.என்ன அப்பேர்ப்பட்டப் பதவி? ஒண்ணுமில்லை.... பிரதம மந்திரிப் பதவிதான்.அதுவும் ரெண்டு தடவை!


தபால் ஆபீசுன்னு சொன்னதும் இன்னொண்ணுக்கூட ஞாபகம் வருது. அப்பெல்லாம் தபால்பெட்டின்னு தெருக்களிலேஎங்கேயும் வைக்கலை. வாரம் ரெண்டு தடவை பசங்க குதிரை மேலே ஏறிக்கிட்டு அக்கம்பக்கம் போய் பண்ணைகளிலேஇருக்கற தபால்களையெல்லாம் சேகரிச்சுக்கிட்டு வருமாம். ஒருக்காப் போய் வர்றதுக்கு 30 கிலோ மீட்டர் ஆயிருமாம்.கிறிஸ்ட்டீனா மெக்ல்ரைட் ( Christina Mcllvride) ன்ற பொண்ணு 12 வயசுலெயே இந்த வேலைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சாம்.


புள்ளைங்களைக் கட்டாயமா ஆரம்பப்பள்ளிக்கு அனுப்பணுமுன்னு அரசாங்கம் சொல்லிருச்சு. இது 1877லே. ஆனா அவ்வளவாப் பள்ளிக்கூடங்கள் வரலையே. கொஞ்சம் தூரமா இருந்தாக் குதிரைமேலெ ஏறிக்கிட்டு ஸ்கூலுக்குப் போறாங்க, கொஞ்சம் பெரிய பசங்க.அங்கே இவுங்க வகுப்பு முடியறவரைக்கும் குதிரைகளைக் கட்டிப் போட்டுத் தீனி எல்லாம் கொடுக்கணும். கிட்டத்தட்டகுதிரைலாயம் போல ஆயிருச்சுங்க இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம். கஷ்டம்தான். வேற வழி?


வீட்டுவேலை, வெளிவேலை எல்லாம் செஞ்சாலும் புள்ளைங்க புள்ளைங்கதானேங்க? விளையாட்டு சுபாவம்இல்லாம இருக்குமா? பம்பரம், வளையம், பொம்மை, பொம்மை வீடு, ப்ராம்னு வச்சுக்கிட்டு விளையாடி இருக்குங்க.ஓடிப்பிடிச்சு விளையாடறது, நொண்டி, கோலிக்குண்டு இதெல்லாம் கூட விளையாடறது உண்டாம். இதெல்லாம் அகில உலகவிளையாட்டாத்தான் இருந்திருக்கு. நாமும் ச்சின்னப்புள்ளைகளா இருந்தப்ப இதெல்லாம் விளையாடி இருக்கோம்தானே?


இன்னொண்ணுங்க, அப்ப இங்கே இந்த கிரிக்கெட்டு இல்லையாம். ஆனா 'டிப் கேட்'ன்னு ஒண்ணு விளையாடுவாங்களாம்.இருங்க, அது என்னன்னு சொல்றேன். உங்களுக்கு இதுகூட ஆச்சரியமாத்தான் இருக்கும். இந்த Tip Cat லே ஒருஆறு இஞ்ச்( 12 செ.மீ) குச்சிதான் இந்த Cat . ரெண்டு பக்கமும் பென்சில் மாதிரி சீவி கூரா இருக்குமாம். இதைஎவ்வளவு தூரம் யார் வீசிப் போடறாங்களோ அவுங்கதான் ஜெயிச்சவங்க. இது நம்மூர் கிட்டிப்புள் தானே?


இப்ப லோகம் பூரா 'ரக்பி'ன்னு சொல்லிக்கிட்டு விளையாடுறாங்களே, அதுகூட 1870களிலே தான் ஆரம்பிச்சதாம். ஒவ்வொரு டிமுக்கும் எத்தனை ஆளுங்க? 20, 30 சிலசமயம் 40. மைதானம் பூராவுமே ஆடறவங்க இருப்பாங்க.ஒன்னரை மணிநேரத்துலே இப்ப விளையாடுற இந்த விளையாட்டுக்கு அப்ப நேரங்காலம் ஒண்ணும் இல்லையாம்.வேடிக்கை பாக்கற ஜனங்க எவ்வளவு நேரம் பார்க்கறாங்களோ அவ்வளோ நேரம். சில சமயம் ஒரு கேம் ஒரு நாள் பூராவும் நடக்குமாம்.


சரி, என்னமோ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன். இங்கே வெள்ளைக்காரங்க வந்த பிறகு மொதல் முறையா ஒரு எரிமலை வெடிச்சது 1886 வருசம் ஜூன் மாசம் 10 தேதிக்கு. சரியா 120 வருசத்துக்கு முன்னாலே! இங்கேநிறைய எரிமலைகள் இருக்கு. புகைஞ்சுக்கிட்டு இருக்குமே தவிர வெடிச்சதில்லை. ரொடோருஆ ( Rotorua)ன்னு சொல்ற( இங்கே கந்தக வென்னீர் ஊத்துக்களும், மண்குழம்பு கொதிக்கிற குளங்களும் நிறைஞ்ச இடம்) ஊருக்குப்பக்கத்துலே இருக்கற டாரவீரா எரிமலை(Mount Tarawera) வெடிச்ச சத்தம் இங்கே கிறைஸ்ட்சர்ச் ( இது தென் தீவுலே இருக்கு.ரொம்ப புண்ணிய பூமி. ஏன்னா நான் இங்கேதான் இருக்கேன் !)வரைக்கும் கேட்டுச்சாங்க. இங்கேயே இப்படின்னா,ஆக்லாந்துலே இருக்கறவங்க எப்படி இருந்துருக்கும். யுத்தபூமியிலே பீரங்கி வெடிச்சுருச்சுன்னு நினைச்சாங்களாம். இந்த எரிமலை அடிவாரத்துலேஒரு ஊர் இருந்திருக்கு. அதும் பேர் 'டெ வெய்ரோ ஆ( Te Wairoa)' அங்கே மொத்தம் 70 வீடுங்க இருந்துச்சாம்.எரிமலைக்குழம்பு பொங்கி வந்ததுலே 65 வீடுங்க அப்படியே அழிஞ்சு போச்சாம். ஜனங்க ஓடித் தப்பிச்சாங்கன்னாலும்,11 பேர் செத்துட்டாங்களாம். அக்கம்பக்கத்துலே இன்னும் 6 கிராமங்களும் அடியோடு நிர்மூலமாச்சு. இதுலே 100மவோரிகளும், 7 பாகெஹா( வெள்ளைக்காரங்க)ங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க.


இந்த எரிமலை வெடிப்புலே முக்கியமான ஒரு சுற்றுலாத் தலம் அழிஞ்சு போச்சு. அதான் பிங்க் & ஒயிட் டெர்ரஸ். இந்த எரிமலை அடிவாரத்துலே ரோடோமஹானான்னு ஒரு பெரிய ஏரி இருக்கு. அங்கே இருக்கற தண்ணியிலே நிறைய சிலிகா இருக்காம். அதெல்லாம் காலப்போக்குலே அப்படியே சேர்ந்து மினுமினுக்கும் டெர்ரஸ்ஸாக மாறிடுச்சாம்.இதுலே இந்த ஒயிட் பாகம் ரொம்பப் பெருசு. 7 ஏக்கர் விஸ்தீரணம், 30 அடி உயரத்துலே இருந்துஅப்படியே இறங்கிவந்து முன்னாலே விசிறி மாதிரி பரந்து 240 மீட்டருக்கு இருந்துச்சாம். பிங்க் கலர்லே இருந்தது, இதைவிடச் சின்ன அளவுலே.


தண்ணி இப்படி வந்து சேர்ந்த இடத்துலே அடுக்கு அடுக்காக் குளியல் தொட்டிகள் கட்டி வச்சதுபோல இயற்கையாவே மூணு மீட்டர் ஆழத்துக்குநீலக்கலர் தண்ணி, நல்லா வெதுவெதுன்னு குளிருக்கு இதமா 50 டிகிரி ஃபாரன்ஹைட்லே நிரம்பி இருக்குமாம். அந்தக்காலத்துலேஇங்கே வந்த பலர் இங்கே குளிச்சதையேகூட நல்ல அனுபவமா எழுதி வச்சிருக்காங்க. உலகத்தோட எட்டாவது அதிசயம் இதுன்னு எல்லோரும் நினைச்சாங்களாம். எரிமலையிலே இருந்து வந்த சாம்பல் இந்த டெர்ரஸ்களை அப்படியே மூடிருச்சாம்.


இதுலே பாருங்க,சம்பவம் நடக்கறதுக்கு 9 நாளைக்கு முன்னாலே நடந்த ஒரு விசித்திரத்தைச் சொல்லணும். ஜூன்முதல் தேதியிலே, சில மவோரிகளும், சில வெள்ளைக்கார டூரிஸ்ட்டுகளும் இந்த ஏரியைச் சுத்திப் பார்க்கப் போயிருக்காங்க.அப்ப தூரத்துலே பெரிய படகு, வாகான்னு சொல்ற நீளமான படகு ஒண்ணு, இந்த எரிமலையை நோக்கி ஏரியிலே போய்க்கிட்டு இருந்துச்சாம். மவோரிகளும், டூரிஸ்ட்டுகளும் கையை ஆட்டிக் கூப்பாடு போட்டாங்களாம்.ஏன்னா இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு படகை அங்கே யாருமே பார்த்ததில்லையாம். இவுங்க போட்டக் கூச்சலைச் சட்டை செய்யாம அந்தப் படகு நேராப் போய்க்கிட்டே இருந்துச்சாம். அதுலே இருந்து துடுப்புப் போட்டவுங்க, சிலைமாதிரி அனக்கம் இல்லாம இருந்தாங்களாம். இவுங்க பக்கம் திரும்பகூட இல்லையாம். பார்க்கறப்பவே படகு பார்வையிலேஇருந்து மறைஞ்சிருச்சாம்.


அப்புறம், சம்பவம் நடந்தபிறகு இதை நினைச்சுப் பார்த்தவங்க, இது ஒரு பேய்ப் படகு. நமக்கெல்லாம் எச்சரிக்கை கொடுக்கத்தான் வந்துபோச்சு'ன்னு பேசிகிட்டாங்களாம். இந்த மாதிரி நம்பிக்கைகள் உலகம் பூராவுக்கும் சொந்தம்தான்.ஜனங்க கதைகதையா இதைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளைக்கு.

24 comments:

said...

பேய்ப்படகு??ஒரு நாய் என் கூட நடந்து வந்து அப்புறம் மறைஞ்ச கதையாயில்ல இருக்கு!!! :O)

said...

இன்றைக்கு என்ன நீங்க, உஷா, ஜோசஃப் என்று எல்லோரும் ஆவி,பேய் என்று பயமுறுத்துகிறீர்கள். அதை விளையாட்டாகக் கூட நம்பிவிடாதே என்று எங்க வாத்தியார் சொல்லியிருக்கிறார், ஆமாம்.

said...

ஷ்ரேயா,

எப்ப வந்துச்சு நாய்? சொல்லவே இல்லை?

said...

மணியன்,

அதுங்க எல்லாம் மகாநாட்டுக்குச் சேர்ந்து வந்திருக்குங்க போல. ஆவிகள் மாநாடு.

ரொம்பப் பயந்துட்டீங்களா? நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். அதுலேயும் பிசாசு வருது.

நம்ம விக்ரம் அதுலே ஒரு சின்ன வேஷத்துலே நடிச்சிருக்கார். ஒரு டான்ஸ்கூட ஆடறார், வாணி விஸ்வநாத் கூட. படத்தோட பேர் 'இந்திரியம்'

said...

டீச்சர் சின்னப் பசங்களும் பிள்ளைகளும் ரொம்ப வேலை செஞ்சதப் பத்திச் சொல்லீருக்கீங்க இல்லியா....எங்க பெரியவங்க சரியில்லையோ...அங்க சின்னப்புள்ளைங்க வெள்ளாமதான் வீடு சேரும். நான் பாத்திருக்கேன். அப்பா பொறுப்பில்லாம இருப்பாரு...மகனோ மகளோ தலையெடுத்து பொறுப்பா செய்வாங்க....அந்த மாதிரிதான் இது. வாழ்க்கை என்னும் கட்டாயம்தான் ஒவ்வொருவரையும் இயக்குறது.

said...

ராகவன்,
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

இங்கே புது நாடு என்றபடியாலே எல்லாரும் கண்டமேனிக்கு உழைச்சுத்தான் நல்லா ஆக்கி வச்சிருந்தாங்க. இப்ப இருக்கற ஜெனரேஷன் இதையெல்லாம் உணராமல்ல இருக்கு.

said...

Can u post a photo of the `horse-postman' thulasi!

said...

\\எப்ப வந்துச்சு நாய்\\

நாய் என் கூட நடந்து வந்து அப்புறம் மறைஞ்ச கதை

said...

//ஒரு எரிமலைவெடிச்சது 1886வருஷம் ஜூன் மாதம்10 தேதிக்கு.சரியா 110 வருசத்துக்கு
முன்னாலே//
ட்டீச்சர் கணக்கு இடிக்குது ட்டீச்சர்

//பள்ளிக்கூடமெல்லாம் குதிரை லாயம் ஆய்டிச்சு//
இங்க குதிரை லாயமெல்லம் பள்ளிக்கூடம் ஆவுறத எப்ப எழுதுவீங்க

said...

தாணு,

பார்க்கறேன். கிடைச்சா கட்டாயம் போடறேன். இல்லேன்னா தனிமடலில் அனுப்பறேன்.

said...

ஷ்ர்டேயா,

ஆஆ ..... அந்த 'நாயா'?

said...

சி.ஜி,

கணக்குத் தப்பாவா இருக்கு? அடடா.... கால்க்குலேட்டர் தப்பு பண்ணிருச்சோ?

ச்சும்மா..... இப்பப் பாருங்க. திருத்தியாச்சு. நன்றி, தலையில் குட்டுனதுக்கு:-)))

said...

ஷ்ரேயா,

உங்க பேரை தப்பா தட்டச்சிட்டேன்(-:

said...

Dear thulasi goodmorning. nijama ?did they see that boat?ammaadi!
ekalappai work aavalai.
the children learnt a lot those days. now they do not have special experience of being part of the family.school separate,home separate..so how can we expect them to relate to even past history? appreciaton class of Happanings edukka vendiathuthaan.thank you thulasi. the photos have come out so nice. valli

said...

வல்லி, கலப்பைக்கு என்ன ஆச்சு?

போட்டைப் பார்த்தேன்னுதான் அப்ப சொல்லி வச்சிருக்காங்க.

அதான் தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டும்தான் ' வேறு.

said...

டீச்சர்,

இப்போவும் அங்க உயிருடன் கூடிய எரிமலைகள் இருக்கா? நான் ஐஸ்லாந்து ( அந்த நாட்டைச் சொல்லறேன், நம்ம ஐஸ் இருக்கிற இந்தியா இல்லை) போன போது அங்கையும் இந்த மாதிரி சுடுநீர் குளங்களைப் பார்த்து இருக்கிறேன். இப்போ கானடாவிலும்.

ஒரு டிக்கெட் அனுப்புனீங்கன்னா அங்கையும் ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவேன்.

said...

கொத்ஸ்,
இன்னும் பல எரிமலைகள் உயிரோடுதான் இருக்கு. எரிஞ்சு தீர்ந்துபோன உயிரில்லாததும் இருக்கு.

எதுக்கு, இந்த டிக்கெட்டு எல்லாம்? பேசாமப் பொடிநடையாக் கிளம்பலாமுல்லே?:-))))

லாட்டோ அடிக்கட்டும். வகுப்பு முழுசையும் எக்ஸ்கர்ஷன் கொண்டு போறேன்.

said...

Postmaster PrimeMinister....

Blogwriter Teacher..
NZ enna ellame ullta bulta'va irukku

said...

அப்புறம், சம்பவம் நடந்தபிறகு இதை நினைச்சுப் பார்த்தவங்க, இது ஒரு பேய்ப் படகு. நமக்கெல்லாம் எச்சரிக்கை கொடுக்கத்தான் வந்துபோச்சு'ன்னு பேசிகிட்டாங்களாம். இந்த மாதிரி நம்பிக்கைகள் உலகம் பூராவுக்கும் சொந்தம்தான்.ஜனங்க கதைகதையா இதைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளைக்கு.//

இப்படிப்பட்ட கதைகளில் உண்மை இருக்கிறதோ என்னவோ மனச தொடறா மாதிரி இருக்கும்.. அத நீங்க சொன்ன விதமும் அழகா இருந்திச்சிங்க..

ஆவின்னா பயப்படணுமா என்ன.. இட்லிலருந்து வர்றதுக்கூடத்தான் ஆவி.. என்ன சொல்றீங்க:))

said...

பொன்ஸ் அக்கா blog ah படிச்சிட்டு நேரா இங்க வந்தா இங்க ஒரு பேய் கதை..ஏங்க இந்த பேய் எல்லாம் இல்ல தான?

said...

ரிஷி,

வாங்க வாங்க. புதுசுங்களா? எப்படி நம்ம வீட்டைக் கண்டுபிடிச்சு வந்தீங்க?

என்னங்க உல்ட்டான்னு சொல்லிட்டீங்க?

அவரு போஸ்ட் மாஸ்ட்டர் இல்லீங்க. போஸ்ட் ஆஃபீஸ்லே வேலை செஞ்ச பையன்(ர்)தான்.

ப்ளொக் ரைட்டர் டீச்சராகக்கூடாதா?
இல்லே டீச்சர் ப்ளொக் ரைட்டர் ஆகக்கூடாதா?

போங்க, இப்படிக் கன்ஃப்யூஸ் பண்ணிவிட்டுட்டீங்களே?:-)))))

said...

டிபிஆர்ஜோ,

ஆவிக்கு ( அதாங்க நீராவிக்கு) சக்தி கூடுதலாச்சேங்க. எம்மாம் பெரிய ரயிலை எல்லாம் இழுத்துக்கிட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு.

said...

ச்யாம்,

பேய் பிசாசு எல்லாம் இல்லைன்றவங்களுக்கு இல்லை,
இருக்குன்றவங்களுக்கு இருக்கு.
அதெல்லாம் 'சாமி' மாதிரி.

said...

பதிவுலக விமரிசகரே,

நன்றி.