Friday, March 30, 2018

த்ரில் வேண்டிக்கிடக்கே..... (@அமெரிக்கா.... கனடா 23)

மனுஷன் இருக்கான் பாருங்க.....  அவனுக்கு எதையும் சாதாரணமாப் பார்த்துட்டு வந்தா அவ்வளவா திருப்தி இல்லையாம்!  நெஞ்சு படபடன்னு அடிச்சுக்க, குடலு வாய்க்குள் போய் வரணும்!  போய் வந்தபிறகு.... 'அப்பாடா.... தப்பிச்சுட்டேன்'ன்னு ஒரு ஆசுவாஸம்  வேணும்.  மரணபயம் கண்ணுலே தெரியாதமாதிரி நடிக்க வேற செய்யணும்..... ஹைய்யோ.... எத்தனை விதம் இதுலே!!
பேரருவிக்குப் பின்பக்கம் பார்த்துட்டு வந்த நம்மை சுமார் ஆறு கிமீ தூரத்துலே இருக்கும்  'சுழிக்கும் குளம்' (Whirlpool)  கூட்டிப்போனார் ரெக்ஸ்.  கரையை ஒட்டியே கட்டுன கட்டடத்தின் பால்கனின்னு சொல்லலாம்.
அங்கிருந்து கீழே பார்த்தால் பெரூசா குளம் ஒன்னு!  கீழே பள்ளத்தாக்குலே  நியாகரா நதி வெள்ளம் பாய்ஞ்சுவந்து இதுக்குள்ளே விழுந்து பயங்கரமாச் சுழிச்சுக்கிட்டு  இன்னொரு பக்கம் வெளியேறிப் பாயுது. வர்ற வழியில் ச்சும்மா ஒரு சுத்து சுத்திட்டுப்போகணுமாம் அதுக்கு!
நதிக்கு நடுவிலே எப்படியோ இயற்கையில் உண்டான பெரும்பள்ளம் இது! விழுந்தோமுன்னா  அம்புட்டுதான்....  கொண்டுபோயிரும்..... ஆழம்  நூத்தி இருபத்தியஞ்சு அடி!  யம்மாடி.....

இதுலே  ஜெட் போட்லே வந்து, தண்ணி ஒரு பக்கம் இழுக்க, அதை மீறிக்கிட்டு  நாலு சுத்து மயக்கம் வரும் அளவுக்குச் சுத்திட்டுத் தப்பிச்சோம் பொழைச்சோமுன்னு ஓடணுமாம். இதுக்குத் தனியார் கம்பெனி ஜெட்போட் சவாரி பிஸினஸ் நடத்திக்கிட்டு இருக்கு. (இங்கே நியூஸியிலெயும் இந்த ஜெட் போட் த்ரில்ஸ் நிறைய உண்டு !)
தண்ணிக்குள்ளே கால் வைக்காமல் நெஞ்சு துடிக்கணுமுன்னு இன்னொரு த்ரில் ஆரம்பிச்சது சரியா நூத்தியொரு வருசங்களுக்கு முந்தி. ஸ்பானிஷ்காரர் ஒருவர் (Spanish engineer Leonardo Torres Quevedo ) உக்காந்து யோசிச்சுருக்கார்.

இக்கரைக்கும் அக்கரைக்குமா இரும்புக்கயிறு போட்டு தொட்டிலைத் தொங்கவிட்டு அதுலே  நின்னுக்கிட்டுப்  போறது!  ஏரோ கார் ரைடு ! அது சரியா இந்த சுழலுக்கு மேலே போய் வரும்.  கயிறு அறுந்தால்.....  ?  அம்புட்டுதான்..... திக்திக்ன்னு  இருக்கணும். அதுதான் முக்கியம் :-)

அந்தாண்டைக் கரையில் இதுக்கான அமைப்பு, அமெரிக்காப் பகுதி.  இந்தாண்டை கனடா.  ஆறு இரும்புக்கயிறு தாங்கிப்பிடிக்கும்  கம்பித் தொட்டில்.  இதுலே நாம் போய் வரணுமுன்னா தனியாப் போகணும். இந்த டூர்லே நமக்குக்  காட்சி மட்டும்தான்.

அதுக்கடுத்து பக்கத்துலேயே ஒரு கிமீ தூரத்துலே இருக்கும் Souvenir City யில் அடுத்த ஸ்டாப். சின்னதா ஒரு காலத்துலே ஆரம்பிச்சது, இந்த இருபத்தியஞ்சு வருசத்துலே பதினைஞ்சாயிரம் சதுர அடிக்கு வளர்ந்துபோயிருக்கு!  ஷாப்பிங் மால், சாப்பாட்டுக்கடைன்னு பயணிகளுக்குத் தேவையான அத்தனையும்!
(நம்மூர் கோவில் மண்டபங்களை நினைச்சுக்கிட்டேன்)
அரைமணி நேரம் செலவு செஞ்சுக்கலாமுன்னு ரெக்ஸ் சொல்லிட்டார்.  எல்லாம் அவரவர் விருப்பம் போல :-)

வாசலில் ஒரு பெரிய மூஸ், வா வான்னுச்சு.  ஒரு ஃபோட்டோ பாய்ன்ட்.  நினைவுப்பொருட்கள்..... இப்படி......
கண்ணாடி அலங்காரப்பொருட்கள்தான் சூப்பர்.  ஒன்னும் வாங்கிக்கலை.  உடையாமல்   நியூஸி கொண்டுபோகும் ரிஸ்க் எடுக்க தயாரில்லை(யாம்) 'நம்மவர்'க்கு !
ஒருமுறை உலகத்தை இடம் வர்றோமுன்னு வேண்டிக்கிட்டு ஒரு பயணம் போயிருந்தோம். அப்போ லன்டணில் இருந்து கிளம்பி பத்தொன்பதுநாள் யூரோப் சுத்தியடிச்சுட்டுத் திரும்ப  லண்டனில் நம்மைக் கொண்டு வந்து விடும் ஒரு டூரில் போறோம். அம்பதுபேர் பயணிக்கும் பஸ்ஸில் நாங்க முப்பத்தியஞ்சு நபர்கள்தான். அதுலே இருபத்தியொரு ஆட்கள் இந்தியர்கள் சில மாநிலங்களில் இருந்து! (வெவ்வேற நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள்....  நாங்க மூணு பேரும், லண்டனில் இருந்து வந்த ரெண்டு பேருமா!)

வெனிஸ் நகரில் ஒரு  கண்ணாடித் தொழிற்சாலை ( Glass blowing factory)  போனப்ப நாங்க வெறும் வேடிக்கை மட்டும். ஆனால் ஒரு குடும்பம்(தில்லி) மட்டும், அட்டகாஸமான   ஒரு பெரிய  ஃப்ளவர் வாஸ்  வாங்கினாங்க.  நல்ல விலை!  அதை பேக் பண்ணிக் கொடுத்ததும், அவுங்க மகன், ( வயசு ஒரு பத்து இருக்கும்) அதை, சாண்ட்டாக்ளாஸ் மூட்டையைத் தூக்கித் தோள் மேல் விசிறிப் போட்டுக்கறமாதிரி போட்டுக்கிட்டு நடந்ததும் எனக்கு அப்படியெ நெஞ்சே நின்னு போச்சு. பயணம் முடியும்வரை பலமுறை இதே மாதிரி மூட்டை தூக்கல்தான்.  ஒழுங்கா தில்லி போய்ச் சேர்ந்துச்சோன்னு இன்னும் ஒரு சந்தேகம் மனசுக்குள்ளே ஒரு ஓரமாய் உக்கார்ந்து அப்பப்ப அரிச்சுக்கிட்டு இருக்கே! 
கண்ணாடிப்பொருள் கடையைப் பார்த்ததும்   பொடியன் நினைவு வராமல் போகாது, கேட்டோ :-)   அந்தப் பயணத்தில் நம்மை உற்சாகம் குறையாமல் 'கவனிச்சுக்கிட்டது' தில்லிக் குடும்பம்தான் :-)  ஒரு சாம்பிள்:  இங்கே பாருங்க ! 

பனிரெண்டு மணிக்கு எல்லோரும் பஸ்ஸுக்குத் திரும்பிடணுமுன்னு ரெக்ஸ் சொல்லி இருந்தும், ஒரு சிலர்  இங்கிருக்கும் சாப்பாட்டுக்கடைகளில் லஞ்ச்க்குப் போனதில் பத்து நிமிட் லேட்டாத்தான் வந்தாங்க.
நியாகரா பார்க்வேயில்  திரும்ப,  குதிரைலாடம் பேரருவியை நோக்கி சுமார் மூணேகால் கிமீ தூரம் வந்து,  ஒரு படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம்.

இந்த  பேரருவியில் இருந்தும் , அமெரிக்கா நியாகராவின் ரெண்டு அருவிகளில் இருந்தும் பெருகி வழியும் தண்ணீர் நியாகரா நதியாக ஓடுதுல்லையா.... இதன் கரையையொட்டியே 'நியாகரா பார்க் வே'ன்னு  தோட்டமும், தோட்டத்துக்குள் பாதையுமா சாலை  அமைச்சு இருக்கு  நியாகரா ஊரின் நகரசபை.  நல்ல நீளமான  சாலைதான். அம்பத்தியஞ்சு கிமீ தூரம்!  ஏகப்பட்ட ஹொட்டேல்கள்  இதே சாலையில். பாதையைக் கடந்தால் நதி பார்க்கலாம்னு விளம்பரப்படுத்திக்கிறாங்க.

படகுத்துறை ஹார்ன்ப்ளோயர் படகுக் கம்பெனிக்குச் சொந்தமானது. (Hornblower Niagara Cruises ) வாசலாண்டை கூடாரமெல்லாம் போட்டுவச்சு டிக்கெட் கொடுக்குமிடம் இருக்கு.  நல்ல கூட்டமும் கூட.
நாம்தான் விஐபி டூர் இல்லையோ..... பஸ்ஸை விட்டு இறங்கறதுக்கு முன்னேயே நமக்கான டிக்கெட்டுகளை நம்ம கையில் கொடுத்த  ரெக்ஸ்,  நம்மைக் கூட்டிக்கிட்டு கட்டடத்துக்குள்ளே போய்  அங்கிருக்கும் லிஃப்ட்டின் வழியாக் கீழே கொண்டுபோயிட்டார்.
இப்ப வெளியே இருக்கும் டெக் ஏரியாவில் இருக்கோம்.  அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் கூட்டம் ஜே ஜேன்னு இருக்கு!  நமக்கு பிங்கிஷ்ரெட் கலரில்  மழைக்கோட் கொடுத்தாங்க.  

இந்தப் படகுக்கப்பல் (ஹார்ன் ப்ளோயர் கம்பெனி) வியாபாரமும் நூறுவருசங்களா நடக்குது இங்கே.  இப்பெல்லாம்  தொழில்நுட்பங்கள் பெருகிப்போச்சு என்பதால்  பெரிய கட்டமரன்கள் அட்டகாசமா இருக்கு! இதுலே உக்கார்ந்து போக இருக்கைகள் ஒன்னும் இல்லை. வேடிக்கை பார்க்க வந்துட்டு, உக்கார்ந்தால் ஆகுமோ?

பத்துப்பதினைஞ்சு நிமிட்டுக்கொருமுறை, பயணிகளைத் திரும்பக் கொண்டுவந்து  கொட்டிட்டுப் புதுப்பயணிகளை ஏத்திக்கிட்டுப் போகுதுங்க  கட்டமரன்கள் :-)
நமக்குத்தான் படகுப்பயணம் இதுக்குள்ளே நல்லாவே அத்துப்படி ஆகிப்போனதால்  நேரா  மாடிக்குப் போயிட்டோம். :-)

முதலில் மெள்ள அமெரிக்கா நியாகராப் பக்கம் போய்  ஒரு மூணு நிமிட் நின்னுட்டு, மெள்ளத் திரும்பி குதிரைலாடத்தை நோக்கிப் படகு நகருது!

அமெரிக்க நியாகராவிலேயே  ரெண்டு பகுதியா தண்ணீர் விழுது. ஒன்னு பெருசு. நல்ல அகலம்தான். இன்னொன்னு கொஞ்சம் இடைவெளிவிட்டுச் சின்னதா.......   இதுக்கு ப்ரைடல் வெய்ல்னு (Bridal Veil Falls  ) பெயர். தண்ணி வரும்வழியில் சின்னதா ஒரு தீவு இருக்கறதாலே   கொஞ்சம் ரெண்டாப் பிரிஞ்சு வந்து  கீழே பள்ளத்தாக்கில் விழுது.
இந்த ரெண்டு அருவிகளுக்கும் இடையில் மேலே நின்னு பார்க்கும் வசதியெல்லாம் அமெரிக்கப்பகுதியில் செஞ்சு வச்சுருக்காங்க!!!    (இதுக்குன்னு ஒரு தனி டூர் இருக்கு!)

அமெரிக்க நியாகரா கொஞ்சம்  குள்ளமோ (!?) ன்னு  பார்த்தால், குதிரை லாடத்தை விட உயரம் ஒரு  ரெண்டு மீட்டர்  குறைவுதான். அகலமும்  அதுலே பாதி! தண்ணீர் விழும் இடத்தில் பெரும்பாறைகளாக் கிடப்பதால் அப்படியே தெறிச்சு நம்மையெல்லாம் குளிப்பாட்டி விட்டுருது!  இன்றைக்கு இது மூணாவது குளியல் நமக்கு :-)


இந்தாண்டை  நதியில்  கிடக்கும் பெரிய பாறையில்   Shag பறவைகள் வரிசைகட்டி உக்கார்ந்துப் படகுப்  போக்குவரத்தை வேடிக்கை பார்க்குதுகள். நம்ம பக்கங்களில் நொப்பும் நுரையுமா இருக்குன்றதைப்போல  இங்கே தண்ணீரில் என்னமோ   நுரைச்சுக் கிடக்கு....
இப்பத்து மக்களுக்கு  கப்புச்சீனோ காஃபிமேலே நிக்கற நுரைன்னு  சொன்னாப் புரிஞ்சுரும் :-)
கனடா பக்கம் ஹார்ன்ப்ளோயர்ன்னா, எதிர்க்கரை அமெரிக்கா பக்கம் 'மெய்ட் ஆஃப் த மிஸ்ட்' னு  அமெரிக்கக்கொடியோடு  அவுங்க கட்டமரத்துலே  நீலக்கோட்டு மக்கள்ஸ்.

நதிநீர் பங்கீடுன்னு இப்ப அதிக அளவில் நம்மூரில் பேசிக்கிட்டு இருக்கோமே..... அவுங்க பார்க்கணும்.... பங்கீடுன்னா எப்படி இருக்கணுமுன்னு!   கூகுள் வரை படத்தைப் பாருங்க.... சட்னு புரிஞ்சுரும்.
ரெண்டு நாடு. இடையில் நதி. நடுவுலே என்னமோ கோடு போட்டுப் பிரிச்சாப்லெ  ஆளுக்குப் பப்பாதின்னு வச்சுக்கிட்டு  அவுங்கவுங்க கரைப்பக்கம் அவுங்கவுங்க வியாபாரம்!  இங்கிருந்து அந்தாண்டை போய் எட்டிப் பார்க்கிறதும்,  அந்தாண்டை இருந்து இந்தாண்டை வந்து பார்த்துட்டுப் போறதுமா ஒரு சண்டை சச்சரவில்லாம  எல்லாம் ஒரு புரிதலோடு நடக்குதுப்பா!!!

மெள்ள மெள்ள குதிரைலாடத்தை நோக்கிப்போகும் படகு...  புகைக்குள்ளே மறைஞ்சே போயிடறோம்.  மேலே இருந்து விழும் தண்ணீர் அப்படியே குழி பறிச்சு விட்டுக் குளம்போல ஆக்கி வச்சுருக்கு.   மேலே அம்பத்தி மூனு மீட்டர் உயரமுன்னா, கீழே பள்ளமும் அம்பத்தி மூணாம்! இதுக்கு மெய்ட் ஆஃப் த மிஸ்ட் ஏரின்னே பெயர் வச்சுட்டாங்க!

 மிஸ்ட் ... சரியான சொல்தான். நீர்த்திவலைகள் உண்டாக்கிய புகை.... கண்ணுமண்ணு தெரியாது இதுக்குள்ளே போயிட்டால்.  ஒரே  இரைச்சல்  மட்டும்தான். தண்ணி என்னா சத்தம் போடுதப்பா.....

நாலாவது குளியலும் ஆச்சு!  கெமெராவைக் காப்பாத்திக்கறதுதான் பெரிய பிரச்சனை....
கிட்டக்க இருக்கறமாதிரி தோணுதே தவிர  எப்படியும் அரைக்கிமீ தள்ளிதான் நிக்கறோம். கிட்டப்போனா..... தண்ணி இழுத்துப் பள்ளத்துலே வுட்டுறாதா?  ஐயோ.....  படகுலே இருக்கற  கொம்புகள்,  சங்கு ஊதி டேஞ்சர்னு  சொல்லுது !  (ஊதிட்டாம்ப்பா!!!) அதான் ஹார்ன் ப்ளோயர்னு பெயரோ!!!
இந்த அமர்க்களத்துலே எம்பெருமாள் கருடனில் உக்கார்ந்து கீழே பார்த்து,' என்ன துள்ஸி திருப்தியா'ன்னார் !  'பெருமாளே  .... எல்லாம் உம் தயவு! கூடவே வர்றதுக்கும் தேங்க்ஸ்'ன்னு கும்பிடு போட்டேன்! மனசெல்லாம் நன்றியால் நிறைஞ்சுருந்தது உண்மை !
புகையை விட்டு விலகியதும் எல்லாமே பளிச் பளிச்!


படகு மெள்ளப் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தாச். எல்லாம் கூடி வந்தால் இருவது, இருவத்தியஞ்சு நிமிட் சமாச்சாரம்தான்.   ஆனால்.....யுகம்யுகமா ஆனதுபோல்தான் அப்போ உணர்ந்தேன். லிஃப்ட் எல்லாம் ஒரே ஈரம்.....
ரெக்ஸ் நம்மையெல்லாம் கணக்குப் பார்த்து வண்டியில் ஏத்திக்கிட்டு எம்பஸி ஸ்யூட் ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து விட்டுட்டார். நம்ம 'விஐபி ஸினிக் டூர்' இத்தோடு முடிஞ்சது.  சின்ன அன்பளிப்பு கொடுத்துட்டு நன்றி சொன்னோம்.
இப்ப மணி எத்தனை?  மத்யானம் ஒன்னு முப்பத்தியெட்டு!  ஜன்னலில் பார்த்தால் குதிரைலாடம் அதுபாட்டுக்கு தன் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

என்னதான் ரெயின்கோட் போட்டுருந்தாலும்  கால் பக்கமெல்லாம் நல்லாவே நனைஞ்சுருந்தோம்தான். அறையில்  இருந்த ஹேர் ட்ரையரில்  லேசா உடைகளை   உலர்த்திக்கிட்டேன்.

தொடரும்.....:-)


10 comments:

said...

பொடியன் புன்னகைக்க வைத்தான்!

இவ்வளவு த்ரில் என் உடம்புக்கு ஆகாது. தலை சுற்றிவிடும்!

எல்லா த்ரில்லுக்கும் அமெரிக்காக் காரன் வழி செய்யறதோட நல்லா காசு பார்க்கறாங்க போல! த்ரில் பயணம்தான்.

said...

சுற்றுலா, கலை ரசனை, பொழுதுபோக்கு என்ற நிலையில் தொடர்ந்து பயணிக்கிறேன். நயாகரா பங்கீடு வியப்பாக உள்ளது.

said...

செம த்ரில் பயணம் தான். சில முறை கங்கை போன்ற நதிகளில் ராஃப்டிங் செய்ததே பயங்கர அனுபவம் தான். ஒரு முறை ஜபல்பூரின் பேடாகாட் பயணமும் த்ரில் பயணம்!

உங்கள் மூலம் நாங்களும் த்ரில் பயணத்தினை அனுபவித்தோம்.

தொடர்கிறேன்.

said...

இந்தமாதிரிப் பயாங்களுக்கு நிறையசெலவு ஆஉமே நெல்லைத்தமிழன் கூட அதுபற்றி நீங்கள் குறிப்பிடுவதுஇல்லை என்றுஎழுதி இருந்த நினைவு

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

ஹாஹா.... த்ரில் ஸீக்கர்ஸ் நிறைந்த உலகம் இது :-) அதைக் காசு பண்ணத் தெரிஞ்சு நடத்திக்கிட்டு இருக்காங்க.

ஏனோ தானோன்னு இல்லாமல் நல்ல பொறுப்பாக செயல்படுவதைப் பாராட்டத்தான் வேணும்!

இன்னும் கொஞ்சம் சின்ன வயசா இருந்துருந்தால்.... இன்னும் நல்லாவே அனுபவிச்சு இருக்கலாம்.... ப்ச்.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எதெதுலே அரசியல் செய்யணுமோ அதுலே மட்டும் செஞ்சால் குழப்பங்கள் இருக்காது தானே?

தொடர்வருகைக்கு நன்றிகள்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ராஃப்டிங் கொஞ்சம் பயமாத்தான் இருக்குமில்லே? பிடிச்சுக்க ஒன்னும் இல்லையே....

இங்கே ட்வின்ரிவர் ஜெட் கூட த்ரில்லிங்தான். எனக்குத் தலை சுத்தும் என்பதால் மகளும் கோபாலும் மட்டும் போய் வந்தாங்க:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

செலவு ........ இதுக்கு ஸ்கை இஸ் த லிமிட்ன்னு தான் இப்பெல்லாம் இருக்கு. நமக்கு எவ்ளோ முடியுமோ அதுக்குள்ளே அடக்கிடணும்:-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ் !